தமிழ்மொழி இலக்கிய வரலாறு/பரிபாடல்

விக்கிமூலம் இலிருந்து

15. பரிபாடல்

முன்னுரை

பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பெற்றமையால் இப்பாக்களின் தொகுதி பரிபாடல் எனப் பெயர் பெற்றது. இப்பாக்களுக்குப் பண்கள் வகுக்கப்பெற்றுள்ளதைக் காண, இவை சங்க காலத்தில் இசையுடன் பாடப்பட்டன என்பது தெளிவு.

இது, தொகை நிலை வகையால் பா என்று சொல்லப்படும் இலக்கணம் இன்றி - எல்லாப்பாவிற்கும் பொதுவாக நிற்றற்கு உரியதாய் இன்பப் பொருளைப் பற்றிக் கூறும், இது சிறுமை இருபத்தைந்து அடியும், பெருமை நானூறு அடியும் எல்லையாகக் கொண்டுவரும்,' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.[1]

பரிபாடற்கண் மலையும் யாறும் ஊரும் வருணிக்கப்படும் என்று இளம்பூரணர் கூறியுள்ளார்.[2] அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான்கனுள் இன்பத்தையே பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவற்றில் இப்பாடல் வருமென்று பேராசிரியர் கூறியுள்ளார்.[3] தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றிவரும் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.[4] பரிபாடல்

இன்றுள்ள பரிபாடல்களிற் பல திருமாலையும், முருகனையும் பற்றியவை; பக்திநெறி பற்றியவை; தொல்காப்பியர் விதிக்கு மாறுபட்டவை, வையை பற்றிய பாடல்களும் முருகன் பற்றிய பாடல்களுள் சிலவுமே அகப்பொருள் பற்றியவை. எனவே, "தொல்காப்பியர்க்குப் பிற்பட்ட காலத்தில் புறம்பற்றிய செய்திகளும் பரிபாடலில் பாடப்பெற்றன” என்பது இப்பாக்களால் தெரிகின்றது.

இன்றுள்ள பரிபாடல் என்னும் நூலில் இடம் பெற்றுள்ள பாக்கள் அகம், புறம் ஆகிய இரண்டையும் பற்றியவை. எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறும் பதிற்றுப் பத்தும் புறப்பொருள் பற்றிய நூல்கள் என்பதும், ஏனைய ஐந்தும் அகப்பொருள் பற்றிய நூல்கள் என்பதும் முன்பே கூறப்பட்டன. அகப்பொருள் நூல்கள் ஐந்து திணைகளைப் பற்றிப் பேசும்; ஆனால் பரிபாடல்கள் ஐந்து திணைகளையும் நிலைக்களனாகக் கொண்டு அகப்பொருள் செய்திகளைக் கூறவில்லை. பிற அகப்பொருள் நூல்களில் பேரரசர் சிற்றரசர் முதலியோர் பற்றிய குறிப்புகள் இருக்கும். ஆனால் பரிபாடலில் அவற்றைப் பற்றிய குறிப்புகளே இல்லை. பாண்டியர்களைப் பற்றியும் அவர்களது நாட்டைப் பற்றியுமே குறிப்புகள் உள்ளன. பரிபாடலிலுள்ள புறப்பொருட் பகுதியிலும் பிற அரசர்களைப் பற்றிப் பேச்சே இல்லை. திருமாலிருஞ் சோலையில் உள்ள திருமால், திருப்பரங்குன்றத்து முருகன் ஆகிய தெய்வங்கள் பற்றிய தோத்திரப் பாக்களாகவே பல அமைந்துள்ளன. வையை பற்றிய பாக்களும், அதற்குத் தெய்வத் தன்மை கூறி, அதனை வழிபடும் பாடல்களாகவே அமைந்துள்ளன.

பிற தொகை நூல்களில் ஐந்திணைக் கடவுளர் ஆங்காங்குக் குறிக்கப்பட்டுள்ளனர்; ஆயின், பரிபாடலில் குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனும் முல்லை நிலக்கடவுளான திருமாலுமே விரிவாகப் பாடப்பெற்றுள்ளனர்.

பாடல்களைப் பாடியவர் பாடல்கட்கு இசை வகுத்தவர் பாடப்பெற்ற கடவுள் அல்லது யாறு திருமால் முருகன் வையை
1 ஆசிரியன் நல்லந்துவனார் மருத்துவன் நல்லச்சுதனார் வையை முருகன் 2
2 இளம்பெருவழுதியார் நாகனார் மருத்துவன் நல்லச்சுதனார் வையை திருமால் 1 1
3 கடுவன் இள எயினனார் பெட்டனாகனார் கண்ணன் நாகனார் திருமால் முருகன் 1 1
4 சுரும்பிள்ளைப் பூதனார் மருத்துவன் நல்லச்சுதனார் வையை 1
5 கீரந்தையார் நன்னாகனார் திருமால் 1
6 குன்றம்பூதனார் மருத்துவன் நல்லச்சுதனார் முருகன் 2
7 கேசவனார் கேசவனார் முருகன் 1
8 நப்பண்ணனார் மருத்துவன் நல்லச்சுதனார் முருகன் 1
9 நல்லச்சுதனார் கண்ணாகனார் வையை 1
10 நல் அமுசியார் நல்லச்சுதனார் முருகன் 1
11 நல் எழுதியார் பெயர் அழிந்துபட்டது திருமால் 1
12 நல் வழுதியார் நந்நாகனார் வையை 1
13 மையோடக் கோவனார் பித்தா மத்தர் வையை 1

இத்தகைய பாக்களை வேறு தொகை நூல்களில் காணல் இயலாது. இந்நூற்பாக்களின் நடை எளிமை வாய்ந்தது. இப்பாக்கள் வருணனை மிகுந்தவை. ஒவ்வொரு பாவிற்கும் இசை கூறப்பட்டிருப்பதால் இவை இசையோடு பாடுவதற்கு அமைந்தவை என்பது தெரிகிறது. ஆதலால் இவை மக்களுடைய பேச்சு வழக்குச் சொற்களையும் ஆங்காங்கே பெற்றுள்ளன. இங்ஙனம் இப்பாடல்கள் 'பா' வகையிலும் செய்யுள் நடையிலும் வருணனையிலும் எண்ணத்திலும் முறைவைப்பிலும் பிறவற்றிலும் மாறுபட்டுள்ளமை அறியத் தகும்.

