தமிழ்ப் பழமொழிகள் 3/1
செக்கானிடம் சிக்கின மாடும் பார்ப்பானிடம் சிக்கிய ஆளும் உருப்படமாட்டார்கள்.
- (உருப்படவே முடியாது.)
செக்கில் அரைபட்ட எள்ளுப் போல.
செக்கில் அரைபட்ட எள் திரும்ப முழுசு ஆகுமா? 11210
செக்கில் அரைபட்ட தேங்காய் பிண்ணாக்கு ஆவது போல.
- (பிண்ணாக்கைப் போல.)
செக்கு அடிக்கும் தம்பூருக்கும் ஒத்து வருமா?
செக்கு அடி முண்டம் போல உட்கார்ந்திருக்கிறான்.
செக்கு அடி முத்தி, எனக்கு என்ன புத்தி?
செக்கு அளவு பொன் இருந்தாலும் செதுக்கி உண்டால் எத்தனை நாளுக்குக் காணும்? 11215
- (செதுக்குத் தின்னக் குறையும். செக்குப் போல.)
செக்கு உலக்கைபோல் நிற்கிறான்.
செக்கு உலக்கையை விழுங்கினவனுக்குச் சுக்குக் கஷாயம் மருந்து ஆமா?
- (தின்றவனுக்கு சுக்குக் கஷாயம் குடித்தாற் போல)
செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியாதா?
செக்குக் கண்ட இடத்தில் எண்ணெய் தேய்த்துச் சுக்குக் கடை இடத்தில் பிள்ளை பெறுவது.
- (தலை முழுகிப் பிள்ளை பெறலாமா?)
செக்குக்கு ஏற்ற சிவலிங்கம். 11220
செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன்.
செக்குக்கு மாடு கொடுத்தாலும் கொடுக்கலாம்; சீவலப்பேரியில் பெண் கொடுக்கக் கூடாது.
செக்கு நக்குகிற தம்பிரானே, உன் திருவடிக்குத் தண்டம்; அந்தண்டை நக்குடா பிள்ளாய்; ஐசுவரியம் பெருகி இருப்பாய்,
செக்கு நக்குகிற தம்பிரானே, தண்டம்; நீ தென்புறம் நக்கு; நான் வடபுறம் நக்குகிறேன்.
செக்கும் சிவலிங்கமும் தெரியாதா? 11225
செக்குமாட்டைக் கவலையிலே கட்டினாற் போல.
செக்குமாடு போல் உழைக்கிறான்.
செக்கை நக்குகிற தம்பிரானே, தண்டம், நீ தென்புறம் நக்கு;நான் உட்புறம் நக்குகிறேன்.
செக்கை வளைய வரும் எருதுகளைப் போல்.
செக்கை விழுங்கிவிட்டுச் சுக்குத் தண்ணீர் குடித்தாற் போல. 11230
செங்கதிர் முன்னே வெண்கதிர் அடங்கினது போல.
செங்கோல் அரசனே தெய்வம் ஆவான்.
செங்கோல் ஓங்குபவன் திரித்துவத் தேவன்.
செங்கோல் கோணினால் எங்கும் கோணும்.
செங்கோலுக்கு முன் சங்கீதமா? 11235
செஞ்சி அழிந்தது; சென்னை வளர்ந்தது.
- (சென்னப் பட்டணம் தோன்றியது.)
செட்டிக்கு இறுத்துப் பைக்கும் இறுத்தேன்.
- (+ துலுக்கச்சிக்கு எதற்கு உருக்கு மணி!)
செட்டிக்கு உறக்கம் உண்டு; வட்டிக்கு உறக்கம் இல்லை.
செட்டிக்கு எதற்குச் செம்புச் சனியன்?
செட்டிக்கு ஏன் சென்மச் சனியன்? 11240
செட்டிக்கு ஒரு சந்தை; திருடனுக்கு ஓர் அமாவாசை.
செட்டிக்கு ஒரு தட்டு; சேவகனுக்கு ஒரு வெட்டு.
செட்டிக்குத் தெற்குச் செம்புச் சனியன்.
