உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/054-066

விக்கிமூலம் இலிருந்து

டாக்டர் பட்டம்

சென்னைப் பல்கலைக் கழகத்தில் சில பெருமக்களுக்கு டி.லிட். பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். இன்னார் இன்னாருக்குப் பட்டம் அளிக்கலாம் என்று தீர்மானம் செய்தார்கள். ஆசிரியருக்கும் டி.லிட். பட்டம் வழங்கத் தீர்மானித்தார்கள். 1932-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் அந்தப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்தப் பட்டத்தைப் பெறும்போது அதற்கென்று அமைந்த ஒருவகை உடையை அணிந்துகொள்ள வேண்டும். அந்தப் பட்டத்தை அப்போது ஆசிரியருடன் பெற இருந்த சிவசாமி ஐயர் ஆசிரியர் அவர்களுக்கும் வேண்டிய உடைகளைத் தைக்க ஏற்பாடு செய்தார். அந்த விழாவில் ஆசிரியர் மிகவும் சுருக்கமாகத்தான் பேசினார். அவர் பேசியதாவது:

மகா மேன்மை தங்கிய சென்னைச் சர்வகலாசாலை அத்திய க்ஷரவர்கள் சமூகத்திற்கு விஞ்ஞாபனம். சகல கலைகளுக்கும் இருப்பிடமாகிய இந்த இடத்தில் பல்வேறு துறைகளில் சிறப்புற்று விளங்கும் மகாமேதாவிகள் முன்னிலையில் இந்தக் கெளரவப் பட்டத்துக்குரிய சன்னத்தைத் தங்களுடைய திருக்கரத்திலிருந்து பெற்றதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். என்னைப் பாராட்டிப் பேசிய தங்களுக்கும், இதற்குக் காரணமாயிருந்த கனவான்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன். இந்தப் பட்டத்தைப் பெறுவதற்குரிய தகுதி என்னிடமில்லாவிட்டாலும் இதுவரையில் ஏற்படாத இந்தக் கெளரவம் தமிழ்ப் பாஷைக்கே கிடைத்திருக்கிறது என்பது என்னுடைய அந்தரங்கமான அபிப்பிராயம்'

என்று பேசினார்.

செந்தமிழ்ப் பத்திரிகையில் பலவகையான சிறிய பிரபந்தங்களை ஆசிரியர் வெளியிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, சிவநேசன்' பத்திரிகையாசிரியர் தம் பத்திரிகையிலும் ஆசிரியரைக் கொண்டு சில பிரபந்தங்களை வெளியிடச் செய்யவேண்டுமென்று நினைத்தார். ஆசிரியரிடம் அவர் தம் கருத்தைத் தெரிவித்தபோது ஆசிரியரும் அதற்கு இணங்கினார். பழமலைக் கோவை, திருமயிலை யமகவந்தாதி ஆகிய நூல்கள் அந்தப் பத்திரிகையில் வெளியாயின.