உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/015-066

விக்கிமூலம் இலிருந்து

சீவக சிந்தாமணிப் பதிப்பு

சேலம் இராமசாமி முதலியார் என்பவர் கும்பகோணத்திற்கு முன்சீப்பாக உத்தியோகம் பெற்றுவந்தார். அவர் தமிழிலும், வடமொழியிலும், இசையிலும் பழக்கம் உள்ளவர். திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக இருந்த சுப்பிரமணிய தேசிகர், அவரைப் போய்ப் பார்த்து வரும்படியாக ஆசிரியப் பெருமானுக்குச் சொல்லி அனுப்பினார். 21-10-1980இல் ஆசிரியர் அவரைப் போய்ப் பார்த்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டதையும், பின்பு தேசிகரிடம் பாடம் கேட்டதையும் இவர் எடுத்துச் சொன்னார். என்ன என்ன படித்திருக்கிறீர்கள்?' என்று கேட்டபோது தாம் படித்த அந்தாதிகள், பிள்ளைத் தமிழ்கள், கோவைகள் முதலியவற்றை வரிசையாக ஒப்புவித்தார். அதைக் கேட்ட இராமசாமி முதலியார், இவற்றை எல்லாம் படித்து என்ன பிரயோசனம்? என்று சொன்னார். அவ்வளவு அலட்சியமாக அவர் பேசியதைக் கண்டு ஆசிரியப் பிரான் ஆச்சரியமுற்றார், மேலும் தாம் படித்த நூல்களை எல்லாம் சொன்னார். கம்பராமாயணத்தைப் படித்ததையும் சொன்னார். இவை எல்லாம் பிற்காலத்து நூல்கள்தாமே? பழங்காலத்து நூல்களான சங்கப் பாடல்களைப் படித்திருக்கிறீர்களா? சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றைப் படித்தது உண்டா?’' என்று அவர் கேட்டார். "சுவடிகள் கிடைத்தால் நிச்சயமாகப் படித்துப்பார்ப்பேன்" என்று ஆசிரியப் பெருமான் தைரியமாகச் சொன்னார்.

சில நாட்கள் கழித்து, இராமசாமி முதலியாரிடம் ஆசிரியப் பெருமான் போனபோது, அவர் சீவக சிந்தாமணிக் கடிதப் பிரதி ஒன்றை எடுத்துக் கொடுத்தார். ஆசிரியர் முதலில் அதைப் படித்தபோது சிறிது தடுமாறினார். நச்சினார்க்கினியர் உரையுடன் அந்தப் பிரதி இருந்ததால் ஒருவாறு அதைப் படித்துப் பொருள் செய்துகொண்டார். அதன் பிறகு இராமசாமி முதலியாருக்குப் பாடம் சொல்லத் தொடங்கினார். தமக்கு விளங்காத விஷயங்களை விளங்கவில்லை என்றே சொல்லி வந்தார். இந்த நிலையைக் கண்டு முதலியார் மிகவும் உவகை அடைந்தார். சிந்தாமணி ஜைன நூல் ஆதலால் அதிலுள்ள ஜைன சம்பிரதாயங்களைத் தெரிந்து கொள்ளக் கும்பகோணத்தில் இருந்த ஜைனர்களிடம் இவர் சென்று அவர்களிடம் ஐயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஜைன சமய சம்பந்தமான எல்லாச் செய்திகளையும் நன்றாக தெரிந்துகொண்ட பிறகு மீண்டும் படித்துப் பார்க்கவே, பல செய்திகள் நன்றாக விளங்கின. அப்பால் அதைப் பதிப்பிக்க வேண்டுமென்று விரும்பினார். பல ஏட்டுப் பிரதிகளைப் பார்த்துத் திருத்தமான பாடம் இதுதான் என்று திருத்திக்கொண்டார்.

சிந்தாமணியைச் சென்னையில் பதிப்பித்தால் நன்றாக இருக்குமென்று இவர் சென்னை வந்து இரண்டு வாரங்களுக்குமேல் தங்கி இருந்தார். அக்காலத்தில் சென்னையில் பல பெரும் புலவர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம் சந்தித்து அவர்களுடைய பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். தேரழுந்துார், சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் எ ன் ப வ ரி ன் உதவியைப் பெற்றுச் சிந்தாமணிப் பதிப்பைத் தொடங்கினர், அவர் 'ப்ரூப்' பார்த்துத் தந்தார். ஆசிரியப் பெருமானும் மிகவும் சுறுசுறுப்பாக 'ப்ரூப்' பார்த்தார். முதல் முதலாக ஒரு பழைய நூலைப் பதிப்பிக்கும் பேறு கிடைத்தது கண்டு மிகவும் ஊக்கத்துடன் அந்தப் பதிப்பை நிறைவேற்றினார். அப்போது 500 பிரதிகளையே வெளியிட்டார்.

சீவக சிந்தாமணி வெளியான பிறகு தமிழ்நாட்டில் ஒரு புது மலர்ச்சி உண்டாயிற்று. ஆசிரியர் சிந்தாமணி உரையில் காட்டப்பெற்ற மேற்கோள்களுக்குரிய இடங்களையும் பல பழைய நூல்களிலிருந்து ஒப்புமைப் பகுதிகளையும் கொடுத்திருந்தார். அவற்றையெல்லாம் பார்த்து அந்த நூல் பதிப்பு,பழைய நூல்களுக்கெல்லாம் களஞ்சியம்போல இருப்பது கண்டு ஆராய்ச்சியாளர்களும் புலவர்களும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.