உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/சிவத்திரு ஞானியாரடிகள்

விக்கிமூலம் இலிருந்து

சிவத்திரு ஞானியார் அடிகள்
வல்லிக்கண்ணன்

தமிழ் நாட்டில் சைவமும் தமிழும் தழைத்து ஓங்குவதற்கு சைவ சமய ஆதீனங்களும் மடாலயங்களும் அரும்பணிகள் புரிந்துள்ளன. ஆதீனங்கள் மற்றும் மடாலயங்களின் தலைமைக் குருமூர்த்திகளாக அருளாட்சி நடத்துகிறவர்கள், யாவர்க்கும் இறை உணர்வு ஊட்டுவதோடு, சமயச் சார்பான சங்கங்கள் அமைப்பதிலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகப் பலவகைகளிலும் தொண்டாற்றுவதிலும் ஆர்வம் உடையவர்களாக விளங்குகிறார்கள்.

அவர்கள் பலருள்ளும் தனிச்சிறப்பும் உயர்மதிப்பும் பெற்றவர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் ஆவர்.

திருக்கோவலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தில் ஐந்தாவது குருமூர்த்திகளாகப் பொறுப்பேற்று அருள் ஆட்சி புரிந்தவர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள். அவர்கள் சிவத்திரு ஞானியாரடிகள் என்ற சிறப்புப் பெயரும் பெற்றிருந்தார்கள். அவர்களது வாழ்வு தமிழின் வாழ்வு, அவர்களது வளம் சைவத்தின் வளம் எனத் திகழும் தன்மையில், ஐம்பத்து மூன்று ஆண்டுகள் செங்கோலோச்சியவர்கள் ஞானியாரடிகள்.

மக்கள் வாழ்வை செம்மைப்படுத்தவும், அவர்கள் நல் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து நல்வாழ்வு வாழ்வதற்கு வழிகாட்டவும் குருமார்கள் தோன்றுகிறார்கள். அவர்கள் மடாலயங்களில் அமர்ந்து, தாம் நல் ஒழுக்க முறைகளைக் கையாண்டு, பிறரையும் அந்நெறிகளைப் பின்பற்றச் செய்து, யாவராலும் போற்றப்படுகிறார்கள். சீலம் கைக்கொள்ளும் தூயநெறிகளில் வீரசைவநெறி மிகச் சிறப்பானது ஆகும்.

வீரசைவர் அறுபத்துநான்கு சீலங்களைக் கடைபிடிக்க வேண்டும். தக்க கட்டுப்பாடுகளைக் கைக்கொண்டு வாழ வேண்டும். குருவின் திருவடி தியானித்து, குருமொழி கடவாமல் செயலாற்ற வேண்டும். பலபல ஒழுக்கக் கட்டுப்பாடுகளுடன் சீலநெறியில் வாழ்ந்த வீரசைவர் தங்கள் பெயருக்குப் பின் அய்யர் என்று அடைமொழி இணைத்துக் கொள்வது வழக்கம். வீரசைவர், பல பெரிய சிவ ஆலயங்களில் பூசைகள் புரிந்திருக்கிறார்கள். மிகச் சில கோயில்களில் இன்றும் வீரசைவர் பூசை நடைபெறுகிறது.

ஆலய பூசை, இட்டடலிங்க பூசை புராண இதிகாசச் சொற்பொழிவுகள், சிறுவர்க்குக் கல்வி போதனை முதலிய சமுதாயப் பணிகள் பலவற்றை மேற்கொண்டு அவர்கள் வாழ்ந்தார்கள். தம்மைச் சுற்றியிருந்தவர்களையும் ஒழுக்க நெறியில் ஈடுபடுத்தினார்கள். இவ் உயரிய வாழ்க்கை நெறிகளை மக்களிடம் பரப்புவதற்காக அமைக்கப்பட்டதுதான் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயம்.

அருள்திரு சண்முக ஞானியார் என்று போற்றப் பெரும் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் இம்மடத்தின் முதல் குருநாதராக விளங்கினார். அவருக்கும், அவருக்குப் பின் மடாலயத் தலைமைப் பொறுப்பேற்ற மூவருக்கும், பின் வந்தவர்களே ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் ஆவர். ஞானியாரடிகள் என்ற பெரும் சிறப்புப் பெற்ற அவர்கள் இம்மடத்தின் ஐந்தாம் குருமகா சந்நிதானம் ஆவார்கள்.

கும்பகோணத்திற்கு வடகிழக்கில் அமைந்துள்ள திருநாகேச்சுரம் என்ற ஊரில், வீரசைவ குடும்பத்தவருக்குக் குருவாக விளங்கிய அண்ணாமலை அய்யர், அவர்தம் துணைவியார் பார்வதியம்மை ஆகியோரின் பிள்ளையாகப் பிறந்தவர் ஞானியாரடிகள் பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் பழநியாண்டி என்பதாம்.

அண்ணாமலை அய்யரும் பார்வதி அம்மையும், தங்கள் முன்னோர் கொண்ட முறைப்படி, திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலய குருமூர்த்திகளைக் குருவாகக் கொண்டிருந்தார்கள். அடிக்கடி திருப்பாதிரிப்புலியூர் சென்று குருவை வழிபட்டுத் திரும்புவது வழக்கம்.

