தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/சிவத்திரு ஞானியாரடிகள் பெருந்தவயோகி

விக்கிமூலம் இலிருந்து

சிவத்திரு. ஞானியாரடிகள் பெருந்தவயோகி !
பேராசிரியர் டாக்டர் K.A. மணவாளன் M.A., M.C., Ph.d.
(Vidwan Siromani B.O.L. Dip.in Hindu Religion)
Retd. Tamil Professor D.G. Vaishnav College Chennai-106,

உலக வாழ்க்கை இன்ப துன்பங்கள் நிறைந்தது. மேடு பள்ளங்கள் கொண்டது. இருளும் ஒளியும் சூழந்தது. கடலும் காடும், மலையும், மண்ணும், விண்ணும் கொண்ட இப்பரந்த உலகில் வாழப் பிறந்தவன் மனிதன். அவன் இன்பமாக, உண்மையாக வாழ விரும்புகிறான். ஆனால் அவனை அவ்வழிகளில் வாழவிடாமல் அவனைத்தடுப்பது அறியாமை என்னும் பேரிருள்தான். அவ்விருளின் நீங்கி அவன் ஒளிபெற்று வாழ ஒளிவிளக்கு வேண்டும். அந்த ஒளிவிளக்கை ஞான விளக்கு என்றார்கள் ஞானிகள். அத்தகு ஞானிகளில் ஒருவராய் ஒப்பற்றவராய் விளங்கியவர் திருக்கோவலூர் ஆதீனம் திருப்பாதிரிப் புலியூர் மடாதிபதியாக விளங்கிய, ஞானியார் சுவாமிகள் என்றே பெயர் பெற்ற ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்; இவரைத் தமிழ்நாட்டினர் ஞானியார் அடிகள் என்றே கூறுவர்.

வாழ்க்கைக் காட்டில் இன்ப வெளியை நாடிப் பயணம் செல்லும் மனிதனுக்கு இடையூறுகள் பல உண்டு. சிற்றறிவு உடையவன் தானே மனிதன். இருளையும் துன்பத்தையும் தாண்டும் போது அவன் மனம் உறுதி தளர்கிறது. அப்போது அறிவிலார் பலர் சூழ்ந்து அவனை மயக்கி வேறுவழியில் செலுத்திவிடுகிறார்கள். அப்போது அம்மனிதனுக்கு உற்றதுணை ஒன்று வேண்டுமல்லவா?

குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? இருள்தான் ஒளிக்கு வழி காட்டுமா? தடுமாறுகிறவன் தெளிவுக்குத் துணை செய்வானா? முடியாது. தெளிவான ஞானமுடைய ஒருவனே - தெளிந்தவனே - உறுதியுடையவனே உறுதுணையாக முடியும். அத்தகைய தெளிந்த ஞானமுடையவர்களே சமயாசாரியர்கள். அவர்களே உண்மையான வழிகாட்டிகள். ஆன்ம நேய அன்பு ஒற்றுமைக்கும், மனிதவள மேம்பாட்டிற்கும் இத்தகு சமயாசாரியர்கள் காட்டிய நெறிமுறைகளும் உபதேசங்களுமே முக்கிய காரணங்களாகும்.

குருநாதர் யார் ?

குருவின் இலக்கணம் என்ன? என்ற கேள்விக்கு நம் முன்னோர் பலபடிகளில் விளக்கம் கூறியுள்ளனர். அவற்றுள் ஒன்று; விருப்பு வெறுப்பு இல்லாதவராய் அருள் நிரம்பினவராய் ஆன்ற அறிவும் தூய சிந்தையும் உடையவராய் எளியவர்களிடம் தனி அன்பு காட்டுபவராய் தம்பரந்த கலையொளியால் எப்பாலவரையும் தம்பால் ஈர்த்து ஆட்கொள்ளும் வல்லமை படைத்தவரே குருநாதராக விளங்க முடியும்.

சிவத்திரு ஞானியாரடிகள் மேற்சொன்ன இலக்கணங்களெல்லாம் வாய்ந்தவராய் விளங்கியதோடு உடல் சாயும் வரையில் தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பாடுபட்டவர் என்பதனை இந்நூலைப் படிப்பவர் அனைவரும் உணர்வர்.

ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்”.

