தமிழ்மொழி இலக்கிய வரலாறு/பதிற்றுப்பத்து

விக்கிமூலம் இலிருந்து


16. பதிற்றுப்பத்து

முன்னுரை

ஒவ்வொரு சேரவேந்தனைப் பற்றிப் பத்துப்பத்துப் பாக்களாகச் சேரவேந்தர் பதின்மரைப் பற்றிய நூறு பாடல்களைக் கொண்டமையால், இந்த நூல் பதிற்றுப் பத்து என்னும் பெயர் பெற்றது. இன்றுள்ள நூலில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் இல்லை.

பாடல் பெற்ற சேரர் : இரண்டாம் பத்து உதியஞ்சேரலின் மகனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றியது, மூன்றாம் பத்து நெடுஞ்சேரலாதன் தம்பியான பல்யானைச் செல்குழு குட்டுவனைப் பற்றியது; நான்காம் பத்து நெடுஞ்சேரலாதன் மகனான களங்காய்க்கண்ணி நார் முடிச் சேரலைப் பற்றியது; ஐந்தாம் பத்து நெடுஞ்சேரலாதன் மகனான செங்குட்டுவனைப் பற்றியது. ஆறாம் பத்து நெடுஞ்சேரலாதன் மகனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றியது. ஏழாம் பத்து அந்துவஞ்சேரல் இரும்பொறையின் மகனான செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றியது. எட்டாம் பத்து அவ்வாழியாதன் மகனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியது. ஒன்பதாம் பத்து, பெருஞ்சேரல் இரும்பொறை யின் மகனான இளஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியது. எனவே, இவ்வெட்டுப் பத்துகளும் இரண்டு குடும்பத் தினரைப் பற்றியவை என்பது தெளிவு.

சேரர் கொடை : இரண்டாம்பத்தைப் பாடியவர் குமட்டூர்க் கண்ணனார் என்பவர். சேரமான் அவருக்கு உம்பற் காட்டைச் சேர்ந்த ஐந்நூறு ஊர்களைப் பிரமதாயமாகக் கொடுத்தான். தன் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டின் தென் தென்பகுதிவருவாயில் முப்பத்தெட்டு ஆண்டுகள் பாகம் கொடுத்தான் என்று அவனைப் பற்றிய பதிகம் கூறுகிறது.

மூன்றாம் பத்தைப் பாடியவர். பாலைக் கெளதமனார் என்பவர். சேரன் அவர் விருப்பப்படி பத்துப் பெருவேள்விகளைச் செய்வித்து அவரையும் அவர் மனைவியையும் துறக்கம் புகுவித்தான். நான்காம் பத்தைப் பாடியவர். காப்பியாற்றுக் காப்பியனார் என்பவர். சேரன் அவருக்கு நாற்பதுநூறாயிரம் பொன் பரிசளித்தான்; தான் ஆண்ட நாட்டின் ஒரு பகுதியையும் கொடுத்தான். ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர் என்பவர். சேரன் உம்பற்காட்டு வாரியை அவருக்கு அளித்தான்.

ஆறாம் பத்தைப் பாடியவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்பவர். சேரன் அவருக்கு ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம் காணமும் பரிசிலாய் வழங்கினான். ஏழாம் பத்தைப் பாடியவர் கபிலர் என்பவர். சேரமான் அவருக்கு நூறாயிரம் காணம் பரிசில் கொடுத்தான்; "நன்றா” என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் அவருக்கு வழங்கினான். எட்டாம் பத்தைப் பாடியவர் அரிசில் கிழார் என்பவர். சேரன் அவருக்கு ஒன்பது நூறாயிரம் காணம் வழங்கினான்; தன் அரசாட்சியையும் கொடுத்தான். புலவர் ஆட்சியை அவனிடமே ஒப்பு வித்தார்; தாம் அவனுக்கு அமைச்சராய் அமர்ந்தார். ஒன்பதாம் பத்தைப் பாடியவர் பெருங்குன்றுார் கிழார் என்பவர். சேரன் அவருக்கு முப்பத்தோராயிரம் பொன் கொடுத்தான், அவருக்குத் தெரியாமல் ஓர் ஊரையும் மனையையும் வழங்கினான்; அம்மனையில் செல்வத்தை நிரப்பினான்.

