தமிழ்ப் பழமொழிகள் 3/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பீ


பீக்கு முந்தின குசுப் போல.

பீச்சண்டை பெருஞ்சண்டை.

பீடம் தெரியாமல் சாமி ஆடினது போல. 16560


பீடு படைத்தவன் கோடியில் ஒருவன்.

பீதாம்பரத்துக்கு உண்டு ஆடம்பரச் செய்கை.

பீ தின்கிறது போலக் கனவு கண்டால் பொழுது விடிந்தால் யாருக்குச் சொல்கிறது?

பீ தின்கிறவன் வீட்டுக்குப் போனால் பொழுது விடியுமட்டும் பேளச் சொல்லி அடித்தானாம்.

பீ தின்னப் போயும் வயிற்றுவலிக்காரன் பீயா? 16565


பீ தின்ன வந்த நாய் பிட்டத்தைக் கடிக்கப் போகிறதா?

பீ தின்ன வேண்டுமென்றால் வாயை நன்றாய்க் கழுவிப் போட வேண்டும்.

பீ தின்னுகிற நாய்க்குப் பேர் முத்துமாலை.

பீ தின்னும் வாயைத் துடைத்தது போல.

பீ போடப் புறக்கடையும் பிணம் போட வாசலும். 16570


பீ போனால் பலம் போச்சு.

பீ மேலே நிற்கிறாற் போல.

பீயிலே கல விட்டு எறிந்தால் மேலேதான் தெறிக்கும்.

பீயிலே தம்படி இருந்தாலும் பெருமாளுக்குத் தளிகை போடுவான்.

பீயும் சோறும் தின்கிறதா? ஈயும் தண்ணீரும் குடிக்கவா? 16575


பீயும் சோறும் பிசைந்து தின்கிறான்.

(சோறு மாய்ப் பிசைகிறது.)

பீயும் பிள்ளையும் பிடித்ததைப் பிடிக்கும்.

பீயைப் பெரிதாய் எண்ணிப் பொய்க்காமல் வேடு கட்டுவானேன்,

(வேலி.)


பீர்க்குப் பூத்தது; விளக்கை ஏற்று.

பீலா பூத்த சோறு பெரிய பறங்‘கிலாப்’ பேளும் பேளும். 16580


பீலி காலாழி இன்றியும் கல்யாணமா?

பீற்றல் பட்டைக்கு அறுதற் கொடி.

பீற்றல் முறமும் எழுதாத ஓலையும்.

பீற்றிக் கொள்கிறான்.

பீறின புடைவை பெருநாள் இராது. 16585

(வராது, நில்லாது.)


பீறின புடைவையும் பொய் சொன்ன வாயும் நிற்குமா?


பு


புகழ்ச்சியானுக்கு ஈந்தது பூதக்கண்ணாடி.

புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.

புகழால் புண்ணியம்.

புகுந்தடித்துப் போனோம் ஆனால் பிடித்து அடித்துத் தள்ளுவார்களா? 16590


புகை இருந்தால் நெருப்பு இருக்கும்.

புகைக்கினும் காரசில் பொல்லாங்கு கமழாது.

புகைச் சரக்கு வகைக்கு ஆகாது.

புகைந்த கொள்ளி புறத்தே.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

புகைந்த வீட்டைச் சுற்றுகிறது. 16595


புகை நுழையாத இடத்தில் புகுந்திடும் தரித்திரம்.

(புகுந்து வரும்.)

புகை நுழையாத இடத்திலும் அவன் நுழைவான்.

புகை நுழையாத இடத்திலும் போலீஸ் நுழையும்.

புகையிலைக்குப் புழுதிக் கொல்லை.

புகையிலையைப் பிரிக்காதே; பெண் பிள்ளை பேச்சைக் கேட்காதே. 16600


புகையிலை விரித்தால் போச்சு; பெண் பிள்ளை சிரித்தால் போச்சு,

புகை வீட்டைச் சுற்றும்.

புங்க நிழலும் புது மண்ணும் போல்.

புங்கப் புகழே, தங்க நிழலே.

புங்கை நிழலுக்கும் புளியைத் தழலுக்கும். 16605


புஞ்சையிற் புதிது; நஞ்சையிற் பழையது.

புட்டுக்கூடை முண்டத்திலும் பொறுக்கி எடுத்த முண்டம்.

