தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/029-066

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மகாமகோபாத்தியாயப் பட்டம்

1906-ஆம் ஆண்டு முதல் தேதி பிறந்தது. அரசினர் இந்த நாட்டில் சிறப்பான பணி புரிபவர்களுக்குப் பல பட்டங்களை வழங்கி ஊக்கம் அளித்துவந்தனர். கங்காதர சாஸ்திரிகள் என்பவர் அன்று காலையில் ஆசிரியரைப் பார்க்க வந்தார். "எங்களுக்கெல்லாம் அளவில்லாத மகிழ்ச்சி. நாங்கள் எல்லோரும் ஆனந்தத்தால் குதிக்கிறோம்." என்றார். ஆசிரியப் பெருமானுக்கு ஒன்றும் விளங்கவில்லை. "உங்களுக்கு மகா.மகோபாத்தியாயப் பட்டம் கிடைத்திருக்கிறது. இந்தச் செய்தி இன்னமும் உங்களுக்குத் தெரியாதா?’ என்றார். ஆசிரியருக்கு அந்தச் செய்தி அப்போதுதான் தெரிந்தது. -

அதுமுதல் தமிழ்நாட்டிலுள்ள பலர் ஆசிரியரைப் பாராட்டினர். கடிதங்கள் மூலம் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த மணி ஐயர், 'மகாமகோபாத்தியாயப் பட்டம் தங்களுக்கு வழங்கப்பட்டதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு அது கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்' என்று ஒரு கடிதம் அனுப்பினார். அதுவரை வடமொழிப் புலவர்களுக்கே அளிக்கப் பெற்று வந்த அந்தப் பட்டம், ஆசிரியப் பெருமானுக்கு முதல் முறையாக வழங்கப்பெற்றதனால் அரசினருக்குப் பெரும் புகழ் உண்டாயிற்று.