தமிழ்ப் பழமொழிகள் 3/2
சே என்றதற்கு நாய் சேலை கட்டாமல் அலைகிறது.
சேடனுக்கு ஏன் குரங்கு?
- (சேடன்-நெசவு வேலை செய்கிறவன்.)
சேடனுக்கு ஏன் குரங்குப் புத்தி? சேற்றில் கிடப்பவனுக்கு ஏன் சோமக் கட்டு? 11490
சேணியன் குடுமி சும்மா ஆடுமா?
சேணியன் நூலை விற்பான்; செளராஷ்டிரன் சேலையை விற்பான்.
சேணியனுக்கு ஏன் குரங்கு?
சேணியனைக் கெடுக்கச் சாண் குரங்கு பற்றாதா?
- (போதும்.)
சேத நினைவுக்குப் பூதம் சிரிக்கும். 11495
சேப் பணத்துப் பட்ட ஈப் போல.
சேப்பு ஆத்தாள் வண்டவாளம் போய்ப் பார்த்தால் தெரியும்.
சேம்பு கொய்யச் சிற்றரிவாள் ஏன்?
- (வேணுமா?)
சேம்பு சொறியும்; வேம்பு கசக்கும்.
சேயின் முகம் பார்க்கும் தாயின் முகம் போல. 11500
சேர் இடம் அறிந்து சேர்.
சேர்க்கைக்குத் தக்க பழக்கம்.
சேர்க்கை வாசனையோ? இயற்கை வாசனையோ?
சேர்த் துரைக்கு மணங்குச் சேவகன்.
சேர்த்து வைத்துப் பசுக் கறக்கலாமா? 11505
- (பால் கறக்கலாமா?)
சேர்ந்தவர் என்பது கூர்ந்து அறிந்த பின்.
சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை.
சேர இருந்தால் செடியும் பகை; தூர இருந்தால் தோட்டியும் உறவு.
- (சேடியும் பகை.)
சேரச் சேரச் செடியும் பகை.
- (சேடியும் பகை.)
சேரச் சேரப் பண ஆசை; பெறப் பெறப் பிள்ளை ஆசை. 11510
சேரப் போனால் செடியும் பகை.
சேராத இடத்தில் சேர்ந்தால் வாராத துன்பம் வரும்.
சேராரோடு சேராதே; சேம்பைப் புளியிட்டுக் கடையாதே.
சேரியும் ஊரும் செல்வமும் கல்வியும்.
சேலத்துக்குப் போகிறவன் தடம் எது என்றால் செவலைக் காளை இருநூறு என்றானாம். 11515
சேலம் சர்க்கரை சிற்றப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா.
சேவகம் செட்டியாரிடம்; சம்பளந்தான் லொட லொட்டை.
சேலைமேல் சேலை கட்டும் தேவரம்பை ஆனாலும் ஓலைமேல் எழுத்தாணி ஊன்றும் பெண் ஆகாது.
சேவல் கூவினால்தான் பொழுது விடியுமா?
சேற்றால் எடுத்த சுவர். 11520
- (சோற்றால்.)
சேற்றில் கல்லைவிட்டு எறிந்தால் எறிந்தவன் மேலே தெறிக்கும்.
சேற்றில் சிக்கிய ஆனை போல.
சேற்றில் செங்கழுநீர் பூத்தது போல.
சேற்றில் தாமரை முளைத்தது போல.
சேற்றில் நட்ட கம்பம் எந்தச் சாரியும் திரும்பும். 11525
சேற்றில் நட்ட தூண் போல.
- (கம்பம் போல)
சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவானேன்?
சேற்றிலே சிரிப்பு; நெல்லிலே நெருப்பு.
- (சேற்று முகத்தில், நெல்லின் முகத்தில்)
சேற்றிலே புதைந்த ஆனையைக் காக்கையும் கொத்தும்.
- (குத்தும்)
சேற்றிலே முளைத்த செந்தாமரை போல. 11530
சேற்றிலே மேயும் பிள்ளைப் பூச்சி போல.
சேற்று நீரில் தேற்றாம் வித்தை உரைத்தால், சேறு வேறு, நீர் வேறு பிரிந்திருப்பது போல.
சேறு கண்ட இடத்திலே மிதித்து ஜலம் கண்ட இடத்திலே கழுவியது.
சேறு போகச் சேற்றால் கழுவுகிறதா?
சேனைக்குப் பட்டமோ, சேனாபதிக்குப் பட்டமோ? 11535
சேனைத் துரையை வாரிக் கொடுத்துச் சீர் அழிந்தேன்.
சேஷ ஹோமம் செய்த வீடு மாதிரி.