தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/சிவத்திரு. ஞானியாரடிகள் வரலாறு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

{header

| title   = தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
| author   = 
| translator = 
| section  = சிவத்திரு. ஞானியாரடிகள் வரலாறு
|
previous  = ஞானியாரடிகள்
| next    = 
| notes   = தொகுப்பாசிரியர் வல்லிக்கண்ணன்

}}

சிவமயம்
சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க


சிவத்திரு ஞானியார் அடிகள் வரலாறுஎழுதியவர் :

திருப்புகழ் இரத்தினம்
புலவர் - க. பா. வேல்முருகன்

ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகளின் மாணவர்

சிவமயம்
சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க


திருக்கயிலாய பரம்பரைத் திருக்கோவலூரா தீனம்
திருப்பாதிரிப்புலியூர்
ஸ்ரீமத் ஞானியார் மடாலய ஐந்தாங் குருநாதர்

ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்
வரலாறு

தோற்றுவாய் உலகில் மக்கள் மக்களாக வாழ வேண்டும். ஆனால் அப்படி வாழ்வது எல்லோர்க்கும் இயலாததாகி விடுகிறது. மாக்களாக வாழ்வாரே பலராகின்றனர். இத்தகைய இரு வேறுபட்ட உலகத்தியற்கை, இன்று நேற்றுத் தோன்றியதன்று. உலகம் என்று தோன்றிற்றோ, அன்றே தோன்றியதாதல் வேண்டும். மிகப் பழைய நூல்களிலும் மாக்களாக வாழ்ந்தோர் சிலரின் குறிப்புகள் காணப் பெறுகின்றன. செவியறிவுறுஉ என்னும் புறத்திலக்கணத் துறை எழுந்தது மாக்களை மக்களாக்குதற்கே. ஏமரா மன்னன் வாழ்ந்திருந்த துண்டென வள்ளுவத்தாலறிகிறோம். ஆராயாது முறை புரிதல் முதலாகிய தவறு காரணமாகக் கேடுற்ற மன்னர் வரலாறுகள் பல, சங்க இலக்கியங்களிலும், பழம் பெரும் காப்பியங்களிலும் வழங்கக் காண்கிறோம். ஆகவே, மக்கள் மாக்களாக வாழாமல் மக்களாக வாழச் செய்வதற்குக் கற்றறிந்தோர் பற்பல துறைகளிலும் முயன்று வந்திருக்கின்றனரென்பது வெளிப்படை.

அவல வாழ்வும் அமர வாழ்வும் அறியாமையிருளில் மூழ்கிக் கண்ட பொருளையெல்லாம் இச்சித்து அவற்றைத் துய்ப்பதற்கே இந்தப் பிறவி தமக்கு வாய்த்திருக்கிற் தென் றெண்ணுவோர் பலர். இதனால்தான், புலனடக்கம் பற்றி எல்லா நீதி நூல்களிலும் வற்புறத்தப்பெறுகிறது சான்றோர் பலரும், மக்களாக வாழ வழி வகுத்தனர். அவர், முதற்கண் தாம் தூயவாழ்வு நெறி நின்றனர். தாம் கண்டறிந்த உண்மைகளைச் சொல்லளவில் விட்டுவிடாமல், இயற்றமிழ்ப் பாக்களாகவே புனைந்து அளித்திருக்கின்றனர். அவை காலம் மாறுபடினும் தாம் மாறா இயல்பின. நீதி நூல்களை இயற்றி யோர் மட்டுமின்றி, இறைநெறி நின்றோரும் அவ்வகையே நம்மை அழைத்துச் செல்ல முற்படுகின்றனர். அவ்வகையில் திருமுறையாசிரியர்கள் முன்னிற்பவர். அவர்தம் பாக்கள் உள்ளத்தை உருக்குந்தகையன. ஓர் எடுத்துக் காட்டால் ஈண்டு விளக்குதல் மிகையன்றெனத் துணிந்து ஒன்று காண்போம்.

சால இனிய கனி : நாம் பல பல சுவைப் பொருள்களை நுகர்கிறோம். வாய்க்கினியவற்றின் சுவையொன்றினை மட்டும் குறிப்பிடலாம். இனிய கனி ஒன்றின் சுவையினை - முன் நுகர்ந்த பயிற்சியால் மீண்டும் - சுவைக்க முற்படுகிறோம். பற்று மிகுதி காரணமாக அஃது அண்மையிற் கிடைக்கக் கூடாதேனும், விலை மிக உடையதேனும், தொலைவோ, பொருட்செலவோ கருதாமல் எப்படியேனும் அதைப் பெற்றுண்ண முற்படுகிறோம்; பெறுகிறோம்; உண்கிறோம். அப்போதைய ஆசையை ஒருவாறு நிறைவேற்றிக் கொள்கிறோம். அவா மேலீட்டினாற் பெற்ற தாயிற்றே; அரிதின் முயன்று பெற்றதாயிற்றே; பெரும் பொருட் செலவிற் பெற்ற தாயிற்றே என அக்கனியை நீண்டநேரம் சுவைக்க எண்ணிய ஒருவர், நீண்ட நேரம் வாயிலேயே அடக்கி வைத்திருந்தாலும் அச்சுவை நீடிக்கிறதோ ? அல்லது அடிநாவைத் தாண்டிய பிறகும் அதன் சுவை நமக்கு தெரிகிறதோ? இல்லை யென்பதை எவரும் அறிவோம். எனவே ஐம்புல நுகர்ச்சியால் பெறப்படுவன யாவும் சிறுகால அளவு இன்பம் பயப்பன வேயாம். இது கொண்டே பேரின்பம் உண்டென உணர்தல் நம் கடனன்றோ? அதனைச் சுவைக்கனியாக்கியே தருகிறார் திருநாவுக்கரசர். 'புனிதன் பொற்கழல் ஈசன் எனுங்கனி, இனிது சாலவும்’ எனக் கூவியழைத்துக் கூறுகின்றார். மனம் படைத்தவர் - பகுத்துணரும் தன்மை படைத்தவர் - யாரோ அவரை, ‘மனிதர்காள் இங்கே வம், ஒன்று சொல்லுகேன் என்றழைத்துக் கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே என, முன் வந்தவர் தம் அவாவினைத் தூண்டி, அக்கனி சிறிதுநேர இன்பந்தரும் எல்லாக் கனியையும் போன்றதன்று; சால இனிய கனி என அறிவித்து, அதனை நுகர்வோரைப் பக்குவி களாக்கும் குருவாகிய அவர்தம் பாசுரத்திற் பொதிந்துள்ள நுணுக்கங்களை நுனித்தறிதல் நம் கடனன்றோ ? மணிவாசகப் பெருந்தகையும் ‘நினைத்தொறும், காண்டொறும், பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக, ஆநந்தத் தேன் சொரியும் குனிப்பு உடையானை எண்ணி, அவ்வின்பத்தை நுகருமாறு தும்பியரசனுக்கே கூறுகிறாரே ஏன்? அந்தப் பக்குவம், அவர்கண்ட மனிதருக்கு இல்லை யென்பதாலோ சிந்தனைக்குரிய பாட்டே அது. 'கனியினும், கட்டிபட்ட கரும்பினும், பனிமலர்க் குழற் பார்வை நல்லாரினும் இனியன் என்ற நாவுக்கரசர் தன்னடைந்தார்க்கு என அருளி அவனையடைய வழிதேடக் கொள்ளவன்றோ நம்மைத் தூண்டுகிறார்? இத்தகைய பாசுரங்களைப் பயிலும் போதெல்லாம் நம்மை மனிதராக்கிக் கொள்ள நாம் முயல வேண்டும் என்பதற்காகவே ஈங்கு இவற்றை எடுத்துக் காட்ட முனைந்தோம்.

அமர வாழ்வுக்கு ஆசான் : இயல்பாகவும், சூழ்நிலை காரணமாகவும் நமக்கு அமைந்துள்ள அறிவுத் திறனைச் சோதித்தறிந்து, ஏற்ற வகையிற் பக்குவம் சொல்லி, நம்மை அமர வாழ்வினுக்கு அழைத்துச் செல்வார் நமக்குத் தேவை. அவர் நாம் பயிலும் நிலைக்கும் மேற்பட்ட தகைமையாளராயிருத்தல் வேண்டும். விருப்பு, வெறுப்புகட்கு ஆளாகாத நிலையினராய், அருள் நிரம்பி, ஆன்ற அறிவும், தெளிந்த தூய சிந்தையும் உடையவராயிருத்தல் வேண்டும். அவரே குரு, தம் பரந்த கலை யொளியால் எப்பாலவரையும் தம்பால் ஈர்த்து ஆட்கொள்ளும் குருநாதர். இவ்வுலகில் மனிதரோடு மனிதராய் இருப்பார் எனினும் அவர், இறைவனே யாவர். குருவே சிவன் எனக் கூறினான் நந்தி என்ற திருமூல நாயனார் வாக்கும், அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி யருளிய பெருமையைச் சிறுமை யென்றிகழாதே என்ற மாணிக்க வாசகர் வாக்கும் நாம் கருதற் பாலன. அத்தகைய பெருமை வாய்ந்த குருநாதரை நாம் தேடியடைதல் வேண்டும். அடைந்து அவர் காட்டும் தூய நெறி நிற்றல் வேண்டும். ஒரு சிறுகால எல்லையில் நம்மை அவர் சிறந்த பயன்பெறச் செய்யவுங் கூடும்; பல காலங்கடத்தலும் கூடும். நமக்கு உளத்தூய்மை உண்டாகுமளவும் குருநாதர், தம் ஏவலாலும் சுற்றுச் சார்பிற் பயிற்றலாலும் ஆட்கொள்வார். நாம் நம் முன்வினைப் பயனும் அறிவாற்றலும் பயன்தருங் காலம் வருமளவும் கொடிறும் பேதையும் கொண்டது விடா, தெனும் படியே ஆகி நல் இடையறாத் தொழும்பு பூண்டு நற்பேறெப்துதலைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

மக்கள் வாழ்வினைச் செம்மைப் படுத்த அவ்வப்போது ஆங்காங்கே குருமார் தோன்றுவர். இம்முறையில் இம் மடாலய முதற் குருநாதர் பற்றி மட்டும் இங்குக் குறிப்பிடுதல் கடமையாகும்.

வீர சைவம் : ஒழுக்கம் விழுப்பந் தருவது. ஆதலால் அதனை உயிரினும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றார் வள்ளுவப் பெருந்தகையார். தாம் நல்லொழுக்க நெறி கடைப்பிடித்துப் பிறரையும் அந் நெறியினைக் கடைப்பிடிக்கு மாறு ஒழுகுபவர், யாவராலும் போற்றப்படுவது மட்டுமன்றிக் குருவாகவும் ஏற்றுக் கொள்ளத் தக்க பெருஞ் சிறப்பும் பெறுவர். வீர சைவநெறி சீலம் கைக்கொள்ளும் தூயநெறி சீலத்தாலன்றி எவ்வகையாலும் மனம் ஒரு நெறிப்படாதென்பதை யறிந்த சான்றோர், வீரசைவ சமயத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். வீரசைவர் அறுபத்து நான்கு சீலங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பது விதி. தக்க கட்டுப்பாடுகளைக் கைக்கொள்பவர் வீரசைவர். குருவின் பாதோதகம் (திருவடிநீர்) போற்றி வைத்து நாடோறும், அவர் திருவடி தியானத்துடன் பருகவேண்டு மென்பதும், குருமொழி கடவாமல் வாழ வேண்டு மென்பதும் அவற்றுட் சில. (அப்பூதியடிகள் வரலாற்றிலே பாதோதகத்தின் சிறப்பினை நாம் பயில்கிறோம். துணிய நம் ஆணவம் மறுக்கிற தென்பதை உணர்கிறோம்.) பல பல ஒழுக்கக் கட்டுப்பாடுகளுடன் வாழும் வீரசைவர், பல பெரிய சிவாலயங்களிற் பூசனை புரிந்திருந்ததும் உண்டு. மிகச் சிலகோயில்களில் இன்றும் வீரசைவர் பூசனை நடை பெறுகிறது. வீரசைவர், ஆலய பூசனை, இட்டலிங்க பூசனை, புராண- இதிகாச விரிவுரைகள், சிறுவர்க்குக் கல்வி போதனை ஆகிய பல சமுதாய நலப் பணிகளை மேற்கொண்டு, தம்மைச் சூழ்ந்தாரையும் ஒழுக்க நெறியில் ஈடுபடுத்தி வந்ததுண்டு. பற்பல அரசியல் மாறுபாடுகள் நிகழ்ந்த காலங்களிலும் தம் நியதியின் வழுவாமல் மேற்கண்ட அறிவுப் பணிகளை நிகழ்த்தி வந்தன ரென்பதற்கு வரலாற்று ஆதாரங்களும் உள.

முதற் குருநாதர்

சோமநாத ஆராத்திரியர் : கர் நூல் மாவட்டத்திலே ஆத்மகூர் என்ற ஊர் இன்றும் உள்ளது. அங்கு வீர சைவர் பலர் வாழ்ந்தனர். அவர்கள், முற் கூறிய வீரசைவ நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தனர். அறுபத்து நான்கு சீலங்களையும் வழுவாது கடைப் பிடித்த பெரியாருள் ஒருவர், சோமநாத ஆராத்திரியர் ஆவர். அவர் வேத, ஆகம, புராண, இதிகாசங்களில் வல்லுநர். வீர சைவ - இட்டலிங்க பூசனை, பயன் முதலியவற்றைத் தம் கல்வி வன்மையால் ஆதாரங்கள் பலவற்றுடன் தொகுத்து எழுதி வைத்துள்ளார். அந்நூல் சோமநாத 'ஆராத்திரியர் பத்ததி’ என்று அவர் பெயர் கொண்டே வழங்கிப் போற்றப்பெற்று வருகிறது. அந்நூல், வீரசைவ மரபினர்க்கு ஓர் அருநிதியமாவது, அவர் வழித் தோன்றலாய் விளங்கிய மல்லைய தேவரும், அவர் மனைவி பிரமர குந்தளாம்பாவும், அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றி வந்தனர். எனினும் புத்திரப் பேறின்றி வருந்தினர்.

பழநியாண்டவன் திருவருள் : மல்லைய தேவர்க்குப் பற்பல இடங்களிற் சீடர்கள் இருந்தனர். காங்கேயத்தில் அக்காலை வதிந்திருந்த சீடராம் மூன்று கவுண்டர்கள் அழைப்பிற் கிணங்க மனைவியோடு போந்தார். அவர்கள் விரும்பியவாறே பூசை எழுந்தருள்வித்தும், புராண விரிவுரைகள் ஆற்றியும் யாவரையும் மகிழ்வித்து இறையடிப் பற்றுக் கொள்ளத் துணை நின்றார். ஆயினும் அவரைப் பிள்ளையில்லாக் குறை வாட்டவே, பழநிப் பதியினையுடைந்தார். கணவன் மனைவியர் இருவரும் பழநியாண்டவன் திருவடி பரவித் துதித்துச் சில நாள் அங்குத் தங்கினர். ஆத்மகூருக்கு மீண்டனர். ஆண்டவனருளால் பின்னர் அவருக்கு இரு பிள்ளைகள் தோன்றினர். மூத்தவர் சுப்பிரமணியம், இளையவர் மல்லையர். தங்கள் தந்தையைப் போன்றே இருவரும் கல்வி கேள்விகளில் வல்லவராயிருந்தனர். இளையவர், சிறுபருவத்திலேயே துறவற வொழுக்கமே சிறந்ததெனத் துணிந்து ஸ்ரீசைலம் சென்று துறவியாகி மனமடங்குந் திறத்தினிலே இருந்துவிட்டார். மூத்தவர், தம் அம்மான் மகளாம் சுப்பம்மாவை மணந்து இல்லற நெறியில் ஈடுபட்டனர். பல காலம் கடந்தும் பிள்ளைப் பேறற்ற குறை அவர்களயுைம் வாட்டியது. தாம் பிறந்தது பழநியாண்டவன் திருவருளால் என்பதை உணர்ந்திருந்த சுப்பிரமணிய அய்யர், மனைவியோடு பழநியடைந்தார். பரமனடி பணிந்து குறையிருந்தார். சில நாள் அங்குத் தங்கினார். தைமாதம் வந்துற்றது. பூச நாளின் முன்னாளாகிய புனர்ப் பூசத்திரவில் பழநியாண்டவன் இருவர் கனவிலும் தோன்றி பரமென விளங்கும் நற் புதல்வன் தோன்றுவான் என அருளி மறைந்தான். அதிகாலையிற் கண்ட கனவால் இருவரும் மகிழ்ந்து பரமனைத் துதித்தனர். சண்முக நதியில் நீராடிச் சரவணபவனைத் தொழுதனர். கணாரதனை புரிந்து அடியர் பூசனையையும் முடித்தனர். சில நாள் அங்குத் தங்கியபின், குன்று தோறாடும் குமரன், அலைவாயதனில் நிலை இய பண்பினைக் கண்டு தொழும் விருப்பினராய்த் திருச்செந்தூர் சேர்ந்தனர்.

மகப்பேறும் - திருப்பெயரும் : அலைவாயண்ணல், மாசிப் பெருவிழாக் கொண்டருளும் மாண்பினைக் கண்டு தொழுது, அங்ஙனே சின்னாள் உறைந்திருந்த தம் பதியர் கனவில் ஆறுமுகப் பண்ணவன் ஒரு நாள் தோன்றினான். சுப்பம்மா கருவிலிருப்பவர், ஆறுமுககுரு என்றருளிச் செய்து இருவர்க்கும் திருநீறளித்து மறைந்தான் விடியற் காலைக் கனவினை ஒருவரோடொருவர் கூறிக் குமரக் கடவுள் திருவருளை வியந்து போற்றினர். சில நாள் அங்கிருந்த பின் அவனடி நீங்காச் சிந்தையினராய்த் தென்திசை விட்டு வடக்கு நோக்கி வழிக்கொண்டனர்.

பற்பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு நடு நாட்டையடைந்தனர். சேதிநாட்டுத் தலைநகரம் திருக்கோவலூரை நண்ணினர். அப்போது அம்மையார் நிறைகருவெய்தி யிருந்தனராதலால் மேலும் வழி நடை கொள்ளல் இயலா தாயிற்று. திருக்கோவல் வீரட்ட நாதன் ஆலயத்தை யடுத்திருந்த வீரசைவ மடத்தில் தங்கினர். கலி 4774, ஆநந்த ஆண்டு கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நன்னாள், திருவருணை மலையுச்சியில் சோதிவளர் தோற்றங்காணும் நல் வேளையில் சுப்பம்மா ஆறுமுக குருவாம் ஆண் மகவினைப் பெற்றெடுத்தார். செந்திலாண்டவன் சூட்டிய பெயரே அம்மகவினுக்கு வழங்கப் பெற்றது.

குகை நமசிவாயர் பரம்பரைக்கு உபதேசம் : இந்தத் தெய்வத் திருக்குழந்தையின் தோற்றம், திருவண்ணாமலை ஆறாங்குகை நமசிவாயராகிய மடத்தின் தலைவருக்குப் பல கால முன்னரே, அம்மடத்தின் முதற் குருநாதரால் கனவில் அறிவிக்கப் பெற்றிருந்தது. ஆறாங் குரு நமசிவாயர் சீவியவந்தராயிருந்தபோதே ஏழாந் தலைவர் திருவருளிற் கலந்துவிட்டார். ஒருவருக்கு உபதேசித்தலே முறையாதலால், மற்றொருவர்க்கு உபதேசிக்க அதிகாரமின்மை கருதி மடத்தின் தலைவராகும் பரம்பரை யற்றுவிடுமே என்னுங் கவலையோடிருந்த அவருக்கு இன்ன இடத்தில், இன்னநாளில் இன்ன வேளையில் தோன்றும் புதல்வர் இந்தப் பரம்பரை தழைக்க உபதேசிப்பாரென்று கூறக் கனாக் கண்டிருந்தார். இவ்வரும் புதல்வரின் தோற்றத்தினைத் தம் ஏவலர் வழி அறிந்த அக்குரு நமசிவாயர் மகிழ்ந்திருந்தார். குழந்தை பிறந்த மூன்றா நாள் தாய் சுப்பம்மா சிவத்தை மேவினர். வருத்த மேலீட்டினால் தந்தையாம் சுப்பிரமணிய அய்யர் திருக்கோவலூர் மடத்து வீரசைவரிடமே இக் குழந்தையை வளர்த்துக் கொள்ளும்படி விட்டு விட்டு ஸ்ரீசைலம் சென்று விட்டார்.

ஆறுமுக குரு, கல்வி, கேள்வி, இட்டலிங்க பூசனை, சிவாலய தரிசனம், மனமடங்குந் திறத்தில் இருந்து அட்டாங்க யோக முதலியவற்றால் பெருஞானம் பெற்றார். அவர்களுக்குத் தூல பஞ்சாட்சரத்தினைத் திருவருணைக் குரு நமசிவாயர் உபதேசம் செய்து சிவலிங்கதாரணமும் செய்து வைத்தார். சூக்கும பஞ்சாட்சரம், கோவல்- பெரிய நாயகித் தாயாராலும் காரண பஞ்சாட்சரம், ஆராத்ரிய உருவம் தாங்கிவந்த கடவுளாலும், ஞானோபாய சாதனைகள் வீரட்ட நாதராலும் உபதேசிக்கப் பெற்றன. இளந்துறவியின் முன், ஆறுமுகக் கடவுள் தோன்றி, இதனினும் மேலாம் மந்திரம் இல்லை யென்றருளிப் பிரணவ உபதேசம் செய்வித்தான். ஒரு மொழி மகாவாக்கியமும் உணர்த்தியருளி மறைந்தான்.

இவ்வருந் துறவிக்குத் திருநீற்றுப் பையும், அக்கமணி மாலையும் இறைவனாலே அளிக்கப் பெற்றன. அவை இன்றும் இம் மடாலயத்தில் பூசனை பெறுகின்றன.

ஞானியார் : திருவருணைக் குகை நமசிவாயர் பரம்பரையின் எட்டாவது குரு நமசிவாயருக்கு உபதேசித்துத் தலைமை யேற்குமாறு செய்த இவ்வருட்குரவருக்கு, ஆறாங்குரு நமசிவாயர் ஞானியார் என்ற சிறப்புப் பெயர் அணிவித்தார். அன்று முதல், அப்பெயரே வழங்குவதாயிற்று.

திருமடங் காணல் : பற்பல அருஞ் செயல்களை ஆற்றிவந்த நம் தபோதனர்கள், தமக்குப் பின்னரும் ஞான பரம்பரை ஒளிரவேண்டு மென்னும் அருள் நோக்கத்தால், ‘சண்முக ஞானியார்' என்று போற்றப் பெறும் ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளை மடாலயத் தலைமை யேற்று எழுந்தருளச் செய்து கலி, 4870, மாசி 27 அநுடங் கூடிய குருவாரத்தன்று பரசிவபர ஆகாச வெளியில் கலந்தருளினார்கள்.

அவர்கள் எழுந்தருளிய காலத்தே பல அற்புதங்கள் நிகழ்ந்தன. மன்பதைகள் உய்யும் வண்ணம், இறைவனால் தனக்கு அளிக்கப் பெற்ற நிட்டானுபூதி நூலைத் தொண்ணுாற்றொரு செய்யுள்களாக அருளியுள்ளார்கள். அந் நூலுக்கு முத்துக்கிருட்டின பிரமம் என்பார் அரியதோர் உரை எழுதியிருக்கிறார். அவ்வுரை, வடலூர் இராமலிங்க வள்ளலாரை யுள்ளிட்ட இருபதின்மார் தந்துள்ள சாற்றுக் கவிகளுடன் பெருமை பெற்றது. இப்போது அச்சாகி வெளிவந்துள்ளது. நிட்டானுபூதி சாரமேயன்றி மேலும் முப்பது நூல்கள் அவர்களால் அருளப் பெற்றன. சில அச்சாகி வெளிவந்துலவு கின்றன. சுவாமிகள் அருளிய நூல்கள், இயல், இசை, நாடகத் தமிழ் நூல்களாகக் காணப் பெறுவதால் அடிகள் முத்தமிழும் வல்ல முனிவர்களாவர்.

இவர்களது வரலாறு, கிடைத்த ஆதாரங் கொண்டு ஒருவாறு விரித்தெழுதப் பெற்றுள்ளது. கோவல் ஆதீனக் குருமணி என்னும் பெயரினதாய், 1972ல் இம் மடாலயத்தின் 17ஆம் வெளியீடாக அந்நூல் வெளியிடப் பெற்றுள்ளது.

வரன்முறை : இரண்டாம் குருநாதராகிய ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகட்குப் பின், ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சங்கண வசவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளும், அவர்களையடுத்து, ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளும் தலைமையேற்றருளிச் சிவஞானம் பாலித்தருளினார்கள்.

இந் நால்வருக்குப் பின்வந்தவர்களே ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளாவார்கள்.

இனி அவர்களது வரலாறு விரித்துரைக்கப் பெறும்.

ஐந்தாம் குருமகா சந்நிதானம்

நாடு : 'நாடென்ப நாடா வளத்தன' என்றார் வள்ளுவர். தமிழ் நாட்டுத் நெற் களஞ்சியம் சோழ நாடு என்பதை உலகமறியும். பார்க்கு மிடமெல்லாம் பசிய வயல்களையும், தழைத்துச் செழித்த சோலைகளையும் பெற்று விளங்குவது. காவிரித்தாய், தான் தோன்றும் மலை நாட்டினின்றும், பாய்ந்து ஓடிவரும் பரந்த இடத்தினின்றும், திரட்டிக் கொண்டு வந்த செழிப்புள்ள வண்டல் முதலான உரங்களை யெல்லாம், பற்பல கால்கள் மூலமாக வழங்கிச் செழிக்க வைக்கும் நாடன்றோ சோணாடு? ஒளவைப் பிராட்டியும், 'அதனை வள நாடு' எனப் போற்றிய தோடமையாது, மேதக்க என மேன்மையுங் கொடுத்துக் குறிப்பிடுகின்றார். வளமிக்க நாடு இதுவே யாதலால் வளவர் எனவே சோழ மன்னவர் குறிக்கப் பெற்றனர்.

சோறு உடையதாதல் மட்டுமின்றி,ஆங்காங்கே தெய்வத் திருக் கோயில்களையும் நிறையப் பெற்றிருப்பது சோழ வளநாடே. தேவாரம் பெற்ற சிவத்தலங்கள் மட்டும் 190, பெறாதன பல. வைணவத் தலங்களும் பல. பிற்காலக் சோழ வேந்தரதுதலைநகர் தஞ்சாவூர் முற்காலச் சோழர்கள், திருச்சத்தி முற்றம், பழையாறை என்ற இடங்களைத் தலை நகராகக் கொண்டிருந்தனர். அவை குடந்தை, கும்பகோண்ம் என்ற திருக்குடமூக்கினை அடுத்து உள்ளவை. திருக்குட மூக்கில், சைவ - வைணவ ஆலயங்கள் மிக மிக அதிகம். அத்தனையும் சமயகுரவராலும், ஆழ்வார்களாலும் பாடப் பெற்ற சிறப்பினையுடையன.

ஊர் : திருக் குடமூக்கினுக்கு வடகிழக்கின் கண்ணே, சற்றேறக்குறைய 5கி.மீ. (3மைல்) தொலைவிலமைந்திருப்பது, திருநாகேச்சுரம் எனும் சிறப்பமை நகர். பரந்த சிவாலயத்திலே, நாகேச்சுரன் எழுந்தருளி அருள் வழங்குகிறான். அப்பரமனை, நாவரசர் பெருமான், இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை நச்சுவார்க்கு இனியர்’, ‘நாடறி புகழர் , நற்றுணையாவர்’, ‘நம்புவார்க் கன்பர்’, ‘தேனர்' , 'தீர்த்தர்’ என்றெல்லாம் புகழ்ந்தமையே யன்றித் 'திருநாகேச்சரத்துளானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே' எனவும் சிறப்புறப் போற்றிப் புகழ்கின்றார். திருஞானசம்பந்தப் பெருமானும், சுந்தரமூர்த்தி நாயனாரும்பாடிய பதிகங்களை யும் பெற்றுள்ள தொல்பதி அஃது.

பெற்றோர் : அந்தப்பதியில் வீரசைவர் பலர் இன்றும் வாழ்கின்றனர். வீரசைவ குடும்பத்தவருக்கெல்லாம் குருவாய் விளங்கிய பெரியார், அண்ணாமலை அய்யர். அவர் தம் இல்வாழ்க்கைத் துணைவியார் பார்வதியம்மை. இவ்விருவரும் இறையன்பு தோய்ந்த செம்மன முடைய வர்கள். அருளுள்ளங் கொண்டு அண்ணலடியவரை அருத்தியுண் பவர்கள் தம் முந்தையோர் கொண்ட முறைப் படியே, திருப்பாதிரிப்புலியூர் பூர்மத்ஞானியார் மடாலய குருமூர்த்திகளைக் குருவாகக் கொண்டவர்கள். அடிக்கடி திருப்பாதிரிப்புலியூர் வந்து குருவின் திருவடிகண்டு மனத்தெளிவு முதலிய பெற்றுச் செல்வர். வீரசைவ தெறிபற்றிக் கனாராதனை முதலிய சிவ சீலங்களில் ஈடுபட்டு, விளங்கியவர்களாவர்.

தோற்றம் : பார்வதி யம்மையார் வயிறு வாய்ந்திருந்தனர். நாம் செய்த முன்னைத் தவப்பேற்றின் பயனாக, கலி 4973, ஸ்ரீமுக ஆண்டு, வைகாசி மாதம் 4ஆம் நாள் (17-05-1873) வியாழக்கிழமை இரவு 10-30 மணியளவில் மூல விண்மீனும், பிரதமை திதியும் தனுசு லக்கினமுங் கூடிய நல் வேளையில் ஆண் மகவொன்றினைப் பெற்றெடுத்தார்கள்.
தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf

சாதகப்பலன் சில :

குருவாரம், வைகாசி மூலம் இவை நற்பலன் தந்தன.

இலக்கினத்தில் சந்திரனும் இரண்டில் சனியும், ஐந்தில் புதனும் சுக்கிரனும், ஆறில் சூரியனும் இராகுவும், ஒன்பதில் குருவும், பதினொன்றில் செவ்வாயும், பனிரண்டில் கேதுவும் அமைந்த ஜாதம்.

ஜனன காலத்தில் கேதுதிசை ஆரம்பம்.

ஜாதகச் சிறப்பு : பத்தா மிடத்ததிபதியான புதனும் பதினோராமிடத்து அதிபதியான சுக்கிரனும் புத்தி ஸ்தானமாகிய ஐந்தாமிடத்தில் திரிகோணமேறி நிற்றலானும் ஜன்மாதிபதி குரு, ஒன்பதாமிடமாகிய மற்றொரு திரிகோணத்தில் நிற்றலானும் சுவாமி, ஞான குருவாய்ப் புகழ் பெற்று ஒளிர்ந்தார்கள்,

(மேற்கண்ட சாதகம், இந்த சாதகர் திருக்கரத்தால் எழுதப் பெற்று வைத்திருந்த குறிப்பின் படியாகும்.)

உபதேச அளவில் நில்லாமல், தாமும் மோட்ச சாதனத்தில் ஈடுபட்டு, அங்கலிங்க சம்பந்த முடையவர்களாகச் சிவ பூசை முதலாய சிறந்த ஒழுக்க சீலர்களாய்த் திகழ்ந்து மோட்ச மெய்தினார்கள். இது, மோட்ச காரகனாகிய கேது, மோட்ச ஸ்தானமாகிய பன்னிரண்டாமிடத்தில் நிற்றலால் உணரப் பெறுகிறது. .

பதினேழாம் வயதில், சுக்கிரதசை, குரு புக்தியில் (20-1-89) விரோதியாண்டு கார்த்திகை 7௳ வியாழன் சித்திரை நட்சத்திரத்தில் அவர்கள் மடாலயத் தலைமை யேற்றருளினார்கள்.

பிள்ளைப்பருவம் : அண்ணாமலை ஐயரும், பார்வதியம்மையும் தம் குழந்தையின் ஜாதகம் கணித்துப் பார்த்து மகிழ்ந்தனர். குழந்தைக்குப் ‘பழநியாண்டி' எனப் பெயர் சூட்டினர். பழநியுறை பரமகுரு அவர்களுக்கு வழிபடு கடவுள். எனவே அப்பெயரைத் தம் அருமைத் திருக்குமாரருக் கிட்டமை வியப்பன்று.

அண்ணாமலைக்கும் - பார்வதிக்கும் பிள்ளை பழநியாண்டி, என்ன பெயரொற்றுமை !

வீரசைவர், தம் மரபுக்குரிய முறைப்படியே, பிள்ளைப் பருவச் சடங்குகளை யெல்லாம் நிறைவேற்றிச் சிவலிங்க தாரணையும் செய்து வைத்துவிடல் வேண்டும். அவ்வாறே தம் குழந்தைக்குச் செய்ய வேண்டிய முறைப்படியாவும் செய்து, தம் குருவாகிய திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்துச் சுவாமிகளிடம் சிவலிங்க தாரணம் செய்து வைக்க ஆறாம் மாதத்தில் குருவினிடம் குழந்தையைக் கொண்டு வந்தனர்.

அப்போது, திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் நான்காங் குருமூர்த்திகளான ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் எழுந்தருளியி ருந்தார்கள். சிவத்திரு அண்ணாமலை ஐயர், குருநாதரிடம் அன்பு பூண்டு அவ்வப்போது திருப்பாதிரிப்புலியூர் வந்து குருநாதர் திருவருள் பெற்றுச் செல்வதுண்டு. அவ்வாறு ஒருமுறை வந்த போது, ‘உங்கள் குழந்தை பழநியாண்டி, இனி எமக்குரிய பிள்ளை. அப்பிள்ளையை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிடுக’ என்ற ஆணையும் பிறந்திருந்தது குருவாக்கினை வேத வாக்காகக் கொண்டு யாவரும் போற்றிவந்த காலம் அது. அதிலும், வீரசைவ மரபில், குருவே சிவனெக் கூறினன் நந்தி என்ற திருமந்திர வாக்கு மிகமிகத் தீவிரமாகப் பின்பற்றப் பெறுகிறது. ஆகவே, அண்ணாமலை ஐயர்- பார்வதியம்மை இருவரும், தம் செல்வத் திருக்குமரனைக் குருபாதத்தில் சேர்ப்பித்தார்கள். பழநியாண்டிக்கு இவ்வுலகில் தோன்றிய ஆறாம் மாதமே குருநாதன் திருவடி தொழும் பேறு கிடைத்துவிட்டது.

"பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம், காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்" என்பது அம்மையார் திருவாக்கு. அங்ஙனமே, நம் குருநாதர் பிறந்து, தம் முன் எதிர்ப்பட்டோரை அடையாளங் கண்டுகொள்ளும் வயதெல்லை யிலேயே குரு சீர்பாத சேவை கிடைத்துவிட்டது. அன்று முதல், திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்தையே தமக்கிருப்பிட மாகவும், தாயும் தந்தையும் குருவும் தெய்வமும் குரு நாதராகவும் கண்டு வளர்ந்தருளினார்கள். பெற்றோர் சிலகாலம் குருநாதர் ஆணைப்படியே திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்தில் தங்கி யிருந்தனர்.

திருப்பாதிரிப்புலியூர் மடாலய நான்காங் குருநாதர், பழநியாண்டியாம் இளங்குழவியைச் சிறு பருவத்திலேயே பல நல்ல பழக்கங்களில் ஈடுபடுத்தினார்கள். 'தளர் நடையிட்டுத் தத்தடி யிட்டுத் தடுமாறி விழுவதெல்லாம் குருவாம் தாய் தந்தையின் மீதே, இளங்குழவிப் பதங் கடந்து எழுத்தறியுங் காலம் வந்துற்றபோது, நான்காம் குருநாதர், சென்ன கேசவலு நாயுடு என்பாரைத் தம் இருப்பிடத்திற்கு வருவித்துத் தெலுங்கு மொழியைக் கற்பிக்கச் செய்தார். சில ஆண்டுகட்குள், தெய்வத் திருக்குழந்தை தெலுங்கு மொழியில் எழுதவும் படிக்கவும் அறிந்திருந்தது. தெலுங்கு கற்ற காலம், நான்கு ஆண்டுகளாகும் என அடிகளார் கூறியுள்ளார்கள்.

தாய் மொழியும் ஆங்கிலமும் பயிற்றப் பெற்ற பள்ளியிற் பின்னர்சேர்ந்து, கருத்துடன் பயின்றார்கள். பள்ளியிற் பயிலுங் காலத்தில் தம் குருநாதர்க்குப் பூசனை புரியப் பூக்கொய்தல், நீராடிப் பூசனைக்கு வேண்டும் நீர் முகந்து, வடித்தெடுத்துத் தூய்மையுடன் வைத்தல், சந்தனம் அறைத்தல், தீபமிடல் போன்ற பற்பல தொண்டுகளிலும் ஈடுபட்டு, யாவற்றையும் ஏவுவாரின்றியே சிறப்புடன் அமைத்து வைத்து விடுவார்கள். பின் தம் ஆன்மார்த்த பூசனையை முடித்துக் கொண்டு காலந் தவிராமல் பள்ளி சென்று வருவார்கள்.

சிறு பருவத்திலேயே வீரசைவ சமய தீட்சை பெற்று நியமம் தவிராமல் கடமைகளைச் செய்தல் வேண்டும் என்ற முறைப்படி சுவாமிகள், தமக்கிடப் பெற்ற கடமைகளைச் சிறக்கச் செய்து முடிப்பதோடு, தம் குருநாதரோ, மடாலயத்தின் குறிப்பறிந்து காலங் கடவாமல்செய்து முடிப்பதிற் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள்.

ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கே துயிலுணர்ந்து, தம் பாடங்களைப் படித்தலும், எழுத்து வேலைகளை முடித்தலும், இறைவன் மீது திருமறைப் பாக்களை ஓதுதலும் அவர்களது நியமங்களாம் இங்ஙனம் வெளிச்சம் நன்கு வரும் வரை செய்திருந்துவிட்டு, வெளிச்சங் கண்டவுடன் நித்திய கருமங்களை முடித்துப் பூக்குடலை கொண்டு திரு நந்தனவனம் சேர்வார்கள். ஆங்கு பூக்களையும் பத்திரங்களையும் பறிக்கும் போதெல்லாம் இறைவன் மீதல்லாது வேறெதிலும் சிந்தை செலுத்தாமல், விநாயகரகவல். திருவாசகத்துச் சிவபுராணம், திரு அகவல்கள், திருமுருகாற்றுப்படை, கந்தர்கலி வெண்பா முதலியவற்றினை மனத்துள் தூய்மையுடன் ஓதுதல் வழக்கம். பிறகே முன் குறிப்பிட்டவாறு நீராடல் முதலிய செய்து காலைச் சிற்றுண்டி கொண்டு, பள்ளி சென்று விடுவார்கள்.

மாலை, பள்ளி முடிந்து திரும்பியபின், பள்ளியிற் பயின்றன வற்றையும், அடுத்தநாள் நடக்க வேண்டியவற்றையும்படித்துச் சிந்தனையில் இருத்திக் கொள்வதும், இயன்ற வரை சிறிது விளையாடுதலும், விளையாடுங் காலத்தில் படித்தவைகளையும், ஆசிரியர் போதனை காலத்திற் குறிப்பிடும் பற்பல இன்றியமையாச் செய்திகளையும் நினைவிற் கொள்ளலுமே யன்றிப் பிறவற்றிற் சிந்தை செல்லா வண்ணம் கருத்துடன் பயில்வார்கள்.

அவர்களது திருவுடலைப் பிடித்துவிடல், ஆங்கு இருப்போர் சிலர்க்கே கிடைக்கக் கூடிய நல் வாய்ப்பு. அக்காலை அவர்கள் பற்பல அருளுரைகளை, அறிவுரைகளைக் கூறுவார்கள். தாம் பயின்ற காலங்களில் மேற் கொண்ட நியதிகளையும், ஐயங்களை அகற்றிக் கொண்டமையும் முதலிய தம் அநுபவங்களை யெல்லாம் கூறியருள்வார்கள். அவர்கள் கூறுவன வற்றில் பாடத் தொடர்பான செய்திகளும், அறிவுரைகளும், நிரம்பியிருக்கும். அவர்கள் அங்ஙனம் கூறியவற்றைப் பின்பற்றியோர் பெரு நலமடைந்த துண்டு. எடுத்துக்காட்டாக ஓர்நிகழ்ச்சியைக் குறிப்பிட முனைதல் இழுக்காகாது.

ஒரு நிகழ்ச்சி: திருவையாற்றுத் தமிழ்க் கல்லூரியில் 1934 - 38 நான்காண்டுகள் பயின்றவர் ஒருவர். அவர் சுவாமிகளால் அமைக்கப் பெற்ற ஸ்ரீமத் - ஞானியார் கலா சாலையில் வித்துவான் - புகுமுகத் தேர்விற்குப் பயின்றவர். திருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்தவர். தேர்வில் முதன்மை பெறும் நோக்குடன் முனைந்து படிப்பதில் ஈடுபட்டார். ஆனால் படித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே, 'கூகூ' என இறைவதும், ஆடைகளைக் குலைத்துக் கொண்டு ஓடுதலுமாக மூளைக்கோளாறு கொண்ட நிலையில் திருப்பியனுப்பப் பெற்றார். அவர் திருப்பாதிரிப்புலியூரடைந்து மருத்துவம் பெற்றார். தனக்கு வழிகாட்டியருளிய குருநாதரை நாடோறும் வந்து பணிவார். அவர்க்குக் கூறிய அறிவுரையாவன : “கூடியவரை அதிகாலை 4 மணியளவில் எழுந்து ஒரு மைல் அளவாவது நடந்து சென்றோ, உடற்பயிற்சி செய்தோ, முடித்தவுடன் குளிர்ந்த நீரில் நீராட வேண்டும் உடல் வரை மட்டுமல்லாமல் தலை மூழ்கல் வேண்டும். அதற்கு ஓடும் நீராயின் மிக நன்று ; அருகில் இல்லையேல் குளம் முதலாம் நீர்நிலையில் நன்கு திளைத்தாடுதல் நலம். அதுவும் இல்லையேல் நன்றாகக் கை வலி எடுக்குமளவும் கிணற்றில் நீர்முகந்து தலைக்கு விட்டுக் கொள்ளல் நலம்.“ என்பனவாம். அங்ஙனமே அவர் செய்துவந்து சில நாள்களுக்குள் முற்றும் நலமுற்றுத் தேர்வு எழுதினார். தேர்வில் மாநிலத்தில் முதல்வராகத் தேர்ச்சியுற்றுத் திருப்பனந்தாள் மடத்தின் 'ஐந்தாம் ஜார்ஜ் நினைவுப் பரி'சாகிய ஆயிர ரூபாயும் பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறாக ஒழுக்க நெறிகளைத் தாம் கடைப்பிடித்துக் கண்ட பயன் காரணமாகவே யாவர்க்கும் வழி காட்டியருளியமை தெளிவு.

பழநியாண்டியாம் இவ்வரும் பெரும் பிள்ளை நாடோறும் நியமந் தவிராது ஒழுகிப் பள்ளியிற் பயின்ற தோடன்றி, முன் கற்ற தெலுங்கு மொழி நூல்களையும் தம் குருநாதர் கற்பித்த வடமொழியிலும் பயில்வார்கள். பதினாறு வயதளவில், தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், வடமொழிகளை யறிந்திருந்ததேயன்றித் தம் குருநாதரிடம் சித்தாந்த சாத்திர நூல்களையும் பயின்று வந்தார்கள்.

அறப்பள்ளித் தலைமை

பதினாறு வயது நிரம்பிப் பதினேழாம் வயது நடந்து கொண்டிருந்த காலத்திலே, மடாலயத்து நான்காம் குரு மூர்த்திகள் - ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் நாற்பத் தோராண்டு பட்டமேற்றிருந்த பின்னர், திருவருள் நிலையெய்தும் நிலை வந்துற்றது. அடுத்துப் பட்டமேற்க வேறொருவரைச் சுட்டி உயில் எழுதி வைத்தாரெனினும், பின்னர் உணர்ந்து, அதை நீக்கி வேறொரு உயிலினை நம் அடிகளாரை (பழநியாண்டியை) நியமித்து எழுதிவைத்தார். தம் திருக் கரத்தாலேயே சந்நியாச தீட்சை செய்து வைத்தார். ஆசாரியாபிஷேகமும் செய்வித்து முறைப்படி உபதேசம் செய்து வைத்தார். பட்டமேற்போர் அக்காலை சில சத்திய வாக்குகளைக் கூறிக் குரு ஆணையை நிறைவேற்றுவதாகக் கூறுதல் மரபு. அந்த மடாலய வரன்முறை மரபையும், சந்நியாச நிலையையும் உறுதியுடன் கடைப்பிடித்துத் தம் முன்னோர் ஒழுகி வந்த முறைப்படி எந்தவிதக் குறைவும் நேராவண்ணம் ஆன்மார்த்த பூசை பரார்த்த பூசை முதலிய நியமங்களையும் வழுவாமற் காப்பதோடு மடாலய மரியாதைக்குரிய சிவிகையிவர்தல், பொது மக்கள் அன்புடன் புரியும் உபசாரங்களையேற்று அவர்கட்குத் திருவருள் பாலித்தல் முதலிய நெறிமுறை கடவாதொழுகுவதாகவும் குருவின்மீது ஆணை கூறிக் கூறல் வேண்டும் அங்ஙனம் யாவும் கூறி வந்த அடிகளார், தம் குருநாதரை வேண்டி ஒரே ஒன்றினை மட்டும் விலக்கியருள வேண்டிக் கொண்டனர். அதாவது : அவ்வப் போது சிகை மழிப்பித்துக் கொள்ளல் மாத்திரமே. எதனையும், தன் உறுதி மொழிப்படியே நிறைவேற்றி வந்தனர்.

மரபு ஒழுக்கம் பிறழாமை.

காலப்போக்கிற் கேற்பவும், சுற்றுச் சார்பிற்கேற்பவும் சில மரபு ஒழுக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டினார் சிலர். சிவிகையூர்ந்து செல்லலை விடுத்துக் கார் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அதனால், விரைவாகவும் எளிதாகவும் மக்களிடையே தொண்டாற்ற வாய்ப்புக் கிடைக்குமெனவும், ஒருக்கால், புதுவைக் கலைமகள் கழக ஆண்டு விழாவிற்குப் போந்திருந்த அடிகாளாரைத் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் வேண்டிக் கொண்டார்கள். அப்போது, அடிகளார் புன்முறுவல் கொண்டு ஒர் கதை கூறினார்கள்; அஃதாவது:

சிறுகதை : ஓர் கால், வயோதிக மன்னன் ஒருவன் திறம்பட ஆட்சி நடத்தி வந்தான். அவன் மைந்தன், இந்தக் கிழவன் ஒழிந்தாலன்றோ நமக்கு ஆட்சி கிடைக்குமெனத் தன் உள்ளத்தில் எண்ணித் தந்தையை ஒழிக்கத் திட்ட மிட்டுக் கொண்டிருந்தான்.

அவ்வூரில் வனப்பு மிகுந்தவளாய், ஆடல் பாடல்களில் தேர்ந்த பொதுமகள் ஒருத்தி இருந்தாள். நெடுநாள் தவமியற்றி, உலகப் பற்றின் நீங்கிய சந்நியாசி ஒருவர் அப்பொதுமகளைக் கண்டார். மனம் மாறினார். தன் வேட்கையினை அப் பொதுமகளிடமும் துணிந்து கூறிவிட்டார். அவளும் அதற்கிணங்கி, அத் துறவிக்கு நாளொன்றைக் குறிப்பிட்டனள்.

அந்தக் குறிப்பிட்ட நாள் வருமுன்னர், கிழமன்னன் ஓர் இரவில்துக்கமின்றிப் புரண்டுபடுத்தும் பொழுது போகாமையால், ஆடல் பாடல்களில் மனம் செலுத்த விரும்பி அப்பொது மகளையும், அவளது ஆடல் பாடல் குழுவினரையும் இசைக் கருவி முதலியவற்றுடன்வருமாறு ஆள் போக்கினான், அவர்களும் வந்தனர். ஆடல், பாடல் தொடங்கின. மன்னவனும் அவற்றால் மகிழ்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான். அந் நிகழ்ச்சிக்குப் பலர் வந்திருந்தனர். இரவின் நெடும் பொழுது கழிந்து விட்டது ஆடல், பாடல்களாற் பொது மகளும் சோர்வு மிக அடைந்தாள் மன்னவனோ, ஆட்டத்தை நிறுத்த உத்தரவுதரவில்லை. அவளிடம் அதிகச் சோர்வு கண்ட நட்டுவன் அவளிடம் கூறுவான் :- “நீ இது காறும் நல்ல பெயர் வாங்கி விட்டாய். பொழுது புலரும் வேளையும் நெருங்கி விட்டது. இனி சிறிது நேரம் பொறுமையுடன், உன் உடற்சோர்வினையும் பொருட்படுத்தாமல் ஆடு. வாங்கிய பெயரை இழக்காமல் கடமையைச் செய்தாய் என்ற சிறப்பைப் பெறு. அதனால் உனக்கு நிலைத்த புகழே கிடைக்கும்” என்று ஆறுதல் கூறி ஆட்டத்தில் ஈடு படுத்தினான் அதனால் அவள் ஊக்கத்துடன் ஆட்டத்தில் ஈடுபட்டாள்.