செட்டிக்கும் பயிருக்கும் சென்மப் பகை.
செட்டிக்கும் மட்டிக்கும் சென்மப் பகை. 11245
செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை.
செட்டி கப்பலுக்குச் செந்தூரான் துணை.
- (காப்பு.)
செட்டிகள் மாடு மலை ஏறி மேயுமா?
செட்டி கூடிக் கெட்டான்; சேணியன் பிரிந்து கெட்டான்.
செட்டி கெட்டால் பட்டு உடுத்துவான். 11250
- (கெட்டும். உடுப்பான்.)
செட்டி கொடுத்துக் கெட்டான்.
செட்டி சிதம்பரம்,
செட்டி சுற்றாமல் கெட்டான்; தட்டான் தட்டாமல் கெட்டான்.
செட்டி நீட்டம் குடி தலையிலே.
செட்டி நட்டம் தட்டானில்; தட்டான் நட்டம் ஊர்மேலே. 11255
- (யாழ்ப்பாண வழக்கு.)
செட்டிப் பிள்ளையோ? கெட்டிப் பிள்ளையோ!
செட்டி பட்டினி, கால்பணம் சொட்டினான்.
செட்டி படை வெட்டாது; செத்த பாம்பு கொத்தாது.
செட்டி படை வெல்லுமா? சேற்றுத் தவளை கடிக்குமா?
செட்டி பணத்தைக் குறைத்தான்; சேணியன் நூலைக் குறைத்தான். 11260
- (காலை.)
செட்டி பிள்ளை கெட்டி.
செட்டி புறப்படப் பட்டணம் முடியும்.
செட்டி போன இடம் எல்லாம் வட்டம் காற்பணம்.
செட்டி மகன் கப்பலுக்குச் செந்துாரான் துணை.
செட்டி முறை எட்டு முறை; எட்டு முறையும் கெட்ட முறை. 11265
- (நாஞ்சில் நாட்டு வழக்கு.)
செட்டியார் கப்பலுக்குத் தெய்வமே துணை.
- (செந்துாரான்.)
செட்டியார் பிணம் சீத்தென்று போயிற்று.
செட்டியார் பிள்ளை செல்லப் பிள்ளை ஆனால் படைக்குப் போகிற நாயக்கரைப் பயமுறுத்தலாமா?
செட்டியார் மிடுக்கா? சரக்கு மிடுக்கா?
- (முடுக்கா? + அம்மி முடுக்கா, அரைப்பு முடுக்கா?)
செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும். 11270
- (செத்தால்தான்.)
செட்டியாருக்கு ஒரு காலம்; சேவகனுக்கு ஒரு காலம்.
செட்டியாரே, செட்டியாரே என்றால் சீரகம் பண எடை முக்காற் பணம் என்கிறான்.
செட்டியாரே, செட்டியாரே என்றால் சீரகம் மணக்கிறது என்பாள்.
செட்டியாரே, வாரும்; சந்தையை ஒப்புக் கொள்ளும்.
செட்டியும் தட்டானும் ஒன்று; கட்டிப் புரண்டாலும் தனி. 11275
செட்டியை நீலி தொடர்ந்தது போல.
- (நீலி கதை.)
செட்டி வீட்டில் பணம் இருக்கிறது; ஆல மரத்தில் பேய் இருக்கிறது.
செட்டி வீட்டு நாய் சேர் காத்திருந்தது போல.
செட்டி வீட்டு நாயும் கணக்குப் பார்த்துக் கடிக்கும்.
செட்டி வெள்ளரிக்காய் என்றால் நரி நொட்டை விட்டுத் தின்னுமாம். 11280
- (சொட்டாங்கு விட்டு.)
செட்டுக்கு ஒரு தட்டு; தேவடியாளுக்கு ஒரு மெட்டு.
செட்டும் கட்டுமாக வாழ்ந்தான்.
செடி இல்லாத குடி போல.
செடி கண்டு பேளாதான் வாழ்க்கை தடி கொன்ட நாயோடு ஒக்கும்.