   அழிந்தன போக இன்று இந்நூலில் இருப்பவை 22 பாடல்களாகும்; (தொல்காப்பிய உரையிலும் புறத்திரட்டிலும் வேறு மூன்று பாடல்கள் கிடைத்துள). இவற்றுள் திருமாலைப் பற்றியவை ஆறு; முருகனைப் பற்றியவை எட்டு, வையை பற்றியவை எட்டு; மதுரை, வையையாறு, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ் சோலைமலை ஆகியவை பற்றிய செய்திகளே இப்பாடல்களிற் காணப்படுகின்றன. இவற்றை நோக்க. இந்நூற்பாக்கள் பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பெற்றன என்று கருத இடந்தரு கின்றன .
   ஆசிரியர் நல்லந்துவனார், இளம்பெரு வழுதியார், கடுவன் இளஎயினனார், கரும்பிள்ளைப் பூதனார், கீரந்தையார், குன்றம்பூதனார், கேசவனார், நப்பண்ணனார், நல்லச்சுதனார், நல்லழுசியார், நல்லெழுனியார், நல்வழுதியார், மையோடக்கோவனார் என்னும் பதின்மூன்றுபேர் இந்நூற் பாடல்களைப் பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலுக்கும் இசை வகுத்த புலவர் வேறாவர்.
  இந்நூற் பாடல்களுக்குப் பரிமேலழகர் இயற்றிய உரை கிடைத்துள்ளது. இவ்வுரை பல இடங்களில் பொழிப்புரை யாயும், சில இடங்களில் பதவுரையாயும், வேறு சில இடங்

த-17.

களில் கருத்துரையாயும் அமைந்துள்ளது; இலக்கணக் குறிப்புகளை ஆங்காங்குப் பெற்றுள்ளது. விளங்காத பகுதிகள் சில தமிழ் நூல் மேற்கோள்களாலும் வடநூல் கருத்துகளாலும் விளக்கப்பட்டுள்ளன.

டாக்டர் உ. வே சாமிநாதையர் அவர்கள் இந்நூலைச் சிறந்த முறையிற் பதிப்பித்தனர். சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தார் புதிய உரையுடன் கூடிய பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். -

பரிபாடலின் காலம்

பரிபாடல் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது என்று கூறும் அறிஞர் வையாபுரிப் பிள்ளையவர்கள் அதற்குரிய தடைகளைக் கீழ்வருமாறு மொழிகின்றனர்:

தடைகள் : 1. பரிபாடல்களைப் பாடிய புலவருள் ஒருவரேனும் பிற தொகை நூல்களைப்பாடியவராய்த் தெரிந்திலர். சில பரிபாடல்களைப் பாடிய ஆசிரியன் நல்லந்துவனார், அந்துவனார்-மதுரை ஆசிரியன் நல்லந்துவனார் என்னும் புலவர்களின் வேறானவர். இங்ஙனமே பதினைந்தாம் பரி பாடலைப் பாடிய இளம்பெருவழுதியார் புறநானூற்றில் 182 ஆம் செய்யுளைப் பாடிய கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதியின் வேறானவர். ஏனெனில், பின்னவர் தமது புறப்பாட்டில் 'இந்திரர்’ என்று பன்மையில் சுட்டலால் சமணர் எனக் கருதற்பாலர் ஆதலின் என்க.5

2. பிற தொகை நூல்களில் காணப்படும் வடசொற்களையும், புராண இதிகாசக் கதைகளையும் விடப் பரிபாடல்களில் இவ்விருவகையும் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. கவிதை, ஆராதனை (பாடல் 6) மேகலை, வாகுவலயம்(பாடல்7) , புங்கவம், நாதர், குடாரி, அருச்சிப்போர்,

5. History of Tamil Languge and Literature.

P. 29

அமிர்தபானம் (பாடல் 8) , மிதுனம், புன்னாகம், சண்பகம், குந்தம், மல்லிகாமாலை (பாடல் 11], யாத்திரை, பிரமம், இரதி, சோபனம் (பாடல் 19), வந்திக்க, சிந்திக்க (பாடல் 20) முதலிய வடசொற்கள் பரிபாடல்களின் பிற்காலத்தை உணர்த்துகின்றன.6 [5]


3. சங்ககாலத்திற்குப் பின்பே திருவேங்கடம், திருவரங்கம், திருமாலிருஞ்சோலைமலை, திருவனந்தபுரம் என்பன வைணவத் தளிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. பின்வந்த ஆழ்வார்கள் இத்தளிகளைப் பாடியுள்ளனர். சிலப்பதிகாரத்திலும் இவை குறிக்கப்பட்டுள்ளன. திருமாலிருஞ்சோலை மலை பரிபாடலில் குறிக்கப்படலால் பரிபாடலின் காலம் கி.பி. 600 என்னலாம்.7 [6]


4. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் திருப்பரங்குன்றத்துச் சிவபெருமானைப் பாடியுள்ளார்; ஆயின், முருகனைப்பற்றிப் பாடவில்லை. எனவே, சம்பந்தருக்குப் பின்பே முருகன் கோவில் உண்டாயிற்று என்று கூறலாம். பரிபாடலில் அம்முருகனைப் பற்றிய பாடல்கள் இருத்தலால் அப்பாடல்களின் காலம் ஏறத்தாழக் கி.பி. 700 என்னலாம்." 8 [7]


5. கி. பி. 300க்கு முற்பட்ட தமிழிலக்கியத்தில் அகத்தியரைப் பற்றிய பேச்சே இல்லை. ஆனால் பரிபாடலில் அகத்தியர் 'பொதியில் முனிவன்' (பாடல் 11, வரி 11) என்று குறிக்கப்பட்டுள்ளார். 9 [8]


