தமிழ்மொழி இலக்கிய வரலாறு/தமிழின் தொன்மை

விக்கிமூலம் இலிருந்து

2. தமிழின் தொன்மை

திராவிட மொழிகள்

இப்போது இந்தியாவில் உள்ள திராவிட மொழிகள் பன்னிரண்டு என்பது கால்டுவெல் கருத்து. அவற்றுள் ஆறு செப்பம் செய்யப் பெற்றவை; ஆறு செப்பம் செய்யப் பெறாதவை.[1] செப்பஞ் செய்யப்பட்டவை: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு. செப்பஞ் செய்யப் படாதவை: துதவர் மொழி, கோத்தர் மொழி, கோந்த், கூ(கந்த்), ஒரொவன், ராஜ்மஹால் என்பன.

இம்மொழிகள் அனைத்தும் பழைய திராவிடமொழி ஒன்றிலிருந்து பிரிந்தன என்புது ஆராய்ச்சியாளர் துணிபு. இவை அனைத்திலும் சிறந்தது தமிழே என்றும், அதனிடந்தான் பழைய திராவிட மொழிக்குரிய அமைப்புகள் முற்றக் காணக்கிடக்கின்றன என்றும் கால்டுவெல் கூறியுள்ளார்.[2]

சென்னைப் பல்கலைக் கழகச் சார்பில் வெளிவந்துள்ள “திராவிட ஒப்பியல் அகராதி”யில் இரண்டாயிரம் சொற்கள் வெளிவந்துள்ளன. அவை தமிழ்-தெலுங்கு-கன்னடம்-மலையாளம்-துளு ஆகிய மொழிகளில் பொதுவாக வழங்கப்படுபவை,[3] அவை, இம்மொழிகள் ஒரே இனத்தவை என்னும் உண்மையை நன்கு உணர்த்துகின்றன.

ரிக்வேதத்தைச் சேர்ந்த ‘அயித்ரேய பிராம’ணத்தில் ஆந்திரர் குறிப்பிடப்பட்டுள்ளமையால் வேதகாலத்துக்கு முன்னரே பழைய திராவிட மொழியிலிருந்து தெலுங்கு பிரிந்ததாகல் வேண்டும்.[4] கன்னடமொழி, கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட காலத்திலேயே வேறுபட்டிருத்தல் கூடியதே என்பது, கி.மு.வில் செய்யப்பட்ட உரோம நாடகமொன்றில் கன்னட மொழிச் சொற்களமைந்த காட்சி ஒன்று காணப்படலால் நன்கறியக்கிடக்கிறது. “வடவேங்கடம் தென்குமரி” எனப் பனம்பாரனார் பாயிரம் தமிழகத் தெல்லை கூறலாலும் தொல்காப்பியர் காலத்துக்கும் முன்னரே (சுமார் கி.மு. 300-க்கு முன்பே ) கன்னடம் தனி மொழியாயிற்றென்னும் உண்மையை உணரலாம்.

மலையாள நாடே தமிழ் நாடாக இளங்கோ அடிகள் காலத்தில் இருந்ததென்பது இலக்கியம் கண்ட சான்று. கன்னடத்தின் தொடர்பாலும், கிரந்த எழுத்துகளின் வன்மையாலும், நம்பூத்ரிகள் செல்வாக்காலும், பௌத்தசமண சமயப் பிரசாரம் வடமொழி கலந்த தமிழில் செய்யப்பட்டமையாலும், அங்கிருந்த தமிழ் கொடுந்தமிழாகி மிகப்பிற்பட்ட காலத்தே வேறு பிரிந்தது. இதனைத் தமிழின் உடன் பிறந்தாள் என்பதைவிட ‘மகள்’ எனக் கூறலே மாண்புடைத்து.[5]

கன்னடம் வேறுபட்ட காலத்திற்குப் பிறகு கன்னடத்தினின்று சிறிதளவு வேறுபட்டுப் பிரிந்தது ‘துளு’ என்னல் தவறாகாது. குடகு மொழி தமிழின் தூய்மையைப் பலவழிகளிலும் போற்றிவருகிறது. அதன் மொழியமைப்பு, நடை ஆகிய இரண்டும் தமிழ்-மலையாள மொழிகளை ஒத்துள்ளது. கன்னடரும் மலையாளிகளும் பழக்கங்களில் பிற்காலத்தில் மாறினாற்போலக் குடகு நாட்டார் மாறாமல் பண்டைத் திராவிடர் நாகரிகத்தை இன்றும் பெரிய அளவில் பின்பற்றுதல் கவனிக்கத் தக்கது.[6]

