உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/ஞானியாரடிகளின் வாழ்வும் - பணியும் !

விக்கிமூலம் இலிருந்து

ஞானியாரடிகளின் வாழ்வும் - பணியும் !
க. திருநாவுக்கரசு

திருப்பாதிரிப்புலியூர் மடத்தின் அயந்தாம் பட்டமாகிய சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் தாம் இம்மடத்துக்கு புகழைச்சேர்த்தவராவார். இவரை அனைவரும் ஞானியார்சுவாமிகள் என்றும் ஞானியாரடிகள் என்றும் கூறுவர். இவரது குரல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் 40 ஆண்டுகள் வரையிலும் தமிழகமெங்கும் ஒலித்தது.

ஞானியாரடிகள் 1873 ஆம் ஆண்டுப் பிறந்து, தமது 69ஆவது அகவையில் 1942இல் இயற்கை எய்தினார். இவரை நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இவரது பேச்சையும் கேட்டிருக்கவும் முடியாது. ஆனால் இவரைப் பற்றி திருமுருக கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுகளின் வழியாகத்தான் முதன்முதலில் 1959ஆம் ஆண்டுக் கேட்டேன். நான் அவரது சொற்பொழிவைக் கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை அவரைப்பற்றி கூறாமல் இருக்கமாட்டார். அடுத்து நான் ஞானியாரடிகளைப் பற்றி திரு.வி.கவின் வாழ்க்கைக் குறிப்புகளிலும் மறை. திருநாவுக்கரசு எழுதிய மறைமலையடிகள் வாழ்க்கை வரலாறு எனும் புத்தகத்திலும் படித்து அறிந்தேன்.

சாமி சிதம்பரனாரின் தமிழர் தலைவர் புத்தகத்தில் பெரியாரின் குடிஅரசு அலுவலகத்தைத் தொடங்கி வைத்தார் ஞானியாரடிகள் என்பதைப் படித்துத் தெரிந்து கொண்டேன். திருச்சி குழித்தலை கடம்பர் கோவிலில் இளமுருகு பொற் செல்வி அவர்களின் இல்லத்தில் தங்கி அவர்களின் நூலகத்தை ஒரு பார்வை பார்த்தபோது 1910க்குப் பிறகு 1940 வரையுள்ள நூல்கள் மற்றும் சமய, அரசியல் இதழ்களில் ஆங்காங்கே ஞானியாரடிகளின் பெயர்கள் கண்களில் அகப்பட்டவாறே இருந்தன.

சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடான செந்தமிழ்ச் செல்வியில் ஞானியாரடிகளின் ஒளிப்படத்தோடு அவரைப் பற்றிய செய்திகளையும் படித்தேன்.

1970ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் திரைப்பட உரையாடல் ஆசிரியராகத் திகழ்ந்த வி. என். சம்பந்தத்தைச் சந்திக்க நேர்ந்தது. புகழ் பெற்ற நடிகையாக ஒரு காலத்தில் விளங்கி வந்த பி. கே. சரசுவதியை அவர் திருமணம் செய்த கொண்டவர். அவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது ஞானியாரடிகளைப் பற்றி பேச்சு எழுந்தது. தாம் அம்மடத்தில்தான் தமிழ் படித்ததாகவும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்த வித்துவான் இராசக் கண்ணனார் ஞானியாரிடம் தமிழ் படித்தவர் என்றும், அவர் தமது பெரிய தாயாரின் மகன் என்றும் என்னிடத்தில் கூறினார்.

நான் சென்று உரையாடுகிற தமிழ் அறிஞர்களெல்லாம் அவர் பெருமையைப் பேசலாயினர். அனைத்தையும் விட சர். ஏ. டி. பன்னீர்செல்வத்தைப் பற்றி கட்டுரை எழுத தஞ்சை மாவட்டத்திலுள்ள (1987 - 88 களில்) சில இடங்களுக்கு சென்றபோது அவரது உறவினர்கள் குடியிருந்த செல்வபுரம், தீபங்குடி, காப்பனாமங்கலம் ஆகிய ஊர்களுக்கும் செல்ல வேண்டிவந்தது. - தீபங்குடியில் இருந்த பன்னீர்செல்வத்தின் உறவினர் இராணுவத்தில் அதிகாரியாக இருந்தவர் - முற்றிலும் ஆங்கில பாணியில் வீடு, உடை, பேசும்பாணி போன்றவற்றில் இருந்த அவர்- பன்னீர்செல்வத்தை அத்தான் என்றே கூறி அவரைப் பற்றி சொல்லி வந்தபோது ஞானியாரடிகளைப் பற்றியும் குறிப்பிட்டது எனக்கு பெரு வியப்பாக இருந்தது. அவரது மிகவும் வித்தியாசமான கிறிஸ்தவ பெயர் எனக்கு நினைவில் இல்லை. கிறிஸ்தவரான அவர் வணக்கத்திற்குரிய மகான் என்று பலமுறை அவரைப் பன்னீர்செல்வம் தமது குடும்பத்தாரிடம் பேசியுள்ளதை சந்திப்பின்போது அவர் நினைவு கூர்ந்தார்.

புலவர் பொன்னிவளவனுடன் பேசிக் கொண்டிருந்த போது த. வே. உமாமகேசுவரனார் ஞானியாரடிகளிடம் பெரு மதிப்பு வைத்திருந்ததாகவும், த. வே. உ. அவர்கள் புலவர் பொன்னிவளவனின் உறவினர் என்றும் தெரிந்து கொண்டேன்.