6. கி. பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட அபிஷேக பாண்டியன் காலத்தில்

மதுரை நான்மாடக்கூடலென்று பெயர் பெற்றது. எனவே, கூடலைப் புகழும் பரிபாடல் கி.பி மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம்.[9]

7. பதினோரம் பரிபாடலில் காணப்படும் வானிலை பற்றிய குறிப்புகளை ஆராய்ந்து திரு. சுவாமிக்கண்ணுப் பிள்ளையவர்கள் அப்பாடலின் காலம் கி. பி. 634என்று கூறி யுள்ளார். [10]

8. நான் (பாடல் 20, வரி 82), ஆயும் (பாடல் 6. வரி 71) என்னும் பிற்காலச் சொல்லுருவங்கள் பரிபாடல், களில் பயின்றுள்ளன.[11]

இனி இவற்றை ஒவ்வொன்றாக இங்கு ஆராய்வோம் :

விடைகள்

1. பரிபாடல்களுக்கு இசை வகுத்த புலவர்களுள் கண்ணகனார் ஒருவர். புறநானூற்றில் 218 ஆம் செய்யுளையும், நற்றிணையில் 79ஆம் செய்யுளையும் கண்ணகனார் என்ற புலவர் பாடியுள்ளார். இவ்விருவரும் ஒருவரே. என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் கருது கிறார்கள்.[12]" இக்கருத்தை மறுப்பதற்கு எல்விதச் சான்றும் இல்லை. -

நன்னாகனார் என்ற புலவர், புறநானூற்றில் 381 ஆம் செய்யுளைப் பாடியுள்ளார். கீரந்தையாராது பரிபாடலுக்கு இசை வகுத்த நன்னாகனார் என்ற புலவரும் முன் கூறப் பெற்ற நன்னாகனாரும் ஒருவரே என்று கருதுவதில் தவறில்லை. இசைப் புலவர்கள் இயற்றமிழ்ப் புலவராயும் இருத்தல் கேசவனாரைக் கொண்டு அறியலாம்.

இங்ங்ணமே இயற்றமிழ்ப் புலவர் இசைத்தமிழிலும் வல்லராதலைச் சிலப்பதிகாரம் கொண்டு அறியலாம். எனவே, மேலே காட்டப்பெற்ற இசைப்புலவர் இருவரும் சங்ககாலப் புலவர் அல்லர் என்று உறுதியாகக் கூற இயலாமை காண்க.

2. பிற தொகை நூல்களிலும் உருத்திரன், உலோச்சனார், பவுத்திரன், பிரமதத்தன், காசிபன் கீரனார், சத்தி நாதனார், பிரமசாரி, கெளசிகனார், தாமோதரனார். மார்க்கண்டேயனார், வான்மீகியார் போன்ற வடமொழிப் பெயர்கள் புலவர் பெயர்களாக வந்துள்ளன. பிற தொகை நூல்களில் முருகன் சூரபதுமனைக் கொன்றமை, சிவன் முப்புரம் எரித்தமை, திருமால் பிரமனைப் படைத்தமை போன்ற புராண இதிகாசக் கதைகள் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. கண்ணன் நப்பின்னையை மணந்தமை, கண்ணன் குருந்து ஒசித்தது போன்ற பாகவத நிகழ்ச்சிகள் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையுள் கூறப்பட்டுள. கண்ணனும் பல தேவனும் நப்பின்னையை நடுவிற்கொண்டு ஆடிய அற்புதக் குரவை, ஆயர்பாடியில் ஆடப்பட்டது என்றும் ஆய்ச்சியச் குரவை அறிவிக்கிறது. கண்ணன் நீராடிக்கொண்டிருந்த ஆயர்மகளிர் ஆடைகளைக் கவர்ந்தமையும் அப்பொழுது பலராமன் வருதலையறிந்து, ஆயர் மகளிரது மானங் காக்க வேண்டிக் கண்ணன் குருந்து ஒசித்துத் தன் செயலைத் தமையன் அறியாமற் செய்தமையும் அகநானூற்றில் (59) மருதன் இளநாகனார், .

..............................வாடாஅது
வண்புனல் தொழுகை வரர்மணல் அகன்றுறை
அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர்
மரஞ்செல மிதித்த மாஅல்’’

என்று குறித்துள்ளார். இனிக் கண்ணன் ஆடிய குடக்கூத்தும், அவன் மகனான பிரத்தியும்.நன் ஆடிய பேடு என்னும் கூத்தும், . கண்ணன் மல்லன் வேடம் பூண்டு வாணனைக் கொன்றாடிய மல்லாடல் கூத்தும், அல்லியத் தொகுதி என்ற கூத்தும் சிலப்பதிகாரம்-அரங்கேற்று காதையில் இடம் பெற்றுள. சிலப்பதிகார காலத்திற்கு முன்னரே இக்கதைகள் தமிழகத்தில் வழக்குப் பெற்றுவிட்டன என்பதையே இவை உணர்த்துகின்றன. இவை போன்ற சிலவே பரிபாடலில் திருமால் பற்றிக்கூறும் இடங்களில் இடம் பெற்றுள்ளன. எனவே, இவை கொண்டு நூலின் காலம் காணல் அருமை யிலும் அருமை! -

பரிபாடல்களுள் பல, திருமால் முருகன் ஆகிய கடவுளரைப் பற்றியவை. ஆதலால், அக்கடவுளரைப்பற்றி வட மொழிப் புராணங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. கங்க மரபினர் காலத்தில் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில்-வட இந்தியாவில் தோன்றிய பக்திநெறி தமிழகத்திலும் நன்கு பரவிவிட்ட காரணத்தாலும், கடவுளர்பற்றிய செய்திகள் வடமொழி நூல்களிலேயே மிகுதியாக இடம் பெற்றிருந்த காரணத்தாலும் கடவுளர் பற்றிய பரிபாடல்களில் வடமொழிச் சொற்களும் புராணக் கதைகளும் ஓரளவு மிகுதியாக இடம் பெற்றிருத்தல் இயல்புதானே! இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை பெளத்த சமயத்தைப் பற்றியே பேச எழுந்தது. ஆதலால் அதன்கண் வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவ்வொரு காரணம் பற்றியே மணி மேகலை சிலப்பதிகார காலத்திற்குப் பிற்பட்டது என்று கூறுவது பொருந்தாது அன்றோ?

