உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/ஞானியார் சுவாமிகள்

விக்கிமூலம் இலிருந்து

ஞானியார் சுவாமிகள்
(திரு. மு. அருணாசலம், எம்.ஏ., அவர்கள்)
(1959)

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், தமிழ் நாட்டின் நடுவில் வாழ்ந்து, தமிழ் மக்களின் வாழ்க்கையை மிக நீண்ட காலம் எல்லா வகையாலும் உருவாக்கியவர் என்றால், கற்றறிந்தவர்களுக்கு ஞானியார் சுவாமிகளின் கண்டிகை அணிந்த திருவுருவமும் சீல வாழ்க்கையும் குளிர்ந்த பார்வையும் மனத்தில் எழும். சுவாமிகள் திருக்கோவலூராதீனம் என்ற சிறந்த ஞான பரம்பரையிலே தலைமை ஏற்றவர். சிவ வேடப் பொலிவு நிரம்பப் பெற்றவர். முதுமையினால் திருமேனி தன்னில் அசைவு உடையவர். சைவத் திருமுறைகளை ஓதி ஓதி உருகும் நெஞ்சினர். பக்திப் பெருக்குடையவர். தமிழ் இலக்கிய இலக்கணக் கடலை நிலைகண்டுணர்ந்தவர். தம் சமயப் பிரசாரத்துக்கு ஏற்ற வகையில் வடமொழியறிவும் நிரம்பியவர். விவகாரத்திற்கான ஆங்கில அறிவு படைத்தவர்.

அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்த தமிழ் நாட்டில் சைவ மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் சென்று, ஆடம்பரம் எதுவும் அறியாதவராய், தம் சொந்தத் தகுதியொன்றையே துணையாகக் கொண்டு, சுவாமிகள் மக்களை நல்வழிப்படுத்தி வந்தார். சைவம் என்ற உணர்ச்சி இல்லாத மக்கள், சற்றே ஆங்கிலம் படித்து உத்தியோகத்தில் அமர்ந்தவர்கள், நாஸ்திக வாதமே நாவின் நுனியில் பயில்பவர்கள் -திருநீறு என்றால் சாம்பல் பூசுவது; உருத்திராக்கம் என்றால் கொட்டை கட்டுவது - இப்படிப்பட்ட பேச்சுக்கள் மலிந்த உலகம். பலவகையான அரசியல் - சமூகப் பூசல்களும் கலந்து, வாழ்க்கையைக் குழப்பி, எவ்வகையான உறுதியும் பண்பாடும் முன்னேற்றமும், ஆழமும் அகற்சியும் நுட்பமும் உட்புக முடியாதவாறு செய்திருந்த காலம். அத்தகைய சூழ்நிலையில் சுவாமிகள் எல்லோருக்கும் ஒரு சமய தீபமாக விளங்கிய தோடன்றி, பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயத்தில் சமய தீபத்தை ஏற்றியும் வைத்தார்கள். இதை வேறு ஒருவரும் இத்துணைப் பேரளவில் செய்ததில்லை. சுவாமிகள் சொல்லாலும் பார்வையாலும், பழக்கத்தாலும், உபதேசத்தாலும் இன்று தமிழ்நாட்டில் படித்த குடும்பங்கள் நிரீசுவர வாதத்தை விட்டு, புதிதாகச் சைவ சமயத்தைக் கண்டு, திருமுறை பயின்று, திருநீறிட்டு, ஆலய வழிபாடு முறையாகப் பொருளுணர்ந்து செய்து வருபவை எத்தனையாயிரம் என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது.

ஆனால் சுவாமிகளின் பேச்சிலும் செயலிலும் பிற மதத்தைப் பழித்தல் என்பது காண முடியாது. சமயம் நேர்ந்த போது, ஆண்டவன் ஒருவனே என்று கூறிப் பிறமத அடிப்படைத் தத்துவங்களையும் அவர் பயன்படுத்துவதுண்டு.

தமிழ் இலக்கியத்திலும் அவ்விதமே, நுனிப்புல் மேய்ந்து வந்த பண்டிதர்களிடையே இப்பெரியார் தம் சமயப் பேச்சுக்கள், உபதேசங்கள், இடையே கூறிய இலக்கிய நயங்கள் இலக்கண நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் உண்மையிலேயே பண்டிதராயனாரும், புலமைக்கான உண்மைப் பாதையிலே செல்லத் தொடங்கினாரும் எண்ணற்றவர். பாடம் படித்தோரைச் சொல்ல வேண்டுவதில்லை.

