தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/024-066

விக்கிமூலம் இலிருந்து

பாராட்டுத் தாள்

1902-ஆம் ஆண்டு கோடை விடுமுறையின்போது பாரிஸில் இருந்த பேராசிரியர் ஜூலியன் வின்சனின் மாணாக்கர் ஒருவர் சென்னைக்கு வந்தார். ஜூலியன் வின்சனுக்கும் ஆசிரியருக்கும் நெடுநாள் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி ஆசிரியருக்குக் கடிதம் எழுதி வருவார்.

வின்சனின் மாணாக்கர் தமிழகம் வந்தபோது தஞ்சாவூரில் லைனல் பைபர்ட் என்பவர் சப் கலெக்டராக இருந்தார். அந்தப் பிரெஞ்சுக்காரர் அவருடைய விருந்தாளியாகத் தங்கி இருந்தார். அவர் கும்பகோணம் வந்து ஆசிரியரைச் சந்தித்தார். ஜூலியன் வின்சன், ஆசிரியரைப் பற்றி அடிக்கடி சொல்வது உண்டு என்றும், தமிழுக்கு இவர் செய்துள்ள தொண்டைப் பற்றிச் சில நூல்களில் எழுதியிருப்பதாகவும் சொன்னார்.

தாம் புதுச்சேரி, காரைக்கால் போன்ற சில இடங்களுக்குச் செல்ல இருப்பதாகவும், ஆசிரியர் ஏதாவது ஒரு நூலைக் கொடுத்தால் போகுமிடங்களில் அதைப் படித்துவிட்டு, திரும்ப அதை அனுப்பிவிடுவதாகவும் அவர் சொன்னார்.

ஆசிரியர் பழைய காஞ்சிப்புராணக் கடிதப் பிரதி ஒன்றை அவரிடம் வழங்கினர். ஏதோ புதையல் கிடைத்ததைப்போல அதைப் பெற்றுக்கொண்ட பிரெஞ்சுக்காரர் ஆசிரியரிடம் விடை பெற்றுச்சென்றார். தாம் சொன்னதுபோலவே இரண்டு வாரத்தில் அதை ரிஜிஸ்தர் தபாலில் திரும்ப அனுப்பி வைத்தார்.

அந்தப் பிரெஞ்சுக்காரர் தஞ்சையில் இருந்தபோது அங்கிருந்த சப்கலெக்டரிடம் ஆசிரியப் பெருமானின் உழைப்பையும், அவரது விரிந்த புலமையையும், அவர் பதிப்பித்த நூல்களால் தமிழுக்கு உண்டான ஏற்றத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஏட்டுச்சுவடியில் உள்ளதை ஆராய்ந்து,பதிப்பிப்பது என்பது மிகவும் அருமையான காரியம் என்பதையும் அவர் நன்றாக விளக்கியிருக்கிறார். அதன் பயனாக ஆசிரியப் பெருமானுக்கு ஒரு நன்மை கிடைத்தது. 1903-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி அன்று ஏழாவது எட்வர்டு மன்னர் பட்டாபிஷேகக் கொண்டாட்டம் நடந்தது. தஞ்சைமாநகரில் ஒரு மகாசபையைக் கூட்டி ஒரு விழா நடத்தினார்கள். அந்த விழாவுக்கு ஆசிரியரை வரவேண்டுமென்று அழைத்தார்கள். அவர்களது வேண்டுகோளின்படி ஆசிரியர் அங்குப் போய்வந்தார். அப்போது ஆசிரியப் பெருமானின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி சப்கலெக்டர் ஒரு பாராட்டுத் தாளை அளித்தார்.