தமிழில் சிறு பத்திரிகைகள்/வித்தியாசமான வெளியீடுகள்
40. வித்தியாசமான வெளியீடுகள்
சிறு பத்திரிகைகளுள்ளும் வித்தியாசமானவையாக அவ்வப்போது சில பத்திரிகைகள் தோன்றி, தமக்கெனத் தனி நோக்கும் பாதையும் கொண்டு செயல்படுவதும் நடந்து வருகிறது.
பேராசிரியர் நா. வானமாமலை நடத்திய ‘ஆராய்ச்சி‘ அப்படிப்பட்ட ஒரு வெளியீடு ஆகும்.
மார்க்ஸிய தத்துவ அடிப்படையில், சமுதாயப் பார்வையோடும் வரலாற்றுப் பின்னணியோடும் பல பிரச்னைகளையும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர் நா. வானமாமலை, நாட்டுப் பாடல்களை ஆராய்ந்து தொகுத்தவர். சமூக, பொருளாதார, தத்துவ, கலை, இலக்கியம் சம்பந்தமான விஷயங்களை ஆராய்ந்து எழுதுவதாக அவர் நடத்திய ‘ஆராய்ச்சி‘ எனும் காலாண்டு ஏடு தனித் தன்மையோடு, பயனுள்ள விஷயங்களைத் தாங்கி வந்தது.
பேராசிரியர் நா. வானமாமலை, மார்க்ஸிய நோக்குடன் சிந்தித்து ஆராயக்கூடிய திறமை பெற்ற விமர்சகர்கள் குழு ஒன்றை உருவாக்கினார். அவர்கள் எழுதிய கட்டுரைகளும் ‘ஆராய்ச்சி‘யில் வெளிவந்தன.
இலக்கியப் படைப்பாளிகள் சிலரது நாவல்கள், சிறுகதைகள் பற்றிய விமர்சனங்களையும் ‘ஆராய்ச்சி‘ வெளியிட்டது.
அது இலக்கியவாதிகளையும், ரசிகர்களையும் எட்டியதைவிட, சர்வதேச ரீதியில் பல்கலைக்கழகங்களையும் ஆராய்ச்சி மாணவர்களையும் அதிகம் தொட்டது என்று சொல்லலாம்.
‘ஆராய்ச்சி‘ யை நினைவுபடுத்தும் விதத்தில்— ஆனால் முற்றிலும் தனியானதொரு போக்கில்- ‘1/4‘ என்ற காலாண்டு ஏடு 1980-ல் வெளி வந்தது. ஆசிரியர்—மலர்மன்னன்.
‘தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கான இதழ்’ என்று கூறிக்கொண்டு, 15 ரூபாய் விலையில், பெரிய அளவில், 96 பக்கங்களோடு இக் காலாண்டு ஏடு வெளிவந்தது. முதல் இதழ் 1980 ஜூலை-செப்டம்பர் எனத் தேதியிடப் பெற்றிருந்தது. இத்தொகுப்பில் அதன் நோக்கம் குறித்து மலர்மன்னன் விரிவாக எழுதியிருந்தார்.‘சிறுகதை, கவிதை, நாவல், பகுதி, நாடகம் ஆகியவற்றுக்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. காலப்போக்கில் இங்குள்ள இன்றைய சித்திரக்காரர்களின் சித்திரங்கள், வண்ண ஓவியங்களை வெளியிடுவதும் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை உள்ளது‘ என்றும்,
‘நமது இலக்கியம் மற்றும் கலைகளில் சிரத்தையுள்ள யாவரும் கூடிச் செய்யும் கூட்டு முயற்சியாகவே இதனைக் கொள்ள வேண்டும். எல்லா சித்தாந்தக்காரர்களுக்குமான பொது மேடையே இது‘ என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
திருவிழாவும் கூத்தும்—ந. முத்துசாமி, தொழில் ரீதி நாடகங்களும் புதிய போக்குகளும்—கோமல் சுவாமிநாதன், சி. சுப்பிரமணிய பாரதியார் கவிதைகள் : ஓர் உள்முகத்தேடல்—ஞானக்கூத்தன், ஹிட்லரும் ரிச்சர்ட் வாக்னரும்—வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி எழுதிக்கொண்டிருந்த ஜே. ஜே—சில குறிப்புகள் நாவலின் ஒரு பகுதி, குறுக்கீடு—சா. கந்தசாமி கதை, சாவி—லஷ்மி கண்ணன் கதை, மற்றும் கவிதைகள் (காரை சிபி, ஆனந்த், வைத்யா, ஜே. ஆர். ரமணன், அ. யோகராசா— எழுதியவை—10 பக்கங்கள் இவை முதல் இதழின் உள்ளடக்கம்