கிழ அரசன், இந்தச் சொற்களைக் கேட்டான்; இது வரை நல்லவன் என்று பெயரெடுத்துள்ளோம்; இவளைத் துன்புறுத்தியவன் என்ற அவப் பெயர் வருமாறு ஏன் நடந்துக் கொள்ள வேண்டும்? என்றெண்ணி ஆட்டத்தை நிறுத்துமாறு ஆணைதந்தான்.

நட்டுவன் கூறியவைகளைக் கேட்ட அரசகுமாரனோ “தந்தை இன்னும் நீண்டகாலம் உயிர் வாழ மாட்டார் ; இதுவரை நல்ல மகன் என்று பெயரெடுத்துள்ள நாம், இன்னும் சில காலம் பொறுத்திருந்து அவருக்குப் பிறகு அரசுரிமையை ஏற்பதே ஏற்புடைச் செயலாகும்; அவசரப்பட்டுத் தந்தைக்கு ஊறு விளைவித்து வீண் பழி பாவங்களுக்கு ஆளாகாமல், பொறுத்திருப்போம்” என்றெண்ணித் தன் தகாத எண்ணத்தை அறவே விட்டொழித்தான்.

அந்த அவையிலிருந்த முற்கூறப் பெற்ற சந்நியாசியும் நட்டுவன் வார்த்தைகளைக் கேட்டு, ‘என்னே என் மடமை! இதுகாறும் பல ஆண்டுகளாக நாம் கைக்கொண்ட புலனடக்கம் முதலியவற்றாற் பெற்ற பெரும் பேறு என்னாவது கைக்கொண்ட பிரமசரிய விரத முதலியவை அவமாகிப் போவதோ? என்றெண்ணித் தான் செய்யத் துணிந்திருந்த தகாத செயலை, அக்கணத்திலிருந்து நினைக்கவும் கூடாதென்று உறுதி பூண்டார்.

”இந்தக் கதையைப் போல் யாமும் முன்னோர் கைக் கொண்ட முறைகளைப் பின்பற்றியே வந்துள்ளோம். அதனை மாற்றி நடந்தால், உள்ளத்தாற் பொய்யா தொழுகல் என்ற மறைமொழி கற்ற பயன் என்னாவது?” என்று கூறித் தம் உள்ளக் கருத்தினைத் தெளிவு படுத்தினார்கள்.

“இந்நிகழ்ச்சி 1913 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அதன் பின் கவாமிகள் பல பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிவிகை பூர்ந்தே, எங்கெங்கும் செல்வார்கள். சென்னைக்கும் பலமுறை சென்று மீண்டதும் உண்டு. அதனால், சிறு கிராம மக்களும் சுவாமிகளைக் காணவும், அவர்கள் பால் ஈடுபாடு கொள்ளவும், சில சில கிராமங்களில் மக்கள் அவர்களது சொற்பெருக்கைக் கேட்கவும் வாய்ப்புக் கிடைத்தன. திரு.வி.க. முதலாயினோர் தம் வேண்டுகோளின் படி சுவாமிகள் கார் மூலம் செல்வதை மேற் கொண்டிருந்தால் சிற்றூர் மக்கள் பலர் அவர்களைக் காண்டலும், அவர் அருள் மொழிகளைக் கேட்டலுமாகிய வாய்ப்புக்களை இழந்திருப்பார்களே என அமைதியுற்றனர்.

தாம் கொண்ட உறுதியினின்றும் மாறாதொழுகினார்கள் நம் அடிகளார் என்பதனைத் திரு.வி.க. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பில் அவர்களே எழுதியிருப்பதையும் இங்குக் குறிப்படுவாம்.

‘ஞானியார் மடத்தலைமையும், சிவிகையூர்தலும் இன்ன பிறவும் சுவாமிகளே வெளியூர் செல்லாதவாறு தகைந்துவந்தன. அவைகள், சுவாமிகளைச் சிறைப் படுத்தின என்றே சொல்வேன். இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகள் சுவாமிகளின் தமிழைப் பருக எவ்வளவு விழைந்தன என்பதை யான் அறிவேன்.

1941 ஆம் ஆண்டு அன்பர் இராமசாமி நாயுடு என்பவர் தென்னாப்பிரிக்காவினின்றுஞ் சென்னை போந்தனர். அவர், சுவாமிகளையும் என்னையும் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். சுவாமிகளைக் கண்டோம். நாயுடு சுவாமிகளிடம் தமது கருத்தைத் தெரிவித்தனர். ‘எனக்குள்ள தடைகளை முதலியாரவர்கள் சொல்வர் என்ற பதில் சுவாமிகளிடத்திருந்து நகைப்புடன் பிறந்தது. காஞ்சியில் கண்ட அந்நகை முகக் காட்சியே இறுதியாயிற்று

இவ்விரண்டு நிகழ்ச்சிகளுக்கு மிடையே சற்றேறக் குறைய முப்பதாண்டுகள் இரண்டிலும் திரு.வி.க. அவர்கள் தொடர்பு கொண்டிருந்தவர்கள். பல காலங்கடந்த பின்னராவது தம் கருத்தினை அடிகளார் மாற்றிக் கொள்ளக் கூடுமென அவர் கருதியுமிருக்கலாம். சுவாமிகளின் உறுதி சிறிதும் தளரவில்லை யென்பதை அவர்களது இறுதிக்கால நிகழ்ச்சியான பின்னி கழச்சியால் அறியலாம்.

வடாற்காடு மாவட்ட ஆரணியிற் பிறந்து, சென்னையில் வாழ்ந்து வந்தவர்கள், கிருஷ்ணசாமி முதலியாரின் உடன்றோன்றல் மனைவியார் பாச்சியம்மையார் என்பவர். சுவாமிகள் 1934லும் அதற்குப் பின்னரும் சென்னை எழுந்தருளியிருந்த காலங்களில் அவ்வம்மையார் தன் மக்கள் மருகியரோடு சுவாமிகளைத் தரிசித்து, அவர்களது சொல்லமுதங்களை மாந்தியவர்களு மாவார்கள். சில ஆண்டுகள் கந்தர் சஷ்டி விழாக் காலங்களில் திருப்பாதிரிப்புலியூர் வந்து விரதமிருந்தும், சொற்பொழிவுகளைக் கேட்டும் முருகன் எழுந்தருளள் முதலியவற்றைத் தரிசித்தும் கந்த சஷ்டி மஹாபிஷேக முதலியவற்றைக் கண்டபின், தன் பொருட் செலவில் ஓராண்டு முருகக் கடவுளுக்குத் திருமண விழாவினை நிறைவேற்றி வைத்தும் பொருள் பெற்ற பயனை யடைந்தவர்களாய்ச் சுவாமிகளிடம் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அந்த அம்மையார், சுவாமிகளைக் காசி யாத்திரை எழுந்தருளுமாறு கேட்டுக் கொண்டார்கள். சிவிகை யூர்ந்து செல்லல் பெருந் துன்பந்தருவதோடு, காலக் கடப்பும் விளையுமென அறிவித்து, மோட்டார், லாரியில் ஏற்பாடு செய்து விடுவோம்; காரில் பயணத்தை மேற்கொள்ளத் திருவுளம் பற்ற வேண்டுமென அவர்கள் விண்ணப்பித்துக் கொண்டனர். அதனையும் நகை முகத்தோடு சுவாமிகள் ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தனர்.

இதுவரை குறிப்பிட்ட வற்றால் சுவாமிகள் 1889-ல் ஏற்றுக் கொண்ட சந்நியாச முறைக்குரிய உறுதி மொழிகளிலிருந்து ஒருக்காலும் வழுவினாரல்லர் என்பது விளங்கும்.

இங்ஙனம் உறுதிமொழி யருளிச் சந்நியாச நிலையையும், அறப் பள்ளித் தலைமையையும் ஏற்றருளிய காலத்தில் அவர்களுக்குப் பதினாறாண்டுகளே நிறைவெய்தியிருந்தன என்பதை நாம் நினைவிற் கொள்ளல் வேண்டும்.

சுவாமிகள் தலைமைப் பொறுப்பை யேற்றுக் கொண்டருளிய காலத்திலே, மடாலயப் பொருள் நிலைமை பெரிதும் வருந்தத் தக்கதாயிருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த மதிப்பிற்கு ஓராயிர ரூபாய் கடன் இருந்தது. நில முதலியன பயிரிடுவோரும், ஒப்பந்தப்படி தானிய முதலிய வழங்குவதின்று. இந்த நிலை வரக்காரணம், முன்னிருந்த நான்காவது குருநாதர், பூசை நியம முதலியவற்றில் ஈடுபட்டும், தியானம், செபம், பாட போதனைகளைச் செய்து கொண்டும் இருந்தார்களேயன்றி, இவைகளைப் பற்றிக் கவலை கொள்ளாமலிருந்து விட்டதேயாகும். அவர்கள் ஆன்மார்த்த பூசை முடித்த பின்னர்தான் மடைப்பள்ளியிற் புகுந்து தாம் திருவமுது தயாரிக்கத் தொடங்குவ தென்றும், அவர்கள், தியானம், பாராயணம் முதலியவை முடித்து மூலவராம் முருகப் பெருமானை வலம் வந்து தொழுது அமுதருந்த வருங்கால் பிற்பகல் 2 மணிக்கு மேலாகிவிடும் என்றும் நம் சுவாமிகளின் பூர்வாசிரம அம்மான் மனைவியார் அமிர்தம் அம்மையாராவர்கள் கூறுவார்கள். மாமா அவர்கள் மடாலயச் செயலுரிமைப் பொறுப்பேற்ற பின்னரே நிலவருவாய் முதலியவை செம்மைப் பட்டதாகவுங் கூறியிருக்கிறார்கள்.

முன் சுவாமிகளைச் சிலர் மனம் மாற்றி, அவர்கள் கொண்டிருந்த கருத்திற்குப் புறம்பாக வேறொருவரைத் தலைமையேற்கக் குறிப்பிட்டு உயில் எழுதச் செய்து விட்டார்கள். அவ்வாறெழுதிய பின் சிலநாள் கடந்து, நான்காவது சுவாமிகள் உறுதியுடன் இவ்விளம் பிள்ளையையே நியமித்து மாற்றி எழுதிவிட்டார்கள். எழுதியதோடமையாது அன்றே, பள்ளியினின்று பகலுணவுக்கு வந்த அவர்களை முறைப்படி தீட்சை செய்வித்துச் சந்நியாச நிலையேற்கச் செய்து உபதேசமும் செய்துவிட்டார்கள். பின் 4 நாள் கழித்தே முன் சுவாமிகள் பரிபூரண மடைந்தார்கள். இதனால் முதலில் உயிலிற் குறிப்பிடப் பெற்றவரும், அவரைச் சேர்ந்தார் சிலரும் வழக்கிட்டதும் உண்டு.

திருவருள் வலத்தால் வழக்கிட்டோர் தோற்றுச் செயலற்று விட்டனர். அவர்கள் வேறு செய்தற்கிடனின்றி மடாலயம் வந்தபோதும் அவர்களை முகங்கோணாது வரவேற்று வேண்டுவன செய்த பெருந்தன்மை யாளர்கள் நம் குருநாதர்.

அன்றைய நிலையில், வேறொருவர் தலைமைப் பீடத்தமர்ந் தவராயிருந்தால் எவ்வெப்படி யெல்லாம் ஆகியிருக்குமோ ? கடன் தொல்லை ஒருபால், கடன் கொடுத்தவர்கள் சொத்துக்களைத் தம் வயப்படுத்திக் கொள்ள முற்பட்டு நெருக்கினார்கள். இளம் பருவத்திலே இத்தனை தொல்லைகட்கும் உட்பட்ட சுவாமிகள் தம் குருநாதரையும் வழிபடு கடவுளையுமே நம்பிச் செயலில் முனைந்தார்கள். தம் கல்வியறிவைப் பெருக்கிக் கொள்ளவும் பேரவாக் கொண்டு ஒரு சிறு பொழுதையும் வீணாக்கினார்களல்லர்.

புருகேஸ்பேட்டை என வழங்கப் பெறும் முருகேச நகரில் அந்நாள் பெருஞ் செல்வராய்த் திகழ்ந்த திரு.பழநியாண்டி முதலியராவர்கள் இம்மடாலய சீடர். தெய்வப் பற்று மிக்கவர். குரு பீடத்தில் அடங்காத பக்தி பூண்டவர். அவர்க்குக் கடல் கடந்த நாடுகளில் வாணிகத் தொடர்பு உண்டு. அங்கே சில கடைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவர் முன்வந்து தானே பணம் தந்து கடன் தொல்லையினின்று மடத்தை மீட்டனர். பின்னர், அவருக்கு அப்பணம்கொடுக்கப் பெற்று விட்டதெனினும், காலத்தினாற் செய்த அந்நன்றியைச் சுவாமிகள் யாவரிடமும் பாராட்டிக் கூறுவார்கள். பின்னாளில், அப் பழநியாண்டி முதலியார் பின் வந்தோர் நொடிந்துவிட்ட நிலையில், அவரை உணவு முதலியவற்றால் இம் மடாலயம் உபசரித்ததும் உண்டு. ஆறாம் குருநாதர் எழுந்தருளி யிருந்த போதும் அவர் ஆதரிப்புப் பெற்றதுமுண்டு.

கல்வி : இனி. அடிகளாரது கல்வி வளர்ச்சி பற்றிக் காண்போம். முன்னரே குறிப்பிட்டவாறு, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், வடமொழிகளை எழுதவும் படிக்கவும் கற்றிருந்த நம் சுவாமிகள் தம் கல்வியைப் பெருக்கிக் கொள்ளப் பேரவாக் கொண்டிருந்தனர். தென் மொழியைக் கற்கும் அவா மேலீட்டினால் சிதம்பரம் மு. சுவாமிநாத ஐயரவர்களைத் தம் மடாலயத்திற்கு வருவித்து நாள்தோறும் குறிப்பிட்ட வேளையில் அமர்ந்து தமிழ் நூல்களைக் கற்கத் தொடங்கினார்கள். மாணவர் இலக்கணம் யாவையோ, அவைகளினின்றும் சிறிதும் மாறாமல் தம் ஆசிரியருடன் பழகிக் கல்விச் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். 'உடையார் முன் இல்லாற் போல் ஏக்கற்று'க் கற்றார்கள். திருவள்ளுவர் அவாய் நிலையான் விட்ட (தலையாயர் என்ற) சொல்லுக்கு இலக்காயினார்கள், -

பாடற் பரிசு : ஆசிரியர் யாப்பிலக்கணம் கற்பித்து வருங்கால், ஓர் வெண்பா எழுதி, அதற்கு வாய்பாடு, சீர், தளை முதலிய வெல்லாம் எழுதித் தயாராக வைத்திருந்து அடுத்த நாள் காட்டச் சொல்லிச் செல்வது வழக்கம். அவ்வழக்கப் படியே ஒரு நாள்,

"நற்பா டலிபுரத்து நாதனே நாயினேன்
பொற்பாம் நினதடிையப் போற்றினேன் - தற்போது
வேண்டுஞ் செலவிற்கு வெண்பொற்கா சு பத்து
ஈண்டு தருக இசைந்து"

என்ற தான் புனைந்ததோர் வெண்பாவை எழுதி வைத்து விட்டுச் சென்றார். அடுத்த நாள் வழக்கம் போல வந்து நோட்டைப் பிரித்துப் பார்க்க, அந்தப் பாட்டெழுதியிருந்த பக்க அடையாளம் போல, பத்து ரூபாய் நோட்டு ஒன்றையும் உடன் வைத்திருந்ததைக் கண்டார். உடனே சுவாமிகளின் முகத்தைப் பார்த்து நான் பாட்டுக்கு (என் மனம் போனவாறே) எழுதி வைத் திருந்தேனே யல்லாது உண்மையிற் பணம் பெறவேண்டுமென்று இப்பாட்டினை எழுதி வைக்கவில்லை’ என்றார். அதற்குச் சுவாமிகள், நான் பாட்டுக் குத்தான் (பாடலுக்காகத்தான்) பொருள் கொடுத்தேனே யல்லாமல் வேறொன்றற்காகவுமில்ல’ என்று சிலேடையாகப் பொருள் கொள்ளுமாறு சொன்னார்கள். அந்தப் பொருள் பொதிந்த விடையினால் ஆசிரியர் பெரு மகிழ்ச்சி கொண்டு அப்பொருளை யேற்றுக் கொண்டார்.

ஆசியருக்கு நன்றி : சி.மு. சுவாமிநாத அய்யர் தம் உத்தம சீடராகிய சுவாமிகளுக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு போதித்தார். சுவாமிகள், தாம் பட்டமேற்றுக் கொண்ட எட்டாண்டுகளுக்குள் திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தைத் தேடி அச்சிடு வித்தார்கள். கிடைத்தது ஒரே ஒலைச் சுவடிப்பிரதி, அது கிடைத்த விவர முதலியவற்றை, அவர்கள் அந்நூலின் முகவுரையில் அறிவித் திருக்கிறார்கள். அஃதாவது , “... பற்பல விடங்களில் விசாரித்தும் புத்தகங் கிடைக்காமற் போன நாள் பல, பின்பு திருவாவடு துறை யாதீனத்திலிருந்து கூடலூர் டவுன் காலேஜ் தமிழ்ப் பண்டிதரவர்களாகிய சிதம்பரம் மகாராஜ ராஜஸ்ரீ மு. சாமிநாதை யரவர்களாற் கிடைத்த பிரதியு மொன்றே. அதுவும் பழைமையுஞ் சிதைவையும் மேவியது...

இப் புத்தகத்திலுள்ள சிவ சரித்திர முழுமையும் பலரும் எளிதில் படித்துணரும் பொருட்டுப் பொழிப்புரை போன்ற ஒரு வசனம் எனது தமிழாசிரியரும், யான் திருத்திய காலத்து நிரம்ப உதவி செய்தவர்களும், கூடலூர் டவுன் காலேஜ் தமிழ்ப் பண்டிதவர்களுமாகிய சிதம்பரம் மகா ராஜ ராஜஸ்ரீ மு. சாமிநாதையரவர்களால் இயற்றுவித்து இத்துடன் சேர்த்தச்சிட்டிருக்கிறேன். இம்முயற்சிக் கிடையூன்றிக் கூட்டி முடித்த ஆண்டலைக் கொடியுர்த்த எம் மருமைக் கடவுளின் திருவரு ளைச் சிந்தித்துள்ளேன்.

இங்ஙனம்,
சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய
சுவாமிகள்"


என்பதாகும். இதில் தம் ஆசிரியரை இரண்டிடங்களிற் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டிடங்களிலும் மகாராஜ ராஜஸ்ரீ, அவர்கள் என்ற மரியாதை யளித்துள்ளமை காணலாம்.

சில காலங் கடந்த பின் தம் தமிழாசிரியர் அரனடி யடைந்தார். அப்போது அடிகளார் அடைந்த மனத்துயருக் கோரளவில்லை. தம் மடாலயத்து நூல் நிலையத்திற்குச் "சுவாமிநாத புத்தகசாலை" எனப் பெயரிட்டார்கள். அவருடைய குமாரரான, முத்துகிருஷ்ண ஐயரை B.A வகுப்பு வரை படிக்கச் செய்தார்கள். ஆண்டு தோறும் அவர்களது குடும்பத்திற்கு வேண்டுமளவிற்கு நெல்லும் பிற பொருள்களும் கொடுத்து உதவினார்கள்.

இவை, சுவாமிகளது குருபக்திக்கு ஓர் எடுத்துக் காட்டாவன வாம். தன் குருவின்மீது வைத்த பற்றுதலோடு, சுவாமிகள் பின்னர் பற்பல நூல்களிலும் தாமே பயின்று சிறந்த அறிஞராயினார்கள்.

அடிகளார், தெலுங்கு மொழியை நான்கு ஆண்டுகள் பயின்றும், ஆங்கிலத்தை ஏழாண்டுகள் பயின்றும், வடமொழி, தென்மொழிகளைப் பதினைந்து ஆண்டுகள் பயின்றும் பேரறிவு படைத்தவர்களாயினார்கள்.

வடமொழியாசிரியராக வாய்த்தவர்கள், முதலில் ஸ்ரீமத் உபய வேதாந்த கோவிந்தா சாரியாரவர்கள். அடுத்து, டவுன் காலேஜ் சமஸ்கிருத பண்டிதர் - இராமநாத சாஸ்திரிகள் என்பவராவர்.

தமிழ் மொழியாசிரியராக முதலிற் சில காலம், பிரான் மலை தெய்வசிகாமணி ஐயா அவர்கள் இருந்தது முண்டு.

தவக் கோலம், மடாலயத் தலைமை பூண்ட பின்னர், ஆசிரியர்களைத் தம் இருப்பிடத்திற்கே வருவித்துப் பணிவுடனும், ஆசிரியர் சொல் கடவாமலும் பயின்று சிறந்தொளிர்வது எல்லார்க்கும் வாய்ப்பதோர் வாய்ப்பாகாது. கல்வியின் மீது அடங்கா ஆவல் கொண்ட நம் அடிகளா ரைப்போன்ற சிலரே அங்ஙனம் சிறந் தொளிர இயலுமென்பது ஈண்டுக் குறிப்பிட வேண்டியுள்ளது.

தமிழ் வளர்க்கும் தண்ணளி.

'அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவுப் பணியே தெய்வப்பணி. அறிவும், சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அறிவே சிவமாவது ஆரும் அறிகிலார், அறிவே சிவமாவது யாரும்அறிந்த பின், அறிவே சிவமாய் அமர்ந்திருப்பாரே, எனத் திருமந்திரப்பாவினைச் சிறிது மாற்றிய பாட்டு, இவைகளைக் கூறி அடிகளார், சமயம் வாய்த்த போதெல்லாம் வற்புறுத்துவது உண்டு. இந்த அறிவைப் பெறக் கல்வியே துணை. எனவே மக்களிடையிலே கல்வியறிவினை மிகுதியாகப் பரப்புதல். வேண்டுமென்பதைச் சிறந்த குறிக்கோள்களுள் ஒன்றாகக் கொண்டவர் நம் அடிகளார். தமக்குக் கல்வியறிவு வாய்த்த தெங்ஙனமோ, அங்ஙனமே பிறர்க்கும் வாய்க்க வேண்டு மென்ற பேரவா அடிகளாரிடம் காணப்பட்டது வாய்ப்பினை உண்டாக்கிக் கொடுப்பது, கற்றவர் கடமை; கற்றவர்க்குக் கல்வியறிவாற்றல்களிற் சிறந்தவராகிய செல்வர்களின் ஆதரவும் வேண்டும். இவை, சுவாமிகளின் உள்ளத்திலே கிளர்ந்தெழுந்த எண்ணங்கள்.

இத்தகைய எண்ணங்களில் மூழ்கிக் காலங் கருதியிருந்த நம் சுவாமிகளுக்கு 1900 ஆம் ஆண்டு தக்க வாய்ப்பு ஒன்று கிடைத்தது. பாலவநத்தம் ஜமீன் தாரரான. பாண்டித்துரைத் தேவரவர்கள் சென்னை சென்று மீளுங்கால், திருப்பாதிரிப்புலியூரைத் தரிசிக்க வந்தார். ஆலய தரிசனத்தோடு, அறிவாற்றல்கள் நிறைந்த சுவாமிகளையும் தரிசிக்க விரும்பி மடாலயமும் வந்தார். சுவாமிகளிடம் அளவளாவினார். அன்று மாலை, சுவாமிகள் தேவரவர்களைத் தலைமை தாங்கச் செய்து, தமிழின் தற்கால நிலை என்ற பொருள் பற்றி அரியதோர் சொற் பொழிவு நிகழ்த்தினார்கள். சுவாமிகளின் சொல்லமுதைச் செவிமாந்திய தேவரவர்கள் மிக மகிழ்ந்தார்கள். சுவாமிகள் தம் உரையில், ஜமீன்தாரவர்களும், மற்றைய செல்வர்களும் தமிழைத் தழைப்பிக்க வேண்டும்; முச்சங்கம் இருந்து தமிழ் வளர்த்த மதுரையம் பதியிலே தமிழின் வளர்ச்சிக்கு ஒரு சங்கமுமில்லாத நிலை வந்தது ஏன்? பிற நாட்டு மொழியும், பிற நாட்டு நாகரிகமும் நம்மிடையே பரவி வருவதாலன்றோ?: அவை, மக்களுடைய தெய்வீக உணர்ச்சி, தொண்டு மனப்பான்மை முதலியவற்றைத் தலையெடுக்காமற் செய்து விடுவனவன்றோ? உண்மையில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமேல், ஆங்காங்கே சங்கங்கள் தோன்ற வேண்டும்; மதுரையம்பதியில் ஓர் சங்கத்தினை நிறுவி வளர்க்கும் பொறுப்பினைத் தேவரவர்கள் முன்னின்று ஏற்க வேண்டும் என வற்புறுத்தினார்கள்.

சுவாமிகளுடைய பேச்சுத்திறனில் ஈடுபட்டு மனத்தைப் பறிக்கொடுத்திருந்த தேவரவர்கள், தன் முடிவுரையில் சுவாமிகளுடைய கருத்துக்கு மக்கள் ஆதரவு இன்றியமையாத தென்று கூறித் தாம், தம் சகோதரராகிய பாஸ்கர சேதுபதியவர்களிடம் அறிவித்து மதுரையிற் சங்கம் நிறுவ முனைவதாக வாக்களித்தனர்.

அந்த ஆண்டிலேயே, பாஸ்கர சேதுபதியர்கள், திருவண்ணா மலைத் தீப தரிசனத்திற்காக வந்தார். வழியில் திருப்பாதிரிப்புலியூர் மடத்திற்கு வந்தார். பரிவாரங்களுடன் வந்தார். பரிவாரங்களுடன் வந்த அவருக்குத் திருமடாலயத்தில் வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப் பெற்றன. அன்று மாலையும் சுவாமிகள் அரிய சொற்பொழிவு ஒன்று மடாலயத்தில் ஆற்றினார்கள். அடிகளாருடைய சொற் பொழிவாற் பெரிதும் மகிழ்ச்சியுற்ற சேதுபதியவர்கள், தமிழ் வளர்க்க ஒர் கலாசாலை மதுரையில் ஏற்பட வேண்டியதன் அவசியத்தையறிவித்து, அதற் காம் பொருட் செலவிற்குத் தாமே பொறுப் பேற்பதாக வாக்களித்தார்.

24.5.1901 ல் மதுரையம் பதியில் மதுரைத் தமிழ்ச் சங்கம் என்ற பெயர் சூட்டித் தமக்குரிய மாளிகை யொன்றிலே சங்கம் நிறுவினார்கள். அதன் அங்கமாக எழுந்தது சேதுபதி கலாசாலை. மாணவர் பிரவேச பண்டிதம், பாலபண்டிதம், பண்டிதம் என்ற தேர்வுகளுக்குப் பயிற்றப் பெற்றனர். உண்டியும் உறையுளும் அவர்கட்கு இலவசமாகவே வழங்கப் பெற்றன. செந்தமிழ் என்ற மாத இதழும் அச்சங்கத்தின் சார்பில் வெளி வரலாயிற்று. இவை யாவும் அறிந்த நம் சுவாமிகள் சேதுபதியவர்களுடைய ஆதரவையும் ஊக்கத்ததையும் பாராட்டித் திருமுகம் விடுத்தார்கள். சேதுபதியவர்களின் ஊக்கத்தையும், அறச்செயலையும், தமிழ்த் தொண்டையும் யாவரிடமும் பாராட்டிக் கூறுவார்கள்.

வாணிவிலாச சபை : திருப்பாதிரிப்புலியூரைத் தலைமையி டமாகக் கொண்டுள்ள இம் மடாலயத்திற்குத் திருகோவலூரிலும், ஆரணி - திருமலை சமுத்திரத்திலும், விருத்தாசலமாம் திருமுது குன்றத்திலும் இன்றும் மடங்கள் உள. அடிகளார், பொறுப் பேற்றிருந்த தொடக்க நாளிலே அவற்றின் கட்டிட நிலை - நில வருவாய் நிலையும் மோசமடைந் திருந்தன. அவைகளை நேரிற் சென்று கவனித்துச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் சுவாமிகள் திருக் கோவலூருக்கும் ஆரணிக்கும் சென்று மீள்வார்கள். அங் கெழுந்தருளி யிருக்குங்கால் தமிழும் சைவமும் பரப்புவான் வேண்டிப் பல சொற்பொழிவுகளையும், விரும்பி வந்தோர்க்குத் தமிழ் போதித்தலையும் மேற் கொள்வார்கள் அங்ஙனமே, திருப்பாதிரிப்புலியூரிலும் தங்கியிருக்கும் காலங்களி லெல்லாம் நடைபெறும். அதற்கென ஓர் சங்கம் நிறுவ வேண்டு மென்பது சுவாமிகளின் உள்ளக் கிடக்கையாக இருந்தது.

(1903) சோபகிருது ஆண்டில், பாண்டித் துரைத்தேவரவர்கள் புலிசை மடாலயம் போந்தனர். அவர்களை வரவேற்றுப் பாராட்டிய தோடு, அவர்களைத் தலைமையேற்கச் செய்து ‘வாணிவிலாச சபை’ என்ற ஓர் சபையைத் தமது மடாலயத்தில் தொடங்கினார்கள். அதன் அங்கமாக வாரந்தோறும் சொற்பொழிவுகள் நடைபெறும். கார்த்திகை முதலான சிறப்பு நாட்களிலும் சொற்பொழிவு நடைபெறும். அந்தச் சபைக்கு அடிகளாரே தலைவர்கள். குப்புசாமி செட்டியார் என்ற ஓர் வழக்கறிஞர் செயலர். அங்கத்தினர் பலர் உண்டு. சுவாமிகள், தாமே சொற்பொழிவுகளை நிகழ்த்துவதோடல் லாமல், தம்மிடம் பயில்வோரையும் சொற்பொழி வாற்றச் செய்து, முன்னுரை முடிவுரைகளால் சிறப்பித் தருள்வார்கள்.

அடிகளாரிடம் பயின்றோர், பல திறத்தினர், செல்வர், வறியர், சிறியர், பெரியர், இல்லறத்தினர், துறவறத்தினர் சிறிது கற்றோர், கல்வியறிவற்றோர், தொழில் புரிவோர், அரசாங்க உத்தியோகம் புரிவோர், உழுதுண்போர், உழுவித் துண்போர் யாவருக்குமே மடாலயத்திற் பாடம்போதிக்கப்பெறும். பற்பலர் தமக்கு உண்டி உறையுள் பெற்றுத் தங்கியும் பயில்வதுண்டு. துறவற நெறி நின்றோரும், நிற்கச்சாதனை புரிவோருங்கூட அடிகளாரையடுத்துக் கல்வியும், உண்டி உறையுள் முதலிய பெற்றுக் கல்வியும் ஒழுக்கமும் நிரம்பப் பெற்றவராய்ப் பற்பல இடங்களுக்குஞ் சென்று தமிழ்ப் பணி, தெய்வப் பணிகளில்ஈடுபட்டவரும் உண்டு. அவருள் அறிந்தார் சிலரைப் பற்றிப் பின் காணலாம்.

ஞானியார் மாணவர் கழகம் : சுவாமிகள் திருக்கோவலூரில் தங்கியிருந்த காலங்களில் அங்கு அவர்களையடுத்துப் பயன் பெற்றோர் பலர். அவர்களுட் குறிப்பிடத்தக்கவர், ம. ரா. குமாரசாமிப் பிள்ளை யவர்களாவார்கள். திருக்கோவலூரை யடுத்துள்ள மணம் பூண்டி என்ற ஊரினார். அவர் சுவாமிகளிடம் தொழும்பு பூண்டொழுகிக் கல்வி கற்றுச் சிறந்தவர். தம் சொல்லாற்றலால் பற் பல இடங்களிற் சுவாமிகளின் பெருமையை அறிவித்தவர், திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்திற்கும் வருவார். சில காலம் அங்கேயே இருப்பதும் உண்டு. அவர் 'ஞானியார் மாணவர் கழகம்’ என்ற பெயருடன் ஓர் கழகம் நிறுவினார். சுவாமிகளிடம் கல்வி பயில்வோர் யாவருமே அக்கழகத்தில் அங்கத்தினராவர்.

திருப்பாதிரிப் புலியூரையும், அதன் சுற்றுப்புற கிராம முதலியவற்றையும் வாழ்விடமாகக் கொண்டிருந்தவர் பலரும், ம.ரா. குமாரசாமிப் பிள்ளையைப் போல் வெளியூரிலிருந்து வந்து தங்கிப் படிப்பவரும், நாள்தோறும் மாலை 6 மணிக்கு மடாலயத்தில் ஒன்று கூடுவர். 9 மணிவரை பாடம் நடைபெறும். கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் பிரபுலிங்கலீலை, மெய்கண்ட சாத்திர நூல்கள், இராமாயணம், பாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலாம் பல பல நூல்களை ஒவ்வொன்றாக முறையே சுவாமிகள் பாடம் நடத்துவார்கள்.

பாடம் நடக்குங்கால் எவரேனும் எது குறித்தேனும் சுவாமிகளையோ மாணவர்களுள் எவரையோ காண வந்தாலும் அவர்களையும் இருக்கச் செய்துவிடுவார்கள். அவர் பாடத்தில் ஈடுபட்டுச் சொல்லமுது மாந்தி நன்மை பெறுவதும் உண்டு. பாடங்களிற் சிறப்பு நிகழ்ச்சிகள் வருமெனில், அப்போது மாணவர் கழகப்பொருட் செலவில் மடாலயத்தில் எழுந்தருளும் பெருமானுக்குச் சிறப்புப் பூசனைகளும் நிகழும். சுவாமிகள் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி யிருக்குங் காலமெல்லாம் பாடம் நடைபெறுவது தடைபடாது. பாடங் கேட்போர் பலரும் சிறந்த அறிவுடையராய்த் திகழ்ந்தனர். சிலர் ஆசிரியப் பணியேற்று வாழ்க்கை நடத்தியதும் உண்டு. இன்னின்னாரென அறிந்த அளவுக்கு ஓர் பட்டியல் பிற்சேர்க்கையில் இணைக்கப் பெற்றுள்ளது.

ஆண்டு விழாக்களும் ஆன்றோர் பலர் திரளலும் :

வாணி விலாச சபை, ஞானியார் மாணவர் கழகம் இவற்றின் ஆண்டு விழாக்கள் அவ்வப்போது நிகழ்வது உண்டு. பாண்டித் துரைத் தேவரவர்கள், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள், ஜஸ்டிஸ் டி. சதாசிவ ஐயரவர்கள், என்ஜினியர் மாணிக்க நாயகரவர்கள், சதாசிவம் பிள்ளையவர்கள், சோ. வடிவேலு செட்டியாரவர்கள், பொ. முத்தையா பிள்ளை யவர்கள், ரா. பி. சேதுப் பிள்ளையவர்கள், சிவகுருநாதம் பிள்ளையவர்கள் முதலாயினர் விழாவினுக்கு வந்து சொற்பொழி வாற்றியும், விரிவுரையாற்றியும் சிறப்பித்த துண்டு. வாழ்த்துரை கூறு முகத்தான் அடிகளார் அரிய பல செய்திகளைக் கேட்டார்ப் பிணிப்புறும் வண்ணம் கூறுவார்கள். வந்தவர் உள்ளத்திற் பற்றுமாறு ஆங்காங்கு பலபல சங்கங்களையும் கழகங்கங்களையும் நிறுவித் தமிழ்ப் பணியும் தெய்வப் பணியும் செய்து சமுதாயத் தொண்டு புரியுமாறு வற்புறுத்துவார்கள்.

சுவாமிகள் தொடர்புபெற்ற அமைப்புகள் : கோவல் - மணம் பூண்டி, ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்கள் தம் கிராமத்தில், வள்ளற் பாக்கம் (காரணப்பட்டு) சமரச பஜனை, ச. மு. கந்தசாமிப் பிள்ளையைத் தலைவராயிருக்க வைத்து, அருட்சோதிநாத பக்த பால சமாஜம் என்ற பெயருடன் 20-09-1908ல் ஓர் சமாஜத்தை நிறுவினர். அதன் தொடர்பாக ஞாயிறு தோறும் சொற்பொழிவுகளும், வியாழக்கிழமை தோறும் பஜனையும் நடைபெற்றன. திருக்கோவலூர், மணம் பூண்டி அறையணி நல்லூர், கோட்ட மருதூர், நெற்குணம், கோவல் வீராட்டானம் அமையும் கீழையூர் ஆகிய பல ஊர்மக்கள் அக்கழகத்தால் தமிழ்ப் பற்றும் சைவ உணர்ச்சியும் மிக்கவராய்த் தம் பின்னோரும் நல்வழி நடக்க வழி வகுத்தது அந்தச் சமாஜம்.

1911ஆம் ஆண்டில் திருக்கோவலூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் புதிய கட்டிட வேலைகள் தொடங்கின. சுவாமிகள், தாமே நேரில் அங்கு சென்று அவைகளைச் செப்பமுறச் செய்து முடிக்கத் திருவுளங் கொண்டார்கள். அதனால் அங்கே சில காலம் தங்கினார்கள். அப்போது, ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்கள், தம் குல முன்னேற்றங் கருதி ஓர் சங்கம் அமைக்க முற்பட்டார். மலைய மன்னர், நத்தமன்னர், சுருதி மன்னர் என்னும் முப்பிரிவினை யுடையாராய் வாழ்ந்துவந்த தெய்வீக மன்னர் வமிசத்தைச் சேர்ந்தவருள் நத்த மன்னர் என்னும் பிரிவைச் சேர்ந்தவர் அவர் முப்பிரிவினரும் உடையார் என்ற பட்டப் பெயருடன் பற்பல இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். யாவர்க்கும் பொதுவாக அமையும் வகையில் பார்க்கவ குல சங்கம் என்ற பெயருடன் ஒர் சங்கத்தை 06-08-1911ல் தொடங்கினார். சுவாமிகள் தம் திருக்கடைக்கண்ணோக்கால் அவர்கள் தொடங்கி வைப்பதால் அச் சங்கம் தம் சிறுவர்க்குக் கல்வியறிவை வளர்க்கவும் நல்லொழுக்கமும் கொண்டு யாவரும் வாழ வழி காட்டவும் துணைபுரிய வேண்டுமென்றெண்ணி சுவாமிகளை மணம்பூண்டிக்கு அழைத்துச் சென்றார். ஆங்கு பற்பல வெளியிடங்களிலிமிருந்து வந்திருந்தோர்க் கெல்லாம் தக்க வசதிகள் செய்து கொடுத்திருந்ததோடன்றிப் பெரிய பந்தர் ஒன்றையும் அமைத்திருந்தார்கள், அப் பந்தலில் விழாத் தொடங்கிற்று. திருக்கோவலூர்ப் புராணத்தில் அவர்களுடைய வரலாறு கூறப்பட்டிருக்கிறது. மலைய மன்னன், ஒளவையார், கபிலர் முதலாம் சங்ககாலச் சார்புடைய ஆன்றோர் வழித் தோன்றல்களாம் அப் பார்க்கவ குல சங்கத்தினர்க்கு ஆசி பல கூறியும் பழைமை போற்றிச் சமய வளர்ப்பு முதலாயவைகளில் நாட்டம் கொண்டு சமூக சேவை புரிந்து சமுதாயத்தை மேம்படுத்த இச்சங்கம் துணைபுரிக’ என்ற பொருள் பொதிந்த நல்லுரையுடன் தொடங்கி வைத்தார்கள். -

பின்னர், அச்சங்க ஆண்டு விழாக்களுக்கு நம் சுவாமிகளையே அவர்கள் விரும்பியழைப்பாராயினர். பல பல வெளியூர்களில் நடந்த அச்சங்க ஆண்டு விழாக்களில் சுவாமிகள் தலைமை தாங்கி, அம் மரபினரே யன்றி ஆங்காங்குக் குழுமிய மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள். முடியனூர் ராவ் சாகேப் குழந்தைவேல் உடையார் கும்பகோணம் வக்கீல் – சிவஞான உடையார் முதலாயவர் சுவாமிகளை ஆங்காங்கு அழைத்துச்சென்று சிறப்பித்த பார்க்கவ குல சங்கச் செல்வராவர்.

பார்க்கவ குல சங்கத்தின் பத்தாம் ஆண்டுவிழா, கொங்கு நாட்டுச் சேந்தமங்கலத்தில் நடைபெற்றது. 1925-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த அவ்வாண்டு விழா மிக்க சிறப்புப் பெற்ற விழாவாகும். தனித்ததோர் பெரிய பந்தரில் ஸ்ரீலஸ்ரீ – சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், இராமசடகோப அய்யங்கார், மே. வே. துரைசாமி உடையார், ம. ரா. குமார சாமிப் பிள்ளை, பேரூர் ஞானப் பூங்கோதையம்மையார், பெருந்துறை - கணேச முதலியார் ஆகிய பலர் சொற்பொழி வாற்றினார்.

இராம - சடகோப அய்யங்கார், சத்தியாக்கிரகி: என்னும் பொருள்பற்றிப் பேசினார் . பிரஹலாதன் முதலாயினாரைப் பற்றிப் பேசினார். திருநாவுக்கரசர், எதிரியை வ்ணங்க வைத்தமையால் அவரே உண்மைச் சத்தியாக்கிரஹி என்று குறிப்பிட்டார். அக்கருத்துக்குக் கூட்டத்திலிருந்த ஒருவர் மறுப்புத் தெரிவித்தார். “மெய்ப்பொருள் நாயனார் சத்தியாகிரகி யல்லவா?“ என்று வினவினார். அய்யங்கார், அதனை ஏற்க மறுத்தபோது கூட்டத்தில் குழப்பம் உண்டாயிற்று. அடிகளாரோ, தம் தனித்த நாவன்மையால், மெய்ப் பொருள் நாயனார் தொண்டு முதலியவற்றை விரிவாகப் பேசி, அனைவரையும் மகிழவைத்தனர். பேரூர் ஞானப் பூங்கோதை யம்மையார், அவிநாசிப் புராணம் பற்றிப் பேசினர். அப்பேச் சின் முடிவில், “நரியைக் குதிரை“ என்று தொடங்கும் திருவாசகப் பாடலை உளமுருக்கும் வண்ணம் பாடினார். குழுமி யிருந்தாரனை வரும் ஆனந்தக் கண்ணிர் துளிர்க்க நெஞ்சம் உருகி இறைவயமாயினர்.

அந்தப் பேரவையில் கோவல், ம. ரா. குமாரசாமிப் பிள்ளை உயிர்ப்பலி, தகாத செயலாக இருக்கும்போது, தம் மரபினர் சில இடங்களில் இதற்கு ஆதரவு தருவதாகக் கூறி அதனை அறவே விட்டுவிட வேண்டுமென்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர். பலர் அதனை ஆதரித்துப் பேசினர். பின்னர் அவையினரின் முழு ஒத்துழைப்புடன் அத்தீர்மானம் நிறைவேறியது. சுவாமிகள் தம் முடிவுரையில் எழுத்தளவில் நில்லாமல், யாவரும் செயலளவில் கைக்கொள்ளுமாறு அறிவுரை கூறினார்கள். சேந்தமங்கலம் செல்லாண்டியம்மன் என்னும் பிடாரி திருவிழாவில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியிடப் பெறுதல் வழக்கமாக இருந்தது. மேற்கண்ட தீர்மானத்தையொட்டி நம் சுவாமிகள் ஆற்றிய அறிவுரையைச் செவிமடுத்த, மிட்டாதார், எஸ். ஆர் அயிராவத உடையார் அவர்கள், அவ்வாண்டு முதல் அக்கோயிலில் உயிர்ப்பலி நடவாதவாறு வகை செய்தார். அதனையறிந்த சுவாமிகள், அகமகிழ்வு கொண்டார்கள்.

முன் குறிப்பிட்ட, சேந்த மங்கலம் மாநாட்டுக்குக் கும்பகோணம் வில்வராய நல்லூரைச் சார்ந்த சா. முத்துக் குமரப்ப உடையார், சாத்தனூர் - சுப்பராய முதலியார், (இவ்விருவரும் சிறந்த நில உரிமையாளர்கள்) மாரண்டஹள்ளி மிட்டாதாரர்களான இரத்தின உடையார், ஆறுமுக உடையார் ஆகியோரும், ‘பார்க்கவ பந்து என்ற மாத இதழ் நடத்திய எம். ஆர். வேங்க டாசல உடையார் முதலிய பெருஞ் செல்வர்களும் வந்திருந்தார்கள்.

சுவாமிகளின் சொல்லமுதம், அமுதத்தினும் இனியதாய் நெஞ்சை விட்டு நீங்காதவனாய் உள்மாசு கழுவும் உயர் நீர்மையினதாய் உள்ளமையைச் சொல்லிச் சொல்லிச் சுவாமிகளைப் பிரிய மனமின்றிக் கலங்கினர். தம் நினைவுகுறியாக முழுதும் பொற்கசவமிட்ட உருத்திராக்கத் தாழ்வடம் ஒன்றினைச் சுவாமிகளுக்கு அணிவித்து நன்றி கூறி வழி விடுத்தனர்.

1929 பிப்ரவரியில், திருப் பாதிரிப் புலியூரில், ஸ்ரீமத் ஞானியார் மாணவர் கழகம் ஓர் சிறப்புவிழாக் கொண்டாடியது. அவ்விழாவினுக்கு அமைச்சர் டி. என். சிவஞானம் பிள்ளையவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். அந்த விழாவில், ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்களும் ஓர் சிறந்த சொற்சொழிவாற்றினார். அதனால் மிக மகிழ்ந்த மந்திரியார், அங்கு வந்திருந்த தீ. நா. முத்தையா செட்டியாரவர்களுடன் கலந்து, பிள்ளையவர்களுக்குச் சிறந்ததோர் பரிசு அளிக்கப் பெறல் வேண்டுமென முடிவு செய்தார். அவசரவேளைக்கு உதவுமெனச் சுவாமிகளுக்கு முன் சேந்தமங்கலத்தில் உடையார்களால் செய்வித்து அணிவிக்கப் பெற்ற முழுதும் பொன் கவசமிடப் பெற்ற தாழ்வடத்தைக் கேட்டுப் பெற்றார் முத்தையா செட்டியார். அவர் சுவாமிகள் திருக்கரத்தில் அளிக்க, அவர்களால், விழாத் தலைவர் சிவஞானம் பிள்ளையவர்களிடம் கொடுக்கப்பெற்று, ம. ரா. குமாரசாமிப் பிள்ளைக்கு அணிவிக்கப் பெற்றது. விழாத் தலைவர் பாராட்டுதலுக்குப் பின், சுவாமிகளும் தம் மாணவர் பேச்சுத் திறம் பற்றிப் பாராட்டிப் பேசி வாழ்த்துக் கூறியருளினார்கள். முதன்மை மாணவர் பெற்ற சிறப்பு அனைவரும் பெற்றாலன்ன அகமகிழ்வினை ஏனைய மாணவரும் அடைந்தனர்.

அதைவிட மதிப்பு மிக்க தாழ் வடம் ஒன்றினைச் செய்தோ, அதன் மதிப்பையோ கொடுத்து விடுகிறேன் என்றவாறு செட்டியாரவர்கள் தர இயலாத நிலை வந்ததுற்றது. சற்றேறக் குறைய முப்பத்திரண்டு சவரன் பொன்னிடப் பெற்ற அத்தாழ்வடம், ம. ரா. கு. அவர்களுக்கும் அவர் பின் வந்தோருக்குமே உரியதாயிற்று. பின்னாளில், அவரது சந்ததியார், மணலூர்ப்பேட்டை ஆலயத்திற்கு விற்று விட்டதாக அறியப்பட்டது.

திருக் கோவலூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் புதியதொரு சிறந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பெற்றது. 1912 ஆம் ஆண்டு அதற்குக் கிரகப் பிரவேசம் செய்து வைக்கப் பெற்றது. முதற் குருநாதராம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளுக்குத் திருவருள் பாலித்தருளிய கோவல் வீரட்டான ஸ்ரீ பிரஹந்நாயகி ஸ்மேத ஸ்ரீ வீரட்டேசுவரப் பெருமானுக்கு நகரத்தாரால் அமைக்கப்பெற்ற திருக்கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடந்த அந்நாளிலேயே மடாலய கிருஹப் பிரவேசமும் நிகழ்வுற்றது. அவ்விழாவின் அங்கமாகச் சைவ மாநாடொன்றும் கூட்டப் பெற்றது. அப்போது "கோவல் சைவ சித்தாந்த சமாஜம்" எனப் பெயரியதோர் கழகமும் அமைக்கப் பெற்றது. கோயிலூர் ஸ்ரீமத்-சுப்பையா சுவாமிகள், வெங்கந்தூர் திரு.கணபதி சாஸ்திரிகள், தூத்துக்குடி திரு. முத்தையா பிள்ளையவர்கள், ம.ரா. குமாரசாமி பிள்ளையவர்கள் ஆகியோர் சொற்பொழி வாற்ற ஸ்ரீலஸ்ரீ.சுவாமிகள் முன்னுரை முடிவுரைகளுடன் சிறப்பாக அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. .

இரண்டாம் நாள், ஸ்ரீமத் ஞானியார் கழகத்தின் ஆண்டு விழாவும், மூன்றாம் நாள் பார்க்கவ குல சங்கத்தின் ஆண்டு விழாவும் சிறப்புற நடந்தன.

திருப் பாதிரிப் புலியூர் மடாலயச் சீர்த்திருத்தம் : திருப்பாதிரிப் புலியூர் மடாலயத்தின் முன்புறத்தி லிருக்கும் பெரிய கூடம் சுவாமிகளால் அமைக்கப் பெற்றதேயாகும்.

