தமிழில் சிறு பத்திரிகைகள்/சிகரம்‌

விக்கிமூலம் இலிருந்து



28. சிகரம்


முற்போக்கு இலக்கியப் பத்திரிகையான 'தாமரை' இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (CP. வலதுசாரி கம்யூனிஸ்டுகள்) சார்பில் நடைபெறும் மாதப் பத்திரிகை.

இடதுசாரிக் கம்யூனிஸ்டுகள் ( CPM-மார்க்சிஸ்ட் கட்சி) சார்பில் நடக்கிற மாதப் பத்திரிகை 'செம்மலர்' ஆகும். மதுரையிலிருந்து பிரசுரமாகும் இந்த முற்போக்கு இலக்கிய இதழும் புத்தக வடிவத்தில்தான் வருகிறது. மார்க்சிஸ்ட் தத்துவ நோக்கில் தீவிரவாதக் கருத்துக்களை வலியுறுத்தும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் இதில் இடம் பெறுகின்றன.

‘நல்ல நாவல்' என்று இலக்கிய ரசிகர்களின் மதிப்புரையைப் பெற்றுள்ள சின்னப்பப் பாரதியின் 'தாகம்' செம்மலரில் தொடர் கதையாக வெளிவந்ததுதான்.

'மலரும் சருகும்', 'தேநீர்' ஆகிய முற்போக்கு நாவல்களை எழுதிய டி. செல்வராஜ் இந்தப் பத்திரிகையில் 'மூலதனம்' என்ற நாவலைத் தொடர்ந்து எழுதினார்.

‘இலக்கியச் சிந்தனை' அமைப்பின் பரிசுகளைப் பெற்ற அநேக சிறுகதைகள் 'செம்மலரி'ல் வந்திருக்கின்றன.

'செம்மலர்' இப்பவும் இடதுசாரிகளின் இலக்கியப் பத்திரிகையாக நடந்து கொண்டிருக்கிறது.

இடதுசாரிகளின் இன்னொரு இலக்கியப் பத்திரிகையாக, ச. செந்தில்நாதன் 'சிகரம்' என்ற மாத இதழை நடத்தினார்.

இந்த 'மக்கள் இலக்கிய மாத இதழ்' 1975 ஜூலையில் பிறந்தது.

‘காலகட்டத்தின் கட்டளையை ஏந்தி, கலை இலக்கியப் பண்பாட்டுத் துறையில் தோகை விரிக்கிறது ஒரு மயில்; கீதம் இசைக்கிறது ஒரு குயில்.’

இப்படி இசைத்துக்கொண்டு ஒரு வாசல் திறப்புக்கு வழி வகுத்தது சிகரம்.

‘இது ஒகோ என்றிருக்க வேண்டும் என்ற பேராசை எனக்குக் கிடையாது. இருக்கும் என்று எதிர்பார்க்கும் நப்பாசையும் கிடையாது.

ஏனென்றால் இது போர்க்களத்தில் பீரங்கி அல்ல, பீரங்கியின் ஒரு உறுப்பே.

களத்தில் துப்பாக்கியை ஏந்தி நிற்பவனுக்குக் கரத்தில் வலிமை மட்டும் இருந்தால் போதுமா? போதாது. புத்தி கூர்மை வேண்டும்; சாதுர்யம் வேண்டும். அதை வளர்க்க முயலும் சிறு ஏடு சிகரம் என்று அதன் ஆசிரியர் அறிவித்திருந்தார்.

‘மனிதாபிமான கோட்பாடுகளிலும் ஜனநாயக நெறிகளிலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் போதும் உங்கள் எழுத்து மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் போதும்.

சிகரம் இடம் கொடுக்கும்.

இந்த இடம் இடதுசாரி சக்திகள் பரந்த ஜனநாயக அமைப்பைக் கட்டுவதற்கும், ஒன்றுபடும் விஷயங்களில் ஒருமைப்பாட்டை வளர்த்துக் கொள்ளவும், எதிர் வர்க்கங்களுக்கு ஆதரவான இலக்கிய அம்சங்களை அம்பலப்படுத்துவதற்கும் கொடுக்கப்படும் இடமாகும்.

