தமிழ் இலக்கியக் கதைகள்/காட்டில் ஒலித்த தமிழ்க் கவி
சோழ வள நாட்டில் திருவாரூரில் இலக்கண விளக்கப் பரம்பரை என்றால் பழைய தலைமுறையில் தமிழறிந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும். வழிமுறை வழிமுறையாகத் தமிழ் வளர்த்த பெரிய குடும்பம் அது.
அந்த மரபில் வைத்தியநாத தேசிகர் என்ற ஒருவர் இலக்கண விளக்கம் என்ற பெயரில் ஐந்திலக்கணத்தையும் விளக்கும் நூல் ஒன்றை எழுதினார். அதனால்தான் அவருக்குப் பின் அந்த வம்சத்துக்கே இலக்கண விளக்கப் பரம்பரை என்ற பெயர் ஏற்பட்டது.
வைத்தியநாத தேசிகருடைய மாணவர்களாயிருந்த பலர் பிற்காலத்தில் சிறந்த புலவர்களாக முடிந்தது. அவர்களில் படிக்காசுப் புலவர் என்பவரும் ஒருவர். வைத்திய நாத தேசிகருடைய புதல்வராகிய சதாசிவ நாவலரும் தம் தந்தையிடமே தமிழ்க் கல்வி கற்றார். அதனால் படிக்காசுப் புலவருக்கும் சதாசிவ நாவலருக்கும் பழக்கமும் நட்பும் இருந்தன.
கல்விப் பயிற்சி முடிந்ததும் படிக்காசுப் புலவரும் சதாசிவ நாவலரும் பிரிந்துவிட்டார்கள்.
தம் தந்தை வைத்தியநாத தேசிகர் காலமானபின் சதாசிவ நாவலர் பலருக்குத் தமிழ் கற்பிக்கத் தொடங்கினார். அவருடைய புலமையும் பெயரும் நாளுக்கு நாள் ஓங்கின.
சதாசிவ நாவலருடைய சொற்பொழிவு தேன் மழை பொழிவது போல் கருத்துச் செறிவோடு இனிதாக இருக்கும்.
அந்தக் காலத்தில் முறையாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படிப்பதற்குப் பல வருடங்கள் செலவிடுவார்கள். சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் எப்படிக் குருவுடனேயே வாசம் செய்துகொண்டு அந்தக் கலையைப் படிப்படியாகக் கற்றுக் கொள்வார்களோ, அதே போல் ஒரு பெரும் புலவரை அடுத்துத் தங்கிக் குருகுலவாசம் செய்கிற மாதிரி இருந்து தமிழை முறையாகப் படிப்பார்கள். -
தமிழ் கற்பிக்கும் புலவர்களும், பாடத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் மூலச் செய்யுட்களை மனப்பாடம் செய்யச் சொல்லி, மாணவர்களைக் கண்டிப்பது உண்டு. நன்னூல், காரிகை, நிகண்டு முதலியவைகளை இப்படி முன் கூட்டியே மனப்பாடம் செய்து விடுவது மாணவர்கள் வழக்கம்.
இம்மாதிரி ஆசிரியருடனேயே உடன் தங்கிக் கற்பதில் தமிழ்க் கல்வி மட்டுமின்றி ஒழுக்கம், உலகியல், பண்பு, எல்லாம் தானாகவே ஆசிரியரிடமிருந்து மாணவனுக்குப் பழகிவிடும். தொண்டு செய்யும் பணிவும் வந்துவிடும்.
விறகு வெட்டிக் கொண்டும், வேட்டி துவைத்துக் கொண்டும், சாதகம் செய்து சங்கீதம் பழகுகிற மாதிரி நேரத்தை வீணாக்காமல் தமிழ் படித்தார்கள்.
