தமிழில் சிறு பத்திரிகைகள்/கிராம ஊழியன்

விக்கிமூலம் இலிருந்து


6. கிராம ஊழியன்



மூன்றரை வருட காலம், திருச்சிராப்பள்ளி மட்டக்காரத் தெருவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'கலாமோகினி' மாதமிருமுறை இலக்கியப் பத்திரிகை சென்னை நகரில் குடியேறத் திட்டமிட்டது. திருச்சியிலிருந்து செயல்புரியக்கூடிய சூழ்நிலை காலப்போக்கில் மிகுந்த சிரம சாத்தியமாகியிருந்ததால், தலைநகருக்குப் போய் இலக்கிய முன்னணியின் வளர்ச்சிக்கு வழிகாண இயலும் என்று அதன் ஆசிரியர் கருதினார்.

‘சம்பிரதாயம் என்ற சுவடுபட்ட பாதையில் இலக்கியம் சென்று கொண்டிருப்பது தமிழ் ரசிகர்கள் அறிந்ததொரு விஷயம்தான். இந்தச் சுவட்டிலிருந்து விலகிப் புதுப் பொருள்கள், புதிய பல கோணங்கள் ஆகிய பல புதுப் பிரதேசங்களுக்கு இலக்கிய முன்னணி செல்வதால் நமது வாழ்க்கை, கலை, சமூகம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தேக்கம் சற்றே சலனமுறும் என்று நம்புகிறோம் என்று அவர் அறிவித்தார்.

‘கலாமோகினியின் பட்டணப் பிரவேசமோ புதிய முயற்சிகளோ அதன் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் துணைபுரியவில்லை. பத்திரிகை காலம் தவறாது வர இயலவில்லை. பொருளாதார பலத்தை உத்தேசித்து ‘லிமிடெட் கம்பெனி' சோதனை கூடச் செய்து பார்த்தார் ஆசிரியர். அதுவும் வெற்றி பெறவில்லை.

1946 ஏப்ரல் மாதம் 18-ம் தேதி சென்னையிலிருந்து கலா மோகினியின் புதிய வடிவ இதழ் வந்தது. அதே வருஷம் செப்டம்பர் 20-ல் வந்ததே அதன் கடைசி இதழ் ஆக அமைந்தது.

‘கலாமோகினி' அதன் நான்கு வருட வாழ்வில், இலக்கிய வரலாற்றில் புதிய அத்தியாயம் எதையும் சேர்த்து விடவில்லை என்றே குறிப்பிட வேண்டும். ‘மணிக்கொடி'க்குப் பிறகு நிலவிய வெறுமையைப் போக்கி, காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு கருவியாக அது அமைந்திருந்தது. 'மணிக்கொடி' எழுத்தாளர்களில் சிலரும், மணிக்கொடி காட்டிய பாதையில் முன்னேற முனைந்த இளைய எழுத்தாளர்கள் பலரும் தங்கள் ஆற்றலைக் காட்டுவதற்கு ஏற்ற களமாக அது விளங்கியது. அநேகப் பிரச்னைகளில் துணிச்சலோடு ஆணித்தரமாக அபிப்பிராயங்களை அறிவித்தது. சமகாலத்திய சிறு பத்திரிகைகளுக்கு ஒரு முன்னோடியாகவும் அது இருந்தது என்றும் சொல்லலாம்.

1942-43-ல் வெற்றிகரமாக வளர்ந்து கொண்டிருந்த 'கலாமோகினி', அதைப் போலவே தங்கள் பத்திரிகையையும் தரமான மறுமலர்ச்சி இலக்கியப் பத்திரிகையாக மாற்ற வேண்டும் என்ற உந்துதலை வேறு சில பத்திரிகைக்காரர்களுக்கு ஏற்படுத்தியது. அப்படி ஒரு தூண்டுதலுக்கு உள்ளாகி தீவிர மறுமலர்ச்சி பெற்ற பத்திரிகைகளில் 'கிராம ஊழியன்’ முக்கியமானது.

‘கிராம ஊழியன்' திருச்சிராப்பள்ளிக்கு 28-மைல்கள் தள்ளி இருக்கும் துறையூர் என்ற சிற்றுாரிலிருந்து வெளிவந்தது.

