தமிழில் சிறு பத்திரிகைகள்/சிதைந்த கனவுகள்‌

விக்கிமூலம் இலிருந்து



23. சிதைந்த கனவுகள்


இலக்கியப் பத்திரிகை நடத்துவது சிரம சாத்தியமானது- சிறு பத்திரிகை அளவில் நடத்த முயல்வதுகூட மிகுந்த கஷ்டங்களைத் தரக் கூடியது-என்பதை பத்திரிகை உலகின் தன்மைகளை அறிந்தவர்கள் உணராமல் இருக்கமுடியாது.

என்றாலும், வரலாற்று உண்மைகளையும், கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிற யதார்த்த நிலைமைகளையும் தெரிந்துகொண்டே இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ரசிகர்கள் அவ்வப்போது நாமும் ஒரு பத்திரிகை நடத்திக் காட்ட வேண்டும் என்று ஆசைப்படுவதும், செயலில் முனைவதும் இயல்பாக இருந்து வருகிறது.

இதுவரை நடந்த பத்திரிகைகளும், இவர்கள் காலத்தில் நடப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிற இலக்கியப் பத்திரிகைகளும் இவர்களுக்கு அதிருப்தியையே தந்துள்ளன. ‘எந்தப் பத்திரிகையும் சரியான இலக்கியப் பத்திரிகையாக இல்லை. தரமான, நல்ல இலக்கியப் பத்திரிகையை நாம்தான் நடத்த முடியும்' என்று இவர்களில் ஒவ்வொருவரும் நம்புகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் எல்லாக் காலத்திலும் இருந்து வந்திருக்கிறார்கள்; இப்பொழுதும் இருக்கிறார்கள். எனவே, கனவு காணும் இயல்பை உடைய இவர்கள் போதிய வசதிகள் இல்லாமலே ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கத் துணிகிறார்கள். அவை ஒன்று அல்லது இரண்டு இதழ்கள் வெளிவந்ததோடு, இவர்களது ஆர்வமும் அணைந்து விடுகிறது. பத்திரிகையின் அடுத்த இதழ் உருவாவதற்கு வழியில்லாததால் அதன் கதையும் முடிந்து போகிறது.

புதுமைப்பித்தன் உயர்தரமான இலக்கியப் பத்திரிகை ஒன்றை நடத்திக் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு சோதனை எனப் பெயர் வைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய சோதனை முயற்சிகளை அது தாங்கிவரும் என்பதாலும், பத்திரிகை நடத்துகிறவருக்கே அது சோதனையாக அமையும் என்பதனாலும், இலக்கியப் பத்திரிகைக்கு அந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று புதுமைப்பித்தன் வேடிக்கை விளக்கமும் கொடுத்தார்.

அவர் சொந்தமாகப் பத்திரிகை எதுவும் நடத்தவில்லை. அவர் தேர்ந்து சொன்ன பெயர் பிற்காலத்தில் கவிஞர் நா. காமராசனுக்குக் கைகொடுத்தது.

கவிஞர் கண்ணதாசன் 'கண்ணதாசன்' என்ற பெயரில் ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்தினார். அது பெரிய அளவில் வெற்றிகரமாக நடைபெற்ற ஒரு பத்திரிகை ஆகும். அதிகமான பக்கங்கள். பக்கத்துக்குப் பக்கம் ஓவியர் அமுதோனின் தனி ரகமான சித்திர வேலைப்பாடுகள் பெற்றுத் திகழ்ந்த 'கண்ணதாசன்' மாத இதழ் நல்ல தரமான இலக்கிய ஏடு ஆக வந்துகொண்டிருந்தது. இளைய எழுத்தாளர்கள், புதிய கவிஞர்கள் வளர்வதற்குத் துணை புரிந்தது. நல்ல விஷயங்களை நிறையவே கொடுத்தது. கண்ணதாசனும் அதில் அதிகமாகவே எழுதிக் கொண்டிருந்தார்.

