தமிழ்ப் பழமொழிகள் 1/ஈ

விக்கிமூலம் இலிருந்து

ஈ அடித்தான் காப்பி.

(காப்பி மாதிரி.)

ஈ ஏறி மலை சாயுமா?

ஈ எறும்பு எண்ணாயிரமும் சிரிக்கிறது. 3715

ஈ என்று போயிருக்கிறான்.

ஈ ஏறி மலை குலுங்கினது போல.

ஈ ஓட்டுகிறான்.

ஈக் கடித்த பெண்ணுக்கு இழை ஒட்டுவதா?

ஈக் கலையாமல் தேன் எடுப்பார்கள்; எடுக்காமல் பிடிப்பார்கள். 3720

ஈக்கும் ஆனைக்கும் சம்பந்தமா?

ஈக்கும் நாய்க்கும் தடை இல்லை.

ஈக்கும் பாலுக்கும் எச்சில் இல்லை.

ஈக்கு விடம் தலையில்; தேளுக்கு விடம் கொடுக்கில்.

ஈகை உடையோன் எக்களிப்பு அடைவான். 3725

ஈச்சங் கள் எதிலும் குளிர்ச்சி.

ஈச்சங் காட்டில் எருமை குடி இருந்தது போல.

ஈச்சங் குலையில் தேன் வைத்த மாதிரி.

ஈச்ச முள் கொண்டு இறுக இறுகத் தைத்தாலும் தேற்றிய வசனம் சொல்லாமல் விடான்.

(தோற்றிய வசனம்.)

ஈச்சமுள்ளாலே இருவாயும் தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் இல்லை, பூவுக்கு மணம் இல்லை என்கிறான். 3730

(மங்கிலியத்துக்கு.)

ஈசல் இறகு எல்லாவற்றிலும் மிருது.

ஈசல் பறந்தால் மழை.

ஈசல் பிறந்தால் மழை மாறும்.

ஈசல் புற்றில் கரடி வாய் வைத்தாற் போல.

ஈசல் பெறும் போக்கில் சொறியாந் தவளை வேட்டை ஆடும். 3735

ஈசல் பெறும் போக்கில் தவளை தத்தி விழுங்குது.

(விழுந்தது.)

ஈசல் பொறுக்கி பேசவும் அறியான்.

ஈசல் மடிந்தாற் போலே மாண்டதே சேனை.

(மடிந்ததே.)

ஈசலுக்கு இறகு முளைத்தாற் போல,

ஈசலுக்கு எல்லாம் பகை. 3740

ஈசன் எப்படி அப்படித் தாசன்.

ஈசன் கருணை பேசுதல் அரிது.

ஈசனுக்கு ஏது நீச பங்கம்?

ஈசனுக்கு ஒப்பு எங்கும் இல்லை.

(இங்கு ஒன்றும் இல்லை.)

ஈசனுடைய அடியார் மனம் எரிந்து புகைந்தால் வீண் போகுமா? 3745

ஈசனைப் போற்று; அரசனை வாழ்த்து.

ஈசான்ய மின்னலுக்கு எருதும் நடுங்கும்.

ஈசுவரன் கிருபை எல்லார்க்கும் போதும்.

ஈசுவரன் கோவில் திருநாள் ஒரு நாள் கந்தாயம்.

ஈசுவரனுக்குத்தான் வெளிச்சம். 3750

ஈசூரும் பூதூரும் என்றும் இழப்பு.

ஈஞ்சைக் கண்டால் கிழி; எருக்கைக் கண்டால் சொடுக்கு.

ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பதின் காதம் குத்தும்.

ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாளம் வரையில் பாயும்.

(எட்டு முழம் பாயும்.)

ஈட்டிய பொருளினும் எழுத்தே உடைமை. 3755

ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய் இருந்தால் வாசி.

ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இரு குமரி.

(இடுகுமரி.)