செடியில் இருக்கிற ஓணானை மடியில் கட்டிக் கொண்டு குடைகிறது குடைகிறது என்றாள். 11285
செடியில் வணங்காதது மரத்தில் வணங்குமா?
செடியை வைத்துக் கொண்டு விலை கூறலாமா?
செண்ணூருக்குப் போகிறேன்; செம்மை உண்டா என்ற கதை.
செத்த அன்று வா என்றால் பத்தன்று வருவான்.
- (என்று சொன்னால் பத்தாம் நாள் வருவான்.)
செத்த ஆட்டுக்குக் கண் பெரிது; தாய் இல்லாப் பிள்ளைக்கு வயிறு பெரிது. 11290
செத்த ஆடு காற் பணம்; சுமை கூலி முக்காற் பணம்.
செத்த இடத்தில் புல் முளைத்துப் போகும்.
செத்தது செத்தாயே, செட்டி குளத்தில் விழுந்து சாகலாமா?
செத்த நாய் ஊதினாற் போல.
செத்த நாய் செருப்பைக் கடித்தது போல, 11295
செத்த நாய் திரும்பக் கடிக்காது.
- (திருப்பி.)
செத்த நாயில் உண்ணி கழன்றது போல.
செத்த நாயை இழுத்து எறிவது போல.
செத்த பாம்பு வருகிறதே அத்தை, நான் மாட்டேன் என்றதைப் போல.
செத்த பாம்பை அடிப்பது எளிது. 11300
செத்த பாம்பை ஆட்டுகிறான்.
செத்த பாம்பை ஆட்டுவாளாம் வித்தைக்காரப் பெண் பிள்ளை.
- (வித்தைக்காரன் மனைவி.)
செத்த பாம்பை எட்ட நின்று அடிப்பான், சீனத்து அதிகாரி.
செத்த பாம்பை எட்டித் தள்ளி நின்று அடிக்கும் தீரன்.
செத்த பிணத்திற் கடை, உற்றார்க்கு உதவாதவன். 11305
செத்த பிணத்துக்கு அருகே நாளைச் சாகும் பிணம் அழுகிறது.
- (இனிச் சாகும்). .
செத்த பிணத்துக்கு இனிச் சாகும் பிணம் அழுகிறது.
செத்த பிணத்துக் கண் ஏன்? சிவசிவ ஆண்டிக்குப் பெண் ஏன்?
செத்த பிணத்தைச் சுற்றித் திரிந்தாற் போல.
செத்த பிறகே செய்தவனுக்குச் செய்கிறது? 11310
- (செத்தவனுக்கு.)
செத்த பிறகா செல்வம் அநுபவிக்கிறது?
செத்தபின் எப்படிப் போனால் என்ன?
செத்தபின் வீட்டில் கெட்டவன் யார்?
செத்த மாட்டை அறுக்காத கத்தி சொத்தைக் கத்தரிக்காயை அறுக்கும்.
செத்த மாடு புல் தின்னுமா? 11315
செத்தவன் இருக்கச் சவுண்டி சாப்பிட்டது நிஜம் என்பது போல்.
செத்தவன் உடலம் சுமந்தவன் கண்மேலே.
செத்தவன் உடைமை இருந்தவனுக்குக் கிடைக்கும்.
- (இருந்தவன் சொத்து. )
செத்தவன் கண் கடாக்கண்; இருந்தவன் கண் இல்லிக்கண்.
செத்தவன் கண் செந்தாமரைக் கண்; இருக்கிறவன் கண் நொள்ளைக் கண். 11320
செத்தவன் கண் பெரிய கண்.
செத்தவன் காதில் சுக்கு வைத்து ஊதினாற் போல.
செத்தவன் கையில் வெற்றிலை பாக்குக் கொடுத்த சம்பந்தம்.
- (வெறும் பாக்குக் கொடுத்தது போல.)
செத்தவன் சாட்சிக்கு வருவது இல்லை.
செத்தவன் செந்தாமரைக் கண்ணன். 11325
செத்தவன் தலை கிழக்கே இருந்தால் என்ன? மேற்கே இருந்தால்
என்ன?
செத்தவன் தலையில் எத்தனை வண்டி ஏறினால் என்ன?