இரண்டாவது இதழில் வெளிவந்தவை: தமிழ்நாட்டுக் கிராமங்களின் முப்பதாண்டு பொருளாதார வளர்ச்சி (1950-80) உண்மை நிலவரம்—எஸ். ஆர். சத்யா, தெ. பொ. மீனாட்சி சுந்தரன் பற்றி செ. ரவீந்திரன், பாதல் சர்க்கார் நாடகப் பட்டறை சிந்தனைகள்—பிரபஞ்சன், உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனம் ஓர் அறிமுகம்— ச. வே. சுப்பிரமணியன், ஹிட்லரும் ரிச்சர்ட் வாக்னரும்—வெங்கட் சாமிநாதன், மூங்கில் குருத்து—திலீப்குமார் கதை, கழுகு—லா. ச. ராமாமிருதம் கதை, சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் நாவலின் மேலும் சில பக்கங்கள், நகுலன் எழுதிய ‘குகன்‘ கவிதை (100 பக்கங்கள்).
காலாண்டு வெளியீடு பரந்த எல்லைகளில் கவனம் செலுத்த விரும்பியது. இதை மூன்றாவது இதழும் எடுத்துக் காட்டியது.
காரை சிபி எழுதிய ‘புதுவைத் தமிழர் வாழ்க்கையில் பிரெஞ்சு கலாச்சாரத் தாக்கம்‘ என்ற கட்டுரை 15 பக்கங்கள். ந. முத்துசாமியின், ‘அன்று பூட்டிய வண்டி‘ நாடகம் தெருக்கூத்து பற்றிய கட்டுரை, கிராமப் பொருளாதாரம் சம்பந்தமான எஸ். ஆர். என். சத்யா கட்டுரை இரண்டாம் பகுதி மற்றும் சாந்தன், அம்பை, நாஞ்சில்நாடன், சுரேஷ், குமார இந்திரஜித் கதைகள், கலாப்ரியா, நீலமணி, நிமல. விஸ்வநாதன், திரிசடை கவிதைகள்.தற்கால ஓவியரின் ஓவியம் ஒன்று ஒவ்வொரு முறையும் அட்டைச் சித்திரமாக அச்சிடப்பட்டு, அந்த ஓவியரைப் பற்றிய அறிமுகக் குறிப்பும் வெளியிடப்பட்டது.
மலர் மன்னன் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு சிரமத்தோடுதான் ஒவ்வொரு இதழையும் உருவாக்கினார். காலாண்டு ஏடு தரம் உள்ளதாகவே அமைந்திருந்தது. பல்கலைக்கழகங்கள், சர்வதேச அமைப்புகள், கல்லூரிகள் முதலியவற்றோடு நெருங்கிய தொடர்புகொண்டு வளர விரும்பியது இச்சிறு பத்திரிகை.
பாராட்டுக்களும், உற்சாகமூட்டும் ஆதரவும் மலர் மன்னனுக்கு ஓரளவுக்குக் கிடைத்தன. குறை கூறலும், விலை வெகு அதிகம் என்ற விமர்சனமும் அதே அளவுக்கு இருந்தன. பொருளாதார சிரமங்கள் இருக்கவே செய்தன.
ஆகவே, காலாண்டு ஏடு குறிப்பிட்ட காலக் கணக்கின்படி வெளிவரவில்லை. நான்காவது இதழை, பக்கங்கள் குறைத்து (48 பக்கங்கள்), விலையையும் 5 ரூபாய் எனக் குறைத்து வெளியிட வேண்டிய கட்டாயம் மலர்மன்னனுக்கு ஏற்பட்டது.
‘பணத்திற்காக அலைகிற பலவீனம் ஏற்பட்டு, இதழைத் தரமாகக் கொண்டு வருவதில் காட்டும் கவனம் சிதறிப் போகும் என்பதனாலேயே விளம்பரம் சேகரிப்பதில் ஆர்வமற்றிருந்தேன்’ என்று குறிப்பிட்ட அவர் விளம்பரங்கள் வெளியிட்டுப் பணபலம் தேடவேண்டிய அவசியமும் உண்டாயிற்று.