இவ்வாறு ஆசிரியர் எழுதினார்.

'இலக்கியமும் சமுதாய மாற்றங்களும்' என்ற தலைப்பில் வி. பி. சிந்தன் எழுதிய கட்டுரை முதல் இதழில் பிரசுரமாயிற்று.

'இலக்கியம் என்பது சமுதாயத்தின் விளை பொருள். சமூக உறவுகளும் உற்பத்தி முறைகளும் எந்த அளவு ஒரு சமுதாயத்தில் நிலவுகிறதோ, அந்த அளவு அந்தச் சமுதாயத்தின் இலக்கியமும் இருக்கும் .

சமுதாய மாற்றம் ஏற்படும் போதெல்லாம் இலக்கியத்திலும் மாற்றம் ஏற்படும். சமூக உணர்வின் துடிப்பைக் கிரகித்துக் கொண்டு அதை வெளிப்படுத்தும் இலக்கியங்கள் சமுதாய உணர்வின் அலைகளையும் பாதிக்கின்றன. சமுதாய மாறுதலை அவை உத்வேகப்படுத்துகின்றன'-இக்கருத்தை சிந்தன் தனது கட்டுரையில் வலியுறுத்தியிருந்தார்.

தணிகைச்செல்வன், பறம்பைச் செல்வன், க. பொ. அலி கவிதைகள்; என். ஆர். தாசன், ம. ந. ராமசாமி எழுதிய கதைகள், மு. செந்தமிழன் எழுதிய 'ஷோலக்கோவ்-ஒரு கம்யூனிஸ்ட் எழுத்தாளர்' என்ற கட்டுரை; 'இளவேனில்' கவிதா என்ற தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரையின் பகுதி-இவை முதல் இதழின் விஷயங்கள்.

இவ்விதமே தரமான விஷயங்களுடன் மாதந்தோறும் வெளிவந்தது 'சிகரம்.'

என். ஆர். தாசன், ம. ந. ராமசாமி, சி. ஆர். ரவீந்திரன், பா. செயப்பிரகாசம், மேலாண்மை செ. பொன்னுசாமி ஆகியோர் அவ்வப்போது கதைகள் எழுதினார்கள்.

ம. ந. ரா. எழுதிய சில கதைகள் காரசாரமான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் எழுப்பியுள்ளன.

தணிகைச்செல்வன், தமிழன்பன், உதயை மு. வீரையன், கொ. மா. கோதண்டம், முத்துராமலிங்கம், ப.வேலுசாமி முதலியோர் கவிதைகள் அடிக்கடி வந்தன.

பிற மொழிக் கவிதைகளைத் தமிழாக்கி வெளியிடுவதிலும் 'சிகரம்' ஆர்வம் காட்டியது.

நஸ்ருல் இஸ்லாமின் வங்கக் கவிதைகள் மற்றும் சீனக் கவிதைகள், வியத்நாம் கவிதைகள் சில முதல் வருட இதழ்களில் வந்துள்ளன.

ஒரியக் கதை, வங்காளிக் கதை மொழிபெயர்ப்புகளும் பிரசுரம் பெற்றன.

‘சிகரம்' பேட்டிகளில் கவனம் செலுத்தியது. முதலாவதாக 'வி. பி. சிந்தனுடன் ஒரு பேட்டி' வந்தது.

‘வாழ்க்கையின் உண்மையான படப்பிடிப்பு மட்டும் ஒரு சிறப்புக்குரிய இலக்கியப் படைப்பாக நான் கருதவில்லை. சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளில் அவர்களின் பொருளாதார நலன்களால் உந்தித் தள்ளப்பட்டு பரஸ்பரம் மோதியும் அடக்கியும் எதிர்த்தும் எதிர்நீச்சலடித்தும் நடத்துகின்ற வர்க்கப் போராட்டத்தையும், அதன் விளைவாக சமுதாயத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களையும் கோடிட்டுக் காட்டுகிற படைப்பே சிறந்த இலக்கியமாகும்' என்று சிந்தன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்தை வலியுறுத்தும் கட்டுரைகளை ‘சிகரம்' அவ்வப்போது பிரசுரித்தது. உதாரணமாக 'முற்போக்குச் சமுதாய மாற்றங்கட்கு கலையும் இலக்கியமும் ஓர் ஆயுதமே' -ஈ. எம். எஸ். எழுதியது. 'களத்தில் நாம்' -டி. செல்வராஜ்.