புட்பம் என்றும் சொல்லலாம்; புஸ்பம் என்றும் சொல்லலாம்; ஐயர் சொன்னமாதிரியும் சொல்லலாம்.

புடம் இட்ட பொன் போல.

புடைக் கட்டுப் பயிருக்கு மடைக்கட்டுத் தண்ணீர். 16610


புடைவை கொடுப்பாள் என்று பெண் வீட்டுக்குப் போனால்; கோணிப் பையைக் கட்டிக் கொண்டு குறுக்கே வந்தாளாம்.

புடைவையை வழித்துக்கொண்டு சிரிக்க வேணும்.

புண் எல்லாம் ஆறி விட்டது; தாமரை இலை அகவந்தான் இருக்கிறது என்றானாம்,

புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்த்தால் போல.

புண்ணியத்துக்குக் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல. 16615


புண்ணியத்துக்குப் பசுவைக் கொடுத்தால் பல் எத்தனை என்றாளாம்.

புண்ணியத்துக்குப் புடைவை கொடுத்தால் புறக்கடையில் போய் முழம் போட்டாளாம்.

(புண்ணியம் என்று பழம் புடைவைகொடுத்தால்-)

புண்ணிய பாவத்துக்குப் புடைவை கொடுத்தாளாம்; பின்னாலே போய் முழம் போட்டுப் பார்த்தாளாம்.

புண்ணியம் இல்லாத வழிகாட்டி வீண்.

புண்ணியம் ஒருவர் பங்கு அல்ல. 16620


புண்ணியம் பார்க்கப் போய்ப் பாவம் பின்னே வந்ததாம்.

புண்ணில் எரி இட்டது போல.

புண்ணில் கோல் இட்டது போல.

(வேல் இட்டது போல.)

புண்ணில் புளிப் பெய்தாற் போல.

புண்ணுக்கோ மருந்துக்கோ வீச்சம். 16625


புண்ணைக் கீறி ஆற்ற வேண்டும்.

புண்பட்ட புலிக்கு இடுப்பு வலி எம்மாத்திரம்?

புத்தி அற்றவர்கள் பக்தியாய்ச் செய்வதும் விபரீதம் ஆம்.

புத்தி அற்றான் பலன் அற்றான்.

புத்தி இல்லா மாந்தர் புல்லினும் புல்லர் ஆவார். 16630


புத்தி ஈனர்கள் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வார்கள்.

புத்தி உரம்.

புத்தி உள்ளவர் பொறுப்பார்.

புத்தி உறப் புகழ்.

புத்தி எத்தனை? சுத்தி எத்தனை? 16635


புத்தி கட்டை, பெயர் முத்து மாணிக்கம்.

புத்தி கெட்ட புதுப்பாளையம், போக்கிரி பாண்டமங்கலம், மூணும் கெட்ட மோகனூர்.

புத்தி கெட்ட ராஜாவுக்கு மதி கெட்ட மந்திரி.

புத்திசாலியின் விரோதம் தேவலை; அசட்டின் நட்பு உதவாது.

புத்திமான் பலவான் ஆவான். 16640


புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை.

புத்தியோ கட்டை, பெயரோ முத்துமாணிக்கம்.

புத்தூர் சிறுப்பிட்டி பூம்பட்டி ஆவார்.

(யாழ்ப்பாண வழக்கு. இவை சிறு குன்று உள்ள இடங்கள்.)

புத்தூரான் பார்த்திருக்க உண்பான்; பசித்தோர் முகம் பாரான்; கோத்திரத்துக்குள்ள குணம்.

(யாழ்ப்பாண வழக்கு.)

புத்ராத் சதகுணம் புத்ரீ. 16645


புதன் கோடி தினம் கோடி.

(தினமும் கிடைக்குமாம்.)

புதன் சனி முழுகு.

புதிது புதிதாய்ப் பண்ணையம் வைத்தால் மசிரு மசிரா விளைஞ்சதாம்.

புதிசுக்கு வண்ணான் கோணியும் வெளுப்பான்,

புதிதாய்ப் புதிதாய்க் குலம் புகுந்தேன், பீலாப் பூத்தகச் சோறு. 16650


புதிதாய் வந்த சேவகன் நெருப்பாய்க் கட்டி வீசுகிறான்.

