உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழியக்கம்/ஏடெழுதுவோர் I

விக்கிமூலம் இலிருந்து


௨௧. ஏடெழுதுவோர் !

பார்ப்பனர்கள் ஏடெழுதும்
    பாழ்நிலைமை போகுமட்டும்
        பைந்த மிழ்க் கோ
சீர்ப் பெரிய நாட்டுனுக்கோ
    சிறிதேனும் நன்மையில்லை
        திருட ரின்பால்
ஊர்ப்பணத்தை ஒப்படைத்தல்
    சரியாமோ? செய்தித்தாள்
        உடையா ரன்றோ
ஊர்ப்பெருமை காப்பவர்கள்
    அஃதில்லார் ஏதிருந்தும்
        ஒன்று மில்லார்! 101

ஆங்கிலத்தில் புலவரெனில்
    அரசினரின் அலுவலிலே
        அமர்ந்தி ருப்பார்!
பாங்குறு செந் தமிழ்ப்புலமை
    படைத்தாரேல் பள்ளியிலே
        அமர்ந்தி ருப்பார்!
தீங்குற்ற இசைப்புலமை
    சிறிதிருந்தால் படத்தொழிலில்
        சேர்ந்தி ருப்பார்!
ஈங்கிவற்றில் ஏதுமிலார்
    தமிழினிலே ஏடெழுதிப்
        பிழைக்க வந்தார். 102

ஓவியத்தின் மதிப்புரையும்
    உயர்கவியின் மதிப்புரையும்
        இசையின் வல்லார்
நாவிலுறு பாடல்களின்
    நயம்பற்றி மதிப்புரையும்
        உரை நடைக்கு
மேவுகின்ற மதிப்புரையும்
    கூததர்களின் மதிப்புரையும்
        விள்வார் நாங்கள்
யாவும் அறிந்தோம் என்பார்
    பெரும்பாலோர் பிழையின்றி
        எழுதல் இல்லார். 103

ஊர்திருடும் பார்ப்பா னும்
    உயர்வுடையான் எனக் குறிப்பார்
        திரவிடர் கொள்
சீர்குறித்துச் சீறிடுவார்
    சிறுமையுற வரைந்திடுவார்
        செய்யுந் தொண்டு
பார்திருத்த என்றிடுவார்
    பழமைக்கு மெருகிடுவார்
        நாட்டுக் கான
சீர்திருத்தம் என்றாலோ
    சிறுநரிபோல் சூழ்ச்சியினைச்
        செய்வார் நாளும்! 104

நடுநிலைமை இருப்பதில்லை
    நல்லொழுக்கம் சிறிதுமிலை
        தமிழை மாய்க்கும்
கெடுநினைப்பே மிகவுடையார்
    கீழ்மையிலே உடல்வளர்ப்பார்
        பொருள் படைத்தோன்
அடிநத்த நாணுகிலார்
    அறமொன்றும் கூறுகிலார்
         ஏழை யோரின்
மடிபறிக்கும் திறமுடையார்
    மறந்தேனும் திரவிடரை
         மதித்தல் இல்லார்! 105