தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/சமயதீபம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சமய தீபம்
ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார்
(1940)

ஒதுங்கலான ஒரு ஊரில் யூனியன் பஞ்சாயத்துப் புதிதாய் ஏற்பட்டது. முதலாக வந்த பஞ்சாயத்துத் தலைவர் பொதுநலப் பிரியர். ஊரை எல்லா விதத்திலும் திருத்தமுறச் செய்ய வேண்டும் என்று ஆத்தரங்கொண்டார். தெருக்களில் எப்படியாவது விளக்குப் போட்டுவிடவேண்டும் என்று கருதி, லாந்தல்க் கல்லுகளும், கல்லுகளின் உச்சியில் கனத்த இரும்பினால் செய்த லாந்தல்ச் சட்டமும், லாந்தல் உள்விளக்கு, சிமினி எல்லாம் தயார் செய்து விளக்குப் போட்டுவிட்டார். வெளிச்சம் ஏற்பட்ட காரணத்தினால் பெண்டுகளும் பிள்ளைகளும் இரவில் ஊருக்குள் செளகரியமாக நடமாட ஆரம்பித்தார்கள். கள்ளர் பயம் இல்லை.

இப்படியாக ஐந்து வருஷம் கழிந்தது. பஞ்சாயத்துத் தலைவர் வேறொருவர்.புதிதாக வந்தார். அவருடைய நிர்வாகம் ஒரு வருஷம் நடந்தது. அந்த நிர்வாகத்தில் விளக்குப் போடக் கணக்கில் வகையில்லை என்று ஆய்விட்டது. மேலதிகாரிகள் வந்து லாந்தல், விளக்கு, சிமினி ஆகிய உறுப்புக்களை ஜில்லாத் தலைவருக்குக் கொண்டு போய்விட்டார்கள். ஆகவே, ஊருக்கு மிச்சம், லாந்தல்க் கல்லு, லாந்தல்ச் சட்டம், இருட்டு இந்த மூன்றுந்தான் என்று ஏற்பட்டுவிட்டது. -

இப்படியாக இருபது வருஷம் கழிந்தது. லாந்தல்க் கல்லும் சட்டமும் மாத்திரம் நின்று வந்தன. அயலூர் ஒன்றுக்கும் போய் அறியாத பள்ளிப் பையன்கள் தெருக்களில் கல்லுகள் எதற்காக நிற்கின்றன என்பதைப் பற்றி ஆராய ஆரம்பித்தார்கள். மாடுகளைக் கட்ட என்று சிலர் சொன்னார்கள். ‘அப்படியானால், ஒவ்வொரு வீட்டுக்கு முன்னும் கல் நட்டிருக்க வேண்டுமே? அப்படி இல்லாததால், கல் நட்டது மாடு கட்டுவதற்காக அல்ல. மேலும் தெருக்கோடியில்க் கொண்டுபோய் யாராவது மாட்டைக் கட்டிவைப்பார்களா?" என்றும் சொன்னார்கள். இப்படியெல்லாம் தர்க்கித்துக் கொண்டிருக்கும்போது, பெரிய பையன், அதாவது, பன்னிரண்டு வயசுப் பையன் ஒருவன் வந்தான்; அவன் சின்னப் பையன்களின் சந்தேகத்தையெல்லாம் தீர்த்து வைத்தான் எப்படி;

“ஒரு தடவை நம்முடைய ஊருக்கு விறகு வண்டி ஒன்று வந்தது. வண்டிக்காரன் மாட்டைக் கல்லில் கட்டிவிட்டு, கடை முளை, கடையாணி, கொண்டுவந்த சாப்பாடு எல்லாவற்றையும் சாக்கில் சுற்றிக் கல்லின் மேலுள்ள இரும்புச் சட்டத்தில் வைத்துவிட்டான். இந்த மாதிரி அயலூரிலிருந்து வண்டிவந்தால் மாட்டைக் கட்டவும் சாமான்களைப் பிள்ளைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்துக் கொள்ளுவதற்காகவும் நாட்டியது கல். சுமைதாங்கிக் கல் இருக்கிறதல்லவா, அதுபோல இதுவும் ஒரு தர்மம்" என்று சொல்லித் தீர்த்தான். மற்றப் பையன்களும் ஒப்புக் கொண்டு விட்டார்கள். கண்டுபிடிக்க முடியாத ஒரு உண்மையைக் கண்டு விட்டதாக எல்லோருக்கும் ரொம்ப எக்களிப்பு.

ஒரு பையனுக்காவது கல்லுக்கும் விளக்குக்கும் சம்பந்தம் உண்டென்று எண்ணத் தோன்றவில்லை.

