தமிழ்ப் பழமொழிகள் 3/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


தா


தாக்ளா மோக்ளா இல்லை. 12335


தாகம் இருக்கிறது; இரக்கம் இல்லை.

(இறக்கம்.)

தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேல் ஏறுகிறான்.

தாங்கினால் தலைமேல் ஏறுகிறான்.

தாங்குகிற ஆள் உண்டு; தளர்ச்சி உண்டு.

தாசரி தப்புத் தண்டவாளத்துக்குச் சரி. 12340


தாசிக்குப் பாளையம் கொடுத்தால் தகப்பனும் போகலாம்; பிள்ளையும் போகலாம்.

தாசி பகட்டும் தாவணி மிரட்டும் போகப் போகத் தெரியும்,

தாசி பிள்ளைக்குத் தகப்பன் யார்?

தாசில் தடுமாறிப் போகிறது!

தாசில்தார் கோழி முட்டை சம்சாரி அம்மிக்கல்லையும் உடைக்கும். 12345


தாசில்தாருக்குத் தாசில் வேலை போனாலும் சமையல்காரனுக்குச் சமையல் வேலை போகவில்லை.

தாசில்தாருக்கு வேலை போச்சு; சமையல்காரனுக்கு என்ன கவலை?

தாசி வீட்டுக்குப் போனபின் தாய் இல்லாப் பிள்ளை என்றால் விடுவாளா?

தாட்டோட்டக்காரனுக்குத் தயிறும் சோறும்; விசுவாசக்காரனுக்கு வெந்நீரும், பருக்கையும்.

தாட்டோட்டக்காரனைக் கூடுவதிலும் தனியே இருப்பது நலம். 12350

(தாட்டோட்டக்காரனுடன்.)


தாடிக்குப் பூக் கட்டலாமா?

(சூடலாமா?)
(இரத்தின சபாபதி மாலை.)

தாடிக்கும் பூண் கட்டலாமா?

தாடிக் கொம்புத் தள வரிசை மாதிரி.

தாடி பற்றி எரியும் போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்டது போல.

தாடி வளர்த்தவர்கள் எல்லாம் தத்துவ ஞானிகளா? 12355


தாதத்தியைக் கெடுத்தவன் தாதன்; குயவனைக் கெடுத்தவள் குயத்தி.

தாதன் ஆட்டம் திருப்பதியிலே தெரியும்.

தாதன் கையிலே அகப்பட்ட குரங்கு போல அலைகிறான்.

தாதனும் பறையனும் போல.

தாதனைக் கண்டால் ரங்கன். ஆண்டியைக் கண்டால் லிங்கன். 12360

(தூதனைக்கண்டால் லிங்கன்.)


தாதா கோடிக்கு ஒருவர்.

(ஒளைவயார் பாடல்.)

தாது அறியாதவன் பேதை வைத்தியன்.

தாதும் இல்லை, பிராதும் இல்லை.

தாபரம் இல்லா இளங் கொடி போல.

தாம் கெட்டாலும் பிறருக்குக் கேடு நினைக்கல் ஆகாது. 12365


தாம்பும் அறுதல், தோண்டியும் பொத்தல்.

தாம்பூலத் தட்டுச் சாதிக்காதது இல்லை,

(சிசுபாலன் வதம்.)

தாம்பை விட்டு வாலைப் பிடிக்கிறது போல,

தாம்வளர்த்ததோநேச்சு மாமரம் ஆயினும் கெடார்.

(திருவாசகம்.)

தாம் வளைவார் பிறருக்கு ஊற்றங்கோள் ஆகார். 12370


தாமதம் தாழ்வுக்கு ஏது.

தாமரை இல்லாத் தடாகம் போல.

(சந்திரன் இல்லா வானம் போல.)

தாமரை இலைத் தண்ணீர் போல.

தாமரை இலையில் தண்ணீரைப் போல் தவிக்கிறான்.

தாமரையில் விழுந்த மழைத் துளி போல. 12375


தாய் அவிடே, தாக்கோல் இவிடே.

(மலையாளம்.)

