தாய்/கதைச் சுருக்கம்

விக்கிமூலம் இலிருந்து

“தாய்”
கதைச் சுருக்கம்

பனிக்காலம் கழிந்து இளவேனிற் காலம் மணம் பரப்பத் தொடங்கிய தருணத்தில், இரவு பகல் சமமாகும் நாள் நெருங்கும் முன் நீர் பிறந்தீர். பழைய உலகம் மறைந்து சூறாவளிகளை வென்று புறங்கண்டு புத்துலகம் பூத்தது. இரக்கமில்லாக் கொடுமை பல்கிப் பெருகிய காலம் இக்காலம், இக்காலத்தின் குறியீடாக, அடையாளமாக, தற்செயலாகப் பிறந்துள்ளீர். பழைய உலகையும் புதிய உலகையும் தழுவி நிற்கும் வில்வளைவு போன்றவர் நீர். அந்த வளைவைப் பாராட்டுகிறேன். பயணம் செய்யும் நெடுவழியில் அவ்வளைவு ஆளுமை செலுத்துகிறது. நமக்குப் பின் வழிவழித் திரண்டு வரும் மக்கள் பல்லாண்டுகள் அவ்வளைவைப் பார்த்துவிட்டுத்தான் கடந்து நடக்கவேண்டி இருக்கும்.

கார்க்கிக்கு ரோமெய்ன் ரோலண்டு வரைந்த கடிதம்

பெல்கேயா நீலவ்னா.....

படிக்காதவள்; உலகம் அறியாதவள். தொழிலாளியின் மனைவி. குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய அடி உதைபட்டு அலைக்கழிக்கப்பட்டவள். இவளே, பிற்காலத்தில் புரட்சிப் புயலான ‘தாய்’ ஆகிறாள். மக்சீம் கார்க்கியின் ஒப்புயர்வற்ற அரிய படைப்பு.

கணவனை இழந்த தாய் குடித்துவிட்டு வீடு திரும்பிய தன் மகன். “பாவெல் விலாசவ்"வை ஏக்கத்துடன் பார்த்து அரவணைத்துக் கொள்கிறாள். மகன் மாறுகிறான்.

தோழர்கள் பலர் வீடு வருவதையும் எப்பொழுதும் மகன்

படித்துக்கொண்டே இருப்பதையும் பார்த்த தாய் தன் மகன் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படித்துவருவதும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதும் அறிந்து மகன் புது வழியில் செல்வது அறிந்து மகிழ்கிறாள். அடிக்கடி அவள் வீட்டில் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

வீடு போலீஸ் கண்காணிப்பின் கீழ் வந்துவிட்டது. போலீஸ் சோதனை இடுகிறது. “அந்திரே நிக்கொலாய்” என்பவன் கைது செய்யப்படுகிறான். இவனிடமிருந்தே தாய் பின்னால் எழுதப் படிக்கத் தெரிந்துகொண்டாள். சோசலிச புரட்சிக் கருத்துக்கள் விவசாயிகளிடமும் எடுத்துச் சொல்லப்படுகின்றன.

காதலையும் நிராகரித்துப் புதிய சோசலிச சமுதாயத்துக்காக அர்ப்பணித்துக்கொண்ட மகன் பற்றிப் பெருமை கொள்கிறாள் ‘தாய்’. புரட்சியில் சத்திய ஒழுக்கம் இருப்பது உணர்கிறாள். தானும் இணைகிறாள்.

பல போராட்டங்கள். தாய் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிப்பதில் பெரும் தொண்டாற்றுகிறாள்.

தொழிலாளர் தினமான “மே” தினம் ஆர்வத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். பாவெல் கூட்டத்தில் பேசினான். பேசியதற்காக அவனும் தோழர்களும் கைதாயினர்.

தோழர்கள் கைதான பின் துண்டுப்பிரசுரங்களை எடுத்துச்செல்ல ஆளில்லை. அவை நகரங்களுக்கும் செல்ல வேண்டும். இதைத் தாய் செய்து முடிக்கிறாள்.

மே தினப் பேச்சுக்காகப் பாவெல் மற்றும் அவன் தோழர்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றனர். அனைவருக்கும் திவாந்திர சிட்சை வழங்கப்படுகிறது. பாவெல் நீதிமன்றப் பேச்சு அச்சடித்து வினியோகம் செய்யப்பட வேண்டும். பிரதிகளை எடுத்துக்கொண்டு வினியோகம் செய்யத் தாய் புறப்படுகிறாள்.

உளவாளி ஒருவன் பின்தொடர்ந்து சென்று அவள் முகத்தில் ஓங்கி அறைகிறான். நாலாப்பக்கமும் போலீஸ் தாக்குகிறது. ‘இரத்த சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை முறியடிக்க முடியாது. உங்களுடைய கொடுமைகள் எல்லாம் உங்கள் தலையிலேயே வந்து விடியும்’ என்று முழங்குகிறாள் “தாய்”.

போலீஸ்காரன் குரல்வளையைப் பிடித்து

நெரிக்கிறான். தாய் திணறினாள்.....

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/கதைச்_சுருக்கம்&oldid=1545464" இலிருந்து மீள்விக்கப்பட்டது