தமிழ்ப் பழமொழிகள் 3/9
திக்கு அற்ற ஊருக்குத் திருடன் கருட கம்பம்,
12625
திக்கு அற்றவருக்குத் தியாலஜி.
திக்கு அற்றவருக்குத் தெய்வமே துணை.
திக்குக் கெட்டுத் திசை மாறிப் போகிறது.
திச்குத் தெரியாத ஊருக்குத் திருடன் கருட கம்பம்.
திக்கு லேனிவாரிகி டிமார்க்கேஷன் ஆபீஸ். 12630
- (தெலுங்கு.)
திக்கு விஜயம் செய்பவனுக்கு ஜய சுபஜய காலம் தெரியாது.
- (விஜயம் கொள்பவனுக்கு; வெற்றி தோல்வி.)
திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
- (எதற்கு?)
திகைப்பூண்டு மிதித்துத் திக்குக் கெட்டாற் போல.
திகைப்பூண்டை மிதித்தவன் போல அழுகிறான்.
திங்கள் சனி கிழக்கே சூலம். 12635
திங்கள் துக்கம் திரும்பி வரும்.
திங்களில் கேட்டார் திரும்பக் கேட்பார்.
திங்களும் சனியும் தெற்கே பார்க்க வேண்டும்.
- (நோக்க.)
திங்களை நாய் குரைத்தற்று.
- (பழமொழி நானுாறு.)
திசை தவறினாலும் வசை தவறாது. 12640
திசைப் புரட்டனுக்குப் புளுகுக்குத் தாழ்ச்சி இல்லை.
திட்டத் திட்டத் திண்டுக்கல்; வைய வைய வைரக்கல்.
திட்ட வந்து கொட்ட வந்து வட்டக் காயைப் பிதுக்கிப் போட்டாள்.
திட்டிக் கெட்டாரும் இல்லை; வாழ்த்தி வாழ்ந்தாரும் இல்லை.
திட்டுத் திடுக்கென்று விட்ட கணவனைப் போல. 12645
திட மனப்படு, தீம்பருக்கு அருகில்.
திடுக்கென்று போகிற சீவனைப் பத்திரமாய் நம்புகிறதா?
திடுக்கென்று வாழ்க்கைப்பட்டு வெடுக்கென்று அறுத்தாளாம்.
திண்டிக்கு அவசரம்; வேலைக்கு ஒளிப்பு.
திண்டிக்குத் திம்ம ராஜா; வேலைக்கு போத்த ராஜா. 12650
- (செங்கற்பட்டு வழக்கு.)
திண்டுக்கல் உப்பு இரண்டுக்கு ஒன்று.
திண்டுக்கு மிண்டென்று உளறுகிறான்.
திண்ணை தூங்கி என்றைக்கும் விடியான்.
திண்ணை தூங்கிக்குப் பெண்ணைக் கொடுப்பார்களா?
திண்ணைக்குத் தேள் கொட்டத் தண்ணீர் மிடாவுக்கு நெறி கட்ட. 12655
திண்ணைக்கு விடிந்தால் வீட்டுக்கு விடியும்.
திண்ணை தூங்கித் தடிராமன்.
திண்ணையில் இருக்கிறவனுக்குத் திடீர் என்று வந்ததாம் கல்யாணம்.
திண்ணையில் கிடந்த கிழவனுக்குத் திடீர் என்று வந்ததாம் திரட்சிக் கல்யாணம்.
திண்ணையில் தேள் கொட்டினால் மொந்தையில் நெறி கட்டிற்றாம். 12660
- (தீர்த்தமிடாவில், தண்ணீர்மிடாவில்.)
திண்ணையில் நாம் இருக்க, தெய்வம் படி அளக்க.
திண்ணையில் பெண்ணைத் திருப்பிட வைக்கிறது, மணையில் பெண்ணை மாற்றி வைக்கிறது.
- (மூலையில் பெண்னை மாற்றி வைக்கிறது.)
திண்ணை வீணன் திருவாசல் வீணன்.
- (தெருவாசல் விணன்.)
திம்மி குத்தினாலும் பொம்மி குத்தினாலும் நெல்அரிசியானால் சரி.
திரட்சிக்கு நீட்சி, புளிப்புக்கு அவள் அப்பன். 12665
- (புளியங்காய்.)