தாய் அற்றால் சீர் அறும்.

தாய் அறியாத சூல் இல்லை.

(தன் நெஞ்சு அறியாப் பொய் இல்லை.)

தாய் இட்டி பேரை ஊர் இட்டு அழைக்கும்.

தாய் இடப் பிள்ளை இடந் தானே மனம் மகிழ. 12380


தாய் இருந்தால் நாய் வருமா?

தாய் இல்லாக் குழந்தை தானே வளரும்.

தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.

தாய் இல்லாத பிள்ளை ஊருக்கு ஆகுமா?

(ஆகாது.)

தாய் இல்லாத பிள்ளை தறுதலை. 12385


தாய் இல்லாத பிறந்தகமும் கணவன் இல்லாத புக்ககமும்.

தாய் இல்லாதவனுக்கு ஊர் எல்லாம் தாய்.

தாய் இல்லாப் பிள்ளை என்றால் தேவடியாள் கேட்க மாட்டாள்.

தாய் இல்லாப் பிள்ளைக்கு நாய் பட்ட பாடு.

தாய் இல்லாப் பிள்ளையைத் தலையிலே தட்டலாமா? 12390


தாய் உள்ளமட்டும் சீராட்டு.

தாய் உறவோ? நாய் உறவோ?

தாய் ஊட்டாத சோற்றைத் தயிர் ஊட்டும்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்.

தாய் ஏழு அடி பாய்ந்தால் மகள் எட்டு அடி பாய்வாள். 12395


தாய் ஒரு பாக்குத் தான் கமுகத் தோப்பு என்கிறாள்.

தாய்க் கண்ணோ, நாய்க் கண்ணோ?

தாய்க் கிழவி எப்போது சாவாளோ? தாழ்வாரம் எப்போது ஒழியுமோ?

தாய்க்கிழவியும் வெறிநாயும் பிடித்தால் விடார்.

தாய்க்கு அடங்காதவன் ஊருக்கு அடங்கான். 12400


தாய்க்கு அடங்காதவன் ஊருக்கு அடங்கான்; ஊருக்கு அடங்காதவன் ஒருவருக்கும் அடங்கான்,

தாய்க்கு அடுத்தது தாரம்.

தாய்க்கு ஆகாத பிள்ளை ஊருக்கு ஆகாது.

(+ஊருக்கு ஆகாத பிள்ளை ஒருவருக்கும் ஆகாது. ஊருக்கு ஆகுமா?)

தாய்க்கு ஆகாத பிள்ளையும் தட்டானுக்கு ஆகாத பொன்னும் பதர்.

தாய்க்கு ஆகாத மகன் ஆருக்கு ஆவான்? 12405


தாய்க்கு உள்ளது மகளுக்கு.

தாய்க்கு ஒளித்த சூலா?

தாய்க்குச் சுகம் ஆனால் கர்ப்பத்துக்குச் சுகம்.

தாய்க்குச் சோறு இருக்கிறது ஊருக்குப் புகழ்ச்சியா?

தாய்க்குத் தலைப் பிள்ளை. 12410


தாய்கருத் தவிடு இடியான்; தம்பிரானுக்கு இரும்பு இடிப்பான்.

(அடிப்பான்.)

தாய்க்குத் தாலி செய்தாலும் தட்டான் திருடுவான்.

தாய்க்குப் பின் தகப்பனும் தாயாதி.

தாய்க்குப் பின் தாரம் தன்மை கெட்டால் அபதாரம்.

தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன். 12415


தாய்க்கு மிஞ்சி உறவும் இல்லை; சுக்குக்கு மிஞ்சி மருந்தும் இல்லை.

தாய்க்கு மூத்துத் தகப்பனுக்கு விளக்குப் பிடிக்கிறான்.

(வழக்கு முடிப்பான்.)

தாய்க்கு விளைந்தாலும் தனக்கும் விளைய வேண்டும்.

தாய்க்கு விளைந்தாலும் தனக்கு விளையத் தவம் செய்வாராம்.

