உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சிறு பத்திரிகைகள்/யாத்ரா

விக்கிமூலம் இலிருந்து

30. யாத்ரா


சிறு பத்திரிகைகளிடையே மிகத் தனித்தன்மை பெற்ற பத்திரிகை ‘யாத்ரா.‘

யாத்ரா முதல் இதழ் 1978 ஆகஸ்டு மாதம் வெளிவந்தது. 'கலை சார்ந்த கருத்துக்களுக்கேயான களன்' என்று அறிவித்துக் கொண்ட இம் மாதப் பத்திரிகையின் நோக்கம் இதுவெனப் பிரசுரிக்கப்பட்டது.

'பலதரப்பட்ட பார்வைகள், கருத்துக்கள், அபிப்பிராயங்கள், நேர் எதிர் எதிர் கோணங்களிலிருந்து வருபவைகூட வரவேண்டும்-அவற்றை சகஜமாக எதிர்கொள்ளும் ஒரு ஆரோக்கிய கருத்துலகச் சூழல் உருவாக வேண்டும். பாதகமான கருத்துக்களைக் கண்டு உட்சுருங்குவதோ அவை வெளிவராதவாறு கோபப்படுவதோ சாதகமாகக் கருத்துக்களை எதிர் நோக்கி கையேற்றுவதோதான் இன்றைய நிலை. இது மாறவேண்டும்.’

ராமநாதபுரம் மாவட்டம், திருச்சுழி அஞ்சல், பண்ணை மூன்றடைப்பு என்ற இடத்திலிருந்து பிரசுரம் பெறுவதாக அறிவித்த 'யாத்ரா' வின் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினர் யார் என்று வெளிப்படையாகச் சொன்னதில்லை.

‘யாத்ரா ஒரு குழுவினரது முயற்சி, குழுவில் தனித்தனியாகவும், கூட்டாகவும் பலர் பல பொறுப்புகளை ஏற்பார்கள். இது கூட்டுப் பொறுப்பு. தனியாகவும், கூட்டாகவும் யார் செய்யும் எதற்கும், குழு முழுதுமே பொறுப்பு. எந்தக் குழுவினதும், ஸ்தாபனத்தினதும், இயக்க செயல்பாட்டு முறை இதுவே. எனவே, பாதகமாகவோ, சாதகமாகவோ யாரும் எதிர்கொள்ள வேண்டியது. இக் குழுவின் எந்தச் செயலையும், குழுவின் கூட்டுச் செயலாகத்தான் எவ்விதமாகவும் எதிர்கொள்ளும் உரிமை. பாதகமாகவோ, சாதகமாகவோ, ஆதாரத்தோடு, ஆத்மார்த்தமாக, எதிர்கொள்ளும் உரிமை சமூகத்தில் உள்ள எல்லோருக்கும் உண்டு. அதைவிடுத்து இதைச் செய்தது இவனாக்கும், அதைச் செய்தது அவனாக்கும் என்றே வம்பு செய்து கொண்டு, தனிப்பட்ட ஒரு நபர் எவரிடமும் உள்ள தன் பகைமைக் காய்ச்சலை, பொறாமையை-துவேஷத்தை வெளிப்படுத்தும் முகாந்திரமாக, அதைச் சாக்கிட்டு, குழுவினரின் செயல்பாட்டை அதன் நிதர்சனத்தில் எதிர்கொள்ளாமல், தான் வெறுக்கும் தனி நபரின் மீதுள்ள காய்ச்சலை மட்டுமே- குழுவின் செயல்பாட்டின் மீது சேற்றை வாரி இறைவதுதான் உண்மையில் Politicking தனி நபர் தாக்குதல். தனி நபர் அரசியல்'

‘இரண்டாவது ஆண்டின் தொடக்கத்தில்'-13-ம் இதழில்- யாத்ரா இவ்வாறு கூறியது.

