தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/036-066

விக்கிமூலம் இலிருந்து

அச்சகம் வாங்க விரும்பாமை

ஆசிரியர் புத்தகங்களை அச்சிடுவதற்குப் பல அச்சகங்களை நம்பித் தொல்லைப்பட்டு வருவதை அறிந்து திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் அந்த வகையில் ஆசிரியருக்கு ஏதாவது உதவி புரியவேண்டுமென்று நினைத்தார். ஆசிரியப் பெருமானே சொந்தத்தில் ஓர் அச்சகத்தை வைத்துக் கொண்டால் நலமாக இருக்கும் என்று எண்ணினார்.

ஒருமுறை திருவாவடுதுறைக்கு ஆசிரியர் சென்றிருந்தார்: "பிற அச்சகங்களை நம்பிப் புத்தகங்களைக் கொடுத்துத் தொல்லைப் படுகிறீர்கள். நீங்களே ஓர் அச்சகத்தை வைத்துக்கொண்டால் புத்தகங்களை வெளியிடுவதற்கு உதவியாக இருக்கும். ஐயாயிரம் ரூபாயை நாம் உங்களுக்குத் தருகிறோம். அதை வைத்துக்கொண்டு அச்சகத்தை ஆரம்பித்தால் விரைவில் பல நூல்களை நீங்கள் வெளியிடலாம்" என்றார்.

ஆசிரியர் உடனே பதில் சொல்லவில்லை. "நாளைக்குப் பதில் சொல்கிறேன்" என்று வந்துவிட்டார். மறுநாள் சென்றபோது, "சந்நிதானத்திற்கு என்னிடம் இருக்கும் பேரன்பை நான் உணர்கிறேன். வெளி அச்சகத்தை நம்பி நூல்களை வெளியிடுவதில் பல தொல்லைகளுக்கு நான் ஆளாகிறேன் என்பது உண்மைதான். ஆனால் இப்போது புத்தகத்திற்கு வேண்டிய காகிதம், பைண்டுச் சாதனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு மட்டும் கவலைப்பட வேண்டியிருக்கிறது. அச்சகத்தை வைத்து நடத்த ஆரம்பித்தால் ஆட்களை வைத்து, சம்பளம் கொடுத்து நிர்வாகம் செய்தாக வேண்டிய பெருந் தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். நூல் ஆராய்ச்சிக்கு நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம். ஆகையால் சந்நிதானத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதற்கு மன்னிக்கவேண்டும்" என்று சொன்னார். அதன்மேல் ஆதீன கர்த்தர் அந்தக் கருத்தை வற்புறுத்தவில்லை.

ஆசிரியப் பெருமானுக்கு எட்டுத் தொகையில் ஒன்றாகிய அகநானூற்றைப் பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அதை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது வேறு சிலர் அதைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. பின்னத்துர் நாராயணசாமி ஐயர் அதைப் பதிப்பிக்க முயன்றார், ஆனால் கடைசியில் ரா.இராகவையங்காருடைய உதவியினால் வேறு ஒருவர் அதைப் பதிப்பித்துவிட்டார். மற்றவர் பதிப்பித்த நூலைப் பதிப்பிப்பது ஆசிரியர் வழக்கமன்று. ஆதலால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார்.