ஈடன் பாடு அஞ்சான்? கூழை எருது நுளம்புக்கு அஞ்சாது.

(ஈடன்-பலம் உள்ளவன், நுளம்பு-கொசு.)

ஈடு ஆகாதவனை எதிராக்காதே.

(எதிர்க்காதே.)

ஈடு இணை அற்றது. 3765

ஈடு உள்ள குடிக்குக் கேடு இல்லை.

ஈடும் எடுப்பும் இல்லாதது.

ஈடு ஜோடு எங்கும் கிடையாது.

ஈடு ஜோடு சொல்ல முடியாது.

ஈதல் உடையானை யாவரும் புகழ்வர்.

ஈந்து பார்த்தால் இம்மி வெளியாகும்.

ஈப் பறக்க இசை கேடு வந்தாற் போல் ஆச்சுது.

ஈப்பாக்கு வைத்த மாதிரி.

ஈப்பிசினி இரப்பதுகூடக் கஞ்சிசம்.

ஈட்டி வாயன் தேடிக் கற்பூர வாயனுக்குக் கொடுத்தது போல. 3770

(யாழ்ப்பாண வழக்கு.)

ஈமக் கடனை எழுந்து முறை செய்.

ஈ முட்டுவது எருமைக்கடா முட்டுவது போல.

ஈயத்தைக் காதில் காய்ச்சி ஊற்றினாற் போல.

ஈயத்தைக் காய்ச்சலாம்; இரும்பைக் காய்ச்சலாமா?

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை. 3775

(கண்டு.)

ஈயத்தைப் புடம் வைத்தால் ஈயம் வெள்ளி ஆகுமா?

ஈயப் பெருகும் பெருஞ் செல்வம்.

ஈயம் பிடித்தவன் எது சொல்லினும் கேளான்.

ஈயாத கருமிக்கு ஏராளச் செலவு.

ஈயாத பத்தினியிடம் ஈ என்றாலும், இல்லையே அது கொசு என்பாளாம். 3780

ஈயாத புல்லர் இருந்தென்ன? போய் என்ன?

ஈயாத புல்லனை எவ்விடத்திலும் காணோம்.

ஈயாத லோபி இருந்தென்ன? போய் என்ன?

(இறந்து என்ன.)

ஈயாதார் வாழ்ந்தென்ன? இண்டஞ்செடி பழுத்து என்ன?

(இண்டஞ்செடி தாழ்ந்து என்ன? தழைத்து என்ன?)

ஈயாப் பத்தன் பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிறான். 3785

ஈயார் உறவும் ஈகை இல்லா அன்பும் பாழ்.

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

(உடைமையை, கொன்றை வேந்தன். இருபொருள்.ஈயார்-கொடுக்காதவர்; ஈ என்னும் பறவை, தேட்டை-சேமித்த பொருளை; சேமித்த தேனை. தீயார்-கெட்டவர்; நெருப்பை மூட்டுபவர்.)

ஈயார் பொருளுக்குத் தீயார்.

ஈயுந்தனையும் எரு விடு; காயுந்தனையும் களை பறி.

(களை எடு, களை பிடுங்கு.)

ஈயும் எறும்பும் எங்கும் உண்டு. 3790

ஈயைப் பிடித்தால் கை வேறு, கால் வேறு.

ஈயைப் போல் சுத்தமும் எறும்பைப்போல் சுறுசுறுப்பும்.

ஈர் உருவப் பேன் அகப்படும்.

(அகப்படுமா?)

ஈர்க்கிலே குத்தி இறப்பிலே வைத்தாற்போல.

ஈர்ந்து உழும் புன்செய் ஈரம் தாங்கும். 3795

ஈர் பேன் ஆகிப் பேன் பெருமாள் ஆனதுபோல,

ஈரச் சீலையைப் போட்டுக் கழுத்தை அறுப்பான்.

(அறுக்கிறதா?)

ஈரத்தில் ஏரைப் பிடி.