திரட்டுப் பால் புரட்டுகிறதா?
திரண்ட பெண் தேரடிக்குப் போகக் காசு எதற்கு? பணம் எதற்கு?
திரவியத்தில் அழுத்தம் ஆனவன் செத்தாலும் கொடான்.
திரள் எலி வளை எடாது,
திரிசங்கு சுவர்க்கம். 12670
திரிசங்குவின் மோட்சம்.
திரித்தமட்டும் பழுதை.
திரித்த வரையிற் கயிறு; திரியாத வரையில் பழுதை.
திரி திரட்ட எண்ணெய் இல்லை; திருச்சிராப்பள்ளிக்குத் தீவட்டி சலாம்.
திரி மிஞ்சுகிறதோ, எண்ணெய் மிஞ்சுகிறதோ? 12675
திரிமூர்த்திகளும் தேவரும் காணார்.
திரு உண்டானால் திறமை உண்டாகும்.
திரு ஏற உரு ஏறும்.
திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கு இல்லை.
திருக் காவணப் பந்தலுக்கு நிழல் உதவி வேண்டுமா? 12680
திருக்குளத்துக்குப் பாசியும் தரித்திரனுக்குப் பிள்ளையும்.
திருகாணிக்கு வலிவும் பழஞ்சாணிக்குப் புழுவும் உண்டு.
திருச்சிராப்பள்ளித் தேவடியாளுக்கு இருத்தினாற் போலக் கொண்டையாம்.
திருச்செந்தூர் முக்காணிச்சி சொருக்கை நினைத்து அழுதாளாம்.
திருட்டு உடைமை உருட்டிக் கொண்டு போம். 12685
திருட்டு உடைக்கு மத்தனம் மரக்கால்.
திருட்டுக்கு இருட்டு ஏது?
திருட்டுக்கு நவமணி,
திருட்டுக் கை நிற்காது.
திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பைத்தியக்காரப் பட்டமும் வேறு. 12690
திருட்டுச் சாமியாரும் குருட்டுக் கூத்தியாரும்.
திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற் போல்.
திருட்டு நாய்ப் புத்தி.
திருட்டு நெல்லுக்குத் தொம்பாரம் மரக்கால்.
- (மத்தளம் மரக்கால், தம்பிரான் மரக்கால்.)
திருட்டுப்பயல் கல்யாணத்தில் முடிச்சு அவிழ்க்கிற பெரிய தனம். 12695
திருட்டுப் பயலுக்குத் திரட்டுப்பாலும் சோறும்; விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.
திருட்டுப் பயலுக்குப் புரட்டுக் குருக்கள்.
- (திருட்டுப் பையனுக்கு,)
திருட்டுப் பால் குமட்டுமா?
திருட்டுப் புத்தி தலைக்கட்டுமா?
திருட்டுப் பூனைக்குச் சலங்கை கட்டினாற்போல. 12700
திருட்டுப் பூனைக்குப் போடு, திருட்டுப் பாலும் சோறும்.
திருட்டுப் பையன் கல்யாணத்தில் முடிச்சு அவிழ்க்கிறவன் பெரிய தனம்.
திருட்டுப் பையன் வருகிறான்; தவலை,செம்பை வெளியில் வையும்.
திருட்டு வாய்ந்தால் திருடமாட்டாரோ?
திருடத் தெரிந்தால் தெற்று மாற்றும் தெரிய வேண்டும். 12705
திருடத் தெரிந்தாலும் தெட்டத் தெரிய வேண்டும்.
திருடத் தெரியாதவன் தலையாரி விட்டிலே திருடினாற்போல.
திருடப் போய்த் தலையாரி வீட்டில் ஒளிந்து கொண்டது போல.
திருடப் போனாலும் தசை வேண்டும்.
- (திசை.)
திருடப் போனாலும் திசை வேணும்; அவிசாரி ஆனாலும் அதிர்ஷ்டம் வேணும். 12710
திருடன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதை.
திருடன் துணைக்குத் திருட்டு நாய்.
திருடன் புகுந்த ஆறாம் மாதம் நாய் குரைத்த மாதிரி.
திருடன் பெண்டாட்டி என்றைக்கும் மொட்டைச்சி.
- (கைம்பெண்.)
