தாய்/10
கலவரம் நிறைந்த அந்த இரவுக்குப் பிறகு, சுமார் ஒரு மாத காலம் கழித்து போலீஸார் வந்தேவிட்டார்கள். அன்று நிகலாய் பாவெலையும் அந்திரேயையும் கண்டு பேசுவதற்காக வந்திருந்தான். அவர்கள் மூவரும் தங்களது பத்திரிகை விஷயமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நடு இரவு. ஏற்கெனவே படுக்கச் சென்றுவிட்ட தாய் தூக்கக் கலக்கத்தில் சொக்கியவாறே அவர்களது அமைதியும் ஆர்வமும் நிறைந்த பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது அந்திரேய் ஜாக்கிரதையாக தனக்குப் பின்னால் கதவைத் தாளிட்டுவிட்டுச் சமையலறையைக் கடந்து சென்றான். அந்தச் சமயம் முற்றத்தில் ஏதோ தகரவாளி உருளும் சத்தம் கேட்டது; அதைத் தொடர்ந்து கதவும் படாரென்ற திறக்கப்பட்டது. அந்திரேய் சமையலறைக்குள் தாவி வந்து சேர்ந்தான்.
“அது பூட்ஸ் லாடச் சத்தம்தான்!” என்று இரகசியமாகச் சொன்னான்.
நடுங்கும் கைகளால் தன் ஆடையைச் சரிசெய்தபடி, படுக்கையிலிருந்து துள்ளியெழுந்தாள் தாய். ஆனால் பாவெல் வாசல் நடைக்கு வந்து அமைதியாகச் சொன்னான்.
“நீங்கள் போய்ப் படுங்கள். உங்களுக்கு உடம்பு சரியில்லை!” வெளிவாசலருகில் ஏதோ சலசலப்புக் கேட்டது. பாவெல் வாசலுக்கு வந்து கதவைத் திறந்து, சத்தமிட்டான்.
“யார் அங்கே ?”
திடீரென்று ஓர் உயரமான, சாம்பல் நிற உருவம் அவன் முன் தோன்றியது. அதைத் தொடர்ந்து வந்தது இன்னொரு உருவம்; இதற்குள் இரண்டு போலீஸ்காரர்கள் பாவெலைப் பிடித்துத் தள்ளிவிட்டு, அவனுக்கு இரு புறத்திலும் காவல் நிற்கத் தொடங்கிவிட்டார்கள்.
“எங்களை எதிர்பார்க்கவில்லை, இல்லையா? ஹ” என்று ஓர் உரத்த குரல் கேலியாகக் கேட்டது. அப்படிப் பேசியவன் ஓர் உயரமான, ஒல்லியான, நறுக்கு மீசை அதிகாரி. பெத்யாகின் என்ற உள்ளூர்ப் போலீஸ்காரன் தாயின் படுக்கையை நோக்கி விரைந்தான்.
“எஜமான் இவள்தான் அவனது தாய்!” என்று ஒரு கையால் தனது தொப்பியைத் தொட்டுக்கொண்டும் மறு கையால் பெலகேயாவைச் சுட்டிக் காட்டிக்கொண்டும் சொன்னான்: “அதோ, அவன்தான் அந்த ஆசாமி!” என்று கூறி பாவெலைச் சுட்டிக் காட்டினான்.
“பாவெல் விலாசவா?” என்று கண்களை ஏறச் சொருகிக்கொண்டே கேட்டான் அதிகாரி.
பாவெல் தலையை ஆட்டினான்.
“நான் உன் வீட்டைச் சோதனை போட வந்திருக்கிறேன்” என்று கூறிக்கொண்டே, மீசையைத் திருகிவிட்டுக்கொண்டான் அதிகாரி.
“ஏ, கிழவி, எழுந்திரு! உள்ளே யார் இருக்கிறது?” அறைக் கதவினூடே ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தான் அவன்.
“உங்கள் பேர் எல்லாம் சொல்லுங்கள்!” என்ற குரல் அந்த அறையிலிருந்து கேட்டது.