இளவேனில், உணர்ச்சிகரமான அழகிய நடையில் 'கவிதா' கட்டுரைத் தொடரில், இக்கருத்துக்குச் சாதகமான இலக்கியப் படைப்புகள் பற்றி விரிவாக எழுதினார்.

கே. முத்தையா, தமிழ்நாடு சி. ஐ. டி. யூ. தலைவர் கே. ரமணி, ஜோதிர்லதா கிரிஜா-பேட்டிகள் இடம்பெற்றன.

வாசகர் கருத்து 'பட்டறை' என்ற பகுதியில் வெளியிடப்பட்டது. வாசகர்கள் உள்ளது உள்ளபடி விமர்சிக்கத் தயங்கவில்லை.

‘நந்தனார் நாட்குறிப்பு' எனும் பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. கலை, இலக்கிய வட்டாரப் பிரமுகர்களைப் பற்றிய சுவையான தகவல்களும் கிண்டல் குறிப்புகளும் இதில் காணப்படும்.

'ஆஸ்தான கவி பதில் தருகிறார்' என்ற கேள்வி-பதில் பகுதியும் விறுவிறுப்பாக அமைந்திருந்தது.

கே. முத்தையா 'சிலப்பதிகாரம்- உண்மையும் புரட்டும்' என்றொரு நீண்ட கட்டுரைத் தொடரை சிகரத்தில் எழுதி, இலக்கியவாதிகள் மற்றும் ஆய்வாளர்களின் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார்.

முற்போக்கு நாவல்கள், சிறுகதைப் புத்தகங்கள் பற்றி விரிவான விமர்சனங்கள் எழுதப்பட்டன.

சிகரம் 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கும் இலக்கிய ஏடாகவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அடியொற்றி நடக்கின்ற ஏடாகவும்' விளங்கியது. ஆகவே, தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் எழுத்தாளர்கள் கலை இலக்கிய பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றிய தனது எண்ணங்களை செந்தில் நாதன் விரிவாகவும் வெளிப்படையாகவும் தொடர்ந்து எழுதினார்.

மூன்றாவது வருஷத்தில் 'தமிழ்-தி. மு. க. கம்யூனிஸ்ட்' பற்றிய அபிப்பிராயங்களை வெளியிட்டார்.

‘சிகரம்' சிறுகதை, கவிதைத் துறைகளைவிட 'கட்டுரை' யில்தான் குறிப்பிடத்தகுந்த வெற்றி கண்டிருக்கிறது.

இதை ஆசிரியரே உணர்ந்து, ஒரு இதழில் குறிப்பிட்டிருக்கிறார். மார்க்ஸிய தத்துவக் கண்ணோட்டத்தில் எழுதப்படுகிற கதைகளை, அந்நோக்கில் எழுதுகிற இளம் எழுத்தாளர்களின் கதைகள், கவிதைகளையும் பிரசுரித்து ஊக்கம் அளிக்க வேண்டியிருப்பதாலேயே இப்படி நேர்கிறது என்பது அவருடைய கூற்று.

‘சிகரம் லாபத்திற்காக நடத்தப்படவில்லை. கலை-இலக்கியப்-பண்பாட்டுத் துறையில் முற்போக்கு முகாமை, வர்க்கக் கண்ணோட்டத்தைப் பலப்படுத்தும் இலட்சியத்திற்காகவே நடத்தப்படுகிறது' என்பதை அவ்வப்போது நினைவுறுத்தினார் அவர்.