ஆங்கில ஆட்சியின்போது தஞ்சை மாவட்டத்தின் இரட்டையர்களாகச் செயல்பட்ட சர். ஏ. டி. பன்னீர்செல்வமும் த. வே. உமாமகேசுவரனாரும் தருணம் வாய்க்கிறபோதெல்லாம் ஞானியாரடிகளின் அறிவுரைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பது கடந்தகாலப் பதிவுகளிலிருந்து கிடைக்கின்ற செய்திகளாக இருக்கின்றன.

மயிலை கபாலீசுவரர் கோவிலில் நடைபெறும் திருமுறை சொற்பொழிவுகளின் போதும்,

சென்னை மல்லீசுவரர் கோவிலில் குருகுலம் அழகரடிகள் நிகழ்த்தி வந்த திருக்குறள் சொற்பொழிவுகளின் போதும்,

திரு.வி.க. அவர்களால் நிறுவப்பட்ட ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜனசபாவில்நடைபெற்று வந்த வார சொற்பொழிவுகளின் போதும்,

சிந்தாதிரிப்பேட்டை வேதாந்த சங்கத்தில் நடைபெற்றுவந்த தமிழ் வகுப்புகளின் போதும்,

பிரபுலிங்க லீலையைப் பாடமாக நான் கேட்க வேண்டும் எனக் கருதி திரு.வி.க. மணிமண்டபத்தில் லால்குடி நடேச முதலியார் நடத்திய வகுப்புகளின்போதும், சைவ சிந்தாந்த பெருமன்ற சொற்பொழிவு ஒன்றின்போது பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளின் போதும் என்னுடைய தேடுதலில் குறுக்கும் நெடுக்குமாக ஞானியாரடிகள் வந்து சென்று கொண்டே இருந்தார்.

1950களின் இறுதிகளிலிருந்து என்னைத் தொடரும் அவர்க்கு என்னிடமிருந்து அவரைப் பற்றிய சித்திரம் ஒன்று வேண்டுமல்லவா? அவரைப் பற்றிய என் கருத்தமைவுக்கு ஒரு வடிகால் தேவையல்லவா? அதற்காகவே நட்பானது போலவே காஞ்சிபுரம் அ.நா. பாலகிருஷ்ணன் அவர்களது தொடர்பு எனக்கு வாய்த்தது.

மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட, பெரும்பாலும் எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்ட, ஒருவரின் பணிகளைப் பல அறிஞர்களின் கட்டுரைகளின் வழி நினைவு கூர்வதும், அவரது வரலாற்றை அக்கட்டுரைகளோடு இணைத்து நூலாக்கி வெளியிட முன்வந்ததும் பயன் எதிர்பார்த்து செய்யும் செயலாக கண்டிப்பாக இருக்க முடியாது. அவர் முன்வந்ததன் விளைவு தான் ஞானியாரடிகளைப் பற்றி இக்கட்டுரை.

தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சிகள் மறைந்து சிற்றரசுகளாய், பாளையங்களாய் ஆட்சிகள் பலபட நிகழ்ந்து வந்தபோது தமிழகத்தில் கி.பி.16 முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை சைவாதீனத்தார் காலமாக விளங்கியது. இக்கால கட்டங்களில் வாழ்ந்த மக்களின் சமுதாய, சமய வாழ்வில் அவை சிறப்பான பங்காற்றின. இச்சமுதாய, சமய ஆளுமை என்பது கூட அரசியல் சார்ந்ததாகவே இருந்தது.

தமிழ்நாட்டில் தோன்றிய சமயமான சைவமும், வைனொமும் ஒரு கட்டத்தில் சமணத்தையும், பௌளத்தத்தையும் எதிர்த்துப் போராடின. ஆதி மதமான சைவத்தை எதிர்த்தும் வைணவம் போராடியது. சமணம், பெளத்தம், சைவம், வைணவம் ஆகியன மாறி, மாறி அரசு மதங்களாக விளங்கின. அரசு, ஏதாவது ஒரு மதம் சார்ந்ததாக இருந்தது.

தமிழகத்தில் பேரரசுகள் வீழ்ந்தபோது மதங்களின் சமுதாயப் பங்களிப்பும் சிதைந்தே போயிற்று. அதாவது குறுகிப் போயிற்று. அவற்றுள் பல்வேறு தத்துவ பிறழ்ச்சிகள் தோன்றின. அதனால் உட்பிரிவுகள் கணக்கற்றவை மலிந்தன.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கிறிஸ்துவ சமயம் பரவும் முன்னே இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையர் (St.Thomas) சென்னை மயிலையில் கிறிஸ்துவின் கொள்கைகளை மக்களிடையே விரித்துரைத்தார்.

இசுலாத்தின் கொள்கைகள் நபிகள் மறைந்த ஒரு நூற்றாண்டு முடிவதற்குள் மலையாளக் கரையில் வேர்விடத் தொடங்கியது. பழந்தமிழ் நாட்டின் கிழக்கு, மேற்கு கடற்கரைகளில்வேர்விட்டு கிளைத்த கிறிஸ்தவமும், இசுலாமும் அரசு சார்பு மதங்களாக விளங்கின.

