தமிழ்ப் பழமொழிகள் 1/உ
உகம் முடிய மழை பெய்தாலும் ஓட்டாங் கிளிஞ்சல் பயிர் ஆகுமா? 3840
உகிர்ச் சுற்றின்மேல் அம்மி விழுந்தாற் போல்.
- (உலக்கை விழுந்தாற் போல.)
உங்கள் அப்பன் ஆர்க்காட்டு நவாபா?
உங்கள் அப்பன் ஏழரைக் கோடி.
- (கொங்கு நாட்டு வழக்கு.)
உங்கள் அப்பன் சீமை ஆளுகிறானா?
உங்கள் அப்பன் செத்தான்; பழி உன்னை விடேன். 3845
உங்கள் அப்பன் பூச்சிக்குப் பயப்பட்டானா, உன் பூச்சிக்குப்பயப்பட?
உங்கள் உறவிலே வேகிறது ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்.
உங்கள் பெண்டுகள் கொண்டான் அடித்தால் கண்கள் கொள்ளாது.
உங்கள் வீட்டுப் பனங்கட்டை ஒற்றைப் பணத்தை முடிந்து கொண்டு கிடக்குமோ?
உங்களைக் கடலிலே கை கழுவினேன். 3850
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்.
- (திருவாசகம்.)
உச்சத்தில் சொன்னால் அச்சம் இல்லை.
- (பல்லி வாக்கு.)
உச்சந் தலையில் செருப்பால் அடித்தது போல.
உச்சந் தலையில் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா?
உச்சந் தலையில் முள் தைத்து உள்ளங்காலில் புரை ஓடிற்றாம். 3855
உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பார்.
- (சோதிடம்.)
உச்சனை உச்சன் பார்த்தால் மச்சு வீடும் குச்சு வீடாகும்.
- (ஸ)
உச்சஸ்தானே ஷு பூஜித.
உச்சாணிக் கிளையில் ஏறினால் உயிருக்கு ஆபத்துத்தானே?
உச்சி இட உச்சி இட உள்ளே குளிர்ந்தது. 3860
உச்சி குளிர்ந்தது.
உச்சி மீனுக்கு எட்டாம் மீன் உதய மீன்.
- (புறநானூறு, 229.)
உசிர் இருந்தால் உப்பு மாற்றிக் குடிக்கலாம்.
- (உயிர்.)
உசு பிடி என்றால் நீ பிடி என்கிறது நாய்.
உஞ்ச விருத்திக்குப் போனாலும் பஞ்சம் இல்லாமல் இருக்க வேணும். 3865
உட்கார்ந்தவன் காலில் மூதேவி; ஓடுபவன் காலிலே சீதேவி.
உட்கார்ந்தவனைக் கட்டமாட்டாதவன் ஓடுகிறவனைக் கட்டுவானா?
உட்கார்ந்து அல்லவோ படுக்க வேண்டும்?
உட்கார்ந்து இருக்கச்சே அடித்தால் பொன்னாகும்; ஓடச்சே அடித்தால் செம்பானாலும் ஆகும்; இரும்பானாலும் ஆகும்.
உட்காரச் சொல்லாத சர்க்கரை போல் பேச்சு. 3870
உட்சுவர் இருக்க வெளிச்சுவர் பூசலாமா?
உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.
உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி.
உடம்பிலே காய்த்துத் தொங்குகிறதா?
உடம்பிலே பயம் இருந்தால் நன்றாகச் செய்வான். 3875
உடம்பு உளைந்த கழுதை உப்புக் களத்துக்குப் போனது போல.
- (போயிற்றாம்.)
உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்.
உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தவன்.
- (எடுத்தால்.)
உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலைக் கெடுத்தானாம்.
உடம்பு எல்லாம் புளுகு; பல் எல்லாம் ஊத்தை. 3880
உடம்புக்குப் பால் குடிப்பதா? ஊருக்குப் பால் குடிப்பதா?
- (உடம்புக்குப் பால் குடிக்கா விட்டாலும் ஊருக்குப் பால் குடிக்க வேண்டும்.)
உடம்பு தேற்றிக் கொண்டு அல்லவா யோகத்தில் போக வேண்டும்?
உடம்பு போனால் போகிறது; கை வந்தால் போதும்.
- (உடும்பு.)
உடம்பு முழுவதும் நனைந்தவர்க்குக் கூதல் என்ன?
உடம்பை ஒடித்துக் கடம்பில் விடு. 3885
- (உடம்பை முறித்து, கடம்பமரக் கட்டிலில்.)
உடம்பைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் சமானமாகாது.
உடம்போடே ஒரு நாட்டியம் உண்டா?
உடம்போடே பிறந்தது.
உடல் அளவு விரதம்; பொருள் அளவு தானம்.
உடல் இரண்டு, உயிர் ஒன்று. 3890
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாக் கவலை.
- (உள்ளவனுக்கு.)
உடல் ஒருவனுக்குப் பிறந்தது; நாக்குப் பலருக்குப் பிறந்தது.
உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு தெரு முழுவதும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்.
உடல் மெச்சப் பால் குடிக்கிறாயா? ஊர் மெச்சப் பால் குடிக்கிறாயா?
உடலுக்குக் கை துரோகம். 3895
உடலுக்குள்ளே நாக்கை வளைக்கிறதா?
உடலுக்கோ பால் வார்த்து உண்பது? ஊருக்கோ பால் வார்த்து உண்பது?
உடலும் உயிரும் போல.
உடன் பிறந்தே கொல்லும் வியாதி.
உடன் பிறப்பால் தோள் வலி போம். 3900
- (உடன் பிறப்பு உள்ளவனுக்கு.)
உடன் பிறப்பு இல்லாத உடம்பு பாழ்.
உடாப் புடைவை பூச்சிக்கு இரை.
உடுக்காத புடைவையைச் செல் அரிக்கும்.
உடுக்கு அடிக்கிறவனுக்கு நடுக்கக் கை வேறு.
உடுக்கைக்கு இடை சிறுத்தால் ஓசை உண்டு; உரலுக்கு இடை சிறுத்தால் உதவி என்ன? 3905
உடுத்த சீலை பாம்பாய்க் கடித்தது போல.
- (உடுத்தின புடைவை.)
உடுத்துக் கெட்டான் துலுக்கன்; உண்டு கெட்டான் மாத்துவன்.
உடுத்துக் கெட்டான் வெள்ளைக்காரன்; உண்டு கெட்டான் சோனகன்; புதைத்துக் கெட்டான் தமிழன்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
உடுப்பது பீறல் ஆடை; நடப்பது தந்தக் குறடாம்.
உடுப்பாரைப் பார்த்தாலும் உண்பாரைப் பார்க்கலாமா? 3910
உடும்பு உடும்பே இண்டிக்குப் போ.
- (தெலுங்கு, இண்டிக்கு-வீட்டுக்கு.)
உடும்புக்கு இரண்டு நாக்கு; மனிதனுக்கு ஒரு நாக்கு.
- (உனக்கு இரண்டு நாக்கா?)
உடும்புப் பிடி.
உடும்பு பிடித்தது போதும்; கையை விடு.
உடும்பு போனால் போகிறது; கை வந்தால் போதும். 3915
உடும்பு வேண்டாம்; கை வந்தால் போதும்.
- (கையை விடு.)
உடை குலைந்த பிறகு முறை கொண்டாடுவதோ?
உடைத்த சட்டி உலைக்கு உதவாது,
உடைத்து ஓடு பொறுக்குகிறான்.
உடைந்த சங்கில் காற்றுப் பரியுமா? 3920
உடைந்த சங்கு ஊது பரியுமா?
- (பரியுமா.-பரவச் செய்யுமா.)
உடைந்த தடியை ஒரு போதும் நம்பாதே.
உடை முள்ளுக்கு எதிரே உதைக்கலாமா?
உடைமை என்பது கல்வி உடைமை.
உடைமைக்கு ஒரு முழுக்கு; உடையவனுக்கு ஒன்பது முழுக்கு. 3925
உடைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா?
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
- (வெற்றி வேற்கை.)