வீரசைவர், தம் மரபு முறைப்படி, பிள்ளைப் பருவச் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்றி, சிவலிங்க தாரணையும் செய்து வைக்க வேண்டும். அவ்வாறே பழநியாண்டிக்கும் எல்லாம் செய்யப்பட்டன. பிறகு தம் குருவாகிய ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்துச் சுவாமிகளிடம் சிவலிங்க தாரணம் செய்து வைப்பதற்காக, ஆறாம் மாதத்தில் குழந்தையை பெற்றோர் குருவிடம் கொண்டு வந்தனர்.

அப்போது, ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் நான்காம் குருமூர்த்தியாக மடாலயப் பொறுப்பு வகித்து வந்தார்கள். உங்கள் குழந்தை பழநியாண்டி இனி எமக்குரிய பிள்ளை. அப்பிள்ளையை இங்கே கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என்று குருமூர்த்தி ஏற்கனவே அண்ணாமலை அய்யருக்குக் கட்டளையிட்டிருந்தார்.

குருவாக்கை வேதவாக்காகக் கொண்டு, மிகத் தீவிரமாகப் பின்பற்றி மகிழும் வீரசைவர் குலத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் செல்வக் குழந்தையை ஆறாம் மாதமே குருவின் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டார்கள். அன்று முதல் திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்தையே தமது இருப்பிடமாகவும், குருநாதரையே தாயும், தந்தையும், குருவும், தெய்வமுமாகவும் கொண்டு வளர்ந்து வந்தார்கள் ஞானியாரடிகள். குருநாதர் ஆணைப்படி பெற்றோர் சிலகாலம் மடாலயத்தில் தங்கியிருந்தனர்.

மடாலயத்தின் நான்காம் குருநாதர், பழநியாண்டியை சின்னஞ்சிறு பருவம் முதலே பல நல்ல பழக்கங்களில் ஈடுபடுத்தினார். எழுத்தறியும் காலம் வந்ததும், சென்னகேசவலு நாயுடு என்பாரை மடத்துக்கு வரவழைத்து, பையனுக்கு தெலுங்கு மொழியைக் கற்பிக்கச் செய்தார். அப்படி நான்கு ஆண்டுகள் பழநியாண்டி தெலுங்கு கற்றார்.

பின்னர், தாய்மொழி தமிழும், ஆங்கிலமும் பயிற்றப் பெற்ற பள்ளியில் சேர்ந்து பழநியாண்டி கல்வி பயின்றார். பள்ளி நாட்களிலும், குருநாதர் பூசை செய்வதற்காக பூக்கொய்தல், நீராடுவதற்காகப் போதிய நீர் முகந்து, வடித்தெடுத்து, தூய்மையுடன் வைத்தல், சந்தனம் அறைத்தல், தீபமிடல் போன்ற பல தொண்டுகளையும் அவர் சிறப்புறச் செய்து வந்தார். அடுத்து தனது ஆன்மார்த்த பூசையை முடித்துக் கொண்டு காலம் தவறாது பள்ளி சென்று வருவார்.

அவர் சிறுபருவத்திலேயே, வீரசைவ சமய தீட்சை பெற்று, தமக்கு இடப்பெற்ற கடமைகளை நன்கு செய்து முடித்தார். அத்துடன்,குருநாதரோ, மடாலயத்தின் தொடர்பு கொள்ளும் பிறரோ, வேண்டுவனவற்றைக் குறிப்பறிந்து காலம் கடவாமல் செய்து முடிப்பதிலும் கருத்தாகயிருந்தார்.

நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கே விழித்தெழுந்து, தம் பாடங்களைப் படித்து எழுத்து வேலைகளை முடித்து விடுவார் அவர். இறைவன் மீது பாக்கள் ஓதுவதையும் அவர் நியமமாகச் செய்து வந்தார். வெளிச்சம் வரும்வரை இவ் அலுவல்களை செய்துவிட்டு, ஒளிபரவத் தொடங்கியதும் நித்திய கருமங்களை முடித்து, பூக்குடலையோடு நந்தவனம் சேர்வார். அங்கு பூக்களையும் பத்திரங்களையும் பறிக்கும் போதே விநாயகரகவல், திருவாசகச் சிவபுராணம், திரு அகவல்கள், திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா முதலியவற்றை மனத்தூய்மையுடன் ஓதி மகிழ்வார். பிறகு நீராடி, காலைச்சிற்றுண்டி கொண்டு, பள்ளி செல்வார்.

மாலையில், பள்ளி முடிந்து திரும்பியதும், அன்று பயின்றவற்றையும், அடுத்த நாள் நடக்க வேண்டியவற்றையும் படித்துச் சிந்தனையில் பதிவு செய்து கொள்வது அவர் வழக்கமாகயிருந்தது. இயன்றவரை சிறிது விளையாடுவதும் உண்டு. இவ்வாறு சிறுபருவத்தில் ஒழுக்க நெறிகளை அவர் பயின்று தேர்ந்ததன் பயனாகவே அடிகளார் பின்னர் யாவர்க்கும் வழிகாட்டியருளும் சிறப்பினைப் பெற்றார் எனக் கொள்ளலாம். பதினாறு வயதுக்குள் அவர் தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், வடமொழிகளைக் கற்றறிந்திருந்தார். அத்துடன் அவர் குருநாதரிடம் சித்தாந்த சாத்திர நூல்களையும் பயின்று வந்ததும் குறிப்பிடத் தக்கதாகும்.