மொகலாயர்களின் வீழ்ச்சியும், அய்ரோப்பியர் வருகையும் இங்கே பல பாதிப்புகளை உருவாக்கி இருந்தன. விஜய நகரப் பேரரசின் எழுச்சி உருவாக்கியிருந்த தெலுங்கு மொழி ஆதிக்கம் தமிழ்நாட்டில் இன்று வரை இருப்பதைப் போலவே தொடர்ந்து அன்றும் இருந்து வந்தது.

தென்தமிழ்நாட்டில் கிறிஸ்துவ பாதிரியார்களின் வருகையும், தரங்கம்பாடியில் வந்திறங்கிய அச்சியந்திர இயக்கத்தின் வளர்ச்சியும் ஓலைச் சுவடிகளுக்கு மெல்ல விடை கொடுக்கத் தொடங்கின.

18,19 ஆம் நூற்றாண்டுகள் உலகில் பல மாறுதல்களை உருவாக்கியது. அந்த மாறுதல்கள் தமிழ்நாட்டையும் எட்டின. ஆங்கிலேயன் ஆட்சியில் 'பழந்தமிழகம்' உருவாகி இருந்தது. அதற்குப் புதிய பெயர் - மெட்ராஸ் பிரசிடென்சி - சென்னை இராஜதானி என்று சூட்டியிருந்தார்கள். மேலும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் - ஆங்கில ஆட்சியினர் கல்வி நீரோடையைப் பாய்ச்சத் தொடங்கினார்கள்.

இங்கே ஏற்கெனவே இருந்த சமயச் சண்டை, மதச் சண்டை, சாதிசண்டை புதிய கருவிகளைக் கொண்டு போராடத் தொடங்கி இருந்தன. இராமலிங்க அடிகளார் (1823-1874) சமுதாய, சமயப் போரை தமிழ்நாட்டில் மிக அமைதியாக ஆற்றத் தொடங்கி இருந்தார். அதில் அவர் வெற்றி பெற்று விட்டதாகக் கூறிவிட முடியாது. ஆனால் அவர் சமயத்துறையில் செய்த புரட்சியை வரலாறு மறைக்கவோ, மறக்கவோ முடியாது.

இராமலிங்க அடிகளார் மரிப்பதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் தோன்றியவர்தான் ஞானியாரடிகள். இராமலிங்க அடிகள் தொண்டை நாட்டு சென்னையம்பதியில் பிறந்து நடுநாட்டில்-வடலூரில் வாழ்ந்து மறைந்தவர். வருணாசிர மத்தை எதிர்த்தவர். இவரின் சமயக் கிளர்ச்சி புதிய சமுதாயச் சிந்தனையை விதைத்தது. ஆனால் அவரால் தமது பிரச்சார எல்லையை விரிவுபடுத்த முடியவில்லை. ஆனால் சமயச் சித்தாந்தங்களைப் பாடல்களாகப் புனைந்தார். சுற்றுப்பயணச் சாதனங்கள், புதிய அரசியல் சூழ்நிலை, சங்கங்கள் ஆகியனவெல்லாம் வள்ளலார்க்கு வாய்க்கவில்லை.

ஞானியாரடிகள் 1892ஆம் ஆண்டு மடாதிபதியாக பட்ட மேற்றுக் கொண்டார். சுமார் 50 ஆண்டுகள் இவர் பணியாற்றினார். இவர் பொறுப்புக்கு வந்த காலம் உலகம் மேலும் பல மாறுதல்களை அடைந்து இருந்தது. சென்னை இராஜதானியின் எல்லையில் தமிழ் பேசும் பகுதிகளை மட்டும் தெரிந்தெடுத்துப் பல்லக்கிலேயே சென்று சமயப் பிரச்சாரம் செய்து இருக்கிறார். இவரது பிரச்சாரம் சென்னைத் தொடங்கி திருநெல்வேலி வரை நடந்து இருக்கிறது.

மதம், சமயம் எனும் இருசொற்களையும் ஒரேபொருளில் தான் அனைவரும் பார்ப்பர். இதனைப் பிரித்துக் காட்டியவர் இராமலிங்க அடிகள் ஆவார்.

‘மத, சமய வழக்கமெலாம் மாய்ந்தது;
வருணாச் சிரமமெனும் மயக்கமும் வீழ்ந்தது’

என்பார். மதம், சமயம் என்னும் இரு சொற்களும் ஒரு பொருள் உடையனவாயினும் ஒரு நுண்ணிய வேறுபாடு அவற்றிற்கு இடையே உண்டு. ஒரே தெய்வத்தை-இறைவனை மதித்து வழிபடுவது மதம்: இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது சமயம். ஆகவே தத்தினும் சமயத்துக்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டும் என்பார் பாவாணர்.

ஞானியாரடிகள் வள்ளலாரைப் போல பாடல்களை இயற்றவில்லை. நூல்களை எழுதவில்லை. மக்களைச் சந்தித்தார். மக்களிடையே பேசினார். அவர்களின் பலம், பலவீனங்களை உணர்ந்து அவர்களைத் தேற்றினார். பசித்தோர்க்கு உணவும், கல்வி கற்க வருவோர்க்குத் தகுந்த ஏற்பாடுகளும் செய்தார். ஞானியார் வீர சைவர். அவர்களுக்கு என்று முறைகளும் ம்ரபுகளும் உண்டு. சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வணங்குபவர். அவர் மட்டுமே இறைவனைப் போற்றி வணங்கி முறைகளையும், மரபுகளையும் பின்பற்றி துவராடை அணிந்து துறவியாக வாழ்ந்து மறைந்து விடுவதில் ஞானியாரடிகள் பேரின்பம் கண்டார் இல்லை. இவரது சமய வாழ்வு அனைத்து தமிழ் மக்களையும் ஒருங்கிணைப்பதாக அமைந்தது.