உடையவன் அறிந்திடாத சடுக்கு இல்லை.
உடையன் இல்லாச் சேலை ஒருமுழம் கட்டை.
- (பாரா விட்டால்.)
உடையவன் கண் ஓடாப் பயிர் உடனே அழியும்.
உடையவன் காற்றுப் படாப் பயிர் ஒருமுழம் கட்டை,
உடையவன் சொற்படி உரலைச் சுற்றிக் குழி பறி.
உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?
உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை.
- (பாராப் பயிர்.)
உடையவன் பொறுத்தாலும் உடையவன் வீட்டு நாய் பொறுக்காது.
உடையார் இல்லாவிட்டாலும் உடையார் பொல் இருக்கிறது.
- (யாழ்ப்பாண வழக்கு, ஜனன மரணப் பதிவு செய்பவன் வராவிட்டாலும் அவன் கைத்தடியை அனுப்பினால் போதும். பொல்-தடி.)
உடையார் உண்டைக் கட்டிக்கு அழும் போது லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்கிறதாம்.
உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு என்ன?
உண் உண் என்று உபசரிப்பான் இல்லாத வாசலிலே உண்ணுமை கோடி பெறும்.
உண்கிற சோற்றிலே கல்லைப் போடுகிறதா? 3940
உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா?
உண்கிற சோறு வெல்லம்.
- (வெள்ளம்.)
உண்கிற வயிற்றை ஒளிக்கிறதா?
உண்ட இடத்தில் உட்கார்ந்திருந்தால் கண்ட பேர் கரிப்பார்கள்.
உண்ட இலையில் உட்கார்ந்தால் சண்டை வளரும். 3945
உண்ட இளைப்புத் தொண்டருக்கும் உண்டு.
- (களைப்பு.)
உண்ட உடம்பு உருளும்; தின்ற பாக்குச் சிவக்கும்.
உண்டவன் உடம்புக்கு உறுதி, உழுத புலத்தில் நெல்.
- (உடம்பு.)
உண்ட சுற்றம் உருகும்.
உண்ட சோற்றிலே நஞ்சைக் கலந்தாற்போல். 3950
உண்ட சோற்றுக்கு இரண்டகம் பண்ணுகிறதா?
உண்டதுதானே ஏப்பம் வரும்?
உண்டதும் தின்றதும் லாபம்; பணியில் கிடந்தது லோபம்.
உண்ட பிள்ளை உரம் பெறும்.
- (உரம் செய்யும்.)
உண்ட பேர் உரம் பேசுவார். 3955
உண்ட வயிற்றுக்கு உபசாரமா?
உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத் தலைக்கு எண்ணெயும் போல.
உண்ட வயிறு கேட்கும்; தின்ற பாக்குச் சிவக்கும்.
உண்டவன் உண்டு போக என் தலை பிண்டு போகிறது.
- (போகிறதா?)
உண்டவன் உரம் செய்வான். 3960
உண்டவன் பாய் தேடுவான்; உண்ணாதவன் இலை தேடுவான்.
உண்ட வீட்டிலே உட்காராமல் போனால் கண்டவர்கள் எல்லாம் கடுகடு என்பார்கள்.
உண்ட வீட்டிலே கிண்டி தூக்குவது போல.
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?
- (இரண்டகம் நினைத்தல்.)
உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கிறவன் உண்டா? 3965
உண்டார் மேனி கண்டால் தெரியும்.
உண்டால் உடம்பு சொல்லும், விளைந்தால் வைக்கோற்போர் சொல்லும்.
உண்டால் கொல்லும் விஷம்.
உண்டால் கொல்லுமோ? கண்டால் கொல்லுமோ?
உண்டால் தின்றால் உறவு; கொண்டால் கொடுத்தால் உறவு. 3970
உண்டால் தின்றால் ஊரிலே காரியம் என்ன?
உண்டால் தீருமா பசி? கண்டால் தீருமா?
உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.
உண்டான தெய்வங்கள் ஒதுங்கி நிற்கையில் சுற்றுப்பட்ட தெய்வம் ததியோதனத்துக்கு அழுததாம்.
உண்டான போது கோடானுகோடி. 3975
உண்டானால் உண்டு. உலகு அஸ்தமனமா?
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
உண்டு இருக்க மாட்டாமல் ஊர் வழியே போனானாம்; தின்று இருக்க மாட்டாமல் தேசாந்தரம் போனானாம்.
உண்டு உறியில் இரு என்றால் உருண்டு கீழே விழுந்தானாம். 3980
- (தரையில், தெருவில்.)
உண்டு என்ற பேருக்கு ஈசன் உண்டு; இல்லை என்ற பேருக்கு இல்லை.
உண்டு என்று பெண் கொடுத்தால் சாதிகுலம் கேட்டானாம்.
உண்டு கண்ட பூனை உறியை உறியைத் தாவும்.
உண்டு களித்தவனிடம் சோற்றுக்குப் போ; உடுத்துக் களித்தவனிடம் துணிக்குப் போ.
உண்டு கெட்டவனும் தின்று கெட்டவனும் இல்லை. 3985
உண்டு கெட்டான் பார்ப்பான், உடுத்துக் கெட்டான் துலுக்கன்.
- (உண்டு கழித்தவன், உடுத்துக் கழித்தவன்.)
உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இருக்குமா?
- (இராது.)
உண்டு தின்று உயரமானால் ஊரிலே காரியம் என்ன?
உண்டு தின்று உள்ளே இரு என்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?
உண்டு ருசி கண்டவன் ஊரை விட்டுப் போகான்; பெண்டு ருசி கண்டவன் பேர்த்து அடி வையான். 3990
உண்டை பட்டு உறங்குகிற குருவிபோல.
உண்ண இலை தேடி உறங்கப் பாய் தேடிச் சிவனே என்று இருந்தேன்
உண்ண உணவும் நிற்க நிழலும்.
உண்ணக் கை சலித்திருக்கிறான்.
உண்ணச் சோறும் உடுக்கத் துணியும் ஒண்டக் கூரையும் வேண்டும். 3995
உண்ணப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.
உண்ணப் பார்த்தாலும் உழைக்கப் பாராதே,
உண்ண வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்திற்றாம்.
உண்ண வருகிறாயோ சோம்பலே, உன் குறுணி அரை நாழிவேலைக்கு வருகிறாயோ சோம்பலே; நான் சற்றே நோயாளி.
உண்ண வா என்றால் குத்த வருகிறான். 4000
- (வருகிறாய்.)
உண்ணவும் தின்னவும் என்னைக் கூப்பிடு; ஊர்க்கணக்குப் பார்க்க என் தம்பியை அழை.
உண்ணா உடம்பு உருகாது; தின்னாப் பாக்குச் சிவக்காது.
உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக் குறி இடுவேன்.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும், உடுக்காப் புடைவை புட்டிலாக்கும்.
உண்ணாத தின்னாத ஊர் அம்பலம். 4005
உண்ணா நஞ்சு ஒருகாலும் கொல்லாது.
உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம்; உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.
உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம்; உடுக்காமல் ஒரு வீடும் போகலாகாது.
உண்ணாமல் கெட்டது உறவு; கேளாமல் கெட்டது கடன்.
உண்ணாமல் தின்னாமல் உறவின் முறையுாருக்கு ஈயாமல். 4010
உண்ணாமல் தின்னாமல் ஊர் அம்பலம் ஆனேனே!
- (ஓமல் ஆனேனே.)
உண்ணாமல் தின்னாமல் வயிறு உப்புசம் கொண்டேன்.
உண்ணி கடித்த நாய் உதறுவது போல.
உண்ணியைக் கண்டால் ஊரிள் பஞ்சம் தெரியும்.
- (உண்ணி-பையன், நாஞ்சில் நாட்டு வழக்கு.)
உண்ணுகிற சோறு வெல்லம். 4015
உண்ணுகிற வயிற்றை ஒளிக்கிறதா?
உண்ணுபவன் உண்டு விட்டுப் போனால் உன் தலைப்புண் விட்டுப்போகிறது.
உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி.