தாய் கஷ்டம் தலையிலே; மகள் கஷ்டம் மடியிலே, 12420


தாய் காணாது தவிக்கும் சேய்போல்.

தாய் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள், மகன் கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.

தாய் கூடப் பிறந்த மாமனிடத்தில் குலமும் கோத்திரமும் சொன்னது போல.

தாய் கேட்டுப்பட்டி, தகப்பன் காவடிப்பட்டி, தங்கை மோருப்பட்டி! தமக்கை சாதப்பட்டி.

தாய் கைக்குத் தோஷம் இல்லை. 12425


தாய் கையில் இருக்கிற தளத்தைப் பார்க்கிலும் தன்கைத் தளமே மேல்,

(பொன்னைக் காட்டிலும்.)

தாய் கொட்டையூரில் முட்டி எடுக்கிறாள், பையன் கும்பகோணத்தில் கோதானம் பண்ணுகிறான்.

(மூட்டி-பிச்சை.)

தாய் கொண்டு பொறுக்காததை ஆர் பொறுப்பார்?

தாய்ச் சீலைக்குக் சாண்துணி இல்லை; தலைக்கு மேலே சரிகை மேற்கட்டி.

(தாய்ச்சீலை-கோவணம்.)

தாய் செத்தால் மணம், மகள் செத்தால் பிணம். 12430


தாய் செத்தாள்; மகள் திக்கற்றாள்.

தாய் சொல் கேளாப் பிள்ளை தறுதலை.

தாய் சொல் கேளாதவன் நாய்வாய்ச் சீலை.

தாய் சொல் துறந்தால் வாசகம் இல்லை.

தாய் சொல் விரதத்தை விட்டு வேறே விரதத்தை எடுக்கிறதா? 12435


தாய் தகப்பன் பட்டினி கிடக்க ஊரில் அன்னதானம் செய்கிறானாம்.

தாய் தட்டுப் பிச்சை எடுக்கிறாள்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் பண்ணுகிறான்.

தாய் தந்தை இறந்தாலும் பிழைக்கலாம்; நாணயம் இழந்தால் பிழைக்கப்படாது.

தாய் தவிட்டுக்கு அழுகிறாள்; மகள் இஞ்சிப் பச்சடி கேட்கிறாள்.

(அழுகையிலே).

தாய் தன்னை அறியாத கன்று இல்லை. 12440

(கம்பராமாயணம்.)


தாய் தனக்கு ஆகாத மகள் ஆர்தனக்கு நல்லவள் ஆவாள்?

தாய் தேடியும் பிள்ளை தேடியும் மடிசீலை ஒன்று.

தாய் தூற்றினால் ஊர் தூற்றும்; கொண்டவன் துாற்றினால் கண்டவன் தூற்றுவான்.

தாய் நக்கத் தழுவணி உதிர.

(தழுவணி-சேனை.)

தாய் பேர் போனாலும் போகட்டும்; தம்பி சக்கிலியனானால் சரி. 12445

(தம்பியை இழித்தபடி.)


தாய் பொறுக்காததை ஊர் பொறுக்குமா?

தாய் பொன்னிலும் மாப்பொன் திருடுவான் தட்டான்.

தாய்போல் பெண்ணும் தகப்பன் போல் பிள்ளையும்.

தாய் மனம் பித்து, தகப்பன் மனம் கல்.

தாய் மனைக்கு வந்தது பிள்ளை மனைக்கும். 12450


தாய் மாமன் இடத்தில் குலம் கோத்திரம் சொன்னாளாம்.

தாய் மாமன் வீட்டிலேயா குலம் கோத்திரம் கேட்கிறது?

தாய் மிதிக்க ஆகா முடம்.

(பழமொழி நானூறு.)

தாய் மிதிக்கக் குஞ்சு முடம் ஆகாது.

தாய் முகம் காணாத பிள்ளையும் மழை முகம் காணாத பயிரும் செவ்வைப்படமாட்டா. 12455


தாய் முகம் பார்க்கும் சேய் முகம் போல.

தாய் முலை குடித்துத் தாகம் தணிய வேணும்.

