தமிழில் சிறு பத்திரிகைகள்/அறிமுகம்
இலக்கிய ஈடுபாடு உள்ளவர்களுக்கும், தரமான வாசகர்களுக்கும் சிறு பத்திரிகை என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பது நன்கு புரியும்.
ஜனரஞ்சகமான, அதிக விநியோகம் உள்ள, பெரிய முதலீட்டுடன் பெரும் அளவில் நடத்தப்படுகிற, வியாபார ரீதியான பத்திரிகைகளுக்கு முற்றிலும் மாறானவை சிறு பத்திரிகைகள். Little Magazines எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம்தான் இது.
சிறு பத்திரிகைகள் லட்சியப் பிடிப்பும் கொள்கையில் உறுதியும், சோதனை முயற்சிகளில் ஈடுபாடும், புதுமைகளை வரவேற்பதிலும் வளர்ப்பதிலும் உற்சாகமும், புதிய திறமைகளைக் கண்டு ஊக்கம் தருகிற போக்கும் கொண்டவை.
சிறு பத்திரிகைகள் ஆயிரக்கணக்கில் கூட விநியோகம் பெறுவதில்லை. பெற முடிவதும் இல்லை. அநேகப் பத்திரிகைகள் சில நூறு பிரதிகளை மட்டுமே சர்க்குலேஷனாகக் கொண்டு வாழ்ந்து, சாதனைகள் புரிந்திருக்கின்றன.
சந்தா பலத்தை நம்பி, எதிர்பார்த்து, ஆரம்பிக்கப்பட்டாலும் கூட, நாளடைவில் சிறு பத்திரிகைகளுக்குப் போதுமான சந்தா பலமும் இல்லாமல் போய்விடுவதே நடைமுறை. ஆகவே, தனி நபர் ஒருவர் அல்லது ஒரே ரகமான நோக்கும் போக்கும் உள்ளவர்களாகக் கருதிக்கொள்கிற தனிநபர்கள் ஒரு சிலரின், உழைப்பையும் உற்சாகத்தையும் பொருள் உதவியையும் கொண்டுதான் சிறு பத்திரிகைகள் வாழ்ந்து வளர வேண்டியிருக்கின்றன. இவர்களது பொருள் பலம் தொடர்ந்து ஊட்டம் கொடுக்க இயலாமல் போகிறபோது பத்திரிகைகள் மெலிகின்றன; மெல்லத் தேய்கின்றன; காலம் கடந்து தோன்றுகின்றன; இறுதியில் மறைந்தும் போகின்றன.
தனிநபர் நடத்துகிற பத்திரிகை என்றால், அவருக்கு உற்சாகமும், பிடிவாதமும், பணத்தை எப்படியாவது தேடிப் பத்திரிகையில் ஈடுபடுத்துகிற தெம்பும், நஷ்டத்தைத் தொடர்ந்து தாங்கிக் கொள்கிற திராணியும் இருக்கிற வரை அந்தச் சிறு பத்திரிகை நீண்ட காலம் நீடிக்க முடிகிறது.
தனிநபர் நிர்வகிக்கிற சிறு பத்திரிகையில் சௌகரியங்களும் உண்டு; அசௌகரியங்களும் உண்டு. பத்திரிகை நடத்துகிறவர் விசால நோக்கும், பிறரது கருத்துக்களை மதிக்கும் இயல்பும், திறமையாளர்களின் நட்பையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து பெறக்கூடிய சாதுரியமும், தனது எண்ணங்களையும் (கலை, இலக்கிய, அரசியல் மற்றும் பல்வேறு) கொள்கைகளையும் மட்டுமே வலியுறுத்திக் கொண்டிருக்கிற வறட்டுப் பிடிவாதம் இல்லாத சுபாவமும் பெற்றிருந்தால், அவருடைய பத்திரிகை பலரது ஒத்துழைப்பையும் பெறுவது சாத்தியமாகிறது. நன்மைகள் புரியவும் முடிகிறது.
அப்படி இல்லாது போனால்-ஆசிரியர் குறுகிய நோக்குடனேயே விஷயங்களைக் கவனிப்பவராக இருந்தால், பிறரது கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்காமலும், மற்றவர்களது திறமையை ஏற்றுக் கொள்ளாமலும் தனது நோக்கும் கொள்கைகளுமே சரியானவை (இலக்கியத்தை வளம் செய்யக் கூடியவை ) என்ற நம்பிக்கையோடு செயல் புரிபவராக இருந்தால், ஆரம்பத்தில் பத்திரிகைக்குக் கிடைத்த அன்பர்களையும் ஆதரவாளர்களையும் அந்தப் பத்திரிகை இழந்து விடுகிறது. அந்தப் பத்திரிகை ஆசிரியரின் நண்பர்களே விரோதிகளாகவும் பரிகசிப்பவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.
ஒரு சிறு பத்திரிகையின் அன்பர்களும் ஒத்துழைப்பாளர்களும் அந்தப் பத்திரிகையின் போக்கில் அதிருப்தி கொள்கிறபோது தனிக் குழுவாய்ப் பிரிந்து தனியாக ஒரு சிறு பத்திரிகை தொடங்குவதும், பின்னர் அந்தக் குழுவிலிருந்து விலகிச் சிலபேர் வேறு சிலரோடு கூடி இன்னொரு பத்திரிகை ஆரம்பிப்பதும் சிறு பத்திரிகை வரலாற்றில் சகஜ நிகழ்ச்சிகள், இத்தகைய பத்திரிகைகளின் ஆயுசு ஒன்றிரண்டு இதழ்கள் அல்லது ஒரு வருடம், இரண்டு வருடம் என்றே அமைகிறது.
