தமிழில் சிறு பத்திரிகைகள்/தீபம்⁠

விக்கிமூலம் இலிருந்து

55. தீபம்


‘பரிசுத்தமான எண்ணங்களுடனும் தணியாத சத்திய வேட்கையுடனும் எல்லா இடங்களிலும் அறிவின் பிரகாசமும் உண்மையின் ஒளியும் துலங்க வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்துடனும் இன்று இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நான் ஓர் இலக்கியத் தீபத்தை பக்தி சிரத்தையோடு ஏற்றி வைக்கிறேன். இதன் பிரகாசத்தில் பகைமை, போட்டி, பொறாமை, இலக்கிய மாரீசம், நாட்டைக் கெடுக்கும் நச்சு இலக்கியப் புல்லுருவிகள் ஆகிய விதவிதமான இருள்களெல்லாம் அகன்று விலகி ஓடுமாக! தீபம் நல்லவர்களாகிய எல்லார்க்கும் ஒளியாகவும் தீயவர்களாகிய எல்லார்க்கும் சுடு நெருப்பாகவும் இருக்கும்; அப்படித்தான் இருக்கவேண்டும்.

இதன் குணம் பிரகாசம் என்பது மட்டும்தான் இங்கு நமக்குத் தேவையான உண்மை. எனவே அதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.’

இவ்வாறு அறிவித்து நா. பார்த்தசாரதி 1965 ஏப்ரல் மாதம் ‘தீபம்‘ மாத இதழைத் துவக்கினார்.

‘இது இலட்சக்கணக்கில் பணம் முடக்கும் ஓர் காகித வியாபாரி நடத்த முன்வரும் இச்சை பச்சை நிறைந்த கவர்ச்சிப் பத்திரிகை அல்ல. தன்மானமும், நேர்மையும் இருகரங்களென நம்பும் ஓர் அசல் எழுத்தாளரின் ஆத்ம சோதனைதான் இந்தப் பத்திரிகை என்றும் முதல் இதழின் தலையங்கம் தெரிவித்தது.

‘தீபம்’ ஆசிரியர் மேலும் தெளிவாகக் கூறியிருக்கிறார் : மனோதர்மமும் தன்னம்பிக்கையுமே எனது பலமான மூலதனங்கள். ஒரு காகித வியாபாரி பத்திரிகை தொடங்கும் போது அவர் விற்கும் காகிதத்தைப் போலவே மற்றொரு வர்ணக் காகிதமாகிய பணமும் அதிகாரமுமே அதற்கு மூலதனமாகலாம். ஆனால் ஓர் எழுத்தாளன் பத்திரிகை தொடங்கும்போதோ பணத்தைவிட மனோதர்மமே பெரிய மூலதனமாக அமைய முடியும். அப்படித்தான் நானும் அமைத்துக் கொண்டிருக்கிறேன் இப்போது.‘

ஆசிரியரின் மனோதர்மம், தன்னம்பிக்கை ஆகிய பலமான மூலதனங்களின் அஸ்திவாரத்தில் தீபம் தரமான இலக்கிய ஏடு ஆக வளர்ந்து வந்திருக்கிறது. அதன் இருபதாம் ஆண்டு நிறைவு விழா 1985-ல் சென்னையில் நல்ல முறையில் கொண்டாடப்பட்டது.

ஆரம்பம் முதலே நல்ல இலக்கியத்தின் வளர்ச்சியிலும் வளத்திலும் தீபம் அக்கறை கொண்டு, இலக்கியவாதிகளையும் இலக்கியப் படைப்புகளையும் பிரகாசப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

‘இலக்கியச் சந்திப்புகள் மூலம் பெயர் பெற்ற எழுத்தாளர்களின் எண்ணங்களை இலக்கிய ரசிகர்கள் அறிந்து கொள்வதற்கு வகை செய்தது தீபம். கி. வா. ஜகந்நாதன், லா. ச. ராமாமிர்தம், நாரண துரைக்கண்ணன், ந. சிதம்பரசுப்ரமண்யன், மணிக்கொடி சீனிவாசன், டி. எஸ். சொக்கலிங்கம், வெ. சாமிநாத சர்மா, தி. ஜ. ரங்கநாதன், பி. எஸ். ராமையா, நா. வானமாமலை, தூரன், தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், க. நா. சுப்ரமண்யம், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், அ. சீனிவாசராகவன், ரகுநாதன், கி. சந்திரசேகரன், மௌனி, திருலோக சீதாராம் ஆகியோரின் பேட்டிகள் இப்பகுதியில் வெளிவந்துள்ளன.