தாய் முலைப்பாலுக்குப் பால் மாறினது போல.

தாய் வசவு பிள்ளைக்குப் பலிக்குமா?

தாய் வயிற்றில் இராது பிறந்தது போல். 12460


தாய் வயிற்றைப் பார்ப்பாள்; பெண்டாட்டி மடியைப் பார்ப்பள்.

(பெண்டாட்டி இடுப்பைப் பார்ப்பாள்.)

தாய் வளர்த்த பிள்ளை தறுதலை.

தாய் வார்த்தை கேளாத பிள்ளை நாய் வாயிற் சேலை.

தாய் வீட்டுக்குப் போனாலும் தன்னைப் பேணிப் போக வேணும்.

தாய் வீட்டுப் பெருமையை அக்காள் தங்கச்சி பேசிக் கொண்டாற்போல. 12465


தாய் வீடு ஓடிய பெண்ணும் பேயோடாடிய கூத்தும்.

தாய் வைத்த பெயர் தலையில் இருக்க நாய் வைத்த பெயர் நடு நாயகமாக விளங்கிற்றாம்.

தாயாதிக்காரன் வாழவைத்த வீடு உண்டா?

தாயாதிக்குக் குணம் இல்லை; கோவணத்துக்கு மணம் இல்லை.

தாயாதிச் சண்டை. 12470


தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.

தாயும் தகப்பனும் தவிரச் சகலமும் வாங்கலாம்.

தாயும் தகப்பனும் தள்ளிவிட்ட காலத்தில் வா என்று அழைத்த பங்காரவாசி.

தாயும் பிள்ளையும் ஆனால் தாய் எந்த வழியோ பிள்ளையும் அந்த வழி.

தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே. 12475


தாயே என்று போனாலும் நாயே என்று வருகிறது.

தாயை அடக்கி அவிசாரி போனாளாம்.

(போனாற்போல.)

தாயை அடக்கி மகள் ஊரில் சுற்றுகிறாளாம்.

தாயைக் கண்ட கன்று போல.

தாயைக் கன்டான்; மகளைக் கொண்டான். 12480


தாயைக் கொன்றவன் சொல்லுக்கு அஞ்சான்.

தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே பாதிப் பேர்.

தாயைச் சேர்ந்த உறவு ஆனாலும் அறுத்துத்தான் உறவாட வேண்டும்.

தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால் பெண்ணைச் சந்தைக் கடையில் பார்க்கலாம்.

தாயைப் பகைத்தாலும் ஊரைப் பகைத்தல் ஆகாது. 12485


தாயைப் பழித்தவன் சேயைப் பழிப்பான்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே.

தாயைப் பழித்து மகள் அவிசாரி ஆடுகிறாள்.

(ஆடினாளாம்.)

தாயைப் பழித்து மகள் செய்வது போல.

தாயைப் பார்த்துப் பெண்ணைக் கொள்; பாலைப் பார்த்துப் பசுவைக் கொள். 12490


தாயைப் பார்த்து மகளைக் கொள்.

தாயைப் பிரிந்த கன்று போல.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே.

(தள்ளினாலும் தள்ளாதே.)

தாயைப் போல உறவில்லை; காயத்திரியைப் போல மந்திரம் இல்லை.

தாயைப் போல் பிள்ளை; நாயைப் போல் வால். 12495


தாயைப் போல் பிள்ளை; நூலைப் போல சீலை.

தாயை மறக்கடிக்கும் தயிரும் பழஞ் சோறும்.

தாயோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம்.

தாயோடு போயிற்றுச் செல்வம், தேரோடு போயிற்றுத் திருநாள்.

தாரத்தை ரட்சியாதவன் வீரம் எதற்கு உதவும்? 12500


தாரம் தேடக் கிடைப்பாள்; தம்பி தேடக் கிடைப்பானா?

தாரம் வாய்த்தது வள்ளுவருக்கு; தம்பி வாய்த்தது ராமருக்கு.

தாரமும் குருவும் தலைவிதிப்படி.

(தலையில் எழுத்து.)