செத்தவன் நான் இருக்கச் சவுண்டி சாப்பிட்டவன் நான் என்றானாம்.
செத்தவன் பாரம் சுமந்தவன் தலையில்.
செத்தவன் பிழைத்தால் வெற்றி கொள்கிறது ஆர்? 11330
செத்தவன் பிட்டத்தில் நெய் எடுத்துத் திருவண்ணாமலைக்கு விளக்கு ஏற்று.
செத்தவன் பிட்டம் தெற்கே கிடந்தால் என்ன? வடக்கே கிடந்தால் என்ன?
- (கிழக்கே இருந்தால் என்ன? மேற்கே இருந்தால் என்ன?)
செத்தவன் பிள்ளை இருககிறவனுக்கு அடைக்கலம்.
செத்தவன் பெண்டாட்டியை இருந்தவன் கொண்டது போல.
- (பெண்சாதியை.)
செத்தவன் பெண்டினைக் கட்டினாலும் விட்டவன் பெண்டினைக் கட்டக் கூடாது. 11335
- (யாழ்ப்பாண வழக்கு.)
செத்தவன் வாயிலே மண்; இருந்தவன் வாயிலே சோறு.
செத்தவன் வீட்டில் கெட்டிவன் யார்?
செத்தவன் வீட்டில் பாடுபட்டவர் ஆரோ?
செத்தன்று வா என்றால் பத்தன்று வருவான்.
செத்தாருக்கு உவமானம் வையகத்தில் இல்லையா? 11340
செத்தாரைச் சாவார் சுமப்பார்கள்.
செத்தால் செடியைக் கா; பிழைத்தால் வீட்டைக் கா.
செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு.
செத்தால் பிழைக்க மாட்டான்,
செத்துக் கிடக்கிற பிணத்தைக் கண்டால் சிறுக்கச் சிறுக்க வெட்டுவேன் என்ற கதை. 11345
- (சிறுக்கிறவரை.)
செத்துச் சுண்ணாம்பாய்ப் போகிறேன்.
செத்துத் தெய்வமாய் நிற்கிறாள்.
செத்துப் போகும் போது தலையில் கட்டிக் கொண்டு போகிறானோ?
செத்துப் போன தாதன் மொட்டுப் போல முளைத்தான்.
செத்துப் போன பசுவைக் கெட்டுப் போன பாப்பானுக்குத் தாரை வார்த்த கதை. 11350
செத்துப் போன பாட்டின் இருந்தால் தாடியைப் பிடித்துக் கொண்டு தொங்கலாம்.
- (தெரிவிக்கலாம்.)
செத்துப் போன பாட்டி இருந்தால் கூட இரண்டு சிற்றப்பனைப் பெற்றிருப்பாள்.
செத்துப் போன பார்ப்பானுக்குச் செட்டிப் பெண்ணைக் கொடுத்தாளாம்.
செத்துப் போன பிறகு நித்திய சிராத்தம் செய்கிறது.
செத்துப் போன மாடு உயிரோடு இருந்தால் உடைந்து போன கலயத்தால் ஒன்பது கலயம் கறப்பேன் என்றாளாம். 11355
செத்தும் கொடுத்தான் சீதக்காதி.
- (சீதக்காதி-செய்து அப்துல் காதர்.)
செத்தும் கொடுத்தான் சீவரத்துக் கிராமணி.
- (சீயபுரத்து.)
செத்தும் சாகாதவன் தியாகம் கொடுப்போன்.
செத்தைக்குள் கிடந்ததைத் தூக்கி மெத்தை மேலே வைத்தால் அது செத்தையைச் செத்தையைத்தான் நாடும்.
- (யாழ்ப்பாணத்து வழக்கு.)
செத்தைக் கூலி கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம். 11360
செந்தழலை முன்றானையில் முடியலாமா?
செந்நாய்க் கூட்டத்துக்குச் சிறுத்தையும் அஞ்சும்.
செந்நாயைச் செருப்பால் அடி; கருநாயைக் கழியால் அடி.
செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்?
- (செப்பிடு வித்தை.)