தமிழ் எழுத்தாளர்கள் தவிர, எனைய இந்திய மொழி எழுத்தாளர்களின் சந்திப்புகளையும் தீபம் பிரசுரித்திருக்கிறது. இதன் மூலம் இதர மாநில இலக்கியப் படைப்பாளிகள் பற்றியும், பிறமொழி இலக்கியங்கள் குறித்தும் தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது.

பேட்டிகள் மூலம் படைப்பாளிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு வசதி செய்த தீபம், நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் பல எழுத்தாளர்கள் தங்கள் அபிப்பிராயங்களையும் அனுபவங்களையும் வெளியிடுவதற்கு அரங்கம் அமைத்துக் கொடுத்தது. சுந்தர ராமசாமி, நகுலன், கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், ஹெப்சியா ஜேசுதாசன் முதலியவர்களின் சுவாரஸ்யமான கட்டுரைகள் இப்பகுதியில் பிரசுரம் பெற்றிருக்கின்றன.

இவை போக, பிற மாநில இலக்கிய கர்த்தாக்களின் வாழ்க்கை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய கட்டுரைகளையும் தீபம் பிரசுரித்துள்ளது. சரத்சந்திரர் வாழ்க்கை, பங்கிம் சந்திரர், கேசவ தேவ் ஆகியோரின் அறிமுகம், எம். டி. வாசுதேவன் நாயர் எழுதிய இராஜலட்சுமி என்ற கதாசிரியை முதலியவை குறிப்பிடத்தகுந்தவை.

மலையாள எழுத்தாளர்கள் பற்றி விரிவாகவும் புதிய முறையிலும் எழுதப்பட்ட கட்டுரைகள் முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது விசேஷமானது. இனிய முறையில் குறிஞ்சி வேலன் தமிழாக்கித் தந்த இக்கட்டுரைகள் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்து மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன.

இளைய தலைமுறையினருக்கு—முக்கியமாக இலக்கிய ஆய்வாளர்களுக்கு— அதிகம் பயன்படக்கூடிய கட்டுரைத் தொடர்களை ‘தீபம்’ விடாது வெளியிட்டு வருகிறது. பி. எஸ். ராமையாவின் ‘மணிக்கொடி காலம்‘, வல்லிக்கண்ணன் எழுதிய ‘சரஸ்வதி காலம்‘, ‘புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’, ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை‘, தமிழில் சிறு பத்திரிகைகள் ஆகியவை முக்கியமானவை. சி. சு. செல்லப்பாவின் எழுத்து அனுபவங்கள் தனியாகக் குறிப்பிடத்தகுந்தது.

ஒரு நல்ல இலக்கியப் பத்திரிகை செய்ய வேண்டிய அவசியப் பணிகளை ‘தீபம்‘ ஆரம்பம் முதலே செய்து வருகிறது. இலக்கியத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றிய ஆய்வுகளை உற்சாகத்துடன் அது பிரசுரிக்கிறது. அகிலன் எழுதிய ‘கதைக் கலை‘, கு. அழகிரிசாமியின் ‘கதாநாயகர்கள்—ஓர் இலக்கியச் சிந்தனை‘, எழில் முதல்வன் எழுதிய ‘விடுதலைக்குப் பின் தமிழ் நாவல்கள் , கு. ராஜவேலு ஒப்பியல் ரீதியில் எழுதிய சிலப்பதிகாரக் கட்டுரைகள் போன்றவை தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன.

சுதந்திரத்துக்குப் பின் இலக்கிய வளர்ச்சி என்று ஒவ்வொரு மொழி வாரியாகவும் கட்டுரைகள் வந்திருப்பது பிற மொழி இலக்கிய வளர்ச்சி குறித்து அறிந்து கொள்வதற்கு வகை செய்த முயற்சி ஆகும்.

‘திரைக்கு ஒரு திரை’ என்ற தலைப்பில் ஜெயகாந்தன் திரை உலக உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் தொடர் ஒன்றை எழுதியிருக்கிறார்.

’நினைவில் நிற்கும் முன்னுரைகள்’ என்று குறிப்பிடத்தகுந்த நூல் முன்னுரைகளைத் தொடர்ந்து பிரசுரித்ததும், ‘காலத்தை வென்ற சிறுகதைகள்’ என்று அருமையான கதைகளைத் தேடிக் கண்டு வெளியிட்டதும் நல்ல இலக்கிய விருந்து ஆகும் .