மேலும் தமிழகத்தில் சமய வாழ்வு என்பது முழுமுதற் கடவுள் தன்மை உடையதாக மக்களால் போற்றப்படவும் வணங்கப்படவும் இல்லை. உட்பிரிவுகளும் சிறுதெய்வ வணக்கங்களும் மலிந்துள்ள நிலையில் ஞானியார் மேற்கொண்ட பிரச்சாரம் சமூக வாழ்வில் ஒரு தேவையை உணர்த்தக் கூடியதாய் அமைந்திருந்தது. அவரிடம் சைவர், வைணவர், இதர உட்பிரிவினர் பிற மதத்தார் எனப் பேதங்காட்டும் படியான செயல்களில் அவர் இறங்கினார் இல்லை. அதற்காக அவர்தமது அடையாளத்தையும் இழக்கவில்லை. வீரசைவ மரபையும் மக்கள் மீது திணிக்கவும் இல்லை. அவரும் இறுக்கமாகவும் இல்லை.

ஞானியாரடிகளுக்குக் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு தமிழர்களைச் சமயத்தின் பெயரால் அவர் கற்ற தமிழால் திரட்டினார். அதற்காக அவர்கற்ற கல்வியையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஞானியாரடிகளின் சொற்பொழிவுகளைக் கேட்ட அறிஞர் பெருமக்கள் சமயச்சார்பான அவரது விரிவுரையைக் கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தும், கேட்டோர் சிந்தைச் சிலிர்ப்பு எய்தியதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஞானியாரடிகளின் பதிவான சொற்பொழிவுகளைப் படித்துப் பார்க்கிறபோது அறுசமயங்கள் தொடர்பாக நமக்கு இருக்கும் அறியாமை போக்கப்படுகிறது. ஆனால் அதேசமயம் பல அய்யங்கள் தோன்றுகின்றன. அறிதொறும் அறிதொறும் அறியாமை இயல்புதானே அவற்றைத் தொடர்புடைய நூல்களைக் கற்பதன் மூலம் தெளிவு பெறமுடியும் எனும் எண்ணத்தையும் அவை ஊட்டி நிற்கின்றன.

ஞானியாரடிகள் எனும் பெயர் என் செவிகளில் எப்படியெல்லாம் விழுந்து வந்தன என்பதைக் குறித்துக் கூறி இருக்கிறேன். 1980களின் நடுவில் பெரியாரின் முதல் குடியரசு ஏட்டைப் பற்றி ஓர் ஆய்வு நூலைத் தோழர் முருகு இராசாங்கம் என்பவர் வெளியிட்டார். என் பார்வையில் அந்நூல் கிடைக்கவும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அந்நூலின் ஆய்வு சில ஆய்வாளர்களின், அரசியல் இயக்கத்தாரின் பொறுப்பின்மையைச் சுட்டிக் காட்டியது. அவரது ஆய்வில் ஞானியாரடிகள் இடம் பெறுகிறார் என்பது தனிச்சுவையான செய்தியாகும்.

ஈ. வெ. இராமசாமிப் பெரியார் ஒரு பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்று எண்ணுகிறார். அவர் இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர பங்கெடுத்து 1922-இல் கோவைச் சிறையில் இருக்கும்போதுதான் பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார். பெரியார் 1925-இல் குடியரசு எனும் ஏட்டைத் தொடங்குகிறார். பொதுவாக எல்லோருமே குடியரசு ஏட்டை-முதல் இதழை ஞானியாரடிகள் வெளியிட்டு இருக்கிறார் என்றுதான் கூறுகிறார்கள்; எழுதுகிறார்கள்.

தோழர் முருகு, இராசாங்கம் எழுதிய நூல்தான் ஞானி யாரடிகள் குடியரசு முதல் இதழினை வெளியிட்டுப் பேசவில்லை. குடியரசு அலுவலகத்தைத் திறந்து வைத்துதான் பேசினார். அவர்பேசிய பேச்சு குடியரசு முதல் இதழில் இடம் பெற்றிருப்பத்திலிருந்தே இது உறுதியாகிறது என்று அவரது ஆய்வு நூலில் கூறியிருந்தார்.

குடியரசு முதல் இதழிலிருந்து 22 இதழ்கள் கிடைக்காமையால் ஆய்வாளர்கள் சில குழப்பங்களை ஆய்வுகளில் மேற்கொண்டனர். அந்த இதழ்களில் முதல் இதழை எங்கேயோ அகன்றாழ்ந்து எடுத்த முருகு, இராசாங்கம் பல செய்திகளை வெளிக் கொணர்ந்தது போலவே ஞானியாரடிகள் அலுவலகத்தைத் திறந்து வைத்து அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதியையும் வெளியிட்டிருந்தார்.

ஞானியாரடிகள் ஆற்றிய அந்த உரையின் பகுதிதான் என்ன?

1925 ஆம் ஆண்டு ஈ.வெ. இராமசாமி பெரியார் அவர்களுடைய குடியரசு பத்திரிகை அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய ஞானியாரடிகள் பேசுவதைப் படித்து பாருங்கள்.

...???