செப்படி வித்தை எப்படிப் போவேன்? 11365
செப்பு இல்லாக் குடிக்கு அப்பாப் பட்டமா?
- (பாடமா?)
செப்புக் கொட்டப்பா, செப்புக் கொட்டு, அப்பம் தின்னலாம் செப்புக் கொட்டு, அவல் இடிக்கலாம் செப்புக் கொட்டு.
- (நாஞ்சில் நாட்டு வழக்கு.)
செப்பும் பந்தும் போல.
செம்பால் அடித்த காசும் கொடாத லோபி.
- (காசு தர மாட்டேன்.)
செம்பிலும் இல்லை; கல்லிலும் இல்லை. 11370
செம்பரம்பாக்கத்தான் பெயர் பெற்றான்; மாங்காட்டான் நீர்
பெற்றான்.
செம்பாடு அடித்தால் என் பாடு தீர்ந்தது.
செம்பு, கம்பளி, எம்பெருமான், பாதேயம், பாதரக்ஷணம்.
- (பாதேயம்-கட்டுச்சோறு, பாதரக்ஷணம்-செருப்பு.)
செம்பு நடமாடினால் குயவன குடி போவான.
- (நடமாடக் குயவன் தன்னால் ஒதுங்குவான்.)
செம்பொற் சோதி, தம்பிரான சடையைச் சோதி. 11375
- (ஒரு கதை செம்பொனி சோதி, திருவையாற்றில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.)
செம்போத்து உண்டானால் சம்பத்து உண்டாகும்.
செம்மறி ஆடு வெளியே ஓடத் திருட்டு ஓநாய் உள்ளே.
செம்மறிக் குளத்தான் சுரைக் கொடிக்குப் பாத்தி வெட்டியதுபோல.
செய்கிறது எல்லாம் செய்து விட்டுக் கழுநீர்ப்பானையில் கை அலம்பினாளாம்.
செய்கிறது சிரைக்கிற வேலை; நினைக்கிறது சிரஸ்தார் வேலை. 11380
செய்கிறதை விட்டு விட்டுச் சினையாட்டுக்கு மயிர் பிடுங்குகிறான்.
- (மயிர் தானே கொட்டிவிடும்.)
செய்கிறவர்களுக்குச் சொல்லத் தெரியாது; சொல்கிறவர்களுக்குச் செய்யத் தெரியாது.
செய்த தீவினை செய்பவர்க்கே.
செய்த நன்றியைச் செத்தாலும் மறக்கலாமா?
செய்த பாவத்தைச் சொல்லிக் கழி. 11385
செய்தவம் மறந்தால் கைதவம் ஆகும்.
செய்தவர் பாவம் சொன்னவர் வாயோடே.
செய்தவனுக்குச் செய்ய வேணும்; செத்தவனுக்கு அழ வேணும்.
செய்த வினை செய்தவர்க்கே எய்திடும்.
செய்த வினை செய்தவனையே சாரும். 11390
செய்தார்க்குச் செய்வது செத்த பிறகோ?
செய்தானை ஒவ்வாத பாவையோ இல்.
- (பழமொழி நானூறு.)
செய்தும் சிரிப்பாணி.
செய்யாத வித்தை எல்லாம் செய்தாலும் தேங்காய்க் குடுக்கையிலே மூத்திரம் பெய்வாளா?
செய்யாப் பிள்ளை வரப்பிலே செய்வாய், செய்வாய் என்றேனே; நீ செய்யேன்; செய்யேன் என்றாயே; நீ பார்த்துக் கொள்; நீ கேட்டுக் கொள். 11395
செய்யும் தொழில் எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கின் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை.
செய்வன திருந்தச் செய்.
- (செய்வினை.)
செயற்கை வாசனையோ? இயற்கை வாசனையோ?
செருப்பாக உழைத்தான்.
செருப்பால் அடித்தாலும் திருட்டுக்கை நில்லாது. 11400
செருப்பால் அடித்துக் கருப்பட்டி கொடுப்பது போல.
செருப்பால் அடித்துக் குதிரைக் கொடை கொடுத்தாற் போல.