சுவாமிகளின் வடமொழிப் புலமையை அவர் பேச்சைக் கேட்போர் நன்கு உணர முடியும். தம் கருத்துக்கு அடிப்படையான வடமொழி வாக்கியங்களை அவர் எளிதாக எடுத்துக் கூறுவார். கூறும்போது, ஒவ்வொரு சொல்லையும் தனியே பிரித்துப்பொருள் கூறி, இலக்கணம் கூறி, பகுதி விகுதி போன்ற பாகுபாடுகளும் செய்துகாட்டி, தம் கருத்துக்கு அவ்வடமொழி வாக்கியங்கள் எவ்வாறு துணை வருகின்றன என்பதை விளக்கும்போது, அவருடைய படிப்பின் ஆழம் புலப்படும்.

சுவாமிகளின் பிரசங்கங்கள் மூன்று மணிக்கு மேலாகத் தான் எப்போதும் நடக்கும், படித்தவர் படியாதவர், இளைஞர் முதியவர், செல்வர், வறியவர், ஆடவர் பெண்டிர் குழந்தைகள் - அனைவரும் அவ்விடத்தில் இருப்பார்கள். பலதிறப்பட்ட மக்கள் கூடுகிற கூட்டத்தில் சிறிது சத்தம் இருத்தல் தவிர்க்க முடியாதது. தவிர 1934 போன்ற ஆண்டுகளில் சென்னையில் இப்போதுள்ள பஸ் வசதிகள் இல்லை. ஆகவே நெடுந்தெர்லைவிலிருந்தும் அவர்கள் பேச்சைக் கேட்கப் பல்லாயிர மக்கள் குழுமியிருப்பார்கள். இடையில் வீடு நோக்கித் திரும்பச் சித்தப்படுவோரும் இருப்பார்கள். இப்படியாகக் கூட்டத்தில் சத்தம் எழும்போது, ”நம: பார்வதி பதயே” என்று அவர்கள் ஒரு முழக்கம் செய்த மாத்திரத்தில், கடல் அலைபோல், ”அரஹர மஹா தேவா” என்ற எதிர் முழக்கம் எழும். சந்தடி பூரணமாய் ஓய்ந்து மீண்டும் அமைதியாகப் பேச்சு தொடர்ந்து நடைபெறும்.

அன்பர்களின் விருப்பத்துக்கேற்றவாறு அவர்கள் பிரசங்கங்கள் அமைவது குறிப்பிடத்தக்கது. மாம்பலத்தில் பெரியார் இருவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் புதிய வீடு கட்டிக் குடி போனார்கள். புது, வீட்டில் சுவாமிகள் திருக்கல்யாண காலட்சேபங்கள் நடத்தினால் குடும்பத்துக்கு மங்களமுண்டாகும் என்பது அவர்கள் கருத்தாயிருக்கலாம். இச் சந்தர்ப்பங்களில் சுவாமிகள் செய்த பிரசங்கங்கள் காமாட்சி கல்யாணம், மீனாட்சி கல்யாணம், பார்வதி கல்யாணம், வள்ளி திருக்கல்யாணம் என்பன.

சுவாமிகள் வீர சைவ சமயத்தின் ஆசாரியர். ஆனால் பிற சமயங்களையும் போற்றிப் பேசுவதே அவர் சுபாவம், அவர் பிரசங்கம் முழுமையும், சைவ சித்தாந்தப் பிரசங்கமாயிருக்கு மேயன்றி, தனியான வீரசைவம் அதில் தொனிக்காது. அப்படியே வைஷ்ணவர்கள் விருப்பத்திற்கிணங்கி, சீதா கல்யாணம், ஆண்டாள் போன்ற பிரசங்கங்கள் அவர் செய்ததுண்டு. ஒவ்வொன்றும் வைஷ்ணவ சமய மரபு வழுவாமல் பேசியது, கேட்பவர்கள் பெரிதும் அதிசயிக்கத் தக்கதாகவேயிருக்கும்.

