உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் இலக்கியக் கதைகள்/சம்பந்தனுக்கு ஒரு சவுக்கடி

விக்கிமூலம் இலிருந்து

52. சம்பந்தனுக்கு ஒரு சவுக்கடி

அந்தக் காலத்தில் திருவண்ணாமலையில் சம்பந்தன் என்று ஒரு செல்வச் சீமான் வாழ்ந்து வந்தார். அவரிடம் எவ்வளவு செல்வம் இருந்ததோ அதைவிட அதிகமாகச் செருக்கும் திமிரும் இருந்தன. பிறரையோ பிறருடைய அறிவையோ அவர் மதிப்பது கிடையாது. எதற்கெடுத்தாலும் யாரிடமும் எடுத்தெறிந்து பேசிவிடுகிற குணமுள்ளவர்.தெருவில் கீழே குனிந்து பார்க்காமல் நடக்கப் பழகி விட்டவர்கள் என்றாவது ஒரு நாள் தடுக்கி விழ நேரிடுவது போல இந்த மாதிரிக் குணமுள்ளவர்கள் தலை குனிந்து தோற்கின்ற நிலை எப்போது வருமென்று சொல்ல முடியாது. பிறருக்கு வளைந்து கொடுக்காமல், பணியாமல் வாழ வேண்டுமென்று நினைக்கின்றவர்கள் எல்லோரும் பிறர் மட்டும் தங்களுக்கு வளைந்து கொடுத்தும் பணிந்தும் வாழ வேண்டுமென்று எண்ணுகிறார்கள். திருவண்ணாமலைச் சம்பந்தன் இந்த வகையைச் சேர்ந்த மனிதராக இருந்தார். முள் மரம் போலப் பிறரை நெருங்க விடாமல், நெருங்கினால் குத்திப் பிறருக்குப் பயன்படாமல் வாழ்வதில் அவருக்கு என்னதான் இன்பம் கிடைத்ததோ?

அவருடைய காலத்தில்தான் இரட்டைப் புலவர்கள் தமிழ் நாட்டில் ஊரூராகப் பயணம் செய்து பாடிப் பயன்பெற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் பெயர் இளஞ்சூரியர். மற்றொருவர் பெயர் முதுசூரியர். ஒருவர் குருடர், இன்னொருவர் நொண்டி குருடர், நொண்டியைச் சுமந்து கொள்ளவேண்டும் என்றும், நொண்டி குருடருக்கு வழியிலுள்ள மேடு பள்ளங்களைச் சொல்லி வழிகாட்ட வேண்டுமென்றும், இரண்டு பேருமாகச் சேர்ந்து ஒரு ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஏற்பாடு இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வதற்கு வசதியாக இருந்தது. இருவருமே கவி உள்ளம் படைத்தவர்கள். ஆகையால் கவலையை மறந்து வேடிக்கையாகச் சிரித்துப் பேசிக் கொண்டே அளவளாவி வாழ்வதற்குப் பழகியிருந்தார்கள். கண்களும் கால்களும் இல்லாத குருடரும் நொண்டியுமாக இருந்தாலும் மனத்தின் உற்சாகத்தில் நொண்டித்தனமோ, குருட்டுத்தனமோ பட்டு மூடி விடாமல் காத்துக் கொள்ளத் தெரிந்திருந்தது அவர்களுக்கு. கால்களும் கண்களும் இருந்தும் உள்ளத்தை நொண்டியாகவும், குருடாகவும் வைத்துக் கொண்டு உலகத்தில் உற்சாகமாக வாழ்வது எப்படி என்று தெரியாமல் வேதனைப் பட்டுக் கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்தார்கள் இரட்டையர்கள். இரட்டையர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள். மிகவும் வேடிக்கையானவை. விநோதம் நிறைந்தவை. உள்ளத்தில் பழுத்துக் கனிந்த கலை உணர்ச்சி இருந்தாலொழிய யாராலும் இப்படிக் கவலையின்றி வாழ முடியாது.