கே. முத்தையா எழுதிய 'சிலப்பதிகாரம்' பற்றிய ஆய்வுக் கட்டுரை போலவே முக்கியமான மற்றொரு கட்டுரைத் தொடரையும் சிகரம் வெளியிட்டுள்ளது. ஜன. சுந்தரம் எழுதிய 'அகப்பாடல்களில் அரசியல் பிரச்னைகள்-சமூக உறவுகள்' என்ற தொடர் கனமான சிந்தனைகளைக் கொண்ட ஆழ்ந்த ஆராய்ச்சியாகும்.

தனிக் கட்டுரைகளில் க. கைலாசபதியின் 'தற்கால இலக்கியத்தில் சில போக்குகள்', மற்றும் 'ஈழத்துத் தமிழ் இலக்கியம்- ஓர் அறிமுகம்', சூரியதீபன் எழுதிய 'நடுத்தரவர்க்கப் பேனா', நல்லதம்பியின் 'கலைஞனும் சமூகமும்', 'பாரதி இலக்கியம்', ஆகியவை முக்கியமானவை.

சூரியதீபன் தற்கால உண்மைகளைச் சூடாகவும் அழுத்தமாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 'நடுத்தர வர்க்கப் பேனா' என்ற கட்டுரையில்.

'மக்களிடமிருந்து மக்களுக்குக் கொடுப்பது என்பது அரசியலுக்கு மட்டுமல்லாமல், கலை இலக்கியத்திற்கும் பொருந்துகிற ஒன்று. மக்களிடமிருந்து விஷயரசம் எடுத்து இலக்கியத்தில் பூசுகிறபோதுதான், அது காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பது சரியாகிறது.

'புதுக் கவிதை எழுதுவதே ஒரு பெரிய சமூக நிகழ்வு ஆகிவிடாது. புதுக் கவிதை எழுத பேனா தொட்டுவிட்டதாலேயே சமூக முன்னோட்டத்திற்கான பணியைச் செய்து விட்டதாக ஒரு பெருமை இன்றைய மத்திய வர்க்க எழுத்தாளர்களிடையே காணப்படுகிறது. வாழ்க்கை நிலைகளில் மாற்றம் கொள்ளாமல் எழுதுவது மட்டுமே தீர்வு கண்டுவிடும் என்று எண்ணினால், அது நடுத்தர வர்க்கக் கனாக்களே.’

எழுதுகிறவர்களைச் சிந்திக்கும்படி தூண்டுகிற இந்தவிதமான எண்ணங்கள் இக்கட்டுரையில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன.

மூன்று வருடங்கள் 'சிகரம்' பெரிய அளவில் ('தீபம்' அளவில்) வெளிவந்தது.

சில மாதங்கள் வராமல் நின்று, பின் 1979-ல் சிறு அளவில் ('விகடன் சைஸ்') மீண்டும் வந்தது.

நா. காமராசன், தணிகைச்செல்வன், சிற்பி, புவியரசு, டொமினிக் ஜீவா, சத்யஜித் ரே, டைரக்டர் ருத்ரய்யா ஆகியோரது பேட்டிகளைப் பிரசுரித்தது.

சினிமாவில் ஆர்வம் காட்டியது. தரமான திரைப்படங்களை விமர்சித்து, நல்ல படங்களைப் பாராட்டி எழுதியது.

'சிகரம்' நாடகக் கலையிலும் சிறிதளவு கவனம் செலுத்தியது.

கோ. ராஜாராம் எழுதிய 'சிவப்பு நதி' என்ற கவிதை நாடகத்தை அச்சிட்டது. கோமல் சுவாமிநாதனின் மேடை நாடகங்களை விமர்சித்து எழுதியது. அவருடைய கட்டுரை ஒன்றைப் பிரசுரித்தது.

எல்லா சிறு பத்திரிகைகளுக்கும் உள்ள சிரமங்களும் பிரச்னை களும் சிகரத்துக்கும் இருந்தன. ஒழுங்காக, காலம் தவறாது வெளிவர சிரமப்பட்டு, இறுதியில் நிற்க வேண்டிய நிலை அதற்கும் ஏற்பட்டது.