புதிதாய் வந்த மணியக்காரன் நெருப்பாய் இருக்கிறான்.

(நெருப்பாய் வாரி இறைக்கிறான்.)

புதிய காரியங்களில் புதிய யோசனை வேண்டும்.

புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும்.

(புதிய விளக்குமாறு.)

புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான். 16655


புதிய வண்ணானையும் பழைய அம்பட்டனையும் தேடவேண்டும்.

புதிய வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போயிற்று.

புதியாரை நம்பிப் பழையாரைக் கைவிடலாமா?

புதுக் குடத்தில் வார்த்த தண்ணீரைப் போல.

புதுக்கோட்டை அம்மன் காசு பெற மாட்டான். 16660


புதுக்கோட்டைக் கறுப்பண்ணனுக்கும் பூணைப் பார்; செட்டி நாட்டுத் தூணுக்கு உறையைப் பார்.

புதுக்கோட்டைப் புஷ்பவல்லியைப் பார்; தேவகோட்டைத் தேவடியாளைப் பார்,

புதுக்கோடி கிடைத்தாலும் பொன் கோடி கிடைக்காது.

புதுத்துடைப்பம் நன்றாய்ப் பெருக்கும்.

(சுத்தமாய்ப் பெருக்கும்.)

புதுப்பணக்காரனிடம் கடன் வாங்காதே. 16665


புதுப்பணம் படைத்தவன் அறிவானோ போன மாதம் பட்ட பாட்டை.

(யாழ்ப்பாண வழக்கு.)

புதுப்பானைக்கு ஈ சேராது.

புதுப்புனலும் புதுப்பணமும் மண்டையை இடிக்கும்; தொண்டையை அடைக்கும்.

புதுப் புடைவையிலே பொறி பட்டாற் போல.

புதுப் பெண் என்று தலை சுற்றி ஆடுகிறதா? 16670


புதுப் பெண்ணே, புதுப் பெண்ணே, நெருப்பு எடுத்து வா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்படி.

புதுப் பெண் போல் நாணுகிறது.

(நாணிக் கோணுதல்.)

புதுப் பெண் மோடு தூக்கும்.

புது மண அறைப் பெண் போல நாணுகிறது.

புது மாட்டுப்பெண் மேட்டைத் துடைக்கும். 16675


புது மாடு குளிப்பாட்டுகிறது போல.

புது மாடு புல்லுப் பெறும்.

புதுமைக்கு வண்ணான் கரை கட்டி வெளுப்பான்; பழகப் பழகப் பழந் துணியும் கொடான்.

(பறை தட்டி அன்று வெளுப்பான். யாழ்ப்பாண வழக்கு.)

புதுமையான காரியந்தான் இந்தக் கலியுகத்தில்.

புது வண்ணான் கோணியும் வெளுப்பான். 16680


புது வாய்க்கால் வெட்ட வேண்டாம்; பழ வாய்க்கால் தூர்க்க வேண்டாம்.

புது வெள்ளத்தில் கெளுத்தி மீன் ஏறுவது போல,

புது வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் அடித்துக்கொண்டு போயிற்று.


புதையல் எடுத்தவனைப் போல.

புயலுக்குப் பின் அமைதி. 16685


புரட்டாசிக் கருக்கல் கண்ட இடத்து மழை.

புரட்டாசிக் காய்ச்சல்.

புரட்டாசிச் சம்பா பொன் போல் விளையும்

புரட்டாசி நடுகை, திரட்சியான நடுகை

புரட்டாசிப் பகலில் பொன் உருகக் காய்ந்து இரவிலே மண் உருகப் பெய்யும் 16690


புரட்டாசி பதினைந்தில் நடவே நடாதே.

புரட்டாசி பாதியில் சம்பா நடு.

புரட்டாசி பெய்தாலும் பெய்யும்; காய்ந்தாலும் காயும்.

புரட்டாசி பெய்து பிறக்க வேணும்; ஐப்பசி காய்ந்து பிறக்க வேணும்.

புரட்டாசி மாதத்தில் கோவிந்தா என்ற குரலுக்குப் பஞ்சமா? 16695


புரட்டாசி மாதத்து நடவு பெரியோர் தேடிய தனம்.

புரட்டாசி மாதத்தில் பேரெள் விதை; சித்திரை மாதத்தில் கூர் எள் விதை.