லாந்தல்க் கல்லு பட்ட பாடுதான் நமது முன்னோர்கள் கண்டு வைத்துப் போன பெரிய உண்மைகள் பாடும்.

"ஒன்றாகக் காண்பதே காட்சி"

என்றார் ஒரு பெரியார்;

"ஒழிவற நிறைந்த
ஒருவ போற்றி"

என்றார் மற்றொரு பெரியார். உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம். ஏதோ ஒரு விதத்தில் ஆராய்ந்து, பொருள்கள் தோற்றத்தில் எவ்வளவு வேறுபட்டனவாய் இருந்தாலும், உண்மையில் ஒரு பொருள்தான். பேதமில்லா பொருள் தான் என்று கண்டு விட்டார்கள். மேலும், அந்தப் பொருள் எங்கும் வியாபித்துள்ளது; வானவெளியில் எவ்வளவு தூரம் எட்டிப் போனாலும் வெற்றிடம் என்பது இல்லாதபடி நிறைந்துள்ளது; நுணுகி நுணுகிப் போனாலும்,அணுவென்றும், அணுவுக்குள் அணுவென்றும், இறுதியில்லாதபடி செறிந்து கொண்டே போகும் தன்மையது அந்தப் பொருள் என்றும் கண்டார்கள். ஒழிவு-அதாவது வெற்றிடம், அற-இல்லாதபடி, எங்கும் நிறைந்துள்ள வஸ்து கடவுள் தத்துவம் என்றார்கள்:

"ஒழிவற நிறைந்த
ஒருவ போற்றி"

எவ்வளவு எளிமையோடும் தெளிவோடும் விஷயத்தை விளக்குகிறது வாக்கியம்!

மேல் நாட்டுக் கலைவல்லாரும் பல கருவிகள் கொண்டு ஆராய்ந்து இதே முடிவுக்கு இப்போது வந்திருக்கிறார்கள். நம்மவர்களோ அந்தக்கருவிகளின் துணையில்லாமலே ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னமேயே இந்த உண்மையைக் கண்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல்க் கல்லில் எழுதிவைத்த மாதிரி சொல்லி விட்டார்கள்.

உண்மைகளைக் கண்டதும் எழுதி வைத்ததும் வியக்கத்தக்க காரியந்தான். அதைவிட வியக்கத்தக்கது, அந்த உண்மைகளைப் பல நூற்றாண்டுகளாகப் போற்றி வந்ததுதான்.

உண்மைகள் கண்ணால்க் காணக் கூடியவையல்ல; கையால்ப் பற்றி எடுக்கக் கூடியவையல்ல; உள்ளத்தில் நிற்பன. ஆகவே, அவைகள் மறைந்து போய்விடுவதற்கும் காரணம் உண்டு; மறைந்தும் போய்விட்டன. பெரியார்கள் சொல்லி வைத்த விஷயங்களைப் புறக்கணித்து விட்டு, வெறும் வார்த்தைகளையே சொல்லி வந்தார்கள் பிற்காலத்தவர். பெரியார்கள் பாடிய பாடல்களை அப்படியே பாடிக் கொண்டிருந்தால் போதும் என்று ஏற்பட்டு விட்டது. திருவாசகத்துக்கு உரை சொல்லக் கூடாது என்று சொல்லுவார்கள். பாராயணம் போதும், பொருள் தெரிய வேண்டியதில்லை என்று ஏற்பட்டு விட்டது. தெய்வப் பாடல் என்று சொல்லும் பாடல்களுக்குப் பின்னால், உண்மையனுபவமும் உணர்ச்சியும் இருக்கின்றன என்ற கொள்கை போய்விட்டது. உள்ளேயிருந்து என்றும் மங்காத பேரொளி வீசிக் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் கதையாய் முடிந்தது. விளக்கில்லை, வெளிச்சம் இல்லை, லாந்தல்க் கல்லும் சட்டமும் நிற்கிறது என்று ஆய்விட்டது.

இந்த நாஸ்திகத்தைப் பூர்த்தி பண்ண ஆங்கிலக் கல்வியும் தமிழ்நாட்டுக்குள் புகுந்துவிட்டது. சமய நூல்களில் ஒன்றுமேயில்லை. வார்த்தைகளை இப்படியும் அப்படியுமாக அளக்கிற காரியந்தான் வைதிகர்கள் பேசுகிற காரியமெல்லாம், என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் ஆங்கிலம் கற்றவர்கள். அவர்கள் பண்டிதர்களைக் கேள்வி கேட்டால் பதில் வருவது காரணகாரிய விளக்கம் அல்ல; வசை நாமாவளிதான்.