ஆரம்பத்தில் அது அரசியல் வார ஏடு ஆகத்தான் பிரசுரமாயிற்று. அந்தக் காலத்தில் (1940 களில் திருச்சியிலிருந்து 'நகர தூதன்’ என்ற வாரப் பத்திரிகை செல்வாக்குடனும் பரபரப்பூட்டும் வகையிலும் வந்து கொண்டிருந்தது.

அக்காலத்திய ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) யின் பத்திரிகை அது. சுயமரியாதை இயக்க ஏடு. அதன் ஆசிரியர் திருமலைசாமி என்பவர் வேகமான, மிடுக்குள்ள, உயிர்ப்பும் உணர்ச்சியும் நிறைந்த உரைநடையில் எழுதக் கூடிய திறமை பெற்றிருந்தார். ‘பேனா நர்த்தனம்' என்ற பகுதி அப்பத்திரிகையின் விஷேச அம்சமாகத் திகழ்ந்தது. குத்தும் கிண்டல்களையும், சுளிர் சவுக்கடிகளையும், காரசாரமான கருத்துக்களையும் அவர் அந்தப் பகுதியில் அள்ளி வீசினார். காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் பிரமுகர்களும் அவரது எழுத்துக்களில் சிக்கி அவஸ்தைப்பட்டனர்.

'நகர தூத'னுக்கு ஒரு போட்டியாகவும் அதற்குப் பதில் அளிக்கும் சாதனமாகவும், காங்கிரஸ் ஆதரவுப் பத்திரிகையாகவும் திருச்சி மாவட்டக் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் ஒரு வார இதழை துவக்கினார்கள். அது கிராமப்புறத்திலிருந்து வந்ததால் கிராம ஊழியன் என்று பெயர் பெற்றது. பூர்ணம் பிள்ளை என்ற துறையூர் காங்கிரஸ்காரர் அதன் ஆசிரியரானார். ஊழியன் பிரஸ் என்ற அச்சகத்தில் அது அச்சிடப்பட்டது. பின்னர் லிமிடெட் ஸ்தாபனம் அமைக்கப்பட்டு பிரசும் பத்திரிகையும் அதன் நிர்வாகத்தில் இயங்கின.

சில மாதங்களில் ஆசிரியர் பூர்ணம் பிள்ளை மரணம் அடையவும், ‘கிராம ஊழியன்' அரசியல் ஏடு ஒரு புதிய ஆசிரியரைத் தேடியது. பத்திரிகைகள் நடத்துவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த திருலோக சீதாராம் அதன் ஆசிரியரானார்.

திருவையாறு லோகநாத சீதாராம் விழுப்புரத்தில் தியாகி பத்திரிகையில் அனுபவம் பெற்றபின், 'ஆற்காடு தூதன்’, ‘பால பாரதம்' போன்ற பத்திரிகைகளைச் சொந்தத்தில் நடத்தி அனுபவம் பெற்று, துறையூர் வந்திருந்தார். அவர் கவிஞர். மகாகவி பாரதியின் பக்தர். வள்ளலார் பாடல்கள், பாரதி பாடல்கள் முதலியவற்றைத் தனி ரகமான குரலில் பாடிக் காட்டியும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் அந்த வட்டாரத்தில் பிரபலமாகி வந்தவர். காங்கிரஸ் ஆதரவாளர்.

கிராம ஊழியன் பிரஸ் லிமிடெட்டின் காரியதரிசியாகப் பொறுப்பேற்றிருந்த அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் காந்தி பக்தர், பாரதி அபிமானி, இலக்கிய ரசிகர்.

‘கிராம ஊழியன்' அரசியல் ஏடு அ. வெ. ர. கி. நிர்வாக மேற்பார்வையில், திருலோக சீதாராமின் ஆசிரியப் பொறுப்பில் வெளிவந்தது. சுற்று வட்டாரத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது.

தேசிய விடுதலைப் போராட்ட உணர்வு பொங்கி எழுந்த காலகட்டம். 1942-ல் பத்திரிகை சுதந்திரத்தை அதிகமாகப் பாதிக்கும் அளவில், அந்நாளைய பிரிட்டிஷ் அரசாங்கம், பலப் பல நடவடிக்கைகளை அமல் நடத்திய சமயம். அரசின் அந்தப் போக்கைக் கண்டனம் செய்து அகில இந்திய ரீதியில் பல பத்திரிகைகள் தங்கள் பிரசுரத்தை நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டில் தினமணி, பாரததேவி, நவயுகம், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃப்ரீபிரஸ் ஆகிய நாளிதழ்களும், சண்டே டைம்ஸ், ஹிந்துஸ்தான், கிராம ஊழியன் ஆகிய வாரப் பத்திரிகைகளும் அவ்விதம் எதிர்ப்பு காட்டின.