தனித் தனி கோஷ்டிக்கு என்றும், ஊருக்கு ஊர் என்றும், அவ்வப் போது சிறு பத்திரிகைகள் தமிழ்நாட்டில் நிறையவே தோன்றின. வந்த வேகத்தில் மறைந்தும் போயின.
அவற்றில் பல எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடவில்லை. எழுத முயன்ற சில இளைஞர்கள்- நாங்களும் எழுத்தாளர்கள் என்று நிரூபிக்க ஆசைப்பட்ட சில ஆரம்ப சூரர்கள்-தங்கள் மன அரிப்பைச் சொறிந்து கொள்ள ஏற்பட்ட தற்காலிக சாதனங்களாகவே அவை முடிந்துள்ளன.
போட்டி உணர்ச்சியாலும், பொறாமை காரணமாகவும், தாக்கவேண்டும் என்ற துடிப்பினாலும், நம்மாலும் சில சாதனைகள் புரியமுடியும் என்ற கம்பீர ஜன்னியின் விளைவாகவும், அவனும் இவனும் பத்திரிகை போடுறானே- நாமும் நம்ம ஊரிலேயே ஒரு பத்திரிகை நடத்தலாமே என்ற தினவினாலும் இன்னோரன்ன பலதரப்பட்ட உந்துதல்களினாலும் சிறு பத்திரிகைகள் தமிழில் பிறந்துள்ளன; பிறக்கின்றன. சில சீசன்களில் அதிகமாகவும் சில காலகட்டங்களில் அபூர்வமாகவும் தலைகாட்டுகின்றன. எப்படியோ, எல்லாக் காலத்திலும் இந்தவித முயற்சிகள் நடந்து கொண்டுதான் வருகின்றன.
இவ்வித முயற்சிகளில் பெரும்பாலானவற்றையும் கவனிக்கையில், அவற்றில் அநேகம் பேப்பர் வியாபாரிக்கும், அச்சாபீஸ்காரருக்கும், பிசினஸ் தேடிக் கொடுத்த முயற்சிகளாகவே முடிந்துள்ளதை உணர இயலும். பல, காகிதத்துக்கும் காசுக்கும், மனித உழைப்புக்கும் நேரத்துக்கும், படிப்பவரின் காலத்துக்கும் ஏற்பட்ட நஷ்டங்கள் கேடுகள் என்று கணக்கிடப் பெறவேண்டிய தன்மையில்தான் உள்ளன.
இலக்கியத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும், கனமான சிந்தனைகள் பரவுவதற்கும், திறமைசாலிகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும்- இப்படிப்பட்ட பல முயற்சிகளுக்கும் சிறு பத்திரிகைகள் நன்கு உதவ முடியும் உதவியும் இருக்கின்றன.
சிலருடைய திறமை முளையிட்டு புஷ்டியோடு வளர்வதற்குத் துணை புரியும் நாற்றங்கால்களாகச் சிறு பத்திரிகைகள் விளங்கியிருப்பதையும் வரலாறு காட்டுகிறது. -
இலக்கியத்துக்கு மட்டுமல்லாது, பல்வேறு கலைகளுக்கும் அறிவியல் துறைகளுக்கும் அரசியல், பொருளாதாரம் மற்றும் தொழில் பிரிவுகளுக்கும் சிறு பத்திரிகைகள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனாலும், தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற தலைப்பில் நான் இலக்கியப் பத்திரிகைகளை மட்டுமே கவனத்தில் கொள்கிறேன்.
இவ்வாறு எல்லையை வெகுவாகக் குறுக்கிக் கொண்டு விட்டாலும் கூட, இதைக் குறைவறச் செய்து முடிப்பது சிரமங்கள் நிறைந்த காரியமே ஆகும். தமிழ்ப் பத்திரிகைகளின் முறையான வரலாறு எதுவும் தொகுத்து எழுதப்படவில்லை. பலவிதமான பத்திரிகை முயற்சிகள் பற்றிய குறிப்புகளும் கிடைக்க வழியில்லை. பத்திரிகைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் நிறுவனங்கள், நிலையங்களும் தமிழ்நாட்டில் இல்லை.
புகழ்பெற்ற நூல் நிலையங்கள்கூடத் தமிழ்ப் பத்திரிகைகளை நல்ல முறையில் பாதுகாத்து வைக்கவுமில்லை. வரலாற்றுச் சிறப்புப் பெற்ற பெரிய பெரிய பத்திரிகைகளே பரிதாபப்படும்படியான நிலையில் அலட்சியமாகவும் அக்கறையில்லாமலும் போட்டு வைக்கப்பட்டிருக்கிற பெரிய நூல் நிலையங்களில் இலக்கியப் பத்திரிகைகள் ஒரு மூலையில்கூடச் சிறு இடம் பெறாதது வியப்புக்கு உரிய விஷயம் இல்லைதான். இந்நிலையில், ‘சிறு பத்திரிகைகள்' அங்கே சேகரித்து, பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் நினைப்பேயாகும்.
இருப்பினும், என்னால் இயன்றதைச் செய்யலாமே என்றுதான் இம்முயற்சியில் ஈடுபடுகிறேன்.