‘யாத்ரா' ஒரு குழுவினரின் முயற்சி என்று கூறப்பட்டு வந்த போதிலும், அதில் வெங்கட்சாமிநாதன் குரலே தொனித்துக் கொண்டிருந்தது. அவரது கருத்துக்களை, சிந்தனைகளை விருப்பு வெறுப்புக்களையே அது எடுத்துக் காட்டியது என்பதை அந்தப் பத்திரிகையின் வாசகர்கள் நன்கு உணர முடிந்தது.

வெங்கட்சாமிநாதன் எழுத்தாற்றல் உடைய சிந்தனையாளர். தனக்கெனத் தனிப்பார்வைகளும் கருத்துக்களும் கொண்டவர். அவற்றை ‘எழுத்து' காலம் முதல் அவர் அழுத்தமாகப் பதிவு செய்து வந்திருக்கிறார்.

'எழுத்து' மூலம் அறிமுகமான சிந்தனையாளர்- எழுத்தாளர்களில் வெங்கட்சாமிநாதனும் தருமு சிவராமும் முக்கியமானவர்கள். இவ்விருவரும் பரஸ்பரம் வியந்துகொண்டும் பாராட்டியும், தமிழ் எழுத்தாளர்கள்-தமிழ் கலாசாரம்-தமிழர் போக்கு முதலியவற்றைக் காரசாரமாகக் குறை கூறியும் விமர்சித்தும் எழுதிக் கொண்டிருந்தார்கள். இருவருமே நீளம் நீளமான கட்டுரைகள் எழுதும் இயல்பினர்

காலவேகத்தில், இவ் இருவரும் தனித்தனி 'கட்சி' ஆயினர். வெங்கட்சாமிநாதனுக்குப் பல அபிமானிகளும் ஆதரவாளர்களும் உண்டு; தருமு சிவராமுவுக்கும் பல அபிமானிகளும் ஆதரவாளர்களும் உளர்.

இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அளவுக்கு அதிகமாகப் பாராட்டிக் கொண்டிருந்ததை மறந்துவிட்டு, பரஸ்பரம் தீவிரமாகவும் அதிகமாகவும் குறைகூறவும், பரிகசிக்கவும், பழித்துரைக்கவும் நீள நெடும் கட்டுரைகள் எழுதலாயினர். இவை எல்லாம் சிறு பத்திரிகைகள் பலவற்றின் பக்கங்களை ரொப்பின.

சிறு பத்திரிகைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை இவ்விருவரும் பல வருட காலம் பாதித்து வந்திருக்கிறார்கள். இதை நான் சந்தர்ப்பம் நேரிட்டபோதெல்லாம் கூறி வருகிறேன். இக்கட்டுரைத் தொடரிலும் உரிய இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.

வெங்கட்சாமிநாதனின் அபிமானிகள் சிலர்-அவருடைய எழுத்துக்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிடுவதற்காகவே தனியாக ஒரு பதிப்பகம் அமைத்தவர்கள்-அவருடைய கருத்துக்களையும் சிந்தனைகளையும் மேலும் எடுத்துச் சொல்வதற்காக 'கருத்துக்களுக்கேயான களன்’ ஆன 'யாத்ரா' வை நடத்த முன்வந்தார்கள். ஆகவே, அதில் வெங்கட் சாமிநாதன் சிந்தனைகளும், அவருடைய கருத்துக்களை ஆதரிப்போர் (மற்றும் பிரதிபலிப்பவர்) எண்ணங்களுமே பெரும்பாலும் இடம் பெற்றதில் வியப்பில்லை.

வெங்கட்சாமிநாதனின் சிந்தனை ஓட்டத்தையும் பார்வை வீச்சையும் அவருடைய 'பாலையும் வாழையும்', 'ஒரு எதிர்ப்புக் குரல்' போன்ற நூல்களில் பரக்கக் காணலாம்.