அப்போதுதான் திருச்சியில் 'கலாமோகினி' தோன்றி உற்சாகமாக வளர்ந்து கொண்டிருந்தது. அது திருலோக சீதாராம், அ. வெ. ர. கி. இருவர் உள்ளத்திலும் தாக்கம் ஏற்படுத்தியது. அவர்கள் ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்த ஆசைப்பட்டார்கள்.

உலக மகாயுத்தத்துக்குப் பிற்பட்ட காலம். காகிதத் தட்டுப்பாடும் கட்டுப்பாடும் இருந்த காலம். புதிய பத்திரிகைகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த காலம்.

எனவே, கிராம ஊழியன் பத்திரிகையையே இலக்கியப் பத்திரிகையாக மாற்ற அவர்கள் திட்டமிட்டார்கள்.

கு. ப. ராஜகோபாலன் சென்னையைத் துறந்து, கும்பகோணம் வந்து, அங்கே இலக்கிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். அவரை 'கௌரவ ஆசிரியர்' ஆகக்கொண்டு கிராம ஊழியன் மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறை வெளியீடாக வரத் தொடங்கியது.

புதிய வடிவம், புதிய தோற்றம், புதிய உள்ளடக்கம் அவற்றுடன், ‘கிராம ஊழியன்' 1943- ஆகஸ்ட் 15-ம் தேதி இலக்கிய உலகில் பிரவேசித்தது.

'தமிழ்நாட்டில் பாரதியை மூலபுருஷனாகக் கொண்ட மறுமலர்ச்சி துவக்கின. இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு, அதன் உன்னத யௌவனப் பருவத்தில் ஊழியன் தோன்றுகிறான். இலக்கியம் மதவுணர்ச்சித் துறைகளில் பாரதி முதலில் காட்டின வழியைப் பணிவுடன் பின்பற்றி, தன்னாலியன்ற வரையில் பணிபுரிவான்' என்றும், ஊழியன் சக்தியின் கைக்கருவி என்றும் மறுமலர்ச்சி பெற்ற கிராம ஊழியன் முதலாவது இதழில் எழுதப்பட்டிருந்தது.

ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு கிராம ஊழியன் என்ற பெயர் கொஞ்சம்கூடப் பொருத்தமானது அல்ல. இதை ஊழியன் நிர்வாகிகள் ஆரம்பம் முதலே உணர்ந்துதான் இருந்தார்கள். வேறு பெயர் வைப்பதற்கு அவர்கள். முயன்றதும் உண்டு. ஆனால், 'புதிய பத்திரிகைகளுக்கு டிக்ளரேஷன்' கிடையாது என்றிருந்த அக்காலத்திய நிலை, வேறு வழி இல்லாது செய்து விட்டது.

எனவே, 'கிராம' என்ற எழுத்துக்களை மிகச் சிறிதாகவும், ‘ஊழியன்' என்பதைப் பெரிதாய் எடுப்பாகவும் அச்சிட்டு திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.

கிராம ஊழியன் பிரஸ் லிமிடெடுக்காக அ. வெ. ர. கிருஷ்ணசாமி பிரசுரகர்த்தராக இருந்து வெளியிட்டு வந்த கிராம ஊழியன் மாதமிரு முறையின் ஆசிரியர் திருலோக சீதாராம். கு.ப. ராஜகோபாலன் கௌரவ ஆசிரியர்.

1943-ஆண்டு 15 முதல் நான்கு மாத காலம் இப்படி இருந்து. பிறகு 1944 ஜனவரி 1-ம் தேதி இதழிலிருந்து, கு. ப. ராஜகோபாலன் ஆசிரியர் என்றும், திருலோக சீதாராம் நிர்வாக ஆசிரியர் என்றும் அச்சிடப்பட்டது.

கு. ப. ரா. கும்பகோணத்தில்தான் இருந்தார். அங்கிருந்தபடியே, ஒவ்வொரு இதழுக்கும் விஷயங்கள் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார். கதை, கட்டுரை ஓரங்க நாடகம்-இப்படி ஒவ்வொரு இதழுக்கும் இரண்டு மூன்று விஷயங்கள் எழுதினார். மகாராஷ்டிர மன்னன் சிவாஜியின் வரலாற்றைக் கதைபோல் தொடர்ந்து எழுதி வந்தார். அது ‘பரத்வாஜன்' என்ற புனைபெயரில் பிரசுரம் பெற்றது. கு. ப. ரா. கரிச்சான் என்ற பெயர்களிலும் எழுதினார்.