உண்ணுவார் இல்லை; உறங்குவார் இல்லை. ஒரு கட்டு வெற்றிலை தின்பார் இல்லை, சாந்து சந்தனம் பூசுவார் இல்லை. தலைக்குத் தப்பளம் போடுவார் இல்லை, வா மருமகளே வா
- (தவளை,)
உண்ணுவாளாம், தின்னுவாளாம் சீதா தேவி; உடன்கட்டை ஏறுவாளாம் பெருமா தேவி. 4020
- (தின்னுவாளாம் குந்தமாதேவி, ஏறுவாளாம் சீதா தேவி.)
உண்ணேன், உண்ணேன் என்றால் உடலைப் பார்த்தால் தெரியும்.
உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.
உண்பது நாழி; உடுப்பது நான்கு முழம்; எண்பது கோடி நினைந்து எண்ணும் மனம்.
உண்பன, தின்பன உறவுதான்; செத்தால் முழுக்குத்தாள்.
உண்பார் பாக்கியம், சம்பா விளையும். 4025
உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்த்தல் ஆகாது.
உண்பான் தின்பான் திவசப்பிராமணன்; குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.
உண்பான் தின்பான் சேவைப் பெருமாள்; குத்துக்கு நிற்பான் வைராகி.
- (சேப்பெருமாள்.)
உண்பான், தின்பான் நயனப்ப செட்டி; உடன் கட்டை ஏறுவான் பெருமாள் செட்டி.
உண்பான் தின்பான் பைராகி; குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி. 4030
உண்மை உயர்வு அளிக்கும்.
- (தரும்.)
உண்மைக்கு உத்தரம் இல்லை.
உண்மை சொல்லிக் கெட்டாரும் இல்லை; பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.
உண்மை சொன்னால் உண்மை பலிக்கும்; நன்மை சொன்னால் நன்மை பலிக்கும்.
உண்மை நன்மொழி திண்மை உறுத்தும். 4035
உண்மைப் படு, உறுதிப்படு.
உண்மையைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.
உண்மையைச் சொன்னால் உடம்பு எரிச்சல்.
உணர்வு இல்லாக் கருவியும் உப்பு இல்லாச் சோறும் சரி.
- (உணவும் சரி.)
உணவு விளைவிப்பது சட்டியில்; உறவு விளைவிப்பது பட்டியில். 4040
உத்தமச் சேரிக் குயவனுக்கு ஒன்றால் ஒன்று குறைவு இல்லை,
உத்தம சேவகன் பெற்ற தாய்க்கு அதிகம்.
உத்தமம் ஆன பத்தினி ஊர்மேலே வருகிறாள்; வீட்டுக்கு ஒரு துடைப்பக்கட்டை, உஷார், உஷார்.
உத்தமனுக்கு உடம்படிக்கை ஏன்?
உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை. 4045
உத்தமனுக்கு ஓலை எதற்கு?
உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடம்படிக்கை வேண்டாம்.
- (பா-ம்.) போக்கிரிக்கும்.
உத்தரத்தில் ஒரு பிள்ளை; உறவுக்கெல்லாம் ஒரு தொல்லை.
உத்தரத்து அளவு கேட்டால் அரிவாள் பிடி அளவு வரும்.
உத்தரம் இல்லாமல் வீடு கட்டுகிற மாதிரி. 4050
உத்தராடத்தில் ஒரு பிள்ளையும் ஊர் ஓரத்தில் ஒரு காணியும்.
- (ஊர் வாரியில் ஒரு வேலியும்.)
உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாகிறதா?
உத்தியோகத்துக்குத் தக்க ககம்.
உத்தியோகம் குதிரைக் கொம்பாய் இருக்கிறது.
உத்தியோகம் தடபுடல்; சேவிக்கிற இவர் இன்னார் இனியார் என்று இல்லை; சம்பளம் கணக்கு வழக்கு இல்லை; குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு. 4055
- (குண்டை-மாடு,)
உத்தியோகம் போன ஊரில் மத்தியானம் இருக்கதே.
உத்தியோகம் புருஷ லக்ஷணம்.
உதட்டில் ஒட்டாமல் பேசுகிறான்.
..............................
.......................................................................... 4060
- (பா-ம்.) நெஞ்சிலே.
உதட்டிலே புண், மாடு கறக்க முடியவில்லை.
உதட்டிலே புன்னகையும் உள்ளத்திலே எரிச்சலும்.
உதட்டிலே வாழைப்பழம் உள்ளே தள்ளுவார் உண்டோ?
உதட்டுக்குப் பால் மாறின தாசியும் மேட்டுக்குப் பால் மாறின கணக்கனும்.
உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகா. 4065
உதட்டுத் துரும்பு ஊதப் போகாது.
- (பா-ம்.) போதாது.
உதட்டு வாழைப் பழத்தை உள்ளே தள்ள ஓர் ஆள் வேண்டும்.
உதடு ஒட்டாமல் பேசுகிறான்.
உதடு தேய்வதைவிட உள்ளங்கால் தேயலாம்.
- (உள்ளங்காலைத் தேய விடு.)
உதடு தேன் சொரிய, உள்ளே நெஞ்சு எரிய. 4070
- (பழம் சொரிய.)
உதடு வெல்லம்; உள்ளம் கள்ளம்.
உதயத்தில் வந்த மழையும் ஆஸ்தமிக்க வந்த மாப்பிள்ளையும் விடா.
உதர நிமித்தம் பகுக்குத வேஷம்.
- (பஜகோவிந்தம்.)
உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினது போல.
உதவாப் பழங்கலமே, ஓசை இல்லா வெண்கலமே. 4075
உதவா முட்டி சுத்தரம், ஒதுகிறாளாம் மந்திரம்.
உதவி செய்வாருக்கு இடையூறு ஏது?
உதறி முடிந்தால் ஒரு குடுமிக்குப் பூ இல்லையா?
உதறு காலி முண்டை உதறிப் போட்டாள்.
உதறு காலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள். 4080
- (பா-ம்.) எடுத்தாள்.
உதாரிக்குப் பொன் துரும்பு.
உதிக்கின்ற கதிரோன் முன்னே ஒளிக்குய் மின்மினியைப் போல்.
உதி பெருத்தாலும் உத்தரத்துக்கு உதவாது.
உதிரத்துக்கு அல்லவோ உருக்கம் இருக்கும்?
உதிரம் உறவு அறியும். 4085
உதைத்த கால் புழுக்கிறதற்கு முன்னே அடி வயிறு சீழ்க்கட்டுகிறது.
- (நெஞ்சு சீழ் கட்டிக் கொள்ளும்.)
உதைத்த காலை முத்தம் இடுவது.
உதைத்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் உபயோகப்படா.
உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான்.
உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான்; கொட்டி வெளுப்பான் கொங்கு வண்ணான். 4090
உதைபட்ட நாய் ஊரெல்லாம் சுற்றினாற்போல.
உப்பளத்து மண்ணும் உழமண்ணும் செம்மண்ணும் காவேரி மண்ணும் கலந்து வழங்குகிறது.
உப்பின் அருமை உப்பு இல்லாவிட்டால் தெரியும்.
உப்பு இட்ட பாண்டமும் உபாயம் மிகுந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தாமே உடையும்.
உப்பு இட்டவரை உள்ளளவும் நினை. 4095
உப்பு இட்டுக் கெட்டது மாங்காய், உப்பு இடாமற் கெட்டது தேங்காய்.
உப்பு இருக்கிறதா என்றால் பப்பு இருக்கிறது என்றார்,
- (பப்பு-பருப்பு.)
உப்பு இருந்த பாண்டமும் உளவு அறிந்த நெஞ்சமும் தப்பாமல் தட்டுண்டு உடையும்.
உப்பு இருந்தால் பருப்பு இராது; பருப்பு இருந்தால் உப்புஇராது.
- (இல்லை.)
உப்பு இல்லாக் கீரை குப்பையில் இருந்தால் என்ன? உபயோகம் அற்ற அகமுடையான் பக்கத்தில் இருந்தால் என்ன? 4100
உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.