"நமது நாட்டில் உயர்வு தாழ்வு என்ற ஆணவம் மிகுந்து இருக்கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவவேண்டும். குடிஅரசுவின் கருத்தும் அதுவே என நான் அறிந்துகொண்டேன். சமயத்தில் இருக்கும் கேட்டை முதலில் அழிக்க வேண்டும். இவை குடிஅரசின் முதல் கொள்கையாக விளங்க வேண்டும். இப்பத்திரிகையில் ஸ்ரீ மான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு"

அதற்கு முன்னதாகப் பெரியார் பேசுவதைப் படியுங்கள்.

"இப்பத்திரிகை... சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமி என்னும் ஞானியார் சுவாமிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அநேக பத்திரிகைகள் நமது நாட்டில் இருந்தாலும் அவைகள் தங்கள் மனசாட்சிக்கு உண்மையென்று பட்டதை தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால்தான் நான் இப்பத்திரிகையை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிகையைப் போல் இல்லாமல், மனதில் பட்டதை தைரியமாய் பொதுஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டும் என்பது என் அபிப்ராயம்"

ஞானியாரடிகளின் உரையிலிருந்து நாம் அறிந்து கொள்வது நம் நாட்டில் இருக்கிற பழமையான மதமானது ஆணவம் மிகுந்து இருக்கிறது. அதில் சமத்துவம் இல்லை. அந்தச் சமயத்தில் கேடு உள்ளது. அதனை அழிக்க வேண்டும். இவைதான் குடிஅரசு ஏட்டின் முதல் கொள்கையாக இருக்க வேண்டும். இப்பத்திரிகையில் பெரியாருக்கு உள்ளதைப் போன்ற பொறுப்புத்தமக்கும் இருக்கிறது. பெரியாரது குடியரசு ஏடும் ஞானியாரடிகள் கூறுவதுபோல் சமய சீர்திருத்தத்தைக் குறிக்கோளாகக் கொண்டுதான் தொடங்கப்பட்டது. அதன் ஆழமும் வீச்சும் வேறு மாதிரியாக விளங்கிற்று. அதற்குக் காரணம் என்ன?

ஞானியாரடிகளின் வேண்டுகோளைத்தான் பெரியார் நிறைவேற்றக் கிளம்பினார். நிறைவேற்றவும் செய்தார். அறிவும் ஞானமும் ஒரே பொருளைக் குறிக்கும் சொற்களைப் போல மயக்கம் ஏற்படுத்தும். ஆனால் அவை ஒரே பொருளைக் குறிப்பன அன்று. அறிவு ஒரு பொருளைக் கண்ணால் பார்க்கும். ஞானமோ அதன் நன்மை தீமைகளை முடிவெடுக்கும். எப்போது? அறிவு, பகுத்தறிவாக விரிகிறபோது ஞானம் ஏற்படுகிறது. ஞானம் இலது உளது என இரு கூறுகளை வழங்கு கிறது. இலது என்பதை பெரியார் சிக்கெனப் பிடித்துக் கொண்டார். அதை அவர் நன்மை என்றே கருதி மக்களுக்கு எடுத்துரைத்தார். இது ஞானியாரடிகளிடத்திலேயிருந்து கிளைத்து எழுந்த மறுபக்கமாகும். இங்கே இதைவிரித்து எழுதுவது ஏற்புடையதன்று.

ஆகவே ஞானியாரடிகளின் குடியரசு பேச்சு உணர்த்துவது என்ன? வள்ளலார்க்குப் பிறகு ஆன்மீகத் துறையில் இருந்த ஒரு பெரியார் சமயத்திலுள்ள குறைபாடுகளை ஒப்புக்கொண்டு ஓர் இயக்கமாக இயங்கி செயலாற்றினார் என்றால் அவர் ஞானியாரடிகளைத் தவிரவேறு எவருமிலர் என்று துணிந்து கூறலாம். ஞானியாரடிகள் வடமொழி, ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளைக் கற்றவர். ஆனாலும் மொழியின்றி சமயமில்லை எனும் கொள்கையில் உறுதியாக நின்றவர்.

இவரிடம் நம்மால் இன்னொரு சிறப்பையும் காண முடிகிறது. சைவ, வைணவ பிரிவுகளையும் அதன் உட்பிரிவுகளையும் பற்றி எந்தவித சலனமும் கொள்ளாமல் அவரவர் விரும்பி அழைத்து இன்னபொருளில் உரையாற்ற வேண்டும் எனக் கேட்டோர்க்கு உரிய வகையில் உரையாற்றும் வல்லமை பெற்றிருந்தார் ஞானியாரடிகள்.

ஞானியாரடிகளின் சொற்பொழிவு பல ஆழமான செய்திகளைக் கொண்டதாகும். துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய சமய சார்ந்த மெய்யியல் பற்றிய அவரது விளக்கம் - நூல்களில் அதனைப் பாகுபடுத்தி கூறியிருக்கும் விதம் அக்கால சமய அறிஞர்களை அசத்தி இருக்கவே செய்திருக்கும். அதற்குக் காரணம் ஞானியாரடிகள் மிக நுட்பமாக நூல்களை ஆய்ந்தறிந்து செய்திகளைச் சொன்னதுதான்! மேலும் சைவ சித்தாந்தத்துக்கு அத்வைதத்தில் 'எந்த இடம்’ என்பதை இவர் நுட்பமாகக் காட்டுவதிலிருந்து சமயத்திலும் வடமொழியிலும் ஞானியாரடிகளுக்கு இருந்த புலமையின் ஆழத்தைக் கண்டு அறியமுடிகிறது. இந்த இடமே மறைமலை யடிகளை, திரு.வி.க.வை இவர்பால் ஈர்த்த இடங்களாக இருக்கவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

ஞானியாரடிகள் கூறுகிறார்.