புரட்டாசி மாதம் முப்பதும் ஒரு கந்தாயமா?

புரட்டாசியில் பொன் உருகக் காய்ந்தாலும் காயும்; மண்ணுருகப் பெய்தாலும் பெய்யும்.

புரட்டாசியில் பொன் உருகக் காயும்; ஐப்பசியில் மண் உருகப் பெய்யும். 16700


புரட்டாசி விதை ஆகாது; ஐப்பசி நடவு ஆகாது.

புரட்டாசியில் வில் போட்டால் புனல் அற்றுப் போகும்.

(உணவு.)

புரட்டாசி வெயில் பொன் உருகக் காய்ந்து மண் உருகப் பெய்யும்.

புரட்டாசி வெயிலில் பொன் உருகும்.

புரட்டிப் புரட்டி உதைக்கிற போதும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றான். 16705

(மண் படவில்லை.)


புரண்டும் பத்து நாள்; மருண்டும் பத்து நாள்; பின்னையும் பத்து நாள்.

புரவி இல்லாப் படை போல,


புரளன் கரை ஏறமாட்டான்.

புராண வைராக்கியம்.

புரிந்ததா மட்டைக்கு இரண்டு கீற்று என்று? 16710


புருவத்தில் பட்டால் கரிக்குமோ? கண்ணில் பட்டால் கரிக்குமோ?

புருவத்துக்கு மை இட்டால் கண்ணிக்கு அழகு.

புருஷக் கைம்பெண்.

புருஷன் அடிக்கக் கொழுந்தனைக் கோபித்தது போல.

புருஷன் அடித்தது பெரிது அல்ல; சக்களத்தி சிரித்ததுதான் கோபம். 16715


புருஷன் இல்லாமல் பிள்ளை பெறலாமா?

புருஷன் செத்தால் வெட்கம்; பிள்ளை செத்தால் துக்கம்.

புருஷன் வலு இருந்தால் பெண்டாட்டி குப்பை மேடு ஏறிச் சண்டை போடுவாள்.

புருஷனுக்கு ஏற்ற மாராப்பு.

புருஷனைப் பார்க்கும்போது தாலி எங்கே என்று தேடினாளாம். 16720


புருஷனை வைத்துக் கொண்டு அவிசாரி போவது போல்,

புல் அற உழாதே; பயிருக்கு வேலி கட்டாதே.

(மாட்டை வேளையோடு கட்டி வேளையோடு உழு; நடுக்கழனியாக வாங்கு என்பது கருத்து)

புல் உள்ள இடத்தில் மேயாது; தண்ணீர் உள்ள இடத்தில் குடிக்க ஒட்டாது.

புல் என்றாலும் புருஷன்; கல் என்றாலும் கணவன்.

புல்லனுக்கு எது சொன்னாலும் கேளான். 16725


புல்லனுக்கு நல்லது சொன்னால் புண்ணிலே கோல் இட்ட கதை.

புல்லும் பூமியும் உள்ள மட்டும் என் நிலத்தை அநுபோகம் பண்.

புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் உள்ள மட்டும்.

புல்லூரோ, நெல்லூரோ?

(புல்லூர்; திருவாடானைத் தாலூக்காவில் உள்ள ஊர்.)

புல்லைத் தின்னும் மாடுபோலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா? 16730


புல்லோருக்கு நல்லோர் சொன்ன பொருளாகி விட்டது.

(கம்ப ராமாயணம்)

புல் விற்கிற கடையிலே பூ விற்கிறது.

புலவர் இல்லாத சபையும் அரசன் இல்லாத நாடும் பாழ்.


புலவர் வறுமை பூமியிலும் பெரிது.

புலவருக்கு வெண்பாப் புலி. 16735


புலி அடிக்கும் முன்னே கிலி அடிக்கும்.

(கிலி பிடிக்கும்.)

புலி இருக்கிற காட்டில் பசு போய்த் தானே மேயும்?

புலி இருந்த குகையில் போகப் பயப்படுகிறதா?

புலி இளைத்தாலும் புல்லைத் தின்னாது.

புலி ஏகாதசி விரதம் பிடித்தது போல. 16740


புலிக் காட்டிலே புகுந்த மான் போல.

(புலிக் குகையிலே.)

புலிக்கு அஞ்சாதவன் படைக்கு அஞ்சான்.