உப்பு இல்லாமல் கலக்கஞ்சி குடிப்பான்.
- (பா-ம்.) ஒரு மிடாக் கஞ்சி
உப்பு இல்லாவிட்டால் தெரியும் உப்பு அருமை; அப்பன் இல்லா விட்டால் தெரியும் அப்பன் அருமை.
உப்பு உந்தியா செட்டியாரே என்றால் பப்பு உந்தி என்கிறார்.
- (உந்தியா - இருக்கிறதா, - பப்பு - பருப்பு.)
உப்பு உள்ள பாண்டம் உடையும். 4105
உப்பு எடுத்த கையாலே கர்ப்பூரமூம் எடுக்க வேண்டும்.
உப்புக் கட்டினால் உலகம் கட்டும்.
உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல.
- (விழிக்கிறாள்.)
உப்புக்கு ஆகுமா, புளிக்கு ஆகுமா?
உப்புக்கும் உதவாதவன் ஊருக்கு உதவமாட்டான். 4110
உப்புக்கும் உதவாத விஷயம்.
உப்புச் சட்டியும் வறை ஓடும் தோற்றுவிட்டான்.
உப்புச் சட்டியும் வறை ஓடும் விற்றுக்கடனைக் கொடுத்து விட்டான்.
உப்புச் சப்பு இல்லாத காரியம்
உப்புச் சமைந்தால் உப்பின் அருமை தெரியும்; அப்பன் சமைந்தால் அப்பன் அருமை தெரியும். 4115
- (யாழ்ப்பாண வழக்கு.)
உப்புத் தண்ணீரும் கப்பு மஞ்சளும் ஊறிப் போச்சுது.
உப்புத் தண்ணீருக்கு விலாமிச்சவேர் வேண்டுமா?
உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
உப்பு நளபாகமாய் இருக்கிறது.
உப்பு நீர் மேகம் உண்டால் உலகில் பிரவாகம். 4120
- (பா-ம்.) சேர்ந்தால்
உப்புப் புளிக்கு ஆகாத சமாசாரம்,
உப்புப் பெறாத காரியத்துக்கு ஊரைக் கூட்டினானாம்.
உப்புப் பெறாதவன் பருப்புப் பெற்றான்; உறித்தயிரைப் போய் எட்டி எட்டிப் பார்த்தானாம்,
உப்புப் பொதிக்காரன் உருண்டு உருண்டு அழுதானாம், வெற்றிலைப் பொதிக்காரன் விழுந்து விழுந்து சிரித்தானாம்.
உப்புப் போட்டுச் சோறு தின்றால் சுரணை இருக்கும். 4125
உப்பும் இல்லை, சப்பும் இல்லை.
உப்பும் இல்லை, புளியும் இல்லை.
உப்பும் இல்லை, புளியும் இல்லை, உண்டைக் கட்டியே, உன்னை விட்டால் கதியும் இல்லை பட்டைச் சாதமே!
உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?
உப்பும் சோறும் உணர்த்தியாய் உண்ணவில்லையோ? 4130
உப்பு மிஞ்சினால் உப்புச் சாறு; புளி மிஞ்சினால் புளிச் சாறு.
உப்பு மிஞ்சினால் தண்ணீர்; தண்ணீர் மிஞ்சினால் உப்பு.
- (தண்ணீர் விடு, உப்பு போடு.)
உப்பு முதல் கர்ப்பூரம் வரையில்.
உப்பு வண்டிக்காரன் உருண்டு அழுதான்; வெற்றிலை வண்டிக்காரனும் விழுந்து அழுதான்.
- (உப்புப் பொதிக்காரன், வெற்றிலைக்காரன்.)
உப்பு வாணிகன் அறிவானோ கர்ப்பூர விலை? 4135
- (வாசனை.)
உப்பு விற்கச் சொன்னாளா? ஊர்ப் பெரிய தனம் செய்யச் சொன்னாளா?
உப்பு வைத்த பாண்டம் உடையும்.
உப்பு வைத்த மண்பாண்டம் போல.
உப்பைக் கடித்துக் கொண்டு உரலை இடித்தானாம்.
உப்பைச் சிந்தினையோ, துப்பைச் சிந்தினையோ? 4140
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
உப்பைத் தொட்டு உப்பைத் தின்னாதே.
உப்பைத் தொட்டுக் கொண்டு உரலை விழுங்குவான்.
உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்.
உப்போடே முப்பத்திரண்டும் வேண்டும். 4145
உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிருஷ்டம்.
உபகாரம் செய்தவருக்கு அபகாரம் செய்யலாமா?
உபகாரம் செய்யாவிட்டாலும் அபகாரம் செய்யாதே.
உபகாரம் வீண் போகாது.
உபசரிப்பு இல்லாத உணவு கசப்பு ஆகும். 4150
உபசரியாத மனையில் உண்ணாது இருப்பதே கோடி தனம்.
- (வீட்டிலே.)
உபசாரம் செய்தவருக்கு அபசாரம் பண்ணுகிறதா?
- (எண்ணுகிறதா?)
உபசார வார்த்தை காசு ஆகுமா? உண்டால் ஒழியப் பசி தீருமா?
உபசார வார்த்தை வாய்க்குக் கேடு; தூற்றுப் பருக்கை வயிற்றுக்குக் கேடு.
உபநயனம் இல்லாமல் கல்யாணம் பண்ணினானாம். 4155
உபாத்தியாயர் நின்று கொண்டு பெய்தால் சிஷ்யன் ஓடிக்கொண்டே பெய்வான்.
உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?
உம் என்றாளாம் காமாட்சி, ஒட்டிக் கொண்டாளாம் மீனாட்சி,
- (மீனாட்சி. காமாட்சி.)
உமக்கு என்ன, வயசுக்கு நரைத்ததோ, மயிருக்கு நரைத்ததோ?
உமி குத்திக் கை நோகலாமோ? 4160
உமி குற்றிக் கை வருந்துமாறு
- (பழமொழி நானூறு.)
உமி சலித்து நொய் பொறுக்கினாற் போல.
உமியும் கரியும் இருக்கின்றன; உடைமை செய்யப் பொன் இல்லை.
உமியைக் குத்திக் கை சலித்தது போல.
உயர்ந்த அடுப்பு அமர்ந்த அடுப்பு. 4165
- (அயர்ந்த.)
உயர்ந்த காற்றைக் காற்று மோதும்.
உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்து ஆகுமா?
- (கருடன்.)
உயிர் அறியும் உறவு,
உயிர் இருக்க ஊனை வாங்குகிறது போல.
உயிர் இருக்கும் போது குரங்கு; இறந்த பிறகு அநுமார். 4170
உயிர் இருந்தால் உப்பு மாறித் தின்னலாம்.
- (உப்பு விற்றுப் பிழைக்கலாம், உண்ணலாம்.)
உயிர் உதவிக்கு மிஞ்சின உதவி வேறு இல்லை,
உயிர் உள்ள மட்டும் தைரியம் விடலாமா?
உயிர் என்ன வெல்லமா?
உயிர் காப்பான் தோழன். 4175
உயிர் தப்பியது தம்பிரான் புண்ணியம்.
உயிர் போகும் போதும் தைரியம் விடலாகாது.
உயிருக்கு மிஞ்சின ஆக்கினையும் இல்லை; கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரமும் இல்லை.
உயிருக்கு வந்தது மயிரோடே போயிற்று,
உயிரும் உடலும் போல. 4180
- (உடம்பும்.)
உயிரைக் கொடுத்த சாமிக்கு மயிரைக் கொடுக்க வேணும்.
உயிரைப் பகைத்தேனோ! ஒரு நொடியில் கெட்டேனோ?
உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.
உயிரோடு இருக்கும் போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை. ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல.
உயிரோடு ஒரு முத்தம் கொடுக்கவில்லை; செத்த பிறகு கட்டிக் கட்டி முத்தமிட்டாளாம். 4185
உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன் கட்டை ஏறுவாளா?
உயிரோடு திரும்பிப் பாராதவள் செத்தால் முத்தம் கொடுப்பாளா?
உரத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.
உரத்தைத் தள்ளுமாம் உழவு.
