தமிழர் தோற்றமும் பரவலும்/முடிவுரை

விக்கிமூலம் இலிருந்து

முடிவுரை

இக்கட்டுரையை முடிக்குமுன், இன்றும் நம்மிடையே உள்ள மலைகளிலும், காடுகளிலும் வாழும் பழங்குடியினராம், தென்னிந்தியாவின் தொல்பெருங்கால மக்கள் வழியினரிடையே, நீகிரோ இனத்துப் பண்புக்கூறு இடங்கொண்டிருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்பதைக் கூறவிரும்புகின்றேன். கல்லையே தன் வாழ்வும், உயிருமாகக் கொண்ட பழங்கற்கால மனிதனின், இறவா முன்னோர்கள்.அவர்கள் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிற்றாசியா, மற்றும் ஏஷியன் பள்ளத்தாக்கு நாடுகளிலிருந்து மக்கள் குடிபெயர்ந்தனர் என்ற கொள்கையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தொல்பெருங்காலத்தில் இருந்தே, ஓரிடத்திலிருந்து ஓரிடத்திற்கு நாகரீகப் புடைபெயர்ச்சி உண்மையில், நம்பிக்கை உள்ளவன் நான். அவர்களில் சிலர் தென் இந்தியாவின் பல இடங்களில் இடங்கொண்டுவிட்டனர் என்பதும், காலப்போக்கில், அந்நாட்டுப் பழங்குடியினரோடு ஒன்றுகலந்துவிட்டனர் என்பதும் இயலக் கூடியதே. இவ்வாறு குடிபெயர்ந்து வந்தவர், திராவிடர், என்ற கொள்கையைச் சரியானதுதானா? என நான் கேள்வி எழுப்புகின்றேன். அதாவது மறுக்கின்றேன். திராவிட முன்னோர், திராவிடர்க்கு முந்திய பழங்குடியினர் என்பன எல்லாம். 20ஆம் நூற்றாண்டின் கற்பனைகள். தென்னிந்தியத் தொல்பொருள் ஆய்வாளர்களோ, வரலாற்றுப் பேராசிரியர்களோ கடல்கோள், எரிமலை, மற்றும் வேறு காரணங்களால் மக்களும், நாகரீகங்களும் இடம் பெயர்ந்தனர் என்பதற்கான பொருந்தும், ஏற்கக் கூடிய அகச்சான்று பழங்கற்கால நாகரீகம் புதிய கற்கால நாகரீகத்துக்கும், புதிய கற்கால நாகரீகம், இரும்பு நாகரீகத்துக்கும், அமைதியாக மாறித்தொடர்ந்து இடையறவு படாமல் இருந்தமைக்கான சான்று அனைத்தும் உள்ளன. தொல்பொருள் ஆய்வுகள் முறையான நாகரீக வளர்ச்சி உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. காடுகளிலும், மலைகளிலும் வாழும் தென்னாட்டுப் பழங்குடியினர், நாம் இன்று பெயரிட்டு அழைக்கும் தென்னிந்தியத் திராவிடர்களிடமிருந்து, மனித இயல்பால் வேறுபட்டனர் எனக் கூறுவது தவறு. தக்கின நாட்டு மனித இனத்தோற்றம் பற்றிய, மக்கள் இனம் உலகில் பரவிக் கிடக்கும் இயல்பு பற்றிய, நூல்களில் வல்ல மாணவர்கள், இந்நாட்டில், அதாவது தென் இந்தியாவில், ஐவ்வகை நாகரீகம், புதிய கற்காலம் தொடங்கி இருந்து வந்தன என்பதை அறிவர். அவர்களில், வேட்டை ஆடல், மீன் பிடித்தல் ஆகிய தொழில்களைத் தழுவிக்கொண்ட மக்கள், பழங்கற்காலத்து இறுதிக்காலத்துத் தொல்குடியினராம். காலம் காலமாக முறையே காடுகளிலும், கடற்கரைகளிலும் தொடர்ந்து வாழ்ந்துவந்த வாழ்க்கை, அவரவர்களுக்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்த வாழ்க்கை முறைகளையும், மனப்போக்கையும், வளர்த்துக் கொள்ளும் நிலைக்கு