திருடன் மகன் தகப்பன் சாமி. 12715
திருடன் வீட்டு விளக்குப் போல எரிகிறது.
திருடனுக்குத் தெய்வமே சாட்சி.
திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல.
- (திருடனை.)
திருடனுக்குத் தோன்றும் திருட்டுப் புத்தி.
திருடனுக்குப் பணம்; நாய்க்கு எலும்பு. 12720
திருடனுக்கு கன்னக் கோல் வைக்க இடம் வேண்டும்.
திருடனைக் கண்டால் குரைக்குமாம்; தலைவனைக் கண்டால் குழைக்குமாம்.
திருடனைக் கொண்டு திருடனைப் பிடிக்க வேண்டும்.
திருடனைப் பதுங்கிப் பிடித்தால் அல்லவா பிடுபடுவான்?
திருடனைப் பிடிக்கத் திருடனை விடு. 12725
திருடனைப் பிடிக்க ராஜனே வேண்டும்.
திருடனையே காவல் போட்டது போல.
திருடனை ராஜமுழி முழிக்கச் சொன்னானாம்.
திருடனை வைத்துக் கதவைச் சாத்தினது போல.
திருடி என்று தெருவில் போகக் கூடாது; அவிசாரி என்று ஆனைமீதும் ஏறலாம். 12730
திருடிக்குத் தெய்வம் இல்லை; சம்சாரிக்கு ஆணை இல்லை.
திருடிக் கொடுத்ததும் அல்லாமல் பைத்தியக்காரப் பட்டமும் கிடைத்தது.
திருடிச் சென்ற கள்ளன் நல்லவன் ஆவானா?
திருடியும் குங்குலியமும் தேவருக்கே.
திருத்தக் கல்லுக்குத் தெற்கிட்டுப் பிறந்தவன். 12735
திருத்தங்கலுக்கு மறுதங்கல் கிடையாது.
- (அவ்வூரில் தங்குவது அரிது.)
திருத்தணி முருகன் வழித்துணை வருவான்.
திருத்துழாய்க்கு மணம் வாய்த்தாற் போலே.
திருநாளுக்குப் போகிறாயா என்றால் ஆம், ஆம்; திரும்பி வருகிறாயா என்றால் ஊகூம்.
திருநாளுக்குப் போகிறாயா; திண்டிக்குப் போகிறாயா? 12740
திருநாளும் முடிந்தது; எடுபிடியும் கழிந்தது.
திருநாளைக் கண் கொண்டு பார்க்கக்கூட இல்லை.
- (பார்க்க முடியவில்லை.)
திருநீற்றிலே ஒட்டாதது கழற்சிக் காய்.
திருநீற்றுக் கழற்கொடிக்காய் போல.
திருந்த ஓதத் திரு உண்டாமே. 12745
திருநெல்வேலி போய்த் திரும்பினவர் இல்லை.
- (தருபுர ஆதீன வழக்கு.)
திருப்தி இல்லாத எஜமான் வீண்.
திருப்பணி செய்யக் கருத்து இருந்தால் கருப்படியின் பேரிலே விருப்பு இருக்கும்.
- (காத்திருந்தால்.)
திருப்பதி அம்பட்டன் வேலை.
- (திருப்பதியில் நாவிதன் கிடைத்தது போல.)
திருப்பதிக் கழுதை கோவிந்தம் போடுமோ? 12750
திருப்பதிக்குப் போய்ப் பரதேசி காலில் விழுந்தானாம்.
திருப்பதிக்குப் போயும் நாய்த்தாதன் காலில் விழுந்த மாதிரி.
திருப்பதிக்குப் போனாலும் துடைப்பம் ஒரு காசு.
- (துடுப்பு.)
திருப்பதிச் சொட்டுப் படிப்படியாக எரிந்தது.
திருப்பதி நாய்க்கு இருப்பிடம் ஏது? 12755
திருப்பதியில் எத்தனையோ மொட்டை; இலந்தை மரத்தின்கீழ் எத்தனையோ கொட்டை.
திருப்பதியில் பிறந்த கடா கோவிந்தம் பாடுமா?
திருப்பதியில் மொட்டை அடித்தது போதாமல் ஸ்ரீரங்கத்தில் சிரிப்பாய்ச் சிரிக்க வந்தான்.