சுவாமிகள் நடத்திய சமயப் பாட வகுப்புகள் சிறப்பானவை. அவர்கள் எழுமூரில் தங்கியிருந்தபொழுது, என்னோடொத்த சில நண்பர்களும் நானும் சேர்ந்து, சித்தாந்த சாத்திர பாடம் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். “சைவ சித்தாந்த சமயக் கருத்து உணர்வதற்கு அடிப்படையான கருவிநூல்கள் சில. சிவஞான போதம், சித்தியார், சிவப்பிரகாசம் பயில்வதற்கு முன் பல அடிப்படைக் கருத்துக்கள் உங்களுக்குப் பழக்கமாயிருக்க வேண்டும். முப்பத்தாறு தத்துவங்கள். நன்றாய் விளங்க வேண்டும். இவற்றைக் கூறும் ஒரு நூல் உண்மை விளக்கம் என்ற சாத்திரம். இதை நீங்கள் பயில்வது அவசியம் என்று சொல்லி, ஒரு நல்ல நாளில் அதைத் தொடங்கினார்கள். தினம் இரண்டு அல்லது மூன்று வெண்பா வீதம் சுமார் பதினைந்து நாள் இந்நூல் பாடம் நடந்திருக்கலாம். காலையில் 7.30 முதல் 9.30 வரை பாடம் நடக்கும். இருந்த மாணாக்கர் சுமார் 20 பேர். எல்லோரும் சென்னையில் அலுவல் பார்த்தவர்கள். பாடங்கேட்டவர்களுக்கு, அச்சிறுநூற் பயிற்சியானது விரிந்து, சித்தாந்த சாத்திரப் பயிற்சிக்கு ஒரு முன்னுரையாக அமைந்திருந்தது. சைவ சித்தாந்தரீதியாகத் தத்துவங்கள் பற்றிய திட்டமான அறிவு எங்களுக்கு ஏற்பட்டது மாத்திரமல்லாமல், சைவ சித்தாந்த சாத்திரக் கருத்துக்கள் அனைத்தையும் மேற்போக்காக ஒரளவு உணரும் அறிவும் அப்போது ஏற்பட்டது. கேட்ட நாங்கள் வாழ்க்கையில் பிறகு அச்சமய தத்துவங்களை என்றுமே மறக்க வியலாது. பண்டைக் காலத்தில் எழுந்த புலமை மிக்க உரையாசிரியர்களின் இலக்கண இலக்கிய உரைகளையும், சூத்திர பாஷ்யங்களையும் பார்த்திருக்கிறோம். அவை அனைத்தின் தொகுப்பாகவும் சுவாமிகள் பாடம் இருந்தது என்று கூறுவது மிகையன்று. பேராசிரியர் கூறும் உரை நுட்பங்களும், சிவஞான சுவாமிகள் போன்றார் கூறும் சமய நுட்பங்களும், சிரமமில்லாமல் எளிதில் எங்களுக்குச் சொந்தமாயின.

சுவாமிகள் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு பாடல், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் பாடிய சந்நிதி முறைப் பாடல்களில் ஒன்று. :

ஏது பிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித்
தீது புரியாத தெய்வமே - நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு.

மாம்பலம் தெய்வசிகாமணி முதலியாரவர்கள் வீட்டில் ஒரு சமயத்தில் பிரசங்கத்தில் இப்பாட்டைச் சொன்னார்கள். சொல்லி அப்படியே சில நிமிஷ நேரம் கண்ணிர் உகுத்தபடியே இருந்துவிட்டார்கள். பிறகு தான் சுய நினைவு வந்து, "நம : பார்வதி பதயே" என்ற முழக்கத்தோடு மீண்டும் பேச்சைத் தொடங்கினார்கள்.

மற்றொரு பாடலும் இங்கே குறிப்பிடத்தக்கது. பாடலை உச்சரிக்கின்ற முறையினாலே, இதுவே கேள்வியாகவும் இதுவே விடையாகவும் அமைந்துள்ளது.

இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவி அல்லேன்
நல்லறத்து ஞானி யல்லேன் நாயினேன்

சொல்லறத்துள்

ஒன்றேனும் இல்லேன் உயர்த்ததிருப் போரூரா
என்றேதான் ஈடேறு வேன்.