பதிற்றுப்பத்தின் காலம் : மேலே கூறப்பெற்ற சேர மன்னர் எண்மருள் ஐந்தாம் பத்துக்கு உரியவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஆவன். இவனே வடவரை வென்று கண்ணகிக்குக் கல் கொண்டு வந்த சேரன் செங்குட்டுவன் என்று பதிகம் பகர்கின்றது. இவன் கயவாகுவின் காலத்தில் வாழ்ந்தவன் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது கயவாகுவின் காலம் கி. பி. 118-136 என்று இலங்கை வரலாறு இயம்புகின்றது என்பது முன்பே கூறப்பட்டதன்றோ? செங்குட்டுவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் அரசாண்டான் என்று பதிகம் பகர்கின்றது. செங்குட்டுவன் தனது ஆட்சிக் காலத்தின் இறுதியில் வடநாட்டு யாத்திரையை மேற்கொண்டான். எனவே, அவனது ஆட்சிக் காலம் ஏறத்தாழக் கி. பி. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியும் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியுமாகும் எனக்கருதுதல் பொருத்தமாகும். அவனுக்கு முற்பட வாழ்ந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி. பி. முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்தவனாதல் வேண்டும் , பத்துகளின் வைப்பு முறையைக் கொண்டு, பிற்பட்ட பத்துகளுக்குரிய சேர மன்னர் செங்குட்டுவனுக்குப் பிற்பட்டவர் எனக்கொள்ளலாம். இங்ங்ணம் கொள்ளின், பதிற்றுப்பத்தில் பாடப்பெற்ற சேரவேந்தர்களின் காலம் ஏறத்தாழக் கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகளுள் அடங்கும் என்று கூறலாம்.

பதிகங்கள் ; ஒவ்வொரு பத்தின் ஈற்றிலும் உள்ள பதிகம் அதற்குரிய மன்னவன் இன்னவன், அவன் போர்ச் செயல்கள் இவை, அவன் கொடைத்திறம் இன்னது, பாடிய புலவர் இவர், இவர் பெற்ற பரிசில் இன்னவை என்பவற்றை விளக்கி நிற்கின்றது. இப்பதிகத்தையும் இதன் கீழ்வரும் உரை நடையையும் பிற்காலத்தார் எழுதி முடித்தனர் என்பது இதன் அமைப்பைக் கொண்டே கூறலாம்.

பாடல்கள் : ஒவ்வொரு பத்திலும் உள்ள ஒவ்வொரு பாட்டுக்கும் அப்பாட்டில் காணப்படும் பொருள்நயம் பொருந்திய அருந்தொடரே தலைப்பாக இடப்பட்டுள்ளது. இம்முறை, வேறு எச்சங்க நூலிலும் இல்லை. இதனில் நான்காம் பத்து அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனாராவர் , அந்தாதித் தொடையில் செய்யுட்களைப் பாடுவது லேயே வழக்கில் இருந்தது என்பது இதனால் தெரிகிறதன்றோ?

இந்நூற் பாடல்களில் சேரநாட்டு வளமும் சேரவேந்தர் போர்ச் செயல்களும் அவர்தம் கொடைச் சிறப்பும். சேரமா தேவியரின் இயல்புகளும், சேரநாட்டு மக்களின் பழக்க வழக்கங்களும் பிறவும் கூறப்பட்டுள்ளன.

ஒவ்வொரு செய்யுளுக்கும் வண்ணமும் தூக்கும் அமைந்துள்ளன. எனவே, இப்பாக்கள் பரிபாடல் பாக்களைப்போல இசையோடு பயிலப்பட்டவை என்பது அறியப்படும்.

உரை : பதிற்றுப்பத்துக்குப் பழைய உரை உண்டு. அதனை இயற்றிய ஆசிரியர் பெயரும் காலமும் தெரியவில்லை. இவ்வுரையாசிரியர் இந் நூலிலுள்ள அருஞ்சொற்களுக்கும் தொடர்களுக்கும் பொருள் கூறியுள்ளார்; ஒவ்வொரு பாடலுக்கு உரிய துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பனவற்றின் அமைதியைப் புலப்படுத்தியுள்ளார். ஆங்காங்கு இலக்கணக் குறிப்புகளைத் தந்துள்ளார்; ஒவ்வொரு பதிகத்தின் ஈற்றிலும் அதுபற்றிய விளக்கம் தந்துள்ளார். .