கும்பகோணத்தில் வசித்த தி. ஜானகிராமன், எம். வி. வெங்கட்ராம், ஆர். நாராயணசுவாமி ( ‘கரிச்சான் குஞ்சு' ), கி. ரா. கோபாலன், ஸ்வாமிநாத ஆத்ரேயன் மற்றும் சில நண்பர்களிடமிருந்தும் கதைகள் வாங்கி கு. ப. ரா. ஊழியனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

பொதுவாக, ஒவ்வொரு இதழையும் எடிட் செய்து- தேவைப்பட்ட கதைகள், கவிதைகள், கட்டுரைகள் முதலியவற்றைத் தேர்ந்தெடுத்து உருவாக்கியவர் திருலோக சீதாராம்தான்.

அவர் தகுந்த உதவி ஆசிரியர் ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார். 1943 டிசம்பரில் சென்னை நவசக்தி மாதப் பத்திரிகை அலுவலகத்தில் என்னைக் கண்டார்.

1939-ல் எழுத ஆரம்பித்து, எழுத்தாளனாகவே வாழ்வது என்று தீர்மானித்து, பார்த்துக் கொண்டிருந்த சர்க்கார் விவசாய டிமான்ஸ்ட் ரேட்டர் ஆபீஸ் குமாஸ்தா வேலையை 1941- ல் துறந்துவிட்டு, எழுத்து உலகத்தில் முன்னேறுவதற்கு எனக்கு உதவக்கூடிய ஒரு பத்திரிகையை நான் தேடிக் கொண்டிருந்த காலம் அது.

1943-பிப்ரவரியில் புதுக்கோட்டை 'திருமகள்' என்ற பத்திரிகையில் முதலில் சேர்ந்தேன். ராசி. சிதம்பரம் என்பவர் நடத்திய பத்திரிகை. இராம. மருதப்பன் ஆசிரியர். தரமான சிறு பத்திரிகையாக வளர்ந்து வந்த அதை, 'கலாமோகினி' மாதிரி இலக்கிய மறுமலர்ச்சிப் பத்திரிகையாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டார்கள். ‘கலா மோகினி' வி. ரா. ராஜகோபாலன் ஆலோசனையின்படி என்னை உதவி ஆசிரியராகச் சேர்த்தார்கள். ஆனால், பொருளாதார நிலை சீராக இருந்ததில்லை. பத்திரிகை சரியாக வராது என்று புரிந்ததும், நான் கோயம்புத்தூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'சினிமா உலகம்’ மாதமிருமுறை பத்திரிகையில் சேர்ந்தேன்.

அதில் துணை ஆசிரியர் ஆக ஒன்பது மாதங்கள் பணியாற்றிய பின், டிசம்பரில் சென்னை 'நவசக்தி'க்குப் போனேன்.

திரு. வி. கலியாணசுந்தர முதலியார் வாரப் பத்திரிகையாக நடத்தி வந்த 'நவசக்தி' யை “எனக்கு இரு மணிகள் கிடைத்தார்கள். ஒன்று சக்திதாசன் சுப்பிரமணி, இன்னொன்று ராதாமணி, அவர்கள் கண்மணி போல் நவசக்தியைப் போற்றி வளர்ப்பார்கள்” என்று குறிப்பிட்டு, இருவரிடமும் அளித்து விட்டார்.

சக்திதாசன் கப்பிரமணியன் நவசக்தியை இலக்கிய மாசிகையாக நடத்தினார். கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த கே. ராமநாதன் துணை கிட்டியதும் நவசக்தி முற்போக்கு இலக்கிய மாதப் பத்திரிகை ஆயிற்று.

அந்த சந்தர்ப்பத்தில்தான் நான் 'நவசக்தி'யில் போய்ச் சேர்ந்தேன். அங்கே திருலோக சீதாராம் வந்திருந்தார், 'கிராம ஊழியன்' பொங்கல் மலருக்கு விஷயங்களும் விளம்பரங்களும் சேகரம் செய்வதற்காக, கூடவே என்னையும் அழைத்துப் போய்விட வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்.