உாம் உதவுவது ஊரார் உதவார். 4190
உரம் ஏற்றி உழவு செய்.
உரம் செய்கிறது உறவுடையான் செய்யமாட்டான்,
உரல் பஞ்சம் அறியுமா?
உரல் போய் மத்தளத்தோடு முறையிட்டது போல.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா? 4195
- (அகப்பட்டு, அஞ்சுகிறதா?)
உரலிலே தலையை விட்டுக்கொண்டு உலக்கைக்குப் பயப்படலாமா?
உரலிலே தலை விட்டால் உலக்கைக்குத் தப்பலாமா?
- (மாட்டிக்கொண்டு பயப்பட்டால் தீருமா?)
உரலிலே துணி கட்டியிருந்தாலும் உரிந்து பார்க்கவேண்டும் என்கிறான்.
உரலுக்கு ஒரு பக்கம், இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.
உரலுக்குப் பஞ்சம் உண்டா? 4200
உரலுக்குள் தலையை விட்டு உலக்கைக்கு அஞ்சலாமா?
உரலும் கொடுத்துக் குரலும் போக வேண்டும்.
உரித்த பழம் என்ன விலை? உரிக்காத பழம் என்ன விலை என்றானாம் ஒரு சோம்பேறி.
உரித்த வாழைப் பழத்தை ஒன்பது வெட்டு வெட்டும்.
உரிய உரிய மழை பெய்து எரிய எரிய வெயில் காய்கிறது. 4205
உரியிலே ஒக்குமாம் உருளைக் கிழங்கு; கண்டு பிடிக்குமாம் கருணைக் கிழங்கு.
உரியை இரட்டித்தால் உழக்கு.
உரு ஏறத் திரு ஏறும்.
உருக்கம் உருக்கமாய் ஊட்டி உள்ளே போச்சுது.
உருக்கம் உள்ள சிற்றாத்தை, ஒதுக்கில் வாடி கட்டி அழலாம். 4210
உருக்கின நெய் வார்த்தாலும் கண்ட நியாயத்தான் சொல்லுவேன்.
உருக்கின நெய் வார்த்தாலும் கண்ணாரக் கண்டதைத் சொல்லுவான்.
உருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவுமாம்; வரிசை கண்ட மாப்பிள்ளை வந்து வந்து நிற்பானாம்.
உருட்சிக்கு நீட்சி, புளிப்புக்கு அவள் அப்பன்.
- (புளியங்காய்.)
உருட்டி விளையாடுகிற தஞ்சாவூர்ப் பொம்மை. 4215
உருட்டுப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும்.
உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.
உருண்டு உருண்டு புரண்டாலும் உடம்பில் ஒட்டுவதுதான் ஒட்டும். 4220
உருண்டு புரண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும்.
உருப்படத் திருப்படும்.
உருப்படாக் கோயிலில் உண்டைக் கட்டி வாங்கி விளக்கு இல்லாக் கோயிலில் விண்டு விண்டு தின்றானாம்.
உருவத்தினால் அல்ல; பேச்சினால் கிளி நன்கு மதிக்கப்படும்.
உருவத்தை அல்ல; குணத்தைப் பார். 4225
உருவிக் குளிப்பாட்டி உள்ளாடை கட்டாமல்.
உருவிய வாளை உறையில் இடாத வீரன்.
உருவின கத்தி உறையில் அடங்கும்.
உருளுகிற கால் பாசி சேர்க்காது.
உரைத்த கட்டை வாசனை பெறும். 4230
உரையார் இழித்தக்க காணிற் கனா.
- (பழமொழி நானுாறு.)
உல்லாச நடை மெலுக்குக் கேடு; மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.
- (நெய்.)
உலக்கைக்குப் பூண் கட்டினது போல.
உலக்கைக் கொழுந்தும் குந்தாணி வேரும்.
உலக்கை சிறுத்துக் கழுக்காணி ஆயிற்று. 4235
உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனது போல.
உலக்கைப் பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா?
- (அசையாதவன், அசைவானா?)
உலக்கை பெருத்து உத்தரம் ஆயிற்று.
உலக்கையாலே காது குத்தி உரலாலே தக்கை போட்டது போல
உலகத்துக்கு ஞானி பேய்; ஞானிக்கு உலகம் பேய். 4240
உலகம் அறிந்த தாசிக்கு வெட்கம் ஏது? சிக்கு ஏது?
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.
- (திவாகரம்.)
உலகம் பல விதம்
உலகம் முழுவதும் உடையான் அருள்.
உலகமே ஒரு நாடக சாலை. 4245
உலகிலே பெண் என்றால் பேயும் இரங்கும்.
உலகின்கண் இல்லததற்கு இல்லை பெயர்.
- (பழமொழி நானூறு.)
உலர்ந்த தலைக் கோலமும் ஓர்ப்படி பெற்ற பிள்ளையும் ஒட்டா.
உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை.
உலுத்தனுக்கு இரட்டைச் செலவு. 4250
உலையில் ஈ மொய்த்ததுபோல.
உலை வாய் மெழுகு உருகுவது போல.
உலை வாயை மூடினாலும் மூடலாம்; ஊர் வாயை மூட முடியாது.
உலை வைத்த சந்தியிலே சாறு காய்ச்சுகிறது.
உவர் நிலத்தில் இட்ட விதையும் சமரிடத்தில் சென்ற சேனையும் இரண்டாம் பட்சம். 4255
உழக்கில் கிழக்கு மேற்கு.
- (மேற்கா.)
உழக்கிலே கிழக்கு மேற்கு எது?
உழக்கிலே வழக்கு.
உழக்கு அரிசி ஆனாலும் ஓயாது மெல்லுவாள்.
உழக்கு உள்ளூருக்கு; பதக்குப் பரதேசிக்கு. 4260
உழக்கு உற்றாருக்கு; பதக்குப் பரதேசிக்கு.
உழக்கு உற்றாருக்கும் பதக்குப் பரதேசிக்கும் ஆனால் உழுதவனுக்கு என்ன?
உழக்கு உறிஞ்சப் போய்ப் பதக்குப் பன்றி கொண்டு போச்சுதாம்.
உழக்கு எண்ணெய் வாங்கி உழக்கு எண்ணெய் விற்றாலும் மினுக்கு எண்ணெய் மிச்சம்.
உழக்கு நெல்லுக்கு உழைக்கப் போய்ப் பதக்கு நெல்லைப் பன்றி தின்றதாம். 4265
- (தின்றது போல.)
உழக்கு மிளகு கொடுப்பானேன்? ஒளிந்திருந்து இளநீர் குடிப்பானேன்?
உழக்கு மிளகு கொடுப்பானேன்? ஒளிந்திருந்து மிளகு சாறு குடிப்பானேன்?
உழக்கு விற்றாலும் உரலுக்குப் பஞ்சமா?
உழக் குளிர் அடித்தால் நாற்றுப் பிடுங்கப்படாதா?
உழவன் மேட்டை உழுதால் அரசன் நாட்டை ஆளலாம். 4270
உழவனுக்கு உழவுக் கம்புதான் மிச்சம்.
உழவால் பயிர் ஆகிறது எருவாலும் ஆகாது.
உழவில் பகை ஆனால் எருவிலும் தீராது.
உழவிலே இல்லாவிட்டால் மழையிலே.
உழவிலே பகை எருவிலும் தீராது. 4275
உழவினும் மிகுந்த ஊதியம் இல்லை.
- (சிறந்த.)
உழவுக்குப் பகை எருவில் தீருமோ?
உழவின் பகை எருவிலும் தீராது.
உழவின்றி ஊதியம் இல்லை, உடையவன் இருந்தக்கால்.
உழவு அற உழுதவன் விளைவு அற விளையும். 4280
- (ஏற விளையும்.)
உழவு ஆள் மேற்கே பார்ப்பான்; கூத்தாடி கிழக்கே பார்ப்பான்.
உழவு உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும்.
உழவு ஏற உழுதால் நெல் ஏற விளையும்.
- (விளைவு அற விளையும்.)
உழவு ஒழிந்த மாடு பட்டிப் புறத்திலே.