3. சிலப்பதிகாரத்தின் காலம் கயவாகுவின் காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி (கி.பி. 113-136) என்பது முன்பு பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வேங்கடம், திருவரங்கம், அழகர்மலை ஆகிய மூன்றும் திருமாலுக்கு உரியனவாகக் கூறப்பட்டுள்ளன. பத்துப்பாட்டுள் ஒன்றான பெரும் பாணாற்றுப்படை, அக்காலக் காஞ்சிக்கு அருகில் பள்ளி கொண்ட திருமால்கோவில் இருந்ததை இயம்புகிறது.

“காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிக் தாங்குப்

பாம்பனைப் பள்ளி யமாங்தோன் ஆங்கண்”

'

(வரி 872-373)


4. திருப்பரங்குன்றத்தில் சிவனைப் பாடிய சம்பந்தர் அங்குள்ள முருகனைப் பாடவில்லை என்பது இன்றுள்ள திருப்பதிகத்தைக் கொண்டு தெரிகிறது. அவர் பரங்குன்றத்தைப் பற்றிப் பாடிய ஒரே பதிகம்தான் கிடைத்துள்ளது. சம்பந்தர் பாடவில்லை என்பது கொண்டு, அவர் காலத்தில் திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் இல்லையென்று கூறுவது பொருந்தாது. ஏனெனில், அகநானூறு 59 ஆம் பாடலில்,

சூர்மருங்கு அறுத்த சுடரிலை கெடுவேல்

“சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து

அந்துவன் பாடிய சந்துகெழு கெடுவரை'”

என்று மதுரை மருதன் இளநாகனார் பாடியுள்ளார். இம் மருதன் இளநாகனார்க்கு முன்பே அந்துவன் என்ற புலவர் திருப்பரங்குன்றத்து முருகனைப் பாடியுள்ளார் என்பது இவ் வடிகளால் தெளிவாகிறதன்றோ!

“நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்

கொடிநுடங்கு மறுகிற் கூடற் குடா அது

பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய

ஒடியா விழவின் நெடியோன் குன்றம்”

என்னும் அகநானூற்று 149 ஆம் பாடல் அடிகளும் சங்க காலத்திலேயே திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றன: அன்றியும் அக்கோவிலில் அக்காலத்தில் ஒய்வின்றி விழாக்கள் நடை பெற்றமையையும் இவ்வரிகள் புலப்படுத்துகின்றன. எனவே, திருப்பரங் குன்றத்தில் முருகன் கோவில் சங்ககாலத்திலேயே இருந்தது என்பது தெளிவாதல் காண்க.

தென்னவற் பெயரிய துன்னரும் துப்பிற்

றொன்முது கடவுள்
'”

எனவரும் மதுரைக்காஞ்சி அடிகட்கு (வரி. 40-41)

'இராவணனைத் தமிழ் நாட்டை யாளாதபடி போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழைமை முதிர்ந்த அகத்தியன்’ ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறியுள்ளார். இந்நச்சினார்க்கினியரே தொல்காப்பியப் பாயிரவுரையில், 'அகத்தியர் பொதியின்கண் இருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி, ' என்று கூறியுள்ளார்.

மேலே கூறப்பெற்ற மதுரைக்காஞ்சி அடிகளுக்கு நச்சினார்க்கினியர் உரையைத் தந்த பத்துப்பட்டின் பதிப் பாசிரியராகிய டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் அடிக்குறிப்பில், தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்திவந்த இராவணனை, அகத்தியர் பொதியமலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினர் என்பது பண்டை வரலாறு' என்று கூறி, அகத்தியர் இசையில் வல்லுநர் என்பதற்கும், அகத்தியர் யாழ் வாசித்துப் பொதியினை உருகச் செய்தனர் என்பதற்கும், இராவணனை இசைபாடி அடக்கினர் என்பதற்கும் திருக்கயிலாய ஞானவுலா, தக்கயாகப் பரணி, சோணசயில மாலை, வெங்கையுலா, தஞ்சைவாணன் கோவை என்னும் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர். இவை மதுரைக்காஞ்சிக்கு மிகப் பிற்பட்ட நூல்களாயினும், அகத்தியர் இசைபாடி இராவணனை விரட்டினார் என்ற வரலாறு இந்நாட்டில் நெடுக வழங்கிவந்தது என்னும் உண்மையை உணர்த்துகின்றன அல்லவா? எனவே

அகதியர்தொகை நூல்களிற் குறிக்கப்பெறவில்லை என்பது பொருந்தாமை காண்க.

பதினோராம் பரிபாடலில் பொதியின் முனிவன்" அகத்தியர் குறிக்கப்பட்டுள்ளார். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் பாடப்பெற்ற சிலப்பதிகாரம் எட்டாம் காதை யில் (வரி 8) பொதியின் மாமுனி என்னும் தொடர் அகத்தியரைச் சுட்டுதலைக் காணலாம். -

6 மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்' என வரும் மதுரைக் காஞ்சி அடியும் (வரி 429) , பெரிய நான்மாடத்தாலே மலிந்த புகழைக் கூடுதலையுடைய மதுரை' என வரும் நச்சினார்க்கினியர் உரையும் காணத்தக்கவை. இவை, சங்ககாலத்திலேயே கூடலில் (நான் மாடம் இருந்ததை மெய்ப்பிக்கின்றன.