இந்தச் சிதம்பர சுவாமிகள் பாடலை அடிக்கடி தோத்திரப் பாடலாகவே பாடுவார்கள். "உயர்ந்த திருப்போரூரா என்றே நான் ஈடேறுவேன்?" என்று கூறும்போது, தொனியால் "திருப்போரூர் முருகப் பெருமானே! என்றைக்குத்தான் நான் கடைத்தேறப் போகிறேன்?" என்று இரங்குவதாகிய கேள்வி பிறக்கும். ஆனால் அதே பாட்டை அவர்கள் இரண்டாம் முறை, “உயர்ந்த திருப்போரூரா என்றே நான் ஈடேறுவேன்“ என்று பாடும்போது “திருப்போரூரா என்று சொல்லிக் கொண்டே நான் கடைத்தேறி விடுவேன்“ என்ற பொருள் பிறக்கும்.

சுவாமிகள் பிரசங்கங்கள் நீண்ட நேரம் நடக்குமென்று குறிப்பிட்டேன். கேட்டோரில் பலர் சென்னை போன்ற நகரங்களில் வேலைகளில் ஈடுபட்டிருந்து சற்று நேரங்கழித்து வருதல் கூடும். வருவோர் அனைவரையும் சுவாமிகள் நேர்முகமாய் அறிந்திருப்பார்கள், ஆதலால், வருவோர் யாராயிருப்பினும், தாம் சுவாமிகளைப் பார்த்து வணக்கம் செலுத்தினாலொழிய, அவருக்குப் பிரசங்க நேரத்தில் மனம் நிம்மதி பெறாது. பிரசங்கம் நடந்து கொண்டேயிருக்கும். சுவாமிகள் வாயிலிருந்து வரும் சொற்பிரவாகம் யாருக்காகவும் தடைப்படாது. ஆனால் வந்து வணங்குபவரை வரவேற்பதில் குறை வொன்றுமிராது. ஒருவருக்குப் புன்னகை, ஒருவருக்குத் தலையசைவு, ஒரு வருக்குத் திருநீறு, ஒருவருக்குக் கண்ணினாலேயே வரவேற்பு இவ்விதம், யாரும் எந்தக் குறையும் இன்றித் திருப்தியாகத் தம்மையும் ஞானியார் சுவாமிகள் பார்த்து வரவேற்றார் என்றே மகிழ்வார்கள்.

சுவாமிகள் இந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் வாழ்ந்துங்கூட, எப்போதும் எங்கு செல்வதாயினும், பல்லக்கில் தான் செல்வார்கள். சென்னைக்கு வருவதும், போவதும், சென்னையில் பல இடங்களுக்குப் போவதும் எல்லாம் பல்லக்கில்தான்.

எழுமூரில் ஒரு சம்யம் அவர்கள் தங்கியிருந்த பொழுது மாம்பலத்தில் அவர்களுக்குச் சிறப்பாக ஓர் ஊர்வலம் செய்வித்தோம். அனேக தெருக்களில் அவர்களைப் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, அவர்களுடைய அன்பர்கள் உள்ள இடங்களில் அவர்களுக்கு வணக்கமும் வழிபாடும் செய்வித்துப் பின் அவர்கள் இருக்கையில் சேர்ப்பித்தோம். அவ்வாறு செல்லும்போது மாம்பலத்தில் சாம்பசிவம் தெருவில் உள்ள எனது இருக்கைக்கும் ஊர்வலம் வந்தது. அங்கு நிறுத்தி அவர்களுக்கு வீட்டிலுள்ளார் அனைவரும் நமஸ்காரம் செய்து விபூதி பெற்றுக் கொண்டோம். அப்போது எனது குழந்தை மணிமேகலை, தூரத்தில் நின்றது ஓடிவந்தது. குழந்தைக்கு ஊர்வலம் வேடிக்கையான ஒரு காட்சியேயன்றி, ஊர்வலத்திற்குத் தலைவரான சுவாமிகளை வணங்க வேண்டுமென்ற எண்ணம் உதிப்பது இயல்பல்ல. ஆதலால் குழந்தை பார்த்துக் கொண்டே ஒரு வாயில் தூண்மீது சாய்ந்து கொண்டு நின்றது. பல்லக்கு நகர்ந்தது. சுவாமிகளைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே நின்ற குழந்தையைச் சுவாமிகள் பார்த்தார்கள். பல்லக்கை நிறுத்தச் சொல்லிக் குழந்தையை அழைத்துத் திருநீறு கொடுத்தார்கள். ஒரு வயதுக் குழந்தை - பல்லக்கு சரியாக எட்டக்கூட இல்லை. அவர்கள் குனிந்து குழந்தையின் நெற்றியில் திருநீறிட்ட தோற்றம் இன்னும் என் கண் முன்னே நிற்கின்றது.