இரட்டையர்களுடைய பாடல்கள் பெரும்பாலும் இரண்டு பேரும் சேர்ந்து ஆளுக்கு இரண்டு வரிகளாகப் பாடி இணைத்தவை. முதல் இரண்டு வரிகளை இளஞ்சூரியர் பாடி நிறுத்தினால் அப்புறம், பின்னிரண்டு வரிகளை முதுசூரியர் பாடி முடிப்பார். அந்தப் பாடல்களில் குத்தல், கேலி, நகைச்சுவை, உட்பொருள் எல்லாம் நிறைந்திருக்கும். தாமரை இலைத் தண்ணீரைப் போல் உலகத்தில் வாழ்ந்து கொண்டே அங்கு நிறைந்துள்ள ஆசாபாசங்களில் ஒட்டாமல், அவைகளை அலட்சியமாக நோக்கிச் சிரித்துக் கொண்டே போகும் போக்கை இரட்டையர்கள் இயற்றிய சில பாடல்களில் காணலாம்.

இந்த இரட்டையர்கள் ஒரு சமயம் திருவண்ணமலைக்குப் போயிருந்தார்கள். சம்பந்தனைச் சந்திப்பதற்குச் சென்றார்கள். அவர்கள் போன சமயம் அதிகாலை நேரம் சம்பந்தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பரிகாரியிடம் தலைச் சவரம் செய்து கொண்டிருந்தார். வாயிற்படியேறி வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள் இரட்டையர்கள். அவர் சவரம் பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் தாங்கள் வந்த சமயம் சரியில்லை என்று அவர்களுக்கே பட்டது. திரும்பிப் போய் விட்டுச் சிறிது நேரம் கழித்து வரலாமென்று அவர்கள் திரும்ப எத்தனித்தபோது சம்பந்தனே அவர்களை நிமிர்ந்து பார்த்து விட்டார். சவரம் பண்ணிக் கொண்டிருந்த அவர் அப்படி நிமிர்ந்து தங்களைப் பார்த்துவிட்ட பிறகு தாங்கள் இன்னாரென்று அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் திரும்புவது நன்றாயிருக்காது என்று தோன்றியது, அவர்களுள் கண்ணால் பார்க்க முடிந்தவரான முடவருக்கு. எனவே அவர் சம்பந்தனைப் பார்த்து, “ஐயா! நாங்கள் இருவரும் புலவர்கள். உங்களைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தோம்” என்று கூறினார். சம்பந்தனுடைய முகத்தில் அவர்களைப் புலவர்க்ள் என்று அறிந்து கொண்டதற்கு அறிகுறியாக ஒரு சிறிதேனும் மலர்ச்சியோ புன்னகையோ ஏற்படவில்லை. மாறாகச் செருக்குடனே முறைத்துப் பார்த்தார்.

சம்பந்தனுடைய முகத்திலும் பார்வையிலும் இருந்த வறட்டுத் திமிரை முடவர் மட்டும்தான் காண முடிந்தது. “ஆள் மிகவும் கர்வம் பிடித்தவன் போலிருக்கிறது” என்று குருடருடைய காதருகில் நெருங்கி மெல்லச் சொல்லி வைத்தார் முடவர். குருடரும் நிலைமையை ஒருவாறு புரிந்து கொண்டு விட்டார்.

“ஒகோ! நீங்கள் புலவர்களா? நான் ஒரு நிபந்தனை போடுகிறேன். அந்த நிபந்தனைப்படி உங்களால் ஒரு பாட்டைத் தொடங்கி முடிக்க முடியுமா?” என்று எடுத்த எடுப்பில் யாரோ கூலிக்காரனுக்குக் கட்டளையிடுகிற மாதிரி அநாகரிகமாகவும் முரட்டுத்தனமாகவும் அவர்களைப் பார்த்துக் கேட்டார். சம்பந்தன்.

வரவேற்பு, விசாரணை, அளவளாவுதல் ஒன்றுமின்றித் தங்களைப் பார்த்ததும் பார்க்காததுமாக அவர் அவ்வாறு கேட்டது அவர்கள் மனத்தைப் புண்படுத்தியது. மனம் புண்பட்டாலும் அதை இரட்டைப் புலவர்கள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. "ஐயா! உங்கள் நிபந்தனையைச் சொல்லுங்கள். பாடி முடிக்கிறோம்” என்று சிரித்தபடி சம்பந்தனைக் கேட்டனர்.அவர் சொன்னார்:

‘மன்’ என்று தொடங்கி மலுக்கு என்று முடிகிறாற் போல் ஒரு வெண்பா பாட வேண்டும். உடனே பாட உங்களால் முடியுமா?”