செருப்பால் அடித்துக் குதிரையோடு தீவட்டி பிடித்தாற்போல.
- (தீவட்டி கொடுத்தாற் போல.)
செருப்பால் அடித்துப் பட்டுப் புடைவை கொடுத்தாற்போல.
செருப்பால் அடித்துப் பருப்புச் சோறு போட்டது போல. 11405
செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
செருப்புக் கடித்தால் திருப்பிக் கடிப்பதா?
செருப்புக்காகக் காலைக் குறைக்க முடியுமா?
- (குதியைத் தறிக்கிறதா?)
செருப்புக் காலைக் கடித்தால் நாம் செருப்பைக் கடிப்பதா?
செருப்புக்கு அச்சாரம் துரும்பு. 11410
செருப்புக்குத் தகுந்தாற்போல் காலை வெட்டுவதா?
செருப்புப் போட்டவன் கூடவும் சந்நியாசி கூடவும் துணை போகாதே.
செருப்பு வைத்துச் சேவடி தொழுமாப் போலே.
செல் அரித்த காதுக்கு வெள்ளைக் கம்மல் ஏன்?
செல்லக் குடுக்கைத் தேங்காயே, பல் இடுக்கிலே புகுந்தாயே! 11415
செல்லச் சக்கிலிப் பிள்ளை செருப்புச் செருப்பாய்த் தின்று கழிகிறது.
செல்லச் சிறுக்கி அகமுடையான் செவ்வாய்க்கிழமை செத்தானாம்; வீடு வெறிச்சாய் போகுமென்று வெள்ளிக்கிழமை எடுத்தாளாம்.
செல்வத்தில் ஒரு பெண் பிறந்தது; செட்டித் தெரு எல்லாம் திரிந்து விட்டு வந்தது.
- (அலைந்து விட்டு, நொட்டிவிட்டு.)
செல்லப் பிள்ளை; ஒன்றும் சொல்லப் புள்ளை.
- (சொல்ல முடியவில்லை.)
செல்லப் பிள்ளை சீலை உடாதாம், பிள்ளை பெறுமட்டும். 11420
செல்லப் பிள்ளை செத்தாலும் சொல்லப் பிள்ளை சாகாது.
செல்லம் சறுக்காதா? வாசற்படி வழுக்காதா?
- (சறுக்குதா? வழுக்குதா?)
செல்லம் சிரிப்பாணி, சீரங்கத்துத் குந்தாணி.
செல்லம் சீர் அழிக்கும்.
- (அழியும்.)
செல்லம் சொல்லுக்கு அஞ்சாள்; அழகி நடைக்கு அஞ்சாள். 11425
செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா?
செல்லம் பரமண்டலத்தில் செல்லாது; எல்லா மண்டலமும் செல்லும்.
செல்லன் சொல்லுக்கு அஞ்சான்; அழகன் நடைக்கு அஞ்சான்.
செல்லாக் கோபம் பொறுமைக்கு அடையாளம்.
செல்லாத காசு என்றைக்கும் செல்லாது. 11430
- (எங்கும். பணம்.)
செல்லாத பணம் என்று எண்ணாதே; செட்டியார் இருக்கிறார்; காட்டிக் கொள்.
செல்லிக்குச் சிரங்கு; சிறுக்கிக்கு அரையாப்பு; பார்க்க வந்த பரிகாரிக்குப் பக்கப் பிளவை.
- (பரிகாரி-வைத்தியன்.)
செல்லுகளால் தினந்தோறும் வளர்க்கப் படாத புற்றுப் போல்.
- (செல்-கறையான்.)
செல்லும் காசுக்கு வட்டம் உண்டா?
செல்லும் செல்லாததற்குச் செட்டியாரைக் கேள். 11435
- (செட்டியார் இருக்கிறார். இது ஒரு கதை.)
செல்லும் பொழுது செலுத்துவாய் சிந்தையை.
செல்வச் செருக்கினால் திரட்டுப்பால் குமட்டுகிறது.
செல்வ நிலையில் சேட்டன் கீழ்க் குரு.
- (சேட்டன்-தமையன்.)
