தமிழில் சிறு பத்திரிகைகள்/சர்வோதயம்‌

விக்கிமூலம் இலிருந்து

44. சர்வோதயம்


யர்ந்த குறிக்கோளுடன் நடத்தப்படுகிற ஒரு சிறு பத்திரிகை 40 வருடங்களுக்கு மேலாகவே, கொள்கைப் பிடிப்பை விட்டுவிடாமல், தான் தேர்ந்து கொண்ட லட்சியப் பாதையில் முன்னேறப் போராடிக் கொண்டிருக்கிறது. இது வியப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய ஒரு சாதனைதான்.

இந்த அரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிறு பத்திரிகையின் பெயர் ‘சர்வோதயம்‘. இந்த மாத இதழ் இப்போது (1985-ல்) 42-வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது.

தமிழ்நாடு சர்வோதய சங்கம் என்ற அமைப்பின் சார்பில் நடை பெறுகிற ‘சர்வோதயம்‘ கிராம மேம்பாட்டிற்காகவும், மக்களின் வாழ்க்கை வளத்துக்காகவும், நாட்டின் கைத்தொழில் வளர்ச்சிக்காகவும், மனிதகுலத்தின் நலன்களை வலியுறுத்துவதற்காகவும் காந்திய—சர்வோதயக் கொள்கையைப் பரப்புவதைத் தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. இக்கொள்கை பரப்பும் ஒரே இதழாகத் தமிழகத்தில் வெளிவரும் இப் பத்திரியின் ஆசிரியர்—திரு. வெ. இராமச்சந்திரன்.

இவர் தமிழ்நாடு சர்வோதய சங்கத்தின் முன்னாள் தலைவரும், அகில இந்திய காதிக் கமிஷனின் முன்னாள் செயலாளரும் ஆவார். தொழில் துறை, பொருளாதாரம், சமூகவியல், கல்வித் துறை முதலிய பல விஷயங்களில் அக்கறையும் ஆர்வமும், அறிவுத் தேர்ச்சியும், தெளிந்த சிந்தனையும், அச்சிந்தனையை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துச் சொல்லும் ஆற்றலும் இவர் பெற்றுள்ளார். சர்வோதயம் இதழ்களில் இவர் எழுதும் கட்டுரைகள் இவருடைய திறமைக்கும் உழைப்புக்கும் சான்றுகளாக விளங்குகின்றன.

கிராமப் பொருள்கள் வளர்ச்சியை முக்கியமானதாகக் குறிப்பிடும் சர்வோதயம், காந்திய வழியை—காந்திய தத்துவத்தை, அதன் உயர்வை எடுத்துக் கூறுகிறது. தனிமனித ஒழுக்கம், நேர்மை, சத்தியம், அயராத உழைப்பு, சுய கட்டுப்பாடு முதலியவற்றின் அவசியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அதற்கேற்ற சான்றோர் வாக்குகள், அறிஞர் பொன்மொழிகள், தலைவர்களின் சிந்தனைகளை இதழ்தோறும் பிரசுரிக்கிறது. ‘இம்மாதக் சிந்தனை‘ ஒரு முக்கிய அம்சமாகும்.

செய்திகளோடு தொடர்புகொண்ட கருத்துச் சித்திரம் அழகிய முறையில் அட்டைப்படமாக அச்சிடப்பட்டு, உள்ளே ‘அட்டைப்பட விளக்கம்‘ என்று ஒரு ஆய்வுக் கட்டுரை விரிவாகப் பிரசுரம் பெறுகிறது.

காந்தியப் பொருளாதார அடிப்படையில் பல்வேறு தொழில்கள், கைத் தொழில்கள், சிறு தொழில்கள்—அவற்றின் நிலைமை, அவை எதிர் கொள்ளும் பிரச்னைகள்—பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் புள்ளி விவரங்களுடன் ஒவ்வொரு இதழிலும் வெளிவருகின்றன.

இந்த ரீதியில், மீன் பிடிப்புத் தொழில், மீனவர் பிரச்னைகள், கரும்பு விளைவித்தல், சர்க்கரைத் தொழில், அச்சுத் தொழில் போன்ற விஷயங்கள் சில இதழ்களில் ஆராயப்பட்டுள்ளன.

காந்தியப் பொருளாதாரத்துடன் கதர், கிராமக் கைத்தொழில், கிராம மேம்பாடு, இயற்கை மருத்துவம், இலக்கியம், சிறு துணுக்குகள், சுவையான பல தகவல்கள், சிந்தனைக்குரிய விஷயங்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் சம்பந்தமான கட்டுரைகளை சர்வோதயம் வெளியிடுகிறது.

நாட்டின் சுதந்திரமும் மக்களின் வாழ்க்கை நலனும் வளமும் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கு ஒருமைப்பாடும் ஒற்றுமையும் காத்து வளர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். இதை ஆணித்தரமாகக் கூறும் கட்டுரைகள் சர்வோதயத்தில் வருகின்றன.