அதற்குமுன், அவ்விடம் பெரிய கீற்றுக் கொட்டகையிடப் பெற்றதாய், முருகப் பெருமானது வாகனங்கள், சுவாமிகள் எழுந்தருளிப் பட்டினப் பிரவேச முதலிய கொண்டருளும் பல்லக்கு முதலியவை வைக்கப் பெற்றிருக்கும் அந்த இடம், சொற்பொழிவு, முருகனை வழிபட வருவோர் நின்றும் இருந்தும் தரிசிக்கவும், பாராயண முதலியன புரியவும் ஏற்றதாய் அமைக்கத் திருவுளம் பற்றி யருளினார்கள். அவ்வாறே அதுவும் புதுப்பிக்கப் பெற்றது. திருப் பாதிரிப் புலியூர் ஸ்ரீபிரஹந்நாயகி ஸ்மேத ஸ்ரீபாடலேச்சுரப் பெருமான் கும்பாபிஷேக நாளாகிய 28-06-1917ல் கிரகப் பிரவேசம் செய்வித்தும், கும்பாபிஷேகத்திற்கென வந்த பல அன்பர்களைக் கொண்டு சொற்பொழிவு முதலாம் நிகழ்ச்சிகளை நிகழ்த்துவித்தும், சமூகநலப் பணிகள் புரிந்தார்கள்.

திருவெண்ணெய் நல்லூர்த் தொடர்பும் சங்கமும் : திருவெண்ணெய் நல்லூரில் தோன்றியவர் திரு. வடிவேல் முதலியார் அவர்கள். கல்வி பெறுவான் வேண்டிச் சுவாமிகளை அடுத்தவர். சுவாமிகள் திருப்பாதிரிப் புலியூர் வாணி விலாச சபை நடத்திக் கொண்டிருந்த காலத்திலும் சுவாமிகளிடமே தங்கியிருந்து உணவு முதலிய பெற்றுப் புலமை சான்றவர். பின்னாளில் திருக்கோவிலூர் ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தவர். திருவருட்டுறைப் புராணம் (திருவெண்ணெய் நல்லூர் பற்றியது). வாமன புராணம், (திருக் கோவலூர் திரு விக்கிரம சுவாமி பற்றியது) முதலிய நூல்களை இயற்றியவர்; சுவாமிகளால் வேலை கிடைக்கப் பெற்று ஒரே இடத்திற் பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுற்றபின், உ.வே. சா. நூல் நிலையத்திலும் சில ஆண்டுகள் பணி புரிந்தவர். அவரது நன் முயற்சியால், திருவெண்ணெய் நல்லூர்த் தமிழ்ப் புலவர் - சுப்பிரமணிய முதலியார் தலைமையில் 'கம்பர் கலாமிர்த சங்கம்’ எனப் பெயரியதொரு சங்கத்தை நிறுவினர். அச்சங்கம், அவ்வூரை யடுத்துள்ள தடுத்தாட் கொண்டுர், சிறுமதுரை, கிராமம் என வழங்கும் திருமுண்டிச்சரம் முதலாய ஊர் மக்களுக்கு சமயப் பணிகள் ஆற்றியது. அதன் சிறப்பு விழாக்கள் சுவாமிகளின் தலைமையிலும், ஆதரவிலும் அவ்வப்போது நிகழும் . அச்சங்கம் 24-10-1909ல் தொடங்கப் பெற்றது.

இந்தச் சங்கமே யன்றி நல்லார் தொழும் வெண்ணெய் நல்லூர் என மெய்கண்ட நாதன் கூறக் காரணமாகி, அவர் உபதேசம் பெற்ற திருத்தல மாதலால் அவ்வப்போது சைவ மாநாடுகளும் சுவாமிகளின் தூண்டுதலின் பேரில் நடை பெறுவதுண்டு. 1929 ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் இருபத்து நான்காமாண்டு விழாவும் அத்தலத்தில் நடைபெற்றது. அவ்விழாவினுக்குத் திருவாவடுதுறையாதீனம் தம் பிரதிநிதியை யனுப்பிச் சில மரியாதைகளும் செய்வித்தது. அந்த விழாவின் பொறுப்பேற்று நன்கு நிறைவேற்றிய அன்பர் திரு. சின்னசாமி ரெட்டியாரவர்கள்.

சுவாமிகள் திருக்கோவலூர் எழுந்தருளும் போதெல்லாம் திருவெண்ணெய் நல்லூர் வழியே எழுந்தருள்வதும், மீண்டருள்வதுமான சமயங்களில் வாய்க்கும் போதெல்லாம் திரு வெண்ணெய் நல்லூர் மக்கள் சுவாமிகளின் சொல்ல முதங்களைப் பெறத் தவறியதில்லை.

நெல்லிக்குப்பம் - சோழவல்லி வாகீச பக்தஜன சபை : சுவாமிகளின் மாணவராய்த் தமிழறிந்தவர் பலருள், சோழவல்லி - ப. பாலசுந்தர நாயனாரும் ஒருவர். அவர், சுவாமிகளிடம் பல நூல்களைக் கற்றவர். சுவாமிகளின் அருள் மொழி கடைப்பிடித்துத் தம் ஊரில் 25-4-1910ல் வாகீசபக்தஜன சபையைத் தோற்றுவித்தார். தொடக்க விழா, ஸ்ரீலஸ்ரீ-சுவாமிகளின் தலைமையிலேயே நிகழ்வதாயிற்று. வாரந் தோறும் வழிபாடு, சொற்பொழிவுகளும், கார்த்திகை முதலான நாட்களில் சிறப்பு வழிபாடு - சொற்பொழிவுகளும், ஆண்டு தோறும் சித்திரைச் சதயமாம் அப்பர் சுவாமிகள் குருபூசை விழாவின் தொடர்பாக ஆண்டு விழாவும் சிறப்பு விழாவும் கொண்டாடும் ஆண்டு விழாக்களிலும், இயலும் பிற சமயங்களிலும் சுவாமிகள் ஆங்குச்சென்று தலைமை யேற்றும் சொற்பொழிவுகளாற்றியும் சிறப்பிப்பது உண்டு. இதனால், நெல்லிக்குப்பம், கீழ்ப்பட்டாம் பாக்கம், மேல் பட்டாம் பாக்கம், காரமணிக்குப்பம் முதலாய பல ஊரினர் நலம் பல பெற்றனர்.

புதுவையும் சுவாமிகளும் : புதுவை, பங்காரு பத்தரென்பா ரொருவர். அடிகளாரிடம் சிறந்த அன்பு பூண்டு ஒழுகியவர். அவர் சுவாமிகளை அழைத்துச் சென்று, அவர்கள் தலைமையில் விரோதிகிருது (1911 ஆம் , ஆண்டில் புதுவையில் சித்திரைத் திங்கள் முதல் நாளிலே, கலைமகள் கழகம் எனப் பெயரியதோர் கழகத்தைத் தொடங்கினர். அந்தக் கழகம் பெரியதொரு அமைப்பாகத் திகழ்வதாயிற்று. அக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதியார், வ.வே. சுப்பிரமணிய அய்யர் முதலியோருங்கூட அங்கத்தவராயிருந்தனர். அந்தக் கலைமகள் கழகத்தின் அங்கத்தவர்கள் சிறந்த நாட்டுப் பற்றும் கொண்டு- தொண்டுகள் பல புரிந்தமைக்குச் சுவாமிகளின் தூண்டுகோல் பெரிதும் காரணமாயிற்று. அக் கழகத்தின் சார்பில், 1913ல் கலைமகள் என்ற மாத இதழ் தொடங்கினர். அதன் முகல் இதழுக்குச் சுவாமிகள் ஆசியருளி எழுதியிருந்த திருமுகம் மிக்க சிறப்புப் பொந்திய தொன்றதாகும். அந்தக் கலைமகள் இதழே இன்றும் சென்னை யிலிருந்து வெளிவருவது.

தமிழ் மொழிப் பற்றும், சமயப் பற்றும் கொண்டு ஒழுகும் அன்பர் யாவரேயாயினும், அவர் பால் சுவாமிகள் காட்டும் பரிவு தனிச் சிறப்புடையதேயாகும். புதுவை நிகழ்ச்சி மட்டுமே இங்குக் குறிப்பிடப் பெறுகிறது.

புதுவையில், ரோமன் கத்தோலிக்க - கிருஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சின்னையா - ஞானப்பிரகாச முதலியார். அவர் மத வேறுபாடற்றவர். பிற மதங்களை வெறுக்காதவர். வடலூர் இராமலிங்கர் அருட் பாக்களில் ஈடுபாடும் கொண்டவர். சைவ சமயத்திலேயுள்ள கொள்கைகள் பலவற்றை ஆதரிப்பவர். அவர் இத்தகையாரென்பதை அறிந்த நம் சுவாமிகள், கலைமகள் கழகத்திற்குச் சென்றிருந்த காலையிலும், அவர், விரும்பியழைத்த தன்பேரில் ‘மங்களவாசம்' என்னும் அவர் மாளிகைக்கு எழுந்தருளினார்கள். அங்கு முதலியார் மிகவும் விரும்பியதால், சீதா கல்யாணம் என்ற தலைப்பில் அரியதோர் சொற்பொழிவாற்றினார்.

அந்நாளில், சென்னை சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் தலைவராக அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் இருந்தார். அவர், சுவாமிகள் கிருஸ்தவர் இருப்பிடம் சென்ற நிகழ்ச்சியைக் கண்டித்துச் சமாஜத் தலைவராய பதவி வேண்டாமென எழுதிக் கொடுத்து விட்டார்.

மாணவர்கள், இச்செய்தியை அடிகளார்க்கு அறிவித்தனர். அவர்களோ, "என்னே அறியாமை பிற மதத்தை இகழாமலும், தம்மதத்தில் திண்மையான பற்றுங்கொண்டிருப்பதன்றோ ஒவ்வொருவர் கடமையுமாகும்." என்று குறிப்பிட்டருளினார்கள். அதற்கு ஆதாரமாகச் சாக்கிய நாயனார் புராணத்தில்

          ‘எந்நிலையில் நின்றாலும் எவ்வேடங் கொண்டாலும்
          மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருளன்றே"
          என்னும் பகுதியை எடுத்துக் காட்டினார்கள்.
          அதன் பின்னரே நல்லசாமிப் பிள்ளை தலைவராயினார்.

புதுவையிற் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் இருபத்திரண்டாம் ஆண்டு விழா சிறப்புற நடைபெற்ற காலத்திலும் சுவாமிகள் எழுந்தருளித் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்கள். அக்காலை, கிரந்தே. சிவசங்கர செட்டியார், பூரணாங்குப்பம் முனிசாமிப் பிள்ளை முதலிய அன்பர்கள் தக்க உதவிகள் செய்து சமாஜக் கூட்டம் சிறப்புற நடத்தி வைத்தார்கள். அது 1927 டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்ததாகும்.

புதுச்சேரி அம்பலத்தாடும் சுவாமிகள் மடாலயத்திற்கு 1927 டிசம்பர் மாதத்தில் எழுந்தருளி, ஸ்ரீ அம்பலவரையும் அவரால் எழுதப்பெற்ற திருவாசக ஏடுகளையும் தரிசித்து அக்காலை மடத்தின் அதிபராக எழுந்தருளியிருந்த சுவாமிகளோடு அளவளாவி மகிழ்ந்தருளியதும் உண்டு. அம்மடத்தில் செய்யத்தக்க சில சீர்திருத்தங்களையும் அருளினார்கள்.

புதுவைக் கலைமகள் கழக ஆண்டு விழாக்கள் பலமுறை நடைபெற்றதுண்டு. அவ்வப்போது, சுவாமிகள் எழுந்தருளித் தலைமை யேற்று விழாவினைச் சிறப்பிப்பதும், விரும்பியழைக்கும் பல இடங்களுக்கும், சபைகளுக்கும் எழுந்தருளிச் சிறப்பிப்பதும் உண்டு.

புதுவையில் செந்தமிழ்ப் பிரகாச சபை என்ற ஓர் சபையும் நடைபெற்றது. அது பழநிசாமி முதலியார், முருகசாமிப்பிள்ளை முதலாம் அன்பர்களின் ஆதரவு பெற்றது. அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அச்சபை விழாக்களுக்கும் சுவாமிகள் எழுந்தருள்வது உண்டு.

புதுவைச் செங்குந்த அன்பர்கள், சுவாமிகளின் சொல்லமுதை மாந்திப் பெரு மகிழ்வெய்தினர். அவர்களது தொண்டு சிறக்கத் தாமும் பற்பல சங்கங்களில் ஈடுபட்டனர். யாவரையும் சிறந்த மொழிப் பற்று - சமயப் பற்றுகளில் ஈடுபடுத்தவும் செய்தனர். தமது நன்றியறிதலைச் சுவாமிகள் பால் எங்ஙனம் செலுத்துவதென ஆராய்ந்தனர். சுவாமிகளின் உபாசனா மூர்த்தியாக உடன் எழுந்தருளும் ஸ்ரீ வல்லி தேவசேனா சமேத சுப்பிரமணிய மூர்த்திக்கு ஒரு வெள்ளித் திருவாசிகை செய்து அளித்தனர். அஃது இன்றும் திருமடாலயத்தில் பயன்படுத்தப் பெற்று வருகிறது. -

காஞ்சீபுரத்துடன் தொடர்பு : காஞ்சீபுரத்தில் இன்றும் வசித்து வரும் திரு. சிவஸ்வாமி தேசிகரவர்கள், சுவாமிகளின் சீடர்களுள் ஒருவர். தமிழ் - வட மொழிகளைச் சுவாமிகளிடம் பயின்றவர். பற்பல சீடர்கள் அவருக்கு உளர். அவருடைய வேண்டுகோளுக் கிணங்கிச் சுவாமிகள் அவ்வப்போது காஞ்சிபுரத்துக் கெழுந்தருள்வதும் உண்டு. சிவஸ்வாமி தேசிகரது நன்முயற்சி காரணமாக ஞானியார் சங்கம் என்ற பெயருடன் ஒர் சங்கம் தோற்றுவிக்கப் பெற்றது. அச்சங்கத்தின் விழாக்கள் பலவற்றிலும் சுவாமிகள் பங்குபற்றியதுண்டு. ஸ்ரீ ஏகாம்பரேசுவரர் விழாக்காலங்களிலும், கந்தகோட்டப் பெருமான் விழாக் காலங்களிலும், பிற ஆலய விழாக்களிலும் சமயச் சொற்பொழிவுகளுக்காகச் சுவாமிகள் பலமுறை எழுந்தருள்வது உண்டு.

காஞ்சிபுரத்து அன்பர்பலர் சுவாமிகளிடம்சிறந்த ஈடுபாடு கொண்டவர்கள். கடலூர் துறைமுக நகரில் ‘சன்மார்க்க சபை’ ஒன்று உளது. அஃது வடலூர் இராமலிங்க சுவாமிகளால் அமைக்கப்பெற்றது. அச்சபை விழாக்களிலும் நம் அடிகளார் தலைமை யேற்றருளிச் சிறப்பித்த துண்டு.

கரையேறவிட்ட குப்பம் என்ற வண்டிப்பாளையத்தில் அந்நாளில் ‘பால பக்த ஜன சபை’ என்ற ஒரு சபை நடைபெற்று வந்தது. அன்பராயினார் பலருடைய வேண்டு கோளுக்கிணங்கி நம் சுவாமிகள் பலமுறை அங்கு சென்று அருளுரைகள் நிகழ்த்தியது உண்டு.

திருப்பாதிரிப்புலியூரில் 'சரஸ்வதி விலாச சபை' என்னும் ஒரு சபையும் நடந்தது. அச்சபையும் சுவாமிகளது அரிய தலைமை, சொற்பெருக்குகளைப் பயன்படுத்திச் சிறந்ததுண்டு.

உத்தரமேரூர்ச் சைவ சித்தாந்த சபை, செங்கற் பட்டு ‘சமயாபிவிருத்தி சங்கம்,' காவித்தண்டலம் ‘சைவ சித்தாந்த சபை,' தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபை, கோவல் தமிழ்ச்சங்கம், கண்டாச்சிபுரம் தமிழ்ச்சங்கம் முதலியனவும் பிறவும் சுவாமிகளது தலைமையில் விழாக்களைக் கொண்டாடியதுண்டு. திரிசிரபுரச் ‘சைவ சித்தாந்த சபை’ சுவாமிகள் ஆங்கெழுந்தருளுங் காலங்களி லெல்லாம் அவர்களருளுரை வழங்க வழி வகுத்துக் கொண்டது. -

ஆரணியில் சுவாமிகளின் அரும் பணிகள் : வடாற்காடு மாவட்டத்திலுள்ள ஆரணியில், இம் மடாலயத்திற்குச் சொந்தமானதோர் கோயில் உள்ளது. அது, ஸ்ரீ வல்லி தேவசேனா சமேதராக, மயில்மீதிவர் முருகன், ஆறு திருமுருக மண்டலங்களும் பன்னிரு திருக் கரங்களும் கொண்டு காட்சி நல்கி அடியவர்க்கருள் பாலிக்கும் திருத்தலமாகும். அந்தக் கோயில் நம் மடாலய முதற் குரு நாதரின் நேர்ச் சீடராகிய அருணாசல சுவாமிகள் என்பரால் இரண்டாங் குருநாதருக்காக வாங்கப் பெற்றதும், தானமாகப் பெற்றதுமான இடத்தில் இம் மடாலய இரண்டாங் குருநாதரால் பிரதிட்டை செய்யப்பெற்ற திருவுருவ வழிபாட்டுக்குரிய இடமாகும். கலி 4900 ஆம் ஆண்டாகிய சித்தார்த்தி, ஆடி 20-ஆம் நாளில், சென்னைப் பெரிய பணம் 1610-க்குக் காவல் நல்ல தம்பி நாயக்கர், தென்னவராய நாயக்கர் ஆம் இருவரிடமும் பாதி இடம் வாங்கியும், அவர்கள் தானமாக அளித்த ஏனைப்பாதியையும் இடமாகக் கொண்டும் அமைந்துள்ள திருக்கோயில் அந்தச் சுற்று வட்டாரத்திலுள்ளோர், அந்தத் திருக்கோயிலிடம் நீங்காப் பற்றுடையவர். முருகப்பெருமான் கண்கண்ட தெய்வமாவர். ஆரணி, சுற்றுப்புற மக்கள் ஆண்டுதோறும் பற்பல விழாக்களைத் தாமே மனமுவந்து ஏற்றுச் செய்கிறார்கள். வாரந்தோறும் வார வழிபாடு, ஞாயிறுதோறும் பொதுப்படையாகவும், மங்கையர்கரசியார் வார வழிபாடு வெள்ளிக்கிழமைதோறும் பெண்களாலும் சிறப்புற நடை பெறுவதும் அவ்வூரவரது தெய்வ பக்திக்கும், சிறப்பாக அக்கோயிலிடங் கொண்டுள்ள முருகனிடம் கொண்டுள்ள பற்றுக்கும் சான்றுகளாம். கடந்த எட்டாண்டுகளுக்கு முன் சில திருப்பணிகளை நிறைவேற்றி 31.5.1964-ல் சிறப்பான முறையில் அக்கோயிலுக்குக் குடமுழுக்கு விழாவினை நிறைவேற்றிய பெருமைஅன்பர்களையே சாரும். -

அத்தகைய ஆரணியில் திருக்கோயிலையடுத்து, ஓர் திருமடத்தைத் தனியே நிறுவ நம் சுவாமிகள் திருவுளம் பற்றினார்கள். 1927-28-ல் சில மாதங்கள் அங்கேயே எழுந்தருளியிருந்து, தம் நேர்ப் பார்வையிலேயே வேலைகளை முடித்து 1929-ல் அறநிலையம் புகுவிழாவும் செய்து மகிழ்ந்தார்கள்.

அந்த நாட்களில்தான், அவ்வூரில் வாழ்ந்திருந்தவரான திரு. முத்து சு.மாணிக்கவாசக முதலியாரவர்கள் (இந்நாளில் காஞ்சித் தொண்டைமண்டல ஆதீனத் தலைவர்களான - ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்), திரு. க. வச்சிரவேல் முதலியார் ஆகியோர் சுவாமிகளிடம் சித்தாந்த பாடம் பயின்று திகழ்பவர்கள். பலர் பாடம் கேட்டார்களெனினும், தெளிந்த சித்தாந்த அறிவு பெற்று யாவராலும் புகழத்தக்க நிலையில் இன்றும் உள்ள பெரியார்களாம் அவ்விருவரையும் பற்றி மட்டும் குறிப்பிடலாயிற்று.

நம் ஐந்தாம் குருநாதர் பட்ட மேற்பதற்கு முன், இரு குருமார்கள், தக்க கவனம் செலுத்தாக் குறையால் ஆரணி கோயில், சத்திரம், இவற்றின் தொடர்புகள் இம் மடாலயத்திற்கு இல்லையாகும் என்ற நிலை வந்துற்றது. நம் குருநாதர், அறச்சார்பிற் குரியதாய் ஆன்றோர்களால் அமைக்கப் பெற்ற நிலையங்களும், அவற்றிற்கென நியமிக்கப் பெற்ற சொத்துகளும் பிறர் வயப்பட ஒரு போதும் சகியாதவர்கள். எனவே, ஆரணி தொடர்பான சொத்துக்களின் பேரில் வழக்கிடவும் பின் வாங்கினார்களல்லர். வேலூர் நீதி மன்றத்தில் வழக்கெழுந்தது. வக்கீலாக வேலூர் தென்னை மரத்துத் தெருவில் பெயர்பெற்று விளங்கிய திரு. இராசவேல் முதலியாரவர்களை யமர்த்தினார்கள்.

முன் ஆரணி முருகன் கோயிலில் பூசனை புரிந்து கொண்டிருந்த சிவாசாரியர், அந்தக் கோயில் தனக்கே உரியதென்றார். பற்பல தலைமுறைகளாகத்தம்முன்னோர்களும் உரிமை கொண்டேயிருந்தார்கள். ஆதலால் முறைப்படி தனக்கே அஃது உரியதாகும் என்பது வழக்கு. யாவும் விசாரித்து முடியும் நிலையில் நம் சுவாமிகளது தெய்வத் திருவுள்ளத்தில் எழுந்தது ஒர் எண்ணம்; ஆங்கு எழுந்தருளும் திருவுருவம் முருகப்பெருமானே என்றாலும், அவருடைய முடியில் சிவலிங்கக் குறியும் இருக்கிறது. இத்தகைய திருவுருவங்களே இம் மடாலயத்தைச் சேர்ந்த இடங்களில் விளங்குபவை. ஆகவே, இது வீரசைவராம் எமக்கே உரியது; பூசனை புரியும் ஆதி சைவர் அவருடைய முன்னோர் வழக்கப்படி பூசிப்பவரே; அவருடைய முன்னோர் எம் முன்னோராகிய மடாலய குருமூர்த்திகளால் நியமிக்கப் பெற்றவரே எனத் தெள்ளத் தெளியச் செய்திகளை முறைப்படுத்தி வக்கீலுக்கு அறிவித்தார்கள். அவரும் அம்முறையினைப் பின்பற்றி வாதாடி இறைவன் திருவுருவங்களில் சிவலிங்கக் குறியும் அமைந்திருக்கும் சிறப்பினைக் காட்டி வெற்றிக்கு வழி தேடினார்கள். பிறகு வழக்குவென்றது. கோயிலும், பிற சொத்துகளும் மடாலயத்திற்கே உரிமையுடையவாயின.

ஆரணி மடாலயத்தைச்சேர்ந்த இடம் ஒன்றில் சிலர் வாரந்தோறும் சிறப்பாகப் பஜனை புரியவெனச் சிறு இடம் கேட்டபோது, சுவாமிகள் மறுக்காது ஒப்புக் கொண்டனர். பின்னர் அதனை விரிவுபடுத்திக் கட்டிக் கொண்டு தமக்கே உரிய இடம் அது என வாதிட்டனர். அது தொடர்பாகவும் வழக்கு எழுந்தது. அதற்குரிய ஆதாரங்கள் காட்டி, அவ் வழக்கிலும் வெற்றி கொண்டவர்கள் சுவாமிகளேயாவார்கள்.

திருமுது குன்ற மடாலயம் : திருமுது குன்றமாம் விருத்தாசலத்தில், ஐயனார் கோயில் தெருவில், மடாலயத்திற்குச் சொந்தமான பழைய கட்டிடம் ஒன்று உண்டு. அது, கல் மடம் என வழங்கப் பெறுகிறது. (கல்வி கற்பித்து வந்த இடமாக அமைந்திருந்து வந்ததால் கல்வி மடம் எனப் பெயர் வழங்கிப் பின் அது திரிந்து கல்மடம் என்று வழங்கி வருதல் இயல்பாகலாம்) அங்கு உள்ளே, தண்டபாணிக் கடவுளின் திருவுருவம் இருந்தது. நம் சுவாமிகள், பழுதாகியிருந்த சத்திரத்தைப் பின் கவனிக்கலாமெனக் கருதி வெளியிடத்திலே கருங்கல் கொண்டு கோயிலமைத்து எழுந்தருள்விக்கத் திருவுளங் கொண்டருளி, வேலை தொடங்கியிருந்தார்கள். சுவாமிகள் தொடங்கியிருந்த அவ்வாறே ஆறாவது சுவாமிகள் காலத்தில் அக்கோயில் முற்றுவிக்கப் பெற்றுத் திருவுருவமும் எழுந்தருள் விக்கப் பெற்றது. இப்போது, கோயில் பூசனை, இம் மடாலயத்தின் சம்பளம் பெறுபவராலேயே செய்யப் பெறுகிறது.

சிவகுன்றம் : செஞ்சி தாலுக்கா அனந்த புரத்தையடுத்துள்ள ஒரு தனி மலை சிவகுன்றம். அங்கு இம் மடாலய முதற் குருநாதர் பல ஆண்டுகள் கடுந் தவமிருந்தார்கள். மலையடி வாரத்தில் ஒன்றும், மலைமீதொன்றுமாக இரு சுனைகள் என்றும் வற்றாத நீருடன் இலங்கும் அங்கே ஒரு கற்பிளவாம் குகையில் முதற் குருநாதரால் தாபிக்கப் பெற்ற விநாயகர், முருகன், சிவலிங்கத் திருவுருவங்கள் உள. அன்பர் பலர் வாரக் கட்டளையாக ஞாயிறு, வியாழக்கிழமைகளிலும், கார்த்திகை நாட்களிலும் மலைவலம் வந்து திருவுருவங்களை வழிபடுவர். அவ்வவரும் எண்ணிய எண்ணியாங்கு எய்தப் பெறுதலால் மக்கள் மிகுதியாக வருதல் உண்டு. கார்த்திகை தோறும் விழாவும் நடைபெறும்.

அத்தகைய சிறப்புப் பொருந்திய இடத்தில் இறைவனை வழிபட வருவோர் தங்கி உணவு சமைத்து உண்ணவும், தாம் எழுந்தருளுங் காலங்களில் உபாசனாமூர்த்தியை எழுந்தருளப் பண்ணிப் பூசை முதலியவற்றிற்காகவும் இடவசதிகளுக்காகவும், நம் சுவாமிகள் 1928 ஆம் ஆண்டில் சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து இரும்பு வாயில்கள், குகையைச் சூழ மதிலமைத்து வாயிலும் வகுத்தல் முதலாகிய இன்றியமையாத திருப்பணிகளைச் செய்து மீண்டார்கள். பின் செஞ்சி எழுந்தருளிய காலத்தும் அங்கு எழுந்தருளித் தம் முதற் குருநாதர் பூசித்த திருவுருவங்களைப் பூசித்து மீண்டார்கள்.

1937 ஆம் ஆண்டில் திருக் கோவலூரில் தங்கி, ஸ்ரீமஹா குருமூர்த்திகள் ஆலயத்திற் சில திருப்பணி செய்தும், முதல் குருமூர்த்திகள் ஆலயத்தைக் கட்டி முடித்துப் பூசனை மேற்கொண் டொழுகியருந்த ஸ்ரீ அருணாசல சுவாமிகள் சமாதிகோயிலிலும், வீரட்டநாதர் ஸ்ரீ மஹா குருமூர்த்திகளுக்கு ‘திட்டானுபூதி' நூலைத்தந்து, ஒரு மொழி மகாவாக்கியம் அருளிய ஆவணிமூல நாளிலும் ஆண்டு தோறும் எழுந்தருளி விழாக் கொள்ளற் கிடமான ஆவணி மூல மண்டபத்தினைப் பழைய செங்கல் கட்டித்தை இடித்துப் புதுவதாகக் கருங்கல்லால் அமைத்துக் கட்டியும், அறையணி நல்லூரிலுள்ள மடாலயத்திற்குச்சொந்தமான பல கட்டிடங்களைச் செப்பனிட்டும் மடாலயத் திருப்பணிகளை மேற்கொண்டதும் உண்டு. அக்காலங்களில், வந்து கேட்போர் இருந்தால் பாடம் நடைபெறும். எந்த நேரம் எந்த நூலில், எவர் ஐயம் என வந்தாலும், அப்போது சுவாமிகள் எந்த வேலையிலும் ஈடுபட்டிருந்தாலும், புத்தகம் முதலியவற்றைப் பாராமலே அவ்வையங்களை யகற்றியருள்தல் அடிகளாரிடம் மட்டுமே காணப்பெற்றஒரு தனிச் சிறப்பாகும். அங்ஙனம் நிகழ்வது, திருக்கோவலூரில் மட்டுமன்றி எங்கெங்குச் சென்றாலும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

திருப்பாதிரிப்புலியூரில், இரண்டாங் குருமூர்த்திகள் முதலாகப் பரிபூரணமடைந்த குருமூர்த்திகளின் ஆலயம் உண்டு. அதனைத் திருப்பணி செய்ய வேண்டிய நிலை வந்தது பல திருப்பணி வேலைகளையும் செய்து தூபி, கோபுரங்களைப் புதுக்குவித்து 1937ல் (தாது௵ தை௴ 19௳) குடமுழுக்கு நிறைவேற்றி யருளினார்கள். அக்காலை ஞானதேசிக மாலை என்ற தோத்திரப் பாமாலை யொன்றினை இயற்றி அச்சிடுவித்து அனைவர்க்கும் வழங்கச் செய்தார்கள். (அந்நூல் பிற் சேர்க்கையாக இணைக்கப் பெற்றுள்ளது.)

தம் மடாலயத்திற்குரிய நிலங்களிலிருந்து ஒப்பந்தப் படியும், பாக்கியில்லாமலும் உணவுப் பொருள் முதலியவை தடையின்றி வருதற்காம் வகை செய்தருளினார்கள்.

இனி அவர்கள் சைவமுந் தமிழும் தழைப்பிப்பான் மேற்கொண்ட பணிகளைக் காண்போம்.

சைவம் தழைக்கச் சமரசம் காணல்

சமய எண்ணம் :

நம் அடிகளுக்குச் சமய சாத்திரம் கற்பித்தவர் அவர் தம் குருநாதராம் நான்காம் பட்டத்து அடிகள். சமய சாத்திரத்தை தமிழ் வடமொழிகள் மூலம் நன்கு அறிந்தனர். நாட்டில் தமிழகத்தில் சமய எண்ணம் குன்றி வந்ததை மனதில் நினைத்து வருந்தினர். எப்படியும் மக்கள் சமய உணர்வு பெற்று நன்னெறி சேர்தற்கு மேற் கொள்ள வேண்டிய பணி எது என நினைத்தனர். தாம் ஆங்காங்கு சென்று சமயக் சொற்பொழிவாற்றுதல்தான் தக்கது என எண்ணினர். அவ்வாறே செயல் மேற்கொண்டபோதும் மன நிறைவு இல்லை. அதனால் தாம் மட்டுமின்றிச் சமய அறிஞர் பலரும் இத்தொழிலை மேற்கொள்ளின் நல்லது எனத் திருவுளம் கொண்டு அதற்கு ஆங்காங்குக் கழகம் அமைப்பதே சிறந்தது எனக் கருதினர். அதற்குத்தக்க காலமும் பார்த்திருந்தனர்.

சமாசம் தோற்றுவித்தல் :

கி.பி.1900-ல் மடாலயத்திற்கு வந்த பாண்டித்துரைத் தேவர்கள் முன்னிலையிலே நடந்த அரியதோர் சொற்பொழிவில் தமிழின் பெருமையும், சமயச் சீர்குலைவும் பற்றி விரிவாக எடுத்துரைத் தார்கள். இப்படிப் பல பேரறிஞர்களிடம் தம் திருவுளக் கருத்தை வெளியிட்டு வந்தார்கள்.

சென்னையில் சில அறிஞர்களே சித்தாந்த நூல்களில் தேர்ச்சி பெற்றவராயிருந்தனர். தெற்கே அவற்றைப் பரப்பத் திருமடங்கள் பல இருந்தன - இருக்கின்றனவாதலால் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஓர் அமைப்பினைக் காண்டலே சிறந்த நலம் பயக்கும் எனத் துணிந்தார்கள். கடலூரில் அப்போது தென்னாற்காடு மாவட்ட முனிசிபாக இருந்தவர் திரு. J.M. நல்லசாமிப் பிள்ளையவர்கள். அவர் சுவாமிகளின் சிறந்த அறிவு நலங்கண்டு அடிக்கடி வந்து சித்தாந்தத் தொடர்பான உரையாடலில் ஈடுபடுபவர். அடிகளாரிடம் அளவளாவிய அறிவின் மேம்பாட்டால்தான் பின்னாளில் அவர் சிவஞான போதத்தை ஆங்கிலத்தில் - மொழிபெயர்த்தார், அவரிடம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட அமைப்பு ஒன்றின் வாயிலாகச் சித்தாந்த நூல்களைப் பரப்புதல் இன்றியமையாத சமயப் பணியாகுமென வற்புறுத்திக் கூறினார்கள். அவர், சென்று அன்பர் பலரிடம் கூறி, அவர்களுடைய ஆதரவையும் பெற்றார். (7-7-1905) விசுவாவசு ஆண்டு ஆனித்திங்களில், சென்னை அன்பர்களும் பிற வெளியூர் உள்ளுர் அன்பர்களும் கூடியிருந்த அவையில் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் ‘சைவ சித்தாந்த மகாசமாசம்’ என்ற பெயருடன் நிகழ்ச்சிகளுக்குத் தாமே தலைவராக இருந்து தொடங்கி வைத்தார்கள். அதற்குச் சிதம்பரம் நாவலர் பாடசாலை - சதாசிவம் பிள்ளையவர்கள் தலைவராகவும், பண்டிதர் நாகை வேதாசலம் பிள்ளை (மறைமலையடிகள்) செயலாளராகவும் அமர்த்தப் பெற்றனர். சுவாமிகள், முருகப்பெருமான் திருவருளும் மடாலய முதற் குருநாதரவர்களின் அருளும் சமாச வளர்ச்சிக்குத் துணைபுரிக’ என வாழ்த்தி மகிழ்ந்தார்கள். .

சமாசம் ஆற்றவேண்டிய பணிகள், அதில் ஈடுபட்டோருடைய உழைப்பு முதலாயவற்றை அடிகளார் விரிவாக எடுத்துக்கூறிக் கூடியிருந்தோர் யாவருக்கும் சமாசத்தினிடத்தில் பற்றும், தொண்டு உள்ளமும் எழுமாறு முடிவுரை கூறியருளினார்கள். பின்னர், சென்னையில் சில கூட்டங்களைச் சமாசம் நிகழ்த்தியது. அவை சிறப்புடன் நிகழ்ந்தமை கேட்டும், கடித முதலியவற்றின் வாயிலாக அறிந்தும், இதில் ஈடுபட்டோர் யாவரையும் வாழ்த்திக் கடிதம் எழுதி ஊக்கி வந்தார்கள்.

சமாச மாநாடுகள் :

சுவாமிகளின் ஊக்கத்தாலும் ஆசிகளாலும் சென்னையில் பற்பல இடங்களில் சைவ சித்தாந்த மகா சமாசக் கூட்டங்கள் நடைபெற்றன. மாநாடுகளுக்கென்று தனியே அஞ்சலகம் முதலியனவும் அமைக்கப்பெற்றதும் உண்டு. சார்பாளர்கள் பலர் வெளியிடங்களிலிருந்தும் வருவர். பார்வையாளர்களும் அங்ஙனம் வருவதுண்டு. சார்பாளர், பார்வையாளர், மங்கையர்களுக்குத் தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்பெறும். இவையனைத்தையும் தம் திருமடத்திருந்து கேட்டறிந்த சுவாமிகள், இவ்வழியே சமய வளர்ச்சி சிறந்தோங்கும் என்று மகிழ்ந்திருநதாாகள்.

சுவாமிகளின் ஆற்றலும், செயல் திறமை, ஊக்கம் முதலியனவும் நந்தமிழ்நாட்டெல்லை மட்டுமின்றி, மாநாட்டுக்கு வந்து மீண்ட தமிழர் வாழும் இலங்கை முதலாம் கடல் கடந்த நாடுகளிலும் நன்கு பரவின.

1911-ஆம் ஆண்டுவரை, சென்னை நகரிலேயே நடைபெற்றுக்கொண்டிருந்த சமாசக் கூட்டங்கள் 1912 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்ததாக அறியப்படுகிறது. அதற்குச் சுவாமிகள் எழுந்தருளியதாக அறியக்கூடவில்லை. காஞ்சி மணிமொழியார் (பி. செ. மாணிக்கவாசக முதலியார்) 71-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரில், அவரது வாழ்க்கை வரலாற்றின் தொடக்கத்தில் காணப்படுவது இச்செய்தி.

அடுத்த 1913-ஆம் ஆண்டில் சமாசத்தின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா வேலூரில் நடைபெற்றது. தலைவராக நம் ஞானியார் சுவாமிகளே எழுந்தருளி 'சைவம்’, ‘சித்தாந்தம்' என இரு பிரிவாக்கிக்கொண்டு, தமக்கேயுரிய சிறந்த தலைமையுரை நிகழ்த்தியருளினார்கள். இவ்வுரை கேட்டோர் இவரே சமுதாயத் தொண்டர்; "இவரே சிவம் பெருக்கும் ஞானி" என்றெல்லாம் போற்றினார்.

அச்சமாசக் கூட்டத்தில் சுவாமிகளின் உரைகளைக் கேட்ட, சித்தூர் போர்டு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் C.M.பார்த்தசாரதி முதலியார் அவர்கள் ஹிந்து பத்திரிக்கைக்குச் செய்தி அனுப்பியிருந்தார். அது 13-1-1914 இதழில் வெளிவந்தது.

அடுத்த 1914 டிசம்பரில் சைவசித்த மகா சமாஜத்தின் ஒன்பதாமாண்டு விழா கூடலூர் துறைமுக நகரில் (கடலூர் ஒ.டி.) சிறப்புற நடைபெற்றது. அங்கு தலைமையேற்று விழா நிகழ்த்தியவர்கள் நம் அடிகளாரே யென்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. A.T. முத்துக்குமாரசாமி செட்டியார் சமாச விழா நடக்க ஆதரவளித்தவராவர்.

சமாசத்தின் தளர்ச்சி :

அதன் பின்னர், சமாசம் பெயரளவில் நிலைத்திருந்ததே யன்றி முன்போல் சிறப்பாக நடைபெறவில்லை. இங்ஙனம் 10 ஆண்டுகள் கழிந்தன எனத் துணியலாம். அப்போது நல்லசிவன் பிள்ளையவர்கள் தலைவராகவும், கி. குப்புசாமி முதலியாரவர்கள் செயலாளராகவும் அமர்ந்திருந்தனர். சித்தாந்தம் இதழ் வெளிவரவில்லை. ஆண்டு தோறும், சென்னை நகரிலேயே உள்ள சொற்பொழிவாளர்களைக் கொண்டு பொருட் செலவின்றிப் பெயரளவில் மாநாடு கூடி நடந்தது.

‘பொன்னைவிட மேன்மை பொருந்திய காலம் அவமே கழிகின்றதே! மக்களிடையே சமய வளர்ச்சித் தொண்டு சிறக்க நடைபெறவில்லையே!' என்று அடிகளார் வருந்திக் கூறியமை கேட்ட அடிகளாரின் மாணவர் சிலர், நாமாவது ஒரு புதிய சங்கங்காண முயலலாமெனத் தனியேயமர்ந்து கூடிப்பேசி முடிவு செய்தனர். சுவாமிகளிடம் இச் செய்தியையறிவிக்காமலே சிலர் ஒன்று கூடித் திருவெண்ணெய் நல்லூர் சென்றனர். அப்போது அங்கு, மெய்கண்டார் மடத்தின் தலைவராக இருந்த நமசிவாயத் தம்பிரானின் ஆதரவோடு, அவர் தலைமையில் அகில இந்திய சைவ சிந்தாந்த மகா சமாசம்’ என்னும் பெயர் சூட்டி ஓர் சமாசத்தை நிறுவினர். அதில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப் பெற்றன. அவைகளை அடிகளார் செவிப்படின் மகிழ்ச்சி மிகக் கொள்வார்களென எண்ணினர் அம்மாணவர்.

திருவெண்ணெய் நல்லூர்ச் செய்திகள், செய்தித் தாள்களில் வெளிவந்தன. அடிகளார்க்கும் அறிவிக்கப் பெற்றன. அவர்கள் இச் செயலுக்கு ஆதரவளிக்கவில்லை, மாணவர்களை யழைத்து, முன்பே ஒரு சமாசம் இருக்கும் போது வேறொன்றுக்கு அவசியமில்லை. நாமே தோற்றுவித்த சங்கத்தைக் கைவிட்டு வேறொன்றைத் தோற்றுவித்து அதற்கு ஆதரவு தேடுதல் சிறப்பன்று; முன்னைய சமாசத்தின் நிலையை இச்சங்கம் அடைவதற்கு நீண்ட காலமாகாது; எனவே, புதிய சங்கத்தை வளர்க்கும் முயற்சியைக் கைவிட்டுப் பழைய சமாசத்தை வளர்ப்பதில் ஈடுபடுங்கள் என அறிவுரை கூறினார்.

மேலும், சென்னை சென்று, அங்கு அதன் வளர்ச்சிக்கு ஆக்கம் தேடுங்கள். அதற்குள், நம் நகரிலேயே வேண்டுமாயினும் ஒர் கூட்டம் நடத்திப் பிறருக்கு வழி காட்டுவோம் என்றும் அருளுரை கூறினர்.

மாணவர்களின் முயற்சியின் பயனாகச் சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாசத்தின் பத்தொன்பதாவது கூட்டத்தைத் திருப் பாதிரிப் புலியூரில் நடத்துவதெனச் சமாசம் முடிவு செய்தது. அப்போது செயலராக இருந்தவர் வழக்கறிஞர் ம. பாலசுப்பிரமணிய முதலியாரவர்கள். அவர் இளம் பருவத்தினர்; கடமைகளைச் சுறுசுறுப்போடு செய்யும் ஆர்வமும் ஆற்றலும் மிக்கவர் என்று அடிகளார் கேள்வியுற்று மகிழ்ந்தார்கள்.

1924ஆம் ஆண்டு டிசம்பரில் சமாசக் கூட்டம் திருப்பாதிரிப் புலியூரில் நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு அடிகளாரே தலைவர்.

மூன்று நாள் நடைபெற்ற அவ் விழாவிற்கு வந்தோர் யாவர்க்கும், தீ, நா. முத்தைய செட்டியார்வர்கள் உணவளிக்கும் பொறுப்பினை ஏற்றார். சொ.தீ. நாகப்ப செட்டியாரவர்கள் சமாசக்கூட்டம் நடத்தப் பாடசாலை இடத்தைக் கொடுத்தது மன்றி 200 ரூபாயும் அளித்தார்.

விதிகளில் வளைவுகள், தோரணங்கள், பந்தல்கள் முதலிய பொறுப்புகளையெல்லாம், சேர்மன் வேணுகோபால் நாயுடு, மானேசர் ஐயாசாமி பிள்ளை ஆகியோர் அமைத்துத் தந்தனர். பல அன்பர்கள் பொருளுதவி, உடலுதவிகளைச் செய்தனர்.

‘சித்தாந்தம்' இதழை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டுமென வற்புறுத்தியபோது, பலர் அதன் உறுப்பினர் காப்பாளர்களாகக் கையொப்ப மிட்டனர். விழாவின் வரவேற்புக் கழகத்தவர்களும் முந்நூறு வெண் பொற்காசுகள் அளிப்பதாக உறுதி கூறினர்.

சுவாமிகளின் அயரா உழைப்பையும், சமாச வளர்ச்சிக்காக அவர்கள் மேற்கொண்ட செயல்களையும் பாராட்டிய வரவேற்புக் கழகத்தினர் முழுதும் பொற் கவசமிடப் பெற்ற பெளண்டன் பேனா ஒன்றினை அவர்கட்கு நினைவுக் குறியாக அளித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

வரவேற்புக் குழுவினருக்குச் சுவாமிகள் நன்றி கூறி யருளினார்கள்.

பொறுமைக்கோர் எடுத்துக்காட்டு :

இது முன்னாள் செயலர் கி. குப்புச்சாமி முதலியாருக்குப் பிடிக்கவில்லை. தன்னையன்றி நன்றியறிவிக்கச் சுவாமிகளுக்கு என்ன உரிமையிருக்கிறது? சமாசச் செயலரைக் கேட்காமல் செய்த இச்செயல் கண்டிக்கத்தக்கதாகும் என்றெல்லாம் பலரிடமும் கூறி, அன்றிரவு உணவு கொள்ள மறுத்துவிட்டார்.

மறுநாட் காலை, குப்புச்சாமி முதலியார் செய்கையை டாக்டர் - பாலவேலாயுதம் பிள்ளையவர்கள் சுவாமிகளிடம் விண்ணப்பித்துக் கொண்டார். அப்போது புகைப்படமெடுக்கும் பொருட்டு யாவரும் திரண்டிருந்தனர். குப்புச்சாமி முதலியாரும் அங்கிருந்தார். சுவாமிகள் போதிய காலமில்லாமையால் இச்செய்தி அறிவிக்கப்பெறாமல் போயிற்றென்றும், சமாசத்தின் முன்னேற்றங் கருதியே இவ்வாறு செய்யப்பெற்றதென்றும் எடுத்துக் கூறியும் முதலியார் தம் சீற்றத்தையே காட்டிக் கொண்டு பேசினார். அடிகளார் உடனே உள்ளே சென்று, ஓர் கடிதத்தை எடுத்துக் கொண்டுவந்து அனைவருக்கும் காட்டினர். அது பதினோரு ஆண்டுகட்கு முன் அடிகளாரின் திருமுகத்திற்கு விடையாகக் குப்புச்சாமி முதலியாரால் எழுதப் பெற்றதாகும். அதில் அவர், தன்னை உயர்த்தியும், அடிகளாரைத் தாழ்த்தியும் சில எழுதியிருந்தார். "கைதவமறியாச் செய்தவமுடையயோய் ! நினாது கடிதங்கண்டாம்." எனத்தொடங்கியிருந்தார். இச்செயல் அங்கிருந்தோ ரனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மீண்டும் சித்தாந்தம் :

1927-ஆம் ஆண்டில் சுவாமிகள் முதல் முறையாகச் சென்னைக்கு எழுந்தருளினார்கள். இப்போது பிராட்வே டாக்கீசு என்னும் இடம் அப்போது பாலசு தியேட்டர் என்ற பெயருடன் வழங்கிவந்தது. அங்கு சமாசத்தின் சிறப்புக் கூட்டம் ஒன்று 1927 சூலையில் அடிகளார் தலைமையில் நடந்தது. அது ஒரு மாநாடு போலவே நடந்தது. அக்காலை நீதிபதி சர். வே. பா. இராமேசம், பா. வே. மாணிக்க நாயக்கர், திரு. வி. கலியாண சுந்தர முதலியார் முதலாய பேரறிஞர் சொற்பொழிவாற்றினர்.

அக்கூட்டத்தில் சித்தாந்தம் இதழை மீண்டும் நடத்துவதென முடிவு செய்யப்பெற்றது. அடிகளாரே அவ்வாறு முடிவு செய்யக் காரணர்களாயிருந்தார்கள். தொடங்கும் முதல் இதழுக்காம் பொருட் செலவினைத் தாமே அளிப்பதாக உறுதிகூறி, அவ்வாறே பொருளும் அளித்தனர். அடுத்த 1928-ஆம் ஆண்டு சனவரியில் சித்தாந்தம் தொடங்கப் பெற்றது. அடிகளாரின் அருளாசியும், பொருளாசியும், கைவண்ணமும் இன்றளவும் அவ்விதழ் தொடர்ந்து நடைபெறக் காரணமாயின. வாழ்க அவர்களது கைவண்ணம் !

அக்கூட்டத்தினிறுதியில் நீதிபதி இராமேசம் அவர்கள் அடிகளாரைப் பெரிதும் பாராட்டிப் போற்றினார்கள். அதன் பின் பற்பலர் அழைப்பிற்கிணங்கிப் பல இடங்களில் அருளுரையாற்றி அன்பர் மனங்களில் நீங்கா இடம் பெற்றுப் பிரியா விடை கொண்டு புலிசை மீளத் தொடங்கினார்கள். சென்னை அன்பர்கள் தம் நன்றியறிதலை அறிவிக்குமுகத்தான். கோகலே மண்டபத்தில் ஒர் பொதுக்கூட்டம் கூட்டினர். நகர மக்கள் சார்பில் சர். A. இராமசாமி முதலியார் சுவாமிகளின் அரிய தொண்டுகளைப் பாராட்டி ஆங்கிலத்தில் xஓர் சொற் பொழிவாற்றினர். பிரிவு உபசாரப் பத்திரம் ஒன்றும் வாசித் தளிக்கப்பெற்றது.