"அத்வைதம் எனும் சொல்லுக்கு வடமொழி நூல் ஆறுவித பொருள்களைக் கூறுகிறது. ஈண்டு வேண்டற்பாலன மூன்று பொருள்கள். அவை அன்மை, இன்மை, மறுதலையாகும். ஆதிசங்கரர் அதை இன்மைப் பொருளில் கொண்டார். மெய்கண்டார் அன்மைப் பொருளில் வழங்குகின்றார். கடவுளுக்கும் உயிருக்குமுள்ள அத்வைத சம்பந்தத்தை மெய்கண்டார் விளக்கும் முறையே சிறந்ததொன்றாகும் என்று கூறிவிட்டு ஞானியாரடிகள் அதனை புணர்ச்சி இலக்கணத்தால் விளக்குகிறார்.

"தான் தலை என்ற இரண்டு வேறுபட்ட சொற்கள் புணரும் போது தாடலை என்றாகிறது. இங்கு ‘ட’ கரம் ஒரு எழுத்தன்று. இரண்டு எழுத்துகள் ஒன்று சேர்ந்து ஒன்றாகாமலும் இரண்டும் அல்லாமலும் நிற்கிறது. இதைப்போல் கடவுள், உயிர் ஆகிய இரண்டு வேறுபட்ட பொருள்கள் ஒன்று கூடும் போது ஒன்றாகாததும் இரண்டல்லாமையுமாகிய நிலையை எய்துகின்றன. இதுவே மெய்கண்டார் கூறும் அத்வைதமாம்”.

ஞானியாரடிகள் புணர்ச்சி இலக்கணத்தின் மூலம் சமய மெய்யியலை விளக்கும் பாங்கு வெகு சிறப்பானது ஆகும்.

இங்கே நாம் பார்க்க வேண்டியது சமயத்தை தமிழோடு - மொழியோடு-தாய்மொழியோடு இணைத்துக் காட்டும் விதமே தமிழ்த் தேசியத்தின் சமய மெய்யியல் வழியான அடையாளமாகும். தமிழ் என்கிற மூன்று எழுத்துக்களை எடுத்துக்கொண்டு வள்ளலார் எழுதிய சமய மெய்யியலின் சாரமே ஞானியாரடிகளின் புணர்ச்சி இலக்கண எடுத்துக்காட்டைக் காட்டுவதன் மூலம் என் நினைவுக்கு வருகிறது.

இதையடுத்து ஞானியாரடிகள் சொற்களின் பயன் பாட்டைக் பற்றி மிகத் துல்லியமான கவனத்தைச் - செலுத்தியவராக இருந்திருக்கிறார். எடுத்துக்காட்டிற்காகச் சிலவற்றை கூறுகின்றேன்.

1. தோள் என்றால் தோள் பட்டையிலிருந்து விரல்கள் வரை.என்று பொருள்.

2. உட்காருங்கள்; உட்காருதல் என்றெல்லாம் நம் பேச்சில், வழங்குகிறோம். இவற்றிற்கு தமிழில் வழக்கு இல்லை. ஆதாரமும் பொருளும் இல்லை. நிற்றல், இருத்தல், இருந்தான் என்பது அமர்ந்திருத்தல், அமர்தல், வீற்றிருத்தல் என்ற சொற்களும் சரியானவை.

3. மனம் நினைத்தற்கு கருவியாயுள்ளது. சில சுவடிகள் ஸ்மிருதிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஸ்மிருதி என்ற சொல்லிற்கு நினைப்பு என்பது பொருள். நினைப் புணர்ச்சி இல்லாதவனை பைத்தியக்காரன் என்று சொல்லுகின்றோம். பைத்தியக்காரனை விஸ்மிருதி என்பது வழக்கம். (வேதங்களை மனப்பாடம் செய்த நினைப்பிலிருந்து சொல்லப்படுவதால் வேதங்களுக்கு ஸ்மிருதி என்று பெயர். ஸ்மிருதி என்றால் சொல்லப்படுவது என்றும் பொருள்)

4. மோனம் என்பது ஞானவரம்பு என்று அறிக. வாய்மூடி இருந்தால் மோனம் அன்று; மனம் அலையாமல் அடங்கி நிற்பதே மோனம்; சிந்தனை அற்று இருப்பதே மோனம். ஞானியாரடிகள் தமது சொற்பொழிவின் போது சொற்களின் பொருள் பற்றிய விளக்கங்களை இவ்வாறு கூறிச் செல்லுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

மேலும் ஒரு விளக்கத்தைப் பார்ப்போம்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்"

எனும் குறட்பாவை, நாம் அனைவரும் அறிவோம். பொறிவாயில் ஐந்தவித்தான் என்பதற்குப் பரிமேலழகர், “மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் பொறிகளை வழியாகவுடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது எனப் பொருள் கூறுவார்.இதற்கு ஞானியாரடிகள் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

“மெய்யன்பர்களே !