என்னும் குறள்நெறிக்கு இணங்க அடிகளார் வாழ்ந்தவர். ஒழுக்க நெறியைத் தான் கடைப்பிடித்ததோடு பிறரையும் அந்நெறியில் வாழும்படி அல்லும் பகலும் உபதேசித்தவர். வீரசைவமரபினர். திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியாரடிகளின் மடாலயத்தின் முதற்குருநாதர் ஸ்ரீசோமநாத ஆராத்திரியர். இவர் வேத ஆகம புராண இதிகாசங்களை முறையாகப் பயின்றவர். வீரசைவர் கடைப்பிடிக்க வேண்டிய அறுபத்து நான்கு சீலங்களையும் கடைப்பிடித்தவர் சைவ - இட்டலிங்க பூசனை செய்தவர். இவர் வழியில் நான்கு குருமார்களுக்குப் பின்னர் வந்தவர்களே இந்நூலின் நாயகரான சிவத்திரு ஞானியார் சுவாமிகள் என்றே அழைக்கப்பட்ட ஞானியாரடிகளாவார். இவர் இம்மடத்தின் ஐந்தாம் குருமகாசந்நிதானமாவார்.

அண்ணாமலை அய்யருக்கும் பார்வதி அம்மையார்க்கும் செல்வத்திருமகவாய் அவதரித்த நம் சுவாமிகள் தம்முடைய ஆறுமாத குழந்தைப் பருவத்திலேயே நான்காம் குருநாதராக விளங்கிய சுவாமிகளின் அருளுக்கு இலக்காகி அவர் தம் மடத்திலேயே வளர்ந்து வரலானார். குருமகர் சந்நிதானம் அக்குழந்தைக்குப் ‘பழநியாண்டி’ என்ற செல்லப் பெயரிட்டு சிவலிங்க தாரணமும் செய்து வைத்தார் என்ற வரலாறு மற்ற சைவ மடங்களுக்கு இல்லாத சிறப்பு வரலாறு ஆகும்.

அடிகளார் மரபும், ஒழுக்கம் பிறழாமையும், பட்டம் ஏற்றுச்செய்த பெரும்பணிகள் :

அடிகளார் ஐந்தாவது குரு மகா சந்நிதானமாகத் தமது பதினேழாவது வயதிலே பட்டம் ஏற்றார். சிவிகையூர்ந்து செல்லுதல் தான் அம்மடத்தின் மரபாகும். காலத்தின் அருமை கருதி கார் மூலம் பயணம் செய்யலாமே என்று பெரும்புலவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் கூறியபோது அடிகளார் அவர்கள், ஒரு சிறுகதையை உதாரணமாகக் கூறி ”யாமும் முன்னோர் கைக் கொண்ட முறைகளைப் பின்பற்றவே வந்தோம்; அதனை மாற்றி நடந்தால், உள்ளத்தால் பொய்யாது ஒழுகல் என்ற மறைமொழி கற்ற பயன் என்னாவது?” என்று கூறித் தெளிவு படுத்தினாராம். சுவையான அந்த கதைப்பகுதி இந்நூலின் 19,20 பக்கங்களில் நூலாசிரியர் சுவைபட எழுதியுள்ளார். இதனால் சுவாமிகள் மடத்தில் தாம் ஏற்றுக்கொண்ட சந்நியாசி முறைக்குரிய உறுதிமொழிகளிலிருந்து ஒருக்காலும் வழுவினாரல்லர் என்பது விளங்கும். வடதேசயாத்திரை - காசி கங்கை நீராடல் போன்றவைகளைக்கூட இதனால் தவிர்க்க வேண்டியதாயிற்று.

சுவாமிகள் பட்டமேற்ற காலத்தில் மடத்தின் பொருளாதார நிலை தாழ்வுற்றிருந்தது. பலவழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தன. நிலவருவாய் குறைவு. இவைகளையெல்லாம் முறையாகக் கவனித்து மடத்தின் சீடர்களான செல்வச்சீமான்களை வரவைழத்துப்பேசி, நிதிநிலைகளைஉயர்த்தினார் என்ற வரலாறும், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளைப் போதிக்கும் வகையில் கல்விச் சாலைகளை நிறுவினார் என்ற வரலாறும், பசித்த ஏழை மாணவர்களுக்குத் தம் மடத்திலேயே உணவளித்து, இடமளித்து உதவினார்.