இந்நூலை முதலிற் பதிப்பித்த பெருமை டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கட்கு உரியது. பின்பு பேராசிரியர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் விளக்கவுரைப் பதிப்பு ஒன்று சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக வெளிவந்துள்ளது. இது மிகவும் பாராட்டத்தகும் முறையில் பதவுரையும் விளக்சுவுரையும் பெற்றுள்ளது. .

நூற் செய்திகள்

சேரர் வீரம் : பதிற்றுப்பத்துப் புறப்பொருள் பற்றிய நூல். ஆயின் இதன்கண் சேரவேந்தர் போர்ச் செயல்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. கடற் கொள்ளைக்காரரான கடம்பர் என்னும் இனத்தவரை இமயவரம்பனும் செங்குட்டுவனும் தத்தம் காலத்தில் கடற்போரில் முறியடித்துக் கடல் வாணிகத்தை நிலைநிறுத்தினர். நெடுஞ்சேரலாதன் தன்னுடன் போரிட்ட ஆரியரையும் யவனரையும் முறியடித்தான்; யவனர் கைகளைப் பின்பக்கமாகக் கட்டி அவர் தம் தலைகளில் நெய்யைப் பெய்து, தனது வஞ்சி நகரத்திற்கு அழைத்து வந்தான்; அவர்களிடம் இருந்த சிறந்த அணிகளையும் வைரக் கற்களையும் எடுத்துக்கொண்டான். இமயவரம்பன் தான் வென்ற ஏழு அரசர்களின் பொன் முடிகளை உருக்கித் தனது வெற்றிக்கு அறிகுறியாகப் பொன் மாலை ஒன்றை அணிந்திருந்தான். அஃது ‘எழுமுடி மாலை’ எனப்பட்டது. செங்குட்டுவனும் அதனை அணிந்திருந்தான்.

செங்குட்டுவனின் வீரச் செயல்களைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். பெருஞ்சேரல் இரும்பொறை தகடூர் அதியமானுடன் போரிட்டுத் தகடூரை அழித்தான்; கழுவுள் என்னும் ஆயர் தலைவனை வென்றான், இளஞ்சேரல் இரும் பொறை இருபெரும் வேந்தரையும் விச்சிக் கோவையும் ஒரு போரில் முறியடித்தான்.

கொடைச் சிறப்பு: இமயவரம்பன் முதல் எல்லாச் சேர மன்னரும் முத்தமிழ் வாணரைப் பலவகைப்பட்ட பரிசில்களை நல்கி மகிழ்வித்தனர். இவர்கள் ‘பாடினி வேந்து, பரிசிலர் செல்வம்’ என்று தனித்தனியே பாராட்டப் பெற்றனர்; புலவர்களுடன் இருந்து உண்டு மகிழ்ந்தனர். இரவலர் பசியோடு தம்மை நோக்கிய பார்வையைக் கண்டு அஞ்சினர்; போர்களில் கிடைத்த பொருள்களை முத்தமிழ் வாணர்க்கு அளித்து மகிழ்ந்தனர். செல்வக் கடுங்கோ வாழியாதன் கொடுமணம் என்னும் ஊரில் கிடைத்த விலையுயர்ந்த அணிகளையும், பந்தர் என்னும் ஊரில் கிடைத்த முத்துகளையும் பரிசிலர்க்கு வழங்கி மகிழ்ந்தவன் (37), இவர்கள் தம்மைப் பாடிய புலவர்களுக்கு நாட்டின் சில பகுதிகளையும், சில பகுதிகளின்வருவாயையும் கொடுத்ததிலிருந்தே இவர்தம் கொடைத்திறனை நாம் நன்கு அறியலாம்.

ஆட்சிச் சிறப்பு : சேரமன்னர் காட்டில் வாழ்ந்த, முனிவர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்தனர்; தம் நாட்டுப் பெருவழிகளைப் பாதுகாத்தனர்; நீர் நிலைகளைப் பெருக்கினர்; கடல் வாணிகத்தை வளர்த்தனர்; உள்நாட்டு வாணிகத்தையும் வளப்படுத்தினர்; தளர்ந்த குடிமக்களை உயர்த்தப் பாடுபட்டனர்; நாட்டு வருவாயை அறம் முதலிய பல துறைகளுக்கும் தனித்தனியே பிரித்துச் செலவிட்டனர்: நெடுஞ்சாலைகளில் இனிய பழம் தரும் மரங்களை வைத்து வளர்த்தனர்.