மக்களை மாக்களினின்றும் பிரித்து வைப்பது சிறந்த அறிவு ஒன்றே. அவ்வறிவைச்செலுத்தும் வழிகள் இரண்டு. 1) உள்ளே 2) வெளியே இவ்விரண்டே அவ்விரு வழிகளாகும். அறிவை உட்செலுத்தும் வழக்கம் மக்களுள் பெரும் பாலார்க்கில்லை எனலாம். பின்னதே, யாவராலும் கைக்கொள்ளப்படும் ஒன்று. வெளிமுகமாக அறிவைச் செலுத்துங்கால் ஐந்து வழிகள் மூலம் அதனைச் செலுத்துகின்றோம். அவ்வழிகள், கண், மூக்கு, வாய், காது, மெய் என்பன. கடவுள் இவ்வாறு இவ்வைந்தின் வழித்தன் அறிவைச் செலுத்துபவன் அல்லன். ஆகவே, அவன் பொறி வாயிலைந்தவித்தான் என்று புகழப்பட்டான்.

ஐந்தனுள் கண்ணே முதன்மை இடத்தைப் பெறுகின்றது. அது அமைந்திருக்கும் இடமே அம்முதன்மையைத் தருதற்குக் காரணமாகின்றது. மேலும், காது முதலிய மற்றப் பொறிகள் தம்பால் வந்தவற்றையே அறியும் ஆற்றலுடையன; ஆனால், கண்கள், தாமே பொருள்களினிடம் சென்று அறியும் வன்மையுடையன.

கண்கொண்டு நாம் உலகைப் பார்க்கின்றோம். பார்க்கப்படும் பொருள்கள் மூவகை. 1. அறிவு இல்லா உலகம் 2. சிறிதறிவுடைய நாம். 'நம்மைத் தாழ்த்திக் கூறுகின்றாரே’ என்று சில அன்பர்கள் கருதலாம். பிறந்த ஞான்று நாம் ஒன்றையும் அறியாதிருந்தோம். பின்னர்த் தாயினை அறிந்தோம். தாய் சுட்டி அறிவிக்கத் தந்தையை அறிந்தோம். இருவரும் தந்த அறிவால், பெரியோர், வந்தோர், வெளியோர், உபாத்தியாயர், ஞானகுரு ஆகியோரை அறிந்தோம். இவர்கள் எல்லோரும் தந்த அறிவாலும் இதுவரை நாம் நிறைந்த அறிவினராகவில்லை. இதனை அறிவுடையோரையே குறிக்கொண்டு கூறுகின்றேன். ஏனெனில் பேதையோர் தாம் பெற்றதையே பெரிதென்று தவறாக எண்ணும் எண்ணத்தினர். பல்லாற்றலும் பெற்ற அறிவு கொண்டு ஊகிக்கின், காணாப் பொருளொன்று என்று உணரவியலும்".

திருக்குறள் விளக்கவுரை ஆசிரியர்களுள் கோ. வடிவேல் செட்டியார் ஒருவர். இவர் பரிமேலழகரின் உரைக்கு விளக்கவுரை எழுதி... இல் முதன்முதலாக வெளியிட்டவர். இவர் ஞானியாரடிகளைச் சென்று வணங்கும் வழக்கமுடையவர். செட்டியாரை ஞானியார் கவர ஈர்ப்பின் திறவு எங்கே இருக்கிறது எனப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

ஒரு சொற்பொழிவில் சேவலைப் பற்றி ஞானியாரடிகள் சொல்லுகிறார். அதற்குத் தொல்காப்பிய மரபியில் 48-ஆம் சூத்திரத்தை எடுத்துக்காட்டி நச்சினார்க்கினியர் கூறியபடி, சேவல் எனும் பெயர் பறப்பனவற்றுள் ஆண்பாற்கெல்லாம் உரித்து: அவற்றுள் மயிலுக்கு ஆயின் அஃதாகாது என்று சூத்திரத்தின் வழியே பொருள் கூறி முருகன் ஊர்ந்து செல்லும் மயிற்காயின் சேவல் என்று கூறலாம்" என்பதை அடிகள் கூறினார். இவையெல்லாம் அவரது சொற்பொழிவு ஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

ஞானியாரடிகள் மதுரைத் தமிழ்ச் சங்கம் (1901) தோன்றவும் கரந்தைத் தமிழ் சங்கம் (1911) தோன்றவும் காரணராக இருந்திருக்கிறார். இவ்விரண்டு சங்கங்களும் தமிழ் பண்டித மற்றும் புலவர் வகுப்புகளை நடத்தின. செந்தமிழ், தமிழ்ப்பொழில் ஆகிய திங்கள் இதழ்களை வெளியிட்டன. இவ்விரு ஏடுகளையும் புரட்டிப் பார்த்தால் வெளிவந்திருக்கும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய சிறப்பைத் தனித்தன்மையை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.

சைவாதீனங்கள் பெரியதோ சிறியதோ அவையெல்லாம் ஒரு கட்டத்தில் அதிகார மய்யங்களாகவே விளங்கின. பேரரசுகள் வீழ்ந்து, சிற்றரசுகளும் தன்னிலை இழந்து தாழ்ந்தபோது மக்களை அதிகாரம் செலுத்துகிற சமயம் சார்ந்த அமைப்புகளாக தமிழகத்தில் மடங்கள் விளங்கின. ஒரு கட்டம் வரைதான் இவ்வமைப்புகளின் ஆளுமைகள் பொலிவோடு இருந்தன.