வெளியே செல்லும் வாசற்புறத்தில் இரண்டு பேர் சாட்சிகளாக வந்து நின்றார்கள். ஒருவன் பழைய பாத்திரத் தொழிலாளியான திவெர்யகோவ்: ஒருவன் கொல்லுப்பட்டரைத் தொழிலாளியான ரீபின். ரீபின் கறுத்த தடித்த ஆசாமி; திவெர்யகோவின் வீட்டில் ஓர் அறையில் அவன் குடியிருந்தான்.
“வணக்கம், நீலவ்னா !” என்று கரகரத்த அடித்த குரலில் தாயைப் பார்த்துச் சொன்னான் அவன்.
அவள் தன் ஆடையணிகளை மாட்டிக்கொண்டு, தன்னைத் தைரியப்படுத்திக் கொள்வதற்காக ஏதேதோ முனக ஆரம்பித்தாள்.
“இந்த மாதிரி நான் கேள்விப்பட்டது கூட இல்லை! இப்படி நடுராத்திரியிலே வந்து பிராணனை எடுக்கிறது! தூங்கிக்கொண்டிருக்கிற வேளையிலா, உள்ளே வருகிறது!”
அந்த அறையோ குறுகலான இடம் கொண்டது. அந்த அறையில் ஏனோ பூட்ஸ் பாலிஷின் நாற்றம் கப்பென்று அடித்தது. உள்ளூர்ப் போலீஸ்காரனும், வேறு இரு போலீஸ்காரர்களும் தடதடவென்று தரையை மிதித்துக்கொண்டு அரங்கிலுள்ள புத்தகங்களையெல்லாம் இழுத்தெடுத்து, அதிகாரியின் முன்னால் கிடந்த மேஜைமீது குவித்தார்கள். வேறு இருவர் சுவர்களை முஷ்டியால் குத்திப் பார்த்தார்கள்; நாற்காலிகளுக்கு அடியில் புரட்டிப் பார்த்தார்கள்; அவர்களில் ஒருவன் அடுப்புக்கு மேலேகூட ஏறிப்பார்த்தான். ஹஹோலும் நிகலாயும் ஒரு மூலையில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்றுகொண்டிருந்தார்கள். அம்மைத் தழும்பு விழுந்த நிகலாயின் முகம் திட்டுத் திட்டாய்ச் சிவந்தது. அவனது சிறிய சாம்பல் நிறக் கண்கள் அதிகாரியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. ஹஹோல் தன் மீசையைத் திருகிவிட்டுக்கொண்டு நின்றான். தாய் அந்த அறைக்குள் வந்தபோது, அவன் சிறிது சிரித்தான்; அவளை உற்சாகப்படுத்தத் தலையை ஆட்டினான்.
பய பீதியிலிருந்து தப்பிப்பதற்காக, அவள் வழக்கம்போல் பக்கவாட்டில் அசைந்து நடக்கவில்லை. நெஞ்சை நிமிர்த்தி நேராக நடந்தாள், இந்தப் புதிய நடை அவளுக்கு ஒரு வேடிக்கையான கம்பீர பாவத்தை உண்டாக்கியது. அவள் தைரியமாகத் தடதடவென்று நடந்தாள்; எனினும் அவளது புருவங்கள் மட்டும் பயத்தால் நடுங்கத்தான் செய்தன.
அந்த அதிகாரி அந்தப் புத்தகங்களை மெலிந்த விரல்களுள்ள தனது வெள்ளை நிறக் கைகளால் பற்றி எடுத்தான்: விடுவிடென்று பக்கங்களைப் புரட்டினான்; மிகவும் அநாயாசமான லாவகத்தோடு அந்தப் புத்தகங்களை ஒரு புறம் எறிந்தான். சில புத்தகங்கள் சப்தமே செய்யாமல் பொத்தென்று விழுந்தன. யாருமே எதுவும் பேசவில்லை, அங்கு நிலவிய சப்தமெல்லாம் முசு முசுவென்று மூச்சு வாங்கும் வேர்த்துப்போன போலீஸ்காரர்களின் சுவாசமும் அவர்களது பூட்ஸ் சப்தமும், இடையிடையே ஒலிக்கும், அந்த ஒரே கேள்வியும்தான்.