புலிசையடைந்தவுடன் அடுத்து வரும் டிசம்பரில் தம் முயற்சியாலேயே சமாச ஆண்டுவிழாவை நடத்துவதெனத் திருவுளம்பற்றினர். புதுச்சேரியில் விழாவை நடத்துவதற்குப் பூரணாங் குப்பம் முனிசாமி முதலியாரும், கிரந்தே-சிவசங்கர செட்டியாரும் முன்வந்தனர். அங்ஙனமே அவ்விழா அடிகளாரின் தலைமையில் மூன்று நாள் நடைபெற்றது. 'சித்தாந்தம்’ இதழுக்குப் பல அன்பர்கள் ஆதரவளித்தார்கள். 1927 டிசம்பரில் நடைபெற்ற சமாசத்தின் இருபத்திரண்டாம் ஆண்டு விழா இதுவாகும்.

சைவப் பெரியார் மாநாடு :

1929-ஆம் ஆண்டு, சைவ சித்தாந்த மகா சமாசத்திற்குப் புத்துயிரளித்த ஆண்டாகும். மே மாதத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் சைவப் பெரியார் மாநாடு’ கூட்டப்பெற்றது. உயர்திரு மறைமலையடிகள் அக்கூட்டத்திற்குத் தலைமைதாங்கினார். செந்தமிழ் நாட்டிலுள்ள சைவ சபைகள் அத்தனையும் அந்த மாநாட்டிற்குத் தத்தம் பிரதிநிதிகளை அனுப்பிவைத்தன. பேரறிஞர் பலரும் திருப்பாதிரிப்புலியூரில் ஒருங்கு கூடினர். சைவ சமயத்தின் அடிப்படையான கொள்கைகள், செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்கள், அதன் வளர்ச்சிக்கேற்ற வழி வகைகள் ஆகிய எல்லாம் தனித்தனியே ஆராய்ந்து முடிவு செய்யப் பெற்றன. தமிழ்நாட்டில் இன்று, சைவம் வீறு கொண்டு தம் கடமைகளைச் செய்கிறதென்றால் அதற்கெல்லாம் வழி வகுத்துக் கொடுத்தது அம் மாநாடேயாகும்.

மாநாட்டின் முடிவைச் சமாசம் செயற்படுத்தியது :

சமாச வெளியீடாகப் பன்னிரு திருமுறைகள், சாத்திர நூல்கள், அருணகிரியார் திருப்புகழ் முதலிய நூல்கள் திருமுறுகாற்றுப்படை பெரியபுராணம் தோன்றக் காரணமாக இருந்த சீவக சிந்தாமணி முதலிய நூல்கள் வெளி வந்தன. யாவும் அடக்கவிலைப் பதிப்புகளே.

அம்மாநாட்டில் ‘சைவப் பஞ்சாங்கம்' வெளியிட்ட டாக்டர் இ. மு. சுப்பிரமணிய பிள்ளையவர்களுக்கு ரூபாய் நூறு பரிசளிக்கப் பெற்றது.

திருவெண்ணெய் நல்லூரில் :

1929 டிசம்பரில், சைவ சித்தாந்த மகா சமாஜம் திருவெண்ணெய் நல்லூரில், நல்லார் தொழும் வெண்ணெய் நல்லூர்ச் சிவாலயமாம் திருவருட்டுறையில் நடைபெற்றது. நம் சுவாமிகளே தலைவர்களாக இருந்து மூன்று நாள் விழாவினைச் சிறப்பாக நடத்தினார்கள். ஆங்கு, சமாச விழா நடை பெறுவதையறிந்த திருவாடுதுறை ஆதீனத் தலைவர்கள் தம் பிரதிநிதியை யனுப்பியதோடன்றித் தலைவர்களுக்குச் சில மரியாதைகளையும் அனுப்பி வைத்தார்கள். அச் சமாக விழாவின் பொறுப்புகளை யேற்றவர், திருவெண்ணெய் நல்லூர்ச் சின்னசாமி ரெட்டியாரவர்கள். அஃது, சமாச இருபத்து நான்காம் ஆண்டுவிழா வாகும்.

திருப்பாதிரிப் புலியூரில் 'சைவப் பெரியார் மாநாடு' நடந்து முடிந்தபின், சுவாமிகளுக்குப் புற முதுகில் பிளவை அரும்பிச் சில மாதம் படுத்த படுக்கையிலிருந்து, இருமுறை அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் ஒருவாறு நலம் பெற்றனர். அங்ஙனம் நலமுற்ற சில நாட்களுக்குள்ளேயே தம் தொண்டுகளில் முனையத் தொடங்கி விட்டார்கள். ஆம்பூர், வாழைப் பந்தல் ஆம் வடாற்காடு மாவட்டத்தில் சில நாள் அன்பர்களுக்குச் சொல்லமுதம் வழங்கி மகிழ்வித்தார்கள். ஆம்பூரில் இருபத்திரண்டு நாட்கள் எழுந்தருளி யிருந்தார்கள். அதன் பின், திருவெண்ணெய் நல்லூர்ச் சமாச விழாத் தலைமை யேற்றருளினார்கள். சைவ அன்பர் பலர் அப்போது சுவாமிகளின் உடல் நலமுங் கருதாத தொண்டினைப் போற்றினார்கள்.

பிறவிடங்களில் சமாசம் :

1934 ஆம் ஆண்டில், சமாசத்தின் இருபத்தொன்பதாம் ஆண்டு நிறைவு விழா மூன்று நாள் திருவதிகையில் நடைபெற்றது. அப்பேரவையின் சிறப்புச் சொற்பொழிவினை மட்டுமே சுவாமிகள் ஏற்றுக் கொண்டார்கள் தலைவர் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள்.

தாமே தலைவராக இருக்க வேண்டுமென்ற கொள்கை கொள்ளாமல், பிறருக்கும், அவ்வாய்ப்பினை யுண்டாக்கித் தருவதோடு, தாமும் விழா முழுதுக்கும் அங்கெழுந்தருளிச் சிறப்பித்தும், ஆசி வழங்கியருள்வதும் யாவருமே எளிதில் மேற்கொள்ளாத சிறப்பியல்புகளாம் என்பதை ஈண்டுக் குறிப்பிட வேண்டியுள்ளது.

1934 ஆகஸ்டு மாதத்தில் மயிலாப்பூர் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் விசேட மாநாடு ஒன்று நடைபெற்றது. அதற்கு அடிகளாரே தலைமை தாங்கியருளினார்கள்.

1937 ஆம் ஆண்டு டிசம்பரில், சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் ஆண்டு விழா வேலூரில் நடைபெற்றது. அது முப்பத்திரண்டாம் ஆண்டு விழாவாகும். அவ்விழாவினைச் சுவாமிகளே தலைமை யேற்று நடத்தியருள வேண்டுமென்று அங்கத்தினர்கள் முடிவு செய்தார்கள். அவ்வண்ணமே நிகழ்ந்தது. ஆயின், அக்காலை சுவாமிகளின் உடல் நலம் கெட்டிருந்தது. எனினும், அவர்கள் இறைவன் பணியாகக் கருதி ஏற்றக்கொண்ட பணியை அவ் விறைவன் திருவருளே முன்னின்று முற்றுவிக்கு மெனக் கருதி எவரிடமும் வெளிப்படுத்தாமல் இருந்து, சொன்மாரியால் சைவப் பயிரைத் தழைப்பித்துக் கொண்டிருந்தார்கள். எனினும், அவர்களுக்கு உடம்பு பிடித்துவிடும் பணியில் ஈடுபட்ட அன்பர்கள், உடல் கொதிப்படைந்திருப்பதறிந்து பதறிச் சுவாமிகளைக் கேட்ட போது, அவர்கள் 'எல்லாம் முருகன் திருவருள், நம் கையில் ஏதுமில்லை; பணியை ஏற்றுக் கொண்டபோது அவனே நம் உள்ளத்திலிருந்து அதனை ஏற்றுக் கொள்ளச் செய்தான்; இனி முடித்து வைப்பதும் வைக்காததும் அவன் திருவருள் வயத்தால் மட்டுமே இயலும் : நாம் எடுத்துக் கொண்ட பணியை முடிக்கவே வந்தோம். அதனை இயற்றுங்கால், உயிர் நீங்கினும் மகிழ்ச்சியே. கவலை கொள்ள வேண்டாம் என விடையிறுத்தனர். இரவில் சுரம் 1030 அளவிற்குக் கூடுவதும், பகலில் குறைவதுமாக இருந்தது. மூன்று நாளளவும் சுவாமிகள் தலைமை தாங்கி மாநாட்டைச் சிறப்பித்தருளினார்கள்.

சுவாமிகளால் எழுதப்பெற்ற சைவ ஒழுக்கம் என்னும் சிறு நூல் ஒன்று அச்சிடப் பெற்றுக் கூட்டத்தினர்க்கு வழங்கப் பெற்றது. அது யாவர்க்கும் பெரும் பயன் விளைவிக்கும் சிறு நூலாகும்.

சைவ சித்தாந்த மகா சமாசததின் முப்பத்தைந்தாம் ஆண்டுவிழா 1940 ஆண்டில் மயிலத்தில் நடத்துவதென முடிவாயிற்று. மயிலம், பொம்மபுர ஆதீனத்தின் பதினெட்டாம் பட்டமேற்று எழுந்தருளியிருந்த ஸ்ரீலஸ்ரீ - சிவஞான பாலய சுவாமிகள் தம் மடாலயத்தின் சொந்தப் பொறுப்பில் அதனை நடத்தித்தர முன் வந்தார்கள். ஞானியார் சுவாமிகள் தலைமை யேற்றருள்வார்களென்றே யாவரும் நம்பியிருந்தனர். ஆயின், அவர்கள் உடல் நலம் இடந்தரவில்லையாதலால் திருக்கோவலூரிலேயே தங்கியிருந்தார்கள்.

சமாஜத்தின் முப்பத்தாறாம் ஆண்டு விழாவினைத் திரிசிரபுரத்தில் நடத்துவதென அன்பர்கள் முடிவு செய்தனர். திருக்கோவலூரில் தங்கியிருந்த சுவாமிகளைத் தலைமை யேற்குமாறு வற்புறுத்தி வேண்டினர். ‘அன்பர் பணியே இறைவன் பணி' அதுவே இன்பப் பணி எனவே தம்வாழ்வில் ஏற்றிருந்த சுவாமிகளும் திருவுள்ளக் கருத்து இசைவினைத் தெரிவித்தார்கள். சிலநாள் முன்னதாகவே செல்லும் இயல்பு கொண்டவர்களாதலால் அங்ஙனமே வழிக்கொண்டார்கள். பெண்ணாகடத்தில் அன்பர்கள் வேண்டிக் கொள்ளச் சொன்மாரி பொழிந்தார்கள். திரிசிரபுரம் சென்றடைந்தபோது அன்பர் பலர் எதிர்கொண்டழைத்தனர். அவருள் குறிப்பிடத் தக்கவர்கள். திருச்சி நாஷனல் கல்லூரியில் தமிழ்ப் பணி புரிந்து கொண்டிருந்த திரு. ப. கந்தசாமி அய்யர் (பின் ஆறாம் பட்டத்தில் எழுந்தருளியிருந்தவர்கள்), டி. எம். நாராயண சாமிப் பிள்ளையவர்கள், க. அரங்கசாமி முதலியாரவர்கள், அ. நடேச முதலியாரவர்கள் முதலியோார்.

1941 டிசம்பர் 25-ஆம் நாள் தொடங்கி, மூன்று நாட்கள் திரிசிரபுர ஆண்டு விழா செவ்வனே நடைபெற்றது.

அதுவே சுவாமிகள் சமாசத்திற்குச் செய்த பணிகளுள் இறுதிப் பணியாம்.

பற்பல இடங்களில் கிளைக் கழகங்களை நிறுவச் செய்து அவை தாய்ச் சங்கத்தோடு தொடர்புகொண்டு பற்பல பணிகளையும் மேற்கொள்ளுமாறு தூண்டினார்கள்.

செயலாளராக அமர்ந்து பற்பலவிதங்களிலும் சமாசம் அரும் பணிகளையாற்ற வழி வகுத்தவர்களான திரு. ம. பால சுப்பிரமணிய முதலியார் B.A., B.L., அவர்களைச் சமாசம் ஒரு நாளும் மறக்க இயலாது. அவர்களுக்குப் பல விதங்களிலும் ஆலோசனைகளைச் சுவாமிகள் அருளிச் செய்ய, அவர்களும் சிறந்த பணிகளை மேற்கொண்டு சமாச வளர்ச்சிக்கும் அதன் வாயிலாகத் தமிழ்நாட்டில் சைவ நன்னெறிக்கும் அருந்தொண்டு புரிந்தார்கள்.

சமாசச் செயலாளராகச் சிலகாலம் தொண்டுபுரிந்தவரே யெனினும் குறிப்பிடத்தக்க பல வழிகளை வகுத்து உதவியவர், திரு. கா. இராமநாதன் செட்டியாரவர்கள், அவர் ராஜாசர். அண்ணாமலைச் செட்டியாரவர்களுடன் அயல் நாடுகளும் சென்று மீண்டவர், அவரும் சமாசத்தின் ஒரு தூணாக விளங்கியவர்.

சைவ சித்தாந்த மகா சமாசம் பின்னர் ஞானியாரடிகள் நினைவு நிதி திரட்டி, ஞானியாரடிகள் நினைவு மலர் (சொற்பொழிவுத் தொகுப்பு ஒன்றினைச் சமாச வெளியீடாக 1958-ஆம் ஆண்டில் மயிலத்தில் நடந்த சமாச ஆண்டு விழாவில் வெளியிட்டது)

இதுவரை சுவாமிகள் சைவ சமயம் கடைத்தேறும் வண்ணம் ஆற்றிய பல தொண்டுகளுள் ஒன்றாய சமாசத் தொண்டு பற்றி மட்டுமே கூறப்பெற்றது. பிற நிறுவனங்களோடு கொண்ட தொடர்பு பின்னர் கூறப்பெறும்.

கல்விப் பணிகள் :

கால வேறுபாட்டால்; அரசியல் வேறுபாட்டால் கலக்கம்கொள்ளாமல் உள்ளது போதுமென்ற மன நிறைவுடன் இறைவனுக்குப் பூசனை புரியப் பிறந்த பேறே பெரிதென மதித்து, ஆன்மார்த்த பூசையாம் இட்டலிங்க பூசையும், பரார்த்த பூசையாம் சிவன்கோயிற் பூசையும் ஏற்றுச்சைவத் தோடு ஒன்றிய வீரசைவப் பயிரைத்தழைப்பித்துக் கொண்டு வாழ்ந்திருந்தோர் தமிழக வீரசைவர்கள். தம்மையடைந்த சிறுவர்க்குக் கல்வியறிவு ஒழுக்கங்களையும் போதித்தவர்கள். அவர்களுள் சிற்நதவராகிய நம் சுவாமிகள் சிறந்த சோமநாத ஆராத்திரியர் வழிவந்த ஞானியார் சுவாமிகள் மடாலயத் தலைமை யேற்றருளியதால் சிறியோரும் பெரியோரும் கல்வியறி வொழுக்கங்களின் மேம்பட்டு விளங்கத் தொண்டு புரியவே, தமக்கு இப்பெரும் பொறுப்பு வாய்த்ததென்ற கருத்தினைப் பெற்றவர்கள். அவர்களது கல்வித் தொண்டால் தான் இன்று நாம், தமிழர் என்ற தலைநிமிர்ந்து நிற்கிறோம் எனில் அது புனைந்துரை யன்று.

அக்கால தமிழின் நிலை :

படிப்பு என்றால், உத்தியோகத்துக்குப் படிப்பதே யென்பதும், ஏதோ சில வகுப்புகள் வரை படித்து உத்தியோகம் பெற்றவர், மேலும் படிக்கத் தேவையில்லை யென்பதும் அயல் மொழியாளர் ஆட்சியால் நாம் அடைந்த தவறான கொள்கை. இந்த நிலையில் தாய் தமிழைப் புறக்கணிப்பாரே மல்கியிருந்தனர். அதூஉம் தமிழராய்ப் பிறந்தாரே, எனக்குத் தமிழில் பேச வராது; ஆங்கிலத்தில் வேண்டுமானால் சொற்பெருக் காற்றுகிறேன் என்று கூறும் நிலை இருந்தது. சிலர், அப்படிப் பேசுவதே தம் பெருமைக்கு ஓர் அளவு கோலெனக் கருதும் நிலை இருந்தது.

தமிழைக் கற்றால் பயன் ஒன்றும் கிடையாதாதலால், எப்பாடு பட்டேனும் அயலார் கல்வி படிப்பதற்கே தம் பிள்ளைகளை யனுப்பினர் பெற்றோர். அப்பள்ளியிலோ பொருட் செலவு மிகுதியும் உண்டு. திண்ணைப் பள்ளிகள் சில ஒருவாறு கல்வியளித்தன எனினும் அவை போற்றுவாரின்மையாலும் போதனை முறை பயின்று போதிப்பவர் ஆங்கில்லையாதலால் அரசினர் ஆதரவு பொறாமையாலும் அருகிவிட்டன. இந்த நிலைதான் இந்த நூற்றாண்டின் தொடக்க நிலை. அந்தோ தமிழின் நிலை இதுவா? எத்தனை அருமையான நூல்கள் உள்ளன. அவையன்றோ உள்ளத்தை வளர்ப்பன அவற்றைக் கற்றவரல்லரோ, தமக்கென வாழாப் பிறர்க்கென முயலுநர் என்றெல்லாம் சுவாமிகள் உளமுருக எண்ணுவார்கள். தம் அரிய சொற் பெருக்குகளில் சொல்லவும் சொல்வார்கள். சொல்லுங்கால், கேட்போர் தமிழினிடம் பற்றற்றவராய் இருப்பாரே யெனினும் அவர்க்கும் சிறிதளவும் மனதில் தாக்கா வண்ணம் கூறுவார்கள். அவர்களது உள்ளமே தமிழ் மூச்சே தமிழ் தண்ணளியே தமிழ் ஆம்! பிறமொழிகள் சிலவற்றைச் சுவைத்தறிந்த பின் கொண்ட திடமான உள்ளத்தில் ஊறிய தமிழ்! 'இருந்தமிழே உன்னால் இருந்தேன்’ என்ற ஆன்றோர் வாக்கு அவர்களுக்கே பொருந்துவதாகும்.

அப்போதெல்லாம், தமிழ்க் கல்லூரி கிடையாது. திருவையாற்றிலே வடமொழிக் கல்லூரி இருந்தது. பல்கலைக் கழகத்தாரின் கீழ்க்கலைப் பட்டத் தேர்வுக்கு வடமொழி பயில்வோர் அங்குப் பயிற்றப் பெற்றனர். சுவாமிகள் தென்னாட்டுத் தல யாத்திரை செய்தபோது அவர்களது வட மொழியாற்றல் குறித்து வியந்து மகிழ்ந்த அக் கல்லூரித் தலைவரும், ஆசிரியர்களும் சுவாமிகளுக்கு வடமொழியிலேயே ஓர் பாராட்டிதழ் கொடுத்துச் சிறப்புறச் செய்தது முண்டு.

வடமொழிக் கல்லூரி தமிழுக்கும் ஆயிற்று :

தமிழ் நாட்டு மன்னவன் செய்த அறக்கட்டளை தமிழுக்கென அமைக்கப் பெற்றிருக்கக் கூடாதோ? ஆம், அதனை ஆராய வேண்டுமென்ற கருத்து அவர்கள் உள்ளத்தில் முகிழ்ந்தது. யாத்திரையின் போது, சுவாமிகளுக்கு அன்பராயினர் பலர். அவ்வவரும் சுவாமிகளின் நாவன்மை, தவத்திருக் கோலம், வசீகரிக்கும் திறன் முதலிய வற்றில் மனத்தைப் பறிக்கொடுத்தவர்கள். அவர்களுள் தஞ்சைக் கருந்தட்டாங்குடியில் வாழ்ந்த வழக்கறிஞர் த. வே. உமா மகேசுவரம் பிள்ளை, B.A., B.L.அவர்களும் ஒருவர். அவர் பின்னர்தஞ்சை மாவட்டக் கழக (Thanjavur Dt. Board)த் துணைத் தலைவராகி யிருந்தார். அவ்வடமொழிக் கல்லூரி, அக்கழக ஆட்சிக்குட்பட்டதாயிருந்தது த.வே. உமாமகேசுவரம் பிள்ளையைத் தம் மடாலயத்திற் கழைத்து, அக் கல்லூரி நடைபெறுவதற்கு அளிக்கப் பெற்ற மானிய முதலியவற்றிற்கென எழுந்த அறக் கட்டளையைப் பரிசோதிக்குமாறு ஆலோசனை கூறினார்கள். அவர், தலைவராக இருந்த சர் AT. பன்னீர் செல்வம், Bar-at-law வுடன் கலந்து பழைய செப்புப் பட்டயத்தைப் பரிசோதித்துப் படியெடுத்துக் கொண்டு தலைவருடன் மடாலயத்திற்கு வந்தார். சுவாமிகள் அவ்விருவருக்கும் தக்க உபசாரம் புரிந்து அளவளாவினார்கள். தமிழுக்கு அந்த அறக் கட்டளை உதவி செய்யத் தடை ஏதுமில்லாதவாறு, பொதுவாகக் கல்விக்கே என எழுதப் பெற்றிருந்தது. எனவே, அக் கல்லூரியில் தமிழும் பயிற்றுவிக்க வழிசெய்வது தமிழராம் நமது கடன் என அவர்களுக்கு அறிவுறுத்தி விடையளித்தார்கள். அவர்கள் தஞ்சை சென்று அடுத்த ஆண்டிலேயே அக் கல்லூரியில் தமிழ் பயில்வதற்கெனப் பத்து மாணவர்க்கு இடம் ஒதுக்கினார்கள். படிப்படியே பாதி தமிழ்க்கல்வி பயிலும் மாணவரும் பாதி வடமொழிக் கல்வி பயில் வோருமாக மாற்றப்பெற்றது. வடமொழிக் கல்லூரி என இருந்த அது அரசுக் கல்லூரி எனப் பெயரும் மாற்றப் பெற்றது. திரு. த. வே. உமா மகேசுவரம் பிள்ளையர்கள் தமிழ் மொழிக் கல்விக்கு ஆக்கந்தேடித் தந்ததும், அவரது நன் முயற்சியால் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நல்ல பணிகளைப்புரிவதும் சுவாமிகளுக்கு மிக்க மகிழ்ச் சியளித்தன. அதனால் தமக்கு அறுபானாண்டு நிறைவு விழா நடைபெற்ற பேரவையில் 1933ல் அவருக்குச் செந்தமிழ் புரவலர் என்ற சீரிய பட்டத்தினை அளித்துச் சிறப்பித்தார்கள்.

கரந்தைப் புலவர் கல்லூரி :

முன் கூறப்பெற்ற த.வே. உமா மகேசுவரம் பிள்ளையவர்கள், தமிழ்ப் பற்று மிக்கவர். அவர் தன் முயற்சியால் கரந்தைத் தமிழ்ச் சங்கம் 1911ல் சாதாரண வைகாசி மாதத்தில் தோற்றுவித்தவர். அதனைப் பல முயற்சிகளுடன் திறம்பட நடத்தியவர். அத்தமிழ்ச் சங்கத்தின் ஏழாம், எட்டாம் ஆண்டு விழாக்களுக்குச் சுவாமிகளே தலைமை தாங்கியுள்ளார்கள். அவ் விழா சித்தார்த்தி ஆண்டு வைகாசித் திங்கள் 11௳ நடைபெற்றது. அத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் கல்லூரி ஒன்றினையும் தொடங்க வேண்டுமென நம் சுவாமிகள் அவர்களை ஊக்கினார்கள். அங்ஙனமே அச்சங்கத்தின் ஆதரவில், அச்சங்கம் வெள்ளிவிழாக் கொண்டாடிய 1938, ஏப்ரலில் புலவர் கல்லூரி ஒன்று அடிகளாரின் திருக் கரங்களாலேயே தொடங்கி வைக்கப் பெற்றது. அது காலை சங்கத்தின் தலைவராம் அவருக்குத் தமிழவேள் என்ற பட்டத்தினையும், அச்சங்கப் புலவராம் திரு. வேங்கடாசலம் பிள்ளையாவர்கட்குக் கவியரசு என்ற பட்டத்தையும் அருளிச் சிறப்பித்தார்கள்.

முன், த.வே.உ. பிள்ளையவர்களுக்குச் செந்தமிழ்ப்புரவலர் என்ற பட்டமளிக்கப் பெற்றதன்றோ? இப்போது, தமிழவேள் என்ற பட்டமும் சேர்ந்தது. அவரது இறுதி நாள் வரை இப்பட்டங்களை இணைத்தே அவரைக் குறிப்பிட்டது தமிழுலகம்,

கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவிற் கெழுந்தருளித் தலைமை தாங்கி நடத்தி அரிய பெரிய கருத்துக்களைத் தெள்ளத் தெளிய விரித்துரைத்து யாவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்குமாறு செய்தருளிய நம் சுவாமிகளுக்கு அத் தமிழ்ச் சங்கம், கனமற்றதும், உறுதியுடையதும், வசதி மிக்கதுமான ஓர் மேனாவினைச் செய்தளித்தது. அம்மேனா (சிவிகை) இன்றும் மடாலயத்தில் உள்ளது.

தமிழ்க் கல்லூரிகளுக்கு வழி காட்டல் :

தாம் தொடர்புகொண்டு தம் நேர்ப்பார்வையில் 1917 முதல் தொடங்கி நடத்தப் பெற்ற ஸ்ரீ பாடலேச்சுரர் தரும பாடசாலையிற் பயின்ற பிள்ளைகள், அந்நாளைய மெட்ரிக்குலேஷன் பயின்ற பின்னர் கல்லூரியாக்கி அதனில் தமிழ்க் கல்வி கற்பிக்கத்தக்க வகை காணல் சுவாமிகளது குறிக்கோளாக இருந்தது. சில காரணங்களால் அப்பள்ளி மூடப் பெற்றது. அதனால் வருத்தமிக்க கொண்ட சுவாமிகள், 1933ல் தமக்கு அறுபானாண்டு நிறைவு விழா நடந்த போது ஓர் கல்லூரி அமைக்கவெனத் தம் சொந்தப் பொறுப்பில் பதினாயிர ரூபாய் ஒதுக்கினார்கள். கல்லூரிப் புகுமுகத் தேர்வுக்குப் படிக்க விழைந்தார் சிலரை மாணவராக அமர்த்திப் புகுமுக வகுப்பும் தொடங்கி விட்டார்கள். முன்னதாக (Advance)ச் சில வகுப்புகளில் தனித்தமிழை வளம்பெறக் கற்றவர்தான் சிறந்த தமிழறிவு நிரம்பியவராய் மலரக் கூடுமாதலால் முதல் வகுப்பு முதல் 5 வகுப்புகள் தொடங்கப் பெற்றன. தம் மாணவருள் வீரசைவராய், அடுத்திருந்த வண்டிப்பாளையத்தை உறை விடமாகக் கொண்டவராய்ச் சிறந்த கல்வியறிவாற்றல்களும் ஒழுக்கமும் நிரம்பியவராய்ப் பயிற்சித் திறம் படைத்தவராய் விளங்கிய ம. உருத்திரசாமி ஐயரவர்களையே தலைமையாசிரியராக அமர்த் தினார்கள். திரு. முத்து இராசாக் கண்ணனார், திரு. பெரியத் தம்பிப் பிள்ளை, திரு. திருநாவுக்கரசு, திரு. மு. பழநி வேல், திரு. க. பா. வேல்முருகன் ஆகியவர் துணையாசிரியர்களாகப் பணி புரிந்தார்கள்.

மயிலம் - பொம்மபுர ஆதீனம் 18ஆம் பட்டத்துச் சிவஞான பாலயசுவாமிகள் தாம் பட்டமேற்ற காலத்திலிருந்து எண்ணி வந்த எண்ணத்தை - தமிழ்க் கல்லூரி நிறுவ வேண்டும் என்ற திருவுளத்தை ஞானியார் கலாசாலை தூண்டியது. அதன் விளைவாக அவர்கள் ஸ்ரீமத் சிவஞான பால்ய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியை 14-7-1938 ல் தோற்றுவித்தார்கள்.

அவர்களைப் பின்பற்றிப் பிற திருமடங்களும் தமிழ்க் கல்லூரிகளைத் தோற்றுவித்தன.

தாமே பாடம் படிப்பித்தல் :

அந்நாள் தொடங்கியே சுவாமிகள் தனியே தமிழ் கற்க விரும்புவோரனைவர்க்கும் தாமே நேரிற் பயிற்சியளித்துக் கல்லூரிகளுக்கனுப்புவதை மேற்கொண்டிருந்தனர். அவர்களது அறுபானாண்டு நிறைவு விழாவிற்குப்பின் அமைக்கப் பெற்ற ஞானியார் கலாசாலையிற் பயின்றவர் மிகப் பலர். அவர்களெல்லாம். இன்று ஆசிரியப் பணி பூண்டு சிறக்க வாழ்கின்றனர்.

தம் மாணவர் கற்றறிந்து புலவர் பட்டத்தேர்வில் தேர்ச்சி பெற்றாரென்றவுடன், தம்மிடம் பேரன்பு பூண்ட தகைமையாளர் எவரேனும் மடாலயத்திற்கு வருவரேல் அவர்களது ஆளுகைக்குக் கீழ்ப்பட்ட பள்ளிகளில் அவர்களையமர்த்துமாறு கூறி அவர்களைச் சிறக்க வாழவைத்தவர்கள் நம் அடிகளார். உடல் நலம் குன்றிய காரணத்தால் படுத்த படுக்கையாக இருந்த காலங்களிலும் தம்மன்பர் வர, அவர்கள்பால் தம் மாணவரைச் சுட்டிப் பயன் தருமாறு கூறிக் கருணை பாலித்த நிகழ்ச்சிகளும் உள. வேலை கிடைக்குமளவும் அத்தகையார்பால் இருந்து அவர்களது சில தகைமையான வேலைகளில் இருக்கச் செய்யவும், பின்னர் வேலையில் அமர்த்துமாறும் சில மாணவரையனுப்பிய நிகழ்ச்சிகளும் உள. ஆகவே, சுவாமிகள் செய்த அருஞ்செயல் களால் எத்துணையோ மாணவர் நலம் பெற்றார்களென்பதை இங்குக் குறிப்பிடாமலிருக்க இயலவில்லை.

ஞானியார் மாணவர் கழகத்தின் வாயிலாகப் பற்பல தமிழ் நூல்கள் பாடமாக நடத்தப்பெற்றன. அக்காலங்களில் குரு தரிசனம் குறித்தோ வேறு காரணம் பற்றியோ வரும் அன்பர்களும் தமிழ் நூல்களிற் பற்றுக்கொண்டு நூல்களைப் பயிலக் கருத்துக் கொள்ளவைத்த நிகழ்ச்சிகளும் உள. இன்னுமொரு நிகழ்ச்சியும் காண்போம்.

சமயம் வாய்த்தபோது தம் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்த ஸ்ரீபாடலேச்சுரர் தரும பாடசாலையில் ஒருவரை ஆசிரியராக நியமித்து, அவர் தொல்லையின்றி உணவு முதலிய பெற வாய்ப்பளித்தார்கள். அவரைப் போன்ற திருப்பாதிரிப் புலியூரினரான ஒரு அந்தணப் பிள்ளையும் பயில வந்தார். அவர்க்கும் அப்பள்ளியிலேயே நியமனமும் கிடைத்தது. இருவரும் குறிப்பிட்ட நேரங்களில் சுவாமிகளிடம் தனியே பயின்றனர். பின்னாளில் முன்னவர் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னவர் கடலூர் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியர்களாக நியமனம் பெற்றுச் சிறந்தார்கள்.

முன்னவர் திரு. க. ர. துரைசாமி அய்யர், பின்னவர் திரு. சங்கர அய்யர்.

ஏசடியார் என்பார் ஒருவர். அவர் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர். சுவாமிகளின் எளிவந்த தன்மை முதலியவற்றால் அவர்களையடைந்தார். நன்கு படித்தார். பின்னாளில் நெல்லிக் குப்பம் டேனிஷ் மிஷன் உயர் தொடக்கப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அவர் சைவர் போலவே தோற்றமளிப்பவராவர்.

திருப்பாதிரிப்புலியூரில் தீ. சொ. கிருஷ்ணப்ப செட்டியாரது பொருளுதவியினால் தேவார பாடசாலை நடந்து கொண்டிருந்தது. தேவார ஆசிரியராகத் திரு. மு. நடராஜ தேசிகரவர்கள் அமர்த்தப் பெற்றார்கள். அவர் சுவாமிகளிடம் நிரம்பிய அன்புகொண்டு, நாள்தோறும் மாலை நடைபெறும் பாடங்கட்கும் சுவாமிகள் ஆற்றும் சொற்பொழிவுகளுக்கும் வருவார். அவ்ர் தமிழ் பயில அவாமிக்குடையராய்ச் சுவாமிகளிடம் விண்ணப்பித்தபோது, அவருக்கும் தனியே பாடங் கற்பித்தார்கள். அவர் வித்துவான் தேர்வில் தேர்ந்து சிறந்தார். பின்னாளில் தேவார பாடசாலை நிறுத்தப்பட்டுவிட்டதால், அவர் திருவிடைமருதூரில் தேவார ஆசிரியராக இறுதிவரை பணியாற்றினார்.

நம் அடிகளாரிடம் பாடம் பயின்றோர் எண்ணிலடங்கார். சாத்தாத ஸ்ரீவைணவ குலத்து அம்மையார் ஒருவரும், கடலூர் கிறித்தவக் கன்னிமார் சிலரும் பாடம் பயின்றுள்ளார்கள்.

இராவ் பகதூர் திரு. இராசாபாதர் முதலியார் அவர்களின் அருமை மகளார் திருமதி. க. ர. ஆதிலட்சுமி அம்மையார் அவர்களும், அவர் தம் கணவனார் திரு. கே. அரங்கசாமி முதலியார் (Deputy Inspector of Local Boards) அவர்களும்பிறரும் பயின்றுள்ளார்கள்.

குடும்பமே அடிகளாருடன் தொடர்புகொண்டு பயின்றோரும் உண்டு. திருப்பாதிரிப்புலியூர் டாக்டர் பாப்பையா என்ற இராமலிங்கம் செட்டியார் அவர்கள் அவருள் ஒருவர். அவர் தம் மக்கள் திரு. சக்கரபாணி, திரு. வேல் முருகன் ஆகியோர் குழந்தைப் பருவத்திலிருந்தே அடிகளிடம் தொண்டு செய்து கல்வி பயின்றவர்கள். காஞ்சிபுரம் சிவசாமி தேசிகர் போன்றோரும் பலர்.

அடிகள் வீர சைவராயினும் சாதி சமய பேதம் இன்றியாவர்க்கும் கல்வி பயிற்றியதோடு யாவரையும் தொண்டராகவும் கொண்டிருந்த பெருமை அக்காலத்தில் அவரையே சாரும்.

பாடலேசுவரர் தரும பாடசாலை :

கி.பி. 1917-ல் உயர்திரு. தீ. சொ. நாகப்ப செட்டியார் என்பவரைக் கொண்டு பாடலேசுவரர் தரும பாடசாலை என்னும் பெயரால் ஒரு பள்ளியை நிறுவினார்கள்.

அப்பாடசாலை வளர்ந்தது. முதலில் அதன் ஆசிரியர் வண்டிப்பாளையம் திரு. ம. உருத்திரசாமி அய்யரவர்கள். பின் மாணவர் பலர் சேர்ந்தனர். படிப்பு இலவசம். சட்டை முதலியன அணிந்து கொண்டுதான் பள்ளிக்கு வர வேண்டு மென்ற கட்டுப்பாடு கிடையாது. ஒரே துண்டு மட்டுமே, அதுவும் குசேல ஆடையாக அணிந்து கொண்ட வந்து படித்த மாணவரும் இருந்தனர். காரணம் என்ன ? அப்பள்ளி வறியர்க்காகவே எழுந்ததாகும். மிக மிக வறியவர்களும் தம் பிள்ளைகளை ஆங்கனுப்பிப் படிக்கவைத்தனர். சுவாமிகள் முதன் முதலில் மாணவர்களுக்குப் பாட புத்தகங்களை இலவசமாகவேவழங்கினார்கள். பின்னர் மாணவர் பல்கினர். வகுப்புகளும் பலவாயின. ஆசிரியர் சிலரும் துணைக்கென அமர்த்தப் பெற்றனர்.

சுவாமிகள் அப்பள்ளியின் முன்னேற்றத்திற் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள். தம் மடாலயத்தின் முன் கூடம், பின் கட்டு, பிள்ளையார் முன்வெளியிடம் ஆம் இடங்களிலும் வகுப்புகள் நடைபெற்றதுண்டு. இயிைடையே சில வாடகை யிடங்களிலும் இடங்களிலும் நடந்ததுண்டு. அதை நடத்தத் தகுந்த இடம் பெறுமளவும் அங்ஙனம் நடந்தது. பெருமுயற்சியுடன் மடாலயத்திற்கெதிரிலேயே இடம் அமைக்கப் பெற்றபின், ஆங்குக் கொட்டகையமைத்துப் பள்ளியை நடத்தினார்கள். மடாலயத்திற்குச் சொந்தமான இடத்தையும் பள்ளிக்கென விட்டார்கள், சுவாமிகள் தம் மடாலயத்தருகிலேயே அப்பள்ளி நடைபெற்றதாதலால், சுவாமிகள் அவ்வப்போது நேரிற்சென்று மாணவர்களைப் பரிசோதித்தலும், ஆசிரியர்கள் தக்கவாறு பயிற்சி தருகிறார்களா என்பதையும் கவனிப்பார்கள். நாள்தோறும் ஆறு மணி நேரம் பள்ளி நடைபெறும். காலை 9 மணி முதல் 12 மணி வரை பிற்பகல் 2 முதல் 5 மணிவரை பள்ளி நடைபெறும்.

பாடசாலையை அரசியலார் அங்கீகாரத்திற் குள்ளாக்க வேண்டுமெனச் சுவாமிகள் ஏற்பாடு செய்தார்கள். அதனையறிந்த வேறொரு கிருத்துவப் பள்ளியின் தலைமையாசிரியர் ஒப்புதல் அளிக்கக் கூடாதென முன்னின்றார். அப்பள்ளியிற் பயில்வோர் பெரும்பாலோர் செல்வர் வீட்டுப் பிள்ளைகள். இங்கு பயில்வார் யாவரும் ஏழைகளே. ஒரு சில வசதியுள்ள வீட்டுப் பிள்ளைகளும் படித்தார்கள். ஏழைகள் முன்னேற வொட்டாமற் செய்வதுதானே செல்வர் இயல்பு ஏழைகளுக் கெனவே அமைக்கப்பெற்ற பள்ளி அங்கீகாரம் பெறுமாயின் செல்வர்க்கு ஏவல் செய்யும் ஏழைகள் கிடைக்க மாட்டார்களே! ‘மனிதர் உணவை, மனிதர் பறிக்கும் வழக்கம்; மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை' என்றெல்லாம் பாரதி இவை போன்ற இழிந்த உள்ளங்களைக் கண்டு கொள்ளாமலா பாடிவிட்டார்? உண்மை உண்மை! முக்காலும் உண்மை எனினும் தளர்ச்சி கொள்ளாமல் பாடசாலையை நடத்துமாறு கவனித்துக் கொண்டார்கள் நம் அடிகளார்.

நீதிபதி டி. சதாசிவ ஐயர் குமாரரான திரு. கிருஷ்ண மூர்த்தி அய்யர், மாவட்டக் கல்வியலுவலராக மாற்றம் பெற்று இங்கு வந்தார். அவர் முதன் முதலாகச் செய்த வேலை ‘ஸ்ரீ பாடலேச்சுரர் தரும பாடசாலையை அங்கீகரித்ததேயாகும். அவரைப் பாராட்டிச் சுவாமிகள் வாழ்த்துக் கூறியருளினார்கள். எதிர்பாராமல் செய்த இந்தப் பணியினைக் குறித்துச் சுவாமிகள் பல சமயங்களில் பாராட்டுவதுண்டு.

பள்ளி எட்டாம் வகுப்பினை ஏற்று நடத்தும் வாய்ப்பு படிப்படியாய் வந்துற்றது. அப்போது, பல்கலைக் கழகப் பட்டப் படிப்பும், ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் (B.A., LT.) பெற்ற தலைமை யாசிரியரே அமர்த்தப் பெற வேண்டும். அங்ஙனம்! அமர்த்தப் பெற்ற ஒருவர் நன்றாக வேலை செய்துகொண்டிருந்தார். தன் சொந்த ஊர்ப் பக்கம் அவருக்கு வேலை கிடைக்கவே அவர் இதனை விட்டு விட்டார். 1926ஆம் ஆண்டு வேறொரு B.A., LT., ஆசிரியர் தலைமை யாசிரியராக வந்தார். அவர் சுவாமிகள் தொடர்பு இல்லாமல் வெளியூரிலிருக்கும் புரவலரிடம் நேரே தொடர்பு கொள்ளத் தொடங்கினார். 'கரைப்பார் கரைத்தால் கல்லுங்கரையு’ மன்றோ? அதுவரை மாதச் சம்பள முதலிய செலவுகள் மாதாமாதம் சுவாமிகளுக்கே வந்து சேரும். யாவரும் அவர்களிடம் பெற்றுக் கொள்ளல் வழக்கமாக இருந்தது. ஆனால் அந்தப் பட்டதாரித் தலைமை ஆசிரியருக்கு அது பிடிக்காததொரு பக்கம், தனக்கு வேறுவித வருவாய் கிடையாதே என்ற குறையும் ஒரு பக்கம். இதனால் செட்டியாரிடம், நீங்கள் செலவு செய்து பிள்ளைகளைப் படிப்பிக்கிறீர்கள். அதனைச் செட்டியார் பள்ளி என்றே கூறுகின்றனரே! இனி என்னிடம் எல்லாப் பொறுப்புகளையும் ஒப்படையுங்கள்; நான் பள்ளியைத் தங்கள் பெயரமைய நடத்துவதைக் காணுங்கள் என்றெல்லாம் கூறினார். பலரும் புகழ வாழ வேண்டுமெனக் கருதாதார் யார்? அவரும் அதற்கிசைந்தார். பணம் நேரடியாக அவருக்கே வந்தது. சம்பளம் கொடுக்கும் போது சிறிதளவு குறைத்துக் கொடுத்தார்; சிலருக்குப் பின் தருகிறேனென்றார்; முன் சரியாகப் பெற்றுக் கொண்டவரிடமும் இடையில் கடன் கேட்டுப் பெற்றார். கடைசியாகச் சம்பளப் பணம் வரவில்லை யென்று பொய்கூறி நம்பவைத்தார். பெரும் பொருள் கையாண்டபின் அவரே மறைவிடம் நோக்கிச் சென்று மறைந்தார்.

சுவாமிகள் அப்போதெல்லாம் வெளியிடங்களில் தொண்டு மேற்கொண்டு சென்றிருந்தார்கள். மேலும், தாமே கொண்ட அகந்தை காரணமாக அத் தொடர்புடையோர் நெருங்காதிருந்ததால், அப்பள்ளித் தொடர்பை அறவே விட்டு விட்டார்கள். பள்ளி மூடப்பெற்று விட்டது.

இதனை நினைந்து நினைந்து சுவாமிகள் வருந்துவதுண்டு. சிலர் வாயிலாகச் செட்டியார், முன்போலச் சுவாமிகளே பார்வையிடுவதாயின், மீண்டும் அப்பாடசாலையை நடத்தக்கூடு மென்றறிவித்தார். ஆனால் சுவாமிகள் அவர்களையே நடத்தச் சொல்லிவிட்டார்கள். பள்ளி சிறப்புற நடைபெற வேண்டியே, தம் மடாலயத்திற்கெதிரே, மடாலயத்திற்குரியதாயிருந்த பரந்த இடத்தை அளித்தார்கள். அது இப்போதும் ஒரு பாடசாலை நடத்தும் இடமாக உள்ளது. ஆனால் நம் மடாலயற்திற் குரியதாயில்லை.

ஸ்ரீ பாடலேச்சுரர் தருமப் பாடசாலைக்கு, வண்டிப்பாளையம், முருகேச நகரில் வாழும் பலர் தம் பிள்ளைகளை யனுப்பினர். குறைந்த வருவாயுடையோர், வருவாயில்லா தோர்க்கெல்லாம் அப்பள்ளி ஒர்சிறந்த காமதேனுவாக இருந்தது, வாரத்தில், சனிக்கிழமை மட்டும் காலை 7 மணி முதல் 10 மணிவரை பள்ளி நடைபெற்ற பின் அரை நாள் விடுமுறை. ஞாயிறு விடுமுறை கிடையாது. ஆனால் அமாவாசை, பெளர்ணமி, பிரதமை திதிகள் வழக்கமான விடுமுறை நாள்களாம். எல்லாப் பண்டிகைகளுக்கும் விடு முறை உண்டு. தைப் பொங்கல்தொடர்பாகச் சில நாள்களும், கோடையில் ஸ்ரீ பாடலேசப் பெருந்தகையின் பெரு விழா நாள்கள் தொடங்கி ஒரு மாதமளவும் விடுமுறைகளாகும். மாணவர் யாவரும் பாழ் நெற்றியோடு பள்ளி வரமாட்டார்கள். சைவர் திருநீறும், வைணவர் திருமண்ணும் அணிந்தே வருவர். அணியாதவரை அணிவிப்பது உண்டு. காலை, பள்ளி தொடங்குமுன், வணக்கப் பாடல்கள் பாடப்பெறும். எல்லோரும் சேர்ந்து சில பாக்களைப் பாடவேண்டும். பின்னர், பண்ணமைந்த சில தேவாரப் பாடல்களும், திருவாசக முதலாயினவும், திருப்புகழ் சந்தத் தோடும் சிலரே பாடவேண்டும். பின்னர் அரகர முழக்கம், சிவ சுப்பிரமண்ய ஓம் முழக்கங்களுடன் வகுப்பறைகட்கு மாணவர் செல்வர். பிற்பகல் தொடக்கத்தில் வடமொழித் தோத்திரங்கள் மூன்றும், குரு வணக்கமும் பாடப்பெறும். இருவேளை முடிவுகளிலும், 'வாழ்க அந்தணர்' என்ற ஏடேறிய திருப்பதிகத்து முதற் பாசுரமும், 'துய்யதோர்', ஆறிருதடந்தோள் என்ற கந்த புராண வாழ்த்துப்பாடல்களும் பாடிமுடித்து முழக்கங்களுடன் மாணவர் கலைந்து செல்வர்.

வார வழிபாடு :

வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மாணவரனைவரும், முகம், கை, கால் அலம்பிக் கொண்டு, சமயக் குறிகளையணிந்து இவ்விருவர் அல்லது மும் மூவராகத் திருக் கோயிலுக்குச் சென்று வழிபாடாற்ற வேண்டும். வலம் வரும் முறை, அட்டாங்க பஞ்சாங்க நமஸ்கார முறைகள், அந்தந்தத் திருவுரு வத்தெதிரே அவ்வத் திருவுருவத்திற்குரிய பாடல் பாடுதல் முதலான நல்ல பயிற்சிகளை மாணவர் சிறு வயதிலேயே அடைந்தனர். சுவாமி, பிராட்டி திருவுருவங்களுக்கு அருச்சனை செய்வித்துப் பிரசாதம் அளிக்கப் பெறும். கோயிலுக்குப் போகும் போதும், வரும்போதும் ஒரு மாணவனும் அடுத்தவனுடன் பேசக்கூடாது. இறைவன் திருவடியை மனங்கொண்டே சென்று மீள வேண்டும். பாடல்கள் கூறி வழிபடும் போதும் அப்படியே. இவையெல்லாம் முன்னதாகவே ஆசிரியர்களால் தெளிவுறுத்தப் பெறும். இதனால் தெய்வப் பற்றும் இறைவன் திருவடி நீங்காச் சிந்தனையும், கீழ்ப்படிதலும், பணிவுடைமையும், பாடல் பாடும் வல்லமையும் மாணவர்களுக்கு அமைந்தன. இந்நாள் இத்தகைய பேறுகள் வாய்க்குமோ?

மேலும், பெருவிழா, அப்பர் சுவாமிகள் கரையேறவிட்ட விழா, கட்டமுது விழா, தண்ணீர்ப்பந்தர் (அப்பூதியடிகள்) விழாக் காலங்களில் இறைவன் வெளிப்பாடு திருவீதி உலா கொண்டருளுங் காலங்களில் மாணவர் பலர் ஒருங்கே பாராயணம் செய்து கொண்டு பின்னே செல்வதும் உண்டு. விநாயகரகவல். திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, சிவபுராண முதலாம் திரு அகவல்கள் பாராயணம் செய்யப் பெறுவன. இறுதியில் திருப்புகழ்கள் சில பாடி, வாழ்த்துக் கூறி முடிப்பார்கள்.

வாரந்தோறும் பிள்ளைகள் ஒழுங்காகத் திருக்கோயில் வழிபாடு செய்வது கண்டார், திருவாளர் ச. சச்சிதானந்தம் பிள்ளை, அவர்கள். அதனாற் பெரும் பயன் விளைவது கருதியே தான் செல்லுமிடங்களி லெல்லாம் வார வழிபாட்டி னை வற்புறுத்துவாராயினார்.