அவ்வப்போது, இலக்கியப் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களைப் புதிது புதிதாக வெளியிடுவதில் தீபம் உற்சாகம் காட்டத் தவறவில்லை .

கா. நா. சு. எழுதி வந்த ‘மறைவாக நமக்குள்ளே’ மற்றும் வம்பு மேடை, மனம் வெளுக்க, இலக்கிய மேடை (கேள்வி-பதில்) போன்றவை இரசிக்கத்தக்கவை.

‘ஊஞ்சல்— ஒரு புதிய இலக்கியப் பாலம் என்ற பகுதி ரசம் நிறைந்தது. சில முக்கிய எழுத்தாளர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் இதில் வெளியிடப்பட்டன.

எழுத்தாளர்களும் வாசகர்களும் கலந்து கொண்டு கருத்துப் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாகச் சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன. பட்டிமன்றம் அப்படிப்பட்ட ஒரு பகுதி ஆகும்.

தமிழ்ச் சிறுகதை, தமிழ் நாடகம், தமிழ்க் கவிதை, நாட்டின் மொழிப் பிரச்னை, தமிழ் நாவல் முதலிய பொருள்கள் பற்றி காரசாரமான விவாதங்கள் பட்டிமன்றத்தில் நிகழ்த்தப்பட்டன.

இலக்கிய வட்டக் கருத்தரங்கு என்று, வெவ்வேறு ஊர்களில் நடைபெற்ற கருத்தரங்குகள் பற்றிய விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன.

’ஆறங்கம்’ என்ற தலைப்பில் பல்வேறு பொருள்கள் குறித்தும் ஆறு பேர்களிடம் யோசனைகள் சேகரம் செய்து பிரசுரித்திருக்கிறார்கள்.

“என் வாழ்வில் எதிர்பாராத சம்பவம்” என்று அநேகர் தங்களுக்குப் பிடித்த முறையில் சுவையாக எழுதினார்கள்.

சர்வதேச இலக்கியம் பற்றி, ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் படைப்பாளிகள் குறித்து அசோகமித்திரன் எழுதி வந்த தொடர் பயனுள்ளதாகும்.

’பொதுப்பணியில் இவர்கள்’ என்று தொழில் அதிபர்கள் பற்றியும் பிரமுகர்கள் குறித்தும் பேட்டிகளும் கட்டுரைகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

நா. பா. ஆழ்ந்த கருத்துக்களும், அழுத்தமான அபிப்பிராயங்களும் தெரிவித்துத் தலையங்கங்கள் எழுதினார். ‘எனது குறிப்பேடு’ என்ற தலைப்பில் பல்வேறு விஷயங்கள், நிகழ்ச்சிகள் குறித்து கவாரஸ்யமான அபிப்பிராயங்கள் எழுதி வந்தார். ’இரத்தினச் கருக்கம்’ என்ற தலைப்பில், பொன்முடி என்னும் பெயரில்,சிந்தனைப் பொறிகளைத் தொகுத்துத் தந்தார்.

‘இரத்தினச் சுருக்கம்’ ரசமான, புதுமையான ஒரு பகுதியாக விளங்கியது. உதாரணத்துக்கு ரத்தினங்கள் இங்கே எடுத்து எழுதப்படுகின்றன—

‘நீங்கள் பிரமுகராக வேண்டுமானால் முதலில் மற்றவர்களைக் சாதாரணமானவர்களாக்கிவிட்டு முன்னால் வந்து நில்லுங்கள். மற்றவர்களைப் பிரமுகர்களாக்க வேண்டுமானால் நீங்கள் பின்னால் சாதாரண மாணவர்களாக ஒதுங்கி நின்றுகொண்டு மற்றவர்களுக்குத் தாராளமாக வழி விட்டுவிடுங்கள். பிரமுகராவதன் இரகசியம் முன்னால் ஓடுவதிலும், பின்னால் ஒதுங்கத் தயங்குவதிலும்தான் இருக்கிறது.’

‘சொல் அமைவது உரைநடை சொல் இசைவது கவிதை. பூ இணைவது சரம். பூக்களைத் தொடுப்பது மாலை.’

‘குழந்தைப் பருவத்தில் மெல்லிய ஊசி ஊசியாக விழும் பன்னீர் மாலைச் சாரலில் விரும்பி நனைவதுபோல் சிலரோடு உரையாடுவது தான் எத்தனை சுகமாயிருக்கிறது !’

இந்த விதமான, சுவையான, நயமான, எண்ண ஓட்டங்கள் நிறைந்தது இந்தப் பகுதி.