திருப்பதியில் மொட்டை அடித்ததும் பற்றாதா? ஸ்ரீரங்கத்தில் சிரித்ததும் பற்றாதா?
திருப்பதியில் மொட்டைத்தாதன் குறையா? 12760
திருப்பதியில் மொட்டைத் தாதனைக் கண்டாயா?
திருப்பதி க்ஷவரம்.
திருப் பார்க்கத் தீங்கெலாம் நீங்கும்.
- (சீவக சிந்தாமணி, 1151 உரை.)
திருப்புன்கூர் வெல்லம் திரட்டிக் கொடுத்தாற் போல.
திருப்பூந்துருத்தி உபசாரம்; திருநெல்வேலி ஆசாரம். 12765
திரும்பி வந்த நாயைச் செருப்பால் அடி.
திருமணை செய்யத் தெரியாதவன் தேர்வேலைக்கு அச்சாரம் வாங்கினானாம்.
திருமழபாடிப் பிள்ளையார் என்றைக்கு இருந்தாலும் ஆற்றோடே.
திருமாலை அறியாதவன் திருமாலை அறியாதவன்.
- (பெருமாளை.)
திருமுலைப் பால் உண்டார் மறுமுலைப் பால் உண்ணார். 12770
- (சீகாழித் திருமுலைப் பால் உற்சவத்தைப் பற்றியது.)
திருவண்ணாமலைக் குடைக்கு நிழல் உண்டு பண்ணுகிறதா?
திருவரங்கம் நடை அழகு.
திருவன் கண்ட பச்சையாப் போயிற்று.
திருவாக்குக்கு எதிர் வாக்கு உண்டா?
திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார். 12775
திருவாசகத்துக்கு எதிர் வாசகம் இல்லை.
- (மறு வாசகம்.)
திருவாசல் ஆண்டியும் ஒரு வேலைக்கு உதவுவான்.
திருவாதரப்பட்ட குருக்களே தண்டம்; கரியாய்ப் போன சீஷனே கொண்டேன்.
திருவாதிரை ஒரு வாய்க் களி; திருப்பிக் கேட்டால் செருப்பால் அடி.
திருவாதிரை ஒரு வாய்க் களி; திருவாய் திறந்து ஒரு வாக்களிக்கும். 12780
திருவாதிரைக் களி தினமும் அகப்படுமா?
திருவாதிரை மழை இல்லாவிடில் திருப்பி மழை காண்பது அரிது.
திருவாதிரையில் போன பொருள் திரும்பி வருகிறது கண்டிப்பு.
திருவாரூர்த் தெரு அழகு; திருவொற்றியூர்த் தேர் அழகு.
திருவாரூர்த் தேர் அசைகிறமாதிரி அசைகிறான். 12785
திருவாரூர்த் தேர் அழகு; திருவிடைமருதூர்த் தெரு அழகு; மன்னார்குடி மதிலழகு; வேதாரண்யம் விளக்கு அழகு; கும்பகோணம் கோயில் அழகு.
திருவாரூர்த் தேர் ஓட்டம்; திரும்பிப் பார்த்தால் நாய் ஓட்டம்.
திருவாரூர்த் தேருக்கு உலுக்கு மரம் போடுகிறது போல.
திருவாழ்த்தான் இருந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான்.
திருவாழ்த்தான் குதிரை வளர்த்தது போல. 12790
திருவாழ்த்தான் செத்தானாம்; அந்தப் பழி உன்னை விட்டுப் போகாதாம்.
திருவாழ்த்தான் திருவரங்கப் பொடி விற்றது போல,
திருவிடை மருதூர்த் தெரு அழகு.
திருவிழாப் பார்க்க வந்தவன் கழுத்தில் தவிலைக் கட்டி அடித்தது போல.
திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும்; நெய் வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும். 12795
திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் காக்கும்.
- (அளித்திடும்.)
திருவிளக்கு இட்டால் தீவினை தீரும்.
திருவிளக்கு இல்லா வீட்டில் பேய் குடியிருக்கும்.
திருவிளக்கு இல்லா வீடு போல.
திருவேங்கடத்தான் குடியைக் கெடுத்தான். 12800
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
தில்லும் பில்லும் திருவாதிரமும்.
தில்லும் மல்லும் அல்லல்.
தில்லை அந்தணர் கூடுவது எப்போது? ஓடுவது எப்போது?