குழந்தைக்கும் சமயப் பிரசங்கத்துக்கும் வெகுதூரம். ஆயினும் ஒரு சம்பவம் நான் மறக்க முடியாதது. 1936 ஆம்ஆண்டின் தொடக்கத்தில் சுவாமிகள் மாம்பலத்தில் வைத்தியராமன் தெருவில் நீண்டகாலம் தங்கியிருந்தார்கள். தினமும் இரவில் 7 மணி தொடங்கி 10 மணி வரை சமயப் பிரசங்கங்கள் நடைபெறும். தவறாது என் மனைவியும்நானும் சென்று கேட்டு வருவதுண்டு. என் மகளும் உடன் வருவது வழக்கம். அப்பொழுது அவள் ஒன்றரை வயதுக் குழந்தை. சுவாமிகள் தாமிருந்த வீட்டின் தெருத் தாழ்வாரத்திலிருந்து கொண்டு பேசுவார்கள். நீளமான தாழ்வாரம், மூன்று நீண்ட படிகள். கீழே பந்தல் போட்டு சமுக்காளம் விரித்திருக்கும். கேட்போர் அதில் இருந்து கேட்பார்கள். குழந்தையோ என்னோடு உடன் வந்து பத்து நிமிஷம் பக்கத்திலிருக்கும். பிறகு எழுந்து சுவாமிகள் இருக்குமிடம் சென்று அவர்கள். பக்கத்தில் ஒரு முழத்துரம் தள்ளி உட்காரும். முதல் நாள் உட்கார்ந்த பொழுது கூட்டத்தில் இருந்த ஓர் அன்பர் குழந்தையை அப்பால் போகும்படிச் சொன்னார். ‘இருக்கட்டும்’ என்று சுவாமிகள் சொல்லி விட்டார்கள். அது முதல் தினமும் குழந்தை தவறாமல் அங்குப் போய் உட்கார்ந்து கொள்ளும். படியில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு அவர்களைப் பார்த்தபடியே மூன்று மணி நேரமும் இருக்கும். அவர்கள் தோற்றப் பொலிவில் ஈடுபட்டதோ, பேச்சின் ஒலியில் ஈடுபட்டதோ, பாட்டின் இசையில் ஈடுபட்டதோ- யாரும் சொல்ல வியலாது. பச்சைக் குழந்தை மூன்று மணி நேரம் தூங்கி விழாமல், தொந்தரவு செய்யாமல் அப்படியே இருந்தது, நினைத்துப் பார்த்தால் இன்னும் எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. கூட்டம் முடிந்து எல்லாரும் திருநீறு பெறும்போது தானும் வாங்கிக் கொண்டு என்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும்.

சுவாமிகளுடைய தோற்றமும், பேச்சும் அளித்த கவர்ச்சியே இக்குழந்தையின் நடத்தைக்குக் காரணம்.