திருவாரூர் இலக்கண விளக்கப் பரம்பரை சதாசிவ நாவலர் வீட்டில் தங்கி, நாலைந்து மாணவர்கள் தமிழ் படித்து வந்தார்கள். நாவலர் அவர்களுக்கு யாப்பருங்கலக் காரிகை என்னும் தமிழ் நூலை அப்போது கற்பித்துக் கொண்டிருந்தார். நாளைக்கு எந்தப் பகுதியைச் சொல்லிக் கொடுக்கப் போகிறாரோ, அந்தப் பகுதியை முதல்நாளே மனப்பாடம் பண்ணி விட வேண்டுமென்று மாணவர்களுக்கு நிபந்தனை போட்டிருந்தார் சதாசிவநாவலர். மனப்பாடம் செய்யா விட்டால் பாடம் மேலே நகராது. காரிகைச் செய்யுட்கள், கட்டளைக்கலித் துறை என்னும் பாடல் வகையைச் சேர்ந்தவை.இனிய சந்தத்தோடு படித்தால் விரைவில் மனப்பாடம் ஆகிவிடும். ஆனாலும் மாணவர்களுக்குச் சில தர்மசங்கடமான நிலைகள் ஏற்பட்டு விடுவது உண்டு. சதாசிவ நாவலர், “நாளைக்குள் பத்துக் காரிகைச் செய்யுள் ஒப்பிக்க வேண்டும்” என்று கண்டிப்பாகக் கட்டளை இட்டிருப்பார். அதே சமயத்தில் வீட்டு வேலைகள் எதையாவது செய்யச் சொல்லிச் சதாசிவ நாவலருடைய மனைவியும் மாணவர்களுக்குக் கட்டளை இட்டு விடுவாள். அந்த அம்மாளுடைய கட்டளைகளையும் தட்டமுடியாது. மாணவர்கள் அவர்களிருவருக்குமே நல்ல பிள்ளைகளாக வேண்டும்.
இப்படிப்பட்ட சமயங்களில் இரண்டு வேலைகளையுமே சாமர்த்தியமாகச் செய்து விடுவார்கள், சதாசிவ நாவலருடைய மாணவர்கள். அதாவது நாவலரின் மனைவி எந்த வேலையைச் செய்யச் சொல்லுகிறாளோ, அந்த வேலையைச் செய்து கொண்டே ஒரே சமயத்தில் பாட்டையும் இரைந்து சொல்லி உருப்போட்டு விடுவார்க்ள்.
நாவலருக்குத் துரதுவளைக் கீரை மேல் உயிர. தூதுவளை வற்றல், தூதுவளைக் காய்க் கூட்டு என்று அதைப் பல்வேறு வகையில் பக்குவப்படுத்தி உண்பார் அவர். அவருக்குப் பிடித்தமான கறிவகை அதுதான்.
நாவலருக்கு என்றைக்காவது தூதுவளைக் கீரையில் ஆசை விழுந்து விட்டதென்றால் மாணவர்கள் காட்டிலும், புதரிலும் அலைந்து தூதுவளை செடியைக் கண்டு பிடித்துக் கீரையும், காய்களும் கொண்டு வந்தாக வேண்டும். நாவலர் மனைவி, மாணவர்களைக் கூப்பிட்டுத் திடீரென்று உத்தரவு போட்டு விடுவாள்.
அன்றொரு நாள் அப்படி நடந்தது. நாவலர் நிறையக் காரிகைச் செய்யுள்களை மனப்பாடம் செய்யச் சொல்லி உத்தரவு போட்டிருந்தார். அதே சமயத்தில் தூதுவளைக் கீரை கொண்டு வரச் சொல்லி நாவலரின் மனைவியும் உத்தரவு போட்டு விட்டாள்.
காரிகையும் ஒப்பித்தாக வேண்டும். தூதுவளைங் கீரையும் கண்டு பிடித்துக் கொண்டு வந்தாக வேண்டும். மாணவர்கள் புறப்பட்டார்கள்.
செம்மற்பட்டி என்ற இடத்துக்கருகில் காட்டில் துரதுவளை கீரை கண்டு பிடிப்பதற்காக அலைந்தார்கள். மனப்பாடம் செய்ய ஒரு சுருக்கமான வழியும் தயாராயிருந்தது அவர்களிடம். ஒருவன் கையில் காரிகை ஏட்டைக் கொடுத்து விட்டால் அவன் அதைப்பார்த்து இரைந்து படிப்பான். அவன் படித்ததைக் கூர்ந்து கேட்டுத் திரும்பத் திரும்பச் சொல்லி மற்றவர்களும் இரைந்து மனனம் செய்வார்கள்.