ஆங்கிலம் கற்றவர்களைக் குற்றம் சொல்ல இடமில்லை. அவர்களுக்கு உண்மைகளை எடுத்து விளக்குபவர்கள் பள்ளிக்கூடங்களிலும் இல்லை. வைதிகக் குழாங்களிலும் இல்லை. எல்லோருமாக, அயலூர் வண்டிமாடு கட்டவும் கடையாணியைச் சாக்கில்ச் சுற்றி வைக்கவுந்தான் ஏற்படுத்தியது கல்லும் சட்டமும், என்று தானம் வைத்துவிட்டார்கள். நம்பிக்கை பிறக்கமாட்டேன் என்று விட்டது கேட்டவர்களுக்கு.

தமிழுலகம் பொதுவாக இந்த நிலையில் இருந்தது. இருபது வருஷத்துக்குமுன். அப்படித்தான் இருந்தது திருநெல்வேலியும்.

சில நண்பர்கள் திருச்செந்தூருக்குப் போய் விட்டுத் திருநெல்வேலிக்குத் திரும்பி வந்தார்கள். வந்தவர்கள் வடக்கே இருந்துவந்த ஒரு சுவாமிகள் சமய சம்பந்தமாக ரொம்ப அருமையாயும் தெளிவாயும் பிரசங்கங்கள் செய்ததாகவும், தாங்கள் ரொம்ப அனுபவித்ததாகவும் சொன்னார்கள். சுவாமிகளுக்கு ஊர் திருப்பாதிரிப்புலியூர் என்றும் அவர்கள் ஒரு மடாலயத்துக்கு அதிபர் என்றும் சொன்னார்கள்.

சிலநாள் கழித்து, திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனுக்கு அடுத்துள்ள தருமபுரம் மடத்தில் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் சுவாமிகள் பரிவாரத்தோடு பல்லக்கில் வந்து இறங்கியிருக்கிறார்கள் என்று செய்தி வந்தது. மறுநாள் சாயங்காலம் நெல்லையப்பர் கோவில் வசந்த மண்டபத்தில் சுவாமிகள் பிரசங்கம் என்று துண்டுப் பத்திரிகையின் மூலம் விளம்பரமாயிற்று. சுவாமிகளின் பிரசங்கத்தைக் கேட்க நானூறு ஐந்நூறு பேர் கூடியிருந்தார்கள்.

சுவாமிகள் ஆசனத்தில் அமர்ந்திருந்தது தனியான காட்சியாய் இருந்தது. ருத்திராக்ஷ மாலையும், ஸ்வர்ணலிங்கம் தாங்கிய வடமும், திருநீற்றுப்பொலிவும், கண்ணுக்கும், மனசுக்கும் விருந்தளித்தன.

பிரசங்கம் ஆரம்பித்தது. வார்த்தையும் அக்ஷரமுமே ஒவ்வொன்றாய் நின்று நின்று வெளிவந்து ஒலித்தன. வார்த்தைகள், வார்த்தைகளின் கதி, ஆழ்ந்த குரல் எல்லாம் சேர்ந்து, இதயமே பேசுகிறது என்பதைத் தெரிவித்தன. கேட்டவர்கள் செவிகொடுத்து இதயத்தையே கேட்டார்கள். ஆகவே பொருளும் உணர்ச்சியும் கேட்டவர்கள் இதயத்துக்குள்ளே சென்று பதிந்து விட்டன.

நேரம் ஆக ஆக, உணர்ச்சியோடு கலந்து வேகம் கொண்டது விஷயம். ஆசிரியருக்கும் கேட்பவர்களுக்கும் தெரியாதபடி வார்த்தைகளும் அதிவேகமாகவே ஓடின. ஆனால், அழுத்தமாவது தெளிவாவது எவ்விதத்திலும் குறையவில்லை.

தமிழோ சாதாரணமான பேச்சில் வழங்குகிற பசுந்தமிழ். அந்தத் தமிழுக்குச் சக்தி இன்னது என்று தெரிய வந்தது; இதயத்தில் எழும் உணர்ச்சிகளை அப்படி அப்படியே பளிங்கில் வைத்துக் காட்டிய மாதிரி விளக்கிக் காட்டியது. சபையிலுள்ள ஒவ்வொருவருக்கும் தம்மோடுதான் நேர் நேராக சுவாமிகள் பேசினதாகத் தோன்றியது; பாஷை எல்லோரோடும் அவ்வளவு ஒட்டிய பாஷை.

