தமிழ்மொழி இலக்கிய வரலாறு/இலக்கியம்
3. இலக்கியம்
இலக்கியம்
சொற்களையும் வாக்கியங்களையும் உண்டாக்கிப் பாடவும் பேசவும் அறிந்த மக்கள். எழுத்து முறையைக் கண்டறிந்த பின்பு, தாம் அதுவரை வாழையடி வாழையாக அறிந்து வைத்திருந்த சமுதாயக் கருத்துகளையும் சமயக் கருத்துகளையும் பாக்களில் வடித்தனர். காலம் செல்லச் செல்ல அறிவு வளர வளர, மொழி வளம் பெற்றது. மொழி வல்ல அறிஞர்கள் மக்கள் படைத்த இலக்கியங்களையும் பேச்சு மொழியையும் அடிப்படையாகக் கொண்டு மொழிக்கு இலக்கணம் வகுத்தனர். பின்வந்த புலவர்கள் அந்த இலக்கண அமைதிக்கேற்பத் தமிழர் பழக்கவழக்கங்களையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் குறிக்கும் செய்யுட்களைச் செய்தனர்.
இலக்கியம் என்பது மக்களுக்கெல்லாம் பொதுவாகப் பயன்படும் பொருளை உடையதாய் இனிய வகையில் சொல்லப்படுவதாய் இருத்தல் வேண்டும்; சொற்கட்டுச் சிறந்து இன்பம் பயத்தலைக் குறிக்கோளாகப் பெற்றிருத்தல் வேண்டும்.[1] மக்களுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறும் செய்யுட்களோ நூல்களோ படிப்போரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, அவரது வாழ்க்கையையும் வழிப்படுத்த வல்லன. இவையே, இலக்கியம் எனப்படும்.[2] அபிமன்யு கொல்லப்பட்ட அன்றிரவு அவனை நினைந்து அவன் தந்தையான அருச்சுனன் புலம்பும் பகுதியைப் படிப்பவர், தாமும் கண்ணீர்விட்டு அழுதலைப் பார்க்கின்றோம். இறப்பு எல்லோருக்கும் பொது; இறந்தது குறித்துப் புலம்புதலும் பொது. எனவே, இப்பகுதி அனைவர் உள்ளங்களையும் ஈர்க்கின்றது,
வாழ்க்கை நிகழ்ச்சிகளை எவரும் கூறலாம். ஆயின், அவற்றைச் சாதாரண மனிதன் கூறுவதற்கும் இலக்கிய இலக்கணம் கற்றுள்ள புலவன் கூறுதலுக்கும் நிறைந்த வேறுபாடு உண்டு. சாதாரண மனிதன் கூறுவது ‘எலும்புக் கூடு’ போன்றது. கற்று வல்ல புலவன் கூறுவது ‘உயிருள்ள உடல்’ போன்றது. சிறந்த புலமை வாய்ந்த சான்றோர் கலைத்திறம் பொருந்தப் பொருளைப் புகட்டுவதால் மட்டுமே நம் உணர்வு கவரப்படுகின்றது. இன்ன பொருளை இன்னின்ன சொற்களால் இன்னின்னவாறு இன்னின்ன அமையத்தில் சொல்லவேண்டும் என்பதை அப்பெரு மக்கள் நன்கறிவார்கள். அவர்கள் செய்யும் செய்யுட்களோ, நூல்களோ கற்பவர் உள்ளத்தைப் பிணைக்க வல்லவை. இவ்வாறு சிறந்த முறையில் ஆக்கப் பெற்ற நூல்கள் ‘தலையாய இலக்கியங்கள்’ என்று அறிஞரால் கருதப் பெறும். அப்பெருமக்களது செய்யுட் சிறப்பினை நன்கு உணர்ந்த கம்பர் பெருமான் பின்வருமாறு பாராட்டுதல் காண்க;
“புவியினுக் கணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற் றாகி
அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்த கோதா விரியினை வீரர் கண்டார்.”