இனிச் செப்பஞ் செய்யப்படாத திராவிட மொழிகளைக் காண்போம். துதவர் மொழி பழைய கன்னடத்திலிருந்து கிளைத்ததாகும். கோத்தர் மொழியும் பழைய கள்னடத்தோடு தொடர்புடையது. கோந்த் மொழி தமிழ் மொழியுடன் நெருங்கிய ஒற்றுமையுடையது. கூ அல்லது கந்த்மொழி தமிழையும் கன்னடத்தையும் தழுவியுள்ளது. ராஜ்மஹாலிலும் ஒரொவளிலும் திராவிடச் சொற்கள் நிரம்பவுள்ளன.[7]

துதவர் மொழியும் கோத்தர் மொழியும் நீலகிரி மலைகளில் வாழும் துதவரும் கோத்தரும் பேசும் மொழிகள். கோந்த் மொழி நடு இந்திய மலைவாணருள் பெரும் பிரிவினர் பேசுவது. கூ அல்லது கந்த் மொழி பேசுவோர் கோந்த் வானாவின் கிழக்குப்பகுதி, ஒரிஸ்ஸா மலைத் தொடர்கள், பஸ்தர் வரையிலுள்ள மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் வாழ்கின்றனர். ஒரொவன் மொழி நடு மாகாணத்து நாகபுரியிலும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மலைப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. ராஜ்மஹால் மொழி வங்க மாநிலத்தில் கங்கையாற்றுக்குத் தெற்கே உள்ள ராஜ்மஹால் மலைகளிலுள்ள மக்களால் பேசப்படுவது.

இவை செப்பஞ் செய்யப்படாத மொழிகளாயினும் தென்னாட்டு மொழிகளை ஒத்திருத்தலை நோக்க, இம்மொழிகள் பரவியிருந்த-இருக்கின்ற இடங்களை நோக்க, ஆரியர் வருகையால் சிதறுண்ட இம்மக்கள் மலைப்பகுதிகளிற் சென்று வாழலாயினர் என்பதும், அங்ஙனம் சென்ற போதிருந்த நிலைமையிலேயே இம்மொழிகள் பெரிதும் அமைந்துள்ளன என்பதும், பின்னர் ஆரிய மக்கள் தொடர்பால் மிகச் சிறிதளவே இவை வேறுபட்டுள்ளன என்பதும் ஈண்டு உணரத்தகும் செய்திகளாகும்.

வட இந்தியாவில் திராவிடம் பலுசிஸ்தானத்தின் வட பகுதியில் ‘பிராஹுய்’ என்னும் மொழி ஒன்று வழக்கில் உள்ளது. மலைவாணர் அம்மொழியைப் பேசுகின்றனர். அது திராவிட மொழியைச் சேர்ந்தது. என்று கூறுதலே ஏற்புடையது எனக் கால்டுவெல் கூறுதல் கவனிக்கத்தக்கது.[8] தமிழுக்கே உரிய பால்பகா அஃறிணைப்பெயர் இம்மொழியில் காணப்படலும், இப்பிராஹுய் பேசுவோர் தென்னிந்தியத் தமிழ் மக்களை எல்லாக் கூறுகளிலும் ஒத்துள்ளமையும் அவர்கள் தமிழரே எனக்கூறத் துணிவு தருகிறது. 1911 இல் எடுக்கப்பட்ட மக்கட் கணக்கிலும் பிராஹுய் மொழியைத் திராவிட மொழிகளிலேயே சேர்க்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது. “பிராஹுய் திராவிட மொழி எனக் கூறக்கூடவில்லை; ஆயினும், அது திராவிட மொழியின் உயிர் நாடியைப் பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை.” எனவே, பலுசிஸ்தானத்துக்கு அருகில் மிகப் பழைய திராவிட நாகரிகம் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.[9]

“‘யான்’, ‘நான்’ என்பன தமிழ், மலையாளம், கூ, கோந்த் மொழிகளில் இருத்தல்-மிகப்பழைய மொழிகள் எனப்படுவனவற்றின் காலஎல்லையையும் கடந்து செல்கிறது. இன்றுள்ள நூல்கள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமையுடையவை. இக்காலத்தைப்போல மூன்று மடங்கு காலம்-அதாவது, மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு பண்டைத் தமிழரும் கோந்த் மக்களும் வட இந்தியாவில் ஒன்றுபட்டிருந்து ஒரே மொழியைப் பேசிவந்த காலத்திற்கு ‘நான்-யான்’ என்பன நம்மை அழைத்துச் செல்கின்றன.” இது கால்டுவெல் கூற்று.[10]

