தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/045-066

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம்

இவர் செய்து வரும் தமிழ்த் தொண்டுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்று மதுரையில் வக்கீலாக இருந்த டி. ஸி. சீனிவாசையங்கார் நினைத்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக அவர் அப்போது இருந்தார். அந்த விழாவில் ஆசிரியருக்கு ஒரு பொற்கிழி வழங்கினார்கள். அதே சமயத்தில் காஞ்சி காமகோடி சங்கராசாரிய சுவாமிகள் ஆசிரியருக்கு இரட்டைச் சால்வையும், தோடாவும் அனுப்பிக் கெளரவித்தார்கள்; தக்ஷிணாத்ய கலாநிதி' என்னும் பட்டத்தையும் அளிக்க ஏற்பாடு செய்தார்கள். ஆசிரியர் தாம் பதிப்பித்த நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை நூலின் முகவுரையில் பொற்கிழி அளிக்க உதவிய அத்தனை பேர்களுடைய பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.

சிதம்பரத்தில் தமிழ்க் கல்லூரி முதல்வராக ஆசிரியர் இருந்த காலத்தில், கல்லூரியில் பாடம் சொன்ன நேரம் போக மற்ற நேரங்களில் நூலாராய்ச்சியிலேயே ஈடுபட்டார். தக்கயாகப் பரணியைப் பதிப்பிக்கவேண்டுமென்பது இவர் எண்ணம். நூலை விட அதன் உரையின் மதிப்பு அதிகமாக இருந்தது. அந்த உரையின் பதிப்பு வெளிவருவது மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று ஆசிரியர் அதனை ஆராய்ந்து வந்தார்.