அலைந்து திரிந்து ஒரு மட்டில் துாதுவளை செடிகள் இருந்த இடத்தைக் கண்டு பிடித்தாகிவிட்டது. கையில் முள் பட்டு விடாமல் தூதுவளை செடியில் காயும் கீரையும் பறிப்பதற்குப் போதுமான பழக்கம் வேண்டும். நான்கு மாணவர்கள் கீரை, காய் பறிப்பதற்காகச் செடிக்கு அருகே குனிந்து உட்கார்ந்தனர்.
மற்றொரு மாணவன் மனப்பாடம் செய்வதற்காகச் சொல்ல வேண்டிய காரிகைச் சுவடியை விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். அடுத்த விநாடியிலிருந்து அந்த அத்துவானக் காட்டின் புதர்களுக்கு நடுவிலிருந்து காரிகைத் தமிழ்க் கவி ஒலித்தது.
புதருக்கு அப்பால் வழிப் போக்கர்கள் நடந்து செல்லும் சாலை ஒன்றிருந்தது. அந்தச் சமயத்தில் முன்பு சதாசிவ நாவலரோடு அவர் தந்தையிடம், ஒருசாலை மாணாக்கராயிருந்து கற்ற படிக்காசுப் புலவர் அவ்வழியே அவசரமாக எங்கோ போய்க் கொண்டிருந்தார். காட்டுப் புதருக்குள்ளிருந்து காரிகைப் பாடலின் ஒலியைக் கேட்டு வியந்துபோய், மேலே நடக்கத் தோன்றாமல் சாலையில் நின்று விட்டார் அவர், “இதென்ன விந்தை! மக்கள் நடமாட்டமற்ற காட்டிலிருந்து காரிகைப் பாடல் ஒலி கேட்கிறது! இங்கே வந்து யார் இதைப் பாடுகிறார்கள்?” என்று கூறிச் சாலையிலிருந்து புதருக்குள் வந்து பார்த்தார், படிக்காசுப் புலவர்.யாரோ சில பிள்ளைகள் தூதுவளைகாயையும் பறித்துக்கொண்டே பாடலையும் சொல்லி உருப் போடுவதைப் பார்த்தார் அவர். ஆச்சரியம் தாங்கவில்லை அவருக்கு பக்கத்தில் ஓடிவந்து, “பிள்ளைகளே! நீங்களெல்லாம் யார்? காரியத்தையும் செய்துகொண்ட காரிகையையும் மனப்பாடம் பண்ணுகிறீர்களே?” என்று அவர்களைக் கேட்டார்.
“ஐயா! நாங்கள் சதாசிவ நாவலரின் மாணவர்கள்” என்று பதில் கூறினர் பிள்ளைகள்.அதைக் கேட்ட படிக்காசுப் புலவருக்கு மெய்சிலிர்த்தது. தம் நண்பர் சதாசிவ நாவலரின் முகம் நினைவுக்கு வந்தது அவருக்கு அந்தப் பிள்ளைகளைப் பார்த்து, “சதாசிவ நாவலரின் தந்தை எங்களுக்கெல்லாம் தமிழ் கற்பித்தார். சதாசிவ நாவலர் இப்போது உங்களுக்கெல்லாம் தமிழ் கற்பிக்கிறார். நீங்களோ காட்டுக்கும் செடிக்கும் தமிழ் கற்பிக்கிறீர்கள்” என்று. கூறி வியந்து உடனே ஒரு கவிதையைப் பாடினார் படிக்காகப் புலவர்.
“கூடும் சபையில் கவிவாரணங்களைக் கோளரிபோல்
சாடும் சதாசிவ சற்குரு வேமுன்உன் தந்தைதம்மாற்
பாடும் புலவர்களானோம் இன்றிச் செம்மற் பட்டிஎங்கும்
காடும் செடியும் என்னோ தமிழ்க் காரிகை கற்பதுவே"
கவிவாரணம் = கவிகளாகிய யானைகள், கோளரி = சிங்கம், சாடும் = வெல்லும். ஆம்! காடும் செடியும் தமிழ் மணக்கச் செய்து விட்டார்கள் அந்தப் பிள்ளைகள். படிக்காசரை இப்படி ஒரு பாட்டே பாடத் தூண்டி விட்டது அந்தத் தமிழ்மணம்.