உழவுக்கு ஏற்ற கொழு. 4285
உழவுக்கு ஒரு சுற்றும் வராது; ஊணுக்குப் பம்பரம்.
- (ஊணுக்கு முன்னே வரும். )
உழவுக்குப் பிணைத்து விடுகிற மாடும் கூட்டுக்குப் பிணைத்து விடுகிற ஆளும் உதவா.
- (சரி.)
உழவுக்கும் அக்கினி ஹோத்திரத்துக்கும் வெகு தூரம்.
உழவுக்கு மிஞ்சிய ஊதியம் இல்லை.
உழவு காலத்தில் ஊரை விட்டே போய்விட்டால், அறுப்புக் காலத்தில் ஆள் தேட வேண்டியதே இல்லை. 4290
உழவு குளிர அடித்தால் நாற்றுப் பிடுங்கப் படாதா?
உழவு நட்பு இல்லா நிலமும் மிளகு நட்பு இல்லாக் கறியும் வழ வழ.
உழவும் தரிசும் ஓரிடத்திலே; ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே.
உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலை போகாதா?
- (என்றால், ஊரிலே.)
உழவு மாடு ஊர் வெளியே போனாலும் அங்கேயும் ஏரில் பூட்டி அடிப்பார்கள். 4295
உழுகிற எருமையும் உள்ளூர் மருமகனும் ஒன்று.
உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுக்கிற காலத்தில் அரிவான் எடுத்துக் கொண்டு போனானாம்.
உழுகிற குண்டை ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா?
- (குண்டை-எருது.)
உழுகிறது ஓர் ஏர்; முன் ஏரை மறி என்றானாம்.
உழுகிறதை விட்டு உழவன் சாமி ஆடினானாம்.
உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தாற்போல். 4300
உழுகிற நாளில் ஊரை விட்டுப் போனால் அறுக்கிற நாளில் ஆள் தேட வேண்டாம்.
- (ஆள் தேவை இல்லை.)
உழுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளு; ஊர் சுற்றுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளா?
உழுகிற மாட்டை எருது நக்கினது போல.
உழுகிற மாட்டைக் கொம்பிலே அடித்தாற் போல.
உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற் போல. 4305
உழுகிற மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா?
- (போகும்.)
உழுகிற மாடு ஊருக்குப் போனால் ஏரும் கலப்பையும் எதிர்த்தாற் போல் வரும்.
உழுகிற மாடு பரதேசம் போனால் அங்கு ஒருவன் கட்டி உழுவான்; இங்கு ஒருவன் கட்டி உழுவான்.
உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழவுக் கோலும் மிஞ்சாது. 4310
- (உழக்கு நெல்லும்.)
உழுகிறவன்தான் வைக்கோல் போட வேண்டும்.
உழுகிறவனுக்குத்தான் தெரியும், உடம்பு வருத்தம்.
உழுத எருது ஆனாலும் ஒரு முடி நாற்றைத் தின்ன ஒட்டார்.
- (ஒரு முடி தின்னவிடார்.)
உழுத காலாலே உழப்பி விடு.
உழுத சேறு காய்ந்தால் உழக்கு நெல் காணாது. 4315
உழுத மாடு ஊருக்குப் போனால் அங்கும் ஒருசால் அடித்துக் கொண்டானாம்.
- (அடித்துக் கட்டி உழுதானாம்.)
உழுத மாடு பரதேசம் போச்சாம்; அங்கும் ஒரு சால் கட்டி உழுதானாம்.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது.
- (உழவுகோல் கூட மிச்சம் இல்லை.)
உழுதவன் காட்டைப் பார்; மேய்த்தவன் மாட்டைப் பார்.
உழுதவன் கெட்டது இல்லை. 4320
உழுது இல்லாது உலகில் ஒன்றும் செல்லாது.
- (இல்லாதது.)
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை ஒரு காலும்.
உழுது உப்பு விதைத்து விடுவேன்.
உழுது உலர்ந்தது பழுது ஆகாது.
உழுது உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும். 4325
உழுது பிழைக்கிறவன் ஒரு கோடி; ஏய்த்துப் பிழைக்கிறவன் ஏழு கோடி.
உழுந்து அரைத்த அம்மி போல.
உழுபவன் ஊர்க்கணக்குப் பண்ணுவானோ?
உழுபவன் ஏழை ஆனால் எருதும் ஏழைமை முறை கொண்டாடும்.
உழுபவன் கணக்கு எடுத்தால் உழவுக் கோலும் மிஞ்சாது. 4330
உழுவார் உலகத்துக்கு ஆணி.
உழுவார் கூலிக்கு அழுவார்.
உழுவாரைப் பார்த்தாலும் பார்க்கலாம்; உண்பாரைப் பார்க்க மனம் தாங்காது.
உழுவானுக்கு ஏற்ற கொழு; ஊராருக்கு ஏற்ற தொழு.
உழுவோர் உழைப்பால்தான் உலகோர் பிழைப்பார். 4335
உழைக்காத உடம்பு உரம் கொள்ளாது.
உழைக்கிற கழுதை எந்நாளைக்கும் உழைத்தே தீர வேண்டும்.
- (என்றைக்கும்.)
உழைத்த அளவுக்கு ஊதியம்.
உழைப்பவன் ஒரு கோடி; உண்பவன் ஒன்பது கோடி.
உழைப்பாளி சுகம் அடைந்தால் வரப்பு ஏறிப் பேளமாட்டான். 4340
- (ஏறுவானா.)
உழைப்புக்கு ஊர்க்குருவி; இழைப்புக்கு வான் குருவி.
உழைப்புக்குத் தகுந்த ஊதியம்.
உள் ஆள் இல்லாமல் கோட்டை அழியாது.
உள் ஆளும் கள்ளாளும் கூட்டமா?
உள் இருந்தாருக்குத் தெரியும் உள் வருத்தம். 4345
உள் இருத்து கள்வன் உளவறிந்து செய்வான்.
உள் எல்லாம் புண்ணும் உடம்பெல்லாம் புண்ணுமாய் இருக்கிறான்.
உள் சுவர் இருக்கப் புறச்சுவர் பூசுவார் போல.
- (ஈஷுவார் போல.)
உள் சுவர் இருக்கப் புறச்சுவர் மண் இட்டு, பிள்ளை பெற்றவள் இருக்கப் பீத்துணியை மோந்து பார்த்தாளாம்.
உள் சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று. 4350
உள் நாக்கும் தொண்டையும் அதிர அடித்தது போல.
உள் வீட்டிலே கீரையை வைத்துக்கொண்டு அயல் வீட்டுக்குப் போவானேன்?
உள் வீட்டுக் கடனும் உள்ளங்கைச் சிரங்கும் கெட்டவை.
உள்ள அன்றுக்கு ஓணம்; இல்லாத அன்றைக்கு ஏகாதசி.
உள்ளக் கருத்து வள்ளலுக்குத் தெரியும். 4355
உள்ளங்கால் வெள்ளெலும்பு தேய உழைத்தான்.
- (ஆட உழைத்தான்.)
உள்ளங் காலில் முள்ளுத் தைக்காமல் இருக்க வேண்டும்.
உள்ளங்கை நெல்லிக் கனி போல.
உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கையை நக்கினது போல.
உள்ளங் கைப் புண்ணுக்குக் கண்ணாடி ஏன்? 4360
- (பூணுக்கு.)
உள்ளங்கையில் அஞ்சு கொண்டை முடிக்கிறேன்.
உள்ளங்கையில் இட்டவர்களை உள்ளளவும் நினை.
உள்ளங்கையில் இட்டுப் புறங்கையை நக்குவதா?
உள்ளங்கையில் உப்பிட்டாரை உள்ளளவும் நினை.
உள்ளங்கையில் தேனை வைத்துப் புறங்கையை நக்கினாற் போல. 4365
உள்ளங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா?
உள்ளங்கையில் ரோமம் முளைத்ததாயின் அறிவிலான் அடங்குவான்.
உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுகிறேன்.
