தமிழ்ப் பழமொழிகள் 1/ஐ

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஐங்கலக் கப்பியில் நழுவின கப்பி.

ஐங்காதம் போவதற்கு அறிமுகம் தேவை. 5745

(ஐங்காதம் போனாலும் அறிமுகம் வேண்டும்.)

ஐங்காதம் போனாலும் அகப்பை அரைக் காசு.

ஐங்காதம் போனாலும் தன் நிழல் தன்னுடன்தானே வரும்?

ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.

ஐங்காதம் போனாலும் தன் பாவம் தொலையாது.

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச் சுரைக்காய்க்கு. 5750

(தன் காரம்.)

ஐங்காயம் இட்டு அவரைப் பருப்பு இட்டாலும் தன் நாற்றம் போகாது பேய்ச் சுரைக்காய்.

ஐதது நெல்லு; அடர்ந்தது சுற்றம்.

ஐதர் அலி என்றால் அழுத பிள்ளையும் வாய் மூடும்;

ஐதர் காலம்.

ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை. 5755

ஐந்தும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு.

ஐந்து வயதில் ஆதியை ஓது.

ஐந்து வருஷம் கொஞ்சி வளர்; பத்து வருஷம் அடித்து வளர்; பதினாறு வருஷம் தலைக்கு மேல் பழகி வளர்.

ஐந்து விரலும் ஐந்து கன்னக்கோல்.

ஐந்து விரலும் ஒன்று போல இருக்குமா? 5760

ஐந்துாரான் புஞ்சை போல.

ஐப்பசி அடை மழை; கார்த்திகை கடு மழை.

ஐப்பசி அழுகல் தூற்றல்.

ஐப்பசி அறக் காய்ந்தால் அண்ணன் இட்ட பயிரும் சரி; தம்பி இட்ட பயிரும் சரி.

ஐப்பசி அறக் காய்ந்தால் ஆடு ஒரு மாடு; மாடு ஒரு மலை. 5765

ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லா விட்டால் அண்ணனுக்கும் சரி, தம்பிக்கும் சரி.

ஐப்பசி தலை வெள்ளமும் கார்த்திகை கடை வெள்ளமும் கெடுதி.

ஐப்பசி நட்ட கரும்பு ஆனை வால் ஒத்ததாம்.

ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் நெல் ஆகாது.

ஐப்பசிப் பிறை கண்ட வேளாளா, கைப்பிடி நாற்றைக் கண்டு கரையேறு. 5770

(கைப்பாதி கொண்டு.)

ஐம்பசிப் பணி அத்தனையும் மழை.

(அப்போதே மழை.)

ஐப்பசி மருதாணி அரக்காகப் பற்றும்.

ஐப்பசி மாதத்தில் சம்பா நட்டால் ஆனைக் கொம்பு முளைக்கும்.

ஐப்பசி மாதத்து எருமைக் கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி.

ஐப்பசி மாதத்து நடவும் அறுபது பிராயத்திற் பிள்ளையும். 5775

(பயன் இல்லை.)

ஐப்பசி மாதத்து நாற்றை அருகில் சாத்து.

ஐப்பசி மாதத்து வெயிலில் அன்று உரித்த தோல் அன்றே காயும்.

ஐப்பசி மாதம் அடை மழை.

ஐப்பசி மாதம் அழுகைத் துாற்றல்; கார்த்திகை மாதம் கனத்த மழை.

(அழுகல் தூற்றல்; அடை மழை.)

ஐப்பசி மாதம் பசு கறக்குமுன் பன்னிரண்டு பாட்டம் மழை. 5780

ஐப்பசி மேல்காற்று அப்போதே மழை.

ஐப்பசி விதைப்பாட்டிற்கு ஐயப்பாடு இல்லை.

ஐப்பசி வெள்ளாமை அரை வெள்ளாமை.

ஐ பை சுரைக்காய பக்கா நெய், வெள்ளைக்காரன் கப்பலிலே தீயைக் கொளுத்தி வை.

(நாஞ்சில் வழக்கு.)

ஐம்பதாம் பிராயத்திலே கருக்கோலை கட்டிச் சாகிற காலத்தில் பிச்சோலை கட்டினாளாம். 5785

(அருக்கோலை கட்டி.)

ஐம்பதிலே அறிவு; அறுபதிலே அடக்கம்; அதற்கு மேல் ஒன்றும் இல்லை.

ஐம்பதுக்கு மேலே மண் பவழம் கட்டுகிறதா?