கலித்தொகை 92 ஆம் பாடலில் "நான்மாடக் கூடல்' ' என்பது வந்துள்ளது. கலித்தொகையின் காலம் கி.பி. 300 எனக் கொண்டாலும், அது சங்கநூலாதல் உறுதியே. எனவே, "நான்மாடக் கூடல்' என்பது கொண்டு பரிபாடல் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது எனக் கூறல் இயலாது.

7. அறிஞர் சுவாமிக்கண்ணுப் பிள்ளையவர்கள் பரிபாடலில் வரும் வானிலை பற்றிய செய்தி கொண்டு கூறிய காலம் பொருந்தாது என்பதைத்தக்க காரணம் காட்டிப் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்கார் மறுத்துள்ளார். என்பது இங்கு அறியத்தகும்.[13]

8. "நான்", "ஆமாம் முதலிய சொற்கள் பொது மக்களால் பேசப்பட்ட வழக்குச் சொற்கள் என்னலாம். அவை சமுதாயத்தில் பெற்றுள்ள செல்வாக்கினால் சில சமயங்களில் புலவர் பாக்களில் இடம் பெறுதல் இயற்கை. நாம் வாழும் இக்காலத்தில் புலவர் சிலர் இல்க்கியச் சொற்களையே பயன்படுத்தி நூல் எழுதுவதும், புலவர் பலர் எளிமை கருதிப் பேச்சு வழக்குச் சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தலும் இயல்பாக இருக்கின்றது. பரிபாடல்களுள் பல வழிபாட்டுப் பாடல்கள்; பொதுமக்களுக்கு உரியவை. எனவே, அவற்றிற்கு இசையும் வகுக்கப்பட்டது. ஆதலால் மக்கள் பேச்சு வழக்கிலிருந்த நான்", "ஆமாம் போன்ற சொற்கள் இடம் பெற்றன என்று கொள்வது பொருத்த மாகும்.

கண்ணன் தமையனான பலதேவனுக்குப் பனைக் கொடியும் நாஞ்சிற்படையும் உரியவை. அவை இரண்டும் திருமாலுக்கு உரியவையாகப் பரிபாடல்கள் (4, 18 கூறுகின்றன. மேலும் பலதேவனை வாசுதேவனுடன் (கண்ணனுடன் இணைத்து வழிபட்டமை பரிபாடலில் (18) கூறப்பட்டுள்ளது. இங்ஙணம் இருவரையும் இணைத்து வழிபடும் முறை மிகத் தொன்மையானது.

வடஇந்தியாவில் கோசுண்டி, நானாகாட் என்னும் இடங்களிற் கிடைத்த கல்வெட்டுகளில் வாசுதேவன்-பல தேவன் வணக்கம் இணைந்தே காணப்படுகிறது. இக்கல் வெட்டுகள் முறையே கி. மு. 3, ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. எனவே, வாசுதேவன்-பலதேவன் வணக்கம் வடஇந்தியாவில் கி. மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்தமை நன்கு தெளிவாகும்." -[14]

இவ் வணக்கம் சங்ககாலத் தமிழகத்திலும் இருந்தது, கண்ணனுக்கும் பலதேவனுக்கும் கோவில்கள் இருந்தன.புலவர்கள், ! நீ பகைவரைக் கொல்வதில் கண்ணனையும் வலிமையில் பலதேவனையும் ஒப்பை[15] எனத் தமிழரசரை வாழ்த்தினர், இருபெருந்தெய்வமும் ஒருங்கிருங் தாங்கு'[16],' என்று அவர்களை இரண்டு பெருந் தெய்வங்களாகவே கருதி வழிபட்டனர் என்பன புறநானூறு சிலப்பதிகாரம் முதலிய சங்கநூல்களால் அறியப்படும். பலதேவனுக்குப் பனைக்கொடி உரியது. தொல்காப்பியர் 'பனை" என்னும் பெயர் முன் கொடி’ என்பது வருதற்குத் தனி விதி கூறியுள்ளதை நோக்க, அவர் காலத்திலேயே இவ்வணக்கம் தமிழகத்தில் இருந்தது என்று நினைத்தல் தகும்.

கி. மு. முதல் நூற்றாண்டிலே சங்கருடன வாசுதேவர்கள் (பலதேவரும் வாசுதேவரும் மராத்தியரால் வழி படப்பட்டனர். இதே காலத்தில் இம்மதம் தெற்கிலும் பரவியிருத்தல் வேண்டும். பரிபாடல் முதலிய நூல்கள் அக்காலத்தில் எழுந்தன ஆகலாம்.[17] '

சங்ககாலம் என்பது முன்பு கூறியாங்கு மிகப்பரந்துபட்ட கால எல்லையை உடையது. அப்பரந்துபட்ட கால எல்லையில் கி. மு. நான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியம் செய்யப்பட்டது-அதற்கு முன்பு சிலவும் பின்பு பலவுமாகத் தொகை நூற் பாடல்கள் பல் காலங்களிற் பாடப் பெற்றன என்பதும், பிற்பட்ட சொல்லுருவங்களையும் வழக்குகளையும் புராணக்கதைகளையும் மிகுதியாகக் கொண்ட கலித்தொகை; பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன கி. மு. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளிற் செய்யப் பெற்றிருக்கலாம் என்பதும் பொருத்தமாகும். பரிபாடல்களைப் பாடிய புலவர் இன்றுள்ள பிறதொகை நூற்பாக்களைப் பாடிய புலவரே எனக் கொள்ளினும், அப்புலவரின் வேறானவர் எனக் கொள்ளினும், அவர்கள் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதி என்று கொள்வது தக்கதாகும். -

கலித்தொகையில்-நற்றிணை போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள மூவேந்தர் போர்ச் செயல்களும் சிற்றரசர் போர்ச் செயல்களும் இவ்விரு தரத்தாரைப் பற்றிய பிற விவரங்களும் இடம் பெறவில்லை. பாண்டியர், அவர்தம் தலைநகராகிய கூடல், வையையாறு என்பவையே இடம் பெற்றுள்ளன. ஆதலால் கலித்தொகைப் பாக்கள் நக்கீரர், கபிலர், பரணர் போன்ற புலவர் பெருமக்களுக்குப் பின்பே பாடப்பெற்றனவாதல் வேண்டும் என்பது முன்பே கூறப்பட்டதன்றோ? பரிபாடலிலும் இதே நிலையை காணப்படுவதால், இதன் காலமும் கலித்தொகையின் காலமென்றே கூறுதல் பொருத்தமாகும்.