பழநியாண்டிக்கு பதினாறு வயது பூர்த்தியாகி, பதினேழாம் வயது நடந்து கொண்டிருந்தது. மடாலயத்தின் நான்காம் குருமூர்த்தியான ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் இறுதிநிலை எய்தும் கட்டம் வந்து சேர்ந்தது. அவர் நாற்பத் தொரு ஆண்டுகள் பட்டமேற்றுப் பொறுப்பு வகித்திருந்தார். அவருக்குப் பிறகு யார்பட்டமேற்பது என்ற நிலை தோன்றியது. குருநாதர், சிலரது யோசனைப்படி, வேறொருவர் பெயரைக் குறிப்பிட்டு உயில் எழுதி வைத்திருந்தார். எனினும், அவர் பின்னர் மனம் மாறி, அந்த உயிலை நீக்கிவிட்டு வேறு உயில் எழுதினார். அதில் பழநியாண்டியை நியமித்து எழுதிவைத்தார். உடனேயே பழநியாண்டிக்கு சந்நியாச தீட்சையும் செய்து முடித்தார். ஆசாரிய அபிஷேகம் செய்வித்து, முறைப்படி உபதேசம் செய்து வைத்தார்.

பட்டம் ஏற்போர் அச்சமயம் சில சத்தியவாக்குகளைக் கூறி, குரு ஆணையை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்க வேண்டும். அந்த மடாலய வரன்முறை மரபையும், சந்நியாச நிலையையும் வழுவாது கடைப்பிடித்து, தம் முன்னோர் ஒழுகி வந்த முறைப்படி, எந்தவிதக் குறைவும் நேராவண்ணம் பூசை நியமங்களைத தவறாது காப்பதுடன், மடாலய மரியாதைக்கு உரிய சிவிகை ஊர்தல், பொதுமக்கள் அன்புடன் புரியும் உபசாரங்களையேற்று அவர்களுக்கு அருள்பாலித்தல் முதலிய நெறிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப் பிடிப்பதாகவும் குருவின் மீது ஆணையிட்டுக் கூறல் வேண்டும். அடிகளார் அனைத்தையும் உறுதிமொழிப்படி தம் வாழ்நாள் முழுவதும் நிறைவேற்றி வந்தார்.

அடிகளார் தமது உறுதிமொழிப்படி நடப்பதில் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்பதற்குச்சான்றாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். மடாலயத் தலைவர் சிவிகையில் செல்லும் மரபு பற்றியது அது.

சிவிகையில் செல்வதனால் காலதாமதம் ஏற்படுகிறது. விரைவாகப் பல இடங்களுக்குப் போய்வர இயல்வதுமில்லை. காலப்போக்கிற்கு ஏற்பவும், சூழ்நிலைகளுக்குத் தக்கபடியும் சில மரபு ஒழுக்கங்களை மாற்றிக் கொள்வதில் தவறில்லை. அடிகளார் சிவிகை ஊர்வதை விடுத்து, கார் ஒன்றினைப் பயன்படுத்துவது நல்லது. அதனால் விரைவாக குறித்த இடம் சேரமுடியும். எளிதாகப் பல இடங்கள் சென்று, பெருமளவில் மக்களுக்குத் தொண்டாற்ற வாய்ப்பு கிட்டும். இப்படிச் சிலர் அடிகளாரை வேண்டிக் கொண்டார்கள். புதுவைக் கலைமகள், கழக ஆண்டு விழாவிற்கு வருகைதந்த ஞானியாரடிகளிடம், அறிஞர்லதிரு. வி. கலியாணசுந்தரமுதலியார் இக்கோரிக்கையை அன்புடன் முன் வைத்தார்.

அதற்கு அடிகளார் புன்முறுவல் பூத்து, ஒரு கதை சொல்லி மறுத்துவிட்டார்கள். ‘யாமும் முன்னோர் கைக்கொண்ட முறைகளைப் பின்பற்றியே வந்துள்ளோம். அதனை மாற்றி நடந்தால், உள்ளத்தாற் பொய்யாதொழுகல் என்ற மறைமொழி கற்ற பயன் என்னாவது?' என்று தெளிவுபடுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சி 1913ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அதன் பிறகு ஞானியாரடிகள் பலப்பல நிகழ்ச்சிகளுக்கும் சிவிகையிலேயே சென்று வந்தார்கள். சென்னைக்கும் பலமுறை சென்று திரும்பியது உண்டு. அதனால், வழியில் உள்ள சிறு கிராம மக்களும் அடிகளைக் காணவும், அவர்களிடம் அன்பு கொள்ளவும் வாய்ப்புகள் கிட்டின. சிற் சில கிராமங்களில் மக்கள் அடிகளாரின் சொற்பொழிவைக் கேட்டு இன்புறும் பேற்றினைப் பெறவும் முடிந்தது.

அடிகளார் தாம் கொண்ட உறுதியிலிருந்து மாறவேயில்லை என்பதையும் திரு.வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.