வாசகர்களின், எழுத்தாளர்களின் நல்லாதரவைப் பெற்றிருந்த ‘கண்ணதாசன்' மாசிகை கவிஞரின் கோளாறான போக்குகளினால் செத்தது. திரும்பவும் தலையெடுப்பதும் மீண்டும் அவரது குறுக்கீட்டினால் மறைவதுமாக இருந்தது.

‘கவியரசு' என்று விளம்பரப்படுத்திக் கொண்ட கண்ணதாசன் பாதையிலேயே சென்று முன்னேற ஆசைப்பட்ட நா. காமராசன் தானும் ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்த முன்வந்தார். அதற்கு, புதுமைப்பித்தன் கூறிய பெயரான 'சோதனை' என்பதைச் சூட்டினார். ஆசிரியர் கவியரசு நா. காமராசன் M. A. என்று விளம்பரப்படுத்திக் கொண்டார். கண்ணதாசன் பக்கங்கள் என்று அந்தக் கவிஞர் பல தலைப்புகளில் விதம் விதமாக எழுதியதுபோலவே இந்தக் கவிஞரும் எழுதினார்.

'சோதனை' முதல் இதழ் ஏப்ரல் 1973- ல் வெளிவந்தது. 'ஆலோசகர் : கி. ராஜநாராயணன்' என்றும் அதில் அச்சிடப்பட்டிருந்தது. தலையங்கம் 'உரைகல்' என்ற பெயரைப் பெற்றிருந்தது.

'படைப்புகளை நான் பார்வையிட்டு இதழுக்கு வடிவம் தந்தேன். நான் வெறும் தொகுப்பாசிரியனாக மட்டும் இருந்து விடாமல் விமர்சகனாக இந்த இதழை உருவாக்கினேன். எனவேதான் இங்கே தலையங்கமே 'உரைகல்' என்கிற பெயரைப் பெறுகிறது என்று நா.கா. விளக்கமும் கொடுத்தார்.

‘எங்கள் பெயர் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் எழுதுவதில்லை. தமிழின் பெயர் உலக இலக்கியத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எழுதுகிறோம். என்ற வரிகள் ஒவ்வொரு இதழ் தலையங்கத்தின் ஆரம்பத்திலும் அச்சிடப்பட்டன ( சோதனை-இரண்டு இதழ்கள்தான் வந்தது ).

புதுமைப்பித்தன் கனவு கண்ட இலக்கிய இதழ் உங்கள் கைகளில் இப்போது தவழ்கிறது. இன்றுதான் எனது நீண்ட நாள் கனவு நிறை வேறியிருக்கிறது. நான் ஒரு நல்ல ரசிகன் என்கிற அடிப்படையில் நானே பத்திரிகாசிரியனாக மாறி தமிழ் இலக்கியத்தைப் புனருத்தாரணம் செய்ய வேண்டுமெனப் பலமுறை எண்ணியிருக்கிறேன் என்று தொடங்கி சுய புராணம் தீட்டியிருந்தார் அவர்.

இரண்டாவது இதழ் மே மாதம் வந்தது. மூன்றாவது இதழ் வரவேயில்லை.

வெளிவந்த இரண்டு இதழ்களும் தரமான தயாரிப்புகளாக விளங்கின. காமராசன் நிறையவே எழுதியிருந்தார். நல்ல கதைகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கிய சம்பந்தமான கேள்வி-பதில் பகுதி எல்லாம் இருந்தன.

நாடகத்துக்கும் 'சோதனை' முக்கிய கவனிப்பு அளிக்க முன் வந்தது. அழகான அட்டையுடன், ‘சோதனை' நல்ல தோற்றமும் அச்சு அமைப்பும் கொண்டிருந்தது. 'ஆனந்த விகடன்' அளவில் 80 பக்கங்கள். விலை ஒரு ரூபாய். சென்னையிலிருந்து பிரசுரமாயிற்று.