பரிபாடல் செய்திகள்

முப்பொருள் பற்றிய பாடல்கள்

பரிபாடல் நூலில் இருபத்திரண்டு பாடல்கள் உள்ளன.அவற்றுள் ஆறு (1-4, 13,15) திருமாலைப் பற்றியவை, எட்டுப் பாடல்கள் (5, 8, 9, 14, 17, 18, 19, 21) செவ்வேளைப் பற்றியவை; எட்டுப் பாடல்கள் (6, 7, 10, 11 12, 16, 20, 22) வையை ஆற்றைப் பற்றியவை. இவை அல்லாமல் தொல்காப்பிய உரையில் காணப்பட்ட மூன்று பாடல்கள் இந்நூலின் இறுதியில்: சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று திருமாலைப்பற்றியது: ஒன்று வையை பற்றியது; மற்றொன்று மதுரை பற்றியது.

உதிருமாலைப் பற்றிய 6 -யாக்களிலும் அகப்பொருள் பற்றிய செய்திகள் இல்லை; செவ்வேளைப்பற்றிய 8செய்யுட்களில் நான்கு (8, 9, 14, 21 அகப்பொருள் கலந்தவை. வையை பற்றிய எட்டுப் பாக்களில் ஆறு பாடல்கள் அகப்பொருள் கலந்தவை. இவ்வகப்பொருள் கலந்த பாடல்கள்

தலைவனது பரத்தைமையையும், தலைவி அதனைக் கடிதலையும், தலைவன் பொய்ச்சூள் புரிதலையும், தோழி அதற்காக அவனைக் கடிதலையும், தலைவன் தலைவியோடு வையையின் புதுவெள்ளத்தில் நீராடியதையும், தலைவன் இற்பரத்தையுடன் நீராடியதையும், தலைவி-பரத்தை உரையாடலையும் பற்றிக் குறிப்பிடுகின்றன.

இருங்குன்றம் : இஃது இன்றைய அழகர்மலையாக இருத்தல் கூடும் என்று கூறப்படுகின்றது. இருங்குன்றத்தின் மீது திருமாலுக்கும் பலதேவனுக்கும் ஒரு கோவில் இருந்தது. அதனால் இக்குன்றம், 'மாலிருங்குன்றம்’ எனப்பட்டது; அக்குன்றத்தில் சோலைகள் மிக்கிருந்தமையால் திருமாலிருஞ்சோலைமலை எனப்பட்டது (பாடல் 15, வரி 13-23) . அம்மலையில் சிலம்பாறு என்ற பெயருடன் ஒரு பெரிய அருவி விளங்கியது. மலைமீதுள்ள கோவிலில் குழலோசையும், மிடற்றுப் பாடலும், தாள ஒலியும், முழவொலியும் நிலவியிருந்தன. மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று மலையேறித் திருமாலையும் பலதேவனையும் வணங்கினர் [15, வரி 30-45). கண்ணனும் பலதேவனும் பெரும் பெயர் இருவர்' எனப்பட்டர் (15, வரி 661,

இருந்தையூர் : இருந்தையூர் என்பது கூடலுக்கு அப்பால் வையைக் கரையில் இருந்த ஊராகும். மதுரையில் இன்று கூடலழகர் கோவில் உள்ள இடமே அக்கால இருந்தையூர் என்பது. இங்குத் திருமால் இருந்த கோலத்தில் காட்சிதருகிறார். அதனால் இத்தலம் இருந்த ஊர்' என்று பெயர் பெற்றது. அப்பெயர் காலப்போக்கில் இருந்தையூர்' என மாறி வழங்கலாயிற்று.

தண்பரங் குன்றம் : இது கூடல் நகரத்திற்கு மேற்கில் இருந்தது. மலைமீது சோலைகள் மிக்கிருந்தன. மலையிலிருந்து அருவிகள் கீழ்நோக்கிப் பாய்ந்தன. இவற்றால் அம்மலை தண்பரங் குன்றம் எனப்பட்டது. [14,13-17) . மலைமீது முருகன் திருக்கோவில் இருந்தது. பாணர் யாழ்.வாசித்தனர். பலவகை இசைக் கருவிகள் ஒலித்தன. விறலியர் நடனமாடினர். மக்கள் இறைவனை வழிபட்டனர் {17,9–21] .

வையை; வையையில் புதுவெள்ளம் வருவதைக் கண்டதும் ஆற்றங்கரையின் காவலர் கரையைக் காவல் காத்தனர் (10, 7) . மதுரை மக்கள் அனைவரும் புது வெள்ளத்தில் நீராடினர். தலைவர் சிலர் பரத்தையருடன் நீராடினர். நீராடியவர்கள் பொன்னால் செய்யப்பட்ட நத்தை, நண்டு, இறால், வாளை மீன் இவற்றை நீரில் விட்டனர் |10, 71-88) வையையின் கரையிலிருந்த சோலைகளில் ஆடல் பாடல் நிகழ்ந்தன (22, 35-45). மதுரை மக்கள் வையையைப் பலவாறு வாழ்த்தித் தத்தம் இல்லங்களை அடைந்தனர்.

தமிழ் வையை : பாண்டியர் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர்; புலவர்களை ஆதரித்துத் தமிழை வளர்த்தவர். அதனால் அவர்கள் தலைநகராகிய கூடல் தமிழ் கெழு கூடல்' எனப்பட்டது அக்கூடலை அடுத்துப் பாய்ந்த வையையும், தமிழ் வையை (6, 60) எனப்பட்டது.