உள்ளத்தில் ஒன்றும் குறையாது, கள்ளம் இல்லா மனத்தார்க்கு.
உள்ளத்தில் கள்ளமும், உதட்டில் வெல்லமும். 4370
உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும்.
உள்ளத்துக்கு ஒன்றும் இல்லை; குப்பத்துக்கு ஆள் தள்ளு என்றானாம்.
உள்ளதுக்குக் காலம் இல்லை.
உள்ளது குற்றம் ஒரு கோடி ஆனாலும் பிள்ளைக்கும் தாய்க்கும் பிணக்கு உண்டோ?
உள்ளது குறைவதும் நிறைவதும் ஊழ்வினை. 4375
- (உழவினை.)
உள்ளது சொல்ல ஊரும் அல்ல; நல்லது சொல்ல நாடும் அல்ல.
உள்ளது போகாது; இல்லது வராது.
உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணு!
- (உள்ளதும் கெட்டதடா.)
உள்ளதும் போச்சு, பிள்ளை பள்ளிக்கூடம் போய்.
உள்ளதைச் சொல்லி ஊரை விட்டு ஓடு. 4380
உள்ள தெய்வங்களை எல்லாம் ஒருமிக்க வருந்தினாலும் பிள்ளை கொடுக்கிற தெய்வம் புருஷன்.
உள்ளதை எல்லாம் விற்று உள்ளான் மீனைத் தின்று பார்.
உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம்.
உள்ளதைக் கொண்டுதான் ஊராள வேண்டும்,
உள்ளதைச் சொல்லு; உலகத்தை வெல்லு. 4385
உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பகை.
- (சொன்னால் ஊருக்குப் பொல்லாதவன்.)
உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.
உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல்.
உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண் ஆகும்.
உள்ளதைச் சொன்னால் உறவு அற்றுப் போகும். 4390
உள்ளதைச் சொன்னால் எல்லோருக்கும் பகை.
உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்கு நோப்பாளமாம்.
- (கண்ணனுக்கு.)
உள்ளதையும் கெடுத்தாள், உதறு காலி வந்து.
உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.
- (நொள்ளைக் கண்ணன்.)
உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு. 4395
உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறான்.
உள்ளம் அறியாத கள்ளம் இல்லை.
உள்ளம் எல்லாம் புண்ணும் உடம்பெல்லாம் கொப்புளமும்.
உள்ளம் களிக்கக் கள் உண்டு கலங்காது.
உள்ளம் தீ எரிய உதடு தேன் சொரிய. 4400
- (பழம்.)
உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்.
- (பழமொழி நானூறு.)
உள்ள மயிருக்கு எண்ணெய் இல்லை; சுற்றுக் குடுமிக்கு எண்ணெய் ஏது?
உள்ள மாற்றைக் காட்டும், உரை கல்லும் மெழுகுண்டையும்.
உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும்; இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.
உள்ளவனிடம் கள்ளன் போனாற் போல. 4405
உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிற மட்டும் திருடலாம்.
உள்ளி இட உள்ளி இட உள்ளே போச்சுது.
உள்ளிக்கு நாற்றம் உடந்தை.
உள்ளிப் பூண்டுக்கு எத்தனை வாசனை கட்டினாலும் துர்க்கந்தத்தையே வீசும்.
உள்ளிய தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும். 4410
உள்ளுக்குள்ளே கொட்டின தேளே, ஒரு மந்திரம் செய்கிறேன் கேளே.
உள்ளூர் ஆண்டி காத்தாண்டி; நீ பீத்தாண்டி.
உள்ளூர்க் குளம் தீர்த்தக் குளம் ஆகாது.
உள்ளூர்க் குறுணியும் சரி; அசலூர்ப் பதக்கும் சரி.
உள்ளூர்ச் சம்பந்தம் உள்ளங்கைச் சிரங்கு போல. 4415
உள்ளூர்ச் சம்பந்தியும் உள்ளங்கைப் புண்ணும் ஒரே மாதிரி.
உள்ளூர்ப் பகையும் உலகத்துக்கு உறவும்.
உள்ளூர்ப் பிறந்தகமோ? உள்ளங்கைப் புண்ணோ?
உள்ளூர்ப் புலி, வெளியூர் எலி.
உள்ளூர்ப் பூனை, அசலூர் ஆனை. 4420
உள்ளூர்ப் பெண்ணும் அசலூர் மண்ணும் ஆகா.
உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் ஒன்று.
- (சரி.)
உள்ளூர் மேளம்.
உள்ளூரான் தண்ணீர்க்கு அஞ்சான்; அயலூரான் பேய்க்கு அஞ்சான்.
உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் அயலூரில் ஆனை பிடிக்கப் போகிறானாம். 4425
உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளையம் சென்று உடும்பு பிடிப்பானா?
உள்ளூரில் பூனை பிடிக்காதவன் அசலூரில் ஆனை பிடிப்பானா?
உன்ளூரில் விலைப்படாத மாடா வெளியூரில் விலைப்படும்?
உள்ளூருக்கு ஆனை, அயலூருக்குப் பூனை.
உள்ளூறக் கொட்டின தேளே, ஒரு மந்திரம் சொல்கிறேன் கேளே. 4430
உள்ளே இருக்கிற பூபம்மா, பிள்ளை வரம் கேளம்மா.
உள்ளே இருக்கும் சாமி உண்டைக்கட்டி, உண்டைக்கட்டி என்கிறது; வெளியிலே இருக்கும் சாமி தத்தியோன்னம். தத்தியோன்னம் என்கிறதாம்.
உள்ளே பகையும் உதட்டிலே உறவும் கள்ளம் இல்லா மனசுக்கு ஏன்?
உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா?
உள்ளே பார்த்தால் ஓக்காளம்; வெளியே பார்த்தால் மேற்பூச்சு. 4435
- (டம்பம்.)
உள்ளே போனால் பிணம்; மேலே வந்தால் பணம்.
- (கோலார் தங்க வயலில்.)
உள்ளே வயிறு எரிய, உதடு பழம் சொரிய.
உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?
உளவு இல்லாமல் களவு இல்லை.
- (நடக்குமா?)
உளவு போல இருந்து குளவி போலக் கொட்டுகிறதா? 4440
உளறிக் கொட்டிக் கிளறி மூடாதே.
உளி எத்தனை? மலை எத்தனை?
உளுவைக் குஞ்சுக்கு நீஞ்சக்கற்றுக் கொடுக்க வேண்டுமா?
உளுவைக் குட்டிக்கு ராய பாரமா?
உளை வழியும் அடைமழையும் பொதி எருதும் ஒருவனுமாய் அலைகிறான். 4445
உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.
உற்ற கணவனும் ஒரு நெல்லும் உண்டானால் சித்திரம் போலே குடிவாழ்க்கை செய்யலாம்.
உற்ற சிநேகிதன் உயிருக்கு அமிர்தம்.
உற்றது சொல்ல ஊரும் அல்ல; நல்லது சொல்ல நாடும் அல்ல.
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும் 4450
- (பாரதம்.)
உற்ற பேர்களைக் கெடுக்கிறதா?
உற்றார் உதவுவரோ? அன்னியர் உதவுவரோ?
உற்றார்க்கு ஒரு பிள்ளை கொடான்; நமனுக்கு நாலு பிள்ளை கொடுப்பான்.
உற்றார் தின்றால் புற்றாய் விளையும்; ஊரார் தின்றால் போராய் விளையும்.
- (வேறாய் விளையும், பேறாய் விளையும்.)
உற்றாருக்கு ஒரு மாசம்; பகைத்தாருக்குப் பத்து நாள். 4455
உற்றாருக்கு ஒன்று கொடான்; பகைவருக்கு நாலும் கொடுப்பான்.
- (ஒரு பிள்ளை, நாலு பிள்ளை.)
உற்றுப் பார்க்கில் சுற்றம் இல்லை.
உற்றுப் பார்த்த பார்வையிலே ஒன்பது பேர் பட்டுப் போவார்.
- (பார்த்தால்.)
உறக்கத்தில் காலைப் பிடிப்பது போல.