“இங்கே பார்த்து முடித்துவிட்டாயா?”
பாவெலுக்கு அடுத்தாற்போல் சுவரையொட்டிச் சாய்ந்து நின்றாள் தாய்; அவன் எப்படிக் கைகளைக் கட்டியிருந்தானோ, அதுபோலவே அவளும் கட்டியிருந்தாள்; அவளது பார்வை போலீஸ்காரர்கள் செல்லுமிடங்களுக்கெல்லாம் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது: கால்களில் பலம் குன்றுவதாகத் தோன்றியது: கண்களில் நீர்த்திரை மல்கியது.
“புத்தகங்களை என் தரையில் எறிய வேண்டும்?” என்று நிகலாயின் முரட்டுக் குரல் அமைதியைப் பிளந்துகொண்டு ஒலித்தது.
தாய் திடுக்கிட்டாள். திவெர்யகோவ் தன்னை யாரோ பிடித்துத் தள்ளிய பாவனையில் தலையை முன்னுக்கு இழுத்தான்; ரீபின் பற்களைக் கடித்துக்கொண்டு நிகலாயை வெறித்துப் பார்த்தான். அந்த அதிகாரி கண்களை நெரித்து, நிகலாயின் அசைவற்ற முகத்தை வெறித்துப் பார்த்தான். அவனது கைகள் புத்தகத்தின் பக்கங்களை இன்னும் வெகுதுரிதமாகப் புரட்டத் தொடங்கின. சமயங்களில் அவன் தனது அகன்ற சாம்பல் நிறக் கண்களை மேலும் அகலத்திறந்து பார்த்தான். அந்தப் பார்வை அவன் ஏதோ தாங்க முடியாத வேதனையால் தவிப்பது போலவும், சக்தியற்ற கோபத்தில் வாய்விட்டுக் கத்தப்போவது போலவும் தோன்றியது.
“ஏ, போலீஸ்காரா! புத்தகங்களைப் பொறுக்கி எடு!” என்று மீண்டும் சத்தமிட்டான் நிகலாய்.
“உடனே எல்லாப் போலீஸ்காரர்களும் அவன் பக்கமாகக் கண் திருப்பினர். பிறகு தங்கள் அதிகாரியைப் பார்த்தனர். அதிகாரி நிமிர்ந்து நிகலாயின் அகன்ற உருவத்தின் மீது மெதுவான பார்வை செலுத்தினான்.
“ம்! அவற்றைப் பொறுக்குங்கள்!” என்று மூக்கால் உறுமினான் அவன்.
போலீஸ்காரர்களின் ஒருவன் உலைந்து கிழிந்துகிடந்த புத்தகங்களைக் குனிந்து பொறுக்கினான்.
“நிகலாய் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டுதான் இருக்கட்டுமே!” என்று பாவெலைப் பார்த்து முனகினாள் தாய்.
அவனோ வெறுமனே தோளை மட்டும் குலுக்கிக்கொண்டான். ஹஹோல் தலையைக் குனிந்துகொண்டான்.
“இந்த பைபிளைப் படிப்பது யார்?”
“நான் தான்” என்றான் பாவெல்.
“இந்தப் புத்தகமெல்லாம் யாருடையவை?”
“என்னுடையவை” என்றான் பாவெல்.
“ரொம்ப சரி” என்று கூறிக்கொண்டே நாற்காலியில் சாய்ந்தான் அதிகாரி. தனது மெல்லிய கைவிரல்களை முறித்துச் சொடுக்கு விட்டுக்கொண்டான்: கால்களை மேஜைக்கு அடியில் நீட்டினான். மீசையைத் தடவிவிட்டுவிட்டு நிகலாயிடம் கேட்டான்: “நீ தான் அந்திரேய் நஹோத்காவா?”