சுவாமிகள் தொடர்பு கண்ட சங்கங்கள்
அறிந்த அளவுக்குச் சில தனியாருடன் பழகியமை

1. வாணி விலாச சபை- ஸ்ரீமத் ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர்.
2. ஸ்ரீலஸ்ரீ- ஞானியார் மாணவர் கழகம், ஸ்ரீமத் ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர்.
3. கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சை
4. கோவல் தமிழ்ச் சங்கம், திருக்கோவலூர்
5. கண்டாச்சிபுரம் செந்தமிழ்க் கழகம்
6. சக்தி விலாச சபை - திருவண்ணாமலை

திருவண்ணாமலைக் கோயிலில், புரவி மண்டபத்தின் கீழ்ப்புறத்துள்ளது. இக்கட்டிடம் ஜவுளி ந. சி. முனிசாமி முதலியாரவர்களால் கட்டப்பெற்றது. நவராத்திரி ஆறாம் நாளில் அவர் தன் பொருட்செலவில் அவ்விடத்தில் அடியார்கட்கு அன்னம் பாலித்து வந்தார். ஞானியார் சுவாமிகளின் தலை மாணவராம் ம. ரா. குமாரசாமிப் பிள்ளை ஒருமுறை அவ்விழாவுக்குச்சென்றபோது, ‘வசதியான இந்த இடத்தில் ஓர்சபை நிறுவி அதனைச் சிறப்பாக நடத்தலாமே என ஆலோசனை கூறினார். அங்ஙனமே சக்தி விலாச சபையும், அதன் அங்கமாக ஒரு நூல் நிலையமும் எழுந்தன. 19-5-1916ல் அதன் முதலாண்டு விழாத் தொடங்கி மூன்று தினங்கள் நடைபெற்றது.

கயப்பாக்கம் - சதாசிவ செட்டியார், மோசூர் - கந்தசாமி முதலியார், பொன்மார் - நடேச முதலியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், ச. சச்சிதானந்தம் பிள்ளை B.A., LT, மணிமங்கலம் திருநாவுக்கரசு முதலியார், ம. ரா. குமாரசாமிப் பிள்ளை, ஆண்டாளம்மையார், திரிசிரபுரம் இ. எஸ். இராமசாமி சாஸ்திரிகள், ஜி. வேங்கடராம அய்யர், கபாலி சாஸ்திரிகள், வேலூர் பெ. ச. இரத்தினவேல் முதலியார், எஸ். வி. விஜயராகவாசாரியார் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். சுவாமிகள் தலைமை தாங்கியருளினார்கள். முன்னுரை, முடிவுரைகள் அரிய நுண்பொருள் களமைந் தனவாய் யாவருள்ளத்தையும் கவர்ந்தன.

ஆங்கு அடிகளார் புரிந்த சொற்பெருக்கின் திறம் கண்ட செந்தமிழ்க் கவி கே.வி. இராமச்சந்திர ஐயர்,

முத்தியெங்கே ஞான முறையெங்கே முன்னோர்பால் பத்தியெங்கே யோதும் பனுவலெங்கே - இத்தரையில்
சான்றோர் பரவுகின்ற சண்முக மெய்ஞ் ஞானிநீ
தோன்றா திருப்பாயேற் சொல்‘

என்ற வெண்பாவினைப் புனைந்து கூறிச் சுவாமிகளின் கல்வியறிவின் திறம் வியந்து பேசினார்.

பின்னும் பன்முறை சுவாமிகள் அச்சபையின் விழாக்களுக்கென எழுந்தருளியது உண்டு. திருவண்ணாமலை தீபதரிசன காலங்களிலும்(பெருவிழாக் காலங்களில்) அங்கு நடைபெறும் சொற்பொழிவுகளுக்குத் தலைமை தாங்கியருள் வதுண்டு. முன் குறிப்பிட்ட ஜவுளி ந. சி.முனிசாமி முதலியாரவர்கள் ஆதரவு தந்து அன்புடன் உபசரிப்பார்கள்.

7. வேத மடம், ஸ்ரீவாகீச பக்த பதசேகர சபை :

வடமட்டம், ஜமீன்தாரர் திரு. திருவேங்கடம் பிள்ளையின் ஆதரவால் நடைபெற்ற இச்சபையின் முதல் ஆண்டு நிறைவு விழா 3-1-1919முதல் மூன்று நாட்கள் சுவாமிகளின் தலைமையில் சிறப்புடன் கொண்டாடப் பெற்றது. அவ்விழாவிற்குப் பெருமக்கள் பலர் வந்திருந்தனர். அவ்விழாவின் இறுதிநாளில் சச்சிதானந்தம் பிள்ளையவர்கள் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அதாவது ;

‘பிற மதம் புகுந்தோர், விரும்பினால் மீண்டும் அவரைச் சைவ சமயத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். அந்த நாளின் நிலையறிந்து மீண்டும் அவர்கள் பிற மதம் புகுந்தால் என் செய்வது? என்ற வினாவினைக் கும்பகோணம் -தமிழ்பண்டிதர் திரு. வேங்கடராம ஐயர் கொணர்ந்தார். பலர் அந்த வினாவினை ஆதரித்து, அங்ஙனம் சேர்க்க மறுப்புத் தெரிவித்துப் பேசினார். ஆனால் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள், விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம்; ‘மீண்டும் புகுவரேல் அவர்களை ஒருபோதும் சேர்க்கக் கூடாது’ என்ற திருத்தத்துடன் ஆதரிக்குமாறு ஆலோசனை கூறினார். அத் தீர்மானம் அத்திருத்தத்துடன் யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்று முடிவு செய்யப்பட்டது.

அந்தச் செய்தியைக் குறிப்பிட்டுத் தமது முடிப்புரையில் சுவாமிகள், திலகவதியார் புறசமயஞ்சார்ந்தும் நோய்க்கு ஆதரவு தேடித் தமக்கையிடம் வந்த தன் தம்பிக்குத் திருநீறளித்துச் சைவராக்கினார். அவர் எதையும் ஆராயாமல் ஐந்தெழுத்து ஓதித் திருநீறளித்தார். அவருடைய நம்பிக்கை வீண்போக வில்லை. இன்று நாம் சிறிதளவும் நம்பிக்கை கொள்ளாமல், ஆராய முற்பட்டு அவமே காலங் கடத்துகிறோம். ஒரு பெண் பாலவர்க்கு இருந்த நம்பிக்கை ஆண்பாலவராகிய நமக்கு இல்லாது போனதற்குக் காரணம் யாதாயிருக்கலாம்? என்று குறிப்பிட்டபோது பேரவை முழுதும் கையொலி ஆரவாரம் செய்தது யாவர் கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தது.

8. திரிசிரபுரம் சைவ சித்தாந்த சபை :

சித்தார்த்தி ஆண்டு ஆனி மாதம் 21-ஆம் தேதி திருச்சி சித்தாந்த சபையின் ஆண்டு விழா நடைபெற்றது. சுவாமிகள் தலைமை தாங்கிச் சிறப்புற நடத்தித்தந்தார்கள். சுவாமிகள் திருச்சி சென்றருளியபோ தெல்லாம், அவர்கள் சுவாமிகளின் சொல்லமுத மாந்திப் பயன் பெற்றனர்.

9. கரந்தைத் தமிழ்ச் சங்கம் :

முன் கூறப்பெற்றவாறு, 1911ல் நிறுவப் பெற்ற அச் சங்கத்தின் 7, 8 ஆண்டு விழாக்களிலும் 1938-ல் அதன் வெள்ளி விழாவிலும் நம் சுவாமிகள் பங்கேற்றுத்தலைமை தாங்கினார்கள். தலைவர் திரு. த. வே. உமாமகேசுவரம் பிள்ளைக்குத் தமிழ வேள் என்றும், செந்தமிழ்ப் புரவலர் என்றும் சிறப்புப் பெயர்களைச் சூட்டிச் சிறப்புச் செய்தார்கள். புலவர் இரா. வேங்கடாசலம் பிள்ளைக்குக் கவியரசு என்ற சிறப்புப் பெயர் சூட்டிப் பாராட்டினார்கள். அவர்கள் அன்பால் அளித்த சிவிகையை மகிழ்ந்தேற்றார்கள்.

10. பலவான்குடி மணிவாசக மன்றம் :

சித்தார்த்தி, ஆவணி 20உ நடைபெற்ற பலவான்குடி மணிவாசக மன்றத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்று யாவரும் மகிழச் சொன்மாரி பொழிந்தார்கள்.

11. புதுவை வாணிவிலாச சபை.
12. வண்டிப்பாளையம் சந்திரசேகர பக்த ஜன சபை
13. துத்துக்குடி சைவ சிந்தாந்த சபை.
14. பழநிச் சைவ சிந்தாந்த சபை.
15. கோவல் மணம்பூண்டி அருட்சோதிநாத பக்த பால சபை.
16. நெல்லிக்குப்பம் - சோழவல்லி வாகீச பக்த ஜன சபை.
17. ஸ்ரீ வைகுண்டம் குமரகுருபரன் சங்கம்.
18. செங்கற்பட்டு - சமயாபி விருத்தி சங்கம்.
19. காவித்தண்டலம் - சைவ சித்தாந்த சபை.
20. கூடலூர் சைவ - சிந்தாந்த சபை.
21. திருவோத்துர் - பானுகவி மாணவர் கழகம்.

எண்ணிறந்த சங்கங்கள் சுவாமிகளின் சொல்லமுதை மாந்திய செய்திகள் இருக்கக்கூடும். அவை இன்னவையென அறியக்கூட வில்லை.

சுவாமிகளிடம் அன்புகாட்டி அவர்களது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் பெற்ற அறிஞரும் செல்வரும்

ஸ்ரீ சுவாமிகள், அறிஞர் - அறியாதார் சிறியோர் முதியோர், செல்வர் - வறியர், இல்லற வாழ்வினர் - துறவற மேற்கொண்டோர், வணிகர், தொழிலாளர், உத்தியோகத்தி லிருந்தோர் ஆகிய எப்பாலவரிடத்தும், சாதி, மத, இன, சமய வேறுபாடுகள் கருதாமல் ஒரு படித்ததாகவே பழகுவார்கள். முன். பல இடங்களிற் குறிப்பிட்டாங்கு அந்நாளைய அறிஞர் யாவரும் சுவாமிகளைப் பற்றி அறிவர். அவர்களைத் தரிசித்து அவர்களிடம் உரையாடுதலையே தாம் பெற்ற பேறாகக் கருதுவார்கள். எந்த வேளையில் எவர்வரினும், அவர்களைக் காத்திருக்கச் செய்யும் வழக்கமே அவர்களிடம் காண இயலாது. நீராடித் தூய்மையுற்றுப் பூசனைக் கெழுந்தருளுங் காலமேயெனினும், வெளிவந்து சற்றே இருங்கள்; பூஜை முடித்து வந்து விடுகிறோம் என்ற அளவுக்காவது திருவாய் மலர்ந்தருளிச் செல்வார்கள். பூசை முடிந்ததும் நேரே வந்து, அவர் வந்த செய்தியைப்பற்றிக் கேட்டறிந்து உடனே ஆவன புரிவார்கள். ஒரே எடுத்துக்காட்டினை ஈண்டுக் குறிப்பிடுவோம்.

1981 அல்லது 32 ஆம் ஆண்டாக இருக்கலாம். ஒரு மகம்மதியச் சிறுவர் வந்தார். மாலை வேளை, சுவாமிகள் வெளிக் கூடத்தில் தனியே உலவிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல் இடையில் ஒரு 4 முழக் கல்லாடை, அதன் மேல் கட்டி முடிக்கப்பெற்ற ஒரு 4 முழத் துண்டுடன் இருந்த அவர்களிடமே அவர் சென்றார். சுவாமி எங்கே? என்று கேட்டார். என்ன தகவல் ? என அவரை வினவ அவர், தான் S.S.I.C. எழுதியதாகவும், தமிழில் 16 மதிப்பெண்களே பெற்றதாகவும், பிற பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதாகவும், சுவாமிகளையடுத்தால் நல்ல பயிற்சி கிடைக்கு மென இன்ன அன்பர் அனுப்ப வந்ததாகவும் கூறினார். தம் இயல்பின் வண்ணம், எளியராய் வாயிற்படிமீது அமர்ந்து, அவரை அருகிருத்தி முதலிற் சில பாடல்களைப் படிக்கச்செய்து, தமக்கேயுரிய சிறப்பான முறையில் ஒவ்வொரு பாடலையும் விளக்கிப் போதித்தார்கள். சில பாட்டுகள் விளக்கி முடிந்தவுடன் நாளை இன்ன நேரத்திற்கு வருக எனத் திருவாய் மலர்ந்தருளி அனுப்பினார்கள். அவர் மீண்டு சென்று விட்டார். சென்றவர் தன்னை மடாலயத்திற்கு ஆற்றுப்படுத்திய சுவாமிகளின் அன்பராம் திருஞானசம்பந்தம் பிள்ளையிடம் சென்று, தனக்குப் பெரிய சுவாமிகளின் தரிசனம் கிடைக்க வில்லை யென்றும், ஒரு சாமியார் போலக்காணப் பெற்றவர் சில பாட்டுகளை விளக்கிப் பொருள்கூறி, நாளை வரச்சொன்னதாகவுங் கூறினார். அவருக்கு, மடாலயத்தோடு நீண்ட நாட்களாகத் தொடர்பு உண்டு. எனவே, அவர் அடையாளங்களைக் கேட்டறிந்து, பாடம் நடத்திய அவர்களேதான் அம்மடாலயத் தலைவர் களாவர்களெனவும், எளிய காட்சியும் எளிமையாகப் பழகுதலும், கால முதலியன பாராமல் பாடம் போதிப்பார்களெனவுங் கூறி, அடுத்த நாளும் குறிப்பிட்ட வேளையிற் சென்று பாடங் கேட்டுப் பயன் பெறுமாறு ஆலோசனையுங் கூறினார். அடுத்த நாள் வந்த அந்த வாலிபர், அடிகளாரைக் கண்டவுடன் கண்ணிர் சோர அழுது நீங்கள்தானா இம்மடால யத்தின் தலைவர்? பலவாறு தம்மை அலங்கரித்துக்கொண்டும், பல ஆபரணங்களைப் புனைந்து கொண்டுமல்லவோ இருப்பார்கள் மடாதிபதிகள் நீங்கள் இவ்வளவு எளியராக இருக்கிறீர்கள் எனக்கூறி விம்மி விம்மி ஆனந்த வெள்ளத்தில் நீந்தினார். சுவாமிகள் அவருக்கு ஆறுதல் கூறி இருக்கச்செய்து, மேலும் பாடம் நடத்தியருளினார்கள். அவர் குறிப்பிட்ட வேளைகளில் வந்து கற்றுப்பின் தேர்வெழுதி நூற்றுக்கு எண்பது மதிப்பெண் பெற்றுத் தேறினார். கடலூர்(மஞ்சக் குப்பம்) ஸெயின்ட் ஜோஸப்ஸ் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்த திரு. திருஞானசம்பந்தம் பிள்ளையவர்கள். இந் நிகழ்ச்சி யினைக் கூறியவர்.

இங்ஙனம், தம் பேரருளினை எத்தகையார் மாட்டும் வேறுபாடில்லாது செலுத்தும் சுவாமிகளிடம் பெரிதும் ஈடுபாடு கொண்டோருள், திரு வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள். ச. சச்சிதாநந்தம் பிள்ளை, B.A. LT., அவர்கள். மணிமங்கலம் திரு திருநாவுக்கரசு முதலியாரவர்கள், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரவர்கள், மறைமலையடிகளார், தாகூர் சட்ட விரிவுரையாளர் திரு கா. சுப்பிரமணிய பிள்ளை, M.A., M.L., அவர்கள், ரசிகமணி T.K. சிதம்பரநாத முதலியாரவர்கள். திரு. ந. மு. வெங்கடசாமி நாட்டாரவர்கள், திரு உலகநாதம் பிள்ளையவர்கள், கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளையவர்கள் முதலாயினரைக் குறிப்பிடலாம்.

நீதிபதி இராமேசம் அவர்கள், டிஸ் டிரிக்ட் முன்லீப் J.M. நல்லசாமிப் பிள்ளையவர்கள், Sir A இராமசாமி முதலியாரவர்கள், டிப்டி கலெக்டர் போதண்டபாணிப் பிள்ளையவர்கள், வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளைய வர்கள்; அவர் குமாரர்கள், வ. சு. சண்முகம் பிள்ளையவர்கள், தணிகைமணி வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள்; டிப்டி கலெக்டர் ராஜாபாதர் முதலியாரவர்கள் முதலாயினோர் உத்தியோகத்திலிருந்து கொண்டு அன்பராக இருந்தாருட் சிலர்.

திரு.PT.இராசன், Bar at law. அவர்கள் திரு த. வே. உமாம கேசுவரம் பிள்ளையவர்கள், திரு T.M. நாராயணசாமிப் பிள்ளையவர்கள், திரு கோவைகிழார் என்னும் C.M. இராமச்சந் திர செட்டியாரவர்கள், திரு C.K. சுப்பிரமணிய முதலியாரவர்கள், மிட்டாதார் S.R. ஐராவத உடையாரவர்கள், வடமட்டம் ஜமீன் திருவேங்கடம் பிள்ளையவர்களையுள்ளிட்டார் பலர் கல்வியும் செல்வமும், செல்வாக்கும் பதவியும் பெற்றோருட் குறிப்பிடத் தக்கராவர்.

தஞ்சை கருணாநந்தர் வைத்தியசாலை, மு.ஆப்ரஹாம் பண்டிதர், புதுவை, லூய். சின்னையா ஞானப் பிரகாச முதலியார், ரெவரெண்டு. கிங் ஸ்பரி முதலாயினாருடன் சுவாமிகள் சிறந்த அன்பு பாராட்டி ஆண்டுதோறும் வாழ்த்துப்பா ஒன்றேனும் இயற்றி அச்சிட்டு அனுப்புவதுண்டு. மரபு, சமய வேறுபாடுகளைக் கடந்தவர் எம் சுவாமிகள் என்பதற்கு இத்தகையாரிடம் பாராட்டிய அன்பே ஆதாரம் ஆகும்.

சுவாமிகள், தென்னாட்டுத் திருத்தலங்களைத் தரிசிக்குமாறு திருவுளம் பற்றியருளிக் காளயுக்தி ஆண்டு கார்த்திகை மாதத்தில், சிவிகை யூர்ந்து எழுந்தருளினார்கள். மேனாவின் இருபுறமும் ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்களும், P.S. வடிவேல் செட்டியாவர்களும் நடந்தே மேனாவைப் பற்றிக் கொண்டு தொடர்ந்தார்கள். மடாலய முறையினையொட்டித் திருச் சின்னம் ஒன்று மட்டுமே முன் சென்றது. (ஆரவாரங் கூடாதெனக் கருதி ஏனையவற்றை அடிகளார் நிறுத்தி விட்டனர்)

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), சிதம்பரம், திருநாரையூர், காட்டுமன்னார்கோயில், ஓமாம்புலியூர், கானாட்டு முள்ளுர், சீர்காழி, புள்ளிருக்கு வேளுர் (வைத்தீச்சுரன் கோயில்), மாயூரம், திருவாவடுதுறை, வடமட்டம், வேத மடம், திருநல்லம், திருவிழிமிழலை, திருமருகல், காரைக் கால், திருமலைராயன் பட்டினம், திருநள்ளாறு, நாகைப் பட்டினம், மஞ்சக் கொல்லை, (வேதாரணியம்) திருமறைக் காடு, குடவாசல், ஸ்ரீவாஞ்சியம், குற்றாலம், திருவிடை மருதூர், திருநாகேச்சுரம், கும்பகோணம், கொட்டையூர், தாதம்பேட்டை, பழுர், இன்னம்பர், தஞ்சை, கருந்தட்டாங்குடி ஆம் தலங்களைத் தரிசித்தார்கள்.

சுவாமிகள், எழுந்தருள்வதறிந்த பலபல அன்பர்கள், தத்தம் ஊர்களிற் சொற்பொழி வாற்றுமாறு கேட்டுக் கொள்வதுண்டு. விரும்பினோர் விருப்பங்களை வேண்டியவாறே முற்றுவிக்குந் திருவருள் நிரம்பப் பெற்ற அடிகளார், அவ்வாறே அருளுரை வழங்கி, அன்பராயினார்க் கெல்லாம் ஆசி வழங்கியருளி வழிக்கொண்டார்கள். வடமட்டம் வேத மட நிகழ்ச்சியும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 7-8 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியும் அவர்களது வழி நடைக் காலங்களில் மேற்கொண்டனவேயாம்.

கரந்தை (தஞ்சை)யினின்றும் எழுந்தருளிய அடிகளார், திருக்கண்டியூர், திருவேதிகுடி, திருப்பூந்துருத்தி, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, அடைஞ்சூர், இளங்காடு முதலாம் தலங்களைத் தரிசித்துக் கொண்டு திரிசிரபுரம் அடைந்தார்கள். முற்கூறியவாறே, சித்தார்த்தி ஆனி, 21உ திருச்சிச் சைவசிந் தாந்த சபை விழாவினைத் தலைமை தாங்கி நடத்தினார்கள். அந் நாளெல்லாம் தாயுமான தயாபரனையும், மட்டுவார் குழலாளையும் தரிசனம் செய்து கொண்டார்கள்.

பின்னர், அங்கிருந்து வழிக் கொண்டு, திருக்கற்குடி, பூவாளுர், திருத்தவத்துறை (லால்குடி), உறையூர், திருப்பாச் சிலாச்சிராமம், திருவானைக்கா, திருவரங்கம், அரசங்குடி, தென்னுர், புதுக் கோட்டை ஆம் தலங்களை யடைந்து சிவ தரிசனமும் திருமால் சேவையும் கொண்டருளிப் பலவான் குடியையடைந்தார்கள்.

பலவான்குடி மணிவாசக மன்றத்தின் ஆண்டு விழா, சித்தார்த்தி ஆவணி 20உயன்று, சுவாமிகளின் தலைமையில் மிகச் சிறப்புற நிகழ்ந்தது. சுவாமிகளருளிய தொடக்கவுரை முடிவுரைகள் மிக்க மேன்மை தருவனவாயமைந்தமை பற்றி மிகவும் போற்றப் பெற்றார்கள்.

வைரவன் கோவில், மேலைச் சிவபுரி, கீழைச் சிவபுரி, கோனாப்பட்டு, சொக்கலிங்கபுரம், இராமச்சந்திரபுரம், அரிமழம், அறந்தாங்கி, திருப்பெருந்துறை ஆம் தலங்களைத் தரிசித்துக் கொண்டு சித்தார்த்தி, கார்த்திகை 10உ காரைக் குடியை அடைந்தார்கள். காரைக்குடி நகரச் செட்டிமார் உபசரித்துச் சுவாமிகளின் சொல்லமுதமாந்திக் களித்துப் போற்றினர். காரைக்குடியில் செட்டிமார் ஆதரவில், பராசக்தி அம்பலவாண நாவலர் என்பார் ஒருவர் இருந்தார். அவர், சுவாமிகளது கல்வியறிவாற்றல்களிற் காழ்ப்புக் கொண்டு, செட்டிமாரது அளவுகடந்த உபசாரத்துக்கு மறைமுகமாகத் தடை சூழ்ந்தார். அடிகளாரது பெருந்தன்மை காரணமாக அது பயனற்றுப் போய்விட்டது.

காரைக்குடி மக்கள் தொழுது போற்ற மேலும் வழிக்கொண்டருளி, தேவகோட்டை, திருக்கானப்பேர், தொண்டி, இராமநாதபுரம் ஆம் தலங்களைத் தரிசித்துக்கொண்டு இராமேச்சுரம் எழுந்தருளுங்கால், பாம்பன் இரயில்வே பாலம் வழியாகச் சுவாமிகளுக்காக, மேனாவுடன் செல்லவும் மீண்டு வரவும் அனுமதி வழங்கப்பெற்று, இராமநாதனைப் பாடிப் பரவித் தொழுது சில நாள் தங்கி, தனுக்கோடி முதலாம் துறைகளிலும் நீராடி மீளவும் வழிக்கொண்டார்கள்.

உத்தரகோசமங்கை, சாயர்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப் பட்டினம், உடன்குடி, ஆற்றூர், ஆறுமுக மங்கலம், திருவெள்ளூர், திருநெல்வேலி, திருப்புடைமருதூர், அம்பாச முத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரம சிங்கபுரம், கோட்டாறு ஆம் தலங்களை வழிபட்டனர். கோட்டாற்றில் சில நாள் தங்கிச் செஞ்சொல்மாரி பொழிந்தனர். வேலாயுத முதலியார் என்னும் அன்பர் ஒருவர், அடிகளார் திருவுருவத்தைப் பல படியாக எழுதுவித்து, அவற்றைத் தன் காணிக்கையாகச் சுவாமிகளிடம் ஏற்பித்தார். அவைகளுட் சில, இன்றும் உள. பின்னும் அடிகளார், பெருவளம், வடசேரி, வடுவீச்சரம், களக்காடு, கடையம், தென்காசி, திருக்குற்றாலம், தென் இலஞ்சி, புளியங்குடி, சங்கர நாராயணர் கோயில், கழுகு மலை, சாத்தூர், விருதுப்பட்டி ஆம் தலங்களைத் தரிசித்துக் கொண்டு, மதுரையடைந்து ஆங்குச் சில பகல் தங்கித் திருபரங்குன்ற நாதனையும், தேவயானை மணாளனையும் கண்டு வணங்கினார்கள். அங்கிருந்து வழிக்கொண்டு பழநியடைந்து, பவரோக வயித்தியநாதனை வழிபாடு செய்து கொண்டு சில நாள் அங்கேயே தங்கியிருந்தார்கள்.

பழநியாண்டவனுக்கு அபிஷேகம் செய்வித்துக் கண்குளிரத் தரிசித்தும், அவன் புகழ் பாடிப் பரவியும், அன்பர் பாடக் கேட்டுக் கசிந்து கண்ணீர் மல்கியும், அவன் புகழ் பேசித் தம் உளத்தடைத்தும், கேட்டோர் உள்ளத்தில் அடைப்பித்தும் அருள் செய்தார்கள்.

மீளுங்கால், விராலிமலை முதலாம் தலங்களை வழிபட்டுக் கொண்டு, ரெளத்திரியாண்டு, ஐப்பசித் திங்களிறு தியில் புலிசை மடாலயத்திற் கெழுந்தருளினார்கள். திருப்பாதிரிப் புலியூரன்பர்களும், வெளியூரிலிருந்து திரண்டு வந்திருந்த மாணவர்களும் சுவாமிகளைப் புதிய மேனாவில் எழுந்தருளச் செய்தும், அவர்களது உபாசனா மூர்த்தியாம் வல்லி தேவசேனா சமேத சுப்பிரமணிய மூர்த்தியை மயில் மீது எழுந்தருளச் செய்தும் நகர்வலஞ் செய்வித்து மடாலயத்தில் எழுந்தருள் வித்தார்கள். அந்நாள் நடைபெற்ற காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

சென்ற இடங்களிலெல்லாம் இங்ஙனமே நகர்வல முதலிய நிகழ்ந்தன. ஆங்காங்கு சொன்மழையும் பொழிந்து சிவானந்த ஆறு கரைபுரண்டோடச் செய்தார்கள் சுவாமிகள். செவிமடை வழியே, உள்ளமாம் நிலத்தில் தேக்கிச் சிவப் பயிரை வளர்த்துக் கொண்டு முத்திப் பயனாம் பெரும் பேற்றினை யடைந்தார்கள் பலர்.

பின்னர், காலம் வாய்த்தபோது, திருத்தணிகை, திருக்காளத்தி, திருவாலங்காடு, திருப்பதி ஆம் திருத்தலங்களை வழிபட்டு விரும்பிய இடங்களிலெல்லாம் செஞ்சொல்லமுது வழங்கியதும் உண்டு.

சுவாமிகள், மேனாவிலமர்ந்து எழுந்தருளுங் காலங்களில், அதனைக் காவுவோருள், ஒருவர் 'முருகா முருகா' என ஒலியெழுப்ப, ஏனையோர், 'வேல் முருகா' என்று ஒரு சேரப் பேரொலி எழுப்புவர். 'வேல் வேல்’, ‘வேல்மயில்’, ‘ஐயாறா கிய பஞ்சநதம்’, ‘ஆறாறாகிய சிதம்பரம்' என்ற ஒலிகளும் எழுவதுண்டு. தொழும்பு பூண்ட அன்பருட் சிலர், சுவாமிகளை நெருங்கி மேனாவைப் பிடித்துக் கொண்டே இருபாலும் செல்வதும் உண்டு. அப்போதுங்கூட இறைவன் குணாதிசயங்களும், புராண வரலாறுகளும், புராண இதிகாசங்களில் நுட்பமான பகுதிகளும் அருகு செல்வோர்க்கு விளக்கப் பெறுவது இயல்பான நிகழ்ச்சியாம்.

கொங்கு நாட்டுக்கும் சுவாமிகள் இருமுறை எழுந்தருளியது உண்டு. 1925ல் சேந்த மங்கலத்தில் நடைபெற்ற பார்க்கவ குல சங்கப் பத்தாம் ஆண்டு விழாவில் தலைமை பூண்டதும், பேரூர்ச் சாந்தலிங்க சுவாமிகள் மடத்திற் கெழுந்தருளியதும் முன்னரே கூறப்பெற்றன.

மீண்டும் ஒருமுறை 1936ல் கொங்குநாடு நோக்கி வழிக்கொண்டார்கள். திருநணா (பவானிகூடல்) திருமுருகன் பூண்டி, அவிநாசி முதலாம் தலங்களைத் தரிசனம் செய்து கொண்டதோடு, பாலக்காட்டுக் கணவாய் வழியே உடுப்பி சுப்பிரமணியம், திருவஞ்சைக்களம் ஆம் திருத்தலங்களைத் தரிசித்து மீண்டார்கள், முதல் முறை உடன் சென்று தொண்டு புரிந்தவர்கள் வண்டிப்பாளையம் புலவர்கள் அ. நடேச முதலியார், ந. ஆறுமுக முதலியார் இருவரும் ஆவர்.

புதுவை அன்பர்கள் வேண்டுகோளுக் கிணங்கிப் பன்முறை புதுவை சென்றிருக்கிறார்கள். அங்கு, பங்காருப் பத்தர் சுவாமிகளிடம் மிக்க ஈடுபாடு கொண்டவர்கள். அவரோடு வடலூர் இராமலிங்க சுவாமிகளின் திருவருட் பாவின் இனிமைகளை ஆராய்வது உண்டு. அப்போது அவர் புத்தகங்களில் அடையாளம் வைக்கும் விதத்தில் வெள்ளயினாலான வேல் ஒன்றினை அமைத்துச்சுவாமிகளிடம் ஏற்பித்தார். அதனைப் பலமுறை சொற்பொழிவுகளிலும் கூறியிருக்கிறார்கள்.


சிறப்பியல்கள்

மடாதிபதிகள் கைக்கொள்ள வேண்டிய சில விதிகள் உள. அதிலும் வீர சைவ மடாதிபதிகள் கைக்கொள்ள வேண்டுவன பல. மறந்தும் புறந்தொழாராய், மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது, சிவபரஞ்சுடரையே அவன் திருநாமங்களையே எண்ணுதலும், பேசுதலும் நியமமாகக் கொள்ள வேண்டிய வீர சைவ மரபினர் நம் சுவாமிகள் அவர்கள். திருமாலைப்பற்றியோ, இராமாயணம்பற்றியோ, பாரதம்பற்றியோ ஆற்றும் சொற் பொழிவுகளைக் கேட்டோர், இவர் என்ன துவைதியா அத்துவைதியா? விசிஷ்டாத் வைதியா? என்றெல்லாம் எண்ணுமாறு சிறிதேனும் புற மத தூஷணையோ, எடுத்துக் கொண்ட பொருளினுக்குப் புறம்பாகச் செல்வதோ இல்லாமல் பேசுவார்கள். திருவரங்கத்திலே, விபிடணர் சரணாகதி பேசி அரங்கநாதனடியார்கள் தம்பால் நிறைந்த ஈடுபாடுகொள்ளச் செய்தார்கள்.

ஒருக்கால் திருப்பாதிரிப்புலியூரையடுத்து 2 கல்தொலைவில் உள்ள திருவகீந்திரபுரத்தில் எழுந்தருளும் தேவநாதப் பெருமானைத் தரிசிக்கச் சென்றார்கள். அங்கே, வைணவர் பலரும் சுவாமிகளிடம் ஏதேனும் ஓர் சொற்பொழிவு செய்யவேண்டு மென்று வற்புறுத்தினர். சுவாமிகள் திருப்பாவையின் முதற் பாசுரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, வைணவ பரிபாஷைகளால் நீண்ட நேரம் ஒரு பெருஞ் சொற்பொழிவு ஆற்றினர். வைணவர் யாவரும் வியப்பெய்தினர். ஏனையோர் பெரு மகிழ்வெய்தினர். மூவுருவே ஒருருவாய் நின்ற திருக்கோலத்துடன் எழுந்தருளிக் காட்சி நல்கும் தேவநாதப் பெருமா னுக்கு அணிவித்திருந்த நீண்ட பெரிய மாலையொன்றினை அடிகளாருக்கு அணிவித்துப் பாராட்டினர். அவர்களை நோக்கி, சுவாமிகள் 'இன்று நான் நெடுமாலையடைந்தேன்’ எனச் சிலேடையாகக் கூறி அனைவரையும் மேலும் மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்த்தினார்கள்.

சுவாமிகள் திருப்பதிக்குப் பலமுறை எழுந்தருளியதுண்டு. 1934, 35-ஆம் ஆண்டுகளில் அங்கு ஆலயப் பொறுப்புத் தலைமையை வகித்தவர் திரு. சீத்தாராம ரெட்டியார். அவர் சிறு பருவத்தில் சுவாமிகளுடன் பயின்றவர். அவர் சுவாமிகளைச் சில நாள் எழுந்தருளவைத்துப் பல சேவைகளையும் செய்வித்து வைத்தார். அவர் வேண்டுகோளின் வண்ணம், ‘திருமலைச் சிறப்பு' என்ற சொற்பொழிவினைச் சுவாமிகள் ஆற்றினார்கள். அப்போது 'திரு' என்ற அடைமொழியையும், 'மலை' என்ற சொல்லையும் தனித்தனியாக விளக்கிவிட்டு ‘மலை நிலத் தெய்வமாம் முருகன்' பெருமைகளையும் விளக்கினார்கள். முருகன் செந்தி முதல்வன் என்று கூறியவுடன் அவனை இன்னார் மகனெனக் கூறாமல் 'மாயோன் மருகன்’ என்றுதான் நக்கீரர் பாடினார்; ஆதலால் அவனுக்கும் மாமனுக்கும் தொடர்பு மிகுதியாதல் பற்றி அவனை அவன் மாமனாகத் தொழும் இடம் ஈது என விளக்கினார்கள். அருணகிரிநாதர் திருமலையின்மீது அதிகப் பற்றுக் கொண்டவர். இங்கு பலநாள் இருந்திருப்பார் போலும். அதனால்தான் இன்றும் 14 பாட்டுகள் உள எனக் குறிப்பிட்டருளினார்கள். திருமாலின் பெருமைகள் பலவும் பேசி முடித்தார்கள்.

சுவாமிகள், தெய்வத் தொடர்பாகவே சொற்பெருக்காற்றுவதாயினும் தமிழ் மொழியின் ஏற்றம் பற்றிக் குறிப்பிட மறக்கவேமாட்டார்கள். தமிழிலக்கியங்களில் ஆங்காங்குக் காணப்பெறும் சொல்லினிமை பொருளினிமைகளைச் சுவை பட எடுத்துப் பேசுவதில் அவர்கட்கு இணையாவார் எவருமிலர். இங்ஙனம் பேசுவனவற்றிற் சில குறிப்பிடுவாம். தோத்திரங்களில்,

‘இல்லறத்தா னல்லேன் இயற்கைத் துறவியல்லேன் நல்லறத்து ஞானியல்லேன் நாயினேன் - சொல்லறத்துள்
ஒன்றேனு மல்லேன் உயர்த்திருப் போரூரா !
என்றேநான் ஈடேறு வேன்’

என்பது, சிதம்பர சுவாமிகளின் பாட்டு. இதனைச் சொற்பொழிவின் இறுதியில் வழிபடு தெய்வமீது பாடலாகப் பாடுவர் 'என்றே நான் ஈடேறுவேன்' - என்னும் வினா, என்னை ஈடேறவைக்குங்காலம் எது? என வினாவியதாகப் பிரித்துக் காட்டுவர். பின்னும் ஒருமுறை அதனைப் பாடி 'உயர்ந்த திருப் போரூரா என்றே நான் கூறியே ஈடேறுவேன் என்ற பொருளில் கூறுவார்கள்.

‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே'

என்பது, அருணகிரிநாதர் கந்தரனுபூபதியின் இறுதியான 51ஆம் பாடல், முதல் முறையாக, இங்ஙனமே பாடுவார்கள். அடுத்து, உருவாய் - அருவாய்; உளதாய் - இலதாய்; மருவாய் மலராய்; மணியாய் - ஒளியாய்; கருவாய் - உயிராய்; கதியாய் - விதியாய் - என்றிவ்வாறு எதிர்மறைத் தொடர்களையும், இணைந்த தொடர்களையும் கூட்டிப் பொருளுணரும் வகையிற் பாடுவார்கள்.

இறுதியில், உருவாய் - அருவாய் - வருவாய். உளதாய் - இலதாய் வருவாய், மருவாய் - மலராய் வருவாய், மணியாய் - ஒளியாய் வருவாய், கருவாய் உயிராய் வருவாய், கதியாய் - விதியாய் வருவாய் என்றின்ன இரட்டைத் தொடர்களைக் கூறிச் சிறப்பாக, இறுதியில் குருவாய் வருவாய்! என முடிக்குங்கால் அன்பர்களின் கண்களில் நீர் பெருகுவதைக் காணக்கூடும். குருவோடிணைத்துக் கூற எப்பொருளும் இல்லையன்றோ?

‘ஏழைக் கிரங்குதெய்வம் என்றுன்பால் வந்தடைந்தேன், ஏழைக் கிரங்க இது தருணம் ஊழைவென்ற
சீலமுனி வோர்போற்றும் தென்பழநி வெற்பில்உறை
நீல மயில்முருகா நீ.'

என்ற பாடலைக் கூறுவார்கள். பின்னும் ஒருமுறை, நீல மயில் முருகா! நீ ஏழைக் கிரங்கு தெய்வம் எனத் தொடங்கிப்பாடி விற்பூட்டுப் பொருள் கோளாவதனை நன்கு தெளியப் பாடி அன்பரிடையே பழநியாண்டவனின் எளிவரும் கருணைத் திறத்தைச் சுட்டாமற் சுட்டிப் பாடிக் கண்ணீர்வாரத் தொழுது முடிப்பார்கள்.

ஏதேனும் ஓர் இலக்கியத்தைப் பாடம் நடத்துங்கால், ஒரு பாடலை முதன்முறை படிப்பார்கள். பின் பதம் பிரித்துப் படிப்பார்கள். அதன் பின் அன்வயப்படுத்திப் படிப்பார்கள். பிறகு அதன் பயனிலையை முதலிற் கூறி, செயப்படு பொருள்கூறி, பின் அடைமொழிகளை இணைத்துக் கூறி அம்முறையே எழுவாயைக் கூறிய பின்னரும் யாவற்றையும் ஒருமுறை கூறியபின்னரே, பதப் பொருள், மொழிப்புரை கூறுவார்கள். ஒருகுறி கேட்போன், இருகால் கேட்கவேண்டு மென்ற எண்ணமே எழாதவராகிவிடுவார். பின்னும் கேட்போரை அப்பாடலைப் படிக்கச் செய்வர். அவரும் பதம் பிரித்தும் கூடியவரை கொண்டு கூட்டியும் படிக்க வேண்டும். அங்ஙனம் படிக்காதவரை அங்ஙனம் படிக்கச் செய்வார்கள். அதன் பின்னரே அடுத்த பாட்டிற்குச் செல்வர், இங்ஙனம், சிறிதும் சோர்வின்றிப் பாடம் நடத்துவார் யாரேனும் உளரோ?

'அறிவு மழைநீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங் கொண்டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பலதிறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல, அன்புவெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து,அருள் அலை கொழித்துக் கொழித்து ஓடும். நீர் பருகப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி முழக்கி லெழும் இன்னொலி கேட்டு அதில் ஈடுபட்டுத் தன்தன் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலெழும் மின்விசையால் பிணி நீங்கப் பெறுவர். ஞானியார் சுவாமிகள் பேச்சால் விளைந்த நலன் அளப்பரிது.' திரு.வி.க.

தமிழ்ப் பற்று : இந் நிலவுலகில் நம் அடிகளார் எழுந்தருளி யிருந்தகாலம் அந்நிய ஆட்சி நடைபெற்ற காலம், அன்று, தமிழர் மட்டுமே யன்றித் தெலுங்கர், மலையாளிகள் ஆகிய மொழியினரும் அலுவலங்களில் பணியாற்றியவர்கள், தெலுங்கோ, மலையாளமோ பேசும் இருவர் ஒருவரோடொருவர் (இன்னின்னாரென அறிந்தபின்) பேசிக் கொள்ளுங்கால் அம்மொழியிலேயே பேசுவதும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இருவர் அங்ஙனம் பேச நேருங்கால் அயல் மொழியாம் ஆங்கிலத்திலே பேசிக்கொள்வதும் எதனால்? தம் தாய் மொழி யினிடத்தும் பற்றின்மையாலா? புறக்கணிப்பாலா என்று வினவி அத்தகையோர் திருந்தும் வண்ணம் சொற்பெருக்கினிடையே குறிப்பிடுவார்கள்.

காலந் தவிராமை : சுவாமிகள், காலத்தின் அருமையினை நன்கு உணர்ந்தவர்கள். தம் நித்திய நியமங்கள் எல்லாம் காலம் தவிராமற் செய்வார்கள். பிறரும் அவ்வாறே நடந்து கொள்ளுமாறு தூண்டுவார்கள். சொற்பொழிவு, இன்ன நேரத்தில் துவக்கப்பெறு மென நிகழ்ச்சியில் அச்சிடப் பெற்றுவிட்டால், அந்த நேரத்திற்கு முன்னதாகவே சுவாமிகள் அங்கெழுந்தருளி விடுவார்கள்.

1934- ஆம் ஆண்டில் திருவண்ணாமலை சக்தி விலாச சபையில், அண்ணாமலையானின் பெருவிழா நாட்களிற் சொற்பொழிவுகள் சுவாமிகள் தலைமையில் நடந்தன. அச்சிடப் பெற்ற நிகழ்ச்சி நிரலில், பகல் 1.30மணிக்கு எனக் காணப்பெற்றது. சுவாமிகள், 1.25க் கெல்லாம் அங்கிருக்குமாறு புறப்பட்டு எழுந்தருளி விட்டார்கள். மக்கள் கூட்டம் இல்லா திருந்தமை கண்டு, திருமுறைகளை ஓதக் கட்டளையிட்டருளினார்கள். அங்ஙனமே ஒருமணி நேர அளவு திருமுறை ஓதப்பெற்றது. அன்று ஒலிபெருக்கி நம் நாட்டிற் பரவவில்லை. பின்னர் சுவாமிகள் எழுந்தருளியமை கண்டும் கேட்டும் கூட்டம் சேர்ந்தது. தலைமையுரை முதலாம் நிகழ்ச்சிகள் தொடங்கப் பெற்றன. சொற்பொழிவாளர்களும் பின்னரே வந்தனர். சுவாமிகளின் அன்றாட நடைமுறை, காலத்தில் நிகழ்வது. சித்தாந்தம் இதழில் ஞானியாரடிகளுடன் மூன்று மாதங்கள் என்ற கட்டுரையில் ஆ. சிவலிங்கனார் தெளிவாக எழுதியுள்ளார்.

ஞாயிறுகளிலும், கிருத்திகை, கந்தர்சஷ்டி முதலாகிய நாட்களிலும் மடாலயத்தில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். சிறப்பானவர்கள் எவரேனும் மடாலயத்திற்கு வந்து, சுவாமிகளிடம் அளவளாவிக் கொண்டிருந்தார்களேயாயினும், குறிப்பிட்ட நேரத்தில் திருமுறைப் பாராயணம் தொடங்கி விடுமாறு ஆணையிட்டுவிட்டு, சில நிமிடங்களுக்குள், சுவாமிகள் ஆங்கெழுந்தருளித் தம் பணியில் ஈடுபட்டு விட்டார்கள்.

மார்கழி மாதத்தில் காலை 6.00 மணிக்கு விரிவுரை தொடங்க வேண்டும். அவர்கள் 4 மணிக்கு நீராடி ஆன்மார்த்த பூசை முடித்துக்கொண்டு, பின்னர், மடாலயத்தில் எழுந்தருளும் முருகப் பெருமானுக்கும் பூசை செய்துவிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் விரிவுரை தொடங்கி விடுவார்கள்.

திருவருணையில் ஈடுபாடு : சுவாமிகளுக்குத் திருவண்ணா மலையிற் பெரிதும் ஈடுபாடு உண்டு. தம் முதற் குருநாத தோற்றத்தினை அண்ணாமலையார் அருளிச் செய்தார் என்பதனாலோ, 'நினைத்த மாத்திரத்தில் முத்தியளிக்கும் தலம்' என்பதாலோ, தம் மடாலய முதற் குருநாதர் கார்த்திகை மாதக் கார்த்திகை நாள், சோதி, தோன்றும் வேளையில் தோன்றினார் என்பதாலோ, அனைத்தும் சேர்ந்தோ காரணமாகலாம். திருக்கார்த்திகைப் பெருவிழாக்களை அடிக்கடி தரிசனம் செய்யச் செல்வார்கள். அவர்களது சொல்லமுதம் பருக ஆண்டுறைந்தார் பெரிதும் விரும்புவார்கள். முற் குறிப்பிட்டவாறு, மாலையிலோ பிற்பகலிலோ தொடங்கும் சொற் பொழிவு முடிய இரவு 9.00 அல்லது 10.00 மணியாகிவிடும். பின்னரே நித்திய நியமங்களை முடித்துச் சிறிதளவு உணவு கொள்வார்கள். இரவு வீதிவலம் வருகையில் இறைவனை வழிபடுவார்கள், வாத்தியங்கள் தொடங்கி, வேத, தேவார, திருப்புகழ் பாராயண முதலிய சுவாமிகளின் முன்னிலையில், சற்று நீண்ட நேரமே தங்கிப் பணியாற்றும். சற்றேறக் குறைய 2 மணியும் ஆகிவிடும். பின்னரே உறக்கம். ஆயினும் வழக்கம் போல் 4 மணிக்கே விழித்துக் கொண்டு அன்றாடச் செயல்களில் ஈடுபட்டு விடுவார்கள். பகலில் பற்பலருக்குத் தரிசன மருளியும், அளவளாவியும் மகிழ்ச்சி யூட்டுவார்கள். குறிப்பிட்ட நேரம் கடவாமல் சொற்பொழிவுக் கூட்டத்திற் கெழுந்தருளி விடுவார்கள். இங்ஙனம் ஓய்வு சற்றுங் கொள்ளாமல் மன்பதை உய்தி வேண்டியே பணிகளை மேற்கொண்டார்கள்.

1932 ஆம் ஆண்டில் ஆரணி, ஆற்காடு, குடியேற்றம் முதலிய ஊர்களில் தொண்டு ஆற்றிவிட்டுக் கார்க்கூர் என்ற ஊருக்குச் சென்றிருந்தார்கள். அவ்வூரினராய ஓரன்பர், தம் ஊருக்கெழுந்தருளிச் சமயச் சொற்பொழிவுகள் ஆற்ற வேண்டியதால் அங்கு எழுந்தருளினார்கள். சென்று சேர்ந்த காலம் முன்னிரவு. தங்கியிருக்க ஓர் வீடமைத்திருந்தனர். அவ்வீடு முழுவதற்கும் புதிதாக வெண்சுதை தீற்றப் பெற்றிருந்தது. பின்புறம் ஓர் குறடும், அதத்குக் கீழே மூன்றடி தாழ்ந்திருந்த ஓர் தாழ்வாரமும் இருந்தன. வெண்சுதை தீற்றப்பெற்றிருந்ததால் வேறுபாடறியாமல், குற்டு நெடுக இருப்பதாக எண்ணிச் சென்ற போது, வீழ்ந்துவிட்டனர். ஒரு காலின் எலும்பு முரிந்துவிட்டது. பாதத்திற்கும் முழங்காலுக்குமிடையே அம்முரிவு ஏற்பட்டுவிட்டது. குடியேற்றம் வைத்தியரும், திருத்தணிகை வைத்தியரும் வந்து பார்த்துக் கால் எலும்பு பொருந்துவது கடினமென்றும், வேலூர் டேனிஷ் மிஷன் வைத்தியசாலை மருத்துவர் முயன்றால் நலமாகக் கூடும் எனவுங் கூறிவிட்டனர். அவ்வண்ணமே வேலூருக்கு வந்து மருத்துவரிடம் காட்டப் பெற்றது. அங்கு X-Ray வழியாக முரிவினைக் கூர்ந்து கவனித்த மருத்துவர், எலும்பு முரிந்து ஒன்றன்மேல் ஒன்றாக ஏறி நிற்பதையறிந்து இது ஒருக்காலும் கூடாதெனவும், காலை முரிந்த பகுதிக்குமேல் நீக்கி எடுத்துவிட்டால் உயிர் பிழைக்கக் கூடுமெனவும் தெரிவித்து, அவ்வாறு செய்துவிடலாமா? என்றபோது அடிகளார், ‘முருகன் செயல் அங்ஙனம் ஊறுபட்ட நிலையில் இருக்க விடாது. ஆகவே, பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறி முரிபட்ட காலுடன் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்தனர். உடனே எலும்பு முரிவுத் தனி வைத்தியர் வருவிக்கப் பெற்றார். அவர் புத்தூரினர், தனக்கேயுரிய வைத்தியம் செய்தனர்.