எனினும், நான் அப்போது 'கிராம ஊழிய'னுக்குப் போகவில்லை.

1944 பிப்ரவரியில் சென்னைக்கு வந்த அ. வெ. ர. கி. என்னையும் துறையூருக்கு அழைத்துப் போனார். நான் கி. ஊ. உத விஆசிரியரானேன்.

‘கிராம ஊழியன்' கிரவுன் அளவில்- சிறிய வடிவத்தில்- வந்து கொண்டிருந்தது. கு. ப. ரா. மற்றும் கும்பகோணம் எழுத்தாளர்களோடு, ந.பிச்சமூர்த்தியும் கவிதை, கதை, மனநிழல் கட்டுரைகள் எழுதி வந்தார். கோபுலு, சாரதி ஆகிய ஓவியர்கள் அப்பொழுதுதான் பத்திரிகை உலகத்தில் பிரவேசித்திருந்தார்கள். கி. ஊ. அவர்களுக்குப் பெரிதும் உதவியது.

1944 மே மாதம் இதழிலிருந்து பத்திரிகையை டிம்மி சைஸில் -'ஆனந்த விகடன்' அளவில்- வெளியிடுவது என்று திட்டமாயிற்று.

எதிர்பாராத விதத்தில், கு. ப. ரா. ஏப்ரல் கடைசியில் மரணமடைந்தார்.

ஆகவே, 'கிராம ஊழியன்' வரலாற்றில் கு. ப. ராஜகோபாலன் பெயர் எட்டு மாதங்களுக்கு-நான்கு மாத காலம் கௌரவ ஆசிரியர் என்றும், நான்கு மாதங்கள் ஆசிரியர் என்றும்-இடம் பெற்றுள்ளது.

அக் காலத்தில், கு. ப. ரா. சில சிறுகதைகளும், 'பாமதி' போன்ற சில ஒற்றையங்க நாடகங்களும், சில கட்டுரைகளும் எழுதியுள்ளார். ந. பிச்சமூர்த்தியும் நிறைய எழுதியிருக்கிறார். தி. ஜானகிராமனின் முதல் நாவல் 'அமிர்தம்' தொடர் கதையாக வெளிவந்தது. புத்தக மதிப்புரை ‘நமது தராசு' என்ற தலைப்பில் பிரசுரமாயிற்று.

அந் நாட்களில் வெளிவந்து மிகுந்த கவனிப்புக்கும் பேச்சுக்கும் இலக்காகியிருந்த வி. ஸ். காண்டேகரின் 'கருகிய மொட்டு' நாவலுக்கு கு. ப. ரா. எழுதிய விரிவான மதிப்புரை குறிப்பிடத்தகுந்தது.

திருலோக சீதாராம் 'மந்தஹாசன்' என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். கலைவாணன் (க. அப்புலிங்கம்) கவிதைகளும் வந்து கொண்டிருந்தன. -

டிம்மி சைலில் வெளியான முதலாவது இதழ் கு. ப. ரா. நினைவு மலராக அமைந்தது.

கு. ப. ராஜகோபாலன் ஆசிரியராக இருந்த காலத்தில், 1944 ஜனவரியில், 'கிராம ஊழியன்' பொங்கல் மலர் ஒன்றைப் பெரிய அளவில் தயாரித்து வெளியிட்டது. இலக்கியத் தரம் உள்ள சிறப்பு மலராக அமைந்திருந்த அதில்தான் புதுமைப்பித்தன் முதல் முதலாக வேளூர் வெ. கந்தசாமிக் கவிராயர் என்ற பெயரில் ஒரு கவிதை எழுதினார். ‘உண்டுண்டு கடவுளுக்குக் கண் உண்டு, கண்ணோ நெருப்பு வைக்க' என்று தொடங்கும் கவிதை அது. மற்றும் அந்நாளைய பிரபல எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. ந. பிச்ச மூர்த்தியின் நீண்ட கவிதை 'மழை அரசி காவியம்' மலருக்குத் தனிச் சிறப்பு அளித்தது.

கு. ப. ரா. வின் மறைவுக்குப் பிறகு, கிராம ஊழியன் போக்கில் இளமை வேகமும், துடிப்பும், துணிச்சலும் நையாண்டியும் சேர்ந்தன. கு. ப. ரா. வுக்காக எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் ஊழியனுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை. ஆகவே நான் பலப்பல பெயர்களில் ஒவ்வொரு இதழிலும் அதிகம் எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது. திறமையுள்ள புதிய எழுத்தாளர்கள் ஊழியன் எழுத்தாளர்கள் ஆனார்கள். அசோகன், தி. க. சிவசங்கரன், ராசிபுரம் தனுஷ்கோடி, எஸ். சிதம்பரம் முதலியவர்கள் தொடர்ந்து எழுதினார்கள்.