ஆட்சிமுறைகளில் ஜனநாயகம், அறிவியல் சாதனைகள், உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு ஆகியன தோன்றியவுடன் மனிதகுலத்தில் பெரிய மாறுதல்களை உருவாக்கின. சைவாதீனங்கள் தமிழகத்தில் தோன்றி முடிவுறுகிற காலகட்டத்தில் உலகெங்கும் மொழிவழி தேசியங்கள் உருக்கொள்ளத் தொடங்கி இருந்தன. ஆனால் தமிழகத்தில் சைவாதீனங்கள் அப்பணியை மொழியை சமயத்தோடு குழைத்துத் தந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்னே உருவாக்கித் கொண்டிருந்தன.

19ஆம் நூற்றாண்டுக்கும் 20ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த ஞானியாரடிகள் தமிழ்த் தேசியத்துக்கு ஒரு முன்வரவை ஏற்படுத்தி தந்ததுறவியாவார்.

பெரும்பாலான சைவ மடங்கள் இருந்த இடத்திலேயே அதிகாரத்தை செலுத்திக் கொண்டே வரவு - செலவு பார்த்த காலகட்டத்தில் சிவிகை ஊர்ந்து சமயப் பொறையோடு தமிழ்ப் பணியாற்றிய ஒரேதுறவி ஞானியாரடிகள் ஆவர்.

சற்றொப்ப 50 ஆண்டுகள் சமயமும் தமிழுமாக தமது வாழ்வின் பணிகளாகக் கொண்ட ஞானியாரடிகள் தேர்தல் முறை முழுமையாகாத ஆனால் தேர்தல் முறையின் மூலம் ஆட்சி அமைக்கும் காலகட்டங்களில் வாழ்ந்தவர்.

இந்திய விடுதலை இயக்கமும், நீதிக்கட்சியும் சுய மரியாதை இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் அவ்வவற்றின் வழியில் போராடியபோது ஞானியாரடிகள் வாழ்ந்தார் என்றாலும் இவர் யாரையும் எதற்காகவும் சென்று அணுகாதவராக, உண்மை துறவியாக வாழ்ந்து இருக்கிறார்.

ஞானியாரடிகளாரை வேண்டுமானால் அரசியல் தலைவர்கள் வந்து பார்த்து சென்றிருக்கலாமே ஒழிய இவர் யாரையும் சென்று பார்த்துப் பழகியதில்லை. தம்மைப் பார்க்க வருகிறவர்களிடம் இதைச் செய்யுங்கள்; அதைச் செய்யுங்கள் என வழிகாட்டுதலை ஞானியாரடிகள் வழங்கி இருக்கிறார்.

இன்று நம்மிடையே தமிழால் ஒன்றுபடுவோம்’ எனும் முழக்கங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. வெவ்வேறு சமூக, அரசியல் அமைப்புகள் கூட இம்முழக்கத்தை முன் வைக்கின்றன. அரசியலில் தமிழியச் சிந்னைகளே தோன்றாத காலகட்டத்தில் தமிழால் ஒன்றுபடுவோம்!“ என முழங்காமல் முழங்கி செயற்கரிய செய்தவர் ஞானியாரடிகள். சமயத்துறையில் இருந்த ஒருவர், மற்ற சைவாதீனத்தாரைக் காட்டிலும் செல்வம் குறைந்த நிலையை உடைய ஒருவர் மன உறுதி ஒன்றினால் மட்டுமே தமிழ் முழக்கம் எழுப்பி சாதனை புரிந்தார். சைவமும், தமிழும் இரு கண்களென உழைத்தார். அவ்வாறு அவர் தொண்டாற்றி செல்லும் பயணத்திலே மரிக்கவும் செய்தார்.

ஞானியாரடிகளைப் பற்றி பதிவுகளை ஆராய்ந்ததில் நமக்குக் கீழ்க்காணும் முடிவுகள் கிடைத்தன.

1. தம்மை ஒரு சைவ சமயீ எனக்கூட கருதாமல் பொதுவாகச் சமயத்தில் உள்ள கேடுபாடுகளைகளைந்து மக்களிடையே சமன்மையை உருவாக்க உழைத்தவர். அதற்கு மற்றவர்க்கு வழி காட்டியவர்.
2. மத நல்லிணக்கத்தைப் போற்றியவர்; நடைமுறைப் படுத்தியவர்.
3. அவர் அறியாமலேயே சமயத்தோடு தமிழ்த் தேசிய உணர்ச்சியை வளர்த்தெடுக்கதுண்டுகோலாக இருந்தவர்.
4. சமய ஞானமுடைய மற்றையோர்க்கு முன்மாதிரியாக இருப்பவர். எந்நிலையிலும் தாய்மொழி உணர்ச்சியை மறக்காதவர்.
6. உண்மை துறவியாய் இருந்தவர்.

ஞானியாரடிகள் மறைந்து 61 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அந்தத் தமிழ்க் குரல் இன்னும் ஒலிப்பதைக் கேட்கலாம். ஆம்; நீங்களும் அடிகளின் குரலை ஒலிப்பதைக் கேளுங்கள்.

"அறிவு துணை செய்யும் காலம் இது. தமிழர் தமிழிலேயே கொள்ள வேண்டும் என்ற பற்றுடன் விளங்குகின்றனர். பற்றுடை யோர் போன்று நடிக்கும் சிலர் போலி நடிப்பை நான் அறவே வெறுக்கின்றேன்.

தமிழ்ப் புத்தகங்களை நன்றாகப் படிக்க வேண்டும். அவற்றில் பழக வேண்டும். அவ்வறிவைப் பெறுதல் வேண்டும். இல்லையேல், தமிழரென்று வெளிக்கு கூறிக்கொள்வோர்க்கு வெட்கமில்லை என்றே நான் கூறுவேன்.