இம்மன்னர்தம் நல்லியல்புகளையும் ஆட்சிச் சிறப்பையும்: ஒவ்வொரு பத்தையும் படித்து அறிவது நல்லது.

போர்பற்றிய விவரங்கள்

படையெடுப்பு : ஒரு நாட்டின்மீது படையெடுக்கும் அரசனுடைய வீரர்கள் முதலில் தங்கள் முரசத்திற்குச் செந்தினையையும் குருதியையும் பலியாகத் தூவுவர்; குருதியால் அதன் கண்ணைத் துடைப்பர்; பின்பு அதனைக் குறுந்தடி கொண்டு முழக்குவர் (9) . உடனே படையில் ஆரவாரம் உண்டாகும்.

குதிரை வீரர்கள் விரைந்து செல்லும் குதிரைகள் மீது இவர்ந்து செல்வர். தேர்ப்படை வீரர் நீண்ட கொடியினையுடைய தேர்கள்மீது ஏறிச்செல்வர். யானை வீரர் யானைகள் கழுத்தின்மீது அமர்ந்து போர்க்கருவிகளை ஏந்திச் செல்வர் காலாட்படையினர் வாள், வேல், வில் முதலிய கருவிகளை ஏந்திச் செல்வர். மன்னன் நெற்றிப் பட்டத்தையும் பொன்னரி மாலையையும் அணிந்த யானையின்மீது, இவர்ந்து செல்வான் (34) .

அரசனிடம் பல படைகள் இருக்கும். அவற்றுள் முதல் படை கூளிப்படை எனப்படும். அது பகைப்புலத்தைச் சூறையாடும்; தனக்குப் பின் வரும் படைக்கு ஒழுங்கான வழியை அமைத்துக்கொண்டு போகும். அதற்குப் பின்னரே, புலித் தோலால் செய்த உறையில் வாளைச் செருகியுள்ள வாட் படை வீரரும் வேற்படை வீரரும் பிற படை வீரரும் அணி வகுத்துச் செல்வர் (19) .

கூளிப்படையை அடுத்துச் செல்லும் படை தார் அல்லது தூசிப்படை எனப்படும். இப்படை வீரர் மன எழுச்சியுடன் போரிடுவர்; பகைவர் ஊர்களுக்கு எரியூட்டுவர்; பகைவர் நாட்டைக் குழப்பத்தில் ஆழ்த்துவர் (28) .

சமவெளியில் போரிடும் வீரர் தும்பைப்பூ மாலையைச் சூடுவர். மன்னன் பொன்னால் செய்த தும்பைப்பூ மாலையைச் சூடுவான் (45). கோட்டையை முற்றுகை இடுவதாயின் மன்னன் பொன்னால் செய்த உழிஞைப்பூ மாலையைச் சூடுவான். அவன் வீரர் உழிஞைப் பூக்களால் ஆகிய அழகிய மாலையைச் சூடுவர் (22).

உழிஞைப் போர் : படையெடுத்துச் செல்லும் வீரர் கோட்டைக்கு வெளியிலுள்ள காவற்காட்டை அழிப்பர்; பின்பு அதனை அடுத்துக் கோட்டையைச் சூழ உள்ள அகழியைக் கடப்பர். இவ்வொவ்வொரு முயற்சியிலும் கோட்டைக்கு உரியவர் எதிர்த்து நிற்பர். படையெடுக்கும் வீரர் அவர்களை வென்று மதில்மேல் ஏறுவர். பகைவர் எளிதில் ஏறிவர முடியாதபடி அம்மதிற்சுவர் வளைந்து வளைந்து செல்லும் நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். (53). அங்கு மதில் போர் நடக்கும்; மதிற்போரில் வெற்றி பெற்றவுடன் உழிஞை வீரர் அகநகர்க்குள் புகுவர்; அங்குத் தம்மை எதிர்த்த வீரரை அழித்து நகர்க்கு எரியிடுவர்; நகரைச் சூறையாடுவர் (20) .