புலிக்கு அரிய உணவைப் பூனை புசிக்குமோ?

புலிக்குத் தன் காடு பிறவி காடு இல்லை.

(அசல் காடு)

புலிக்குத் தன் காடு வேற்றுக் காடு உண்டா? 16745

(பிறர் காடு என்று கிடையாது.)


புலிக்குப் பயந்தவர்கள் எல்லாரும் என்மேல் படுத்துக் கொள்ளுங்கள்.

(பொட்ட வந்து)

புலிக்குப் பயந்து பூனை புழுக்கையை மூடுமாம்.

புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?

(பூனை ஆகுமா?)

புலிக்குப் பிறந்தது நகம் இல்லாமல் போகுமா?

புலிக்குப் புதர் துணை; புதருக்குப் புலி துணை. 16750


புலிக் கூட்டத்தில் மான் அகப்பட்டது போல.

புலி குத்தின சூரி என்று கையில் எடுத்தாலும் போதும்; பூனை குத்தின சுளுக்கி என்று கையில் எடுத்தால் பெருமையா?

(எடுத்தாலும் பெருமை)

புலி செவி திருகிய மத களிறு.

புலி நகம் படாவிட்டாலும் அதன் மீசை குத்தினாலும் விஷம்.

(குத்தினால் அதுவே விஷம்)

புலிப் பாய்ச்சல் பாய்கிறான். 16755


புலிப்பால் குடித்தவன் போல் இருக்கிறான்.

புலிப்பால் வேண்டுமானாலும் கொண்டு வருவான்.


புலிப்பாலைக் கொணர்ந்தவன் எலிப்பாலுக்கு அலைந்தானாம்,

புலி பசித்தால் புல்லைத் தின்னுமா?

(தின்னாது)

புலி பதுங்கிப் பாயும். 16760


புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

புலி புலி என்று ஏமாற்றுவது போல.

புலிமேல் வீச எடுத்த கத்தியைப் பூனைமேல் வீசுகிறதா?

புலியின் கைப்பட்ட பாலகனைப் போல

புலியின் முகத்தில் உண்ணி எடுக்கலாமா? 16765


புலியும் பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிக்க.

புலியும் பசுவும் பொருந்தி வாழ்ந்தாற்போல.

புலியூருக்குப் பயந்து நரியூருக்கு வந்தேன்; நரியூரும் புலியூராய்ப் போயிற்று.

புலியூருக்குப் பயந்து புத்தூருக்குப் போனால் புத்தூரும் புலியூரான கதை.

(மதுரைப்பக்க வழக்கு)

புலியூரை விட்டு எலியூருக்குப் போக, எலியூரும் புலியூர் ஆனது போல. 16770


புலியை இடறின சிதடன் போல.

(சிதடன்-குருடன்.)

புலியைக் கண்ட மான் போல.

புலியைக் கண்டால் கிலி.

புலியைப் பார்த்த நரி சூடிக் கொண்டது போல.

(பூனை சூடிக் கொண்டது போல.)

புலியை விடக் கிலி பெரிது. 16775


புலி வயிற்றில் பிறந்தால் நகம் இல்லாமல் போகுமா?

புலையனுக்குப் பூமுடி பொறுக்குமா?

புலையனுக்கு வாக்குச் சுத்தியும் ஆணையும் இல்லை.

(சுத்தமும்.)

புலையாடியும் பொருளைத் தேடு; பொருள் வந்து புலையை நீக்கும்.

புலையும் கொலையும் களவும் தவிர். 16780


புவி அரசர் போற்றும் கவி அரசர் கம்பர்.

புழுக்கை ஒழுக்கம் அறியாது; பித்தளை நாற்றம் அறியாது.

புழுக்கை ஒழுக்கம் அறியுமா? பிண்ணாக்குக் கட்டி பதம் அறியுமா?


புழுக்கைக்குணம் போகாது ஒரு காலும்.

புழுக்கைக்குப் புத்தி பிடரியிலே. 16785


புழுக்கைக்குப் பொன்முடி பொறுக்குமா?

புழுக்கை கலம் கழுவித் தின்னாது.

(உண்ணாது, உண்ணுமா?)

புழுக்கைக்கு மேல் சன்னதம் வந்தால் பூ இட்டுக் கும்பிட வேண்டும்.