இலக்கியத் தோற்றம்
ஒரு சமுதாயத்தில் இலக்கியம் வெளிப்படுதற்குக் காரணங்கள் யாவை? ஒருவருடன் ஒருவர் கலந்து வாழ்தல் மக்கள் இயல்பு. அங்ஙனம் மக்கள் ஒன்றுகூடி வாழ்ந்தால் தான் பொருள் உணர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் உண்டாகும். மக்கள் தம் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும். பிறர்க்கு எடுத்துக்காட்ட விழைதல் இயல்பாகும். இங்ஙனம் எடுத்துக்காட்டி, கேட்பவர் அவற்றை அறியும் பொழுது, தம்மைப் போலவே எண்ணி மகிழ்வதைப் பார்ப்பதில் சிறந்த இன்பம் தோன்றுகிறதன்றோ! இவ்வாறு மக்கள் தம்மை வெளிப்படுத்துவதற்கு விரும்பும் விருப்பமிகுதி இலக்கியத் தோற்றத்திற்கு ஒரு காரணமாகும். இம்முறையில் எழுந்தவையே அகப்பொருள், புறப்பொருள் பற்றிய பாடல்கள் எனலாம்.[3]
மக்கள் தம் கருத்துகளைப் பிறருக்கு எடுத்துக் கூறுவதோடு, பிறர் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அறிந்து கொள்வதில் விருப்பம் காட்டுகின்றனர்; அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கண்டு இன்புறுகின்றனர் அல்லது துன்புறுகின்றனர்; அவற்றைப் பிறருக்கு எடுத்துக்கூறி அவற்றின் படிப்பினையை உணர்த்துகின்றனர். இவற்றால் அவர்க்குத் தம்மை யொழிந்த பிறரிடத்துள்ள பற்றுக்கோடு நன்கு புலனாகும். இந்தப் பற்றுக்கோடே சிலப்பதிகாரம் முதலிய பெருங்காவியங்கள் எழுதக் காரணமாய் அமைந்தது. முற்றும் துறந்த இளங்கோ அடிகள் இப்பற்றின் காரணமாகவே சிலப்பதிகாரத்தை யாத்தனர் என்பது,
“அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதுஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை யுருத்துவக் தூட்டுமென் பதுஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
காட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்.”
மக்கள், துன்புறும் இவ்வுலக வாழ்க்கையைக் கண்டு கண்டு இன்பம் காணும் முறையில் ஈடுபடுதலும் இலக்கியத் தோற்றத்திற்கு ஒரு காரணமாகும். இதனால்தான், ‘இல்லது-இனியது நல்லது புனைந்துரை’ எனப் புலவரால் நாட்டப்பெற்ற ஒழுக்கம் நான்கெனச் சான்றோர் கூறியுள்ளனர். கோவை, கலம்பகம் போன்ற புனைந்துரை நூல்கள் இம்முறைபற்றி எழுந்தனவேயாகும்.[5]
“உள்ளத்தைத் திறப்பதற்கும், அதைத் திருத்து வதற்கும், அதைச் செம்மைப்படுத்தற்கும், புரிந்துகொண்டு படிப்பதைச் செரிப்பதற்கும், தவறுகளைப் போக்கும் வன்மை உண்டாக்கற்கும், நல்லவற்றை மேற்கொள்வதற்கும், பிறர்க்கு எடுத்துரைப்பதற்கும். பிறரை நல்வழிப்படுத்தற்கும் இலக்கியம் பயன்படல் வேண்டும். இந்நிலை யிற்றான் அஃது இலக்கியம் எனப்படும்,” என்பது கார்டினல் நியூமன் என்பவர் கருத்தாகும்.[6]
இவ்வாறு இலக்கியம் பல காரணங்களைக் கொண்டு தோன்றுகிறது. இவற்றுள் ஒழுங்கு, வரையறை, அழகு, பயன் ஆகியவை நிறைந்துள்ள இலக்கிய நூல்களே படிப்போர்க்கு இன்ப உணர்ச்சியை உண்டாக்கும்.[7] அவையே ஒரு சமுதாயத்தின் அழியாத செல்வங்களாகும். நம் தமிழ் நூல்களுட் பல இத்தகைய அழியாத செல்வங்களாகும். அவற்றுள் தலை சிறந்தவை சங்க நூல்கள்.
- ↑ 1. செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 1, பக். 35-36.
- ↑ 2- Literature is thus fundamentally an expression of life through the medium of language.–An Introduction to the Study of Literature, Hudson, P 11.
- ↑ 3. செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 1, பக். 70, 73
- ↑ 4. செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 1, பக். 71-72.
- ↑ 5. ௸, பக். 72.
- ↑ 6. Selected Essays from the writings of Viscount Morley, edited by H. G. Rawlinson, p. 51.
- ↑ 7. செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 1. பக். 72-73