நா. பா. நாவல்கள் பல தீபம் இதழ்களில் தொடர்ந்து வந்தன. மணிவண்ணன், பொன்முடி என்ற பெயர்களில் நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் அதிகமாகவே அவர் எழுதினார். நெஞ்சக்கனல், கண், கபாடபுரம், செய்திகள், ஆத்மாவின் ராகங்கள் மற்றும் சில அவர் எழுதிய நாவல்களாகும்

நாவல் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தீபம் ஆற்றியுள்ள பங்கு கணிசமானது. ஆதவனின் காகிதமலர்கள், அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், இந்திரா பார்த்தசாரதியின் தந்திர பூமி, தி. ச. ராஜுவின் காளியின் கருணை, ஆதிவாசிகளின் தலைவனான (பீகார் பழங்குடியினரின் பகவான்) பிர்ஸா பகவான் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு மலர்மன்னன் எழுதிய மலையிலிருந்து வந்தவன், ஆர். சூடாமணியின் தீயினில் தூசு ஆகியவை தீபம் தொடர்கதைகளாக வந்தவைதான்.

இளைய எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், தேவகோட்டை வா. மூர்த்தி நாவல்களையும் அது வெளியிட்டிருக்கிறது.

ஆரம்ப முதலே தரமான, அருமையான குறுநாவல்களை தீபம் பிரசுரித்திருக்கிறது. இவை எண்ணிக்கையிலும் அதிகம். பிரபல எழுத்தாளர்கள், புதிய எழுத்தாளர்கள் என்ற பேதமின்றி நல்ல படைப்புக்களை வெளியிட்டு குறுநாவலின் வளர்ச்சிக்கு அது நல்ல சேவை செய்திருக்கிறது.

சிறுகதையின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் தீபம் ஆற்றியுள்ள பங்கு பெரிதாகும். சிறந்த கதைகள் எண்ணற்றவை இந்த இருபது ஆண்டுகளில் தீபம் இதழ்களில் வெளிவந்துள்ளன. திறமையுள்ள படைப்பாளிகள் பலரும் இதில் எழுதியிருக்கிறார்கள். புதிதாகத் தோன்றி வளர்ச்சி பெற்ற இளைய படைப்பாளிகளுக்கும் தீபம் பேராதரவு அளித்துள்ளது. கே. ராமசாமி, வண்ணதாசன், நாஞ்சில்நாடன் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

கு. அழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் தொகுத்தளித்த நாடோடிக் கதைகள் சிறப்பானவை. தமிழ்நாட்டு நாடோடிக் கதைகளை மட்டுமல்லாது அரேபிய, பர்மிய, சீன மற்றும் பல நாடுகளின் கதைகளையும் சேகரித்து அழகிரிசாமி தமிழில் தந்திருக்கிறார்.

குறிஞ்சிவேலன் மலையாள மொழி நாவல்களைத் தமிழாக்கி உதவியுள்ளார். மலையாற்றூர் இராமகிருஷ்ணனின் ’ஐந்து சென்ட் நிலம்’ குறிப்பிடத்தகுந்த நாவல்.

விமர்சனத்துக்கும் தீபம் தன்னால் இயன்ற அளவு பணிபுரிந்து வருகிறது. ஆரம்ப வருடங்களில், மாணவர்கள் புத்தக விமர்சனங்கள் எழுதுவதற்காக் ’இரசனை அரங்கம்’ அமைத்துக் கொடுத்தது. வாசகர்கள் எழுதி அனுப்பிய புத்தக விமர்சனங்களை வெளியிட்டது. புத்தக மதிப்புரைப் பகுதி தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. குறித்த ஒரு புத்தகம் பற்றி யாரேனும் ஒரு எழுத்தாளர் மதிப்புரைக்கும் விரிவான கட்டுரையும் மாதம்தோறும் வருகிறது.

இப்படியாக ’தீபம்’ அயராது இலக்கியப் பணி புரிந்து கொண்டிருக்கிறது.

‘ஓர் இலக்கியப் பத்திரிகைக்குள்ள சிரமங்களும் பெருமிதங்களும் தீபத்திற்கும் உண்டு. சிரமங்கள் இல்லாத பெருமிதங்கள் உலகில் கிடையாது. சிரமப்படுவதால்தான் பெருமிதம் அடைய முடிகிறது. சிரமங்களைக் கடக்க முயல்வதுதான் பெருமிதமாகவும் இருக்கிறது’ என்று தீபம் ஆசிரியர் ஒரு இதழில் குறிப்பிட்டிருப்பது நினைவில் நிற்கும் உண்மை ஆகும்.