‘பாரதத்தைக் காத்து பலமடைய, வளமடையச் செய்வதற்கு அண்ணல் காந்தியடிகள் காட்டியுள்ள வழியே சரியானது என்பது நமது உறுதியான நம்பிக்கையாகும். இப்பணி இனி மக்களின் ஆற்றலால்தான் நடைபெற முடியும். மக்களின் சக்தியை ஒன்று திரட்ட கிராமங்கள் தோறும், தெருக்கள்தோறும் சென்று மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும். அவர்களை ஒன்று திரட்ட வேண்டும். பயிற்சியடைந்த ஊழியர்களின் படை ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டும். ஒரு கட்சி அரசு போய் வேறு கட்சியின் அரசு அமைய வேண்டும். ஆட்சிமுறை புதியதாக இருக்க வேண்டும். புதிய சமுதாய அமைப்பு வேண்டும் என்பது மட்டும் போதாது, கீழே இருந்து மேல் மட்டம் வரை ஒரு மாற்று ஏற்பாடு வேண்டும். தற்போதுள்ள அரசியல் சுழலில் சுற்றிக் கொண்டிருப்பதால் எத்தகையதொரு பலனும் ஏற்படப் போவதில்லை. சமுதாயத்தில் நமது முன்னோர்கள் நமக்களித்துள்ள நீதி, நேர்மை என்ற மூலதனம் எஞ்சியுள்ளது; அதைக் காக்க வேண்டும். கீழேயிருந்து புதிய பாரதத்தைத் தோற்றுவிக்கும் பணியைத் துவக்க வேண்டும். இதுவே உண்மையான நிர்மாணப் பணியாகும்.’

இன்றைய இந்தியாவின் நிலையைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு கட்டுரையின் முடிவுரை இது.

‘இன்று—

சத்தியத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் தன்னம்பிக்கையற்றவர்களாக, சமுதாய நம்பிக்கையை இழந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆதலால், அவர்கள் புலம்புகின்றார்கள். வெறும் புலம்பலால் என்ன பயன் விளையும் ?

தூங்கிக் கிடக்கும் தனிமனித, சமுதாய, மனச்சாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டும்.

உண்மையின் குரல் உரத்துக் கேட்க வேண்டும்.

உண்மையை நிலைநாட்டத் தொடர்ந்து போராடக் கூடிய மக்கள் சக்தியின் எழுச்சி வேண்டும்.

காந்தியடிகளின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டி. அவருக்குச் சத்தியத்தின் வெற்றி, தானே கிடைக்கவில்லை. அதற்காக அவர் செய்த தியாகத்தை நாம் உணர்ந்தாக வேண்டும்.

------------

சத்தியம் உயிரோட்டமுள்ளதாக, சத்தியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஒன்று திரண்டு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். செயல்பட்டால்—

வாய்மை வெற்றி பெறக் காண்போம்‘

வாய்மையின் உயர்வை உபதேசிக்கும் ஒரு கட்டுரையின் இறுதிப் பகுதி இது.

‘காந்தியடிகளின் கருத்துக்கேற்ப யாதொரு வளர்ச்சித் திட்டம் வகுப்பினும் அதில் “தனக்கு” சுயநலத்துக்கு) இடமே இல்லை. இத்தகைய தன்னல உணர்வற்ற ஒரு மனிதனை மையமாக வைத்ததொரு சமுதாயத்தையே அவர் காண முயன்றார். அவனுக்குத் தனதென்றிருப்பதெல்லாம் அவனது ஆன்மாவும், ஒரு வாழ்க்கை இலக்கும், தன்னுணர்வுமே. இந்த உணர்வு சுதேசிய வண்ணமாகத் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்திலும், அத்தகைய சிறு சமுதாயங்களைக் கொண்ட நாட்டளவிலும், மனித இனம் என்ற உணர்வால் உலகனைத்திலும் செயல்படும். உலகில் போர் மூளுகிறது என்றால் காரணம் உலகில் ஏதோ கோளாறு காரணமாக இல்லை; மனித உள்ளங்களில் போர் தொடர்ந்து நடைபெறுவதாலேயே. எனவே, உலக அரங்கில் சமாதானம் நிலவ பிரகடனங்களால் மட்டும் முடிந்து விடாது. மனித உள்ளங்களிலிருந்து வன்முறையைக் களைந்தாலன்றி, ஊரிலோ, நாட்டிலோ, உலகிலோ சமாதானம் நிலவ முடியாது. இதைத் தனிமனிதன் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை ஏற்றும், தக்க கல்வி கற்றும், உரிய பயிற்சிகள் வழியாகவும், சமுதாய, பொருளாதார அமைப்புகளைத் திருத்தியமைத்து, பொருள் குவியாமை, சுரண்டலின்மை வழியாக ஓர் அகிம்சை சமுதாயத்தை நிர்மாணம் செய்ய மனப்பூர்வமாக முயன்றாலன்றி அடைவது சாத்தியமில்லை.'

சர்வோதயம் ஆசிரியர் வெ. இராமச்சந்திரன் எழுதிய ஒரு கட்டுரையில் காணப்படும் கருத்து இது.

இத்தகைய உயர்ந்த லட்சியத்தை உணர்த்தும் கட்டுரைகள் சர்வோதயம் இதழ்களில் வெளிவருகின்றன. இந்நோக்கில் காந்திஜி, வினோபா, ஆச்சார்ய கிருபளானி, ஜெயப்பிரகாஷ் நாராயண் முதலிய தலைவர்கள் வலியுறுத்தி வந்த கருத்துரைகளும் பிரசுரம் பெறுகின்றன.

சர்வோதயம் மற்றும் கதர் இயக்கம் சம்பந்தமான செய்திகள் ‘சுற்றி வந்தபோது' என்ற பகுதியில் தரப்படுகின்றன. கேள்வி- பதில் பகுதியும் உண்டு.

சர்வோதயம் இலக்கியத்திலும் அக்கறை கொண்டிருக்கிறது. சமுதாய நோக்குடன் எழுதப்படும் கவிதைகளைப் பிரசுரிக்கிறது. உயர்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் தொடர் கதை ஒன்றையும் வெளியிடுகிறது. சர்வோதயம் கோவையிலிருந்து பிரசுரமாகிறது.