தஞ்சாவூர் பிரகாஷ் நல்ல இலக்கிய ரசிகர். எழுத்தாளரும்கூட உலக இலக்கியங்களையும், இந்திய மொழிகளின் தரமான படைப்புகளையும் ரசித்து மகிழ்ந்தவர். தமிழிலும் நல்ல நல்ல நூல்களைப் பிரசுரிக்க வேண்டும் தரமான இலக்கியப் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஆசை உடையவர். அவ்வப்போது முயற்சிகளிலும் ஈடுபடுவார்.

அவர் 1977-ல் 'பாலம்' என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். 'ஸ்கூல் அட்லாஸ்' அளவில் பெரிய வடிவம் கொண்ட பத்திரிகை. படங்கள் வேறு. அட்டை தனி 56 பக்கங்கள். விலை ரூ. 2. இரண்டு இதழ்கள் தான் பிரசுரிக்க முடிந்தது அவரால்.

‘பாலம் உங்கள் ஏடு. ஆயிரக்கணக்கில் அது விற்க வேண்டாம். பல நூறுகள்கூட வேண்டாம். சில நூறுகளே போதும். தமிழகத்தின் எந்த சின்ன இலக்கிய இதழின் பலமுமே இருநூறுதான் என்பது அதன் வரலாறு. ஆறு கோடி மக்களின் இலக்கிய பலம் இருநூறு பேர்தானா? ஆம். இன்று நேற்றல்ல, முப்பதாண்டுகளாகக- இருநூறு நிலையான சந்தாக்கள்தான். எல்லா இலக்கியப் பத்திரிகைகளையும் வாங்குகிற அதே நூறு பேர் தங்கள் அடுத்த தலைமுறையிலும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தமிழில் புதிதாய்ச் செய்யப்போனவர்களின் பலம்! இது பெருக வேண்டும். ஆயிரமாவது சேரவேண்டும்' என்று பிரகாஷ் விருப்பம் தெரிவித்தார்.

'பாலத்தின் முதல் நோக்கமும் முப்பத்திரண்டாவது நோக்கமும் இலக்கியம் ஒன்றே புதுசோ பழசோ எதுவாயினும் அதன் நோக்கம் இலக்கியமே. உங்களுக்காக உங்களுடன் கலந்து பாலம் நிறைய செய்ய விருக்கிறது. தேடவிருக்கிறது. கண்டுபிடிக்கவிருக்கிறது. அந்தப் பணியில் பக்குவம் பெற உங்களையும் அழைக்கிறது. அதைச் செய்யும் இதைச் செய்யும் என்று சொல்லில் சொல்ல ஒன்றுமில்லை. நமக்கு இறந்த காலம் தெரியும். லட்சியங்களின் கண்கூசும் ஒளியும் நமக்குப் பழக்கமே. நிகழ்காலத்தின் அலுப்பும் வறட்சியும் எதிர்காலத்தின் ஒட்டாத் தன்மையும் எட்டாத் தன்மைகளும் நாம் அறிந்தே இப்பாலத்தில் வந்து நிற்கிறோம். செயலுக்கு உதவும் கரங்கள் போதும். ஆரவாரமில்லாமல் தொடரும் 'பாலம் என்று பிரகாஷ் அறிவித்தார்.

இரண்டுக்கு மேல் தொடவோ தொடரவோ முடியவில்லை அவரால். ‘பாலம்' வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. மதுரையிலிருந்து வெளிவந்தது பாலம்.

'திருச்சி வாசகர் அரங்கு' என்ற அமைப்பைச் சேர்ந்த இலக்கிய ரசிகர்கள் மாதம்தோறும் திறனாய்வுக் கருத்தரங்கு நடத்தி இலக்கியப் பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.

தமிழில் அப்போது வந்த சிறு பத்திரிகைகளின் சாரமற்ற தன்மையையும் பக்க வீணடிப்புகளையும் காணச் சகிக்காமல், தரமான ஏடு ஒன்றை வெளியிட ஆசைப்பட்டார்கள். 'இன்று' தோன்றியது. 1972-ல். பத்துப் பேர் சேர்ந்து செலவைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அப்படியும் மூன்று இதழ்கள்தான் கொண்டுவர முடிந்தது அவர்களால்.