சுருக்கமாகச் சொல்வதானால்

அவர் எதிர்மறை அணுகுமுறையாளர். தமிழ் மண் பாலைத் தன்மை உடையது. பசுமையான, வளமான விஷயங்கள் இங்கு வேரூன்ற முடியாது. இந்நாட்டினருக்கே சுயசிந்தனை கிடையாது. கலை, இலக்கியம் எதிலுமே உன்னதங்களை அறிய முடியாதவர்கள், தொட இயலாதவர்கள் இங்கே இருப்பவர்கள். உயர்ந்த விஷயங்களை உருவாக்கக் கூடிய ஆற்றல் 'உள்வட்டம்' ஆன ஒரு சிலருக்குத்தான் உண்டு. அவர்களின் தாக்கத்தால் விழிப்பு பெறும் வெளிவட்டம் சிறிது பரவலாகச் செயல்படக் கூடும்...

இந்த ரீதியில் வளர்வது அவருடைய சிந்தனை.

இது 'யாத்ரா’ வின் பக்கங்களிலும் ஒளிவீசக் காணலாம். ஒரு உதாரணம்—

‘உண்மையில் எங்களுக்கு மன வேதனையைத் தரும், சலிப்புத் தட்ட வைக்கும், இந்த பிராப்தங்களை என்னடா செய்வது என்று வெறுப்புடன், ஒரு புழுவைப் பார்ப்பதுபோல, சாக்கடையில் கால் வைத்து விட்டது போல, எங்களை அருவருப்பு கொள்ளச் செய்வது, இன்றைய தமிழ்ச் சூழலில், கருத்துலகில், இலக்கிய உலகில் காணும் கோழைத்தனம், பாமரத்தனம், அறிவு சூன்யம்.

யாரும் எத்தகைய கருத்துப் பரிவர்த்தனையும் கொள்ளத் தயாராயில்லை. தைரியமில்லை. அதற்கு வேண்டிய ஸ்டாக் அவர்களிடம் அறவே இல்லை. அறைக்குள் உட்கார்ந்துகொண்டு, தங்கள் சகாக்களின் ஆதரவு அணைப்பில் முனணுமுணுத்துக் கொள்கிறார்கள். கருத்துக்களை எதிர்கொள்ள, அறையை விட்டு வெளியே வந்து கருத்துக்களைச் சொல்ல இவர்களுக்கு அறிவார்ந்த தைரியம் இல்லை. தங்கள் பொச்செரிப்பை முணுமுணுத்துக் கொள்கிறார்கள்.

எங்களுக்குத் தெரியும், யாத்ரா பத்திரிகையில் நாங்கள் முன் வைக்கும் எண்ணற்ற கருத்துக்கள் இச்சூழலின் அஸ்திவாரத்தையே அதிர வைக்கும் சச்சரவு குணம் கொண்டவை. பெரிய கருத்துப் போர், புயல் வீசியிருக்க வேண்டும். ஆனால் நிகழ்வது எருமை மாட்டின் மீது பெய்த மழைக் கதைதான். வாய் திறப்பவர்களோ, தங்கள் கட்சிக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை எதிர்கொள்ளாமலேயே, தம் பார்வையினால் அக்கருத்துக்களைச் சாடி வீழ்த்த முடியாமலேயே, கிளிப்பிள்ளை மாதிரி தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதையே செய்கிறார்கள். இதை என்னென்பது அறிவுலகில் தடுக்கி வீழ்ந்துவிட்ட மரத்தனம் எனலாமா ?' (இதழ்-13)

'யாத்ரா' என்னென்ன செய்யவேண்டும் என்று கருதுகிறது என்பதை விளக்கி 6-ம் இதழில், ஆசை நிறைந்த திட்டம் ஒன்றை வெளியிட்டது. பாராட்டப்பட வேண்டிய அத்திட்டத்தைக் கூடியவரை செயல்படுத்தவும் முயன்றது.

இலக்கியப் பத்திரிகை செய்யவேண்டிய—ஆனால் செய்யத் தவறுகிற—முக்கிய காரியம் ஒன்றை 'யாத்ரா' சிறிது காலம் செய்தது. வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டிய சில புத்தகங்கள் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளது. பாலாவின் 'சர்ரியலிஸம்', எஸ். வி. ராஜதுரையின் 'அந்நியமாதல்', க. நா.சு. தொகுத்த 'தமிழ்ச் சிறுகதைகள்' பற்றி விசேஷக் கட்டுரைகளை அது பிரசுரித்தது.