‘ஞானியார் மடத்தலைமையும் சிவிகையூர்தலும் இன்ன பிறவும் சுவாமிகளை வெளியூர் செல்லாதவாறுதகைந்து வந்தன. அவைகள் சுவாமிகளைச் சிறைப்படுத்தின என்றே சொல்வேன். இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகள் சுவாமிகளின் தமிழைப் பருக எவ்வளவு விழைந்தன என்பதை யான் அறிவேன்.

1941 ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவிலிருந்து இராமசாமி நாயுடு என்ற அன்பர் சென்னை வந்திருந்தார். ஞானியாரடிகளையும் திரு.வி.க.வையும் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்ல அவர் பெரிதும் விரும்பினார். அடிகளின் இசைவைப் பெற நாயுடுவும் திரு.வி.க.வும் மடாலயம் சேர்ந்தனர். நாயுடு அடிகளிடம் தம் விருப்பத்தைக் கூறினார். ‘எனக்குள்ள தடைகளை முதலியாரவர்கள் சொல்வார்’ என்ற பதில் சுவாமிகளிடமிருந்து நகைப்புடன் பிறந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்விரண்டு நிகழ்ச்சிகளுககுமிடையே சுமார் முப்பதாண்டுகள் ஓடியுள்ளன. முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு கால ஓட்டத்தில் அடிகளாரின் மனம் மாறியிருக்கக்கூடும் என்று திரு.வி.க எண்ணியிருக்கலாம். ஆனால் அடிகளாரின் மனஉறுதி சிறிதளவும் தளரவில்லை என்பது நிரூபணம் ஆயிற்று.

தமது வாழ்வின் இறுதிவரை அடிகளார் தம் உறுதிப்பாட்டை பாதுகாத்து வந்தார். இதற்கும் ஒரு நிகழ்வு சான்று ஆகிறது.

திருமதி. பாச்சியம்மையார் என்பவர் இறைபக்தியில் ஆர்வம் மிகக் கொண்டவர். ஞானியாரடிகளிடமும் அவ் அம்மையார் மதிப்பு கொண்டிருந்தார். சுவாமிகளை காசி யாத்திரைக்கு வந்தருளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சிவிகையூர்ந்து செல்வது பெரும் துன்பம் தரும்; காலமும் அதிகம் பிடிக்கும்; அதனால் மோட்டார், லாரி அமைத்து, நீராடல் பூசை புரிதல் யாவற்றையும் லாரியில் ஏற்பாடு செய்துவிடுவோம்; காரில் பயணத்தை நிகழ்த்தலாம் என்று அம்மையார் விண்ணப்பித்தார். அதையும் அடிகள் நகை முகத்தோடு மறுத்துவிட்டார்.

இது பிற்காலத்தில் நிகழ்ந்தது. அடிகள் சந்நியாசமுறைக்கு உரிய உறுதிமொழிகளை 1889ல் ஏற்றுக் கொண்டார்கள். அப்போது அவருக்கு பதினாறு வயது தான் நிறைந்திருந்தது. அன்றிலிருந்து அவர்கள் ஒருபொழுது கூடத் தமது மனஉறுதியிலிருந்து பிறழ்ந்துவிடவில்லை எனும் உண்மை வியந்து போற்றப்பட வேண்டியது ஆகும்.

அடிகள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது, மடாலயப் பொருள் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இருப்பினும் அடிகள் பொறுமையோடும், தகுந்த நிர்வாகத் திறமையோடும் நிலைமைகளை சீர்படுத்திவிட்டார்கள். மடாலயத் தலைமை ஏற்றுவிட்டபோதிலும், அடிகள் தம் கல்வி அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று பெரும் விருப்பம் கொண்டார்கள். அதற்காகத்தகுந்த ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்து தமிழ் நூல்களை ஒரு மாணவனின் அக்கறையோடும் ஆர்வத்தோடும் கற்றுத் தேர்ந்தார். அவ் ஆசிரியர் மரணமடைந்த பின்னர், அடிகள் தாமே பற்பல நூல்களையும் பயின்று சிறந்த அறிஞரானார்கள்.

அறிவுப் பணியே தெய்வப்பணி என்று ஞானியாரடிகள் கருதினார்கள். ‘அறிவே சிவமாவது ஆரும் அறிகிலார்; அறிவே சிவமாவது யாரும் அறிந்தபின், அறிவே சிவமாய் அறிந்திருப்பாரே’ என்று அடிகளார் வலியுறுத்தி வந்தார். அறிவைப் பெறுவதற்கு கல்வியே துணைபுரியும். எனவே மக்களிடையே கல்வி அறிவினை அதிகம் பரப்புதல் வேண்டும் என்பதை உயர்ந்த குறிக்கோளாக அவர்கள் கொண்டிருந்தார்கள். தமக்குக் கல்வி அறிவு வாய்த்தது போல, மற்றவர்களுக்கும் வாய்க்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப் பட்டார்கள். அவ்வாய்ப்பினை உண்டாக்கிக் கொடுப்பது கற்றவர் கடமை என்றும், கற்றவர்களுக்கு செல்வர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அடிகள் கருதினார்கள்.