தைந் நீராடல்.: மார்கழி மாதத்தில்-நிறைமதி நாளாகிய திரு ஆதிரையில் ஆகமங்களை உணர்ந்த பூசகர்கள் தெய்வத்திற்குத் திருவிழாவைத் தொடங்கினர். அப்போது கன்னிப் பெண்கள் ஒன்றுகூடி நிலம் மழைவளம் பெற்றுக் குளிர்வதாகுக, என்று சொல்லி அம்பாஆடலை மேற்கொண்டனர். அந்நோன்பு முறையை அறிந்த முதிய பார்ப்பனிமார் அக்கன்னிப் பெண்களுக்கு நோன்பு நோற்கும் முறைமையைத் தெரிவித்தனர். அக்கன்னிப் பெண்கள், அவர்கள் தெரிவித்தபடி, பனி நிறைந்த கதிரவன் தோன்றும் காலத்தில் வையையில் நீராடினர்; கரையில் தங்கியிருந்த அந்தணர் வளர்த்த வேள்வித்தீயை வணங்கினர். இங்ஙனம் இளைய ஆண்மக்களோடு காமக் குறிப்பு இல்லாத விளை யாட்டைப் புரியும் அக்கன்னிப் பெண்கள். தவமாகிய தைந்நீராடலை வாய்க்கப் பெற்றனர் 11, வரி 74-92). இது அம்மன் பொருட்டு நிகழ்த்தப்பெறும் நீராட்டு என்று பொருள்படும். அம்பா, அம்பாள் என்பது அம்மனைக் குறிப்பவை.[18]

அடியார் வேண்டுதல் : அடியவர், 'நாங்கள் எங்கள் சுற்றத்தாருடன் நின் திருவடிகளைத் தொழுது வாழ அருள் புரிவாயாக (1) , யாம் மெய்யுணர்வு பெற்ற நின்னை வணங்க அருள்புரிவாய் 12 இந்த இருங்குன்றத்தின் அடியின்கண் வாழும் பேறு எங்களுக்குக் கிடைப்பதாகுக, ' 5) என்று திருமாலை வேண்டினர். -

அடியார் சிலர், "யாம் வேண்டுபவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல. எமக்கு வீடு பயக்கும் நின் அருளும், அதனை உண்டாக்க நின்னிடத்து யாம் செய்யும் அன்பும், அவ்விரண்டாலும் வரும் அறமும் ஆகிய இம் மூன்றுமேயாகும் (5) , நின் திருப்பரங்குன்றத்தில் யாம் வாழுதல் நாள்தோறும் பொலிந்து பயன்தருவதோடு சிறக்கும்படி நின் அருளை வேண்டுகிறோம் (9) , பிறவித் துன்பம் எம்மைவிட்டு நீங்குக என்று நின் புகழை ஏத்திப் பாடுவோம் [17] , யாம் எமது சுற்றத்துடன் கூடி நின் அடிக்கண் வாழுதல் இன்றுபோல் என்றும் பொருந்துக. [21] என்று முருகனை வேண்டினர்.

பிரிந்த தலைவர் வினைமுடித்து விரைவில் வந்துதம்மைக் கூடவேண்டும் என்பதற்குத் தலைவியர் திருப்பரங்குன்றத்தில் விழா இயற்றினர்; பின்பு வையைக் கரையிலும் வழிபாடு செய்தனர்; பின்பு கூடலில் விருந்து நடத்தினர் (17, வரி 42-46) ,

ஓவியம் : ஒவியம் எழுதுவோன் வல்லோன் (21 வரி 27-28) எனப்பட்டான். தண்பரங்குன்றத்து மலைமீதிருந்த முருகன் திருக்கோவில் மண்டபத்தில் பல ஒவியங்கள் வரையப்பட்டிருந்தன. அவற்றுள், நாள் மீன்களையும்

யும் உடைய துருவ சக்கரத்தைப் பொருந்திய சூரியன் முதலாக உள்ள கோள்களின் நிலைமையை விளக்கும் ஒவியம் ஒன்றாகும். இரதி மன்மதனைக் குறிக்கும் ஒவியம் மற். றொன்றாகும். கெளதமன், அகலிகை, இந்திரன் உருவங் களையும் இந்திரன் எடுத்த பூனை உருவத்தையும் வேறோர் ஒவியம் உணர்த்தினது இத்தகைய ஓவியங்கள் பல அம் மண்டபத்தில் தீட்டப்பட்டிருந்தன (19, வரி 46-53} . ஒவியங்களைப்பற்றிய இத்தகைய தெளிவான குறிப்பு வேறு சங்க நூல்களில் இல்லை எனபது இங்கு அறியத்தகும்.

பேரெண்கள் : நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பவை நீண்ட காலங்களைக் குறிக்கும் பேரெண்கள் ஆகும் 12, வரி 13-14) , திருமால் பற்றிய தனிப் பாடல் ஒன்றில் தோழம் என்பது ஒரு பேரெண் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒருகை, இருகை முக்கை...எண்கை, ஒன்பதிற்றுக்கை, பதிற்றுக்கை, ஆயிரம் கை, பதினாயிரம் கை, நூறாயிரம்கை என ஒன்று முதல் நூறாயிரம் வரை எண்கள் குறிக்கப்பட்டுள்ளன (3, வரி 34-43) .

மேற்கோள் : பிற அகப்பொருள் நூல்களில் உள்ள வாறே பரிபாடலிலும் திருக்குறள் போன்ற நூல்களின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க :

1. வென் வேலான் குன்று 9-68.