பல புத்தகங்களைப் பற்றியும் அபிப்பிராயங்கள் தெரிவிப்பதற்காக 'பார்வைகள்' என்ற பகுதியை ஆரம்பித்து. பல பக்கங்களை ஒதுக்கியது. ‘அபிப்பிராயங்களை அபிப்பிராயங்களாகவே சந்திக்க வேண்டும். சுதந்திரமான, மயக்கங்களுக்கும் பீதிக்கும் இரையாகாத, ஆரோக்கியமான கருத்துப் பரிவர்த்தனை—யார் சொன்னது என்ற அரிப்புக்கு ஆளாகாத, என்ன சொல்லப்பட்டுள்ளது என்றே அறியமுயலும், பின் அக்கருத்துக்களைச் சந்திக்க முயலும் பழக்கம்— இவை வேண்டும்' என்று, பார்வைகள் பகுதி தொடங்கிய போது (15-ம் இதழில் ) யாத்ரா அறிவித்தது. இந்தப் பகுதி நாலைந்து இதழ்களுக்குப் பிறகு தொடரவில்லை.

தமிழ்நாடு சரிவரத் தெரிந்து கொள்ளாத படைப்பாளிகள், ஆய்வாளர்களையும், அவர்களது சாதனைகளையும் 'யாத்ரா' வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப் பெரிதும் பாடுபட்டது. பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை பற்றிய சிறப்புக் கட்டுரை, ப. வ. இராமசாமி ராஜு என்ற நாடகாசிரியர் பற்றியும், அவரது பிரதாயசந்திர விலாசம் நாடகம் பற்றியும் அறிமுகக் கட்டுரைகள், 'ஆண்டி' என்ற புனைபெயரில் நாடகங்களும், நாடகக் கலை பற்றிய ஆய்வுரைகளும் எழுதிய வி. ராமசுப்பிரமணியம் பற்றிய சிறப்பிதழ் (31-32-33) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

'புதுமைப்பித்தன் கதைகளில் காலத்தின் கலைவண்ணம்' (கந்தர ராமசாமி), மௌனி— மௌன உலகின் வெளிப்பாடு (வெங்கட்சாமிநாதன்) ஆகிய கட்டுரைகளும் முக்கியமானவை.

ந. முத்துசாமி, செ. ரவீந்திரன், ஜெயராமன், ஆர். ரவீந்திரன் முதலியோர் 'யாத்ரா' வில் அதிகம் எழுதினார்கள்.

தெருக்கூத்து, கணியான் ஆட்டம், தோற்பாவைக்கூத்து, மெலட்டுர் பாகவத மேளாநாட்டிய நாடகம் பற்றிப் பயனுள்ள, ஆதாரபூர்வமான கட்டுரைகள் பிரசுரமாகியிருக்கின்றன. 'கணியான் ஆட்டம்' பற்றி எழுதிய அ. கா. பெருமாள் 'நாட்டுப்புற வழிபாடுகள் நம்பிக்கைகள்' சம்பந்தமான ஆய்வாக இயக்கி அம்மன் பற்றி விரிவான கட்டுரை எழுதினார். ஒரு இதழ் (மார்ச்-ஏப்ரல் 1980 ) தெருக்கூத்து சிறப்பிதழ் ஆக வெளிவந்தது.

இவ்வாறு புராதனக் கலைகள், வாழ்க்கை முறைகள் பற்றிய ஆய்வுகளில் அக்கறை காட்டிய 'யாத்ரா', நவீன நாடகத்திலும் கருத்து செலுத்தியது. ந. முத்துசாமியின் நாடகங்கள் பற்றிய அபிப்பிராயங்களையும், முத்துசாமியின் புதிய நாடகங்களையும் பிரகரித்தது.

தி. ஜானகிராமன் நினைவு இதழாக, பல நல்ல கட்டுரைகளைத் தொகுத்து அளித்தது.