கலைவாணன் (திருவானைக்காவல் க. அப்புலிங்கம்) ஓசை நயமும் இயல்பான ஓட்டமும், உணர்ச்சியும் உயிர்ப்பும் நிறைந்த கவிதைகள் எழுதி வந்தார்.

மணிக்கொடி எழுத்தாளர்களில், பிச்சமூர்த்தி, சிட்டி, எம். வி. வெங்கட்ராம் ஆகியோர் ஊழியனில் அதிகம் எழுதியுள்ளனர். எம். வி. வி. சில கதைகள் எழுதினார். சாத்சந்திரர் பெண்மையைப் போற்றி எழுதிய நீண்ட கட்டுரையை விக்கிரகவிதாசன் என்ற புனைபெயரில் எம். வி. வி. தமிழாக்கினார். அது தொடர்ந்து பிரசுரமாயிற்று.

உலகத்துச் சிறுகதைகளை என் அண்ணா அசோகன் (ரா. சு. கோமதிநாயகம்) 'மகாயன்' என்ற பெயரில் மொழிபெயர்த்துத் தந்தார்.

ஈழத்து எழுத்தாளர்கள் ஊழியனில் அதிகமாக எழுதினார்கள்.

1930-களில் கலைமகள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரது கதைகளை வெளியிட்டு வந்தது. சி. வைத்தியலிங்கம், சம்பந்தன், இலங்கையர்கோன் போன்றவர்களது படைப்புக்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. அக்காலத்தில் இலங்கையில் வசித்த சோ. சிவபாத சுந்தரம் தமிழ்ப் பத்திரிகைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

இவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் கிராம ஊழியனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டனர். சோ. தியாகராசா, மஹாகவி, நாவற்குழியூர் நடராஜன் போன்றவர்கள் கவிதைகள் எழுதினார்கள். சு. வேலுப் பிள்ளையும் மற்றும் சிலரும் கதை கட்டுரைகள் எழுதிவந்தார்கள். .

1944 ஊழியன் ஆண்டு மலர் ஒன்றை விசேஷமாகவும் வித்தியாசமாகவும் தயாரிக்கத் திட்டமிட்டோம். தமிழகத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் அனைவரது படைப்புகளோடும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் வெளியிட விரும்பினோம். அந்நாளில் பிரபல்மாயிருந்த ஈழத்து எழுத்தாளர்கள் பலரோடும் தொடர்பு கொண்டேன். சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், ராஜ அரியரத்னம், ச. பாகன் மற்றும் இளைய தலைமுறையினர் பலரும் அன்போடும் ஆர்வத்தோடும் ஒத்துழைத்தனர்.

பொதுவாக, தமிழ்நாட்டின் பெரிய பத்திரிகைகள் விசேஷ மலர் தயாரித்து வெளியிடுகிறபோது, அந்நாட்களில் முதன் முதலில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், மகா மகோபாத்தியாய உ. வே. சாமிநாத அய்யர் கட்டுரை அல்லது கதையைப் பெருமையுடன் பிரசுரிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தன. தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் எழுத்துக்களை அச்சிட்டு மகிழ்ந்தன.

'கிராம ஊழியன்' ஆண்டு மலரில் அந்த வழக்கத்தை நாங்கள் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, இலங்கைத் தமிழ் எழுத்தாளர் அம்பிகை பாகன் எழுதிய கட்டுரையை முதலாவதாக அச்சிட்டோம். இது இலங்கை எழுத்தாளர்களுக்கும் இலக்கிய ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அந்த மலர் விஷய கனத்தினாலும் ரசிகர்களின் போற்றுதலுக்கு இலக்காயிற்று. வேளுர் கந்தசாமிக் கவிராயர் ( புதுமைப்பித்தன்) 'ஓகோ உலகத்தீர் ஓடாதீர்’ என்ற விறுவிறுப்பான கவிதை, ந. பிச்சமூர்த்தியின் மகா கவிகள், ச. து. சு. யோகியாரின் கவிதை, சிட்டியின் ரகளைக் கட்டுரை, சி. வைத்திலிங்கத்தின் கதை கங்காகீதம் மற்றும் பலரின் படைப்புகள் ஆகியவற்றுடன் கே. ஏ. அப்பாஸ் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஒரு இரவுய என்ற சிறந்த சிறுகதையின் மொழிபெயர்ப்பும் இலக்கிய விருந்து ஆக அமைந்திருந்தன.