அவருடைய பொருளற்ற நிபந்தனையைக் கேட்டவுடன் இரட்டையர்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.முட்டாள்கள், படித்தவர்களுக்கு நிபந்தனை விதித்து, ‘இப்படிச் செய்ய முடியுமா? அப்படிச் செய்ய முடியுமா?’ என்று கேட்கும் போது எந்தப் படித்த மனிதனுக்கும் ஆத்திரம் வரத்தானே செய்யும்? ‘இந்தப் பயலுடைய திமிரை அடக்கிச் சரியானபடி மட்டம் தட்டிவிடவேண்டும் என்று ஒருவருக்கொருவர் இரகசியமாகக் கூறிக்கொண்டு சம்பந்தனை நோக்கி,"ஐயா! உங்கள் நிபந்தனைப் படியே ‘மன்’ என்று தொடங்கி ‘மலுக்கு’ என்று முடியுமாறு இப்போதே பாடுகிறோம்” என்று ஒப்புக் கொண்டனர். -

“எங்கே பார்க்கலாம் உங்கள் திறமையை” என்று சவரம் பண்ணிக் கொண்டிருந்த பரிகாரியிடமிருந்து அரை குறையாகத் தலையை விடுவித்துக் கொண்டு, இரட்டையர்களைப் பாடச் சொல்லி ஏவி விட்டுப் பார்த்தார் வள்ளல். ‘தாம் சொன்னபடியே இரட்டையர்களால் பாடமுடியப் போவதில்லை’ என்ற அலட்சிய நோக்குதான் அவருடைய அந்தப் பார்வையில் இருந்தது.

இளஞ்சூரியர் கீழ்க்கண்டவாறு முதல் இரண்டு அடிகளைப் பாடினார்:

“மன்னுதிரு வண்ணா மலையிற்சம் பந்தனுக்குப்
பன்னு தலைச்சவரம் பண்ணுவதேன்?”

முதல்வருடைய குரல் முடிந்ததும் உடனே இரண்டாமவராகிய முதுசூரியர் அடுத்த இரண்டு அடிகளைக் கீழ்க்கண்டவாறு கணீரென்று சொன்னார்:

"-மின்னின்

இளைத்த இடைமடவா ரெல்லாரும் கூடி
வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு”

பின்னிரண்டு அடியையும் பாடி முடித்ததும், “வருகிறோம் ஐயா! வணக்கம்” என்று குத்தலாகச் சொல்லி விட்டு இரட்டையர்கள் வேகமாக அந்த இடத்திலிருந்து நழுவினர். அதற்கு மேலும் அங்கே தங்கியிருக்க அவர்களுக்குப் பைத்தியமா என்ன? சம்பந்தனுக்குத் தம்முடைய முதுகில் யாரோ சவுக்கினால் ஓங்கி அடித்துவிட்ட மாதிரி இருந்தது. வெட்கம் பிடுங்கித் தின்றது. பரிகாரிக்கு முன்னால் குருடும் நொண்டியுமாக வந்த அந்த இரண்டு பஞ்சைப் புலவர்களும் அப்படித் தம்மை அவமானப்படுத்தி விட்டார்களே என்று தவித்தார் அவர். அப்போது அவருக்கு வந்த கோபத்தில் அரை குறையாக சவரம் பண்ணிக் கொண்ட தோற்றத்தோடு மட்டும் இருக்காவிடில் தெருவில் ஒடிப்போய் அந்தப் புலவர்களைத் துரத்தியாவது , உதைத்திருப்பார் அவர்! அப்படி அந்தப் பாட்டின் அர்த்தம்தான் என்ன?

“திருவண்ணாமலையில் சம்பந்தன் ஏன் சவரம் பண்ணிக் கொள்கிறான் தெரியுமா? சிறுசிறு பெண்களெல்லாம் விளையாட்டாக அவன் குடுமியை வளைத்து இழுத்துப்பிடித்துக் கொண்டு தலையில் குட்டிவிட்டுப் போகிறார்கள். அந்தக் குட்டு வலி பொறுக்க முடியாமல்தான் சம்பந்தன் குடுமியையே சவரம் பண்ணிக் கொள்கிறான்” என்பதுதான் பாட்டின் கருத்து. எவ்வளவு குறும்புத்தனமான கற்பனை பாருங்களேன்! அந்தக் குறும்புத்தனத்திலேயே சம்பந்தன் சொன்ன நிபந்தனையும் நிறைவேறியிருந்தது!