சுவாமிகளோ தம்பிரதம குருமூர்த்திகளை இடைவிடாது தியானம் செய்தும், ஆறுமகப் பரம் பொருளை வேண்டிக் கொண்டும் வைத்தியர் கூறியவாறே இருந்தார்கள். குருவருள் கூட்டுவித்தது. சில மாதங்களில், கட்டையூன்றி நடக்கத் தொடங்கினார்கள். பின்னும் சில மாதங்கள் கடந்த பின் கோலூன்றி நடந்தும், கால் ஊனம் சிறிது மின்றிப் பழைமை போலாகி நடக்கத் தொடங்கிவிட்டார்கள்.

கால் ஊனமின்றித் திருவருள் பாலித்தருளுமாறு தம் ஆதீன முதற்குரவரை வேண்டிப் பாடப்பெற்ற வெண்பாக்கள் பல. அவற்றுள் 49 கிடைத்தன. அவை இப்புத்தகத்திற் பிற்சேர்க்கையாக இணைக்கப் பெற்றுள்ளன. அவை, படுக்கையிலிருந்த்வாறே சில காகிதங்களில் அவ்வப்போது சுவாமிகளால் எழுதப் பெற்றவை 'குரு துதி' எனும் பெயரின.

இந்த நிகழ்ச்சியில் ஓர்சிறப்பு என்ன வெனில், வேலூர் உலகப் புகழ்பெற்ற மருத்துவமனையில் எலும்பு, நரம்பு தனிப் பிரிவின் மருத்துவர்கள் ஆராய்ந்து, இவ்வெலும்பு கூடவே வாய்ப்பில்லை; ஒன்றன் மேல் மற்றொன்று ஏறிக்கொண்டது. காலைத் துண்டித்தால் தான் உயிர்பிழைக்கலாம்; இல்லை யெனிற் சில நாளுக்குள் புரையோடி, உயிர்க்கே தீங்கு நேரும் எனக் கூறிய பிறகும் அடிகளார் குருநாதன், முருகன் மீது கொண்ட அடங்காத பக்தியால் சுகம் பெற்றார்கள் என்பதேயாகும்.

இவ்வாறு நலம் பெற்ற பிறகு, திருவண்ணாமலையை நடந்தே வலம் வரவேண்டுமெனச் சுவாமிகள் திருவுளம் கொண்டருளினார்கள். 1934ல் , எழுந்தருளியபோது, 8 மைல் சுற்றளவுள்ள தொலைவு நடக்க வேண்டுமெனச் சிலர் மறுத்தமையால் நகர்வலம் வந்து தீப தரிசனம் செய்தார்கள். ஆனால் 1941 அக்டோபர் மாதத்தில் (விஷு கார்த்திகை) தீப தரிசனத்தன்று அதிகாலை புறப்பட்டுக் காற்று மழையையும் கருதாமல் பாராயணத்துடன் மலைவலம் சூழந்தார்கள். அக்காலை அவர்கள் 68 ஆண்டுகளைக் கடந்தவர்களென்பதும், சிறிது தொலைவேனும் நடந்தறியாதவர்க ளென்பதும், பாதக்குறடு அணியாமல் வெறுங்காலுடன் நடந்து வலம் வந்தபின் மழையைப் பொருட்படுத்தாமல் கோபுரத்தின் வெளியே அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரம் செய்தபின்னரே, தாம் எழுந்தருளிய விடத்திற்கு மீண்டார்க ளென்பதும் கருதத்தக்கன. இது பின் வருவோர்க்கெல்லாம் நல்வழி காட்டும் நிகழ்ச்சிகளுள் ஒன்று.

துன்பம் சுடச்சுட நோக்கிற்பவர்

யாரொருவர், நிறைந்த அன்புடன் இறைவனைத் துதிப்பதையே கடனாகக் கொள்கிறாரோ, அவர் துன்பம் அடைதலே உலகியற்கை. நல்லதற்கு இடையூறு நாற்புறமும் உண்டென்பதும் பழமொழியன்றோ? அவ்வாறே நம் அடிகளார்க்கும் சில சில உடல்நலக் கேடுகள் வந்ததும் உண்டு.

இயல்பாகவே, அவர்களுக்குச் சர்க்கரை வியாதி இருந்தது. அது அவர்களது 50 வயதிற்குமேல் பல உணவுக் கட்டுப்பாடுகளை உண்டாக்கி விட்டது.

1929ஆம் ஆண்டில் சுவாமிகள் புறமுதுகில் கட்டி (ராஜ பிளவை)யால் துன்புற நேர்ந்தது. அது மிக மிக ஆபத்தான நிலைக்குக் கொண்டுவந்து விட்டது. அதற்கு அறுவைச் சிகிச்சை செய்தவருள் ஒருவர், சுவாமிகளிடம் மிகப் பற்றுக்கொண்ட திரு பாலவேலாயுதம் பிள்ளையவர்கள். மற்றவர் திரு. கிருஷ்ண அய்யங்கார். அறுவைச் சிகிச்சைக்கு முன்னர், அடுத்த பட்டங் குறித்து உயிலும் எழுதிவைக்கப் பெற்றுவிட்டது. ஆனால் இறையருள் நம்பால் இருந்தது. அதன்பிறகு அவர்களது சொல்லருந் தொண்டுகளால் தமிழன்னை அரியணை வீற்றிருக்க வேண்டு மென்பதற்காகவே முற்றும் நலம் கிடைத்தது. பிறகும் அவர்கள் 12 ஆண்டுகள் நமக்கெல்லாம் வழிகாட்டும் பேறுபெற்றோம்.

1932ஆம் ஆண்டில் கார்க்கூரில் ஏற்பட்ட கால்முரிவு பற்றி முன்னமே குறிப்பிடப்பட்டது.

1937டிசம்பரில் வேலூரில் கூடிய சைவ சித்தாந்த மகா சமாச ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கிய அடிகளார்க்குச் சுரநோய் வந்துற்றது. அது இரவில் மிகுதியுற்றும், பகலிற் குறைந்தும் காணப்பட்டது. அன்பர்கள் சுவாமிகளிடம் , கூட்டத்திற்குச் செல்ல வேண்டா எனவும் வற்புறுத்தினர். ஆனால், இறைவன் திருவருள் நமக்குத் துணை இருக்கும்; அவன் திருவருள் நம் கடனாற்றும் போதே உயிர் நீங்க வேண்டுமென்றிருந்தால் அப்படியே நேரட்டும்; தன் கடன் அடியேனையும்தாங்குதல், எம் கடன் பணிசெய்து கிடப்பதே: என்று விடையிறுத்திப் பணியில் முனைந்தார்கள். மூன்று நாட்களும் வாட்டிய வெப்புநோய் கூட்டம் முடிந்த பின்னர் எங்கொளித்ததோ வழக்கம் போலவே பணிகளில் ஈடுபட்டு வந்தனர் நம் அடிகளார்.

1939-ஆம் ஆண்டில், சைவ சித்தாந்த மகா சமாசச் செயலராக இருந்த திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் கோவூர் (குன்றத்தூர் சேக்கிழார்) திருமேனிச் சுரர் கோயில் தருமகர்த்தராக இருந்தார். 1935ல் சுவாமிகள் எழுந்தருளியது போலவே மீண்டும் எழுந்தருள வேண்டு மென்ற அவரது அழைப்பிற்கிணங்கச் சுவாமிகள் ஆங்கு எழுந்தருளினார்கள். திருவிழாவின் அங்கமாகப் பல சொற்பொழிவுக ளாற்றினார்கள். அங்ஙனமே சென்னை சென்று பற்பல அன்பர் வேண்டுகோளை நிறைவேற்றுவான் தொடங்கிப் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். அவற்றுள் ஐக்கிய நாணய சங்க ரிஜிஸ்டரார். திரு. கீ. தெய்வ சிகாமணி முதலியாரவர்களின் வேண்டுகோளின் வண்ணம் அவரது இருப்பிடத்தில் 'மெய்கண்டார்’ என்னும் பொருள்பற்றி ஆற்றிய சொற்பொழிவு கேட்டோர் யாவரையும், இத்தகைய சொற்பொழிவினை வேறு எவரிடமும் கேட்டலரி தெனத் துணிய வைத்தது. பற்பல இடங்களிலும் சொற்பொழிவுகளை நிகழ்த்தியருளிக் கொண்டிருந்த சுவாமிகள், கோடைக்காலம் காரணத்தாலும், மிகுதியான சொற்பொழிவுகளில் ஈடுபட்ட காரணத்தாலும் இடது துடையில் தோன்றிய ஓர்பெரிய கட்டியால் துன்புற்றனர். அது சத்திர சிகிச்சையால் நலம் பெற்றது. முருகன் திருவருள் சுவாமிகளை மீண்டும் தொண்டுகளில் ஈடுபடுத்தியது.

31.5.1941-ல் திருவோத்தூர், பரிதிபுரத்தில் நடைபெற்ற பாதுகவி மாணவர் கழகத்தின் பன்னிராண்டாம் ஆண்டு விழாத் தலைமைப் பணியை யாற்றிவிட்டுப் பற்பல இடங்களிலும் தொண்டு செய்து திருக்கோவலூர் மீண்டு கொண்டிருந்த சுவாமிகளுக்கு வயிற்றுப்போக்கு வந்துற்றது. கண்விழிப்பு, காலந்தவறிய உணவு, கவனித்து வேளை தவறாமல் உணவு முதலிய நல்ல முறையில் அளிக்கப் பெறாமை, இடையறாத பணி ஆகியவையே அதற்குக் காரணமாயின. இடைவழியில் வயிற்றுப் போக்கு நேர்ந்ததால், போகிகள், தம் துன்பம் பொருட்படுத்தாதவராய் இரவோடிரவாக நடைகொண்டு, அதிகாலை 5 மணியளவில் திருக்கோவலூர் மடாலயத்திற் சேர்ப்பித்தனர். அப்போது சுவாமிகள் உடம்பிற் சூடில்லை. மிகவும் தளர்ந்த நிலையில் பேசவும் இயலாத நிலையிலிருந்தனர். உடனே டாக்டர் வருவிக்கப் பெற்றார் . அவர் மருந்து கொடுத்து வயிற்றுப் போக்கை நிறுத்தி, சூடுஉடலிலும் வரப்பெற்றார்கள். சில தினங்கள் கடந்தபின் உடல்நலம் பெற்றது. சுவாமிகள், சமயம் வாய்த்த போதெல்லாம் டாக்டர் துரைசாமி முதலியாரின் அருஞ்செயலைப் போற்றி நன்றி பாராட்டுவார்கள்.

தனக்கென வாழாமை :

‘உடலினை யான் இருந்து ஒம்புகின்றேனே’ என்றும், ‘உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்றும் கூறிய திருமந்திரங்களில் உடலின் அருமையும் அதனைப் போற்றும் முறைகளும் கூறப்பட்டுள்ளனவேனும், நம் சுவாமிகள் தம் உடலைப் பேணுவதிற் கருத்துச் செலுத்தாதவர்களாய், பிறர் உயிரை - ’பிறர் உடம்பினுள் உத்தமனைக் காண’த் தக்க பேரொளியை வளர்த்துக்கொண்டே நாடெங்கணும் பவனி வந்தார்கள்.

திருப்பாதிரிப்புலியூரில் தங்கியிருந்த காலங்களில் மட்டுமல்லாது, சென்ற சென்ற இடங்களிலெல்லாம் எந்த நேரத்தில் எவர்வேண்டினும் அவருக்குப் போதிப்பதிலேயே கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள். இந்தத் தகைமை எவரிடங்காண இயலும்?

"..,. கடவுட் பக்தியும் சிறப்பாக முருகப் பெரு மானிடத்துப் பேரன்பும் உடையவர்கள் கல்வியறிவு டையோரை நன்கு மதித்து அளவளாவும் இளிய குணம் உடையவர்கள். தமிழ்மொழியில் பேரார்வத்தையும் சைவ சமயப் பற்றையும்தமிழ் மக்களுக்கு விளைத்து வந்த இவர்கள் அரிய சொற்பொழிவுகள், இத் தமிழபு நாட்டில் நிகழாத இடம் இல்லையென்றே சொல்லாம். மடாதிபதிகள் செய்யவேண்டிய அரிய செயல்களெல்லாம் திரு. ஞானியாரிடத்து நன்கு காணப்பட்டன. இக்காலத்துள்ள மற்றைய மடாதிபதிகள் இவர்கள் முறையைப் பின்பற்றுவார்களாயின் தமிழ்உலகத்திற்கே சிறந்த பயன் விளையும். இவர்கள் ஒழுகிய நெறி ஏனையோ ருக்குச் சிறந்த வழிகாட்டியதாக உள்ளதென்று கூறலாம்...”

.....இவர்கள் நினைவுக்குறியாக ஒரு தமிழ்க் கலைமாடம் சென்னையம்பதியில் நிறுவப்படுமாயின் தமிழர் நன்றியறிவு சிறந்தொன்றாகத் திகழ்வதாகும். எனக் குறிப்பிட்டுச் சுவாமி களது பெருமையை வியந்து போற்றியவர்கள் பண்டிதமணி - மு. கதிரேசச் செட்டியாரவர்கள்'.

“.... அவர்களுக்கு இவ்வளவு பெருமை ஏன்? அவர்கள் நன்கு படித்தவர்கள், ஆங்கிலம் தெரியும். வடமொழி நன்கு தெரியும். தமிழில் அவர்கள் படிப்பு மிகப் பரந்தது, ஆழமானது. இத்துடன் உலகியலறிவும் உண்டு. கற்றார்க்கும், கல்லாதார்க்கும் பயன்படும் படி பேச வல்லவர்கள். இனிமையாகப் பேசவார்கள். அவர்கள் அன்பு நிறைந்தவர்கள், ! எல்லாருக்கும் புன்சிரிப்பு; சில நல்ல வார்த்தை மடாதிபதிகள் என்ற நினைப்பு அவர்கள் வார்த்தைகளையோ, செய்கைகளையோ சுட்டவில்லை. விருந்தினரை நின்று விசாரிப்பார்கள், உளறுபவர்க்கும் கோபமின்றி அறிவு புகட்டுவார்கள். எல்லாரும் அவர்களைப் பார்க்கமுடியும். எப்போதும் பார்க்கலாம்.

அவர்கள் செய்த தொண்டுகள் பல; தங்கள் மடத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார்கள். அதற்குப் பெரும் புகழ்தந்தார்கள். பலருக்குத் தமிழறிவு புகட்டினர். கிறிஸ்தவர்களும் அவரிடம் படித்திருக்கிறார்கள். பலருக்குச் சமய அறிவு புகட்டினர். அநேகர்மனதில் அன்பெனும் விதையை நட்டார்கள். பற்பலர் வாழ்க்கையைத் திருத்தியமைத்தனர். அவர்களிடம் உபதேசம் பெற்றோர் கணக்கற்றவர். அவர்கள் சொற்பொழிவு கேட்டோர் பல்லாயிரவர்.

ஊர்தோறும் சென்று சைவ உண்மைகளைப் பரப்பியவர் சமய குரவர் மூவர். அவர்களுக்குப் பின்னர் அத்தொண்டு செய்தோர் ஒருவரையும் எனக்குத் தெரியவில்லை. அத்தொண்டை இக்காலத்தில் செய்தவர்கள் ஞானியார் சுவாமிகள்....”

இங்ஙனம் குறிப்பிட்டெழுதியவர், திருவாளர் கா. இராமநாதன் செட்டியார் B.A., B.L. ஆவர்.

அயல் மதத்தார், குறிப்பாகக் கிருஸ்துவ மதத்தார், ஆண்டுதோறும் ஓரிடத்தில் ஒரு பேரவை கூட்டிப் பல வகையில் மதச் சீர்திருத்தத்திற்கும், ஆக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் வழியமைப்பதுபோல, நம் சைவ சமயத்திலும் கூட்டப் பெறல் வேண்டுமென்பதனை அந்நாளிலேயே நம் அடிகளார் வற்புறுத்தினர். அங்ஙனம் ஓர் சபையைத் தாமே நடத்திக் காட்டியமை. 1929-ல் மே திங்களில் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. ஆயின் பல மடாதிபதிகளும் ஒருங்கு கூட வேண்டுமென்பதும் அடிகளாரின் எண்ணம். அது இன்றைய தெய்வீகப் பேரவையாக மிளிர்கின்றது.

தாமே பலமடங்களுக்குச் சென்று மடாதிபதிகளைச் சந்தித்து ஆக்க வேலைகளுக்கு வழி காணுமாறு தூண்டியதுண்டு.

1916-ஆம் ஆண்டில் சுவாமிகள் மயிலத்திற்கு எழுந்தருளி, ஆங்கு மூன்று நாள் தங்கியிருந்து சொற்பொழிவுகள் ஆற்றியும் சமயப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டும் மீண்டதுண்டு.

அதே ஆண்டில் திருவண்ணாமலை ஸ்ரீ ரமண மஹரிஷிகளை, விருப்பாட்சி குகையிற் சந்தித்து அளவளாவினார்கள்.

1925-ல் பேரூர் ஸ்ரீ சாந்தலிங்க அடிகளார் மடத்திற்கு எழுந்தருளி ஆண்டு விழாவை நிகழ்த்தினார்கள்.

1927-ல் புதுவை அம்பலத்தாடும் சுவாமிகள் மடத்திற்கு எழுந்தருளி அப்போதைய தலைவர்களுடன் அளவளாவிச் சமய வளர்ச்சிக்குத் துணை தேடுமாறு வற்புறுத்தினார்கள்.

திருவோலக்கப் பொலிவு

‘...முருகன் சேவடி வருடி யுருகும் ஈரநெஞ்சும், அவன் புகழ் பேசி இனிக்கும் நன்னாவும், தண்மை பொழியும் செவ்விய நோக்கும், வெண்ணிறு துதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங்குஞ் செவியும், பொன்னொளிரும் மணி மார்பும்,கருமைக் கதிர் விரிக்குந் திருமேனியும், ‘சண்முகா - சண்முகா' என்று நீறளிக்கும் நீண்ட கையுங் கொண்ட அடிகளின் திருவோலக்கப் பொலிவு என் உள்ளத்தில் ஓவியமெனப் படிந்து நிற்கிறது. அஃது எவர் உள்ளத்தையும் கவரும்; எவர்க்கும் எளிதில் இன்பூட்டும் .....’ -

‘ஸ்வாமிகளின் உருவத் தோற்றத்தைப் பார்த்ததுமே “இதோ ஒரு பெரியார் இருக்கிறார்” என்னும் உணர்ச்சி நமக்கு உண்டாகும். அவருடைய வாய்மொழிகளைக் கேட்டு, அவருடைய வாழ்க்கை முறையையும் கவனித்தோமானால் அவருடைய பெருமை மேலும் மேலும் நமக்குப் புலனாகும். "அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் பெரியார் இவரல்லவா?” என்று எண்ணி எண்ணி வியப்போம்.

'கல்கி' ஆசிரியர். ரா. கிருஷ்ணமூர்த்தி,
1939 நவம்பரில் ஆனந்த விகடனில் எழுதியது

“ஞானம் - மெய்ஞ்ஞானம் -துவராடை தாங்கிய மேனி-அங்க இலிங்கம் - தாழ்வடங்களின் தனியிடம் - திருநீற்றின் பொலிவு - தமிழ் மணங் கமழும் புன்முறுவல் - இதோ தோற்றுகின்றது....’

வித்துவான் - மு. . இரத்தின தேசிகர், குடவாயில்

'......காட்சியளவில் இவர்தம் வடிவும், அழகும் மனத்தைக் கவர்ந்தன. சிறிதே சிவந்து நிமிர்ந்த உருவம், துவராடை உடுத்த துகள்தீர்மேனி, பருமையும் மெலிவுமின்றிப் பாங்குற அமைந்த உடல் விரிந்த கொள்கையின் பரந்த நெற்றி. ஆழ்ந்த நோக்குடன் அன்பொழுகு கண்கள். நேர் நிமிர்ந்து முனைவளையாக் கூர் அறிவு காட்டும் கூரிய மூக்கு. தமிழ்ப் புலமை பூக்கும் தனி வாய். தெய்வ ஒளி வீசும் திருமுகம். இவர் முகத் தோற்றத்தை உற்று நோக்குக. இதில் தோற்றுவது யாது? சங்கத் தமிழின் தீங்களிப்போ? சிந்தை சேர்ந்த சிவத் தொளியோ அன்பு பழுத்த அகத் தெளிவோ! அறிவு பழுத்து அமைவளமோ தமிழின் பழுத்த தனியழகோ யாதெனப் புகல்வது? இவை யாவும் திரண்டெழுந்த “ஞானத்தின் திருவுருவோ நம் எதிரே தோன்றுவது? கண்டன யாவையும் வாரி வாரி உண்டன. கண்கள். கொண்டன களிப்பு.

......எழுத உரிய வடிவும் அழகும் இயற்கையிற் பெற்ற இவர் காதில் அசைந்தது குண்டலம். கழுத்தில் தவழ்ந்தது கண்டிகைத் தாவடம்.....’

சென்னை, டிப்டி கலைக்டர், ராவ் சாஹிப்,
கே. கோதண்டபாணி பிள்ளையவர்கள்.

ஆலயத் தொடர்பு

பண்டை நாளில் மடங்களோடு ஆலயங்களைச் சீரிய முறையில் நடத்தும் பொறுப்பும் மடாதிபதிகளுக்கு இயைவிக்கப் பெற்றன. அவர்களும் நன்குபேணி வளர்த்துச் சீரிய தொண்டு பல புரிவர். இடைக்கால நிலைவேறுபட்ட காரணத்தால் தோன்றியதே இந்து அறநிலையக் கழகம். சில காலம் 1935 முதலாம் ஆண்டுகள் என நினைவு. அக் கழகத்தின் தலைவராகத் திருச்சி திருவாளர் T.M. நாராயணசாமிப்பிள்ளை, MA, B.L., அவர்கள் தலைமைப் பதவியிலிருந்தார்கள். கோவை திரு. C.M. இராமச்சந்திர செட்டியார் (கோவைகிழார்) B.A., B.L., அவர்கள் ஆணையராக இருந்தார்கள் அவ்விருவரும் சமய வளர்ச்சிக்காம் அரும் பணிகளைக் குறித்துச் சுவாமிகளிடம் அடிக்கடி வந்து கலந்துரையாடுவார்கள். அவர்களுக்குச் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியனவே ஆலயங்களுக்கு ஆணை மூலம் அறிவிக்கப் பெற்றன. அவற்றுட் சில :

1. அந்தந்தத் தல தேவார - பிரபந்தப் பாக்களைக் கூடியவரை ஆலயச் சுவர்களில் எழுதிவைத்தல். அவையில்லாத ஆலயங்களில் பொருத்தமுள்ள பாடல்களை எழுதி வைத்தல்.
2. தலத் தொடர்பான நிகழ்ச்சிகளையும், பொதுவான சமய நிகழ்ச்சிகளையும் சொற்பொழிவு, கதை முதலிய வாயிலாக மக்களிடையே சமயப்பணிகளைப் புரிதல்.
3. அந்தந்தத் தல வரலாறு அந்தந்தக் கோயிலில் எழுதப் பெற்றோ அச்சிடப் பெற்றோ போற்றி வைக்கப் பெறல். அது கழக ஒப்புதல் பெற்றிருத்தல் சிறப்பு.
4. திருமுறைகள் - பிரபந்தப் பாக்களைப் பூசைவேளைகளில் முறையோடு பாடச் செய்தல்.
5. விழாக் காலங்களில் சமயச் சொற்பொழிவு முதலாயவை அமைத்துச் சமயப் பிரசாரம் புரிதல்.
6. சமயப் பிரசாரங்கள் கோயில்களிலும், மடங்களிலும் அவ்வவற்றின் சார்பில் நடத்துதல் - முதலியனவாம்.

மேற்கூறப் பெற்றவாறெல்லாம் திருப்பாதிரிப்புலியூர் ஆலயத்தில் நடைமுறையிற் கொண்டுவரலும் பிற இன்றியமையாத பணிகளும் சுவாமிகள் தலைமையில் மேற்கொள்ளல், ஆலய முன்னேற்றத்தால் மக்கள் முன்னேற்றத்திற்கு வழியாகுமெனக் கருதினர் பலர். சுவாமிகளை தருமகர்த்தராக்க முனைந்தனர். அடிகளாரும் ஒப்புக் கொண்டார்கள். 1936-37ஆம் ஆண்டுகளில் அவர்கள் தலைமையில் திருப்பாதிரிப்புலியூர்த் திருக்கோயிலில் பலவகைப் பணிகள் நிறைவேற்றப் பெற்றன.

1. மின் விளக்குகள் அமைக்கப் பெற்றுத் தொடர்பு பெறப்பெற்றது.
2. திருக்கோயில் வெளிச் சுற்றின் தென்பாலும், மேற்பாலும் திருமதில் அமைத்துத் திருநந்தனவனம் அமைக்கப் பெற்றது. (முன்னைத் திருப்பணியாளரால் தம் சொந்தப் பொறுப்பில் அமைக்கப் பெற்றுப் புஷ்ப கைங்கரியம் நடைபெற்று வந்ததுண்டு. 1929-க்குப் பிறகு அவர்களது சொத்துகள் பிறர் வயப்பட்டபோது அதுவும் பிறருடையதாயிற்று. அதனால், கோயிலில் பூக்களை வாங்கியே பயன்படுத்தும் நிலையிலிருந்தது.)
3. திருமண முதலிய காலங்களில் வருவாயாக வந்த பொன் முதலியவை அவர்களுடைய சிறந்த மாணவராம் அரங்கைய பத்தரவர்கள் மூலம் திருவாபரணங்களாக்கப் பெற்றன.
4. கூடியவரை செலவுகளைச் சுருக்கிப் புதிய வருவாய்களுக்கு வழிகோலப் பெற்றன.

1936,37 ஆண்டுப் பெருவிழாக்களுக்கு வேண்டிய பொருள்களை எந்தக் கடைக்காரர் எந்தப்பொருளைக் குறைந்த விலைக்குக் கொடுக்க முன் வருகிறாரோ, அவரிடம் அப்பொருள்களை வாங்கச் செய்தார்கள் - அதற்கு முன், ஒரு கடைக்காரர் யாவும் கொடுத்து விட்டு அவர் குறிப்பிட்ட விலைப்படியே பணம் பெற்று வந்தமை நிறுத்தப் பட்டது.

5. கொடியேற்றத்திற்கு முன் அமாவாசையிரவு, எல்லைக் காப்பு காரணமாகப் பலி சோறிறைக்கும் வழக்கம் உண்டு. அதற்கென உயிர்ப்பலி கொடுக்கப் பெற்று வந்தமை நிறுத்தப் பெற்றது. பூசணிக்காய் பலியிடும் வழக்கம் நடை முறைக்கு வந்தது.
6. கோயிற் கணக்குகளை ஒழுங்கு படுத்திச் சிறந்த முறையில் கணக்குகள் வைக்கப் பெற்றன.
7. விழாக் காலங்களில் ஆலயச் சார்பில் ஆலயத்திலேயே சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெற்றன. 1936-ல், பெருவிழா நிகழ்ச்சி அச்சிடப் பெற்றது. சங்க இலக்கியங்களிலும் தோத்திர நூல்களிலும் காணப்படும் விழாப் பற்றிய குறிப்புகளையெல்லாம் அந்நிகழ்ச்சி நிரலில் திரட்டியளித்தார்கள். அது ஓர் புதிய முறை மட்டுமன்றி விழாக்களைப் பற்றிப் பண்டையோர் கொண்ட கருத்துக்களையும் சிறப்புக்களையும் திரட்டிய ஓர் கருவூலமா யமைந்தது.

இன்னும் பலவிதங்களிற் சீர்திருத்தம் செய்து வந்த சுவாமிகளை 1937 ஆண்டில் ஓர் அதிகாரி அணுகினார். கோயிற் கணக்குகளைப் பரிசோதிக்க வேண்டுமெனக் கேட்டார். சுவாமிகள் அவரிடம் கோயிலுக்கே சென்று பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்கள். அவரோ, சுவாமிகளின் தன்மைகளையறியாதவர் போலும்! தானும் சமயத்தில் ஊன்றிய பற்று இல்லாதவர். பெரியோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் புறக்கணித்தவர் போலும் ! நான் கணக்குக் கேட்டால் நீங்கள் வருவித்துக் காட்ட வேண்டுமேயல்லாமல் என்னைக் கோயிலுக்குப் போய் மானேஜரைக் கேட்கச் சொல்கிறீர்களே என்று கேட்டார். சினக்குறி காட்டினார். உடனே சுவாமிகள், 'முருகப் பெருமான், உங்களைப் போன்றவர்களுக் கெல்லாம் கீழ்ப் படிந்து செயலாற்றும் நிலையில் எம்மை வைக்கவில்லை. எனவே, இப்பொறுப்பு இனி எமக்கு வேண்டுவதில்லை' யென அறிவித்து, அப்போதே ஒரு விலகல் கடிதம் (ராஜினாமா) எழுதி அவரிடம் தந்து விட்டார்கள்.

வந்தவர், வேறு செய்வதறியாது ஆலயம் சென்றார். மானேஜர் வாயிலாகக் கணக்குகளைச் சரிபார்த்தார். யாவும் செம்மையாக வைக்கப் பெற்றிருந்தமை கண்டார். மானேஜர் வாயிலாகச் சுவாமிகளின் இயல்புகள் சிலவற்றைக் கேட்டறிந்தார். தன் செயலுக்கு வருந்தி, மீண்டும் மடாலயம் வந்தார். சுவாமிகளைப் பதவியில் நீடித்திருக்குமாறு வேண்டினார். ஆனால் சுவாமிகள் 'ஒரு முறை நமக்கு முருகன் புத்தி புகட்டிவிட்டான். இனியொரு முறையும் அங்ஙனம் நேரக் கூடாதென்பது அவன் கட்டனை. இனி, இப்பொறுப்பு நமக்கு வேண்டாம்' என்று கூறி அவருக்கு விடை கொடுத்து விட்டார்கள்.

என்னே அறியாமை தம்மைச் செறுக்கால் உயர்த்திக் கொண்டும், ஆலயத் தொடர்பு கொண்ட யாராயிருந்தாலும் தமக்குக் கீழ்ப்பட்டவரென மதித்தும் அகந்தை கொள்வோரின் கெடுபிடிகளால் மக்களுக்கு ஏற்படும் நல்லன பல நசுக்கப்படுவதே உலகியல்போ?

திருவதிகைத் தலத்திடத்தும், திலகவதியம்மையாரிடத்தும் நம் சுவாமிகளுக்கு நிறைந்த பற்று உண்டு. 1938 வாக்கில் ஆலயத் திருப்பணிகள் நிறைவேறிவிட்டன. பண்ணுருட்டி வணிகப் பெருமகனார் ஆ. அ. குப்புசாமி செட்டியார் 45 ஆயிரத்திற்கு அதிகமாகச் செலவிட்டார். பாண்டியன் கோபுரத்தையும் புதுப்பித்தார். ஆனால் கும்பாபிஷேகத்தை நடத்தாமல் காலங்கடத்திவந்தார். வழக்கம் போல் திருவதிகை சென்ற சுவாமிகள், இராசகோபால்செட்டியாரை வருவித்துத் 'தாங்கள் முன்னின்று கும்பாபிஷேகத்தை நடத்திவைக்க' எனக் கூறினார். அவரும் சுவாமிகள் கட்டளையச் சிரமேல் தாங்கி 23-6-40ல் சிறப்புறக் கும்பாபிஷேகத்தை நிறைவேற்றிவைத்தார். அதன் அங்கமாகச் சுவாமிகள் தலைமையில் சைவ மாநாடு ஒன்றும் 3 நாள் நடந்தது. திருப்பெருந்துறை - மடாலயத் தலைவர் நமசிவாயத் தம்பிரானும், திருவதிகை குமாரசாமித் தம்பிரானும், சுவாமிகளின் அன்பர், சென்னை திருவொற்றியூரானடிமை - திரு. த. ப. இராம சாமிப் பிள்ளையர்களும் முன்னின்று கும்பாபி ஷேகத்தைச் சிறப்புற நடத்தி வைத்தனர்.

கும்பாபிஷேக நினைவாகத் தல மான்மியம் வெளியிடப்பெற்றது. அதை உரை நடையில் எழுதியவர் சுவாமிகளின் மாணவர் சோழவல்லி ப. பாலசுந்தர நாயனார். அவர் அங்ஙனம் வெளியிடுவதையறிந்த சுவாமிகள் திலகவதியம்மையார் பேரில் சில பாட்டுகள் இயற்றித் தந்து சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். ஆறு விருத்தப் பாக்களும் ஒரு வெண்பாவுங் கொண்ட திலகவதி அம்மை துதி பிற்சேர்க்கையாக இணைக்கப்பெற்றுள்ளது.

அடியர்களுக்காகச் சுவாமிகள் கொண்ட விழாக்கள்

அறுபானாண்டு நிறைவு :

சுவாமிகளுக்கு அறுபது ஆண்டுகள் நிரம்பின. மாணவர் பலரும் அப்பெரு நாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டுமெனச் சுவாமிகளிடம் விண்ணப்பித்துக் கொண்டனர். சுவாமி ளும் அடியவர் பொருட்டு அதனை யேற்றுக் கொண்டனர்.

ஸ்ரீமுக ஆண்டு வைகாசிமூல நாள் (1933, மே ௴) திருப்பாதிரிப் புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயம் விழாக் கோலம் பூண்டது. மாணவர்களும் அன்பர்களும் திரண்டனர். வெளியூரினர் பற்பலர் குழுமினர். சுவாமிகள் அதிகாலை நீராடித் தம் ஆன்மார்த்த பூசை முடித்துக் கொண்டு, வண்டிப்பாளையம், குருமூர்த்தி தோட்டத்திற் கெழுந்தருளித் தம் மடாலய முன்னோர்களை வழிபட்டுக் கொண்டு வந்து, மடாலயத்து எழுந்தருளும் ஸ்ரீ வல்லி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமண்ய மூர்த்திக்கு ஆராதனைகள் புரிந்து யாவர்க்கும் திருநீறளித்தனர்.

பிற்பகல், பேரவை கூடிற்று, வடமொழி- தென்மொழி வல்லுநராய மகாமகோபாத்தியாய, பண்டிதமணி- திருவாளர் மு. கதிரேசன் செட்டியாரவர்கள் அவைத் தலைவர். பேரறிஞர் பலர், சுவாமிகளின் தொண்டுகள், அறிவாற்றல்களைச் சிறப்பித்துப் பேசினர். பற்பல சங்கங்களிலிருந்தும், அறிஞர் பலரிடமிருந்தும் வந்திருந்த பாராட்டு வாழ்த்துரைகள் படித்தளிக்கப் பெற்றன. பேரவை முடிந்தவுடன், அறிஞர் யாவரும், மாணவரும் புடைசூழ்ந்துவர, சுவாமிகள் ஸ்ரீ பாடலேசப் பெருமானையும், பெரிநாயகித் தாயாரையும் வழிபட்டு அருளேற்று அன்பர்களுக்கும் பிரசாதம் வழங்கி ஆசிபுரிந்தருளினார்கள்.

கரந்தைத் தமிழ்ச்சங்க ஸ்தாபகரும், புரவலருமாகிய திரு. த. வே. -உமாமகேசுரம் பிள்ளை, B.A., B.L., அவர்களுக்குச் செந்தமிழ்ப் புரவலர் என்ற சிறப்புப் பெயரளித்தது அந்நாளில்தான். சிறுவர் கல்வியறிவு பெற்றுப் பின் வித்துவான் தேர்வுகட்குச்செல்ல வாய்ப்பாக இருக்குமாறு ஞானியார் கலாசாலை என்று ஓர் கல்வி நிலையத்தைத் தம் மடாலயத்தில் தொடங்குவதற்காகப் பத்தாயிர ரூபாய் வைப்பு நிதியாக அளித்தார்கள்.

பொன்விழா :

சுவாமிகள் பட்டம் ஏற்று 50 ஆண்டுகள் நிறைவுற்றன. 1939, நவம்பர் 18, 19 இரு நாட்கள் சுவாமிகள் பொன்விழா நடைபெற்றது. முன்போலவே மாணவர் சுவாமிகளிடம் அநுமதி பெற்றுத் திரு. K. சீதாராம் ரெட்டியாரவர்களைத் தலைவராகவும், டாக்டர் யு. வே. தேவராஜ முதலியார், கிழக்கு மருதூர் - தி. கி. நாராயண சாமி நாயுடு ஆகியோரைச் செயலர்களாகவுங் கொண்டதோர் குழு அமைக்கப் பெற்றது.

முதல் நாள், அவர்கள் பட்டமேற்ற 51-வது ஆண்டின் தொடக்க நாள். அந்நாளில் அதிகாலையிற் சுவாமிகள் நீராடிப் பூசை முடித்து மடாலயத்து முருகனுக்குத் தம் திருக்கரங்களாலேயே அபிடேக ஆராதனைகளைச் செய்தருளினார்கள்.

மாணவர், சுவாமிகளை ஓர் பீடத்திலமர்த்தி, அவர்களில் வீரசைவ மாணவராம் திரு. உருத்திரசாமி அய்யரவர்களைக் கொண்டு அபிடேக ஆராதனை முதலிய புரிவித்தார்கள். மாணவர் யாவரும், விநாயகரகவல், திருமுருகாற்றுப் படை முதலாய நூல்களைப் பாராயணஞ் செய்து அரஹர முழக்கமிட்டனர். யாவையும் ஏற்றுக் கொண்ட அடிகளார், ‘முருகன் திருவிளையாடல்' பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். திருமுருகாற்றுப்படையின் மாண்பு பற்றி அப்போது குறிப்பிட்டு யாவருள்ளத்தினும் அந்நூலின் மீது தனிப்பற்று விளையுமாறு செய்தார்கள்.

மாலை பேரவைக்குத் தலைவர், ரசிகமணி T.K. சிதம்பரநாத முதலியாரவர்களாவர். சுவாமிகளின் நாவன்மை, கல்வித் திறன் முதலியவை பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுத் தலைமையுரையாற்றினார். மடாதிபதிகளும், பல கழகங்களும், அன்பர் - பேரறிஞர்களும் மாணவர்களும் பாராட்டு- வாழ்த்துரைகள் படித்தளித்தார்கள், வர இயலாத சிலர் அனுப்பிய பாராட்டுகள் படிக்கப் பெற்றன. -

சுவாமிகளிடம் பயின்று வித்துவான் பட்டம் பெற்ற தேவார ஓதுவார் - திரு. மு. நடராஜ தேசிகர் இடையிடையே, திருமுறைகளையும், திருப்புகழ்களையும் ஓதி, அவையினரை அரனிடத்து அன்பு கொள்ளுமாறு செய்தார்.

முதற் குருநாதர் மீது, அவர் மாணவர் அவிநாசிநாதர் இயற்றிய நெஞ்சுவிடுதூது முதலாம் தோத்திரக் கொத்து அச்சிடப்பெற்று யாவர்க்கும் இலவசமாக அளிக்கப் பெற்றது. திருமதி. க. ர. ஆதிலட்சுமி யம்மையார், கந்தரனுபூதி நூலைச் சுவாமிகளிடம் பாடங் கேட்டவாறு உரையுடன் அச்சிட்டுக் கொண்டுவந்து யாவர்க்கும் வழங்கினார்கள்.

அன்றிரவு, அறிஞர், மாணவர் புடைசூழச் சுவாமிகள் ஆலயதரிசனம் செய்தருளினார்கள். .

இரண்டாநாள் காலைநிகழ்ச்சி திரு. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் தலைமையில் தொடங்கிற்று. சில வாழ்த்துரைகளும், வணக்கப் பாடல்களும், பாரட்டுகளும் படித்தளிக்கப் பெற்றன. பின்னர், பண்டிதமணி திரு. மு. கதிரேசன் செட்டியாரவர்கள் தலைமையில், சேலம் கல்லூரி விரிவுரையாளர், திரு. ஆந்திரக் காசியப. திம்மப்ப அந்தணனார் இயற்றியிருந்த 'ஆசானாற்றுப்படை' அரங்கேற்றப் பெற்றது. அதில் அடிகளாரின் நற்பண்புகள் பல சுவைபடப் பாராட்டப் பெற்றிருந்தன.

பிற்பகலில் திரு.டி.கே.சி. தலைமையில், ந. மு. வேங்கட சாமி நாட்டாரவர்களும், ச. சச்சிதாநந்தம் பிள்ளையவர்களும் பிறரும் சொற்பொழிவாற்றினர். -

சர். பி. டி.இராசன், த. வே. உமாமகேசுவரம் பிள்ளை, ஈ. வே. இராமசாமி நாயக்கர், டி. எம். நாராயணசாமிப்பிள்ளை, யாழ்ப்பாணம்- நடேசப் பிள்ளை முதலாயினோர் மழை, வெள்ளம் காரணமாகப் போக்குவரவு நிலை கெட்டிருந்த காரணத்தால் வர இயலாமைகுறித்து அனுப்பியிருந்த தந்தி முதலியவை படிக்கப்பெற்றன.

அச்சியற்றிய சில நூல்கள்

1. திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் :

சுவாமிகள், திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணைவன் மீது நீங்காப் பற்றுக்கொண்டவர்கள். தல வரலாறு பற்றித் தாம் பட்டமேற்றுக் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதே அறிந்தனர். பட்டமேற்ற சில ஆண்டுகளுக்குள் வடமொழிப் புராணம் மட்டுமே கிடைத்தது. தம் ஆசிரியர் வழி, திருவாவடுதுறை யாதீனத்திலிருந்து ஒரே பிரதியைப் பெற்றார்கள். அதனைப் பரிசோதித்துத் திருத்தியும், தம் ஆசிரியரைக் கொண்டு பாட்டுகளைத் தழுவி எழுதுவித்த உரைநடையையும் 1897-ல் ஆச்சிட்டார்கள். சுவாமிகள் முன்னுரை எழுதியுள்ளார்கள். ஆசிரியர் சுவாமிநாதையரவர்கள் சாற்றுக் கவிகள் அளித்துள்ளார்கள்.

2. திருப்பாதிரிப்புலியூர்த் தோத்திரக்கொத்து :

ஆலய வழிபாடு கொள்வோர்க்குத் தல மூர்த்திகளின் மேல் பாக்களைப் பாட எளிதாயிருப்பது கருதிப், பல ஆன்றோர் பல பல சமயங்களிற் பாடிய பாக்களையெல்லாம் திரட்டித் 'திருப்பாதிரிப்புலியர்த் தோத்திரக் கொத்து’ எனும் பெயர் சூட்டி அச்சிட்டு 1917-ல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது யாவர்க்கும் அன்பளிப்பாக வழங்கச் செய்தார்கள்.

3. அற்புதத் திருவந்தாதி :

காரைக்காலம்மையார் என்று யாவராலும் கூறப்பெற்று வந்த வயது முதிர்ந்த ஓர் அம்மையார் மடாலயத்தில் இருந்தார்கள். அவர்கள் திருவருளிற் கலந்து மோட்ச தீபம் நடைபெற்ற அன்று சிறு வடிவில் அதனை அச்சிடுவித்து யாவர்க்கும் வழங்கச் செய்தார்கள்:

4. ஞானதேசிக மாலை :

மடாலயத்தின் இரண்டாம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளின் ஆலயம் திருப்பணி நிறைவேற்றிக் கும்பாபிஷேகம் செய்வித்த போது, தாம் இயற்றிய ஞானதேசிக மாலையை அச்சிடுவித்து யாவர்க்கும் வழங்கச் செய்தார்கள்.

5. அவிநாசி நாதர் தோத்திரக் கொத்து :

1939-ல் பொன் விழா நடைபெற்றபோது வெளியிடப் பெற்றது. அதில் அடங்கிய சிகாமணிப் பதிகம் மட்டும் திருக்கோவலூர் ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்களாலும் அச்சிடுவித்தது உண்டு.

6. கந்தர்சட்டிச் சொற்பொழிவு :

இது அடிகளின் சொற்பொழிவுகள் சில. பேராசிரியர் முத்து இராசாக்கண்ணனார் குறிப்பெடுத்து எழுதியது.

இன்னும் சில பண்புகள்

இதுவரை எழுதப்பெற்றவை யெல்லாம் சுவாமிகளுடைய பெருமைகளுள் ஒரு சில பகுதிகளேயெனலாம். எந்த இடத்தில், எந்த நேரத்தில், எத்தகையார் வரினும் அவர் வேண்டிய நூல்களிற் பாடம் போதித்தல் ஒரு தனிப் பண்பாடு, அதிலும், அவர்கள் புத்தகம் எதனையும் பிரித்து வைத்துக் கொள்ளாமல், கேட்க வந்தோரையே பாட்டைப் படிக்கச் செய்து, வழக்கம் போலப் பயனிலையை முன் கூறிப்பின்னர் முறை முறையே கூறி, வந்தவர் ஐயமின்றிப் பொருள் விளங்கிக் கொள்ளும் அளவும் போதிப்பதைக் கேட்டோர் பலரும் வியந்து போற்றுவர். எழுதியும் உளர்.

இங்ஙனமே சிற்சில ஐயங்களைத் தெளிவித்தலும் சிறப்பு :

மடாலய மரியாதைகள் பல. பல்லக்கு, மேனா, குடை, கொடி சாமரை, தீவர்த்தி முதலியவை முதற்சுவாமிகளுக்கு ஆற்காட்டு நவாப்பினால் அளிக்கப் பெற்றவை. நம் சுவாமிகள் அவற்றை ஆடம்பரம் கூடாதென்றோ - ஏனோ நிறுத்தி விட்டார்கள். திருச்சின்னமுங் கூடத் தென்னாட்டு யாத்திரைக்குப் பின் பயன்படுத்த பெறவில்லை. உறுதி மொழிபற்றி மேனா இவர்தலை மட்டும் கைவிடவில்லை.

விசய தசமியன்றும், மாட்டுப் பொங்கலன்றும் திருக்கோயில் இறைவன் எழுந்தருள்வதுண்டு. மடாலய முகப்பில் வரும் போது வழக்கம் போல் தரிசித்துவிட்டுச் சென்று, முதற் சுவாமிகள் அணிந்து கொண்டிருந்த, தலை மாலை, மார்பு மாலைகளாம் சில கோவை களை யணிந்து பூசனை புரிந்துவிட்டுக் கொலு விருப்பார்கள். அடியார்கள் வணங்கத் திருநீறளித்தபின் அவைகளைக் களைந்து எப்போதும் போலவே இருப்பார்கள்.

விலை மதிப்புமிக்க ஆடைகளையோ, ஆபரணங்களையோ அணிவதில் ஒருபோதும் விருப்பம் கொள்ளார்கள்.

தொடக்க காலத்தில் முருகேச நகர், ப. க. பழநியாண்டி முதலியாரும், வெ. க. மாணிக்க முதலியாரும் விரும்பிச்செய்து அணிவித்த தங்கச் செச்சை மட்டும் மார்பகத்தில் விளங்கிக் கொண்டிருக்கும்.

தரிசிக்கவரும்.அன்பர்கள் கையுறையாகக் கொண்டு வரும் பழம் முதலிய பொருள்கள் யாவர்க்கும் வழங்கப் பெறும். கொண்டு வந்தோர்க்கும் பிரசாதமாகச் சில அளிக்கப்பெறும்.

யாவரும் தமிழ் மொழியினைத் திருத்தமுறப் பேச வேண்டுமென்பது சுவாமிகள் அடங்கா ஆர்வம். தாமும் ஒரு சிறு கொச்சைச் சொல்லும் பயன்படுத்த மாட்டார்கள். பழகுவோர், மாணவர் முதலாயினோர் யாவரும் அவ்வண்ணமே பேசுவரேயன்றி ஒரு சிறிதளவும் மாறாதவாறு தம்மைத் தாமே கவனித்துக் கொள்வார்கள்.

ஆண்டவனுக்கு இயன்ற அளவு நிறையப் பொருள்களை அபிஷேகிக்க அவாவுவது அவர்கள் இயல்பு. சிறப்புக்காலங்களில் அங்ஙனமே செய்வார்கள்.

ஏதொன்றையும் கணக்குப் பார்த்தே செலவிடுவார்கள். வீண் செலவுகள், ஆடம்பரங்கள் அவர்களுக்குப் பிடியாதன.

நோயுற்றோரும், சில முறையான விருப்பங்கொள்வோரும் சுவாமிகள் திருக்கைத் திருநீறு பெற்றுச் சிறந்தாராவர். புதுவண்டிப்பாளையம் அ. வேங்கடாசல முதலியாரவர்கள், கண்ணொளி மங்கியபின், நாள்தோறும் சுவாமிகளை வந்து தரிசித்தும், குருமூர்த்திகளின் ஆலய தரிசனம் செய்தும் முற்றும் நலம் பெற்றுத் திகழ்ந்தனர்.