மலருக்குப் பின்னர், இலங்கையர்கோன் பத்திரிகையின் இறுதி இதழ்வரை கதைகளும் நாடகங்களும் எழுதி உதவி வந்தார்.

1944 நவம்பரில் திருலோக சீதாராம் 'கிராம ஊழியன்' தொடர்பை விட்டு விட்டு, திருச்சி சேர்ந்து, 'சிவாஜி' வார இதழின் ஆசிரியரானார். டிசம்பர் 1-ம் தேதி இதழிலிருந்து 'ஆசிரியர் : வல்லிக்கண்ணன்' என்று பெயர் அச்சிடப்பட்டது.

துணிச்சலான அபிப்பிராயங்கள், நேர்மையான புத்தக மதிப்புரைகள், ரசம் நிறைந்த புதுமைக் கதைகள், சர்ச்சையைக் கிளப்பிய கட்டுரைகள், இலக்கிய விவகாரங்கள், அருமையான உலகத்துச் சிறுகதைகள் ஊழியனில் இடம் பெற்று வந்தன. நாடகம், சினிமா பற்றிய சூடும் சுவையும் நிறைந்த விமர்சனங்கள் இதழ்தோறும் வெளியாயின. ஓரங்க நாடகங்களுக்கு ஊழியன் விசேஷ இடம் ஒதுக்கியிருந்தது. 'பாரதி அடிச்சுவட்டில்' என்ற தலைப்பில், பாரதியின் காட்சிகள் பாணியில் அமைந்த வசன கவிதைகளும் பிரசுரமாயின. நையாண்டி பாரதியின் கட்டுரைகளும் சொனா முனாவின் சிந்தனைகளும் கிராம ஊழியனின் விசேஷ அம்சங்களாக விளங்கின.

கொடுக்கப்பட்ட விஷயங்களில் சூடும் சுவையும், நயமும் புதுமையும், கனமும் வேகமும் இருந்தபோதிலும், கிராம ஊழியன் என்ற பெயர் அந்தப் பத்திரிகைக்குப் பாதகமாகவே செயல்பட்டது எப்போதும்.

'கிராம நலம்', 'கிராம ராஜ்யம்' போன்ற கிராம சீர்திருத்தம் பற்றிப் பேசக்கூடிய ஒரு பத்திரிகை என்ற எண்ணத்தையே 'கிராம ஊழியன்’ எனும் பெயரும் ஏற்படுத்தி வந்தது. இலக்கியப் பத்திரிகைக்கு 'கிராம ஊழியன்' என்ற பெயர் எடுப்பாகவுமில்லை; பொருத்தமாகவும் இல்லை என்பது பொதுவான அபிப்பிராயம். 'கிராம ஊழியன்' என்று பெயரை வைத்துக் கொண்டு, என்னென்ன விஷயங்களை எல்லாமோ போட்டுப் பத்திரிகையைப் பாழ்படுத்துவதாக ஒரு சாரார் குறைகூறிக் கொண்டிருந்தார்கள். -

பத்திரிகைக்குப் படைப்புகள் அனுப்பி ஒத்துழைக்க மனமில்லாது போன எழுத்தாளர்கள், ஒருவனே பலப்பல பெயர்களில் எழுதிப் பத்திரிகையின் வளர்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று கண்டனங்களை வாரி வீசி மகிழ்ந்தார்கள்.

எப்படியோ, கிராம ஊழியன் பலரது கவனத்துக்கும் பரபரப்பான பேச்சுக்கும் உரிய பத்திரிகையாக நடந்து வந்தது. பத்திரிகை விற்பனையில் லாபம் இல்லை; அச்சு இயந்திரங்களைப் பெருத்த லாபத்தோடு விற்க முடியும் என்ற நிலை வந்ததும், அதிபர் அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் மிஷின்களை விற்று விட்டார். பத்திரிகை நிறுத்தப்பட்டது.

‘கிராம ஊழியன்' 16-5-1947 இதழ் அதன் கடைசி இதழாக அமைந்தது.

☐☐