வித்தியாசமான கதைகள், புதுமையான கவிதைகள் பற்றிய விமர்சனக் கட்டுரை ஆகியவற்றை 'இன்று' கொண்டிருந்தது.

1977 ல் திருச்சியில் ‘விஸ்வரூபம்' தோன்றியது.

சில கனவுகள் கலைந்துதான் விஸ்வரூபம் பிறந்திருக்கிறது. முழக்கிச் சொல்ல பிரகடனங்கள் ஏதும் இல்லை.

விஸ்வரூபத்திற்கு ஒரு பிரியமுண்டு. 'வாசகத் தரம் உயர தன்னாலி யன்றவற்றைச் செய்வதுதான் அது' என்று கூறியது.

இலக்கிய விஷயங்களோடு நவீன அரங்குக் கலையிலும் அது ஆர்வம் காட்டியது.

'கோகயம்' என்று ஒரு பத்திரிகை (தாமரை என்று அர்த்தம்). ஆசிரியர் : திருமால் இந்திரசிங், முதல் இதழ் 1975 ஆகஸ்டில் வந்தது. திருவனந்தபுரத்தில் பிரசுரம் பெற்றது.

அ. திருமால் இந்திரசிங், அ. ராஜமார்த்தாண்டன், அ. ராஜேந்திரன், ஆ. தசரதன் ஆகியோரின் கூட்டு முயற்சி (இவர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் ).

'கோகயம்'- எதுக்கு? என்று கேட்டு விளக்கமும் தந்தார்கள்:

'சில விஷயங்களை எழுதுவதற்கு, பிற பத்திரிகைகளின் துணையை நாடுவதைவிட எங்களுக்கென ஒரு பத்திரிகை இருந்தால் இன்னும் துணிவாக எழுதலாமே என்ற எண்ணத்தின் விளைவே இது இந்த அகடமிக் ஸைடிலிருந்து உருப்படியாக எதுவுமே இதுவரை வரவில்லை என்றொரு எண்ணம் படைப்பாளிகளிடம் இருக்கிறது. அதை மாற்ற முடியும் என்ற எண்ணத்தின் விளைவே இது'

துணிவான இலக்கிய பூர்வமான விமர்சனக் கட்டுரைகளையும், புதிய இலக்கிய முயற்சிகளையும் கோகயம் வரவேற்றது.

மௌனி-ஒரு திறனாய்வு : பிரசாரமும் கவிதையும்; கவிதையில் சப்தம்; சிறுகதைப் பொருள் என்ற தலைப்புகள் உள்ள கட்டுரைகளை அது வெளியிட்டிருக்கிறது. மற்றும் கதைகள், கவிதைகள், புத்தக விமர்சனக் கட்டுரைகள் உண்டு.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாக, 4 இதழ்கள் வந்தன.

‘பிரபஞ்சம்'- 'இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் குறித்த கலைஞானம் யாவும் கவனத்தில் கொண்டு, சேலத்திலிருந்து வெளியாயிற்று. ஆசிரியர் : சண்பகராமன். ஆசிரியர் குழு-மு. கி. இளங்கோ, பிரதாபன், வை. கதிர்வேலு.

கவிதையில் சோதனை முயற்சிகளில் கவனம் செலுத்தியது. அப்துல் ரகுமான், தமிழ்நாடன் படைப்புகளை அதிகம் வெளியிட்டது. 2 இதழ்கள் தான் பிரசுரமாயிற்று, 1979- ல்.


‘சாதனா'-கவிஞர் கங்கைகொண்டான் சென்னையிலிருந்து பிரசுரித்தார். கி. ராஜநாராயணன் தொகுத்த கரிசல் அகராதியையை அது வெளியிட்டது. நாடகம், சினிமா, ஓவியம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியது. சினிமா பற்றிய சிறப்பிதழாக 4-வது இதழைக் கொண்டு வர ஆசைப்பட்டது. அது கனவாகவே நின்றுவிட்டது.