கோட்டை வாயிலில் பகைவரை மகளிர் போல உருவ மைத்து அவர் அணிந்துகொள்வதற்குச் சிலம்பும் தழையும்

பந்தும் கட்டித் தொங்கவிடுதல் அக்காலத்தார் மரபு. அக்கோட்டை வாயிலில் அம்புகளை எய்யும் எந்திரப் பொறிகள் அமைந்திருக்கும். கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழியில் கொடிய முதலைகள் விடப்பட்டிருக்கும் (58). கோட்டைக் கதவு மிக்க வலிமையுடையது; இருப்பாணிகளால் இறுகப் பிணிக்கப்பட்டது. அதனை உடைக்க யானைகள் ஏவப்படும். யானைகள் தம் தந்தங்களால் அக்கதவினைப் பிளக்க முயலும். அம்முயற்சியில் அவற்றின் கொம்புகள் முறிவதும் உண்டு. கதவுக்குப் பின்பு கணையமரம் கதவிற்கு வலிமையாக அமைந்திருக்கும் (53),

கோட்டையின் முற்றுகையில் நால்வகைப் படைகளும் கோட்டையைச் சூழ்ந்துகொள்ளும். கோட்டையுள் இருப்பவர் வெளியில் வர இயலாது. கிடுகு (கேடயம்) ஏந்திய படை வீரரும் வேற்படையினரும் வாட்படையினரும் குதிரைப் படையினரும் யானைப் படையினரும் மதிலின் பக்கத்தில் நெருங்கி வளைந்து தமது முற்றுகையைப் பயனுள்ளதாக்குவர் (52) .

கோட்டை மதில்களில் கண்டார் விரும்பத்தக்க ஒவியங்கள் வரையப்பட்டிருக்கும் (68). கோட்டைக்கு வெளியிலுள்ள பகைவர் ஊர்கள் தீப்பற்றி எரியும். கோட்டையுள் உணவுப் பொருள்கள் செல்லாமல் தடுக்கப்படும் (71), கோட்டையுள் அடைபட்ட அரசன் நெடுநாள் கோட்டையுள் இருக்க இயலாவிடின், படையெடுத்த அரசனுக்குத் திறை தந்து போரைத் தடுப்பான் (62); மானமுடைய மன்னன் போரிட்டு மடிவான்.

பாசறை : அரசனும் அவன் படைகளும் தங்கியிருக்கும் இடம் பாசறை எனப்படும். பாசறையின் நடுவில் அரசனது இருக்கை அமைந்திருக்கும். பாசறையில் வீரர்கள் காவல் புரிவர். ஒருபால் யானைப் படைகள் தங்கியிருக்கும்; மற்றொருபால் குதிரைப் படைகள் தங்கியிருக்கும்; வேறொரு பக்கம் தேர்ப்படைகள் தங்கியிருக்கும்; பிறிதொருபால்

காலாட் படையினர் தங்கி இருப்பர். அரசனது வெற்றியைக் கருதிப் புலவரும் பாணரும் கூத்தரும் பொருநரும் பாசறையில் இருப்பர். விறலியரும் பாணரும் அரசனது போர் வீரத்தைப் புகழ்ந்து பாடுவர்; அவன் ஒவ்வொரு போர்த்துறையிலும் வெற்றி பெற்றவுடன் அவ்வெற்றியைப் புகழ்ந்து பாடுவர் (54).

மன்னன் பகைவர் நாடுகளை அழித்து அங்குக் கிடைக்கும் பொருள்களைப் பரிசிலர்க்கு வழங்குவான் (33): வெற்றி பெற்ற தன் வீரர்க்குப் பொற்கட்டிகளையும் பிற வற்றையும் வழங்குவான் (81, 83).

தோற்ற அரசனது காவல் மரத்தைக் கொண்டு, வென்ற அரசன் முரசு செய்துகொள்ளுவான் (11) . வீரர் அம்முரசுக்குப் பலியிடுவர் (17, 19) . பகைவரது பட்டத்து யானையின் தந்தங்களை அறுத்துச் செய்யப்பட்ட பலிக்கட்டில்மீது வீரர் தம் குருதியைத் தெளிப்பர் (79).