யாப்பிலக்கணப்புலமை-அறிவுப்பணி-தமிழ்ச்சங்கம்

சுவாமிகள் பாடல்களை இயற்றுவதிலும் பாடல் புனையும் கவிஞர்களைப் போற்றுவதிலும் சிறந்து விளங்கினார். நகைச்சுவையும்-இரட்டைப்பொருள் வசனமும் அவரோடு உரையாடுவோர்க்கு இன்பம் பயக்கும். ‘அறிவுடையார் எல்லாமுடையார்’, அறிவே சிவம் என்ற முதுமொழிகளுக் கிணங்க 1900 ஆம் ஆண்டு மதுரை திரு. பாண்டித்துரைத் தேவரவர்கள் நம்சுவாமிகளைச் சந்திக்க வந்த போது ‘‘தமிழின் தற்கால நிலை‘ என்ற தலைப்பில் அரிய சொற்பொழிவை ஆற்றித் தேவரை அமுத நீராட்டினார். அதோடு மதுரையில் தமிழ் வளர்ச்சிக்குச் சங்கம் அமைக்க வேண்டும் - என்ற வேண்டுகோளை வைத்தார். சுவாமிகளின் சொல்லமுதை மாந்திய தேவரவர்கள் அப்படியே செய்கிறேன் என்று வாக்களித்தார். அதன்படி 1901-ல் மதுரையில் தமிழ்ச்சங்கமும் தமிழ்க்கல்லூரியும் அமைந்தன. என்னே சுவாமிகளின் நாநலம்!!

நிறுவனங்கள் - சபைகள் - சமுதாயப்பணிகள்

வாணிவிலாச சபை, ஞானியார் மாணவர் கழகம் என்ற நிறுவனங்களை ஏற்படுத்தி ஆண்டு விழாக்களில் தலைமை ஏற்று ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சைவ சமயத்தின் ஏற்றத்தையும், தமிழின் பெருமைகளையும், தமது சொற் பெருக்கால் உரையாற்றி சமயப் பணியையும், தமிழ்ப்பணியையும், ஒரே சமயத்தில் நிறைவேற்றுவார். மற்றும் பல தனிகர்களுடைய உதவியால் ஆங்காங்கு பக்தபால சமாஜம், பஜனை கூடம் என்று நிறுவி பக்திநெறியைப் பரப்பிய பெருந்தகையாளராகவும் அடிகளார் விளங்கியுள்ளார். மற்றும் சிறுவர்களுக்கு கல்வியறிவூட்ட ஆரம்ப பாடசாலைகள் பல நிறுவப்பட்டன. சைவ சமய நெறி தழைக்க இளைஞர்சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. மற்றும் மலையமான், ஒளவையார், கபிலர் போன்ற பெருவள்ளல்கள், புலவர்களின் வழிவந்தவர்கள் என்று பார்க்கவ குல மரபினரைப் பாராட்டி அவர்களுக்காக ஒரு சங்கமும் அமைத்து சமூக சேவை புரிய வேண்டும் என்று அச்சங்கத்தினர்க்குக் கட்டளையிட்டு சமுதாய முன்னேற்றத்திலும் தம் கடமையைச் செய்துள்ளார்.

அடிகளார் வெள்ளமடை திறந்தாப்போல் ஆற்றும் சைவ சமய சொற்பொழிவுகளும், தமிழ் மணக்கும் சொற்பொழிவுகளும் அவர்கால மக்களை வெகுவாக ஈர்த்தன. சுவாமிகளின் சொற்பொழிவுகளில் சாமானியர்கள் மட்டுமல்லாமல் அவர் காலத்தில் வாழ்ந்த பெரும்புலவர்களும், பெரும்கவிஞர்களும் தங்களை இழந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தகவர்கள் பலர். சுவாமிகளின் வேண்டுகோளை ஏற்று கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் புலவர் கல்லூரி நிறுவிய வழக்கறிஞர் த. வே. உமாமகேசுவரம் பிள்ளை பி.ஏ., பி.எல்., அவர்கள், தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், கயப்பாக்கம் சதாசிவ செட்டியார், மோசூர் கந்தசாமி புலவர் ச. சச்சிதானந்தம் பிள்ளை, டி.கே.சிதம்பரநாத முதலியார், பண்டிதமணி கதிரேசம் செட்டியார், மறைமலையடிகளார், கா. சுப்பிரமணியப் பிள்ளை, ந.மு.வேங்கட சாமிநாட்டார் , உலகநாதம்பிள்ளை, கரந்தை கவியரசு வெங்கடாசலம் என்று அறிஞர் பெருமக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

