உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழரின் மறுமலர்ச்சி/அண்ணா ஒரு சகாப்தம்

விக்கிமூலம் இலிருந்து

அண்ணா ஒரு சகாப்தம்

தமிழவேள் ச. மெய்யப்பன்

அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதன்மைப் பேச்சாளராகத் திகழ்ந்தார். பேச்சிலும், எழுத்திலும் புதுமை பல செய்து மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். அவர் எழுத்தும் பேச்சும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தின. கலைகளில் சிறந்த காஞ்சியில் தோன்றி, தமிழ்ப்பாசறையாம் பச்சையப்பனில், பட்டம் பெற்றுப் பெரியார் பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற மாமனிதர். பேச்சாற்றலாலும் எழுத்தாற்றலாலும் புதிய தமிழகம் உருவாகக் கனவு கண்டவர். ஆற்றல் வாய்ந்த அவரது எழுத்தும் பேச்சும் தமிழ் உரைநடையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. அண்ணாவின் பாணி (மரபு) பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது. மொழி முறுக்கேறியது; புதியதோர் விசையைப்பெற்றது. அண்ணா வழியினரின் எழுத்தும் பேச்சும் தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தன.

பண்டிதர் மொழி மக்கள் மொழியாயிற்று. நாவாலும் பேனாவாலும் அண்ணா ஆற்றிய பணி அளவிடற்கரியது. பல ஆய்வேடுகள் வந்திருந்தாலும் அண்ணாவின் பங்களிப்பு முழுவதையும் மதிப்பீடு செய்யவில்லை. சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் ஆகிய அனைத்து இலக்கியவடிவங்களிலும் ஈடுபட்டு உழைத்துப் புதிய பாணியை அவர் உருவாக்கியுள்ளார். அடுக்குத் தொடர்களும் எதுகை மோனைகளும் காவிரியைப்போல் கங்கையைப் போல் அவரது பேச்சில் ஊற்றெடுத்தன. அவரது பேச்சில் தமிழகமே கட்டுண்டு கிடந்தது. கருத்தாலும் நடையாலும் சொல்லும் வகையாலும் அண்ணாவுக்கெனத் தனிவழி அமைந்திருந்தது. அவர் நடத்திய இதழ்களில் அவர் எழுதியகட்டுரைகளும், கடிதங்களும், இலக்கியத் தரத்துடன் அமைந்து வளர் தமிழுக்குச் செழுமை சேர்த்தன. நாவன்மை மிக்க நாடுபோற்றும் நாவலராகத் திகழ்ந்த அண்ணா வளமான நடையினால் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் விளங்கினார். சொற்பொழிவுகளில் புதிய பாணியை உருவாக்கி மேடைத்தமிழுக்கு வளம் சேர்த்தார். மேடைத்தமிழை உருவாக்கியவர்களில் அவர் முதல் வரிசையர். அவர் சொற்பொழிவுத் தலைப்புகளும் படைப்புகளுக்குச் சூட்டிய பெயர்களுமே புதுமையாய் அமைந்து விட்டன. கவிதைப் பண்பு அமைந்த உரைநடை, அவருக்கு உரைநடை வரலாற்றில் நிலைபேறு அளித்து விட்டது. அண்ணா அழகாகவும் சுவையாகவும் எழுதினார். அவர் படைப்பு எந்த இலக்கிய வடிவமாகயிருந்தாலும் சீர்திருத்த ஒளிவீசும். இதழாளராக அமைந்ததால் நிரம்ப எழுத வாய்ப்பும் கிடைத்தது. அவர் கருத்துப் பரப்பாளராகவும் விளங்கினார். அண்ணாவின் பன்முகச் சாதனைகளை அங்கீகரித்து, பெருமைசேர்க்கும் வகையில் புகழ்மிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம், டாக்டர் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தியது.

அண்ணா ஒரு அறிவாலயமாகவே திகழ்ந்தவர்.

சொற்பொழிவாளர்
எழுத்தாளர் நூலாசிரியர்
நாடகாசிரியர்
இதழாளர்
சிந்தனையாளர்
தலைவர்

எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுத் திகழ்ந்தார். தமிழகத்தில் அண்ணாவுக்கு அமைந்த நினைவுச் சின்னம் போல் யாருக்கும் அமையவில்லை. அறிஞர் அண்ணா மிகவும் புகழ்பெற்ற, ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார். அண்ணாவின் படைப்புகளை அரசுடைமையாக்கிய தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி. அரசுடைமையாக்கிய பாவேந்தரின் நூல்களை முதன் முதலில் வெளியிட்டது மணிவாசகர் பதிப்பகம். தற்பொழுது அண்ணாவின் நூல்களையும் வெளியிட்டு மகிழ்ச்சியடைகிறது.