போரில் ஊது கொம்புகளும் வலம்புரிச் சங்குகளும் முழங்கும் (67) , முரசின் ஓசையும் தண்ணுமை ஒசையும் கேட்கும் (84); பாசறையில் பலவகை இசைக் கருவிகளுடன் கலந்து முரசு முழங்கும் (88). வெற்றிக்குப் பிறகு வீரர்க்கு உணவு விருந்தும் இசை விருந்தும் நடைபெறும் (30) . தோற்ற படை வீரருட் சிலர் வென்ற வேந்தன் படையில் சேருவதும் உண்டு (63). படையெடுக்கும் அரசர் தமக்குப் போரில் வெற்றி கிடைக்குமா என்பதைக் கழங்கிட்டுப் பார்த்தல் வழக்கம் (82), அறிவுள்ள அரசன் தன் அரச நிலையைக் குறித்துப் போரிடுவானே தவிர மண்ணாசையால் போரிடான். நிலையாமை உணர்வே அவன் புரியும் போரில் சிறந்திருக்கும் (84) . -

சமயச் செய்திகள் : முனிவர்கள் பிற உயிர்களுக்குத் தீங்கு நினையாதவர்; வாய்மை தவறாதவர்; பிறர் மதிக்கத் தக்க பெருமையினை உடையவர். அரசர்கள் அவர்களைக் கொண்டு வேள்விகளைச் செய்தனர். அம்முனிவர்

"கடவுளர்' என்று கூறப்பட்டனர் (21). உண்ணாநோன்பு மேற்கொண்ட விரதியர் கோவில் மணி அடித்ததும் விடியற் காலையில் குளிர்ந்த நீர்த்துறைக்குச் சென்று நீராடுவர்; பின்பு திருமாலின் அடியில் வணங்கி அப்பெருமானை வாழ்த்திடுவர் (31). இங்குக் குறிப்பிட்ட திருமால் திருவனந்தபுரத்துத் திருமால் என்று பழைய உரைகாரர் கூறியுள்ளனர். (31) . இஃது உண்மையாயின், அவ்வூர்த் திருமால் சங்க காலமுதலே புகழ்பெற்றுவருபவர் என்பது அறியப்படும்.

பெருஞ்சேரல் இரும்பொறை அரிய மறைப் பொருளை அறிவர் உரைப்பக் கேட்டான்; அவர் உரைத்த விரதங்களை மேற்கொண்டு ஒழுகினான்; அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த நன்மக்கள் உள்ளம் மகிழும்படி வேள்விகளைச் செய்து முடித்தான் (74). அவன் தன் புரோகிதனைத் துறவு மேற் கொள்ளும்படி செய்தான். கொடை, மன அமைதி, செல்வம், மகப்பேறு, தெய்வ உணர்வு முதலியன தவ முடையார்க்கு உண்டாகும் என்பதை அறிவுறுத்தி அப்புரோகிதனை மன்னன் தவம் செய்யும்படி காட்டிற்கு அனுப்பினான் (74). இதனால் அம்மன்னன் தவத்தில் கொண்டி ருந்த நம்பிக்கையை நாம் நன்குணரலாம், சேரநாட்டில் அயிரை மலை மிகச் சிறந்தது. அதன் மீது கொற்றவை கோவில் இருந்தது. சேர மன்னர் கொற்றவையை வழி பட்டனர். "கொற்றவை வீற்றிருக்கும் அயிரைமலை போல நின் புகழ் நிலைபெற்று விளங்குக, என்று அரிசில் கிழார் பெருஞ்சேரல் இரும்பொறையை வாழ்த்தினார் (79) .

போருக்குச் செல்லும்போது போரில் வெற்றி உண்டாவதற்காகச் சேர மன்னர் அயிரை மலைக் கொற்றவையைப் பரவுவது வழக்கம் (88). சேர நாட்டு வீரர் தம் விழுப் புண்ணில் சொரியும் குருதி கலந்த சோற்றுத் திரளைப் படைத்து அயிரை மலைக் கொற்றவையை வழிபடுவது மரபு (79, 88).

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பாலைக் கெளதமனார் என்ற அந்தணப் புலவர் பொருட்டுப் பெரும்பொருள் செலவிட்டுப் பத்துப் பெருவேள்விகளை வேட்பித்தான் என்று அவனைப் பற்றிய பதிகம் கூறுகின்றது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வேதியர்க்குப் பசுக்களோடு குட நாட்டு ஒர் ஊரும் வழங்கினான்.