தமிழின் தற்கால நிலை அடிகளாருக்கு வருத்தம் தந்தது. பிறநாட்டு மொழியும், பிற நாட்டு நாகரிகமும் நம்மிடையே பரவி வருவதனால், தமிழ் மொழி தளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலை மக்களின் தெய்வீக உணர்வு, தொண்டு மனப்பான்மை முதலியவற்றை தலையெடுக்காமல் செய்துவிடுகிறது. உண்மையில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமெனில், ஆங்காங்கே சங்கங்கள் தோன்ற வேண்டும். ஜமீன்தார்களும் செல்வர்களும் தமிழை தழைப்பிக்க வேண்டும் என்று அடிகள் எடுத்துக் கூறுவது வழக்கம்.

அடிகளின் ஆலோசனையின்படி தான் பாலவநத்தம் ஜமீன்தாரர் ஆன பாண்டித்துரைத்தேவரும், அவர் சகோதரர் பாஸ்கர சேதுபதியும் மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவினார்கள். 1901ல் இது நிகழ்ந்தது. அதன் அங்கமாக சேதுபதி கலாசாலை அமைக்கப்பட்டது. அங்கு தமிழ் கற்க வந்த மாணவர்களுக்கு உண்டியும் உறைவிடமும் இலவசமாகவே வழங்கப்பெற்றன. ‘செந்தமிழ்’ எனும் மாத இதழும் சங்கத்தின் சார்பில் வெளிவரத் தொடங்கியது.

ஞானியாரடிகள் தமிழையும் சைவத்தையும் பரப்புவதற்காகத் தொடர்ந்து பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். விரும்பி வந்தோர்க்கெல்லாம் தமிழ் மொழியை போதித்தார்கள். அதற்கென வாணிவிலாச சபை என்ற சங்கத்தை அமைத்தார்கள். அடிகள் தாமேசொற்பொழிவுகள் ஆற்றுவதுடன், தம்மிடம் பயில்வோரையும் சொற்பொழிவு நிகழ்த்தச் செய்து, அவர்கள் முன்னுரை முடிவுரைகள. பேசிச் சொல் விருந்து அளித்தார்கள். அடிகளின் சொல்லமுதம் அமுதத்தினும் இனியதாய், நெஞ்சைவிட்டு நீங்காதனவாய், உள்மாக கழுவும் உயர்நீர்மையினதாய் இருந்ததை அனுபவித்தவர்கள் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள்.

பல திறத்தினரும், பற்பல நிலையினரும் (செல்வர், வறியர், சிறியர், பெரியர், இல்லறத்தினர், துறவறத்தினர், சிறிது கற்றோர், கல்வியறிவற்றோர், தொழில் புரிவோர், அரசாங்க உத்தியோகம்புரிவோர், உழுதுண்போர், உழுவித்து உண்போர்) மடாலயத்தில் பாடம் கற்றுப்பயன் பெற்றனர். துறவற நெறிநின் றோரும், நிற்கச் சாதனை புரிவோரும் கூட அடிகளாரை அணுகிக் கல்வி பயின்றனர். உண்டி உறையுள் பெற்று, கல்வியும் ஒழுக்கமும் நிரம்பப் பெற்றனர். அவர்கள் பலப்பல இடங்களுக்கும் சென்று தமிழ்ப்பணி, தெய்வப் பணிகளில் ஈடுபட்டார்கள். வெவ்வேறு இடங்களில் சங்கம் அமையச் சிலர் காரணமாயினர். இவ்வாறாக ஞானியாரடிகள் தமிழுக்கும் சைவத்துக்கும் பணியாற்றி வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தார்கள்.

கிராமக் கோயில்களில் உயிர்கள் பலியிடப் பெறுவதை அறவே விட்டுவிடவேண்டும் என்று ஞானியாரடிகள் வலி யுறுத்தி வந்தார்கள். அதுபற்றி கேட்போர் உள்ளம் உருகும் விதத்தில் அரிய சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்கள்.

அடிகளின் சொற்பொழிவால் உளம் நெகிழ்ந்த செல்வர் சிலர், முப்பத்திரண்டு சவரன் பொன்னிடப் பெற்ற உருத்திராக்கத் தாழ்வடம் ஒன்றை அவர்களுக்கு அணிவித்து நன்றி கூறினர். பின்னர் ஒரு சமயம், மாணவர் கழகச் சிறப்பு விழாக் கூட்டத்தில் சிறந்த சொற் பொழிவாற்றிய தலைமை மாணாக்கர்க்கு, அடிகளாரின் ஆசியுடன், அந்தப் பொற்கவசமிட்ட உருத்திராக்க மாலை அணிவிக்கப் பெற்றது. அடிகள் தம் மாணவரின் பேச்சுத் திறனைப் பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.

தமிழ் மொழிப்பற்றும், சமயப் பற்றும் கொண்டு வாழும் அன்பர்களிடம்-அவர்கள் யாராயினும், எம்மதத்தைச் சார்ந்த வராக இருந்தாலும்-அடிகள் அன்பும் பரிவும் காட்டத் தயங்கியதேயில்லை. அதற்காக எழுந்த பிறரது கண்டனக் கணைகளை மகிழ்ச்சியோடு அவர் ஏற்றுக் கொண்டார்.