1. மறந்தும் புறந்தொழாமை - 2. சிவபுரம் சுடரையே எண்ணுதல்

இந்த இரண்டு கொள்கைகளும் வீரசைவ மரபினரின் உயிர்மூச்சான கொள்கைகளாகும். இப்படிப்பட்ட கொள்கைகளை உண்மையில் மரபு மாறாமல் நம் அடிகளார் கடைப்பிடிப்பவர் தாம் என்றாலும், பிற சமயங்களையோ, தெய்வங்களையோ பழிமொழிகளால் தூற்றமாட்டார். சமயப் பொறுமையில் நின்று விளங்கினார். எடுத்துக்காட்டாக ஒன்று காண்போம். ஒரு சமயம் திருப்பாதிரிப்புலியூரை அடுத்து 2 கல் தொலைவிலுள்ள திருவந்திரபுரத்திற்கு நம் சுவாமிகள் சென்றார். திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற அத்தலத்து வைணவர்கள் வேண்டு கோளுக்கு இணங்க திருப்பாவை முதல் பாட்டின் விளக்க வுரையை, வைணவ பரிபாஷையில் நீண்ட நேரம் சொற்பொழி வாற்றினார். வியப்பால் மகிழ்ந்த வைணவர்கள் சுவாமிகளுக்கு மூவுருவே ஓர்ருவாய்க் காட்சி தரும் தேவ நாதப்பெருமான் அணிந்திருந்த நீண்ட பெருமாலையை அணிவித்துப் பாராட்டினர் என்ற செய்தி இந்நூலின் 87வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதுபோலவே திருவரங்கத்திலும் அடிகளார் வைணவ பரிபாஷையில் சொற்பொழிவாற்றிப் பாராட்டப்பட்டுள்ளார். இதுகொண்டு இவரது சமய சமரசம் அறியப்படுகிறது. அன்றியும் இவர் சில தனவந்தர்களான அறிஞர்களின் வேண்டுகோளின்படி இராமாயணம், சீதாகல்யாணம் போன்ற தலைப்புகளில் சொற்பொழிவாற்றிப் பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மற்றும் சுவாமிகள் தெய்வத்தொடர்பாகவே சொற்பொழிவாற்றினாலும், தமிழ் மொழியின் ஏற்றம் பற்றிக் குறிப்பிட மறக்கமாட்டார்கள். தமிழிலக்கணங்களில் ஆங்காங்கு காணப்பெறும் சொல்லினிமை, பொருளினிமைகளைச் சுவைபட எடுத்துப் பேசுவதில் அவர்கட்கு இணை யாவார்எவருமிலர். சைவமும்தமிழுமே அவருக்கு மூச்சுக்காற்று.

முருகபக்தி

அடிகளார் முருகப்பெருமானிடம் அளவிலா பக்தியுடையவர். முருகா! முருகா! என்றே அவர் நா இயம்பிக் கொண்டிருக்கும். சைவமும் தமிழும் அவருக்கு இரண்டு கண்களாக இருந்தன. ஊர்தோறும் சென்று சைவம் பரப்பியவர் தமிழை வளர்த்தவர். எப்போதும் பிறர்க்கு நல்ல போதனையே செய்வார். செல்வர் - வறியர் - உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாராமல் இனமொழி வேற்றுகளைக் கடந்த தவயோகி.

ஞானியாரடிகளுடைய திருவோலக்கப் பொலிவினை தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனாரின் எழுத்துக்களின் வடிவில் காண்பது மிகப்பொருத்தமாகும்.