'வெளிச்சம்' என்றொரு நல்ல முயற்சி, புதுமையான விஷயங்களைக் கொண்டது.

“இலக்கியமும் கலைகளும் இங்கே இருண்டு போயுள்ளன என்று குறையும் கோபமும் கொண்டுள்ள இளைஞர் சிலரின் கூட்டு முயற்சி தான் இந்த வெளிச்சம்.

நமது பண்பாட்டில் கவிந்திருக்கும் இருட்டை, இந்த ஒரு சின்னஞ் சிறிய அகல் விளக்கின் ஒளியினால் ஒழித்துவிட முடியும் என்று நாங்கள் மனப்பால் குடிக்கவில்லை. மாறாக, எல்லோரையும் போல இருட்டில் எங்களால் முணுமுணுத்துக் கொண்டிருக்க முடியாது என்பதாலேயே இந்த வெளிச்சத்தை வெளியிட்டிருக்கிறோம்.

தன்னலத்தைத் தவிர வேறெதைப் பற்றியும் சிந்திக்க இயலாத ‘சிந்தனையாளர்' களின் கையில் நமது இலக்கியம், இசை, நாடகங்கள், திரைப்படம், ஓவியம் ஆகிய எல்லாக் கலைகளும் ஒப்புவிக்கப்பட்டுள்ளன என்பது எங்கள் குற்றச்சாட்டு.

உண்மையின் ஆன்மாவிலிருந்து பிறந்து, எந்தவித முகமூடியும் அணியாமல் உலா வரும் எழுத்துக்களால்தான் நமது இலக்கியத்தைக் காப்பாற்ற முடியும் என்பது எங்களது நம்பிக்கை.

எங்களது எழுத்துக்கள் எங்களிடமிருந்து பிதுக்கி எடுக்கப்பட்டவை அல்ல; ஒரு மலர் மலர்வது போல, ஒரு செடி வளர்வது போல இயல்பாக எழுந்தவை. எங்களின் எழுத்து எங்களைச் சுற்றி உள்ள மக்களின் குரல், நாங்கள் வாழும் காலத்தின் எதிரொலி,

எங்களது நம்பிக்கை எல்லாம், ஒரு சின்ன மெழுகுவத்தியின் வெளிச்சத்தை அணைக்கக் கூடிய அளவுக்கு இருள் இந்த உலகில் இல்லை என்பதுதான்.” ( வெளிச்சம் )

எழுத்தாளர் ஞானம்பாடி ( கவிஞர் இந்திரன்) த. கோவேந்தன் துணையுடன் சென்னையில் இந்த இதழைத் தொடங்கினார்.

'ஜெயகாந்தனுடன் ஒரு மணி நேரம்' என்ற சுவாரஸ்யமான கட்டுரை, கிராமியப் பாடல் பாணிக் கவிதை, இசைப் பாட்டு, ஹெர்மன் ஹெஸ் நாவலான சித்தார்த்தா அறிமுகம், மற்றும் புதுநானூறு’ எனும் அருமையான புதிய படைப்பு (நான்கு பாடல்கள் ) கோவேந்தன் எழுதியது. உதாரணத்துக்கு ஒன்று :

‘அருகன் வரின் என்? புத்தன் தோன்றில் என்? வள்ளுவன் மொழிந்தென்? மகம்மது முழக்கிலென்?
மார்க்க கிளர்ந்தென்? இலெனின் வினை ஆற்றி என்?
காந்தி எழுந்தென்? சுவைட்சர் அருளிஎன்?
திருத்தத் திருந்தாத் திருட்டுக் கயவர்கள்
உளவரை உருப்படாதுலகே.

'வெளிச்சம்' ஒரே ஒரு இதழ்தான் (ஜூன் 1979) வெளிவந்தது.

இப்படி சிதைந்த கனவுகள் எத்தனையோ !