அவர்களது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

புதுவையில் சின்னையா ஞானப்பிரகாச முதலியார் என்பவர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆயினும் மதவேறுபாடு இல்லாதவர். பிற மதங்களை வெறுக்காதவர். வடலூர் இராமலிங்க வள்ளலார் அருட்பாக்களில் ஈடுபாடு கொண்டவர் அவர். சைவ சமயத்திலுள்ள கொள்கைகள் பலவற்றை ஆதரிப்பவர். அவரது தன்மைகளை ஞானியாரடிகள் அறிந்திருந்தார்கள்.

அடிகள் புதுவை கலைமகள் கழகத்தினர் அழைப்பை ஏற்று அங்கு சென்ற போது, ஞானப்பிரகாச முதலியார் விரும்பி அழைத்ததனால், ‘மங்களவாசம்’ எனும் அவர் மாளிகைக்குச் சென்றார்கள். முதலியார் அன்போடும் பரிவோடும் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, சீதா கல்யாணம் என்ற சிறப்பான சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்கள்.

அக்காலத்தில், சென்னை சைவசித்தாந்த மகாசமாஜத்தின் தலைவராக அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் இருந்தார். ஞானியாரடிகள் கிருஸ்தவர் இருப்பிடம் சென்ற நிகழ்ச்சியைக் கண்டித்து, அவர் சமாஜத் தலைவர் பதவியை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார்.

இச்செய்தியை மாணவர்கள் மூலம் அறிந்த அடிகள் அவருக்காக அனுதாபப்பட்டார்கள். ‘என்னே அறியாமை பிற மதத்தை இகழாமலும், தம் மதத்தில் திண்மையான பறறும கொண்டிருப்பதன்றோ ஒவ்வொருவர் கடமையும் ஆகும்’ என்று கூறினார்கள். அதற்கு ஆதாரமாகசாக்கிய நாயனார் புராணத்தில் வருகிற

‘எந்நிலையில் நின்றாலும் எவ்வேடங் கொண்டாலும் மன்னிய சீர்ச்சங்கரன்தாள் மறவாமை பொருளன்றே’

என்ற பகுதியை எடுத்துக்காட்டினார்கள்.

இந்நிகழ்ச்சி அடிகளாரின் பரந்த நோக்கையும், மத நல்லிணக்கத்தையும் புலப்படுத்துவாய் அமைந்துள்ளது.

ஞானியாரடிகளிடம் பாடம் கற்று அறிவொளி பெற்றவர்கள் பல ஊர்களிலும் இருக்கிறார்கள். அடிகள் எந்த ஊருக்குச் சென்றாலும் தமிழ்ப்பணியை தொடர்ந்து செய்து வந்தார்கள். அவர்கள் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், புத்தகம் முதலியவற்றைப் பாராமலேயே பிறரது ஐயங்களைப் போக்கித் தெளிவுபடுத்தும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்த நூலிலும் ஐயம் என எவர் வந்தாலும் தயங்காது அவ்வையங்களை அகற்றியருள்தல் அடிகளிடம் மட்டுமே காணப்பெற்ற ஒரு தனிச்சிறப்பாகும் என அடிகளை அறிந்தவர்கள் வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.

அடிகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், பலப்பல ஊர்களுக்கும் சென்று சைவம் பற்றியும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி அருட்பணிபுரிந்தார்கள். அவர்களது பேச்சின் சிறப்பு பற்றி திரு.வி.க. தமக்கே உரிய முறையில் அழகாகப் பாராட்டியுள்ளார்.

‘அறிவு மழை நீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங்கொண்டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பல திறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல, அன்பு வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து, அருள் அலை கொழித்துக் கொழித்து ஓடும். நீர் பருகப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி முழக்கிலெழும் இன்னொலி கேட்டு அதில் ஈடுபட்டுத்தன்தன் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலெழும் மின் விசையால் பிணி நீங்கப் பெறுவர். ஞானியார் சுவாமிகள் பேச்சால் விளைந்த நலன் அளப்பரிது’.

சென்ற இடங்களிலெல்லாம் சொன்மழை பொழிந்து சிவானந்த ஆறு கரை புரண்டோடச் செய்தார்கள் சுவாமிகள். செவிமடை வழியே உள்ளமாம் நிலத்தில் தேக்கிச்சிவப் பயிரை வளர்த்துக் கொண்டு முத்திப் பயனாம் பெரும் பேற்றினை அடைந்தார் பலர் என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஞானியாரடிகள் வீரசைவர். வீரசைவ மரபுகளைப் பின்பற்றும் மடாலயத்தின் தலைவர். வீரசைவர்கள் சிவனையன்றி வேறு தெய்வங்களை மனசாலும் நினைக்கக் கூடாது என்ற நெறியைக் கைக்கொண்டவர்கள். ஆயினும் ஞானியாரடிகள் சாதிசமய பேதம் கருதாது, எல்லா மதத்தினருக்கும் கல்வி பயிற்று வித்தார்கள். திருமால் குறித்தும், இராமாயணம் பற்றியும், பாரதம் பற்றியும் மிகச் சிறப்பான முறையில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். அவர்களுடைய பேச்சில் பிறமத துஷணை தலைகாட்டியதில்லை. எடுத்துக் கொண்ட பொருள் பற்றி, கேட்போர் நெஞ்சம் நெகிழும் விதத்தில், அருமையாகப் பேசுவார்கள். ‘விபீடணர் சரணாகதி குறித்து அடிகள் ஆற்றிய உரை கேட்டு, அரங்கன் அடியார்கள் மெய் சிலிர்த்து ஞானியார்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டார்கள். வைணவர்களே வியப்படையும் விதத்தில், திருப்பாவையின் ஒரு பாசுரத்தை விளக்கி, வைணவ பரிபாஷைகளால் நீண்ட நேரம் சொற் பொழிவாற்றிய பெருமை அடிகளுக்கு உண்டு.