இங்ங்ணம் சேர வேந்தர் வேள்விகள் செய்தனர்; கொற்றவை வழிபாட்டிலும் திருமால் வழிபாட்டிலும் பங்கு கொண்டனர்; முனிவர்களுக்குக் காடுகளில் இருக்க வசதிகளைச் செய்து தந்தனர்; வேள்வி அந்தணர்க்குப் பணிந்து நடந்தனர். இச் செய்திகள் அனைத்தும் சேர நாட்டில் வேத நெறி தழைத்து ஓங்கிய உண்மையை உணர்த்துவனவாகும்.

நகரங்கள் : நறவு என்பது சேர நாட்டுச் சிறப்புடைய நகரங்களுள் ஒன்று (60). தொண்டி என்பது சேர நாட்டுத் துறைமுகப் பட்டினம். யவன யாத்திரிகர் அதனைத் துண்டிஸ் என்று குறித்துள்ளனர். கொடுமணம் என்பது ஒரு நகரம். அது வேலைப்பாடு மிகுந்த நகைகட்குப் பெயர் பெற்றது (74). பக்தர் என்பதும் ஒரு நகரம். அது பாண்டிய நாட்டுக் கொற்கையைப் போல முத்துகளுக்குப் பெயர் பெற்றது (67, 74). மரந்தை என்பது மற்றொரு நகரம்.

வருணனை : ஒவியம் வரையத்தக்க முறையில் அமைந்த வருணனைப் பகுதிகள் இந்நூற் பாக்களில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. அவற்றுள் மருத வளம் (27), மலைவளம் (12), பிற நாடுகளின் வளம் (13, 23) பூமி நாட்டு வளம் (21) , நானிலச் சிறப்பு (30) , பாலை வழி (41), பாடினியர் சிறப்பு (46) , கடலின் தோற்றமும் கடற்கரையின் தோற்றமும் (51), மாரியின் சிறப்பு (61), சோழ நாட்டுச் சிறப்பு (73), தகடுர் நாட்டுச் சிறப்பு (78), இளஞ்சேரல் இரும் பொறையின் நாட்டு வளம் (89) என்பவை குறிக்கத் தக்கவை. வாழ்த்து முறை : புலவர் பெருமக்கள் மன்னர்களைப் பலவாறு வாழ்த்தினர். நீ உன் முன்னோரைப் போலப் புகழை நிறுவி வாழ்வாயாக' (14), உலகத்தார் நலனுக்காக நீ வாழ்வாயாக’ (15), உன்னைப் பெற்ற உன் தாயின் வயிறு வாழ்வதாகுக' (20) , நீ நின் மனைவியோடு ஆயிரம் வெள்ளம் காலம் வாழ்க’’ (21) , ' நின் வளம் வாழ்வதாகுக (24), நின் வலிமை கெடாது நிலை பெறுவதாகுக, நினது பெருவளம் நீடு வாழ்வதாகுக' (36) , 'உலக மக்கள் ஆக்கத்தின் பொருட்டு நின் வாழ்க்கையும் வளனும் வாழ்க’’ (37) , நீ காஞ்சியம் பெருந்துறை மணலினும் பல வாழ் நாட்களைப் பெற்று வாழ்க' (48) . வாழ்க நின் கண்ணி; மிகச் சிறிது காலமேனும் துறக்க உலகுக்குச் செல்லாமல் இவ்வரச வாழ்க்கையிலேயே நிலை பெற்று நின்று நெடுங்காலம் வாழ்வாயாக’ (54) , ' நின் வாழ்நாள் சென்று கெடாது ஒழிவதாகுக (55) , ஆம்பல் என்னும் எண்ணும் பல ஆயிரங்களாகப் பெருகிய வெள்ளம் என்னும் எண்ணும் ஆகிய ஊழிகள் நீ வாழ்வாயாக’’ (63), 'அயிரை என்னும் நெடிய மலையைப்போல நீ வாழும் நாள் குறையாது பெருகுவதாகுக' (70, 79), "நீ ஞாயிறு. போலப் பல நாள் விளங்குவாயாக’ (88), "நீ அருந்ததி போலும் கற்புடைய நின் மனைவியுடன் அழகுற விளங்கி நோயற்று வாழ்வாயாக’ (89) , உலக மக்கள் கூறும் திங்கள், யாண்டு, ஊழி, வெள்ளம் என்பவை முறையே. நின் வாழ்நாளின் நாள், திங்கள், யாண்டு, ஊழி என்பன வாக நீடுக (90}.