உறக்கம் சண்டாளம். 4460
உறங்காப் புளி, ஊறாக் கிணறு, காயா வருளம், தோரா வழக்குத் திருக்கண்ணங்குடி.
- (தீரா வழக்கு, தேறா வழக்கு.)
உறங்கின நரிக்கு உணவு கிட்டாது.
உறவிலே நஞ்சு கலக்கிறதா?
உறவிலே போகிறதைவிட ஒரு கட்டு விறகிலே போகலாம்.
- (வேவதைவிட, வேகலாம்.)
உறவு உண்ணாமல் கெட்டது; உடை உடுக்காமல் கெட்டது. 4465
உறவு உறவுதான்; மடியிலே கைவைக்காதே.
உறவுக்கு ஒன்பது படி; ஊருக்குப் பத்துப் படி.
உறவுக்கு ஒன்பது படி; பணத்துக்குப் பத்துப் படி.
உறவுக்கும் பகைக்கும் பொருளே காரணம்.
- (துணை.)
உறவுதான்; பயிரிலே கை வாயாதே. 4470
உறவுதானே உணர்ந்து கொள்ளும்.
உறவு போகாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
உறவுபோல் இருந்து குளவிபோல் கொட்டுகிறதா?
உறவும் பகையும் ஒரு நிலை இல்லை.
உறவும் பாசமும் உதட்டோடே. 4475
உறவு முறையான் மூத்திரத்தை உமிழவும் முடியாது; விழுங்கவும் முடியாது.
உறவு முறையான் வீட்டில் உண்ட வரைக்கும் மிச்சம்.
உறவைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே.
உறவைப்போல் இருந்து குளவியைப்போல் கொட்டுவர்.
உறள் பால தீண்டா விடுவது அரிது. 4480
- (பழமொழி நானூறு.)
உறி அற மூளி நாய்க்கு வேட்டை.
உறிப் பணம் போய்த் தெருச் சண்டை இழுக்கிறது.
- (இழுத்தாளாம்.)
உறியிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே.
உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் அலைவானேன்?
உறியிலே தயிர் இருந்தால் உறங்குமோ பூனைக்குட்டி? 4485
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன்.
உறுதி எதிலும் பெரிது.
உறுதியான் காரியம் ஒரு போதும் கெடாது.
உறு தீங்குக்கு உதவாதவன் உற்றவனா?
உறை மோருக்கு இடம் இல்லாத வீட்டில் விலை மோருக்குப் போனது போல. 4490
உன் அப்பன்மேல் ஆணை; என்மேலே ஆசையாய் இருக்க வேண்டும்.
உன் இழவு எடுக்க.
உன் உத்தமித் தங்கை ஊர் மேயப் போனதால் என் பத்தினிப் பானை படபட என்கிறது.
உன் உபசாரம் என் பிராணனுக்கு வந்தது.
உன் உயிரினும் என் உயிர் கருப்பட்டியா? 4495
உன் எண்ணத்தில் இடி விழ.
உன் எண்ணத்தில் எமன் புகுத.
உன் காரியம் முப்பத்திரண்டிலே .
உன் காலை நீயே கும்பிட்டுக் கொள்ளாதே.
உன் குதிரை குருடு; ஆனாலும் கொள்ளுத் தின்பது கொள்ளை. 4500
உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்.
- (திருவாசகம்.)
உன் கொண்டை குலைய.
உன் சமர்த்திலே குண்டு பாயாது.
உன் சொல்லிலே உப்பும் இல்லை; புளியும் இல்லை.
உன் தலையில் எழுதி மயிரால் மறைத்து விட்டான் ஆண்டவன். 4505
உன் தாலி அறுக்கச்சே ஒரு கட்டுத் தாலி ஒருமிக்க அறுக்க வைக்கிறேன்.
உன் தாலி அறுந்து தண்ணீர்ப் பானையில் விழ.
உன் தொடையைப் பாம்பு பிடுங்க.
- (தொண்டையை.)
உன் நெஞ்சில் தட்டிப் பார்.
- (தொட்டுப்பார்.)
உன் பாடு கொள்ளைதானே? 4510
உன் பாடு யோகம்.
உன் பிள்ளையைத் தின்று தண்ணீர் குடிக்க.
உன் பெண்சாதி தாலி பிணத்தின்மேல் விழ.
உன் பொங்கு மங்க.
உன்மத்தம் பிடித்தது போல. 4515
உன் மதம் மண்ணாய்ப் போக.
உன் மஹலூத்தைக் கேட்டுக் காது புளிச்சாறு மாதிரி புளித்துப் போயிற்று.
- (முஸ்லீம் வழக்கு, மஹலூத்-காலக்ஷேபம்.)
உன் முகத்தது தஞ்சாவூர் மஞ்சளா?
உன் முறுக்குத் திறுக்கு எல்லாம் என் உடுப்புக்குன்ளே.
உன் வண்டவாளம் எல்லாம் எனக்குத் தெரியும். 4520
- (வெளிப்பட்டுப் போச்சு.)
உன் வாயில் நாகராஜா பிரசாதத்தைத்தான் போடவேணும்.
- (நாகர்கோயிலில் மண் பிரசாதம்.)
உன் வாயிலே சீதேவி.
உன் வாயிலே மண் விழ.
உன் வீடு இருக்கிற அழகுக்கா விழித்துக் கொண்டிருக்கிறாய்?
உன்ன ஓராயிரம்; பன்னப் பதினாயிரம். 4525
உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய்.
உன்னுடைய கர்வத்தால் ஓதுகிறாய் சூதும் வாதும்.
உன்னை அடித்துப் போட்டால் பத்துக் காணிக்கு எரு ஆகும்.
- (அறுத்து. )
உன்னை அள்ளத் துள்ளிக்கொண்டு போக.
உன்னை ஒண்டிப் பாடை கட்ட. 4530
உன்னைக் கடலிலே கை கழுவினேன்.
உன்னைக் கேடு அடிக்க.
உன்னைக் கொடுத்து என்னை மறந்தேன்.
உன்னைக் கொடுப்பேனோ ஒரு காசு; உன்னோடே போச்சுது புரட்டாசி.
உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கிளி? நீ சுமை சுமந்தல்லவோ கூனிப்போனாய்? 4535
உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடும் இல்லை.
- (கைவல்ய நவநீதம்.)
உன்னைப் பாடையிலே வைத்துப் பயணம் இட,
உன்னைப் பிடி, என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி,
உன்னைப் பிடி, என்னைப் பிடி என்று ஆய் விட்டது.
உன்னைப் பிழிந்தெடுத்துப் போடுவேன். 4540
உன்னையும் என்னையும் ஆட்டுகிறது மன்னி கழுத்துச் சிறு தாலி.
உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே.
உன்னை வாரிக் கொண்டு போக.
உன்னை வெட்டிப் பலி போட.
உன்னோடே பிறந்ததில் மண்ணோடே பிறக்கலாம். 4545
- (பிறப்பதில்.)
உனக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு; பார்க்கிறேன் ஒரு கை.
உனக்கு இருக்கிற கஞ்சியை எனக்கு வார்; பசியாமல் இருக்க வரந் தருகிறேன் என்ற கதை.
உனக்கு உட்பட்டும் பின்பாட்டுப் பாடுகிற மனிதர்கள் போல.
உனக்கு என்ன, கொம்பு முளைத்திருக்கிறதோ?
உனக்கு ஒட்டுத் திண்ணைபோல் இருக்கிறான். 4550
உனக்குக் கொடுப்பேனோ ஒரு காசுl; நேற்றோடு போச்சு புரட்டாசு.
- (புரட்டாசி.)
உனக்கு நான் அபயம்; எனக்கு நீ அபயம்.
- (யான்.)
உனக்குப் போடும் தண்டத்தை நாய்க்குப் போட்டாலும் வாலையாவது ஆட்டும்.
உனக்கும் பெப்பே; உங்கள் அப்பனுக்கும் பெப்பே.
உனக்கு மழை பெய்யும், எனக்கு நீர் தா என்றானாம். 4555
உனக்கு முதுகு வளைகிறதா?