“ஆமாம்” என்று ஓர் அடி முன்னால் வந்து சொன்னான் நிகலாய். ஹஹோல் அவனது தோளைப்பிடித்து இழுத்துப் பின்னுக்குத் தள்ளினான்.
“அவன் சொல்வது தவறு. நான்தான் அந்திரேய்.....”
அதிகாரி தன் கையை உயர்த்தி நிகலாயை மிரட்டினான். “ஜாக்கிரதையாயிரு!”
பிறகு அவன் தான் கொண்டு வந்திருந்த தஸ்தாவேஜுகளைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினான்.
ஜன்னலுக்கு வெளியே நிலவொளி! எந்தவிதக் கவலையுமற்றுக் காய்ந்துகொண்டிருந்தது. அந்த வீட்டின் முன்புறமாக யாரோ நடந்து செல்லும்போது, பனிக்கட்டிகள் நொறுங்கிக் கரகரப்பது கேட்டது.
“நஹோத்கா? நீ ஏற்கெனவே அரசியல் குற்றத்துக்கு ஆளான பேர்வழியில்லை” என்று கேட்டான் அதிகாரி.
“ஆமாம், ராஸ்தோவில் ஒருமுறை; கராத்தவில் ஒரு தடவை, ஆனால் அங்கே போலீஸ்காரர்கள் மரியாதையோடு நடந்துகொண்டார்கள்!”
அதிகாரி தனது வலது கண்ணை மூடி, அதைத் தேய்த்துவிட்டுக்கொண்டான். பிறகு அவன் தனது சிறிய பற்களை வெளிக் காட்டிக்கொண்டே கேட்டான்,
- “தொழிற்சாலையில் சட்டவிரோதமான பிரசுரங்களில் வினியோகித்த போக்கிரிகள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?”
ஹஹோல் லேசாகச் சிரித்தான், உடம்பை ஆட்டிக்கொண்டான், அவன் ஏதோ பதில் சொல்ல முனையும்போது, மீண்டும் நிகலாய் குறுக்கிட்டுச் சத்தமிட்டான்.
“போக்கிரிகளையே நாங்கள் இப்போதுதான் பார்க்கிறோம்!”
ஒரே சவ அமைதி; ஒரு கணத்துக்கு ஸ்தம்பித்த சர்வ அமைதி நிலைத்தது.
தாயின் நெற்றியிலிருந்த வடுப்பாகம் வெளிறிட்டுப் போயிற்று: அவளது வலது புருவம் மேல் நோக்கி நெரிந்து உயர்ந்தது. ரீபினின் கரிய தாடி விபரீதமாக நடுநடுங்கியது; அவன் அந்தத் தாடியைக் கைவிரல்களால் கோதிக் கொடுத்துக்கொண்டே தலையைக் குனிந்தான்.
| “இந்த நாயை வெளியே கொண்டுபோ!” என்று கர்ஜித்தான் அதிகாரி.
இரு போலீஸ்காரர்கள் நிகலாயின் கைகளைப் பற்றிப் பிடித்து, அவனைப் பலவந்தமாகச் சமையல் கட்டுக்குள் தள்ளிக்கொண்டு போனார்கள், அங்கு சென்றவுடன் அவன் தன் கால்களைத் தரையில் அழுத்தி ஊன்றி அசைய மறுத்தான்.
“நிறுத்துங்கள்!” என்று கத்தினான்; “நான் என் சட்டையைப் போட்டுக் கொள்ளவேண்டும்!" போலீஸ் தலைவன் முற்றத்திலிருந்து வந்து சேர்ந்தான்.
“அங்கேயும் ஒன்றுமில்லை. எங்கும் பார்த்தாயிற்று”
“பார்த்துப் புண்ணியம்? கிடைக்காதது அதியமில்லை. இங்கே இருப்பவன் ரொம்பக் கைதேர்ந்த புள்ளி. பிறகு இயல்புதானே!” என்று சலித்துப்போய்ச் சொன்னான் அதிகாரி.