விஷயம் கடவுள் தத்துவம். ஆனாலும், எத்தனையோ விஷயங்கள் வந்து வட்டமிட்டுச் சுழித்துப்போயின. நம்மவர் வாழ்க்கையில் உள்ள எத்தனையோ அம்சங்கள் வந்து தெளிவுபட்டு ஓடின. ஒவ்வொன்றும் உணர்ச்சி ததும்பியதாய் இருந்தது; வாழ்க்கையோடு ஒட்டிய உண்மையாகவே இருந்தது. நம்முடைய மனசு அங்கங்கே திளைத்து நிற்கும்; அந்த விஷயம் முடிந்ததும், பெருக்கெடுத்துப்போகும் பெரிய விஷயத்தோடு இலகுவாகக் கலந்துகொள்ளும்.

கடவுளுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தத்தை எடுத்துச் சொல்லும்போது, சுவாமிகள்,

"விறகில் தீயினன்;
பாலிற்படு நெய்போல்
மறைந்து நின்றுளன்
மாமணிச் சோதியன்;
உறவு கோல்நட்(டு)
உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக்
கடையமுன் நிற்குமே!“

என்ற தனிக்குறுந்தொகைச் செய்யுளை எடுத்தாள நேர்ந்தது. பலர் இந்தச் செய்யுளை உணர்ச்சி யாதொன்றும் இல்லாமல் கையாண்ட காரணத்தால், சாமானியமாகவும் இளைத்ததாகவும் தோன்றியது செய்யுள். ஆனால், சுவாமிகள் அதன் உண்மையில் திளைத்து ஆர்வத்தோடு விளக்கிக் காட்டின மாத்திரத்தில், முன் காணாத உண்மைகளும் உணர்ச்சியும் பாடலில்ப் பொதிந்து கிடப்பதாகப் புலப்பட்டது. நமக்கும் கடவுளுக்கும் உறவாவது, கடவுளுடனேயே ஒன்றியிருக்கிறோம். நாம், வேறாகத் தனித்து நிற்கவில்லை என்ற உண்மை தான். இந்த உண்மையைச் சதா மனசில் வைத்து ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும் சிந்திப் போமானால், மறைந்து நின்றுள்ள மாமணிச் சோதியான் முன்னின்றுவிடும்“ என்று விஷயத்தைக் கூட்டி முடித்தபோது, சபையோருக்கு அந்த அற்புத தரிசனமே கிடைத்த மாதிரியான ஒரு உணர்ச்சி உண்டாயிற்று. எல்லோரும் ஒரே ஆனந்த பரவசத்தில் மூழ்கினார்கள். ஆகா, இதையெல்லாம் கேட்டு அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லையே’ என்று சபைக்கு வராதவர்களை எண்ணிப் பரிதவிக்க வேண்டியதாய் இருந்தது.

அதோடு, தமிழை ஆர்வத்தோடு கற்று வந்தவர்களுக்கு ஒரு வகையில் அவமானமும் வருத்தமும் ஏற்பட்டது என்று சொல்ல வேண்டும். ஏதோ தமிழறிஞர்களை யெல்லாம் தமிழுலகம் அறிந்திருக்கிறது, மதித்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தோமே, சுவாமிகளை இதுவரை அறிந்திராதது போகட்டும்; அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டது கூடக் கிடையாதே என்று அவமானந்தான், வருந்தந்தான்.

ஆம், தமிழனுடைய ஜாதகமே அப்படி. நம்மிடம் உயர்ந்த பொருள்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் மதிக்கத் தெரியாமல், ஒன்று மில்லாத படோடோபத்தை, முக்கியமாக, தனக்கு விளங்காத காரியத்தைக் கண்டு மோகித்த வண்ணமாயிருக்கிறானே என்றெல்லாம் நொந்து கொள்ள நேர்ந்தது.

ஆனாலும், கருவூலத்தைக் கண்டு விட்டோம் என்ற ஆனந்தத்துக்குக் குறைவில்லை. திருநெல்வேலிப் பிரசங்கம் நல்ல முகூர்த்தத்தில் நடந்தது என்று சொல்ல வேண்டும்.

தொடர்ந்து பத்து நாளுக்கு மேலாகவே திருநெல்வேலியில் பிரசங்கம் நடந்தது. கேட்க வந்தவர்களின் தொகை அதிகரித்ததால், வசந்த மண்டபத்தை விட்டு மேலப் பிராகாரத்தில் பிரசங்கத்தை நடத்த நேர்ந்தது.