இதர சிறு பத்திரிகைகளின் முக்கியமான—ரசிகர்கள் கவனித்துப் படிப்பதற்கு ஏற்ற—கட்டுரைகள், ஆய்வுகள் வெளிவந்தால், அவற்றை எடுத்துச் சொல்வதற்காக 'யாத்ராவின் சிபாரிசு' என்றொரு பகுதியை அது வளர்த்தது.

30-ம் இதழில் 'பதிவுகள்' என்ற பகுதியை அது அறிமுகப்படுத்தியது. 'இதில் பலரும் பங்குகொள்ள' வேண்டும் என்பது எங்கள் விருப்பம். சக யாத்ரீகர்கள் அனைவரும் பங்கு கொண்டு தங்கள் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள இந்தப் பகுதி பயன்படும். எந்த ஒரு கலைப் படைப்பினையும், நிகழ்வினையும் எதிர்கொள்ளும்போது நாம் பெறும் அனுபவங்கள் மனத்தளவில் தங்கிவிடாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்போதுதான் அது ஒரு சம்பாஷணையாக பரிமாணம் கொள்கிறது. இத்தகைய சம்பாஷணைகள் நடந்தால்தான் புதிய கண்ணில் படாத பிராந்தியங்கள், பரிமாணங்கள், ஆழங்கள், உக்கிரங்கள் எல்லாம் வெளிப்பட முடியும். பாலச்சந்தரின் வீணைக் கச்சேரியை எதிர்கொள்ள நேர்ந்த முத்துசாமியின் அனுபவங்கள் வெளிப்படும்போது சங்கீதத்தின் மூலம் ஏற்படும் கலைஞனின் தேடலும், அதன் மூலம் மனித மனம் கொள்ளும் விரிவும் புரிந்து கொள்ளப்படும்.’ { யாத்ரா—30 ).

ஆயினும் 'பதிவுகள்' யாத்ராவில் அடிக்கடி இடம் பெறவில்லை. அப்படி வெளியிடுவதற்கு சக யாத்ரீகர்கள் முன்வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இது குறித்து, யாத்ரா மற்றொரு சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டிய கருத்து கவனத்துக்கு உரியது. சிறு பத்திரிகைகளும் வாசகர்களும் நினைவில் நிறுத்த வேண்டிய முக்கியமான கருத்தும்கூட.

'தற்போதைய தமிழ்ச் சூழலில் ஒரு கலாசார விழிப்புணர்வுக்குச் சிறுபத்திரிகை இயக்கம் எந்த அளவு தேவை என்பதைக் கருத்தில் கொண்டே நாங்கள் பலவித சிரமங்களுக்கு இடையிலும் யாத்ராவை நடத்துவதில் ஒரு விடாப்பிடியான தீவிரத்தைக் கொண்டிருக்கிறோம். இதில் எங்களுடைய தீவிரம் மட்டும் போதாது. இவ்வியக்கத்தில் பங்கு கொள்ளும் உங்களிடமிருந்தும் ஒரு பொறுப்புணர்வை யாத்ரா வேண்டுகிறது. இப்பொறுப்புணர்வின் ஒரு அம்சம் யாத்ராவிற்கு சந்தா அனுப்புவதும் ஆகும். ஒரு சிறு பத்திரிகையை நடத்தும் சிரமத்தை ஒரு சிலர் மட்டுமே தாங்கக் கூடுமா என்பதை நீங்களே நினைத்துப் பார்க்க வேண்டும். இன்றைய சூழலில் சிறு பத்திரிகை ஒன்றோடு சம்பந்தம் கொள்வது என்பது வெறுமனே அதனை வாசிப்பதோடு மட்டும் நின்று விடக்கூடாது. அப்பத்திரிகை தொடர்ந்து வெளிவரத் தங்களால் ஆன உதவிகளையும் செய்யக்கூடிய பொறுப்புணர்வு நமக்கு வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.