மாணவர்

முன்னரே குறிப்பிட்டவாறு சுவாமிகள எப்பாலவரையும் மாணவராக எற்றார்கள். அறிந்தவரை சிலரை இங்குக் குறிப்பாம்: திரு. ம. ரா. குமாரசாமிப்பிள்ளை - இவரே சுவாமிகளின் புகழைப் பரப்பியவர். 1929ல் சுவாமிகள் ஆரணி யிலிருந்தபோது, புறமுதுகில் கட்டி தோன்றியதால் துன்புற்றார். ஆரணியிலிருந்து சுவாமிகள் அவரைக் காணும் நோக்கத்துடன் திருக்கோவலூர் மீண்டு எழுந்தருளும்போது, திருவண்ணாமலை சேர்ந்தபோதே ம. ரா. கு. இறைவனடியடைந்து விட்ட செய்தி சுவாமிகளுக்கு அறிவிக்கப்பெற்றது.

அடிகளார் மனங்கலங்கிக் கண்ணீரும் பெருக்கினர். திருக்கோவலூர் எழுந்தருளி மாணவர் குடும்பத்தவரிடம் பரிவுரை கூறியவுடன், ஆங்குத் தங்கியிருக்கப் பொறாராய்த் திருப்பாதிரிப்புலியூர் மீண்டருளினார்கள் வந்த சில நாள்களுக்குள் சுவாமிகளுக்கும் அவ்வாறே புறமுதுகிற் கட்டி தோன்றித் துன்புறுத்தியது, திருவருளும் குருவருளும் நலம் தந்தன.

புலிசை மடாலயம் திரு. ப. கந்தசாமி அய்யரவர்கள். இவர்களே பின் ஆறாங் குருநாதராகப் பட்டத்தி லெழுந்தருளியிருந்தவர்கள். திரு. ப. ஆறுமுக அய்யர், சோழ வல்லி- திரு. ப. பால சுந்தர நாயனார், தோட்டப்பட்டு-திரு. முத்துகிருஷ்ண ரெட்டியார், திரு. மு. சா. முத்து கிருஷ்ண அய்யர், காஞ்சிபுரம் திரு. சிவஸ்வாமி தேசிகர், கூடலூர் திரு. வடிவேல் செட்டியார், திருச்சி திரு. மு. நடேச முதலியார், திருவெண்ணெய் நல்லூர் திரு. வடிவேல் முதலியார், வண்டிப்பாளையம் திரு. பாலகிருஷ்ண முதலியார், தோணி-கந்தசாமி முதலியார், புலிசை-திரு. ஆ. பா. அரங்கைய பத்தர், திரு. ஆ. இரத்தினவேற் பிள்ளை, திரு. ஆ. இராஜேசுவரம் பிள்ளை, திரு. மு. நடராஜ தேசிகர், திரு. டாக்டர் இராமலிங்க செட்டியார் என்னும் பாப்பைய செட்டியார், வண்டிப்பாளையம் - திரு. ம. உருத்திர சாமி அய்யர், திரு. பாலசுப்பிரமணிய தேசிகர், திரு. பொ. இரத் தினசபாபதி முதலியார், திருக்கண்டேசுவரம்- திரு. T. M. ஜம்புலிங்க முதலியார், திருத்தினைநகர்-திரு. தம்புசாமி நாயுடு, வெள்ளையூர்-திரு. V.J. சொக்கலிங்க உடையார், திருவருணை-திரு. இரத்தினசபாபதி ஐயர், கோவல் வீரட்டானம் - திரு. துரைசாமி அய்யர், சென்னை திரு. துரைசாமி அய்யர், புதுவை - திரு. வீ. துரைசாமி முதலியார், புதுப்பேட்டை - திரு. சிவசிதம்பர செட்டியார், சிதம்பரம்-திரு.முத்தையா, முதலியார், பண்ணுருட்டி - திரு. இராஜகோபால் செட்டியார், காட்டுமன்னார்கோயில் - பண்டிட், P. மாணிக்கம் பிள்ளை, திரு. சங்கரய்யர் இவர்கள் பழைய மாணவராவர்.

ஸ்ரீ பாடலேச்சுரர் தரும பாடசாலையிற் பயின்று பின் வித்துவான் பட்டம் பெற்றவர்கள்:

திரு. ந. ஆறுமுக முதலியார், திரு. அ. நடேச முதலியார், திரு. பாலசுப்பிரமணிய தேசிகர், திரு. மதண்டபாணி முதலியார், திரு. முருகேச முதலியார், திரு. பழநியாண்டி முதலியார் முதலாயினோர்.

தனித்துச் சுவாமிகளிடம் நேரில் சிலகாலம் பாடம் கேட்டுப் பின் பட்டம் பெற்றோர்: திரு. முத்து இராசாக் கண்ணனார், M.A., B.O.L., திரு. மு. நடராஜ தேசிகர், திருவிடை மருதுர், திருமதி-இலக்குமித் தாயாரம்மை, சென்னை, க. பா. வேல்முருகன் முதலியோர். அவருள் முத்து இராசாக் கண்ணனார் என்பவர் சுவாமிகள் தம் மடாலயத்தில் 1941-ல் கந்தசஷ்டி விழா நாட்களில் ஆற்றிய சொற்பொழிவுகளைக் குறிப்பெடுத்து விரித்தெழுதிக் கந்தர் சட்டிச் சொற்பொழிவுகள் என்ற பெயருடன் வெளியிட்டார். திருவண்ணாமலையில், சுவாமிகள் அதைப் பார்த்து அணிந்துரையும் வழங்கினார்கள்.

1933-ல் நிறுவப்பெற்ற ஸ்ரீமத் ஞானியார் கலாசாலையில் புகுமுகத் தேர்விற்குப் பயின்றும் பின்னர் கல்லூரிகளிற் பயின்று புலவர் பட்டம் பெற்றும் சிறந்தோர் :

திரு. ஆ. சிவலிங்கனார், திரு. சுந்தரசண்முகனார், திரு. க. செந்தில் நாயக முதலியார், திரு. தண்டபாணி முதலியார், திரு. பா. ஏகாம்பரம், க. சம்பந்தம், மதுராந்தகம், திரு. ந. ஆறுமுக முதலியார், செங்கற்பட்டு, ந. திருநாவுக்கரசு, சென்னை, திரு. சக்ரபாணி (ஆயிரரூபா பரிசு பெற்றவர்), சிந்தாதிரிப்பேட்டை- சென்னை, திரு. வை. இரத்தினசபாபதி, எம்.ஏ.பி.ஓ.எல்., திரு. ப, திருநாவுக்கரசு, குடந்தை, திரு. நா. கருணாநந்தம், திரு. ந. தண்டபாணி, திரு. முத்தைய முதலியார், நெல்லிக்குப்பம், திரு. பா. செந்தில் நாயக நாயனார், திரு. தட்சிணாமூர்த்தி முதலாயினோர்.

பலர், உயர்நிலைப் பள்ளியிலும், சிலர் கல்லூரிகளிலும் பணியாற்றும் புலமை நிரம்பியவர்களாவர். அவ்வவரும் பற்பலரைத் தமிழ் பயிற்றுவிக்கும் பணிகளிலீடுபட்டுத் தமிழன்னைக்கு அரும் பணியாற்றியும் அருஞ் சமயத் தொண்டுகளி லீடுபட்டும் வருகின்றனர்.
சுவாமிகளிடம் பேரன்பு பூண்ட செல்வர் சிலர்

திரு. ஸர். பி. டி. ராஜன் அவர்கள், மதுரை
"T.M. நாராயணசாமி பிள்ளை அவர்கள், திருச்சி
"T. M. ஜம்புலிங்க முதலியார்.அவர்கள், திருக்கண்டேசுவரம்
"T.M. பழநிசாமி முதலியார், திருக்கண்டேசுவரம்
"ப.க. பழநியாண்டி முதலியார் " முருகேசநகர்
"வெ. க. மாணிக்க முதலியார் " "
"T.M.தம்புசாமிநாயுடு " திருத்தினை நகர்
"கிரந்தே - சிவசச்சிதா நத்த செட்டியார் அவர்கள், புதுவை
"பங்காரு பத்தரவர்கள் "
"முனிசாமிப்பிள்ளை அவர்கள், பூரணாங்குப்பம்
"இராஜகோபால் செட்டியார்.அவர்கள், பண்ணுருட்டி
"சின்னசாமி ரெட்டியார், திருவெண்ணெய் நல்லூர்
"நெ. சு. பொன்னுசாமி உடையார்அவர்கள் நெற்குன்றம்
"மாசி உடையார் அவர்கள், சிறுமதுரை
"T. V. ஆதிசேஷ முதலியார் அவர்கள் சென்னை
"T. P. இராமசாமிப்பிள்ளை " "
(திருவொற்றியூரானடிமை)
"சிம்புமல் செளகார் ""
முதலாயினோர்.

முடிவுரை : - சுவாமிகள் தமிழ்மொழியினிடம் அடங்காப் பற்றுக் கொண்டமையே இவ்வளவு அருந்தொண்டுகட்குக் காரணமாயின. மொழியின்றிச் சமயம் இல்லை. உலகெங்கும் சைவ சமயமே கடைப்பிடிக்கப் பெற்றிருந்திருக்க வேண்டு மென்பது அடிகளார் கொள்கை. அந்தப் பழஞ் சமயத்தோடு ஒன்றியுள்ளதே வைணவம். அவ்விரு சமயங்களும் இந்து மதத்தின் இருகண்களாம் எனச் சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவார்கள்.

தாம் வீரசைவரே யாயினும் வைணவத் தொடர்பாகச் சொற் பெருக் காற்றுங்கால் அவர்களைச் சைவசமயி என எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். திருவரங்கத்திலும், திருவகீந்திர புரத்திலும் அடிகளார் பாராட்டப் பெற்றமையே இதற்குச் சான்று.

மார்கழி மாதம் சிறப்புடைய மாதம். அம் மாதத்தில் இந்துக்கள் யாவரும் ஆன்றோர் கடைப்பிடித்தவாறே பூசை, பாராயண முதலியவற்றை மேற்கொள்ள வேண்டுமென்பதை வற்புறுத்துவார்கள். சொல்லி விட்டால் போதுமா? தாமே அதற்குத் தூண்டுகோலாக இருக்க வேண்டுமெனக் கருதினார்கள். 1934ஆம் ஆண்டு முதல், மார்கழி மாத முழுவதும் காலை 6.00 மணிக்குச் சொற்பொழிவு தொடங்கி விடுவார்கள். மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல் பற்பல அன்பர்கள் வந்து கேட்டு மகிழ்வர். இவ்வாறு சுவாமிகள் ஒவ்வோராண்டும், தாம் எழுந்தருளும் இடங்களிலும் பணியாற்றுவார்கள். ஒவ்வொரு நாளும் - சைவத் தொடர்பான பாட்டு ஒன்று, வைணவத் தொடர்பான பாட்டு ஒன்று - ஆக இரு பாட்டுகளே விரித்துரைக்கப் பெறும். திருப்பள்ளி யெழுச்சி 10, திருவெம்பாவை 20, ஆக 30ம், திருப் பாவை 30ம் ஆக இருப்பதால் ஒரு மாதம் அவைவிரித் துரைக்கப் பெறும். தை விஷு புண்ணிய நாளில் நிறைவு விழா நடைபெறும்.

இதுவே, பாவை மாநாடுகள் நடைபெறுதற்கு அடிப் படையாய் அமைந்தது.

ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் இந்நிலவுலகில் ஆற்றிய தொண்டுகள், இனி அவர் மரபினராலும், மாணவர்களாலும் ஆற்றப் பெறல் வேண்டுமென இறைவன் எண்ணியதன் பயனோ-ஏதோ ஒரு சில மாங்களுக்குள் பற்பல பணிகளையேற்றுக் கொண்டு, ஏற்றவற்றைக் காலங்கடவாமல் நிறைவேற்றிக் கொண்டு எழுந்தருளினார்கள்.

திருச்சிராப்பள்ளியில் சைவ சித்தாந்த மகா சமாஜ முப்பத்தாறாம் ஆண்டுவிழாவின் மூன்று நாள்தலைமை யேற்றருளிய பின், தைப் பூச நன்னாளில் பழநிப் பண்ணவனைப் பரவத் திருவுளங்கொண்டருளி வழிக்கொண்டார்கள். அங்ஙனமே சில நாள் கண்டு கண்டு, உருகி உருகி, அவனைத் திருவுள்ளத்தில் கொலு வீற்றிருக்குமாறு செய்து கொண்டார்கள். 31-1-1942 மாலை அவனருள் வலத்தால் தெய்வத் திருவாக்காகச் சுவாமிகள் திருவாயமுதம் ‘சிவராஜ யோகம்' என்ற தலைப்பில் எழுந்தது. இந்த வேண்டுகோள், பழநியிற் பரமகுருவின் பாததாமரையல்லாது வேறு பற்றில்லையெனத் தாமும் உணர்ந்து, மன்பதைகட்கும் உணர்த்தி உலாவிக் கொண்டிருந்த ஸ்ரீசாது சுவாமிகளுடையது. சொற்பொழிவு முடித்துக் கொண்ட பின், வெள்ளி இரதக் காட்சி, அதன் பின் மலையேறி ஆண்டவனுடைய அர்த்த ஜாம தரிசனம், எழுந்தருளியிருந்த சிவகங்கை ஜமீன் தாரவர்களின் விடுதிக்கு மீளும் போது இரவு 12 மணிக்கு மேலாகி விட்டது.

அதிகாலை 3 மணிக்குப் பயணமெனக் குறிப்பிட்ட நேரத்திற் புறப்பாடு. நீ வந்த வேலைகளை முடித்துக் கொண்டு விட்டாயா? புறப்படு, புறப்படு. என்னைவிட்டு எங்கே புறப்பாடு? என்று ஆண்டவன் கூறிய குரல் உள் அந்தரங்கத்தில். 'ஆம் க. அரங்கசாமி முதலியார் மகள் திருமணம்! காமாட்சி திருமணம் முன்னரே கட்டுரை எழுதிக் கொடுத்து அச்சாகிவிட்டதே! அந்தத் திருமணத்தை நடத்தி வைக்க ஒப்புக் கொண்டவாறு செல்ல வேண்டாமோ? அடிகளார்வினா. 'செல்வதா? போதும் போதும் சென்று, சென்று திக்கெட்டும் தமிழ் பரப்பியது போதும் இனி உன் அன்பர்கள் அப்பணியை ஈடேற்றுவர். இனி தமிழ் - அதுதான் அமிழ்து அரியணை ஏறும். போதும் நீ அலைப் புண்டது' இது ஆண்டவன் கட்டளையாயிற்று.

ஒப்புக் கொண்டால் அதை எந்த உடல் நலக்கேடு தடுத்தாலும், பிற எந்த இடையூறு நேர்ந்தாலும் உறுதியுடன் பணியாற்றும் திருமேனி! இனித் தாங்காது எனப் பழநியாண்டவன் நினைத்தான். அந்த உள்ளததிலும் ஓர் கலக்கம் உறுதி வென்றது. மேனாவில் எழுந்தருளினர். வழக்கம் போல் சண்முகா சண்முகா தான். அவனையன்றி இப் பூதவுடலுக்கு இயக்கம் ஏது? 8 மைல் விஷு (விஷமே தான் மற்றை யோர்க்கு, அண்ணலுக்கு அதுவே அமுதம்)ஆண்டு, தைப்பூசம் (31-1-1942) பொழுது புலரவில்லை.

கலங்கினர் போகிகள் - திருக்கோவலூர் மடாலய பூசகர், சொக்கலிங்க அய்யர் ஆகியோரைப் பார்த்து, 'ஏன் கலக்கம்? முருகன் திருவருள் இங்ஙனமாயின் அதற்கு நாம் என்ன செய்யக்கூடும்?’ என்ற ஆறுதல் மொழிகள்.

காலைக் கடன்கள், உடல் நலமில்லையென்று திரு. அரங்கசாமி முதலியாருக்கு அறிவியுங்கள் எனத் திருவாக்கு எழுந்தது, ஒரு வாய் வெந்நீர் அருந்தினார்கள். அடுத்த வாய் உள்ளே இறங்கவில்லை. திருவருள் தடுத்தாண்டு தன் திருவடிகளில் அணைத்துக் கொண்டுவிட்டது.

முதற் குருநாதர், ‘பரமென விளங்கும் புதல்வன்’ எனப் பழநியாண்டவனால் அவரது முன்னோர்க்கு அருளிச் செய்யப் பெற்றதன்றோ? அந்த முதற் குருநாதரே தான், சீர் கெட்டிருந்த மடாலயத்தைச் செம்மைப் படுத்தவும், அழிந்து போகும் நிலையிலிருந்த தமிழைக் கொலு வீற்றிருக்கச் செய்யவும் எழுந்தருளினார்கள். அந்தத் தைப் பூசத்திலே - பழநியம் பதிச்சூழலிலே பரம் பொருளுடன் கலந்தார்கள் என்று கூறத் தயக்கம் ஏன்?

சற் புத்திர மார்க்கத்தை உலகினுக் குணர்த்த முருகக் கடவுளே - அபர சுப்ரம்மண்ய மூர்த்தியே - திருஞான சம்பந்தராக வந்தருளியமை உலகறிந்த செய்தி. அவர் திருமணக் கோலத்தோடு சோதியிற் கலந்த நாள் வைகாசி மூலத்தில் சுவாமிகளது தோற்றம்.

திருப்பாதிரிப்புலியூர்க் குருபீடங்கள் எழுந்தருளியிருக்கும் கோயிலில் இரண்டாம் குருநாதர் மூலவர், மூன்றாமவர் திருநந்தி தேவர், நான்காம் சுவாமிகள் திருச்சுற்றில் விநாயகர் இருப்பிடமான வலப்பக்க மூலை. நம் ஐந்தாம் சுவாமிகளுக்கு முருகன் எழுந்தருளும்இடம் இடப்புறத்துப் பிரகார மேற்கே. இந்தவாய்ப்பினையும் நாம் கருதுங்கால் சுவாமிகள் முருகனேயன்றி வேறல்லர் என்பதை உணர்கிறோம்.

அவர்கள் ஏற்றி வைத்த ஒளி விளக்குகள் யாண்டும் ஒளி பரப்புகின்றன. அவ்வொளி விளக்குகள் ஒவ்வொன்றினும் பற்பல விளக்குகள் ஒளிரத் தொடங்கிவிட்டன. திக்கெட்டிலும் நெடுந்தூரம் ஒளி கான்று கட்புலனாகும் திருவருணைத் திருக்கார்த்திகை விளக்கெனவே புகழ் பரவி யாவர்க்கும் கட்புலனாகாமல் தோன்றாத் துணையாகி நிற்கும் எம் சுவாமிகளின் திரு நாமம் யாண்டும் ஒலிக்க அவர் திருவுள்ளம் பரந்தவாறே தமிழமுதம் யாங்கணும் மாந்தப் பெறுக ! அவர்களது ஆன்மலிங்கக் கோயில் ஒளி வீசித் திகழ்ந்தாங்கே சிவமணம் - தமிழ் மணம் - யாண்டும் என்றும் பரவுக !

வாழ்க அவர்களது திருநாமம்
சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க.
முற்றும்


சில கட்டுரைகள்

சிவத்திரு ஞானியாரடிகள் ஐந்தாம் குருமூர்த்தமாக எழுந்தருளி அருளாட்சி நடத்தி ஐம்பது ஆண்டுகள் நிறைந்து பொன்விழா நடைபெற்றது. அப்போது பல அன்பர்கள் அடிகளார் அருள்நலம்பற்றிப் போற்றிப் புகழ்ந்தனர். அவருள் சிலர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

1. ஞானியார் மடத்தில் பொன்விழா
(திரு. வி. கலியாணசுந்தர முதலியார்)

நமது நாட்டில் அறப்பள்ளிகள் பல உண்டு. அவைகளுள் ஒன்று திருக்கோவலூரிலிருப்பது. அஃது ஆதி ஞானியாரால் காணப்பெற்றது. அதன் தொடர்பு கொண்ட பள்ளி திருப்பா திரிப்புலியூரில் திகழ்வது.

இப்பொழுது கோவற்பள்ளித் தலைவராக வீற்றிருப்பவர் ஞானியார் சுவாமிகளென்னும் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள். சுவாமிகள் அப்பள்ளித் தலைமை ஏற்று அரை நூறாண்டாகிறது. ஆகவே பொன் விழா எங்கணும் பொலிவதாக.

ஞானியார்சுவாமிகளை யான்கால்நூற்றாண்டாக அறிவேன். சுவாமிகள் அடியின்கீழ் நின்று பேசும் பேறும், அவருடன் நெருங்கி உரையாடும் பேறும் எனக்குப் பல முறை வாய்த்ததுண்டு. அடிகளின் ஆசி பெற்றவருள் சிறியேனும் ஒருவன்.

முருகன் சேவடி வருடியுருகும் ஈரநெஞ்சம் அவன் புகழ் பேசி இனிக்கும் நன்னாவும், தண்மை பொழியும் செவ்விய நோக்கும், வெண்ணிறுதுதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங் குஞ் செவியும், பொன்னொளிரும் மணிமார்பும், கருமைக் கதிர் விரிக்குந் திருமேனியும், 'சண்முகா - சண்முகா' என்று நீறளிக்கும் நீண்ட கையுங் கொண்ட அடிகளின் திரு வோலக்கப் பொலிவும், என்னுள்ளத்தில் ஓவியமெனப் படிந்து நிற்கிறது. அஃது எவர் உள்ளத்தையுங் கவரும்; எவர்க்கும். எளிதில் இன்பூட்டும்.

ஞானியார் சுவாமிகளின் புலமை வியக்கத்தக்கது. அவர் தமிழில் பெரும் புலவர்; வடமொழியில் வல்லவர்; ஆங்கிலமும் தெரிந்தவர்; காலக் கலையில் பண்பட்டவர்.

பழம்பெரும் புலவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் தத்தம் நுண்மதியை விளங்கச் செய்து சென்றனர். அப்புலவர் பெருமக்களின் கலைகளெல்லாம் ஞானியார் சுவாமிகளிடத்தில் மருவி நிற்கின்றன. அம் மருவல் இக்காலத் தமிழகத்தின் திருவென்றே கூறுதல் வேண்டும்.

ஞானியார் சுவாமிகள் மாணாக்கருக்குப் பாடம் சொல்லும் போதும், சொற்பொழிவு நிகழ்த்தும் போதும், தொல் காப்பியனாராகவும், நக்கீரராகவும், திருவள்ளுவராகவும், இளங்கோ அடிகளாகவும், கச்சியப்பராகவும், கம்பராகவும், சேக்கிழாராகவும், வியாசராகவும், நீலகண்டராகவும், சிவ ஞான முனிவராகவும் பிறராகவும் முறையே விளங்கி இலக்கிய இலக்கண சாத்திர நுட்பங்களை வெளியிடுவதைக் கேட்டுக் கேட்டுப் புலவரானவர் பலர். பழம் புலவர் பலரும் ஞானியார் ஒருவரிடம் விளங்குதல் வியப்பன்றோ?

கோவலடிகளின் பேச்சுத் திறத்தை என்னென்று சொல்வேன் ! அதைச் சிறப்பிக்க எனக்குச் சொற்கள் கிடைக்கவில்லை, என் செய்வேன்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவன்மையிற் சிறந்தவர் இருவர் என்று சொல்லப்பட்டனர். அவர் கிளாட்ஸ்டனும் சுரேந்திர நாதருமாவர். அவ்விருவர்தம் நாவன்மை ஞானியார் நாவன்மையைக் கண்டதில்லை; கேட்டதில்லை; கண்டிருப் பின் - கேட்டிருப்பின் வணக்கஞ் செய்திருக்கும்.

சுவாமிகள் அறப்பள்ளித் தலைமை ஏலாது, உலகியலில் நுழைந்து, ஆங்கில நாவராய், உலகை வலம்வந்திருப்பரேல், அவர் கிளாட்ஸ்டனும், சுரேந்திரநாதரும் சேர்ந்த ஒருவர் என்று போற்றப்பட்டிருப்பர். கோவற்பள்ளி, சுவாமிகளைச் சிறைப் படுத்தி விட்டது.

சுவாமிகளின் பேச்சுத்திறனை எதற்கு ஒப்பிடுவது? கடல்மடைத் திறப்புக்கா - வெண்கலக் கோட்டையில் அரசுவா புகுதலுக்கா-பெரும் புயலுக்கா- ஓயா மழைக்கா? எதற்கு - எதற்கு ஒப்பிடுவது? பலர் பலவாறு கூறுப.

திருப்பாதிரிப் புலியூரில் வீற்றிருந்து அடியவர்க்கருள் புரியும்கோவலடிகள் கருமைபூத்த ஒரு பொறுமை மலை, அம் மலையினுச்சியில் - மூளையில் - கலை மேகங்கள் பொழிந்த அறிவு மழைநீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங் கொண் டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பலதிறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல அன்பு வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து அருள் அலை கொழித்துக்கொழித்து ஓடும். நீர் பருகப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி முழக்கிலெழும் இன்னொலி கேட்டு அதில் ஈடுபட்டுத் தன் தன் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலுறும் மின்விசையால், பிணி நீங்கப் பெறுவர். ஞானியார் சுவாமிகள் பேச்சால் விளைந்த நலன் அளப்பரிது. திருப்பாதிரிப்புலியூரில் பலதிற விழாக்கள் நடைபெறும். அவ் விழாக்களில் கலந்து கொள்ளப் போதரும் அடியவர் 'ஞானியார்' மடத்தில் அமுதுண்பர். அவ்வேளைகளில்அடிகள் சோறிடுந் தொண்டர்களுடன் தாமும் ஒருவராகக் கலந்து அடியவர்க்கு இன்சொலால் அமுதூட்டுவது நாடறிந்த தொன்று.

சுவாமிகள் தென்னாட்டிலுள்ள பலதிருப்பதிகள் சென்று, இறைவனை வழிபட்டு, ஆங்காங்குள்ள மக்கட்கு நல்லுரை பகர்ந்து தமிழுக்கும் செந்நெறிக்கும் ஆக்கந் தேடியதை அறியாதாரில்லை. -

அடிகளிடத்துப் பல நல்லியல்புகள் செறிந்து கிடக்கின்றன. அவைகளுள் குறிக்கத்தக்கன கருத்து வேற்றுமைக்கு மதிப்பளித்தல், அவ் வேற்றுமை காரணமாகப் பிணங்காமை, சமயப் பூசல்களில் மனஞ் செலுத்தாமை, பொது நோக்கு, எவர்க்கும் எளியராந்தன்மை, பொறுமை, இன்ன பிற, இவ்வியல்புகளே பெரிதும் அடிகளிடம் என்னை அணுக்கனாக்கின என்று கூறல்மிகையாகாது.

சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் ஆண்டவன் அருள்வழி நின்று, ஐம்பதாண்டாகத் தம் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், தமிழ் நாட்டைட் பல வழியிலும் ஓம்பிய ஒருவர் - ஓர் அறவோர் - ஒரு பெரு தொண்டர். அவர் தம் அறத்தொண்டு மேலும் மேலும் ஓங்கி வளர்தல் வேண்டும். அறுமுகப் பெருமான் அருள் சுரப்பானாக சுவாமிகளுக்கு எனது வணக்கம்.

ஓர் உண்மை – ஞானி
(ஏஸ். வையாபுரிப் பிள்ளை)

திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான தேசிக மூர்த்திகளின் சிறப்பியல்புகளை யெல்லாம் ஒருசிறு சொற்றொடரால் அடக்கிக் கூறுதல் எளிதன்று. எனினும் அவர்களை "உண்மை ஞானி’ என்று கூறுவோ மாயின், அச்சிறப் பியல்புகளிற் பெரும்பாலனவும் அதன்கண் அடங்கி விடுமென்றே கருதுகின்றேன். இதனைக் காட்டிலும் வேறொரு தகுதியான தொடரைக் காணுதல் அரிது.

ஞானியார் சுவாமிகளைத் தரிசித்தவுடன் ஒருவனுக்கு முற்படத் தோன்றுவது அவர்களது அன்புடைமையாகும். தம்மிடம் வருபவர் யாரேயாயினும், அவர்களிடம் தமது முழு அன்பையும் காட்டி அவரவர்களுக்கு வேண்டும் நன்மொழி கூறி, அவர்களையும் தமது கருணை நோக்கினால் பரவசப்படும்படி செய்யுங் காட்சியானது ஒவ்வொருவரும் கண்டு மகிழ்தற்குரியது. காண்போர் மனத்தில் மேலெழுந்தும். அடி தாழ்ந்தும் நிலையாக உறைந்து வரும் தீக்குணங்களனைத்தும் உருத்தெரியாதபடி மறைந்து விடுகின்றன. சுவாமிகளுடைய அன்பு நம்மை அடிமையாகச் செய்து விடுகின்றது.

‘அன்பென்ப தொன்றின் தன்மை அமரரும் அறிதல் தேற்றார்" என்று கம்பர் கூறியிருப்பது எவ்வளவு உண்மையான தென்று சுவாமிகளுடைய சந்நிதியிலேயே தெரிந்து கொள்ளலாம்.

இனி இரண்டாவதாக நமக்குத் தோன்றுவது சுவாமிகள் மனமொழி மெய்களில் தூயராய் இருக்குந் தன்மை. இளம் பருவந்தொட்டே தமது வாழ்க்கையைப் பண் படுத்தி, எவ்வகையான தீய இயல்புகளும் தம்மை அணுகாதபடி பாதுகாத்து, மாசின்றி விளங்குந் திங்கள் போலச் சாந்த மூர்த்தியாய்ச் சுவாமிகள் விளங்குகின்றார்கள். அவர்களைக் காணச் செல்லும் போது சகல மங்கள குணங்களுக்கும் உறைவிடமாகிய இறைவன் இருக்கும் திருக்கோயிலுக்குச் செல்வது போன்ற ஓர் உணர்ச்சி நமக்கு உண்டாகின்றது.

மூன்றாவதாக நாம் காணும் சிறப்பியலாவது சுவாமிகளுடைய பதி ஞானமும் பத்தியுமாகும். "தெய்வமொடு நீயுறையுந் திருக் கோயில்" என்று ஆசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் கூறுகின்றார்கள். தெய்வத்தோடு உடனுறையுந் தெய்வமெனச் சுவாமிகளைக் கூறினால் அது மிகவும் பொருத்த முடைய தாகவே தோன்றும், சாஸ்திர ஆராய்ச்சி, சாஸ்திர உபதேசம், சிவ பூசை முதலிய சிறந்த செய்கைகளின் மயமாகவே அவர்களுடைய வாழ்க்கை இருந்து வந்திருக்கிறது. பிறரை இழித்துப் பேசுவதும், பிறர் யாது செய்கின்றார்கள் என ஒற்றாள் மூலமாய் ஒற்றியுணர்வதும், தம்மை யொப்பார் பிறரில்லை யென்னும் தருக் குணர்ச்சியும், தாம் விரும்பாதனவற்றைப் பிறர் செய்வாயின் அவர்களுக்கு நரகங்களைச் சிருட்டிக்கும் அமானுஷ்ய விருப்பமும், பொறாமையும், தம் பெருமையை நோக்க உலகம் தம்பாற் காட்டும் மதிப்பும் நன்றியறிவும் மிகச் சிறிதென் றெண்ணி அவ்வுலகத்தோடு தீராப் பகை கொண்டிருப்பதும் ஆகியவற்றையே சிறப் பியல்புகளாகக் கொண்டுள்ள பெரியோர்கள் வாழும் நமது நாட்டில், சுவாமிகளைப் போன்ற பெரியோர்கள் ஒரு சிலர் இருப்பது பாலைவனத்திற்குள் பசும் புல்லின் திடர் காணுவது போல்வதாகும்.

சுவாமிகளிடத்தில் பரசமய தூஷணை யென்பது இல்பொருளாகும். தாம் மேற்கொண்டுள்ள சாஸ்திரக் கருத்துக்களின் சிறப்புக்களைக் கூறி வருவார்களேயன்றி, அந்நிய சாஸ்திரக் கருத்துக்களை யெடுத்து அவற்றின் கண் குற்றங்களை ஆரோபித்து 'ஸ்வமத ஸ்தாபனம்’ என்னும் இயல்பு அவர்களிடத்து இல்லை. இதனால் அந்நிய சாஸ்திரங்கனை அவர்கள் கற்றறியாதவர்களென்றும் எண்ணுதல் தவறு. அவ்வகை சாஸ்திரங்களையும் நன்கு கற்றவர்களே யென்பது அவற்றின் கண் உள்ள நுட்ப விஷயங்களைக் குறித்து சுவாமிகளிடத்து விசாரிக்க லுற்றார் நன்கறிவர்.

சுவாமிகளது தெய்வபக்தி போலித்தன்மையுடையதன்று, உலகத்தை வஞ்சித்து, மதிப்புப் பெறல் வேண்டித் தெய்வ பக்தியுடையார் போல்நடிக்கும் வேஷதாரிகளை நாம் மிகுதியாகக் காணுகிறோம். இவ் வேஷதாரிகளுள் ஒருவரல்லர் சுவாமிகள் அவர்கள் பக்தி செய்யு முறையினாலே இது அறியலாகும். நிறை குடம் நீர் தளும்பல் உண்டோ? உடல் பொருளாவியை இறைவன் பால் ஒருங்கு சமர்ப்பிக்கும் பக்தி; இவ்வரிய தன்மைகளை யுடையதாகும் சுவாமிகளது பக்தி.

இறுதியாக நாம் கூறவேண்டுவது உலகிலுள்ள வுயிர்களுக்குச் சமயத்தொண்டு புரிவதே உண்மையான பக்தியென்று சுவாமிகள் கொண்டுள்ளமை. இச் சமயத் தொண்டுக்குப் பயன்படும் படியாகவே தமது சமய சாஸ்திர ஞானத்தையும் அறிவாற்றல்களையும் பக்குவஞ் செய்து சுவாமிகள் வைத்திருக்கிறார்கள். இத் தொண்டு முக்கியமாக பிரசங்க ரூபமாகத் திகழ்கின்றது. இவ்வுயர்ந்த தொண்டிலே சுவாமிகள் ஈடுபட்டி ருக்கும்போது யாதொரு விதமான உபாதியும் எவ்வகையினும் அவர்களை அணுக இடங்கொடுப் பதில்லை. அவர்களது பொன்மொழிகளைக் கேட்கும் பேறு பெற்றவர்கள் அறிவு நிரம்பிய தத்துவ ஞானியாரவர்கள் என்பதில் தடையில்லை.

ஈண்டுக்குறித்த அன்புடைமை, தூயவொழுக்கம், பதிஞானம், பக்தி, சமயத்தொண்டு என்ற சிறப்பியல்புகளால் ஞானியார் சுவாமிகள் ஓர் உண்மை ஞானி யென்பது விளங்குகின்றது.

சுவாமிகள் பட்டத்திற்கு வந்து இப்போது ஐம்பது ஆண்டுகள் சென்றுவிட்டன. அவர்களை இன்னும் பல்லாண்டுகள் நம் பொருட்டு உதவவேண்டு மென்று இறைவனை நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.

பாவலர் போற்றும் நாவலர் திலகம்
ம. பாலசுப்பிரமணிய முதலியார்

ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள், திருக்கோவலூர் ஆதீனத்துப் பெருந் தவத்திரு அரசு கட்டிலேறி, ஞானச் செங்கோ லோச்சித் தமது சீடப் பெருங்குடி மக்களைச் சிவநெறிக்கண் நிறுத்தி, அவர்கட்கு நல்வாழ்வை அளித்து, ஆறெழுத் தருமொழியாம் சீருடைப் பெருவாளேந்தித், திரு நீற்றுக் கவசம் பூண்டு, மாயப்படை வாராமற் காத்துத் தமிழ் மண்டிலமெங்கணும் தாவிப் பரக்கும் பெரும் புகழுடையராகத் திருப்பாதிரிப் புலியூரில் வீற்றிருப்பது நண்பர்கள் அறிந்ததொன்று. சுவாமிகள் இவ்வாதீனத் தலைமை பூண்ட ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா திருப்பாதிரிப்புலியூரில் 1939௵ நவம்பர்௴ 18, 19-ம் தேதிகளில் கொண்டாடப்படும். அவ்விழாவிற் கலந்து கொண்டு நமது சமாஜம் ஒரு வணக்கப் பத்திரம் வாசித்தளிக்கும். அக்காலை நமது சமாஜத்தினர் பெருந்திரளாகக் கூடியிருந்து சுவாமிகளுடைய பொன்மொழிகளைச் செவிமடுத்துச்சுவாமிகள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பேரறிஞர் பலரும் பல கழகப் பிரதிநிதிகளும் வந்து நம்மோடு கலந்து கொள்வார்கள். இவ்விழாவின் நடைமுறை விவரங்களை மற்றோரிடத்திற் காண்க.

இவ்விழாவைக் கொண்டாடும் வகைகள் பலவற்றுள் ஒன்று சுவாமிகளுடைய குணாதிசயங்களைக் காய்தல், உவத்தல், கூட்டல், குறைத்தலின்றி உள்ளவாறே தெரிவித்தல். இம்முறையில் யான் அறிந்தவற்றைச் சுருங்கக் கூறுவது இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரையைக் கண்ணுறும் அன்பர்கள் தத்தம் கருத்துக்களைத் தெரிவித்து நன்றி செலுத்துவார்களென்று நம்புகிறேன்.

1. சுவாமிகள் வடமொழியிலும், தமிழ் மொழியிலும் சிறந்த புலமையுடையவர்கள் என்பதை அனைவரும் அறிவர். தமது சொற்பொழிவுகளில் சுவாமிகள் கூறும் அடிப்படையான கொள்கைகட்கு வேதம், சிவாகமம், புராணம், திருமுறை, சித்தாந்த சாத்திரம் முதலியவற்றிலிருந்து தெளிவான ஆதாரங்கள் காட்டுவதை அறிஞர்கள் குறிப்பெடுத்துக் கொள்ளும் காட்சியை நம்மிற் பலர் பல முறை கண்டிருக்கிறோம். ஏனையோர் தங்கள் உபந்நியாசங்களில் பிரமாணங்களைக் கூறும்போது தங்கட்கு அவற்றின் பொருள் விளங்குவதாகப் புலப்படுத்துவதில்லை; கேட்போரும் பலர் உபந்நியா சங்களில் வடமொழிப் பிரமாணங்களும் பிறவும் கிளிப்பிள்ளை வாக்காகவே உபந்நியாசகர்களால் கூறப்படு கின்றனவோ என்று ஐயுற நேரிடுகிறது. சுவாமிகளுடைய உபந்நியாசங்களில் இவ்வித சந்தேகம் எஞ்ஞான்றும் எழுந்ததில்லை.

பற்பல உபநிடத மேற்கோள்களைப் பதம்பதமாகப் பிரித்துப் பொருள் கூறுவதோடமையாது அவற்றிற் கூறப்படும் உண்மைகள் புராணங்களில் எவ்வாறு உபப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளன. வென்பதையும், தேவார ஆசிரியர்களும் சந்தான குரவர்களும் அவைகளை எவ்வாறு அழகுபட விவரித்துள்ளார்கள் என்பதையும் சுவாமிகள் விவரிப்பதைக் கேட்கும் அன்பர்கள் "ஈதன்றோ செவிச் செல்வம், இத்தகைய சொற்பொழிவுகளை நமது செவிகள் கேட்கவும் பெறின், "மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்தமாநிலத்தே" என்று தமது நெஞ்சுக்குரைப்பார்கள். சுவாமிகள் வேத சிவாகம புராண வாக்கியங்களை விளக்குங்கால் வேதம் போம் வாயார் அங்காந்த வாயராகிப் பிரமித்துத் தம்பித்திருக்கும் காட்சியையும் நம்மிற் சிலர் காணும்பேறு பெற்றுள்ளோம்.

2. சுவாமிகள் மிகத் தெளிவாகப் பேசும் பேராற்றலுடையவர்களென்பதை மகளிரும் சிறாரும் கூறுவர். முப்பொருளுண்மை அத்துவித இலக்கணம் போன்ற கடினமான பொருள்களை விளக்குங்கால் இருப்புக் கடலையை மெல்வது போன்ற துன்பமான முறையை அறவே விடுத்து மிகச் சுலபமான சொற்களால் பல சாதாரண உவமைகளின் துணை கொண்டு எளிய நடையில் பொருளின் நுட்பம், புதைந்த கருத்து, தருக்கமுறை முதலியவற்றைச் சுவாமிகள் விளக்கும் போது இளம்பிள்ளைகளும் பெண்மக்களும் கண் சாம்பாது முகஞ்சுளியாது ஒளிவீசுங் கண்களோடும் மலர்ந்த முகங்களோடும் செவிவாயாகச் சொல்லமிர்தம் பருகுங் காட்சியைக் கண்காள் காண்மின்களோ வேறு சிலர் உபந்நியாசங்களில் நுவலப்படும் பொருளை அறியமாட்டாது இடர்ப்பட்டுக் கேட்போர் பலர் தம்முள் வேறு பொருள்களைப்பற்றிப் பேசிச் சந்தடி செய்து கேட்கும் சிலரையும் கேட்கவொட்டாது தடை செய்யும் காட்சியைக் கண்காள் காணற்க 'அவையறிந் துரைத்தல்" என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் “ஒளியார்முன் ஒள்ளியராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்" என்னுங் குறளுக்கு இலக்கியமாயுள்ளவர்கள் சுவாமிகளேயென்பதைக் காண்டல் கருதல் உரையென்னும் மூவகைப் பிரமாணத்துள் காட்சியளவிலேயே அறியக்கூடு மென்பதை வற்புறுத்தவே காட்சிகள் சிவலற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் கூறினேன்; பின்னும் கூறுவேன்.

3. சுவாமிகள் தமிழில் நிரம்பிய பற்றுடையவர்கள் என்பதை யறியாதார் யாரேயுளர்? திருமுறைகளிலும் கந்தரநுபூதி போன்ற பனுவல்களிலும் சிவஞானச் செல்வர்கள் திருவாக்கிலுமுள்ள சொல்லாழம், பொருளாழம், சொன்னயம், பொருணயம் முதலியவற்றைச் சுவாமிகளைப் போல வேறு யாவரே எடுத்துக் கூறுவர்? ஒரு சொல்லின் முழுப் பொருளையும் முழு நயத்தையுமறிய ஒரு நாள் போதாதே சுவாமிகள் பெரிய புராணத்திற் சில செய்யுள்களையும் கந்தரநுபூதிப் பாக்களையும் பாடமாகக் கூறக்கேட்டோர் தாம் "கற்றது கைம்மண்ணளவு கல்லாதது கடலளவு” என்றல்லது வேறென்ன கூறுவர்? “தம்மினுங் கற்றாரை நோக்கிக் கருத்தமிழக எற்றே இவர்க்கு நாம் என்று" எனத்தமது மனத்துத் குரைத்தலைக் தவிர சுவாமிகளைக் கண்ட புலவர் வேறென் செயவல்லார்? கண்ணப்ப நாயனார் புராணப் பிரசங்கத்தில் நாயனார்க்குத் திண்ணன் என்ற பிள்ளைத் திருநாமம் ஏற்பட்டதை விளக்கித் தமிழ்ப்பற்றை யூட்டும்போது சுவாமிகள் தமிழார்வத்தைக் கண்டு மகிழாதார் யாவர்? பேபி யென்றும் ரோஸ் என்றும் அறியாது பெயரிட்ட தாய் தந்தையர் வெட்கித்தலை குனிவதைக் காணாதவர் யாவர்?

4. சுவாமிகள் நுண்ணிய பொருள்களை விளக்குமிடத்தும் பிறாண்டும் எளிய உவமைகளைத் துணையாகக் கொள்ளும் பேராற்றலுடையவர்கள். சிலர் எளிய பொருள்களை விளக்கப் புகுந்துழி சிக்கலான உவமைகளை எடுத்துக் காட்ட முயன்று இடர்ப்படுவர். கண்ட உருவத்தைக் கொண்டு காணாத கடவுளையறிகிறயவன் புத்திசாலியென்று சுவாமிகள் கூறுவதுண்டு. இதற்குவமையாகப் பள்ளிக்கூடத்தில் இரண்டு பிள்ளைகளுள் பழகிய மாணவன் "ட" என்ற எழுத்தைப் பார்த்ததும் "ட" என்ற ஒலியை உச்சரிப்பதையும், பழகாத புதிய மாணவன் ஒருவன் அவ்வொலியை உச்சரிக்கமாட்டாது அவ்வெழுத்தைப் பார்த்து அது ஒரு கோடு என்பதையும் எடுத்துக்காட்டி, கோடு என்று எண்ணுவது பொய்யல்ல ஆனால் தாழ்ந்த அறிவுநிலை யென்றும், கண்ட எழுத்தைக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாது காதுக்கே புலப்படும் ஒலியைறிவதே உயர்ந்த அறிவுநிலையென்றும், இவ்வாறே திருக்கோயிலிலும் உருவங்களைக் கல்லென்றும் செம்பென்றும் நினைப்பது தாழ்ந்த நிலையென்றும் கடவுளென்று தொழுவது உயர்ந்த நிலையென்றும் சுவாமிகள் மிகத் திறமையாக விளக்குவதைக் கேட்பவர் உள்ளம் கேட்குந் தோறும் பூரிக்கும். மும்மலங்களினுண்மைக்கு "அவன் ஆணவம் பிடித்துத் திரிகிறான்" "அவன் கருமம் அவனை விடுகிறதா", "அவன் மாயையிலே மூழ்கிக் கிடக்கிறான்" என்று தமிழ்நாட்டுக் கிழவிகளும் கூறும் பழக்கத்தைச் சுவாமிகள் சுட்டிக் காட்டுவதை நாம் பன்முறை கேட்டின்புற்றுள்ளோம். -

5. சுவாமிகள் உபந்நியாசங்களில் அவ்வப்போது நகைச்சுவை பொருந்தப் பேசுவதையும் நாம் மறத்த லாகாது. சிலர் நகைச்சுவைக்கென்றே முயன்று வேண்டாத கிளைக் கதைகளை வருவித்துக் கொண்டு வீணாகப் பொழுது போகிறதே! யென்று அறிஞர்கள் நினைக்கும்படி செய்வதுண்டு. சுவாமிகளுடையை முறை அத்தகையதல்ல. தாழ்ந்த அருவ்ருப்பான பொருள்களை அறவே விடுத்துக் கற்பூரத்தில் தீப்பற்றுவதுபோல்புத்தி கூர்மைமிக்கவர்கள் சடுதியிற் பற்றி இன்புறக்கூடியவைகளாகவே சுவாமிகளுடைய நகைச்சுவை மொழிகள் மிளிரும். இவற்றைக் கோவையாக்கி ஒரு நூல் வெளியிடலாம். தாலிபுலாக நியாயமாக ஈண்டு ஒன்றே கூற விரும்புகிறேன். அஷ்ட புஷ்பங்களுள் ஒன்று பாதிரி. இதில் சிவப்புப் பாதிரி, வெள்ளைப் பாதிரி என இருவகையுண்டு. சிவப்புப்பா திரியே பூசைக்குகந்தது; வெள்ளைப் பாதிரி நீக்கப்படுவது இதைக் குறிக்குமிடத்து "வெள்ளைப் பாதிரி ஒவ்வாதது வேறொரு பொருளிலும் என்று சுவாமிகள் கூறியபோது குழுமியிருந்த கூர்த்தமதியினர் புன்னகை செய்தனர். ஏனையோர் புன்னகையின் காரணத்தையறியாது விழித்தனர். வெள்ளைப் பாதிரிப் புஷ்பமும் ஆகாத வஸ்து, நமது சமயத்தைக் குறைகூறி ஏமாற்றித் தாழ்ந்த வகுப்பினர்களைத் தனது சமயத்துக்கு ஈர்த்துச்செல்லும் வெள்ளைப் பாதிரியும் (வெள்ளைக்காரப் பாதிரியார்) ஆகாது என்றுணர்ந்தவரே புன்னகை செய்த வராவார்.

6. இவ்வளவில் சுவாமிகளுடைய உபந்நியாசங்களின் தன்மை முதலியவற்றைச் சுருக்கிக் கொண்டு இனிச் சுவாமிகள் தமது சீடர்களோடும் ஏனைய அன்பர்களோடும் அளவளாவி நடந்துகொள்ளும் முறைகள் சிலவற்றைக் குறிக்க விரும்புகிறேன். முதன்முதலாவதாக நாம் கண்டு வியப்புறக்கூடியது சுவாமிகளுடைய ஞாபக சக்தி. உபநிடதங்களையும் தோத்திர சாத்திர பாடல்களையும் ஞாபகம் வைத்திருப்பதே நம்மிற் பலருக்கு அசாத்தியாமான காரியம். அவற்றோடு ஒவ்வொரு வருடைய வாழ்க்கை நிலைவிவரங்களையும் நினைவிருத்தி அவரவரோடு அளவளாவுங் கால் அவற்றைப் பற்றி விசாரிக்கும்போதும் சுவாமிகள் இனிய சொற்களால் மிகுந்த விநயத்தோடும் பரிவோடும் அவரவர்கள் சுகதுக்கங்களில் தமக்குள்ள ஈடுபாட்டைக் காட்டும்போதும் கேட்போர் மனங்குளிர்ந்து உவகை யெய்துவர். "சுவாமி குழந்தைபோலப் பேசும் என்று கூறாத கிழவியுமில்லை, குமரியுமில்லை. "சொல்லின் செல்வன்" என்று மேடைமீதேறிப் பிரசங்கம் செய்யும் ஆற்றல் மிக்கவர்களைப் புகழ்வதுண்டு, மேடை மீதிலும், மேடை விட்டிழிந்த பின்னும், மேடை மீதேறும் வரையிலும் எஞ்ஞான்றும் இன்சொற் பகர்ந்து செஞ்சொற் பெருக்கி வன்சொற்கடிந்து பொன்சொல் வழங்கும் சுவாமிகளுக்கே "சொல்லின் செல்வன்" என்ற பட்டம் பொருந்தும்.