 வென் வேலான் குன்று-கலித்தொகை 93 ,


2.காமக் கணிச்சி 10-33

'காமக் கணிச்சி யுடைக்கு கிறையென்னு

காணுத்தாழ் வீழ்ந்த கதவு -குறள் 1251


3. இல்லது நோக்கி விளிவரவு கூறாமுன் - கல்லது வெஃகி வினைசெய்வார் 10, வரி 87-88

'இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையவன் கண்ணே யுள'- குறள் 223

4. "கள்ளின் களியெழக் காத்தாங் கலரஞ்சி"

 10, வரி 65


“களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று”-குறள் 929

புராணக் கதைகள்
1. பாற்கடலைக் கடைந்தது-2, வரி 71-72; 3 வரி 33–34
2. கருடன் தன் தாயின் துயரைக் களைந்தது-3, வரி15–18.
3. கண்ணன் கேசி என்னும் அசுரனைக் கொன்றது-3,31-32.
4. பிருங்கலாதன் கதை-4, வரி 12-21,
5. முருகன் சூரனைக் கொன்றது-5 வரி 4.
6. முருகன் கிரெளஞ்ச மலையைப் பிளந்தது-5, வரி 9,
7. முருகன் பிறப்பு-5, வரி 27-49.
8. சிவன் முப்புரம் எரித்த கதை-5, வரி 25.
9. முருகன் போர்க்கருவிகள் பெற்ற கதை-5, வ 50–70.
10. அகலிகை கதை-19, வரி 50-52.

இவற்றுள் பாற்கடலைக் கடைந்தது, கருடன் தன் தாயின் துயரைக் களைந்தது. பிருங்கலாதன் வரலாறு, முருகன் பிறப்பு, முருகன் போர்க் கருவிகள் பெற்ற வரலாறு, அகலிகை சாபம் பெற்றது ஆகியவை பிற தொகை நூல்களில் இடம் பெறாதவை என்னலாம். வட நாட்டுக் கதைகள் தமிழகத்தில் காலப்போக்கில் மிகுதியாக இடம் பெற்றமையை இவை உணர்த்துகின்றன.


த-18 வடசொற்கள் : இந்நூலில் பல வட சொற்கள் ஆளம் பட்டுள்ளன. அவற்றுள் குறிக்கத்தக்கவை கீழ்வருவனஆகும். இவற்றுள்ளும் பல புதியவை.

நேமி (1), கமலம், நித்திலம், மதாணி, ஆசான் (2): பிருங்கலாதன் (4): மாதவர், பதுமம், குணம், போகம் (5): கவிதை, ஆராதனை சாரிகை, சலதாரி, காமன் (6) மேகலை, வாகுவலயம், சிரம் (7): காரணம், தமனியம், குடாரி, அருச்சித்தல், அமிர்தபானம் (8); நயனம், தடாகம் (9); சனம், சரணத்தார், அத்திரி, தண்டம், திசை, சலம் (10); மிதுனம், மகரம், சையம், நதி, கன்னி, அம்பா (11); அரவிந்தம், மத்தகம், முஞ்சம், கங்கை (16): சுருதி (18); ரதி, காமன், இந்திரன், அகலிகை, கவுதமன், சோபனம் (19); கணிகை, சிந்திக்க, வந்திக்க, வச்சிய-வசீகரித், தலையுடைய (20); சருமம், மண்டிலம் (21).

வடமொழிப்பெயர் மொழி பெயர்ப்பு : (1 கண்ணன் குதிரை உருவத்தில் வந்து போரிட்ட கேசி என்னும் அசுரனைக் கொன்றான். இப்பெயர் கேசம்" என்னும் வடமொழி முதல் நிலையாக முடிந்தமையின் அதன் பொருள் பற்றிக் கடுவன் இள எயினனார் என்ற புலவர். கூந்தல் என்னும் பெயரோடு கூந்தல்'" (3, வரி 31) என்றார்.

(2) அவரே மேருமலையை அப்பெயரால் குறியாது. நடுவண் ஓங்கிய பலர் புகழ் குன்று' (4-24) என்று மாற்றிக் கூறியுள்ளார்.

(3) கற்பிற் சிறந்தவளும் தெய்வத்தன்மை பொருந்திய வளுமாகிய அருந்ததியை அவ்வாசிரியரே, கடவுள் ஒரு மீன் சாலினி ' (5-44) என்று குறித்துள்ளார்,

(4) ஆசிரியன் நல்லந்துவனார் என்ற புலவர் பல விண் மீன்களின் பெயர்களைத் தமிழில் மாற்றியுள்ளார்: கார்த்திகை-எரி, திருவாதிரை-சடை, பரணி-வேழம், இராசிஇருக்கை (11, வரி 1-3).


  1. செய்யுளியல், நூற்பா 116, 155.
  2. ௸ நூற்பா, 117 உரை.
  3. ௸ 1372, 1373, 1411 உரை.
  4. தொல்காப்பியம், அகத்திணையியல், நூற்பா 53 உரை.
  5. 6. lbid.P.56.
  6. 7.காவிய காலம், பக்.121.
  7. 8. History of Tamil Language Literatur.P.113
  8. 8. History of Tamil Language and Literatur.P.113.-
  9. 10. ஷெ பக். 60-61.
  10. 11. L. D. Swamikkannu Pillai, Indian Ephemeries, vol. 1, Part I, pp. 98–109.
  11. 12. History of Tamil Language and Literature.р. 56.
  12. 13. பரிபாடல், பக். 18.
  13. 15. A description of the sky during an eclipse in poem II has been used on an attempt to fix the date of
  14. 16the composition of the poem by astronomical calcuia tions, but it has proved a failure because the information in the text is not enough for calculating the date witheut adventitious unwarranted assumptions and the information supplied by the annotator has made confusion worse confounded.-- History of the Tamils, р, 584. - 16. Sri R. G. Bhandarkar, Vaishnavism, Saivism, and Minor Religions, pp. 3–4. -
  15. 17. புறநானூறு, 56.
  16. 18. புறநானூறு, 58.
  17. 19. ஈ. எஸ். வரதராச அய்யர், தமிழிலக்கியவரலா பக், 236,
  18. 20, பேராசிரியர் மு. இராகவையங்கார். ஆராய்ச்சித் தொகுதி, பக். 194-195.