தமிழியக்கம்/ஏடெழுதுவோர் II

விக்கிமூலம் இலிருந்து


௨௨. ஏடெழுதுவோர் (2)


இலக்கணமும் இலக்கியமும்
    தெரியாதான் ஏடெழுதல்
        கேடு நல்கும்,
தலைக்கணையில் நெருப்பிட்டுத்
     தலைவைத்துத் துயில்வது போல்
        பகைவ னைப்போய்
நிலைப்புற்ற தமிழ் ஏட்டின்
     ஆசிரிய னாக்குவது
        நீங்க வேண்டும்.
கலைப்பண்பும் உயர் நினைப்பும்
     உடையவரே ஏடெழுதும்
        கணக்காயர்கள்! 106

தன்னினத்தான் வேறினத்தான்
    தன்பகைவன் தன்நண்பன்
        எவனா னாலும்
அன்னவனின் அறுஞ்செயலைப்
    பாராட்டு வோன் செய்தி
        அறிவிப் போனாம் !
சின்னப்பிழை ஏடெழுதும்
    கணக்காயன் செய்திடினும்
        திருநாட் டார்பால்
மன்னிவிடும் ஆதலினால்
    ஏடெழுதும் வாழ்க்கையிலே
        விழிப்பு வேண்டும்! 107

ஏற்றமுறச் செய்வதுவும்
    மாற்றமுற வைப்பதுவும் ஏ
        டே யாகும்!
தோற்றுபுது நிலையுணர்ந்து
    தோன்றாத வழி கூறித்
        துணை புரிந்து
சேற்றிலுயர் தாமரைபோல்
    திருநாட்டின் உளங்கவர்ந்து
        தீந்த மிழ்த் தொண்
டாற்றுந்தாள் அங்கங்கே
    அழகழகாய் அறிஞர்களால்
        அமைத்தல் வேண்டும்! 108

தொண்டர்படை ஒன்றமைத்துத்
    தமிழ் எதிர்ப்போர் தொடர்ந்தெழுதும்
       ஏட்டை யெல்லாம்
கண்டறிந்தபடி அவற்றை
    மக்களெலாம் மறுக்கும்வணம்
       கழற வேண்டும்.
வண்டுதொடர் மலர்போலே
    மக்கள்தொடர் ஏடுபல
       தோன்றும் வண்ணம்
மண்டுதொகை திரட்டி,அதை
    ஏடெழுத வல்லார்பால்
       நல்க வேண்டும்! 109

ஆங்கிலத்துச் செய்தித்தாள்
    அந்தமிழின் சீர்காக்க
       எழுதல் வேண்டும்
தீங்கற்ற திரவிடநன்
    மொழிகளிலே பலதாள்கள்
       எழுதல் வேண்டும்,
ஓங்கிடநாம் உயர்முறையில்
    நாடோறும் கிழமைதொறும்
       திங்கள் தோறும்
மாங்காட்டுக் குயிலினம்போல்
    பறந்திடவேண்டும் தமிழ்த்தாள்
       வண்ணம் பாடி! 110