தாரமும் குருவும் தன் வினைப் பயனே.

தாராப் பெட்டை போல. 12505


தாராளக் கையே, தலைமேல் சற்று வையேன்.

தாராளன் தண்ணீர் பந்தல் நீர் சோற்றுத் தண்ணீர் நெய்பட்ட பாடு.

தாராளம் தண்ணீர் பட்ட பாடு; நீர்மோர் நெய் பட்ட பாடு.

தாலாட்டும் பிலாக்கணமும் தரமறிந்து சொல்ல வேணும்.

தாலி அறுத்தவள் ஏன் இருக்கிறாள்: தாரம் தப்பினவனுக்குப் பொங்கலிட. 12510


தாலி அறுத்தவள் வீட்டிலே தடவினது போல.

தாலி அறுத்தவன் வீட்டிலே தலைக்குத் தலை பெரிய தனம்.

(அநுத்தவள் குடித்தனம்)

தாலி அறுத்தவளுக்கு மருத்துவச்சி தயவு ஏன்?

(உதவி.)

தாலி அறுத்த வீட்டில் ஆளுக்கு ஆள் அதிகாரம்.

தாலி அறுப்பான் கல்யாணத்தில் தலைக்குத் தலை நாட்டாண்மை. 12515


தாலி ஒழிந்தது எல்லாம் அமைந்ததாம்; பெண்ணுக்குக் கூறை ஒழிந்தது எல்லாம் கொண்டவன்தானாம் அகமுடையான்.

தாலி கட்டும் பெண்ணின் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடுமா?

தாலிப் பறி, சீலைப் பறியா?

தாலிப் பேச்சு ஆனாலும் அறுத்துப் பேச்சு.

(செட்டி நாட்டு வழக்கு.)

தாலியை அறுத்துப் பீலி பண்ணினாளாம். 12520


தாவத் தஞ்சம் இல்லா இளங் கொடி போலத் தவிக்கிறாள்.

(தவிக்கிறான்.)

தாழ் இட்டவன் தாழ் திறக்க வேண்டும்.

தாழ்குலத்தில் பிறந்தாலும் புத்தியினால் அரளிப் பூவைப்போல் பிரயோசனப்படுவர்.

தாழ்ந்த இடத்தில் தண்ணீர் தங்கும்.

தாழ்ந்தது தங்கம்; உயர்ந்தது பித்தளை. 12525


தாழ்ந்து நின்றார் வாழ்ந்து நிற்பார்.

தாழ்ந்து பணிதலே தலைமை ஆகும்.

தாழ்மை இல்லாத வாலிபன் வீண்.

தாழ்வதும் வாழ்வதும் சகடக் காய் போல.

தாழ்விலே பெருமையும், வாழ்விலே தாழ்மையும் வேண்டும். 12530


தாழ உழுதால் தளிர் ஓடும்.

(ஆழ உழுதால் ஆட்டுரத்துக்கும் அதிகம்.)

தாழப் பொறுத்தாலும் வாழப் பொறுக்க மாட்டாள்.

தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்.

(குடலும்.)

தாழியும் தாழியும் தமுக்கிட்டாற் போல.

தான் உண்ட நீரைத் தலையாலே தரும் தென்னை. 12535

தாள் ஏற நீர் ஏறும்.

தாளம், வேதாளம்.

(பரிகாசம்.)

தாளுக்கும் அகப்படாமல் தாழ்ப்பாளுக்கும் அகப்படாமல்.

தாறு புறப்பட்டுத் தாய் வாழையைக் கெடுத்தாற் போல.

தாறு மாறும் தக்கட வித்தையும். 12540


தான் அடங்கத் தன் குலம் அடங்கும்.

(தன் குலம் விளங்க.)

தான் அறியாச் சிங்காரம் தன் பிடரிக்குச் சேதம்.

(யாழ்ப்பாண வழக்கு; தனக்கு அடாச் சிங்காரம்; சிங்களம் சிங்களம் அன்று.)

தான் அறியாத ஆவேசம் உண்டா?

தான் அறியாதது நஞ்சோடு ஒக்கும்.