தாய் அவனது வலுவற்ற சில்லுக் குரலைக் கேட்டாள், மஞ்சள் நிறமான முகத்தைப் பயத்தோடு பார்த்தாள். பொது மக்களைச் சற்றும் மதியாத கர்வியான, ஓர் இரக்கமற்ற எதிரி தன்முன் நிற்பதுபோல் அவள் மனத்தில் பட்டது. இந்த மாதிரி நபர்களோடு அவளுக்கு என்றும் பரிச்சயம் ஏற்பட்டதில்லை. இப்படிச் சிலர் இருக்கிறார்கள் என்பதே அநேகமாய் மறந்துவிட்டது.
“இந்த மனிதன்தான் அந்தத் துண்டுப் பிரசுரங்களைக் கண்டு கோபப்பட்டவன் போலிருக்கிறது” என்று அவள் நினைத்துக்கொண்டாள்.
“அந்திரேய் அனிசுமோவிச் நஹோத்கா, கள்ளத்தனமாய் பிறந்தவரே, உம்மை நான் கைது செய்கிறேன்!”
. “எதற்காக?” என்று அமைதியுடன் கேட்டான் ஹஹோல்.
“அது பின்னால் உமக்குத் தெரியும்” என்று நையாண்டியாய்ச் சொன்னான் அதிகாரி, “நீ படித்தவளா?” என்று பெலகேயாவைப் Lபார்த்துக் கேட்டான்.
“இல்லை, அவள் படிக்கவில்லை” என்றான் பாவெல்.
“நான் உன்னைக் கேட்கவில்லை” என்று கடுமையான குரலில் எதிர்த்துச் சொன்னான் அதிகாரி. “ஏ, கிழவி வாயைத் திற!”
தாயின் உள்ளத்தில் அந்த மனிதன் மீதுள்ள வெறுப்பு மேலோங்கியது. குளிர்ந்த தண்ணீரில் திடீரென்று விழுந்து விட்டதுபோல், அவளது உடம்பு முழுவதும் நடுநடுங்கி விறைத்தது. அவள் நிமிர்ந்து நின்றாள்; அவளது நெற்றிவடு கன்றிச் சிவந்தது: அவளது புருவங்கள் கண்ணுக்குள் இறங்குவதுபோல சுழித்தன.
“சத்தம் ஒன்றும் போட வேண்டாம்!” என்று கையை நீட்டிக்கொண்டு சொன்னாள் தாய். “நீங்கள் இன்னும் சிறு வயதினர். உங்களுக்குத் துன்பமும் துயரமும் இன்னதென்று தெரியாது!”
“அம்மா, சாந்தமாயிருங்கள்!” என்று கூறி பாவெல் அவளைப் பேசவிடாமல் தடுத்து நிறுத்த முயன்றான். “நில்லு, பாவெல்” என்று கத்திக்கொண்டே, அவள் மேஜையை நோக்கி விரைந்தாள். “நீங்கள் இவர்களை ஏன் இட்டுச் செல்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
“வாயை மூடு! அது உன் வேலையல்ல!” என்று அதிகாரி ஆவேசத்தோடு எழுந்து சத்தமிட்டான். “கைதான வெஸோவ்ஷிகோவைக் கொண்டுவாருங்கள்!”
பிறகு அவன் ஏதோ ஒரு காகிதத்தைத் தனது மூக்கினருகே கொண்டுபோய் வாசிக்க ஆரம்பித்தான்.
போலீஸார் நிகலாயைக் கொண்டு வந்தார்கள். அதிகாரி வாசிப்பதை நிறுத்திவிட்டுக் கத்தினான்.
“உன் தொப்பியைத் தூர எடு”
ரீபின் பெலகேயாவிடம் வந்து, முழங்கையால் அவளை லேசாக இடித்துவிட்டுச் சொன்னான்.