செல்வப் பெண் சீரங்க நாயகிக்குச் சீதனம் வந்ததாம் வறையோடு.
செல்வப் பொருள் கொடுத்தால் குறையும்; கல்விப் பொருள் குறையுமோ? 11440
செல்வம் உண்டாகும் காலம் செய்கை உண்டு; வல்லமை உண்டு.
செல்வம் என்பது சிந்தையின் நிறைவே.
- (குமர குருபரர் வாக்கு.)
செல்வம் சகடக்கால் போல வரும்.
செல்வம் சீர் அழியுமா?
செல்வம் சீரைக் கெடுக்கும். 11445
செல்வம் செருக்குகிறது; காசுக்கு வழி இல்லை.
செல்வம் செருக்குகிறது; வாசற்படி வழுக்குகிறது.
- (சறுக்குகிறது.)
செல்வம் சொல்லுக்கு அஞ்சாது.
செல்வம் தொகற்பால போழ்தே தொகும்.
- (பழமொழி நானூறு)
செல்வம் நிலைகவ; சேட்டன் கீழ் இரு. 11450
செல்வம் பரமண்டலத்தில் செல்லாது; எல்லா மண்டபமும் செல்லும்.
செல்வமும் சீரும் வளர்த்தாளோடே போயின.
செல்வமே ஜீவாதாரம்.
செல்வர் எழுந்தருள்வது காலக்ஷேபத்துக்கு விரோதம்.
- (சீரங்கத்தில்.)
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல். 11455
செல்வன் சொல்லுக்கு அஞ்சான்; வீரன் போருக்கு அஞ்சான்.
செலவில் குறைந்த வரவானால் சேமிப்பது எப்படி?
- (சேமப்படுகிறது.)
செலவு அதிகம்; வரவு போதாது.
செலவு இல்லாச் செலவு வந்தால் களவு இல்லாக் களவு வரும்.
செலவு இல்லாத சிங்காரம் போல. 11460
செலவு இல்லாப் பணத்துக்குச் சில்லறைக் கடை வைத்துப் பார்த்தானாம்.
செலவு உண்டானால் சேவகம் உண்டு.
செலவோடு செலவு, கந்தப் பொடிக்குக் காற்பணம்.
செவ்வாய் நட்டுப் புதன் அறுக்கல் ஆகாது.
செவ்வாய் புதன் வடக்கே சூலம். 11465
செவ்வாய் வெள்ளி செலவிடாதே.
செவ்வாயோ? வெறுவாயோ?
செவிட்டில் அடித்தால் ராகம் போட்டு அழத் தெரியாது.
- (செவிடு - கன்னம்.)
செவிட்டில் அறைந்தாலும் தேம்பி அழத் தெரியாது.
செவிட்டுக்குச் சூன்யம்; அசட்டுக்கு ஆங்காரம். 11470
செவிடன் காதிலே சங்கு ஊதின மாதிரி.
- (செவிடன் முன்னே.)
செவிடன் பாட்டுக் கேட்கப் போனது போல்.
செவிடன் பாட்டுக் கேட்ட சம்பந்தம்.
செவிடனும் குருடனும் கூத்துப் பார்த்தாற் போல.
செவிடு இருந்தால் ஊமை இருக்கும். 11475
செழிப்புக்குத் தேன் குருவி.
சென்மக் குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது.
சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல.
சென்மத்தில் பிறந்தது செருப்பால் அடித்தாலும் போகாது.
- (சென்மத்தோடே வந்தது.)
சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி. 11480
சென்ற இடம் சிறப்பும், கொண்ட இடம் காணியும்.
சென்ற காசுக்கு வட்டம் இல்லை.
சென்ற காரியத்தைப் பார்த்து, வரும் காரியத்தை அறி.
சென்றது எல்லாம் போகப் பிள்ளையாரே வாரும்.
சென்றும் செலவழித்தும் சீர் அழிந்த குடித்தனம். 11485
சென்னிமலை, சிவன்மலை, சேர்ந்ததொரு பழனிமலை.
சென்னைக்கு வந்து சிவம் ஆனேன்.