தான் ஆடாவிடினும் தன் சதை ஆடும். 12545


தான் ஆண்ட உலக்கையும் தங்கப் பூஞ்சரமும் தலைமருமகளுக்கு.

(பூஞ்சரடும்.)

தான் இருக்கிற அழகுக்குத் தடவிக் கொண்டாளாம் வேப்பெண்ணெயை.

தான் உள்ள போது உலகம்.

தான் ஏற நீர் ஏறும்.

தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். 12550


தான் கள்ளன் பிறரை நம்பான்.

தான் கற்ற ஒன்றைத் தரிக்க உரை.

தான் குடிக்கக் கூழ் இல்லை; வாரத்துக்கு இரண்டு பன்றிக் குட்டி வளர்க்கிறான்.

தான் குடிக்காத பாலைக் கவிழ்த்து விடுகிறதா?

தான் கும்பிடும் தெய்வம் ஆனாலும் பொய்ச் சத்தியம் செய்தால் பொறுக்குமா? 12555


தான் கெட்டதும் அல்லாமல் சந்திர புஷ்கரிணியையும் கெடுத்தானாம்.

(சந்திர புஷ்கரிணி- ஸ்ரீரங்கத்தில் உள்ளதொரு தீர்த்தம்.)

தான் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.

தான் சம்பாதித்தால் தனக்கு உதவும்; ஊர் சம்பாதித்தால் உதவமாட்டாது.

(உதவுமா?)

தான் சாக மருந்து உண்பார் இல்லை.

(தின்பார்களா?)

தான் செத்தபின் உலகம் கவிழ்ந்தென்ன, நிமிர்ந்தென்ன? 12560


தான் செத்துக் கைலாசம் காணவேண்டும்.

தான் தளும்பல், பிறருக்கு ஊன்றுகோல்.

தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பைத்தியக்காரப் பட்டமும் கட்டிக் கொண்டான்.

தான் திருடி அயல் வீட்டுக்காரரை நம்பமாட்டாள்.

(அயலாரை.)

தான் திருடி, பிறரை நம்பாள்; சிறுதனக் கள்ளி விருந்தறியாள், 12565


தான் தின்கிற நஞ்சு தன்னைத்தான் கொல்லும்.

(எரிக்கும்.)

தான் தின்னச் சோற்றுக்கு வழியைக் காணோம்; வாரத்துக்குக் கோழி வளர்த்தானாம்.

தான் தின்னத் தவிட்டைக் காணோம்; வாரத்துக்கு இாண்டு பன்றிக் குட்டியாம்.

தான் தின்னத் தவிடு இல்லை; தங்கத்தாலே தாலி தொங்கப்போடச் சொன்னாளாம்.

தான் தின்னித் தம்பிரானாய் இருக்கிறான். 12570


தான் தின்னி பிள்ளை வளர்க்காள், தவிடு தின்னி கோழி வளர்க்காள்.

தான் தேடாத பொன்னுக்கு மாற்றும் இல்லை, உரையும் இல்லை.

தான் தேடிய பொருளைச் செலவழிக்க அடுத்த வீட்டுக்காரன் உத்தரவு வேண்டுமா?

தான் தொழும் தெய்வம் ஆனாலும் பொய்ச் சத்தியம் செய்தால் சகிக்குமா?

தான் தோன்றித் தம்பிரானாய் இருக்கிறான். 12575


தான் தோன்றிப் பெருமாள்.

தான் பத்தினியாய் இருந்தால் தேவடியாள் தெருவிலேயும் குடியிருக்கலாம்.

(பதிவிரதையானால்...வீட்டிலும்.)

தான் பாதி; தெய்வம் பாதி.

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்,

தான் பெற்ற குழந்தையைத் தானே சீராட்டுமாம் காம்பு இல்லாத கத்தரிக்காய். 12580

(பிள்ளையை,)


தான் பெற்றால் தாலாட்டு; தாயார் செத்தால் பிலாக்கணம்.

தான் போக மாட்டாதவன் தண்ணீர் மிடாவுக்குச் சீட்டு எழுதி விட்டானாம்.

தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு, விளக்குமாற்றையும் கெளவிக் கொண்டு போனதாம்.

தான் போகாத காரியத்துக்கு ஆள் போனால் ஒரு செட்டு.

(சொட்டு.)

தான் போகிற இடத்துக்குத் தம்பியை அனுப்பாதே. 12585


தான் போகிற காரியத்துக்கு அடைப்பக்காரன் ஒரு சொட்டு.

தான் போட்ட தாறு வந்து தாய் வாழையைப் பழித்த கதை.

தான் போனால் தாகத்துக்குத் தண்ணீர் கிடையாது; எழுதடா நூறு குடம் தயிருக்கு என்றானாம்.

தான் போனால் மோருக்கு வழி இல்லை; தயிருக்குச் சீட்டு எழுதி விட்டான்.

(தண்ணீர் மோருக்கு; தயிர் மிடாவுக்கு.)

தான் மகிழ வெண்ணெயும் எடுத்துப் புருஷன் மகிழப் பிள்ளையும் பெற்று. 12590


தான் வாழ்க்கைப்பட்டல்லவா தங்கைக்கு வரன் தேட வேணும்?

தான் வாழத் தன் சீலை வாழும்.

தான் வெட்டின குழி தனக்குத்தான்.

(குழியில் தானே விழுந்தது போல.)

தான்றிக் காயில் சனியன் புகுந்தது போல,

(தான்றி மரத்தில்.)

தானப்பனுக்கு மூக்கு இல்லை. ஆனால் சாட்சி சொல்ல நாக்குப் போதாதா? 12595

தானத் தனத்தான் சகல சம்பந்தன்.

தானத்தில் நிதானம் பிரதானம்.

(தானத்தில் பெரிது நிதானம்.)

தான தர்மம் இல்லாத உடைமைக்குத் தம்பி தாண்டவராயன் புறப்பட்டான்.

தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தானாம்.

தானம் வந்த குதிரையைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே. 12600


தானமது விரும்பு.

தானாக ஆடுகிற பேய் கொட்டைக் கண்டால் விடுமா?

தானாகக் கனியாததைத் தடியால் அடித்தால் கனியுமா?

தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.

தானாகத் தின்று தலையாய்ப் போக வேண்டும். 12605


தானாகப் பழுப்பது பழமா? தள்ளிப் பழுப்பது பழமா?

தானாக வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?

தானானா என்றால் பாட்டுக்கு அடையாளம்.

தானும் இடான்; இட்டவர்களைப் பார்த்தறியான்.

தானும் உண்ணான்; தசையிலும் போடான். 12610


தானும் உண்ணான்; பிறருக்கும் கொடான்.

தானும் ஓர் ஆளாம்; தவிடும் ஒரு கொழுக்கட்டையாம்.

தானும் போகான்; தரையிலும் கிடக்கான்.

(கிடைக்கான்.)

தானும் வாழ்கிற காலத்தில் வயிறும் சிறுக்கும்; மதியும் பெருகும்.

தானே அழகி, தம்பிரான் பெண்டாட்டி. 12615


தானே அறியாதவன் பிறர் சொன்னால் கேட்பானா?

தானே கவர்னர்; தன் புத்தி பட்லர்.

தானே கனியாததைத் தடிகொண்டு அடித்தால் கனியுமா?

தானே தான் குருக்கள் என்பார் தனங்கள் வாங்கச் சதாசிவன் பேர் பூசை செய்வார்.

(தானங்கள் வாங்க.)

தானே தானே என்பது பாட்டுக்கு அடையாளம். 12620


தானே பழுத்தால் பழமா? தடியால் அடித்தால் பழமா?

தானே வளர்ந்து தவத்தார் கொடி எடுத்தாள்.

தானே வாழ்ந்து தலைமகள் அறுக்க வேண்டுமாம்.

தாகூகிண்யம் தலைநாசம்.

(தன நாசம்.)
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_3/8&oldid=1159809" இருந்து மீள்விக்கப்பட்டது