வழிவகுத்துவிட்டது. அவர்கள் உடல் நிறத்திற்கு அவர்கள் வாழ்ந்த இடத்துத் தட்பவெப்ப நிலைகள் அவர்கள் மேற்கொண்ட தொழில்களே காரணமாம். ஆகவே, அவர்கள் உடல் நிறம் பற்றிய கேள்வி, அதாவது தடை, நம் கொள்கையைச் சீர்குலைக்காது. உழவுத் தொழில் இடம் கொண்டதும், அதன் விரிவும், தொல்பழங்காலத்துப் பொருள் தேடு முறையை, முயற்சியைக் கைவிடச்செய்தது எனக் கொள்ளுதல் கூடாது. சில இயற்கைச் சூழ்நிலைகளில் வைக்கப்பட்ட மக்கள். தங்களின் பண்டைய வாணிகத்தை ஊக்கமுடன் மேற்கொண்டனர்; தங்கள் வாழ்க்கையின் தரத்தையும், பழக்க வழக்கங்களையும் பேணிக்காத்தனர். வெள்ளாளர் மற்றும் காராளர் போலும் உழவர் குலத்தவர்களாலும், ஆடு மாடுகளைக் காக்கும் ஆயர் போலும், கால்நடை மேய்ப்பவர்களாலும், வேறு வகை நாகரீகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழகத்தில் பெருமணல் பரந்த பெருநிலம் இன்மையால், பாலை நிலத்து மக்கள் குறிஞ்சி, அதாவது மலைநாட்டுப் பழங்குடியினரோடு ஒன்று கலந்துவிட்டனர். வேடர் மீனவர். உழவர், ஆயர் என்பனபோலும் விலங்கினம் தொடர்பான நாகரீகம், இயல்பு மாறாச் சமுதாய நிலைகளில் இடங்கொண்டுவிட்டது. ஆகவே, கடலைச் சார்ந்த நாடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த பழங்குடியினர், திராவிடர்க்கு முந்தியவராவர் எனக் கொள்வது கூடாது. அதேபோல், மத்தியதரைக் கடற் பகுதியிலும், அர்மீனிய நாட்டிலும் வாழ்ந்தவர் திராவிடர்க்கு முந்திய மூதாதையர் எனக் கொள்வதும் கூடாது. ஆகவே சிந்து கங்கைச் சமவெளிகள், முறையாக உருவாகாத காலத்தில், தென் இந்தியாவையும், ஆப்பிரிக்காவையும் இணைத்து இருந்ததும், கடலுள் ஆழ்ந்து போனதும், திராவிடர்களின் தொடக்க கால வாழிடமும் ஆகிய, தென் இந்திய தீபகற்பத்தைத்தான் மத்திய தரைக்கடல் இனத்தவர் என அழைக்கப்படுவோர், தாங்கள் தோன்றிய இடமாகக் கொண்டிருந்தனர் என முடிவு செய்யலாம்; ஆகவே, திராவிட நாகரிகச் சாயலை இந்தியநாட்டு நாகரீகங்களில் மட்டுமே காணக்கூடியது அன்று. அதை கிரீட்டன் (Cretan), எஜியன் (Aegean) சுமேரியன் (Sumerian), பாபிலோனியன் (Babylonian) மற்றும் எகிப்தியன் (Egyptian) போலும் மேலை நாட்டு நாகரீகங்களிலும் இவை போலும் உலகின் பல்வேறு பழம்பெரும் நாகரீங்கங்களிலும் காணலாம். இம் முடிவில் மேலும் வலுவாக இருக்க, தென் இந்தியாவில் மேலும் பற்பல அகழ் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என நான் வாதிடுகின்றேன். திருவாளர் டாக்டர் சிசிலியேமன் (Dr. Schliemann) அவர்களின் வெற்றிக்களிப்புப் பேச்சுக்கடியில், கிரேக்கப் பேரறிஞன் மூளை வளைய வளைய வந்து கொண்டிருக்க மேற்கு ஆசிய நாட்டு டிராய் (Troy) மைசினியெ (Mycenae) டிரியன் (Triyan) நாகரீகங்கள் மறுபிறவி எடுத்தன. உலகை அதுபோலும் வியப்புக்குள் தென்இந்தியா, ஆழ்த்தாது என்பதை யார் அறிவார்!