பிறகு நாகர்கோயில், அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோயில் முதலான இடங்களுக்குப் போய், பிரசங்கங்கள் செய்தார்கள். அதன்பின், தமிழ்நாடெங்குமே பிரயாணம் செய்து, தமிழ் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு இன்னதென்று விளக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

சமய நூலைக் கற்று வந்தவர்களுக்கு, அதன் உள்ளான தத்துவம் இன்னதென்று தெரியவும் அதில் ஆர்வம் கொள்ளவும் ஏற்பட்டது.

லாந்தல்க் கல்லுகளை வெறும் மாடு கட்டுங்கல் என்று எண்ணும் மனப்பாங்கு போய், உண்மை ஒளியைத் தரக் கூடிய மிகவும் உபயோகமான தீப ஸ்தம்பம் என்று மதிக்கிற காலம் வந்து விட்டது.

இதெல்லாம் நேர் நேரான உண்மையென்று தெரியவரும். திருப்பாதிரிப்புலியூர் மடத்துக்குப் போய்ப் பார்த்தால்; காலையிலிருந்து இரவு பத்து மணி நேரம்வரை வந்து பாடங் கேட்கும் மாணவர்களைப் பார்த்தால் தெரியவரும். உத்தியோகஸ்தர்கள், பென்ஷன் பெற்ற உத்தியோகஸ்தர்கள், சஷ்டியப்த பூர்த்தியாகிச் சதாபிஷேகத்துக்கு அடிபோட்டுக் கொண்டிருக்கும் கிழவர்கள் ஆகிய பலர் வந்து சமய சம்பந்தமாகவும் தமிழ் இலக்கிய சம்பந்தமாகவும் பாடங்கேட்டுக் கொண்டிருப்பார்கள். உண்மையான உணர்ச்சியோடு, சுவாமிகள் விஷயங்களையும் நூல்களையும் விளக்கிக் காட்டுவதால்தான் மேலே சொன்ன மாணாக்கர்கள் இல்லாவிட்டால் பரீஷைக்குப் போகும் மாணாக்கர்கள் வருவார்கள்; (தமிழ் அனுபவிக்கக்கூடியது, அனுபவிப்பதற்காகவே ஏற்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது) மடத்துக்கு வரும் மாணாக்கர்களோ, ஆனந்த அனுபவம் தூண்டியே வருபவர்கள்.

எல்லாம் ரூபாய் அணா பைசாக் காரியமாய்ப் போய், கூடுகிற கூட்டமெல்லாம் பொறாமைப்பேயும் பகைமைப் பேயும் ஆட்டிவைக்கும் கூட்டமாயிருக்க, தமிழ்ப் பண்பாட்டில் உண்மையான ஆர்வங் கொண்டு, தமிழர்கள் கூடித் தமிழை ஆராய்கிறார்கள், அனுபவிக்கிறார்கள் என்றால், எவ்வளவு பெரிய விஷயம்! தமிழ் வளர்ச்சிக்கு, ஞானியார் சுவாமிகள் மடாலயம் பண்பட்ட நாற்றங்கால்.

தமிழ்நாடு புத்துயிர்பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ் மகள், சுவாமிகளுக்கு அரிய உருவத்தையும் உடல் நலத்தையும், கணீர் என்று ஒலிக்கும் வெண்கல நாதத்தோடு கூடிய குரலையும் அளித்தாள். எவ்வளவு விரிவாகவும் சிக்கலாகவும் இருந்த போதிலும், விஷயங்களின் ஒவ்வொரு உறுப்பையும் அதற்கு இயைந்த இடம் அமைத்து முறைப்படுத்தி நிர்மாணம் செய்யக்கூடிய அபூர்வமான அறிவுவிளக்கத்தையும் கொடுத்தாள். எல்லாவற்றிற்கு சிறப்பாக, பொறுமை, அடக்கம், அன்பு, பக்தி ஆகிய உயர்ந்த இதயதத்துவங்களையும் அளித்தாள்.

"சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி
மனப்பழக்கம்-நித்தம்
நடையும் நடைப்பழக்கம்;
நட்பும் தயையும்
கொடையும் பிறவிக்
குணம்.”

ஆம், பிறவிக் குணந்தான் என்று சுவாமிகளுடன் பழகிய பின் தெரியவரும்.

இத்தனை அரிய பேறு தமிழகத்துக்குக் கிடைத்திருக்கிறது. சுவாமிகளுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அவர்களுடைய இதய கமலத்திலே சதா குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் அருள்வாராக!

இதய ஒலி(நூல்)