இந்தச் சமயத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். யாத்ரா மாதிரியான சிறு பத்திரிகைகள் அக்கறை கொள்ளும் இலக்கியம், ஓவியம், தியேட்டர் போன்ற துறைகளோடு சம்பந்தப்பட்டவர்கள் இச் சிறு பத்திரிகைகளிடம் காட்டும் அலட்சியம். சிறு பத்திரிகை இயக்கம் வெறுமனே எழுத்து, இலக்கியம் என்றில்லாமல் தன்னுடைய இயக்கக்களனை மற்ற கலாச்சாரங்களுக்கும் விரித்து ஒரு சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் சமயத்தில், இத்துறை சம்பந்தப்பட்டவர்கள் சிறு பத்திரிகைகளிடம் காட்டும் அலட்சியம் எங்களுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அதே சமயத்தில் இக்கலாச்சாரத் துறைகளின் பாதிப்பினால் விழிப்புணர்வு பெற்ற பலர் சிறு பத்திரிகை இயக்கத்தின் அவசியத்தை உணர்ந்து இதனோடு தங்களை இணைத்துக்கொள்ள முன் வருவது எங்கள் அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மை. எங்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கும் விஷயமும் கூட

மிகுந்த ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டிய சூழல் இது ஒரு கலாச்சாரத் துறையில் ஏற்படும் வளர்ச்சி என்பது ஒரு பொறியாக மாறி மற்ற கலாச்சாரத் துறைகளையும் பாதிக்கவேண்டும். அதற்கான சூழல் உருவாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நான் ஒரு ஓவியன், நான் ஒரு தியேட்டர்காரன், எனக்குச் சிறு பத்திரிகை பற்றி அக்கறை தேவையில்லை என்று யாராவது நினைப்பார்களேயானால் அவர்களின் கலாச்சார அக்கறை பற்றி நாம் சந்தேகம் கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் இன்றைய சிறு பத்திரிகை இயக்கம் தன்னுடைய இயக்கக் களனை விரித்து மற்ற கலாச்சார துறைகளோடும் சம்பந்தம் கொண்ட ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் அனைவரும் பங்கு கொண்டு பேணிப் பாதுகாக்க வேண்டிய ஒரு இயக்கம் சிறு பத்திரிகை இயக்கம் என்பதை நாம் உணர வேண்டும். சக யாத்ரீகர்கள் அனைவருக்கும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் இது. (யாத்ரா—27).

சிறு பத்திரிகை மூலம் சாதனைகள் புரிந்து காட்ட வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள் நடத்துகிற ஏடுகள் மிகுந்த சிரமங்களோடுதான் உலாவ வேண்டியிருக்கிறது. இவை குறிப்பிட்ட கால எல்லையில் தேதி தவறாது வெளிவர முடிவதில்லை. சிறிது காலம் ஒழுங்காக இதழ்கள் வெளிவந்தாலும் போகப் போக, காலம் தவறுவது இவற்றின் இயல்பாகி விடுகிறது.

சில சிற்றேடுகள் நெடுங்காலம் பிரசுரமாகாமல் இருப்பதும், அவை நின்றுவிட்டன போலும் என நினைத்துக் கொண்டிருக்கிற போது திடீரென ஒரு இதழ் வருவதும், புதிய திட்டங்களை அறிவிப்பதும் சிறு பத்திரிகை உலக நியதியாகவே இருந்து வருகிறது.

‘யாத்ரா' பத்திரிகையும் இந்த நியதியைத் தவறவிடவில்லை. காலம் தவறி வந்து கொண்டிருந்த யாத்ரா 1983-ல் பல மாதங்கள் பிரசுரம் பெறாமலே டிசம்பரில் திடீரென்று 44-45-46 என்ற எண்களைத் தாங்கி ஒரு இதழ் வந்துள்ளது.

ஓவியர் ஆதிமூலம் தீட்டிய சித்திரம் ஒன்றை அட்டைப் படமாகக் கொண்ட இந்த இதழ் தமிழ் அறிஞர் திரு. வி. க. பற்றிய சிறப்பிதழாக விளங்குகிறது.