சேர வேந்தரை இங்ங்ணம் வாழ்த்தப் புலவர் பெரு மக்கள் உள்ளம் எந்த அளவு குளிர்ந்திருத்தல் வேண்டும். என்பது இங்கு நினைக்கத் தகும். -

மேற்கோள் : பிற அகப்பொருள் தொகை நூல்களில் திருக்குறள், புறநானூறு பத்துப் பாட்டுக் கருத்துகளும், சொற்களும், சொற்றொடர்களும் இருத்தல் போலவே, பதிற்றுப்பத்திலும் காணப்படுகின்றன. அவற்றுள் சில வற்றைக் கீழே காண்க :

1. "கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா
கண்ணார் தேளத்தும் பொய்ப்பறி யலனே." 20
"முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா
வஞ்சகரை யஞ்சப் படும்." - குறள் 842,
2. "ஆன்றவிங் தடங்கிய செயிர்தீர் செம்மால்"
"ஆன்றவிங் தடங்கிய கொள்கைச் 37
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே." -புறம் 191.
3. "ஒவத் தன்ன வுருகெழு நெடுநகர்ப்
பாவை யன்ன மகளிர் நாப்புண்".  88.
"ஒவத் தன்ன விடனுடை வரைப்பிற்
பாவை யன்ன குறுந்தொடி மகளிர்".  -புறம் 251.
4. "ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலந்தந்து" 90
“ஒளிறுவாள் அருஞ்சம முறுக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே."

 புறம் 312


5. "பன்மீ னாப்பட் டிங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை”  90.
"பன்மீன் கடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி' '

-மதுரைக்காஞ்சி, வரி 769-770.


6. “புற்றடங் கரவின் ஒடுங்கிய அம்பின்” 45.
“புற்றடங் கரவின் செற்றச் சேக்கை”

 -மணிமேகலை, காதை 4, வரி 117.

வடமொழியாளர் செல்வாக்கு

முருகன் பிணிமுகம் என்னும் யானையை ஊர்ந்தமை {11), தலையெழு வள்ளல்களுள் ஒருவனான பாரதத்தில் குறிக்கப்பட்ட அக்குரன் ஈகைத் தன்மை (14) என்பன இந்நூலிற் குறிக்கப்பட்ட கதைகளாகும்.

எட்டுப் பத்துகளையும் பாடிய புலவர் எண்மருள் குமட்டூர்க் கண்ணனார், பாலைக் கோதமனார், பரணர், கபிலர் ஆகிய நால்வரும் அந்தணப்புலவர் ஆவர். இப்பாடல்களில் வேத வேள்விகள் குறிக்கப்பட்டுள்ளன. சான்றாகப் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் தன்னைப் பாடிய பாலைக் கெளதமனார் விருப்பப்படி பத்துப் பெருவேள்விகளைச் செய்வித்தான் என்பது மூன்றாம் பத்தின் பதிகத்தால் அறியத்தகும்.

பாலைக் கெளதமனார் போன்ற அந்தணப் புலவர் நால்வர் பதிற்றுப்பத்தில் இடம் பெற்றிருப்பினும், அவர் பாடல்கள் பிற தமிழ்ப் புலவர் பாடல்களைப் போலவே சொற்செறிவும் பொருட்செறிவும் பெற்று விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தகும். அப் புலவர் பெருமக்கள் தமிழ் இலக்கண வரம்பில் நின்று, தமிழ் வழி வந்த சான்றோர் போலவே, உயர்ந்த முறையில் பாடியுள்ளனர் என்று கூறுதல் தகும். அதனாற்றான். மிகச் சில வட சொற்களே இந்நூலிற் பயின்றுள்ளன.

வேதங்களில் வல்ல மறையவரைச் சேர மன்னர் மதித்தனர்; அவர்களைக் கொண்டு வேள்விகளைச் செய்வித்தனர்; அவர்களுக்குப் பல ஊர்களை அளித்தனர்; அவர்களைத் தம் குருமார்களாகக் கொண்டனர் என்பன போன்ற செய்திகள், இச் சேர வேந்தர் காலத்தில் வேத நெறியினர் சேர நாட்டில் பெற்றிருந்த செல்வாக்கை இனிது உணர்த்து வனவாகும்.