தில்லைக் காளி எல்லைக்கு அப்பால். 12805
தில்லைக்குத் தீக்ஷிதன்; இலங்கைக்கு ராக்ஷதன்.
தில்லைக்கு வழி எது என்றால் சிவப்புக் காளை முப்பது பணம் என்றது போல.
தில்லைத் தீக்ஷிதனோ; இலங்கை ராக்ஷதனோ?
தில்லைப் பெண் எல்லை விட்டுப் போகாள்.
தில்லை பாதி, திருவாசகம் பாதி. 12810
தில்லை மூவாயிரம்; கடந்தை ஆறாயிரம்.
தில்லை மூவாயிரம்; செந்தில் ஆறாயிரம்.
தில்லை மூவாயிரம்; நாங்கூர் நாலாயிரம்.
திவசமோ, திப்பிசமோ?
திறந்த கதவுக்குத் திறவுகோல் தேடுவானேன்? 12815
திறந்த வீட்டில் நாய் நுழைகிற மாதிரி.
திறந்த வீடு செல்லாத்தாள் கோவில் போல இருக்கிறது.
தின்றவன் தின்னத் திருப்பாத்தான் தண்டம் கொடுத்தாற் போல.
தின்றதைத் தின்னும் தேவாங்கு போல் இருக்கிறான்.
தின்பதும் கொஞ்சம்; ஜீவனும் இல்லை. 12820
- (ஜீவநிலை இல்லை.)
தின்ற சோறு உடம்பிலே ஒட்டவில்லை.
தின்றது செரிக்கத் திண்ணைமேல் ஏறிக் குதிக்க.
தின்ற நஞ்சு கொல்லுமா? தின்னா நஞ்சு கொல்லுமா?
தின்ற மண்ணுக்குத் தக்க சோகை.
தின்ற மதம் கண்ணைக் கெடுக்கும். 12825
தின்றவன் தின்னக் கோம்பை; சூப்பினவன்மேல் தண்டம்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
தின்றால் கொல்லுமோ, கண்டால் கொல்லுமோ, விஷம்?
தின்று உமிழ்ந்த தம்பலத்தைத் தின்ன நினைப்பார்களா?
- (தாம்பூலத்தைத் திரும்பத் தின்ன.)
தின்று கொழுத்தால் சும்மா இருக்க ஒட்டாது.
தின்று மிகுந்த பாக்கைத் திரும்பவும் போடுவார்களா? 12830
தின்று ருசி கண்டவன் திண்ணைவிட்டுப் போகான்; பெண்டு ருசி கண்டவன் பின்னையும் போகான்.
தின்னத் தவிடு இல்லை; தங்கச் சரப்பளி தொங்கத் தொங்க ஆடுகிறதாம்.
தின்னத் தின்ன ஆசை; துடைப்பக்கட்டைப் பூசை.
தின்னத் தின்னக் கேட்குமாம் பிள்ளை பெற்ற வயிறு.
தின்னத் தெரியாமல் தின்பானேன்? 12835
தின்னத் தெரியாமல் தின்று பேளத் தெரியாமல் பேளுகிறது.
தின்னப் பொசிப்பு உள்ளவனுக்குத் திண்ணைக் கட்டிலே தேன்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
தின்ன வந்த பிடாரி தெருப் பிடாரியைத் துரத்திற்றாம்.
தின்ன வயிற்றுக்குச் சோறும் மொட்டைத் தலைக்கு எண்ணெயும,
தின்ன வேண்டாம்; உண்ண வேண்டாம்; மகளே, மூஞ்சியாவது கழுவிப் பொட்டு வைத்துக் கொண்டு போ. 12840
தின்னா வீட்டில் தின்னி.
தினம் தவநிலையில் மனசை நிறுத்து.
தினவு எடுத்தவன்தான் சொறிந்து கொள்வான்.
தினவுக்குச் சொறிதல் இதம்.
தினை அளவு செய்தாருக்கும் பனை அளவு செய்.
தினை அறுக்கச் சென்ற இடத்தில் பனை முளைத்தது போல. 12845
தினை நன்றி செய்தால் பனையாகத் தோன்றும்.
தினைப் பயிறும் பாலும் தின்னாதிருந்தும் வினைப்பயனை வெல்வது அரிது.
தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.