ஆயினும், வளர வேண்டிய இந்தக் காலாண்டு வெளியீடு வாழ முடியாமலே போய்விட்டது.
‘குமரி மலர்‘ என்பது தனித்தன்மையுடன் வெகுகாலம் வந்து கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அது ஒவ்வொரு மலரிலும் புதிய புதிய கட்டுரைகளையே பிரசுரித்து வந்தது.
இரண்டாவது உலக மகாயுத்தக் காலத்தின்போது, பத்திரிகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலுக்கு வந்தது. புதிதாகப் பத்திரிகைகள் துவங்குவதற்கு அனுமதி வழங்க அரசு மறுத்தது. ஆனால், புத்தகங்கள் வெளியிடலாம் என்ற நிலை இருந்தது.
ஏ. கே. செட்டியார் மாதம் ஒரு புத்தகம் என்று சொல்லி ‘குமரி மலர்‘ என்ற தொகுப்பு வெளியீட்டை ஆரம்பித்தார். கட்டுரைகள், கதை, கவிதைகளின் தொகுப்பு.குமரி மலர் காட்டிய வழியில் பலப்பல ‘மலர்‘களும், ‘மாதம் ஒரு புத்தகம்‘ களும் தோன்றின. மறைந்தன. குமரி மலர் தனது போக்கில் அமைதியாகச் சென்றது.
வெகுகாலம் வரை, டி. கே. சி, வ. ரா. சாமிநாத சர்மா போன்ற அறிஞர்கள் எழுதித் தந்த கட்டுரைகளைப் பிரசுரித்தது. பிறகு தன் போக்கை ‘குமரி மலர்‘ மாற்றிக்கொண்டது. காந்திஜியின் மணிமொழிகள், ராஜாஜி விட்டுச் சென்ற பழைய கட்டுரைகள், கடிதங்கள், திரு. வி. க. எழுத்துக்கள் முதலியவற்றைப் பிரசுரிக்கலாயிற்று. ஆனந்தரங்கம் பிள்ளை டயரிக் குறிப்புகள், பார்வைக்கு அகப்படாதிருந்த பழங்காலக் கட்டுரைகள், கடிதங்கள், அபூர்வப் பொருள்களாகிவிட்ட மிகப் பழைய சஞ்சிகைகளில் பிரசுரமான விஷயங்கள்—இப்படி, வாசகர்களுக்கு எளிதில் கிடைக்க முடியாத அபூர்வங்களைத் தேடி எடுத்து அச்சிட்டுத் தந்தது.
சந்தாதார்களுக்கு மட்டுமே என வந்து கொண்டிருந்த ‘குமரி மலர்’ இவ்வகையில் ஒரு நல்ல பணி செய்துள்ளது பலருக்கும் தெரியாது. ஏ. கே. செட்டியார் மரணம் அடைகிறவரை அது தனது வழியில் நிதானமாகச் சேவை புரிந்து வந்தது.
அதேபோல அமைதியாக, பாராட்டப்பட வேண்டிய விதத்தில் தமிழ்ப் பணி புரிந்துவந்த இன்னொரு பத்திரிகை ‘உலக இதய ஒலி‘ ஆகும்.
காந்தியத்தில் மிகுந்த பற்றுதலும் நம்பிக்கையும் கொண்ட சர்வோதயவாதியான டி. டி. திருமலை நடத்திய மாதப் பத்திரிகை இது. ரசிகமணி டி. கே. சி. அவர்களிடம் மிக்க ஈடுபாடு கொண்டவர் அவர். இப்பண்புகளை அவருடைய பத்திரிகை வெளிப்படுத்தியது.
காந்திய தத்துவங்களை, சமூக ஒழுக்கம், தனிமனிதப் பண்பாட்டு உயர்வு முதலியவற்றை வலியுறுத்தும் கட்டுரைகளை டி. டி. திருமலை இனிய எளிய நடையில் ரசமாக எழுதி வந்தார். அவற்றுடன் டி. கே. சி. யின் எழுத்துக்களையும், கடிதங்களையும் பிரசுரித்தார். அறிஞர்கள், சிந்தனையாளர்களிடமிருந்து கட்டுரைகள் வாங்கி வெளியிட்டார். இவற்றோடு இன்னுமொரு நல்ல காரியமும் செய்து வந்தார்.