ஈரத் துணியைப் போட்டுக் கழுத்தை வெட்டுவான்.

ஈர நாவுக்கு எலும்பு இல்லை. 3800

ஈர நிலத்தில் ஏரைப் பிடி.

ஈர நெஞ்சம் இரங்கும்; இரங்கா நெஞ்சம் அரங்கும்.

ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா?

(ஈயும் மொய்க்காது. ஈரம் உள்ள இடத்திலே.)

ஈரம் இருக்கிற இடத்திலே ஈ மொய்க்கும்.


ஈரம் இல்லா நெஞ்சத்தார்க்கு என் செய்தும் என்ன? 3805

(ஈரம்-அன்பு.)

ஈரம் உடையோரை யாவரும் புகழ்வர்.

ஈரம் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.

ஈரம் கண்டு அவிசாரி பிடிக்கிறவர்.

ஈரம் காய்ந்தால் பிட்டத்தில் மண் ஒட்டாது.

ஈரம் போகாமல் எருவை மூடு. 3810

ஈர மரத்தில் வயிர ஆணி கடாவினது போல.

ஈரலிலே மயிர் முளைத்தவன்.

ஈர விதைப்பும் ஈரூர் வேளாண்மையும் தாரம் இரண்டும் தனக்குப் பகை.

ஈர வெங்காயத்திற்கு இருபத்திரண்டு புரை.

(இருபத்தெட்டு.)

ஈரூர் வேளாண்மையும் தாரம் இரண்டும் தனக்குப் பகை. 3815

ஈரூரில் உழுதவனும் கெட்டான்; இரண்டு பெண் கட்டினவனும் கெட்டான்.

ஈரை நினைப்பான், பேரை மறப்பான்.

(மறக்கான்.)

ஈரைப் பேன் ஆக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறது.

ஈவதினும் மேல் இல்லை; இரப்பதினும் தாழ்வு இல்லை.

ஈவதைக் கண்டார் யாவரும் அண்டார். 3820

(கண்டால்.)

ஈ விழுந்தாலும் எடுத்தாலொழியப் போகுமா?

ஈ விஷ்டித்ததும் நாய் திருடித் தின்றதும்.

ஈவோனுக்கு ஒரு போது உணவு; இரப்போனுக்குப் பல போது உணவு.

ஈவோனுக்கு ஒரு போஜனம்; இரப்போனுக்கு ஏராளம்.

ஈழத்தில் செக்கு ஆட, இங்கே பதம் பார்க்க. 3825

ஈழமும் கொங்கும் எதிர்த்து மின்னினால் குட்டியை எதிர்த்துக் குடாப்பில் போடு.

ஈரமும் கொங்கும் எதிர்த்து மின்னினால் சாமத்துக்கு மழை தப்பாமல் வரும்.

ஈன்ற புலி போலே.

ஈன்ற மாடு இறை வானத்தைப் பிரிப்பது போல்.

ஈன்றவள் தாய் பாட்டி; இத் தாயியின் தாய் பூட்டி. 3830

(பீட்டி.)

ஈன்றோர் நஞ்சில் சான்றோர் இல்லை.

(ஈன்றோரைவிட.)

ஈனம் மானம் அற்றவன் இரந்து வயிறு வளர்ப்பான்.

ஈனருக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் எல்லாம் பாழ்.

ஈனரை அடுத்தால் மானம் அழியும்.

ஈனவும் தெரியாது; எடுக்கவும் தெரியாது. 3835

(நக்கவும்.)

ஈனனுக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் கைக் கொள்வான்.

ஈனனுக்கு இரு செலவு.

ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்.

ஈனாப் பெண்கள் இருவர் கூடினால் காயா வரகு நீறாய்ப் போம்.

(காயாப் புழுங்கல், யாழ்ப்பாண வழக்கு.)
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_1/ஈ&oldid=1156680" இலிருந்து மீள்விக்கப்பட்டது