முருகன் சேவடி வருடியுருகும் ஈரநெஞ்சும், அவன் புகழ் பேசி இனிக்கும் நன்னாவும், தண்மைபொழியும் செவ்விய நோக்கும், வெண்ணிறுதுதையும் நெற்றியும் மாணிக்கக் குழை பிறங்கும் செவியும், பொன்னொளிரும் மணிமார்பும், கருமைக் கதிர்விருக்கும் திருமேனியும் சண்முகாஎன்று நீறளிக்கும் நீண்ட கையுங் கொண்ட அடிகளாரின் திருவோலக்கப் பொலிவு என் உள்ளத்தில் ஓவியமெனப்படிந்து நிற்கின்றது. அஃது எவர் உள்ளத்தையும் கவரும். எவர்க்கும் எளிதில் இன்பமூட்டும். திரு.வி.க. பொன்மொழிகள்.

மற்றும் குடவாயில் வித்துவான் மு. இரத்தினதேசிகர் சென்னை ராவ்சாகிப் டிப்டி கலைக்டர் கே. கோதண்டபாணி பிள்ளை ஆகியவர்களின் திருவுருவு வருணைகள் மிகச்சிறப் பானவை.

இந்நூலின் 100,101 பக்கங்களில் இவைகளைக் காணலாம்.

திரு. கல்கி ஆசிரியர் நா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி) 1939 நவம்பரில் ஆனந்தவிகடனில் எழுதியது.

ஞானம்- மெய்ஞ் ஞானம்-துவராடை தாங்கிய மேனிஅங்க இலிங்கம் - தாழ்வடங்களின் தனியிடம் திருநீற்றின் பொலிவு, தமிழ் மணம் கமழும் புன்முறுவல் இதோ தோன்றுகிறது. (கல்கி, ஆனந்தவிகடனில் புகழ் மாலை)

சுவாமிகளோடு அவர்காலத்தில் வாழ்ந்த பேரறிஞர் பலர் தொடர்பு கொண்டு பேறு பெற்றனர்.

அவர்கள் சர்.பி.டி.ராசன், பெரியார் ஈ.வே. இராமசாமி நாயகர் திரு.டி.எம். நாராயணசாமி பிள்ளை, யாழ்பாணம், திரு. நடேசப்பிள்ளை ஆவார்கள். மற்ற அறிஞர்களின் பெயர்கள் முன்பே காட்டப்பட்டுள்ளன.

சுவாமிகள் அச்சியற்றிய சில நூல்கள்
1. திருப்பாதிரிப்புலியூர்ப்புராணம் 1897ல் வெளியிடப்பட்டது.
2. திருப்பாதிரிபுலியூர் தோத்திரக் சொத்து
3. அற்புதத் திருவந்தாதி
4. ஞானதேசிகமாலை
5. அவிநாசி நாதர் தோத்திரக் கொத்து
6. கந்தர்சட்டிச் சொற்பொழிவு ஆகியவைகள்.


அடிகளாரின் மாணவர்கள் இன்றும் சைவத்திலும் தமிழிலும் சிறந்தது விளங்கி வருகிறார்கள்.

முடிவுரை :

ஞானியார் சுவாமிகள் 19-20 நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெருந்தவயோகி. வீரசைவர். நற்றமிழர், நற்றொண்டினர். நாவீறு படைத்த சொற்பொழிவாளர். நல்ல வண்ணம் எல்லோரும் வாழப்பாடுபட்டவர். திருவாயால் சண்முக நாமத்தையே உச்சரித்தவர். கல்விக்கண் திறந்தவர்-அறச்சாலைகள். சபைகள் நிறுவினர் எல்லாவற்றையும் விட உயர்ந்த அனுபூதிமான். நாயன்மார்களோடு ஒப்ப நோக்கும் தகுதி வாய்ந்தவர். வாழ்க அடிகளார் நாமம் - தொடர்க அவர் தம் தொண்டு.

ஞானியார்சுவாமிகளின் வரலாற்று நூலை இனிய தமிழில் எழுதிய திருப்புகழ் இரத்தினம். புலவர் க.பா.வேல்முருகன் (ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகளின் மாணவர்) அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள் உரியனவாகுக. மற்றும் ஞானியார் சுவாமிகள் திருப்பெயரால் தமிழ்மன்றம் நிறுவி தமிழுக்கு அயராது பாடுபட்டு உழைத்து வரும் புலமைத் திருவாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவத்திரு ஞானியார் சுவாமிகளின் புகழுக்கும் தொண்டுகளுக்கும் ஏற்ப தலைநகரில் அல்லது தக்க இடத்தில் மணிமண்டபம், திருவுருவம், வாசகசாலை அமைத்திடல் வேண்டும்.