தம்ம பதம்/அனுபந்தம்-I

விக்கிமூலம் இலிருந்து

அனுபந்தம் ஒன்று

நால்வகை வாய்மைகள்

பெளத்த தருமத்திற்கு அடிப்படையான நான்கு உன்னத உண்மைகள் அல்லது சத்தியங்கள் துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகியவை.

1. துக்கம்-உலகில் பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு எல்லாம் துன்பம்; நண்பர்களைப் பிரிதல், துன்பம்; அன்பற்றவர்களின் தொடர்பு துன்பம்; விரும்பியதைப் பெறாமை துன்பம்; ஐம்புலன்களின் வழியே அறிந்து ஆசை கொண்ட யாவும் துன்பத்திலேயே முடிகின்றன. துக்கத்திற்கு மூலகாரணம் பேதைமை, பேதைமையிலிருந்து செயல், செயலிலிருந்து உணர்வு உணர்விலிருந்து உருவமும் அருவமும், இவைகளிலிருந்து உணர்ச்சிக்குரிய வாயில்கள், வாயில்களிலிருந்து ஊறு (ஸ்பரிசம்). இதிலிருந்து நுகர்வு, நுகர்விலிருந்துவேட்கை வேட்கையிலிருந்து பற்று, பற்றிலிருந்து கர்மத் தொகுதி, கர்மத்திலிருந்து பிறப்பு, பிறப்பிலிருந்து உபாதைகள் தோன்றுகின்றன.

2. துக்க காரணம்-சகல துக்கங்களுக்கும் காரணம் ஆசை அல்லது அவாதான். இதைத் ‘திருஷ்ணை’ என்பர்.

3. துக்க நிவாரணம்-ஆசையை ஒழித்து அவித்து விடுதலே துக்கத்தை ஒழிக்கும் மருந்து.

4. துக்க நிவாரண மார்க்கம்-பரிசுத்தமான எட்டு உறுப்புக்களையுடைய அஷ்டாங்க மார்க்கமே துக்கத்தை நீக்கும்வழி. எட்டு அங்கங்களாவன:

1. நற்காட்சி -ஸ்ம்மா திட்டி

2. நல்லூற்றம் -ஸ்ம்மா ஸங்கல்ப

3. நல்வாய்மை - ஸம்மா வாசா

4. நற்செய்கை -ஸம்மா கம்மந்த

5. நல்வாழ்க்கை -ஸம்மா ஜீவ

6. நல்லூக்கம் -ஸம்மா வாயாம.

7. நற்கடைப்பிடி -ஸம்மா ஸதி

8. நல்லமைதி -ஸம்மா ஸம்மதி

1. நற்செய்தி : துக்கம் முதலிய நான்கு வாய்மைகளையும் உணர்தல், பாவ புண்ணியங்களைப் பகுத்தறிதல்; உலகின் நிலையாமையைக் கண்டு மெய்ப் பொருளை அறிதல்.

2. நல்லுாற்றம் : அவாவை அறுத்து, துவேஷம், கொடுமை முதலியவற்றிருந்து மனத்தைப் பாதுகாத்தல்.

3. நல்வாய்மை : பொய், புறங்கூறல், இன்னாச் சொல், பயனற்ற பேச்சு முதலியவற்றை நீக்கி,வாய்மை அடக்கம், இன்சொல், பயனுள்ள அற ஆராய்ச்சி முதலிய நற்பண்புகளை வளர்த்தல்.

4. நற்செய்கை : உயிர்க்கொலை, களவு, பிறர் மனை விழைதல், பொறாமை, வெகுளி முதலிய தீமைகளை விலக்கி நல்லொழுக்கத்துடன் வாழ்தல்.

5. நல்வாழ்க்கை : வாழ்வுக்கு வேண்டிய பொருள்களைத் தீயநெறியில் அல்லாமல் நீதியான முறையில் உழைத்துப் பெறுதல்.