புழுக்கை சுகம் அறியுமா?

புழுக்கை வெட்கம் அறியுமா? 16790


புழுங்கிப் புழுங்கி மா இடித்தாலும் புழுக்கைச்சிக்கு ஒரு கொழுக்கட்டை.

புழுத்த சரக்கு; கொழுத்த பணம்,

(புழுத்தகன்).

புழுத்த நாய் குறுக்கே போகாது.

புழுதி உண்டானால் பழுது இல்லை.

புழுவும் புரளும். 16795


புழைக்கடைக் கீரை மருந்துக்கு உதவாது

(பச்சிலை.)

புழைக்கடை மருந்து சுவைக்கு உதவாது.

(கவைக்கு.)

புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா?

புள்ளிக் கணக்குப் பள்ளிக்கு உதவாது.

புள்ளிக்காரன் கணக்குப் பள்ளிக்கு உதவாது. 16800

(புள்ளிக் கணக்கு.)


புள்ளிப் பொறி பாய்ந்த மூங்கில் கொள்ளிச் சாம்பல் ஆனாற்போல.

புள்ளும் புறாவும் இரை தின்னா.

(அநீதி அடைந்தால்.)

புளி ஆயிரம், போந்து ஆயிரம்.

(பொந்து)

புளி எத்தனை தூக்கு? ஒரே தூக்கு.

புளி ஏப்பக்காரனும் பசி ஏப்பக்காரனும். 16805


புளித்த காய்க்குப் புளி யுகுத்துவாயோ?

(புகுத்தினாயோ?)

புளியங்காய்க்குப் புளிப்புப் புகுத விட்டால் வருமா?

புளியங் கொட்டைக்குச் சனி மூலையா?

புளியங் கொம்பைப் பிடிக்கப் போகிறது புத்தி.

புளியந் தோடும் பழமும் போல. 16810

(ஓடும்.)


புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வேணுமா?

(புகுதவிட வருகிறாயோ?)

புளியம் பழமும் ஓடும் போல.

புளிய மரத்தில் ஏறினவன் நாக்கு எரிவு காணாமுன் இறங்குவானா?

புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான்.

(நாக் கூசினால்.)

புளிய மரத்துப் பிசாசு பிள்ளையாரையும் பிடித்ததாம். 16815


புளிய மரத்தைக் கண்டால் வாயும் நில்லாது; வீதியிலே போகிற நாயைக் கண்டால் கையும் நில்லாது.

புளியும் ஓடும் போல் ஒட்டாமல் இருக்கிறது.

புளி வற்றினால் கரைக்கலாம்; பிஞ்சு வற்றினால் கரைக்கலாமா?

புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும்.

புற்றில் ஆந்தை விழிப்பது போல விழிக்கிறான். 16820


புற்றில் ஈசல் புறப்பட்டது போல.

புற்றில் ஈசல் புறப்பட்டாலும் மண்ணில் கறையான் கூடினாலும் மழை வரவே வரும்.

(பெய்யவே பெய்யும்.)

புற்றில் கால் இட்டாற் போல.

புற்றில் கிடந்த புடையன் எழுந்தது போல.

புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டது போல. 16825


புற்று அடிமண் மருந்தும் ஆகும்.

புறக்குடத்துத் தண்ணீர் போல.

புறக் குற்றம் அறியப் பிடரியிலே கண்.

புற மடையில் பொலியைத்துவி அடைக்கப் பார்த்தானாம்.

புறமுதுகு காட்டி ஓடாதே. 16830


புறாவுக்கு எறிந்த கல்லை மடியில் கட்டுகிறதா?

புன்சிரிப்புக்கு மருந்து சாப்பிடப் போய் உள்ள சிரிப்பும் போச்சுதாம்.

(குஞ்சிரிப்புக்கு)

புன்டெயிற் புதியது; நன்செயிற் பழையது.

புன்னாலைக் கட்டுவன் பாழ்ப்பட்டுப் போவார்.

(புன்னாலைக் கட்டுவான்-யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் ஊர். யாழ்ப்பாண வழக்கு)

புஷ்பம் கொடுத்த புண்ணியவதி. 16835


புஸ்தகம் ஹஸ்த பூஷணம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_3/18&oldid=1158970" இருந்து மீள்விக்கப்பட்டது