தமிழில் எத்தனையோ நல்ல நூல்கள் பிரசுரமானது உண்டு. அவை முதல் பதிப்போடு மறைந்தே போயின. அவற்றின் சிறப்பை, பின்வந்த ரசிகர்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லாமலே போய் விட்டது.அதேபோல, தமிழ்நாட்டில் வெவ்வேறு காலகட்டத்தில் நல்ல பத்திரிகைகள் தோன்றி, பயனுள்ள அரிய விஷயங்களைப் பிரசுரித்து, பின் இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்துள்ளன. அவற்றில் பிரசுரமான தரம் நிறைந்த கட்டுரைகளும் நயம் கலந்த கதைகளும் பின்னர் தொகுப்புகளில் இடம்பெறும் வாய்ப்பைப் பெறவுமில்லை.
அத்தகைய விஷயங்களை—தற்கால வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுவதை—தேடி எடுத்து மறு பிரசுரம் செய்து தந்தது ‘உலக இதய ஒலி‘.
தரமான அந்தப் பத்திரிகையும் பரந்த வாசக உலகத்தைப் பெற்றதில்லை—பெற முடிந்ததில்லை.
ஃஃஃஃ
புத்தகங்களை அறிமுகம் செய்வதற்கென்றும், மதிப்புரை விமர்சனம் மற்றும் புத்தகங்கள், ஆசிரியர்கள் பற்றிய விஷயங்களை அறிவிப்பதற்காகவும் தனிப் பத்திரிகைகள் தமிழிலும் வெளிவந்தது உண்டு.
புத்தக வெளியீட்டாளர்கள் தங்களுடைய பிரசுரங்கள் பற்றிய தகவல் அறிவிப்புகளுக்காக சிறு பத்திரிகைகள் நடத்தியிருக்கிறார்கள். க. நா. சுப்ரமண்யம் 1940 களில், புத்தகங்கள் பற்றிய விஷயங்களை மட்டுமே வெளியிடும் ’ராமபாணம்’ என்றொரு பத்திரிகை பிரசுரித்தார்.
1960 களில் ’நூலகம்’ என்ற பத்திரிகையைக் கவிஞர் குயிலன் நடத்தினார். பிறகு வாசகர் வட்டம் அதன் பொறுப்பை ஏற்று, தரம் குறையாத மாத இதழாகச் சில காலம் நடத்தி வந்தது.
1983—ல் சிவகங்கை அன்னம் வெளியீட்டுக்காக கவிஞர் மீரா ’அன்னம் விடு தூது’ என்ற வெளியீட்டைத் தயாரித்து வெளியிட்டார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்த அச்சிற்றேடு புத்தகங்கள் பற்றிய பயனுள்ள தகவல்களை, மதிப்புரைகளை, விமர்சனக் கட்டுரைகளையும் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களையும் பிரசுரித்தது. ஆறு இதழ்கள் வந்ததற்குப் பிறகு, 1984—ல் ’அன்னம் விடு தூது’ பூரண மாத இதழாக மாற்றப்பட்டுவிட்டது. புத்தக உலகச் செய்திகளைவிட, இதர பல விஷயங்களிலும் கவனம் செலுத்துவதில் அது முனைப்புக் கொண்டு விட்டது. அதுவும் பத்து இதழ்களே பிரசுரம் பெற்றது.
புத்தகங்கள் பற்றிய சிந்தனைகள், விமர்சனக் கட்டுரைகள், கவிதைகள் மற்றும் பயனுள்ள விஷயங்களைப் பிரசுரிப்பதற்கென்றே 'நூல் நயம்' என்ற மாத வெளியீடு தோன்றியது.
இலக்கிய சர்ச்சைகள், புத்தக விமர்சனங்கள், நல்ல கவிதைகள், பேட்டிகள் ஆகியவற்றை வெளியிட்டு வந்த 'நூல் நயம்' நம்பிக்கை ஏற்படுத்தும் நல்ல பத்திரிகையாக விளங்கியது. 'அடுத்த இதழில்' சில முக்கிய விஷயங்களை எதிர்பார்க்கும்படி ஆவலைத் துண்டும் பட்டியல் தந்த மூன்றாவது இதழோடு இது ஒடுங்கிவிட்டது.