இப்போதுள்ள தமிழ் நூல்களில் பழைமையானது தொல்காப்பியம். கால்டுவெல் காலத்தில் தொல்காப்பியம் வெளிப்படவில்லை. அதன் காலம் சுமார் 2300 ஆண்டுகட்கு முற்பட்டதெனக் கொள்ளலாம். அக்காலத்துக்கு மும்முறை மிகுதிப்பட்ட காலத்தே பண்டைத் தமிழரும் கோந்த் மக்களும் வடஇந்தியாவில் ஒன்றுபட்டிருந்து ஒரே மொழியைப் பேசிவந்த காலத்துக்கு ‘நான்-யான்’ என்பன நம்மை யழைத்துச் செல்கின்றன, என்று கால்டுவெல் கூற்றை நாம் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்,

இங்குக் கூறப்பெற்ற மக்களுள் கோந்த் வகுப்பினர் பழைய தமிழ்ப் பழக்கவழக்கங்களை இன்றும் விட்டிலர் என்பதை அறிதல் வேண்டும் அவர்கள் நிலமகளைத் ‘தரி(ரை)ப் பெண்’ என்று அழைக்கின்றனர்; வழிபடுகின்றனர்.[11] தொல்காப்பியம் சற்றேறக்குறைய 2300 ஆண்டு கட்கு முற்பட்டது. அதைவிட இரண்டு மடங்கு காலம் சென்றிருக்க வேண்டும் என்னும் கூற்றால் சுமார் 7000 ஆண்டுகட்கு முன்னரே தமிழர்-கோந்த்மொழியினர் முதலியோர் ஒன்றாக நடு இந்தியாவில் வாழ்ந்துவந்தனராதல் வேண்டும் என்னும் கால்டுவெல் கூற்று நோக்கத் தக்கது.

“பிராக்ருத மொழிகள் இப்போதுள்ள வடஇந்திய மொழிகளாக மாறுவதற்கு நெடுங்காலமுன்பு ‘கூ’ வகுப்பாரும் தமிழரும் நடு இந்தியாவில் ஒன்றுபட்டவராய் ஒரே மொழி பேசியவராய் (வரலாற்றுக் காலத்துக்கு நெடுங்கால முன்பு) இருந்திருத்தல் வேண்டும். என்னை? கூ மொழியிலும் பன்மையைக் குறிக்கப் பிரதிபெயர்ச் சொற்களில் ‘ம்’ (நாம், நீம், தாம்) வழங்கப்பட்டிருத்தலே போதிய சான்றாதலின் என்க”.[12]

“திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் (கோந்த் பேசுவோர், கூ பேசுவோர் முதலியோர்) நடு இந்தியாவிலும் வங்காளத்தின் அருகிலும் இன்னும் காணப்படல்-இந்தியா வின் பெரும் பகுதியில் திராவிட மக்கள் இருந்தமையை இனிது விளக்குவதாகும்.[13]

“வங்காள மக்களிடையே மிகப்பரந்த அளவில் திராவிடக் கலப்பு ஏற்பட்டு உள்ளது. வங்காளத்திலும் சூடிய நாகபுரி, ஒரிஸ்ஸா போன்ற இடங்களிற் பரவியுள்ள ‘ப்ரூஹியர்’ திராவிடரே யாவர். ‘காக்’ என்பவரும் இவ்வினத்தையே சேர்த்தவர். இவ்விருவர் தொகை ஏறக்குறைய நாற்பது இலட்சம் ஆகும்.”[14]

வேறு சான்றுகள்

இதுகாறும் கூறியவாற்றால், ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியா முழுமையிலும் திராவிடமொழி பரவி இருந்தது என்பது நன்கு புலனாயிருக்கும். இங்ஙனம் பரவியிருந்தமை உண்மை என்பதைப் பின்வரும் உண்மைகளும் மெய்ப்பித்தல் காண்க:

“வடமொழியில் சில சொற்கள் வேற்று முகத்துடன் காணப்படுகின்றன, அவற்றின் பகுதி முதலியவற்றை வட மொழித் துணைக்கொண்டு அறியக் கூடவில்லை. அவை வடமொழியல்லாத பழைய இந்திய மொழியைச் சேர்ந்தவையாக இருத்தல் வேண்டும். பழையமொழி ஒன்று வடமொழின் உயிர் நாடியிலேயே கை வைத்துவிட்டதென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.”[15]

கோட்டா (Ghots) என்பது குதிரையைக் குறிக்கும் வட சொல். குர்ரம்-தெலுங்கு, குதிரை-தமிழ். குதிர-மலையாளம், குதுரெ-கன்னடம், குத்ரெ-துளு. குதிரை இந்தியாவில் உள்ளது. எனவே, வடசொல் (கோட்டா) திராவிடச் சொல்லிலிருந்தே வந்திருக்க வேண்டும். அங்ஙனமாயின், தக்கணப் பகுதிக்குத் தென்பால் உள்ள திராவிட மொழிகள் ஒரு காலத்தில் வட இந்தியாவில் (ஆரியர் வந்தபோது) இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகும். எனவே, இந்தியாவில் ஆரியமொழிக்கு முற்பட்டது திராவிட மொழியாகும்.[16]

வடமொழியும் திராவிட மொழியும் நீண்ட காலம் ஒன்றோடொன்று நெருங்கி இருந்தன என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.[17]

விசிறி-தமிழ், விசனகர்ர-தெலுங்கு, வீசரி-மலையாளம், பீசணிகெ-கன்னடம்; வீஜன, வ்யஜன-வடசொற்கள். இச்சொல்லும் திராவிட மொழியினின்றும் கடன் வாங்கப்பட்டதே. இங்ஙனமே மயூரம் (மயில்), பல (பழம்), ஓடா (ஓடர் ), முக்தா (முத்தம்) என்பன.

ஆரியர் வேற்று நாட்டிலிருந்து வந்தவர். ஆதலின் அவர்கள் இந்தியாவில் கண்ட புதிய செடிகட்கும் மாங்கட்கும் வேறு பொருள் கட்கும் உரிய சொற்களைக் கடன் பெற்றிருத்தல் இயல்பே. எனவே, அவர்கள் பஞ்சாப் பகுதியில் குடியேறியதும், அங்கிருந்த திராவிடரோடு கலப்புண்டு திராவிடச் சொற்கள் பலவற்றைப் பெற்றிருத்தல் இயல்பே. ஆரியரது முதல் வேதமாகிய ரிக் வேதத்திலேயே பல திராவிடச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவை கதலி (வாழை), ஓடா (ஓடம்), முக்தா (முத்தம்), தாம்பூலா (தமல ஆக்கு-தெலுங்கு) முதலியன. லிங்க (லிங்கம்) என்பது ஆரியச் சொல் ஆகாது.[18] ‘யமன்’ என்பது வடமொழி சுடன் பெற்ற திராவிடச் சொல்.[19] மலைய, வளைய, பட்டின, கடம்ப என்பவை தமிழ்ச் சொற்களே.[20] ஆரியர் வருகைக்கு நீண்டகால முன்னரே திராவிடர் இந்தியா முழுமையும் பரவியிருந்தனர் என்பதில் ஐயமில்லை.[21]

“த, ட-இவற்றை முதலாகக் கொண்ட சொற்கள் ‘சிந்தி மொழியில்’ ஆரியச் சொற்களாகக் காணப்பட்டில. ‘த, ட’ இரண்டுமே ஆரியத்துக்கே புதியவை. எனவே, இவை பழைய இந்திய மொழி ஒன்றிலிருந்து கடன் பெற்றனவாதல் வேண்டும். இவை திராவிட மொழிக்கே உரியவை.”[22]

“இந்து எண்ணங்கள் முதலியன உரம் பெறாத ரிக்வேத காலத்திலேயே திராவிட மொழியும் திராவிடர் பழக்கவழக்கங்களும் ஆரியர் மதத்தையும் அவர் தம் மொழியையும் தாக்கியுள்ளன என்பது அறியக் கிடக்கின்றது. ரிக்வேதத்தில் ‘மறுபிறவி’ பற்றிய பேச்சே இல்லை. திராவிடர் தெய்வங்கள் (சிவன், முருகன், கொற்றவை முதலியன) ஆரிய வேதங்களில் இடங்கொண்டன. ரிக்வேத நடை, மொழி, உணர்ச்சிகள் என்பவை தூய ஆரிய முறையில் இருப்பினும், உச்சரிப்புத் திராவிட மொழியால் மாறுதல் பெற்றுவீட்டது; ரிக்வேத வடமொழி, திராவிடத்தினின்றும் கோல் மொழிகளிலிருந்தும் வார்த்தைகளைக் கடன் பெற்று விட்டது. திராவிட மொழிக் கலப்பு வடமொழியில் மிகுந்த அளவில் ஏற்பட்டதாற்றான் பிராக்குரு மொழிகள் தோன்றலாயின.”[23]