ஞானியார் சுவாமிகள் திருக்கோவிலாராதீனத்தின் பட்டமேற்று ஐம்பது ஆண்டுகள் 1939 இல் நிறைந்தன. அப்பொழுது தமிழ்நாடு முழுமையுமே அறிந்து கலந்து இன்புறும்படியான முறையில் அந்நிறைவு விழா நடைபெற்றது. ஞானியார் சுவாமிகளுக்கு அன்பு பூணாத தமிழ்ப் பண்டிதர், புலவர், அரசியல்வாதி, பிரமுகர் - யாரும் தமிழ் நாட்டில் அன்று இல்லாமல் இல்லை. அவரினும் வயதில் முதிர்ந்தோர் பலர் இருந்தார்கள். பதவியில் பெரியோர் இருந்தார்கள். ஆனால் அவர்களுள் யாரையும் அந்த விழாவில் தலைமை தாங்க அவர்கள் அழைக்கச் சொல்லவில்லை. பண்டிதர்களோடு நெடுங்காலம் பழகிப் பழகி அவர்கள் சரக்கெல்லாம் வெறும் ஆடம்பரம், ஆழமில்லாதது என்று அவர் அறிந்திருந்தார். தம்முடைய துறவு, ஆதீனத் தலைமை காரணமாக யாரையும் குறை கூறும் பழக்கத்தை அவர் வைத்துக் கொண்டதில்லை. எனினும் தம்முடைய விழாவுக்குப் போலிகளை அழைக்க அவர் விரும்பவில்லை. டி.கே.சி அவர்கள் பேச்சை அவர் இரண்டொரு முறை, காரைக்காலம்மையார் பாடலைப் பற்றிப் பேசியபோது கேட்டிருந்து, அப்பேச்சின் ஆழத்திலும், உணர்ச்சியிலும் மனம் ஒன்றியிருந்தார். எனவே, இந்த நிறைவு விழாவுக்கு அவரையே தலைமை வகிக்கும்படிக் கேட்டுக் கொள்ளச் செய்தார். அனேகருக்கு அக்காலத்தில் இது மிக்க வியப்பளித்தது. பெரும் புலவர்கள், ஞானியாருக்கு வேண்டியவர்கள் என்று நினைத்தவர்கள் இருக்க, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு, பண்டிதரல்லர் என்று பண்டிதர்களால் ஒதுக்கப்பட்டவரை அவர் அழைக்கச் செய்தது, அவர்கள் கருத்தின்படித் தவறுதானே? இச்செயல் அடிப்படையில் ஞானியார் சுவாமிகளின் உள்ளம் எப்படி உண்மையை நாடிற்று என்பதையே காட்டிற்று. அக்காலத்தில் டி.கே.சி. யவர்கள் எந்தப் பதவியிலும் இருக்கவில்லையென்பதை நினைவு கூரவேண்டும்.

ஞானியார் சுவாமிகள் சமயப் பிரசங்கத்தில் ஒரு புதிய பாணி அல்லது பத்தியைத் தோற்றுவித்தார்கள். தொடங்கும்போது விநாயகர் வணக்கம், முருகன் வணக்கம், குரு வணக்கம், தமது மடத்தின் முதல்வர் வணக்கம் என இவற்றோடு பேச்சுத் தொடங்கும்.

‘விநாயகனே வெவ்வினையே வேரறுக்க வல்லான் என்ற பதினொராந்ததிருமுறைச் செய்யுள், தந்தைதாய் ஆவானும் என்ற குருவணக்கச் செய்யுள் போன்ற அனேகம் பாடல்கள் இவ்வாறு தமிழ்ச் சைவ நன்மக்களிடையே பிரசாரத்துக்கு வந்தன. இவ்விதமே பிரசங்க முடிவில் 'உருவாய் அருவாய்’ என்ற கந்தரனுபூதிச் செய்யுளையும், ஆறிருதடந்தோள் வாழ்க என்ற முருகப் பெருமான் வாழ்த்துச் செய்யுளையும், அவர்கள் இறுதியில் கூறிமுடிக்கும்போது கேட்டார் மனத்தில் இவை மிக்க சாந்தி அளிப்பனவாயிருக்கும். சுதந்திர இந்திய நாட்டில் கூட்ட முடிவில் நாட்டு வாழ்த்துப் பாடுவது இப்போது ஏற்பட்டுள்ள புதிய சம்பிரதாயம். ஆனால் சுவாமிகள் தம் கூட்ட முடிவில் இவ்விதம் சாந்தி தரவல்ல முருகன் வாழ்த்துப் பாடி முடிப்பது மிக்க தீர்க்க திருஷ்டியைக் காட்டுகிறது.

அன்றியும், கூட்டத்தினரை விளிக்க அவர் உபயோகித்த சொல் “மெய்யன்பர்களே“ என்பது. இன்று கூட்டங்களில் இச்சொல் காதில் விழும்போது, அவர்களுடன் பழகிய அனைவருக்கும் ஒரு கணம் சுவாமிகள் நினைவு உள்ளத்தில் தோன்றி மறையாமல் இராது.