காலத்தின் மதிப்பை நன்கு உணர்ந்தவர்கள் ஞானியாரடிகள். எதையும் காலம் தவறாது செய்யும் இயல்பு அவர்களிடம் இருந்தது. பிறரும் அவ்வாறே காலத்தின் அருமை உணர்ந்து செயல்படுமாறு தூண்டுவார்கள். சொற்பொழிவு இன்ன நேரத்தில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த நேரத்துக்கு முன்னதாகவே அடிகள் அந்த இடம் சேர்ந்துதயாராக இருப்பார்கள்.

ஞானியாரடிகளின் சிறப்பியல்புகள் குறித்து அவர் காலத்திய அறிஞர்கள் பலரும் பாராட்டிப் புகழாரம் சூட்டத் தவறியதில்லை. பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அடிகள் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார் -

“கடவுள் பக்தியும் சிறப்பாக முருகப் பெருமானிடம் பேரன்பும் உடையவர்கள். கல்வியறிவுடையோரை நன்கு மதித்து அளவளாவும் இனிய குணம் உடையவர்கள். தமிழ் மொழியில் பேரார்வத்தையும் சைவ சமயப் பற்றையும் தமிழ் மக்களுக்கு விளைத்து வந்த இவர்கள் அரிய சொற்பொழிவுகள் இத்தமிழ்நாட்டில் நிகழாத இடமில்லையென்றே சொல்லலாம். மடாதிபதிகள் செய்ய வேண்டிய அரிய செயல்களெல்லாம் திரு. ஞானியாரிடத்து நன்கு காணப்பட்டன. இக்காலத்துள்ள மற்றைய மடாதிபதிகள் இவர்கள் முறையைப் பின்பற்றுவார்களாயின் தமிழ் உலகத்திற்கே சிறந்த பயன்விளையும். இவர்கள் ஒழுகிய நெறி ஏனையோருக்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ளதென்று கூறலாம்."

திரு.கா. இராமநாதன் செட்டியார் பி.ஏ.பி.எல். அடிகளின் பெருமைகளை மிகத் தெளிவாக விவரித்திருக்கிறார்.

“அவர்களுக்கு இவ்வளவு பெருமை ஏன்? அவர்கள் நன்கு படித்தவர்கள். ஆங்கிலம் தெரியும். வடமொழி நன்கு தெரியும். தமிழில் அவர்கள் படிப்பு பரந்தது, ஆழமானது. இத்துடன் உலகியலறிவும் உண்டு. கற்றார்க்கும், கல்லாதார்க்கும் பயன்படும்படி பேசவல்லவர்கள். இனிமையாகப் பேசுவார்கள். அவர்கள் அன்பு நிறைந்தவர்கள். எல்லாருக்கும் புன்சிரிப்பு; சில நல்ல வார்த்தை மடாதிபதிகள் என்ற நினைப்பு அவர்கள் வார்த்தைகளையோ, செயல்களையோ சுட்டவில்லை விருந்தினரை நின்று விசாரிப்பார்கள். உளறுபவர்க்கும் கோபமின்றி அறிவு புகட்டுவார்கள். எல்லாரும் அவர்களைப் பார்க்க முடியும். எப்போதும் பார்க்கலாம். அவர்கள் செய்த தொண்டுகள் பல. தங்கள் மடத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார்கள். அதற்குப் பெரும் புகழ் தந்தார்கள். பலருக்குத் தமிழறிவு புகட்டினர். கிறிஸ்தவர்களும் அவரிடம் படித்திருக்கிறார்கள். பலருக்குச்சமய அறிவு புகட்டினர். அநேகர் மனதில் அன்பெனும் விதையை நட்டார்கள். பற்பலர் வாழ்க்கையைத் திருத்தி யமைத்தனர். அவர்களிடம் உபதேசம் பெற்றோர்கணக்கற்றவர். அவர்கள் சொற்பொழிவு கேட்டோர்.பல்லாயிரவர். ஊர்தோறும் சென்று சைவ உண்மைகளைப் பரப்பியவர் சமயகுரவர் மூவர். அவர்களுக்குப் பின்னர் அத்தொண்டு செய்தோர் ஒருவரையும் எனக்குத் தெரியவில்லை. அத்தொண்டை இக்காலத்தில் செய்தவர்கள் ஞானியார் சுவாமிகள்" இவ்வாறு இராமநாதன் செட்டியார் குறிப்பிட்டுள்ளார்.