6. நல்லுாக்கம் : நன் முயற்சி. இம்முயற்சி நான்கு, வகைப்படும். மனத்தில் தீய எண்ணங்கள் எழாமல் காத்தல், முன்னால் எழுந்த இழிவான எண்ணங்களை அடக்கி வெல்லுதல், நல்லெண்ணங்கள் உதிப்பதற்கு ஏற்ற வழிகளில் கருத்து வைத்தல், உதித்த நல்லெண்ணங்களைப் பேணி வளர்த்தல்

7. நற்கடைப்பிடி: கருத்துடைமை, உடலைப்பற்றியும் உணர்ச்சி பற்றியும், உள்ளத்தைப் பற்றியும், உலக இயற்கை பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து, ஆராய்ந்து உண்மையை உணர்ந்து அதை இடைவிடாது போற்றுதல். வனத்திலோ மரத்தடியிலோ, ஏகாந்தமான ஒரிடத்தில் அமர்ந்து ஒருவன், தன் உடலையும், பிறர் உடல்களையும் பற்றிச் சிந்தித்து, உண்மையை அறிய முடியும்; சுவாசப் பயிற்சி இதற்கு உதவியாம். இது போலவே உணர்ச்சி உள்ளம் இயற்கை பற்றியும் அறிந்து, ஆசை, கோபம், மடிமை, அமைதியின்மை, கவலை, சந்தேகம் முதலிய தடைகளை நீக்கவேண்டும். இவைகள் எப்படித் தோன்றுகின்றன என்பதைத் தெரிந்து அடக்கி வந்தால் பின்னால் இவை தோன்றாமலே ஒழிகின்றன . அறிவுள்ள பிராணிகள் யாவும் ஐந்து ஸ்கந்தங்களின் சேர்க்கையால் உண்டானவையாதலால், அவைகளைப் பற்றிச் சீடன் சிந்திக்க வேண்டும். உருவம், உணர்வு, அறிவு, சிந்தனை, விஞ்ஞானம் என்ற சைதந்ய உணர்ச்சி ஆகிய ஐந்து ஸ்கந்தங்களும் தோன்றி மறையும் இயல்பை அவன் உணர்வான். ஐம்புலன்களோடு மனத்தையும் சேர்த்து ஆறு புலன்களால் உண்டாகும்.ஆறு வகை உணர்வையும் அறிந்து, அவற்றின் சார்பால் பந்தம் தோன்றுவதைத் தெரிந்து கொள்வான் , பின்னர் உண்மையான ஞானத்தை அடைவதற்குரிய சாமர்த்தியம், ஞாபகம், மனனம், சாஸ்திர ஆராய்ச்சி, ஆனந்தம், சாந்தி, சமதிருஷ்டி ஆகிய ஏழு கருவிகளையும் பயன் படுத்திக் கொள்வான். இவைகளால் ஞானமும் விடுதலையும் சித்திக்கும்.

8. நல்லமைதி : உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தல், இதனால் உண்மையை அறிவதைத் தடுக்கும் ஆசை, துவேஷம் முதலிய ஐந்து தடைகளும் நீங்கி, இன்பமும் தியானமும் நிலைத்து நிற்கும்; உள்ளம் அமைதி பெறும், விருப்பு வெறுப்புக்களற்ற சித்த நிறைவு ஏற்படும்; பின்னர் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்ட விடுதலையான பேரின்ப நிலை ஏற்படும்.

மேலே கூறிய அடிப்படையான நான்கு வாய்மைகளையும் ஏற்றுக்கொண்டவனே பெளத்த தருமத்தைப் பின்பற்ற முடியும். இந்தத் தருமத்தை மேற்கொள்பவன் தனியாக நின்று எதிலும் வெற்றி பெற முடியாது என்பதால், மூன்று புகலிடங்கள்-சரணங்கள்-ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. புத்தர், பெளத்த அடியார்களின் சங்கம், பெளத்த தருமம் ஆகிய மும்மணிகளே அந்தச் சரணங்கள், பெளத்த தருமத்தை மேற் கொள்பவன் ஆரம்பத்திலேயே இச்சரணங்களை மேற்கொள்வான்.

புத்தம் சரணம் கச்சாமி!
தர்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!

"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/அனுபந்தம்-I&oldid=1381725" இலிருந்து மீள்விக்கப்பட்டது