மற்றொன்று, பேச்சிலே அவர்கள் முடிவான ஒரு கருத்தை நோக்கிப் பல துணைச் செய்திகளைச் செலுத்தும் போது, ஒவ்வொன்றையும் முற்றுப் பெறாத, சிறு சிறுதொடர்களாகச் சொல்லி, இறுதியில் கருத்தைக் கொண்டு முடிப்பார்கள். அவ்வாறு அவர்கள் தொடர்களை நிறுத்தி நிறுத்திச் சொல்லும் முறை தனியான ஓர் அழகுடையதாயிருக்கும். அதுவே ஒரு கலை, நேரில் கேட்டவர்களுடைய உள்ளத்தை அது ஈர்க்க வல்லதாயிருக்கும். இன்று மேடையில் பேசும் பண்டிதர்கள் அனைவருமே அந்தப் பாணியைக் கடைப்பிடிக்கிறார்கள்.

இங்ஙனமாக, தமிழ்ப் பேச்சு, சமயப் பேச்சுகளில் அவர்கள் ஒரு புதிய பாணியைத் தோற்றுவித்தார்கள் என்பது பலரும் உணர்கின்ற உண்மை. அவர்களுடைய பாணியையே பின்பற்றி இன்றைய பேச்சாளர் அனைவரும் பேச்சில் வல்லவராகி இருக்கிறார்கள்.

சுவாமிகளின் ஐம்பதாண்டு ஆட்சி விழாவை முன் குறிப்பிட்டேன். அவ்விழாவில் பங்கு கொண்டவர்கள், அவர்களுடைய விருந்தோம்பும் பண்பை அனுபவித்திருப்பார்கள். படித்தோர், படிப்பில்லாதோர், அந்தஸ்துடையவர், இல்லாததவர் எனப் பலரும் அடங்கிய பெருங் கூட்டம், அக்கூட்டத்தில் எல்லாப் பந்திகளுக்குமிடையிலே அவர்கள் போய்ச் சாப்பாட்டில் ஒவ்வொரு சிறு அம்சத்தையும் விசாரித்தது, விருந்தோம்புவோர் காட்ட வேண்டிய பரிவுக்கு இலக்கணமாய் அமைந்திருந்தது.

இங்ஙனமாக, தமிழ்நாட்டின் சரித்திரத்தையும் தமிழ் மக்களுடைய முன்னேற்ற இயக்கங்களின் சரித்திரத்தையும் ஆராய்ந்தோமானால், எல்லாத் துறைகளிலும் ஞானியார் சுவாமிகளின் வாழ்க்கை ஊடுருவி நின்றமை தெரியவரும். எந்த நிலையிலும் அவர்கள் அரசியல் - சமூக இயல்களில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்களுடைய பேச்சாலும், வாழ்க்கையாலும், மக்கள் சமயப் பற்றும் தமிழ்ப் பற்றும் கொண்டார்கள்; மறைமுகமாக இது நாட்டுப் பற்றுக்கு வித்தாயிருந்தது என்பது மிகையன்று. தமிழ் இலக்கண அறிவு, இலக்கிய உணர்ச்சி, தமிழ்ப் பண்பாடு வளர்ந்தன. கோயில்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாயிற்று. இறைவன் திருநாம முழக்கம் எங்கும் எதிரொலித்தது. சிவ சின்னங்கள் பகிரங்கமாய் கண்ணில் புலப்பட்டன. தெய்வப் பெயர் சொல்லுவது படித்தோருக்கு இழிவு என்றிருந்த நிலைமாறி, படித்தோரிடம் தெய்வ பக்தியும், சமய உணர்ச்சியும், சாத்திர அறிவும் துலக்கம் பெறத் தொடங்கின.

இந்த இருபதாம் நூற்றாண்டில் முதல் நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்ட இந்தச் சமய உணர்ச்சியும் எழுச்சியும் இன்னும் ஒரு நூற்றாண்டுக் காலமேனும் நம்மிடையே உயிர் கொண்டிருந்தது நம்மை முன்னோக்கிச் செலுத்தும் என்பது உறுதி.


★★★★