“வட இந்திய ‘பிராமி’ எழுத்து முறை ஆரியரால் கொள்ளப்பட்டு வளர்க்கப்பட்டது. தென் பிராமி எழுத்துகள் திராவிடரால் வளர்க்கப்பட்டவை.”[24]

“பிராமி எழுத்துகள் தமிழுக்கெனவே ஏற்பட்டவை என்பதும், அவை வேறு விகற்பங்களுடன் வடமொழியாக ஆரியரால் மாற்றிக்கொள்ளப்பட்டன என்பதும் அறியக்கிடக்கின்றன.”[25]

வடமொழியையும் பிராக்ருத மொழிகளையும் திராவிட மொழிகளையும் நன்கு ஆராய்கையில், ஒரு காலத்தில் வட இந்தியா முழுமையும் திராவிடர் இருந்தனர் என்பது நன்கு புலனாகும். பாலி முதலிய பிராக்ருத மொழிகள் வடமொழிக்குரிய முதற்கூட்டு உருபுகளை (Pre-Positions) அறவே விட்டுத் திராவிட மொழிகள் பயன்படுத்தும் பிற்கூட்டு உருபுகளை (Post-Positions) கையாளலாயின.[26]

முடிவுரை

மேலே கூறப்பெற்ற ஆராய்ச்சியாளர் கூற்றுகளைக் கொண்டு-ஆரியர் வருகைக்கு முன்பு வட இந்தியாவிலும் திராவிட மொழி பரவி இருந்தது என்பதும், ஆரியர் வந்து ரிக்வேதம் செய்த காலத்தில் அந்நூலுள் திாரவிடச் சொற்களும் இடம் பெற்றன என்பதும், திராவிட மொழியின் அமைப்பைப் பெரும்பாலும் காட்டவல்லது தமிழே என்பதும் நன்கு புலனாதலைக் காணலாம்.


  1. *இப்பொழுது ஏறத்தாழ 20 என்று கணக்கிட்டுள்ளனர்.
  2. Comparative Grammar of the Dravidian Languages, Int. pp. 81-83 (ed. 3)
  3. Dravidian Comparative Vocabulary, vol. 1.
  4. C.G, (Int.) p, 26: ‘Dravidic Studles’, p. 32
  5. Comparative Grammar, Int. pp. 18-19.
  6. Ibid.p. 33.
  7. Compantive Grammar, pp. 625-632.
  8. Comparative Grammar, pp. 39, 683.
  9. Ibid. p. 633.
  10. Ibid. p. 368.
  11. Thurston, Castes and Tribes of Southern India. vol. 3, p. 372.
  12. Caldwell, Comparative Grammar, p. 412.
  13. Caldwell, Comparative Grammar, Int. p. 37
  14. Col. Dalton, 'Ethnology of Bengal', p. 243.
  15. Dr. Beames, A Comparative Grammar of the Modern Aryan languages of India, p. 128.
  16. Pre-Aryan and Pre-Dravidian in India, pp 47-49.
  17. Ibid. p. 52; ‘பூஜை’ என்பது வடமொழிச் சொல்லாயினும், திராவிட மூலத்தையே கொண்டிருத்தல் வேண்டுமென்பது ஆராய்ச்சியாற் புலனாகும். -Dravidic Studies, vol. iii, p. 60.
  18. Pre-Aryan and Pre-Dravidlan in india, Ind, p. 20
  19. Dr. Kittel, Kannada Dictionary, preface, p. 22.
  20. Dravidic Studies, part ill, pp. 14, 26
  21. C. Narayana Rao, An Introduction to Philology. pp. 104, 105, 147
  22. Dravidic Studies, part iii, p. 58
  23. Dr. S. K. Chatterji, Origin and Development of the Bengali Language, vol i, pp. 42-45.
  24. Heras's Article, The New Review, p. 7, July 1936.
  25. T. N. Subramanyan, Article in "Kalai Magal", Part 70
  26. Dravidic Studies, Part iii pp. 57 and 61.