'மற்றுமோர் காந்தி' என்ற தலையங்கம். 'திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புகள்' நூலிலிருந்து பல தகவல்கள், 'பின்னோக்கிய மறுபார்வையில் திரு. வி. க.' என்று செ. ரவீந்திரன் எழுதிய கட்டுரை ஆகியவை திரு. வி. க. வை நன்கு புரிந்து கொள்வதற்கு உதவக் கூடியன.

மற்றும்—

'பரதநாட்டியம்—இன்றைய சில பிரச்னைகள் குறித்த ஒரு பேட்டி’ (1973ல் வெங்கட்சாமிநாதன் கேட்ட கேள்விகளும், அம்பை தந்த பதில்களும் ) 13 பக்கங்கள்.

‘கூத்துப் பட்டறையின் ஒரு சமீபத்திய நாடகம்' என்ற தலைப்பில் ‘நிஜங்கள் என்னும் நாடகத்தைப் பற்றி கே. எஸ். ராஜேந்திரன் எழுதிய கட்டுரையும், அதே நாடகம் குறித்து ஞான இராசசேகரன் அபிப்பிராயமும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன.

அடுத்து வரும் இதழ்களில்...

பின்னோக்கிய மறு பார்வையில்— மயிலை சீனி. வேங்கடசாமி, நா. ரகுநாதன் (ரஸிகன்); க. கைலாசபதி... சிறப்பிதழ்கள், பரதநாட்டியம், ரிச்சர்ட் ஷெக்னர்; கிராம மக்களிடையே, புது சினிமா—ஒரு ஆராய்வு’ என்றும் யாத்ரா அறிவித்திருக்கிறது.

இந்த இதழிலும் 'சக யாத்ரிகர்களுக்கு' பொறுப்பை உணர்த்தும் விதத்தில் சில கருத்துக்களை யாத்ரா அறிவுறுத்துகிறது. அதில் ஒரு முக்கிய பகுதி இது :

'இந்தப் பத்திரிகையினை நடத்திக் கொண்டிருக்கும் எங்களுக்கு எவ்வளவு பொறுப்பு தேவையோ அதே அளவு இந்தப் பத்திரிகையினைப் படிப்பவர்களுக்கும் இப்பத்திரிகையைப் பற்றிய பொறுப்பும் அக்கறையும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் ஏதும் தவறில்லையே. ஆனால் இன்றைய தமிழ்ச் சூழலில் அது தவறுதான் போலும், நாலரைக் கோடித் தமிழர்கள் இருக்கிறார்களாம் இங்கு. அதில் 200 பேர்தான் யாத்ராவை வாங்கிப் படிக்கிறார்கள். இந்த 200 பேர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறவர்களாக இருந்தாலே போதும் இவர்கள் தங்களைச் சுற்றிலும் பாதிப்புகளை உண்டாக்குவார்கள். இப்பாதிப்பு அலை அலையாகப் பரவும் என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறோம். எந்தவொரு கலாச்சார முயற்சியும் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை- ஆதரவை நம்பி ஆரம்பிக்கப்படுவதில்லை. மாற்றத்தை விரும்பும் பிரக்ஞையுள்ள நபர்கள் சிலரின் முயற்சியாலும், அதே மாதிரியான கொள்கைப் போக்குள்ளவர்களின் பங்கு பெறுதலாலும்தான் கலாச்சார முயற்சிகள் வளர்ச்சி பெறமுடியும். இலக்கியப் பத்திரிகை ஒன்றினை நடத்திக் கொண்டிருப்பதும் கலாச்சார முயற்சிதான் என்று நாங்கள் நம்புகிறோம். இம் முயற்சியில் ‘சக யாத்திரிகர்கள்' என்று நாங்கள் அழைக்கும் உங்கள் பொறுப்பை நீங்கள் உணரவேண்டும்.’

'யாத்ரா’ வின் முகவரி : யாத்ரா, பண்ணை மூன்றடைப்பு, திருச்சுழி போஸ்ட், ராமநாதபுரம் மாவட்டம்.