7. சுவாமிகள் சாந்தம், பொறை, வெகுளாமை முதலிய நற்குணங்கள் நிறைந்த தத்துவக் குணக்குன்றெனக் கூறல் மிகையாகாது. "யாகாவா ராயினு நா காக்க" என்ற முதுமொழியை வாழ்க்கையில் நடத்திக் காட்டும் உயர்வு சுவாமிகட்கேயுரித்து. சுவாமிகளிடம் உபகாரம் பெற்று வாழ்ந்தவர்கள், தங்கள் தீவினை வசப்பட்டு நன்றியை மறந்து மறம்செய்து தவறிழைத்துப் பின்னர் அரச தண்டத்துக் குட்பட்டுச் சரணாகதியென வந்த காலத்து நமது சுவாமிகள் தலைநாளிற் காட்டிய அன்புடனேயே அவர்களை ஏற்று மன்னித்த தெய்வச் செயல்களைப் புலிசைவாசிகளும் வேறு பல நண்பர்களும் நன்கறிவர். குறளர் ஒருவர் "கைதவமறியாச் செய்தவ முடையோய் நினது கடிதங் கண்டாம்” எனத் தொடங்கும் குறும்புக் கடிதமெழுதியதற்கு வெகுளாது அவரிடமிருந்து ஒரு மகாநாட்டைத் தலைமை வகித்துச் செம்மையாக நடத்திக் கொடுத்துப் பிறகு பத்தாண்டுகள் கழிந்த பின்னர் அன்னார் ஒரு கழகத்துக்குத் தீங்கிழைப்பதைத் தவிர்க்க வேண்டிய இச் செய்தியை வெளியிட்டு அன்னாருடைய உண்மை நிலையைப் பலர் அறியும் படி வெளிப் படுத்தியதைக் கண்டு அன்பரணை வரும் வியப்பெய்தினர். 1927௵ சென்னையில் சைவசித்தாந்த மகா சமாஜத்தின் கீழ்ச் சொற்பொழிவாற்றிய ஹைகோர்ட்டு ஜட்ஜி ராமேசம் அவர்கள் தமது சொற் பொழிவில்சுவாமிகள் திருவதனத்தில் சாந்தம் நிறைந்த பொலிவு காணப்படுகிறதென்று வாயாரப் புகழ்ந்து கூறியதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

8. சுவாமிகள் இக்காலத்திய உலகப் போக்கை நன்கறிந்து அதற்கேற்பப் பிற மக்களோடு ஒழுகும் பேராற்றலுடையவர்கள். இக்காலத்திய துறவிகளில் இரு வகையினரை எளிதிற் காணலாம். பலர் நீறில்லாப்பாழ் நெற்றிராய் நாடோறும் முகக்ஷவரம் செய்த பொலி வுடையராய் உட்சட்டை மேற்சட்டை காற்சட்டை உடற்சட்டை மேற்போர்வை முதலிய ஆடைப் பெருக்குடையராய்ச் சமயப் பற்றை மட்டும்விட்டு ஏனைய பற்றுக்களை விடாதவராய்க் காணப்படுகின்றனர்; வேறு சிலர் ஜோசியம் சொல்லுதல், மருந்து தருதல், மந்திரித்தில் முதலிய பல தொழில்கள் செய்து செல்வர்களையடுத்து அவர்களுடைய பரிவார நிழலில் வாழ்கின்றனர். வேறு பல வகையான ஒழுக்கமுடைய கல்லாடை புனைந்த கள்வர்களுமுண்டு. இவர்களெல்லாம் உலகத்தோடு ஒட்ட ஒழுகுவோராகத் தங்களைக் கூறிக்கொள்வதண்டு. அறிவுபடைத்த உலகம் இவர்கள் ஒழுக்கத்தைத் துரும்பாக மதிக்கும். சுவாமிகள் இத்தகைய துறவிகளை நோக்க வேறொரு பிறவி, வேறொர் உலகத்தவர்என்றே கூறல்வேண்டும். இவ்விருபதாம் நூற்றாண்டில் காலம் தாழ்க்காது காரியங்களைச் செய்யும் கொள்கை வேரூன்றி வருகிறது. நமது சுவாமிகள் குறித்த கால வெல்லை களைப் பாராட்டி நடக்கும் நவநாகரிகம் நிரம்பப் பெற்றவர்கள். தங்களுடைய சமய ஒழுக்கத்துக்கும் துறவொழுக்கத்துக்கும் இன்றிமையாதனவற்றை ஒரு சிறிதும் நெகிழ விடாது ஏனைய வழிகளில் அன்பர்கள் விண்ணப்பத்துக் கிணங்கி அவர்களை மகிழ்வித்துத் தாமும் மகிழும் பெருமை வாய்ந்தவர்கள். சில அறிஞர்களைக் கழகங்கள் அழைப்பதென்றால் மிகுந்த பணச் செலவும் உடலூழியமும் வாய்ந்த ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும். சுவாமிகள் அவ்வாறின்றி அன்பர் கட்கெளியராக விரும்பிப் போந்து தொண்டாற்றி ஆசீர்வதிப்பதைத் தமிழ்நாடு நன்கறியும். தங்கள் திருமடத்தில் அன்பர்களையும் காணவரும் பேரறிஞர்களையும் ஆரவாரமின்றி உள்ளன்போடு சுவாமிகள் உபசரிப்பதைக் கண்டு இல்லறத்தார் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

9. சுவாமிகள் தம்மையடைந்த இளைஞர்கட்குக் கல்விபுகட்டி அவர்களை நல்வழிப்படுத்தித் தகுந்த உத்தியோகங்களில் தக்கார் துணைகொண்டு அவர்களை அமர்த்தி அவர்களுடைய நல் வாழ்க்கையைக் கண்டு இன்புறுவதை நம்மிற் பலரறிவர். சில பெரும் புலவர்கள் தம்மை யடைந்தவரை ஓம்பாது அவர்களைத் தங்கள் சாசுவத அடிமைகளாகப் பாவித்துத் தங்கள் புத்தக வேலை, அச்சுவேலை, ஆராய்ச்சி வேலை முதலியவைகளில் அவர்களைச் சிற்றாள்களாகப் பணிவித்து வேலைக்கேற்ற ஊதியமோ, புகழ்ச்சொல்லோ நன்றியோ செலுத்தாத வன்கண்ணராக வெறுக்கப்படுவதையும் நாமறிவோம். சுவாமிகளுடைய உதவியால் கல்வி பெற்றவர்களையும் வேலையிலமர்ந்தவர்களையும் இத் தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் காணலாகும். மந்திரி முதல் மந்தமதியிறாகவும் லக்ஷாதிபதி முதல் பிக்ஷாதிபதியிறாகவும் உள்ள பலதிறப்பட்ட பலதரமுடைய மக்களோடும் பழகி அவர்கள் நன்மதிப்பைப் பெற்றுத் தம்மையடைந்தவர்கட்கு உபகாரம் செய்யும் வழி அவர்கள் நட்பையும் தமது செல்வாக்கையும் பயன்படுத்திப் புகழ் கொள்ளும் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராகச் சுவாமிகள் திகழ்கின்றார்கள்.

10. சுவாமிகள்தம்மையடைந்து வேண்டுவார் வேண்டுவதே ஈயும் கொள்கையுடையவர்கள். விரும்பிக் கேட்போர் வசதி ஒன்றையே நோக்கிக் தங்கட்கு ஏற்படும் சிரமத்தை ஒரு சிறிதும் பொருட்படுத்தாது கேட்போர் விண்ணப்பத்துக்கிணங்குவ தொன்றையே சுவாமிகளுடைய பெருங்கருணையறியுமல்லாது பிறிதொன்றில்லை. மிருகவைத்திய சாலையிற் பணி புரியும் நண்பர் ஒருவர் ஒரு சிறு நூலைப் பாடங் கேட்க விரும்பி நண்பகல் பதினெட்டு நாழிகையே தமக்கு வசதியான நேரமென்று தெரிவிக்க, அவருடைய வேண்டுகோளுக்கிறங்கி அவருடைய அறிவு நிலைக்கேற்ற முறையில் அச்சிறு நூலிலுள்ள செம்பொருள்கள் அனைத்தையும் பாடமாகச் சொல்லி முடித்து அவர்களைச் சுவாமிகள் ஆசீர்வதித்தார்கள். இவரைப் போல வேறு நூல்களைப் பாடங்கேட்டவர்கள் ஆயிரக்கணக்கிலடங்காதவர்கள். எவ்வித கைம்மாறுமின்றிக் கேட்போர் உயிர் நலமொன்றையே கருதித் தமது உயர்ந்த அறிவு நிலையி லிருந்து பல படிகளிறங்கிக் கேட்போர் நிலைக்கேற்ற சொற்கள், பொருள்கள் அவர்கட்குப் பாடஞ் சொல்லும் செயல் இறைவனது தடத்தலக்கணத்தை நினைவூட்டுகிறது.

சுவாமிகளுடைய குணாதிசயங்களைப் புகழ்வதற்கு என் போலியரால் இயலாது. இயன்றவரை சிற்சில கூறினேன். வேறு பல புலவர் பெருமக்கள் விரிவாக எழுதவும் பேசவும் கூடுமாதலின் இம்மட்டில் அமைகின்றேன். பாற்கடல் முழுவதையும் நக்கிக் குடிக்கக் கருதும் பூஞையின் ஆசை போன்றதே என்னை எழுதத் தூண்டியது.

தமிழ் நாட்டினரனைவரும் நமது சமாஜத்தினரனைவரும் ஏனை கழகங்களின் உறுப்பினரனைவரும் ஒருங்கே கூடி இக்கட்டுரையில் தொடக்கத்திற்குறித்த நிறைவு விழாவிற் கலந்து கொண்டு பாவலர் போற்றும் நாவலர் திலகமாகிய ஸ்ரீலஸ்ரீசுவாமிகள் நீடுழி வாழ்ந்து நமக்கு உய்யுநெறி காட்டும் உபதேச மொழிகளை எஞ்ஞான்றும் வழங்குமாறு ஞானபண்டித சுவாமிகளாகிய முருகப்பெருமானாரது முத்தி தரும் திருவடிகளை வாழ்த்தி வணங்குவோமாக. சுபம்.
ஆனந்த விகடன்
‘கல்கி' ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தியவர்கள் வெளியிட்டது.
சைவ சித்தாந்தமும், ஞானியார் சுவாமிகளும்

சில நாளைக்கு முன்பு நான் ஒரு சைவ சித்தாந்தியின் பிரசங்கம் கேட்டேன். பிரசங்கி, சர்க்கார் உத்தியோகம் பார்த்துப் பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கும் பெரியார். அவர் சைவ சித்தாந்தத்தின் அருமை பெருமைகளை விஸ்தாரமாக விவரித்தார். உலகத்தில் வேறு எந்த சமயமும் சைவ சமயத்துக்கு ஈடாகாதென்று விவாதித்தார். கடைசியில் ஆவேசம் வந்தவரைப்போல் “ஆகா இப்பேர்ப்பட்ட சைவ சித்தாந்தத்தை அந்த அடால்ப் ஹிட்லருக்கு யாரும் எடுத்துப் போதிப்பாரில்லையே? ஹிட்லர் மட்டும் சைவ சித்தாந்தத்தை அறிந்து கொண்டாரானால் இப்பேர்ப்பட்ட விபரீதமான காரியங்களைச் செய்வாரா? உலகத்தை யுத்தத்தில் ஆழ்த்து வாரா? அந்தோ பரிதாபம் என்று கதறினார். இதைக் கேட்ட சபையோரில் சிலர் கரகோஷம் செய்து ஆர்ப்பரித்தார்கள்.

ஆனால், எனக்குப் பக்கத்திலிருந்த ஒருவருக்கு மட்டும் பிரசங்கி சொன்னது பிடிக்கவில்லயென்று தோன்றிற்று, “ஆமாம், ஆமாம், ஹிட்லருக்குச் சைவ சித்தாந்தத்தைப் போதித்துவிட்டால் ரொம்ப நல்லதுதான். அவருடைய விரோதிகளைப்பீரங்கி வாயில் வைத்துச் சுடுவதற்குப் பதிலாகக் கழுவிலேற்றிக் கொன்றுவிடுவார் செலவு குறைச்சல்“ என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார். (சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்ற கதையை நினைத்துக்கொண்டுதான் அவர்அப்படி முணுமுணுத்திருக்க வேண்டும்.)

எனக்கு அந்தசமயம் என்ன தோன்றிற்து என்பதையும் சொல்லிவிடுகிறேன். “ஆகா இந்த உலகத்திலே கடவுள் என்னென்ன அக்கிரமங்களையெல்லாம் வைத்திருக்கிறார்? எப்பேர்ப்பட்ட மூர்க்கர்களையும் மூடாத்மாக்களையும் படைத்திருக்கிறார்? எவ்வளவு பாவங்களையும், தீமைகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்? அந்தோ அந்தக் கடவுளுக்கு மட்டும் சைவ சித்தாந்தத்தை யாராவது போதித்து விட்டால், இந்தமாதிரி அக்கிரமங்கள் எல்லாம் உலகில் நடக்குமா? ஐயோ! கடவுளுக்குச் சைவ சித்தாந்தத்தைப் புகட்டுவதற்காக இந்த சைவப் பிரசங்கியை உடனே கடவுள் பால் அனுப்பினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நான் எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.

விஷயம் என்னவென்றால், இந்த நாளில் நாமெல்லோரும் பிறருக்குப் போதனை செய்யவே தயாராயிருக்கிறோம். அந்தப் போதனையை நமது வாழ்க்கையில் கொண்டுவரத் தயாராயிருப்பதில்லை. மேற்படி சைவ சித்தாந்தப் பிரசங்கியை எடுத்துக்கொள்வோம். அவர் ஏன் சைவ சித்தாந்தத்தை ஹிட்லருக்குப் போதிக்க விரும்புகிறார்? நம் ஊரில் எத்தனையோ பேர் சைவ சித்தாந்தத்தைக் கரைத்துக் குடித்து விட்டிருக்கிறார்களே, அதன் பயன் என்ன? சைவ சித்தாந்தம் பிறந்த தமிழ்நாடு இன்று ஏன் அடிமை நாடாயிருக்கிறது? இங்கே ஏன் இவ்வளவு சாதி-மத-துவேஷங்கள் குடிகொண்டிருக்கின்றன? இந்நாட்டு ஜனங்கள் ஏன் அன்னிய பாஷை மோகத்தில் வீழ்ந்திருக்கிறார்கள்? இங்கே ஏன் இவ்வளவு வேஷதாரிகளும், வஞ்சகர்களும், தேசத் துரோகிகளும் இருக்கிறார்கள்? நம் ஊரில் நிலைமை இப்படி இருக்கும் போது, ஹிட்லருக்குச் சைவ சித்தாந்தத்தைப்போதிக்க மேற்படி பிரசங்கியார் இவ்வளவு கவலைப்படுவானேன்? இருக்கிறது; காரணம் இருக்கிறது. அடால்ப் ஹிட்லர் ஒருவேளை ஜயித்து, அதனால் பிரிட்டிஷ் சாம்ராஜய்த்துக்குக் கேடுவந்து, அதன் விளைவாகத் தம்முடைய பென்ஷனுக்கு ஆபத்து வந்துவிடப் போகிறதே என்று இந்தப் பிரசங்கிக்குக் கவலை! அந்தக் கவலையினால் தான் ஹிட்லருக்கே சைவ சித்தாந்தத்தைப் போதித்து விடலாமென்று அவர் ஆசைப்பட்டது. அதே காரணத்தினால்தான், சேம்பர்லினுக்கும் சர்ச்சிலுக்கும் அவர் சைவ சித்தாந்தத்தைப் போதிக்க ஆசைப்படவில்லை.

இம்மாதிரி எத்தனையோ சைவ சித்தாந்தப் பிரசங்கிகளை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் அன்பு மதமாகிய சைவ சித்தாந்தத்தைப்பற்றித் தேனொழுகப் பேசுவார்கள்.

"அன்பும் சிவமும் இரண்டென்பர்அறிவிலார்
அன்பே சிவமாவதாரு மறிகிலார்
அன்பே சிவமாவதாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே"

என்ற திருமூலர்பாட்டைச் சொல்லி, "இம்மாதிரி அன்பே கடவுள் என்று போதிக்கும் மதம் உலகத்தில் உண்டோ?” என்று கேட்பார்கள். ஆனால் விபூதிக்குப் பதிலாக நாமத்தைப் போட்டுக் கொண்டு ஒருவர் வந்துவிட்டால் அவரைச் சுண்ணாம்புக் காளவாயில் போடுவதற்குத் தயாராயிருப்பார்கள். !

தமிழ்நாட்டுச் சைவ சித்தாந்த பிரசங்கிகளில் சிலர் இங்கிலீஷ் பாஷையையும் கரைகண்டவர்கள். ஸ்பென்ஸர், ஹக்ஸ்லி முதலிய மேனாட்டுத் தத்துவ சாஸ்திரிகள் கூறிய முடிவுகளெல்லாம் சைவ சித்தாந்தததில் பொதிந்து கிடப்பதை அவர்கள் கண்டுபிடித்துச் சொல்வார்கள், டார்வின் கொள்கையை எத்தனையோ காலத்திற்கு முன்பு சைவ சித்தாந்தம் ஸ்தாபித்து விட்டது என்று நிரூபிப்பார்கள். ஆனால், தங்களுடைய உத்தி யோகத்திற்கோ, சம்பளத்துக்கோ, பென்ஷனுக்கோ ஏதாவது ஆபத்து வருவதாயிருந்தால், அதற்குக் காரணமாயிருப்பவர்களை ஒரு தடவையல்ல, ஏழு தடவை கழுவிலேற்றத் தயாராயிருப்பார்கள்.

இவ்வாறு சைவ சித்தாந்தப் பிரசங்கம் செய்பவர்களில் அநேகர், "சைவத்தின் உண்மையை அறிந்தவர்களுமல்ல." சைவத்தை வாழ்க்கையில் அனுஷ்டிப்பர்களுமல்ல’ என்ப தைப் பார்க்கிறோம்.

வைஷ்ணவ சித்தாந்த பிரசங்கம் செய்கிறவர்களும் சைவ சித்தாந்திகளுக்குக் கொஞ்சமும் மேற்படி விஷயங்களில் சளைத்தவர்கள் அல்ல. சைவ சித்தாந்திகளாவது மற்ற சித்தாந்தக்காரர்களைத்தான் சுண்ணாம்புக் காளவாய்க்கு அனுப்புவார்கள். வைணவ சித்தாந்திகளோ தங்களுக்குள்ளேயே வடகலையாரைத் தென்கலையாரும், தென்கலையாரை வடகலையாரும் கழுவேற்றத் தயாராயிருப்பார்கள்.

இதெல்லாம் பொதுவாக நாம் பார்த்திருக்கும் விஷயங்கள். ஆனால், விதி விலக்காக சைவத்திலும் வைஷ்ணவத்திலும் சில பெரியார்கள் இருக்கிறார்கள், அவர்கள் உண்மையாகவே சமய தத்துவங்களை உணர்ந்தவர்கள். சமய வாழ்க்கை நடத்துபவர்கள். இப்படி விதிவிலக்காயுள்ள சமயப் பெரியார்களுக்குச் சிறந்த உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருவரைக் குறிப்பிட வேண்டுமானால் திருப்பாதிரிப் புலியூர் ஸ்ரீ ஞானியார்சுவாமிகளைத் தான் குறிப்பிடவேண்டும்.

அடிகளின் உருவத் தோற்றத்தைப் பார்த்ததுமே, “இதோ ஒரு பெரியார் இருக்கிறார்" என்னும் உணர்ச்சி நமக்கு உண்டாகும். அவருடைய வாய் மொழிகளைக் கேட்டு அவருடைய பெருமை மேலும் மேலும் நமக்குப் புலனாகும். ‘அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் பெரியார் இவரல்லவா!" என்று எண்ணி எண்ணி வியப்போம்.

ஒவ்வொரு சமயமும் ஒரு தத்துவத்தை வெளியிடுகிறது: அத்துடன், ஒரு வாழ்க்கை முறையையும் உபதேசிக்கிறது. உலகத்தின் சிருஷ்டி மக்களின் வாழ்க்கை, கடவுளின் ஸ்வரூபம் இவற்றைக் குறித்துச் சொல்லும் பகுதி தத்துவப் பகுதி. சமய தத்துவத்துக்கிணங்க வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டு மென்றுபோதிப்பது அனுஷ்டானப் பகுதி. எல்லா சமயங்களிலும் போல் சைவ சமயத்திலும் இந்த இரண்டு பகுதி இருக்கின்றன. பசு, பதி, பாசம் (ஜீவாத்மா, பரமாத்மா, மாயை) என்னும் மூன்று அம்சங்களை சைவ சமயம் குறிப்பிட்டு, இவற்றுள் பதியிலிருந்து பசுவும் பாசமும் தோன்றிப் பதியிலே மறைகின்றன என்ற சித்தாந்தப் படுத்துகிறது. இது சைவ சமயத்தின் தத்துவப் பகுதி. பசுவாகிய ஜீவன் தன்ன்னையொத்த மற்ற ஜீவன்களிடத்திலெல்லாம் அன்பு செய்வதாலும், இறைவனை பக்தியினால் வழிபடுவதினாலும், அடியார்களுக்குத் தொண்டு செய்வதினாலும்; மாயை நீங்கிப் பதியை அடையலாம் என்று சைவ சமயம் போதிக்கிறது, இது அனுஷ்டானப் பகுதி.

மேலே நாம் பார்த்ததுபோல், சைவ சமயத்தின் தத்துவ ஆராய்ச்சியில் கரை கண்டவர்கள்தங்கள் வாழ்க்கையில் அச்சமய போதனையை அனுஷ்டிப்பதில்லை. சைவ வாழ்க்கை முறையைக் கைப்பற்றி ஒழுகும் பக்தர்களுக்கும் சைவ சமய தத்துவங்கள் தெரிந்திருப்பதில்லை. தத்துவமும் தெரிந்து வாழ்க்கையிலும் சைவர்களாயிருப்பவர்களுக்கு, அந்த் உண்மைகளை சகலரும் அறிந்து கொள்ளும் படியாக எடுத்துச் சொல்வதற்கு வேண்டிய வாக்குவன்மை இருப்பதில்லை. இந்த மூன்று விதமான பெருமைகளையும் உடையவர் ஸ்ரீ ஞானியார் சுவாமிகள். அவர் சைவ சமயத்தின் தத்துவங்களை நன்கு அறிந்தவர்; வாழ்க்கையில் அச்சமய போதனைக் கிணங்கி நடப்பவர்; சைவ சமயத்தின் தத்துவங்களையும், போதனைகளையும் பற்றி அபார வாக்கு வன்மையுடன் பிரசங்கம் செய்யக் கூடியவர்.

"சோனா மாரியாகப் பொழிவார்" "கடல் மடை திறந்தாற்போல் பேசுவார்" என்பதெல்லாம் சுவாமிகள் விஷயத்தில் உபசார மொழிகள் அல்ல. ஐந்து வருஷத்துக்கு முன்பு அவர்கள் பட்டினத்தடிகளைப் பற்றிச் செய்த பிரசங்கத்தை நான் கேட்டேன். அதில் அவர் கூறிய விஷயங்கள் இன்னும் என் மனதைவிட்டு அகலாமல் இருக்கின்றன. சிலபேர் பிரசங்க மாரி பொழிவார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது மட்டும் கேட்பவர்களுக்குத் தெரியாது, "பெரியவர் அபாரமாய் பேசினார்; ஆனால், அவ்வளவு பெரிய விஷயங்கள் நமக்கெல்லாம் புரியுமா?" என்று சொல்லிக் கொண்டு பேசுவார்கள். ஆனால், சுவாமிகள் பேச்சு இப்படியல்ல, அவர்கள் பிரசங்கத்தைப் படித்தவர்களும் ரஸிப்பவர்கள்; பாமரர்களும்விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்வார்கள். மணிமணியாக, முத்து முத்தாக சுவாமிகள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நம் மனதில் என்றும் அழியாதவாறு பதிந்துவிடும். எப்படிப்பட்ட சிக்கலான சமய உண்மையையும் சிக்கறுத்துச் சொல்வார்கள்.

"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்"

என்னும் கவியின் வாக்கை சுவாமிகள் சொற்பொழிவுகள் மெய்ப்படுத்தும்.

ஸ்ரீ ஞானியார் சுவாமிகள் திருப்பாதிரிப்புலியூர்மடாதி பதியாகி இந்த மாதத்தோடு ஐம்பது வருஷங்கள் பூர்த்தியாகின்றன. இந்த ஐம்பது வருஷ காலத்தில் சுவாமிகள் ஆயிரக்கணக்கான சமயப் பிரசங்கங்கள் செய்திருப்பார்கள். லட்சக்கணக்கான ஜனங்களுக்கு சைவ சமயத்தின் உண்மைகளை எடுத்துப் போதித்திருப்பார்கள். எவ்வளவோ பேருடைய வாழ்க்கையைத்தமது உபதேசங்களால் புனிதப் படுத்தியிருப்பார்கள். சுவாமிகள் சமயப்பணி செய்வதுடன் தமிழ்ப்பணியும் செய்து வருகிறார்கள். எத்தனையோ பேருக்குத் தமிழ் அன்பையும், தமிழ் அறிவையும் ஊட்டி யிருக்கிறார்கள். அரசாங்க உதவியின்றி ஒரு தமிழ்க் கல்லூரியும் நடத்தி வருகிறார்கள்.

சுவாமிகளின் தமிழன்பு, தமிழ்ச் சுவையின் அனுபவ உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. "தமிழ், பரமசிவன் அருளிய மொழி என்பதற்காக மட்டும் அவர் தமிழைப் போற்றுகிறவர் அல்ல. இத்தகைய தமிழன்பர்களும் சிலர் இருக்கிறார்கள். பரமசிவன் அருளிய தமிழாயிருந்தாலும், அதில் வேறு தெய்வங்களைப் போற்றும் நூல்களை அவர்கள் மதிப்பதில்லை. இராமாயணத்தின் கதாநாயகன் இராமன் என்பதற்காகவே அவர்கள் கம்பராமாயணத்தை "மட்டம்" என்று தள்ளிவிடுவார்கள். ஆபாசங்கள் நிறைந்த எட்டாந்தர ஸ்தல புராணமானாலும், விஷ்ணுவைக் கொஞ்சம் மட்டந்தட்டியிருந்தால் அதைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள். ஸ்ரீ ஞானியார் சுவாமிகளின் ஆழ்ந்த தமிழன்பில் இத்தகைய குறுகிய சமயப் பற்று குறுக்கிடுவது கிடையாது. உண்மைக் கவிதைக்கும், வெறும் செய்யுளுக்கும் அவர்கள் நன்றாக வித்தியாசம் அறிந்தவர்கள் எதெதற்கு எந்த அளவில் மதிப்புக் கொடுக்க வேணுமோ, அவ்வளவுதான் கொடுப்பார்கள்.

இந்தியாவின் புராதனமான ஆதிசமயம், சைவ சமயம். உபநிஷதங்கள் கூறும் வேதாந்த மதமும் சைவ சமயமும் ஒன்றேதான் வடநாட்டார் கோதுமையை ரொட்டி தட்டிச் சாப்பிடுகிறார்கள். தென்னிந்தியர்கள் சிலர் அதே கோதுமையைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் இரண்டும் கோதுமைதானல்லவா? இவ்வாறே வட இந்தியாவில் வேதாந்தமாகத் தழைத்த சமயந்தான், தென்னாட்டில் சைவமாக வளர்ந்தோங்கிற்று. ஸ்நாதன தர்மத்தின் இந்த இரண்டு பகுதிகளுக்கும் பொதுவான ஒரு சிறப்பு உண்டு. வேதாந்த மதம் எல்லா மதங்களையும் கடவுளை அடையும் வழிகளாக ஒப்புக் கொள்கிறது: சைவ சமயமும் அவ்வாறே புதிதாக உண்டான மதங்கள் தங்களுடைய பெருமையை நிலை நாட்டுவதற்காகப் பிற மதங்களுடன் சண்டையிடுவது அவசியமாயிருக்கலாம். அந்த அவசியம் ஆதி சமயங்களுக்கு இல்லையல்லவா? அண்ணன் தம்பிகள் பாகப்பிரிவினைக்காகச் சண்டை போட்டுக் கொள்வது இயற்கை; ஆனால் தகப்பனாரே பிள்ளைகளுடன் பாகத்துக்குச் சண்டை போட்டால் அதைவிட மூடத்தனம் வேறென்ன இருக்கிறது? ஆகையினால்தான் வேதாந்தத்திலும் சைவ சமயத்திலும், "சர்வ மத சம்மதம்" என்னும் அரிய கொள்கையை நாம் காண்கிறோம். ஆனால், சைவத்தின் இந்தத் தனிப் பெருமையைக் குலைக்க விரும்பும் சில சைவப் பெரியோர்களும் இருக்கிறார்கள். மற்ற மதங்களைக் குறைத்துச் சொன்னால்தான் சைவத்தைப் பெருமைப்படுத்தியதாகும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஸ்ரீ ஞானியார் சுவாமிகள் 'வீர சைவர்' ஆனபோதிலும் அத்தகைய வீரப் பிரதாபங்களை அவர்களிடம் காணமுடியாது. சர்வ மத சமரஸ் ஞானமுடைய உண்மை ஞானியார் அவர்.

"வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலைபெற்ற
வித்தகச் சித்தர் கணத்"

தைச் சேர்ந்த பெரியார் என்றும் சொல்லவேண்டும்.

ஸ்ரீ ஞானியார் சுவாமிகள் பட்டத்துக்கு வந்த ஐம்பதாவது வருஷ பூர்த்திக் கொண்டாட்டத்தைச் சென்ற 18-19 ௳களில் சுவாமிகளின் சீடர்களும், தமிழன்பர்களும் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடினார்கள். முறையே அறுபதாவது, எழுபதாவது, எண்பதாவது வருஷ பூர்த்திக் கொண்டாட்டங்களையும் நடத்துவதற்குத் தமிழ் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இறைவன் அருள்புரிய வேண்டும்.

சிவத்திரு ஞானியாரடிகளின்
பொன்விழா ஆசிமொழி

உலகம் உயிர் இறை என முப்பொருள் உண்டு. இவற்றினும் வேறு பொருளில்லை. இம்முடிபு வேதாகமாந்த முடிபு. ஆன்றோர்கள் அறுதியிட்டு அறைவது. இம்மூன்றனுள் உலகம் இருத்தலை மட்டும் உடையது; உயிர் இருத்தலையும் அறிவினையும் உடையது; இறையோ இருத்தலையும் அறிவினையும் இன்பத்தினையும் உடையது. உயிரினறிவு சிற்றறிவு. இறையறிவு முற்றறிவு. உலகம் அறியாமை உடையது. உயிர் அறிவும் அறியாமையும் உடையது. இறை அறிவினையுடையது. எங்கெங்கு அறிவு உண்டோ அங்கங்கு அநுபவம் உண்டு. அறிவினளவே இன்ப அளவு; நீரின் அளவே நீர்ப்பூவின் தண்டின் அளவு. அமுதுபடி வெண்ணிறம் உடையது. உயிர் அறிவினையுடையது. அமுதுபடியின் வெண்ணிறம் விளங்காதவாறு உமி மூடியிருக்கும். உயிரினறிவு விளங்காதவாறு அறியாமை மூடியிருக்கும். மூடியிருக்கும் உமி நீக்கத்தக்கது; மூடியிருக்கும் அறியாமை நீங்கத்தக்கதே. தானே உமி நீங்காது. தானே அறியாமை நீங்காது. குற்றுவோரின்றி உமி நீங்காது. ஞானாசாரியரின்றி அறியாமை நீங்காது. குற்றுவோர் ஒருமுறைக்குப் பலமுறை குற்றி உமியை நீக்கல்வேண்டும். ஒருமுறைக்குப் பலமுறை உபதேசித்து இறையாகிய ஞானாசாரியர் அறியாமையை அகற்றல் வேண்டும். குற்றுவோனுக்கு உமியைப் போக்க முழுப்பலம் வேண்டும். ஞானாசாரியர்க்கு அறியாமையைப் போக்க முழு ஞானம் வேண்டும். அமுது படியின் வெண்ணிறம் தானே விளங்காது. விளக்க விளங்கும். உயிரறிவும் தானே விளங்காது. விளக்க விளங்கும் உயிரினறிவை விளக்க மற்றொரு உயிர்க்கு ஆற்றலில்லை. சேற்றை மற்றொரு சேறு கழுவாது; தண்ணீர் வேண்டும். சீவகாருண்யம் உடைய இறைவேண்டும் உயிர்க்கு அறியாமையைப் போக்கவும் அறிவை விளக்கவும் இன்றிய மையாது இறைவேண்டும்.

ஒருவர்க்குக் குற்றும் ஆற்றலிருப்பினும்குற்றுந் தொழில் நிகழ்ந்தபோதே நெல்லுக்கு உமி போதலும் வெண்ணிறம் விளங்குதலும் நேரும். இறை தொழில் செய்தபொழுதே உயிரின் அறியாமை நீங்குதலும் அறிவு விளங்குதலும் ஆம். உருவமின்றி அறிவோடு கூடிய தொழில் நிகழாது. உருவம் வந்தபோது பெயர் வரும். எனவே, உரு, பெயர், தொழில் இம் மூன்றும் இறைக்கு இருப்பின் உயிர்க்கு அறியாமை நீங்கும்; அறிவு விளங்கும். இறையோ உருவொடு பெயர்தொழில் ஒன்றும் இலான். என் செய்வது உயிர்கள்? இந்நிலையில் இறை காரணம் பற்றாக் கருணையினால் உரு பெயர் தொழில் ஆம் இவைகளை மேற்கொள்ளுகின்றது. இறை உயிர்களின் நலம் பொருட்டுக் கொள்ளும் உருவமும் நிலையியலுருவமும் இயங்கியலுருவமும் என இரண்டு வகையாம். ஒன்று இருந்து நலஞ்செய; மற்றொன்று சென்று நலம் செய. இருந்து நலஞ்செயும் உருவம் இலிங்கம் முதலிய. சென்று நலஞ்செயும் இயங்கியல் உருவமும் குரு சங்கமம் என இரண்டு வகையாம். குரு வடிவம் தானல்லாத உடலைத் தானெனும் அகங்காரத்தைப் போக்க; சங்கம வடிவம் தனதல்லாத பொருளைத் தனது என்னும் மகாரத்தைப் போக்க அகங்காரம் மமகாரம் போக உயிர்க்கு முத்தி சித்திக்கின்றது. "யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த வுலகம் புகும்" என்பது திருவள்ளுவர் பொய்யாமொழி யன்றோ? இறைக்குள்ள வடிவங்கள் மூன்று. ஒன்று இலிங்க வடிவம்; ஒன்று குருவடிவம்; மற்றொன்றோ சங்கம வடிவம். மூன்றையும் குருலிங்க சங்கமம் என்று சொல்வது நூல் வழக்கும் உலக வழக்கும் ஆம். இம்முறை காரணத்தோடு கூடியதே. குருஇல்லையேல் இலிங்கத்தின் பெருமையும் அடியாருயர்வுந் தோன்றா. ஆதலின் குருவை முதலில் வைத்தனர். குரு என்பதன் பொருள்களுள் சிறந்தவை மூன்று. ஒன்று “கவுரமாயிருத்தலினாற் சிவாசாரியர்க்குக் குரு என்னும் இப்பெயர் எய்திற்று" இது லிங்கபுராணம் உத்தரகாண்டம் இருபதாவது அத்தியாம் 19-ஆம் சுலோகத்திற் கண்டது. மற்றொன்றுகு எனும் அஞ்ஞானத்தைப் போக்கிரு எனும் ஞானத்தைத் தருபவன் என்பது. "குகரம் அந்தகாரம். ருகரம் ஒளியாம். அதனால் குலவும் இருளோட்டியொளி கொடுப்பதுவே குருவாம்” (வீரசிங்காதன புராணம் வீரபத்திரச் சுருக்கம் 158ஆம் செய்யுள்) இன்னொன்று சம்ஸ்கிருத வாக்கியத்தாலும் பிராகிருத வாக்கியத்தாலும் தேவபாஷை முதலிய உபாயங்களாலும் சிஷ்யர்களறிவைத் தெரிந்து போதிக்கிறவனே குரு என்பது. இப்பொருள் வட மொழிச் சிவதருமோத்திரம் எனும் உபாகமத்திற் கண்டது.

குருவின் பெருமையுள் சில : “உயர்ந்த பக்தி எப்படி ஈசுவரன் மீது அப்படி குருவின் மீது“ - சுவேதாசுவதரம் ஆறாம் அத்தியாயம் “இஷ்டம் சித்தித்தற் பொருட்டுக் குருவைத் தியானிக்குக - தக்ஷிணாமூர்த்தியுபநிஷத். ‘பக்தியொடு தன் குருவை வணங்கி“ - கைவல்யோபநிஷத். “குருவினுரு வங்குறித்த அப்போதே திரிமலந் தீர்ந்து சிவனவனாமே“ - திருமந்திரம். “சிவனென யானுந் தேறினன் காண்க“ - திருவாசகம். “மன்னுமருட் குருவாகி வந்தவரினிக்கி, மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்“ - சித்தியார். “எட்டுதற்கரிய சற்குரு அருளால் இயம்புமோர் மொழியினைப் பெற்றே, நிட்டை சாதித்தே சகல கேவலங்கள் நீங்கிடிற் பிறப் பிறப்பறுமே” - நிஷ்டாநுபூதி. வேதாகமங்களின் முடிவிலுண் டாகும் ஐயத்தை அகற்றுபவன் குரு; இருட்பிணி அவிப்பவன் குரு; தன்னை உணர்த்துபவன் குரு; தலைவனை உணர்த்துபவன் குரு; இயமமாதிகளை வருவிப்பவன் குரு; பேரின்பத்தை யடைவிப்பவன் குரு. ஏனைய வடிவங்களினும் குருவடிவஞ் சிறந்தது. அடிமை என்று தன்னையறியாது தான்கொண்ட உடம்பே மேல் எனக்கருதுபவர்க்கு அமுதும் நீருந்தந்து பசி தாகங்களைப்போக்கித், தன்னை அடிமை என்று கருதினவர்கட்குப் பசி தாகங்களைப் போக்குவதேயன்றிச் சாத்திரோபதேசத்தால் இறைவனது இருவகை யிலக்கணங்களையும் உணர்த்திச் சாதனை வகையால் அநுபவத்திலிருத்திக் குரு மூர்த்தியிருக்கும்இடமே மடம் எனப் பெயர்பெறும். இங்ஙனம் கூறுவது காமிகாகமம். மடம் - முனிவாசப் பேர் என்பது மண்டல புருடோத்தமன் நிகண்டு.

இவ்வித மடங்களில் வசிக்குங் குரு மூர்த்திகள், வழிபாடு செய்து, தம் அடியார்களை வழிப்படுத்தத் தாம் வசிக்கும் மடத்தோடு ஆலயங்களை அமைத்தனர். அதனால் மடாலயம் எனும் வழக்கம் வந்தது முற்காலத்தில். “மடம் பெற்றபேறு திருக்கோயிற் கில்லையிம் மாநிலத்தே" என்பது பழைய பாட்டு. வடநாட்டிலும் தெனாட்டிலும் பல ஆயிர ஆண்டுகளாக மடாலயங்கள் உண்டு. இம் மடாலயங்களுள் ஒன்றே இந்த ஞானியார் மடாலயம். இத் தென்னடாம் தமிழ்நாட்டில் அடியார் பலர் சமய உணர்ச்சியிற் சிறந்து முத்தியடையதற்குச் சற்குருவை அடைந்து ஞானோ பாய சாதனங்களை அறிந்து சாதித்துப் பதமுத்தியையும் பரமுத்தியையும் அடைந்துவந்தனர். சுமார் 300 ஆண்டுகளின் முன்னர் அடியார் பலர் ஞானாசாரியர் இல்லாது தவித்தனர். அக்காலத்து முருகப்பிரான் திருவருளால் திருக்கோவலூரில் கலி 4774-ஆம் ஆநந்த௵ கார்த்திகை மாதம் கிருத்திகைத் திருநாளில் அருணையில் தீபம் விளங்குந்தருணம் குருமூர்த்தி அவதரித்தனர். இம்மூர்த்திகளே இம்மடாலய முதல் குருபரர். ஞானோபதேசம் செய்யவே அவதரித்தமையின் “ஞானியார்” எனச் சிறப்பாகச் சொல்லப்பெற்றனர். அம்மூர்த்திகள் வழிவழி வந்த எங்களிடத்தில் மெய்யன்பு நிறைந்த அறிஞர்பலர் இம்மடாலய ஆசாரிய சம்பந்தம் எங்கட்குக்கிடைத்து ஐம்பதாண்டு நிறைந்தமையை யுணர்ந்து பொன் விழாக் கொண்டாட முயன்று இன்றையதினம் செவ்வையாக நடத்துகின்றனர். அவ்வன்பர்கட்கு யாங்கள் செய்வது என்? குன்றுதோறமர்ந்து எங்கள் உள்ளத்திலும் குடிகொள் குமரவேளையும் அப் பெருமான் இருபாங்கரும் அமர் அன்னைமாரையும் குருமூர்த்திகளையும் எண்ணித், துதித்து, வணங்கி இவ்விழாவில் மனத்தாலும் வாக்காலும் மெய்யாலும் முயன்று, பொருளையும் தந்து, கொண்டாடும் அன்பர் பலரும் அவர் தம்மைச் சார்ந்தாரும் வேண்டுவன பெற்று இன்புறச் செயல் வேண்டுமெனத் துதிக்கின்றோம். மெய்யன்பர்கள் பலரும் நன்று வாழ்குக. பல் ஆண்டு இன்பத்துடன் வாழ்குக அவர் தம்மைச் சார்ந்தாரும் . உலகம் வாழ்குக.

சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க.

சிவமயம்
சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க.

மடாலய வரன்முறை

முதற் குருமூர்த்திகள் : (மடாலயம் நிறுவியவர்கள்)

ஸ்ரீலஸ்ரீ - ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் தோற்றம், கலி 4774, ஆநந்த ஆண்டு, கார்த்திகை கிருத்திகை மாலை திருவிளக்கிடு நேரம்.

திருவருள் நிலையிலிருந்த காலம் : 97 ஆண்டுகள்
திருவருட் கலப்பு : கலி 4870, விகுர்தி மாசி 27௳ வியாழன்
இயற்றிய நூல்கள் : நிட்டானுபூதிசார முதலாம் 31 நூல்கள் . 1146 பாடல்கள்
இரண்டாங் குருமூர்த்திகள் : (சண்முக ஞானியார்)
ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்

தோற்றம், பிள்ளைப்பெயர் முதலியன அறியும் வாய்ப்பில்லை.

அருளாட்சியேற்றமை : கலி 4870 விகுர்தி, மாசி 27 அநுடம் வியாழன்
அருளாட்சி : 63 ஆண்டுகள்.
திருவருட்கலப்பு : கலி 4933 நந்தன , கார்த்திகை, அசுவினி மூன்றாம் செவ்வாய்,
இயற்றிய நூல்கள் : விநாயகர் மாலை, முருகரந் தாதி முதலாம் 7 நூல்களும் 401 பாடல்களும் அறியக் கூடியன.
மூன்றாங் குருநாதர் :
ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சங்கணவசவ மெய்ஞ்ஞான
சிவாசாரிய சுவாமிகள்

தோற்றம், பிள்ளைப் பெயர் முதலியன அறியும் வாய்ப்பில்லை.

அருளாட்சியேற்றமை : கலி 4933, நந்தன, கார்த்திகை அசுவினி மூன்றாம் செவ்வாய்.
அருளாட்சி : 16 ஆண்டுகள்
திருவருட்கலப்பு : கலி 4949, கீலக புரட்டாசி கடைசிச் சோமவாரம்,
நான்காங் குருநாதர் :

ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரசிவ மெய்ஞ்ஞான

சிவாசாரிய சுவாமிகள்

தோற்றம், பிள்ளைப் பெயர் முதலியன அறியும் வாய்ப்பில்லை.

அருளாட்சியேற்றமை : கலி 4949 கீலக, புரட்டாசி, கடைசிச் சோமவாரம்.
அருளாட்சி : 41 ஆண்டுகள்
திருவருட்கலப்பு : கவி 5090 விரோதி, ஐப்பசி 26௳ (10-11-1889) மிருக சீரிடம் ஞாயிறு.
ஐந்தாங் குருநாதர் :
ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்

தோற்றம், கலி 4974, ஸ்ரீமுக, வைகாசி 4௳ வியாழன் மூல நாள் (17-5-1873)

பெற்றோர் : சிவத்திரு. அண்ணாமலைஅய்யர்

திருமதி. பார்வதியம்மையார்

பிள்ளைத் திருநாமம் : சிவத்திரு பழநியாண்டி அய்யர்
அருளாட்சியேற்ற நாள் : 4990 விரோதி,ஐப்பசி 26௳ (10-11-1889) ஞாயிறு.
அருளாட்சி : 53 ஆண்டுகள்
திருவருட்கலப்பு : கலி 5044, விஷு தைப்பூசம் 19௳ ஞாயிறு (1-2-1942)
இயற்றிய நூல்கள் : கிடைத்தவை:-
பாட்டுகள்
குரு துதி 49
ஞான தேசிக மாலை 23
திலகவதியம்மை துதி 7
----
79

புதிய நூல்கள் வேண்டாம்; ஆன்றோர் நூல்களைப் படிப்பதே போது மென்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்களாதலால், மேற் கூறிய சில துதிப் பாடல்களையன்றிப் பிற ஏதும் இயற்றத் திருவுளங்கொள்ளவில்லை போலும்.

ஆறாம் குருநாதர்
ஸ்ரீலஸ்ரீ சிவசண்மு சத்தியஞான சிவாசாரிய சுவாமிகள்
பெற்றோர் : சிவத்திரு - பழநியாண்டி அய்யர் (மாமா சுவாமி)
திருமதி-அமிர்தம் அம்மை யார் (மாமி)
தோற்றம் : விரோதி,பங்குனி 11, பானு வாரம், பரணி (23-3-1890)
அருளாட்சியேற்றமை : கலி 5044, விஷு தை (1-2-1942)
அருளாட்சி : 9 ஆண்டுகள்
திருவருட்கலப்பு : விகுர்தி, கார்த்திகை 29௳ வெள்ளி, சதயம் (15-12-1950)
பல திருப்பணிகளை நிறைவேற்றினார்கள்.


ஏழாம் குருநாதர் !
ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக ஆறுமுக மெய்ஞ்ஞான
சிவாசாரிய சுவாமிகள்
பெற்றோர் : சிவத்திரு அண்ணாமலை அய்யர்
திருமதி சிவகாமியம்மையார்
தோற்றம் : கீலக சித்திரை3௳ புதன் அஸ்தம் (15-4-1908)
அருளாட்சியேற்றமை : விக்ருதி, கார்த்திகை 29௳ (15.12.1950)
அருளாட்சி : 36 ஆண்டுகள்
திருவருட்கலப்பு : 17.6.1986 (அட்சய ஆண்டு ஆனிமாதம் 3ம் நாள்)
தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf
எட்டாம் குருநாதர் !
ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான
சிவாசாரிய சுவாமிகள்
பெற்றோர் : சிவத்திரு. ஆறுமுகம்
திருமதி தில்லையம்மாள்
தோற்றம் : 15.7.1934 (பவ ஆண்டு ஆனி 31௳)
அருளாட்சியேற்றமை : 18.5.1986 (அட்சய ஆண்டு ஆனி மாதம் 4௳)

24.10.1988 (விபவ ஆண்டு ஐப்பசி 8ம் தேதி) ஞானியார் மடத்தின் குடமுழுக்கும், மடாலயத்தில் எழுந்தருளியிருக்கும் அமி, சுப்பிரமணிய சுவாமிக்கும் குருமூர்த்தி தோட்டத்திலுள்ள 2முதல் 7வரை உள்ள குருமூர்த்தி சுவாமிகளுக்கும் குடமுழுக்கு பணி செய்துள்ளார்.

இந்நூலுக்கு ஆதாரமான நூல்கள்

1. மறைமலையடிகள் வரலாறு (1959) மறை. திருநாவுக்கரசு

2. சைவத்திரு ஞானியார் அடிகள் வரலாறு புலவர். க.பா. வேல்முருகன் (1973)

3. கோவில் ஆதீனக் குருமணி (1967) புலவர். க.பா. வேல்முருகன்

4. சைவ ஆதீனங்கள் ஊரன் அடிகள் (2002)

5. ஓம் சக்தி மாத இதழ் ஜூலை (1986)

6. கந்தர் சஷ்டி சொற்பொழிவுகள் (1941)

7. இதய ஒலி - டி.கே.சி. (1942)

8. புலிசை ஞானியார் அடிகளார் (1973) முனைவர். சுந்தர சண்முகனார்

9. ஞானியார் அடிகள் முனைவர். சுந்தர சண்முகனார் (1993)

10. தவத்திரு ஞானியாரடிகள் வெள்ளையாம்பட்டு சுந்தரம் (1982)

11. சித்தாந்தம் மாத இதழ் (சனவரி 2002)

12. முதல் குடி அரசு சில பிரச்சனைகள்-விமர்சனங்கள் (1988). முருகு. இராசாங்கம்

13. ஞானியார் அடிகள் நினைவுகள் (1995)

ckh

L L