ஐம்பது வந்தாலும் அவசரம் கூடாது.

ஐம்பது வயசிலே ஆண்பிள்ளைக்கு மறு மகிழ்ச்சி.

ஐம்பது வயசு ஆனவனுக்கு அஞ்சு வயசுப் பெண்ணா? 5790

ஐம்பது வயசு ஆனவனுக்கு அரிவை ஏன்?

ஐயங்கார் அம்மானையில் சறுக்கினார்.

(ஐயங்கார்-பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.)

ஐயங்காரும் தத்துக் கொடுப்பார்.

(தொத்து.)

ஐயங்காரைக் கெடுத்தவள் ஐயங்காரிச்சி, தாதச்சியைக் கெடுத்தவன் தாதன்.

ஐயப்பட்டால் பைய நட. 5795

ஐயப்பன் குதிரையை வையாளி விட்டாற் போல.

(விட்ட கதை.)

ஐயப்பா கையை விடு.

ஐயம் ஆன காரியத்தைச் செய்தல் ஆகாது.

ஐயம் உண்டானால் பயம் உண்டு.

ஐயம் ஏற்றும் அறிவே ஓது. 5800

ஐயம் தீர்ந்தும் நெஞ்சு ஆறவில்லை.

ஐயம்பேட்டைத் துலுக்கன் போல்.

(வலுச்சண்டைக்கு வருவான்.)

ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார்கள் இடம் கொடார்கள்.

ஐயர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான்.

ஐயர் உருள; அம்மை திரள. 5805

ஐயர் என்பவர் துய்யர் ஆவர்.

ஐயர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை.

ஐயர் தின்னும் பருப்பு ஐந்து குடி கெடுக்கும்.

ஐயர் பாதி, அரண்மனை பாதி.

(புதுக்கோட்டையில்.)

ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா? 5810

ஐயருக்கு அரை வார்த்தை சொல்; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே.

ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக் கூடாது.

ஐயன் அளந்த படி.

ஐயன் பாழியில் ஆனை போர்க்கு உதவுமோ?

ஐயனார் கோயில் ஆனையைப் போல. 5815

ஐயனார் கோயில் செங்கல் அத்தனையும் பிடாரி.

(தெய்வம்.)

ஐயனார் கோயில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திர காளி.

(அடிமண்ணை மிதித்தவர், அத்தனை பேரும் பிடாரி.)

ஐயனார் கோயிலிலே ஆனை பிடிக்க வேண்டும்.

ஐயனார் படையில் குயவனார் பட்டது போல.

ஐயனாரே வாரும்; கடாவைக் கொள்ளும். 5820

ஐயா, ஐயா, அம்மா குறைக் கேழ்வரகும் அரைக்க வரச் சொன்னாள்.

ஐயா கதிர் போல; அம்மா குதிர் போல.

ஐயாசாமிக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு.

(ஐயாத்துரைக்கு.)

ஐயா சொல்படி காலைக் கிளப்படி.

ஐயாட்டுக் கிடைக்குச் சமம் தை உழவு. 5825

ஐயாத்துரைக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே; வெற்றிலை பாக்குக் கடையிலே; சுண்ணாம்பு சூளையிலே.

(கொட்டு முழக்கு.)

ஐயா தாசி கவனம் பண்ண, அஞ்சாளின் சுமையாச்சு.

ஐயா நாளிலே அம்மா மூடு பல்லக்கு ஏறினாள்.

ஐயா நூற்பது அம்பியின் அரைஞாண் கயிற்றுக்கும் ஆகாது.

ஐயா பாட்டுக்கு அஞ்சடியும் ஆறடியும் தாண்டும். 5830

ஐயாவுக்கு வித்தை இல்லை; அம்மாளுக்குக் கர்வம் இல்லை.

ஐயா வீட்டுக் கூழுக்கு அப்பணையங்கார்த் தாதாவா?

ஐயாவைத் தவிர ஆனைதாண்டவ புரத்தார் அத்தனை பேரும் அயோக்கியர்கள்.

ஐயா வையர் கூழுக்கு அப்பையங்கார் தாதாவா?

ஐயைந்தில் பிறத்த பிள்ளையும் தை ஐந்தில் நட்ட நடவும். 5835

ஐயோ என்றால் ஆறு மாசத்துப் பாவம் சுற்றும்.

ஐயோ பாவ மென்றால் கையோடே.

ஐவருக்கும் தேவி, அழியாத பத்தினி,

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_1/ஐ&oldid=1481913" இருந்து மீள்விக்கப்பட்டது