அடிகளின் தோற்றப்பொலிவாலும், பேச்சாற்றலினாலும், மற்றும் பல சிறப்பியல்களினாலும் ஈர்க்கப் பெற்ற அறிஞர்கள் அநேகர் பலவாறாக அடிகளைப் பாராட்டி வியந்து போற்றி எழுதி மகிழ்ந்திருக்கிறார்கள்.

பலரும் போற்றி மகிழத்தக்க நற்பண்புகள் பலவற்றையும் ஞானியாரடிகள் பெற்றிருந்தார்கள்.

மடாலய மரியாதைகள் பல உண்டு. பல்லக்கு, மேனா, குடை, கொடி, சாமரை, தீவர்த்தி முதலியவை மடாலயத்தின் முந்தைய குருமார்களால் கைக்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும் ஞானியாரடிகள் அவை ஆடம்பரமானவை எனக்கருதி அவற்றை நிறுத்தி விட்டார்கள். திருச்சின்னம் பயன்படுத்துவதைக் கூட, தென்னாட்டு யாத்திரைக்குப் பிறகு விட்டு விட்டார்கள். எனினும், உறுதிமொழி ஏற்றிருந்தனால் சிவிகை ஊர்தலை மட்டும் அவர்கள் இறுதிவரைகடைப்பிடித்தார்கள். விஜயதசமி அன்றும், மாட்டுப் பொங்கல் நாளிலும் திருக்கோயில் இறைவன் சப்பரத்தில் எழுந்தருள்வது வழக்கம். மடாலய முகப்பில் வரும்போது அடிகள் இறைவனைத் தரிசிப்பார்கள். அடுத்து, மடாலயத்தின் முதலாவது குருமூர்த்தி அணிந்து வந்த தலைமாலை, மார்பு மாலை முதலிய கோவைகளை அணிந்து பூசை புரிந்து விட்டுக் கொலுவிருப்பார்கள். வணங்கும் பக்தர்களுக்குத் திருநீறு அளித்த பிறகு அவைகளை நீக்கிவிட்டு எப்போதும் போலவே இருப்பார்கள்.

விலை உயர்ந்த மதிப்புமிகுந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிவதில் ஞானியாரடிகள் ஒருபோதும் விருப்பம் கொண்டதில்லை. தரிசிக்க வரும் அன்பர்கள் கொண்டு தரும் பழங்கள் முதலிய பொருள்களை அங்கே உள்ள அனைவருக்கும் வழங்கிவிடுவார்கள். கொண்டு வந்த அன்பர்களுக்கும் பிரசாதமாகச் சில அளிக்கப்படும்.

அனைவரும் தமிழ் மொழியைத் திருத்தமாகப் பேச வேண்டும் என்பதில் அடிகள் அதிக ஆர்வம் காட்டினார்கள். அவர்களும் தம் பேச்சில் கொச்சைச் சொல் எதையும் பயன் படுத்தமாட்டார்கள். மடாலயத்தில் பழகுவோர், மாணவர் முதலியோர் யாவரும் அவ்வண்ணமே திருத்தமுறப் பேசுவதில் கருத்தாக இருந்தார்கள்.

ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்வதில் கூடியவரை அதிகமான பொருள்களைப் பயன்படுத்துவது அடிகளின் இயல்பாக இருந்தது. சிறப்பு நாட்களில் அவ்விதம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

எதையும் கணக்குப் பார்த்தே செலவிடுவது அவர்கள், வழக்கம். வீண்செலவுகள், ஆடம்பரங்களை அடிகள் வெறுத்தார்கள்.

தமிழ்ப் பற்று மிகுதியாகக் கொண்டிருந்த அடிகள், திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்தின் சார்பில், சில நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவதிலும் கவனம் செலுத்தினார்கள். திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம், திருப்பாதிரிப்புலியூர்த் தோத்திரக் கொத்து, அற்புதத் திருவந்தாதி, ஞானதேசிக மாலை, அவிநாசிநாதர் தோத்திரக் கொத்து, கந்தர்சட்டிச் சொற்பொழிவு ஆகியவை அவ்வாறு வெளிவந்த நூல்கள் ஆகும்.

இவற்றில் கந்தர்சட்டிச் சொற்பொழிவு என்பது அடிகள் ஆற்றிய சொற்பொழிவுகள் சிலவற்றின் தொகுப்பு நூல். பேராசிரியர் முத்து. இராசாக் கண்ணனார் குறிப்பெடுத்து எழுதியது.

சிவமணமும் தமிழ் மணமும் நாடெங்கும் பரவிடத் தம் வாழ்வை அர்ப்பணித்து அரும் தொண்டாற்றிய ஞானியாரடிகள் 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் நாளன்று இறைவன் திருவடி சேர்ந்தார்கள்.

19ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியையும் சைவத்தின் பெருமையையும் பரப்பிச் சிறப்புடன் வாழ்ந்தவர்கள் ஞானியாரடிகள். அவர்களது புகழ் என்றும் நிலைத்து நிற்கும் தன்மை உடையது.

வாழ்க ஞானியாரடிகள் திருநாமம் !

(நன்றி : சிவத்திரு ஞானியார் அடிகள் நூற்றாண்டுவிழா வெளியீடான சிவத்திரு ஞானியார் அடிகள் வரலாறு இக்கட்டுரைக்கு ஆதாரமாகும்.)