“அம்மா, அதைரியப் படாதே.”
“என் கைகளை பிடித்துக்கொண்டால், தொப்பியை எப்படி எடுப்பதாம்?” என்று அந்த அதிகாரி வாசித்த வாக்கு மூலத்தை அமுங்கடிக்கும் குரலில் சத்தமிட்டான், நிகலாய்.
“இதிலே கையெழுத்துப் போடு” என்று கையிலிருந்த காகிதத்தை மேசைமீது எறிந்துவிட்டு, கத்தினான் அதிகாரி.
அவர்கள் கையெழுத்திடும்போது, தாய் அவர்களைக் கவனமாகப் பார்த்தாள்; அப்போது அவளது கோபம் தணிந்துவிட்டது; உணர்ச்சி உள்ளடங்கிவிட்டது. அவளது கண்களில் பலவீனமான துயர நிலையால் ஏற்பட்ட கண்ணீர்தான் நிரம்பித் ததும்பி நின்றது. அவளுக்குக் கல்யாணமானதிலிருந்து இருபது வருஷ காலமாக, இந்த மாதிரி எத்தனையோ தடவை கண்ணீர் விட்டிருக்கிறாள்; எனினும் கடந்த சில வருஷங்களாக, கண்ணீரின் வேதனையை மறந்திருந்தாள். அந்த அதிகாரி அவளைப் பார்த்தான்; பிறகு துவேஷபாவம் கொண்ட வறட்டுப் புன்னகையோடு சொன்னான்:
“தாயே! உன் கண்ணீரை மிச்சப்படுத்தி வை; இல்லையென்றால், பின்னால் அழுது தீர்க்கக் கண்ணீரே இருக்காது!”
அவளுக்கோ மீண்டும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“ஒரு தாய்க்கு எதற்கும், எத்தனை தடவை வேண்டுமானாலும், சிந்தித் தீர்க்க கண்ணீர் உண்டு, உங்களுக்கு ஒரு தாய் இருந்தால், அப்போது தெரியும்!” பளபளப்பான பூட்டு மாட்டியிருந்த சிறு பெட்டியில் தனது தஸ்தாவேஜுகளை அதிகாரி அவசரமாக வைத்தான்.
“புறப்படுங்கள்!” என்று உத்தரவிட்டான்.
தன்னோடு அவர்கள் கைகுலுக்கிக்கொண்டபோது, அன்பும் அமைதியும் நிறைந்த குரலில் விடை கொடுத்தான் பாவெல்: “போய்வா அந்திரேய், போய்வா நிகலாய்!”
“ஆமாமாம், போய்விட்டு வந்தாலும் வருவார்” என்று அந்த அதிகாரி எகத்தாளமாய்ச் சொன்னான்.
நிகலாய் நெடுமூச்சு விட்டான். அவனது தடித்த கழுத்தில் ரத்தம் பாய்ந்து புடைத்தது. அவனது கண்களில் கோபம் முட்டி மோதிப் பொங்கிக்கொண்டிருந்தது. ஹஹோல் பளிச்சென்று சிறு புன்னகை செய்து தலையை ஆட்டினான்; தாயிடம் மட்டும் இரகசியமாக ஏதோ சொன்னான். அவளோ சிலுவைக் குறியிட்டபடி சொன்னாள்:
“கடவுள் யார் நல்லவர் என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.........”.
கடைசியாக, அந்தக் காக்கிச் சட்டை ஆசாமிகள் வாசல்புறத்தை நோக்கிச் சென்றார்கள். காலில் அணிந்த பூட்ஸின் தார் ஆணிகளின் சப்தம் கலகலத்து தறைய அவர்களும் கண் மறைந்து போய்விட்டார்கள். ரீபின்தான் கடைசியாகப் போனான். அவன் போகும்போது பாவெலைக் கவனமாய்ப் பார்த்துவிட்டுப் போனான்.
“சரி. நான்..... வ... ரட்... டுமா?” என்று ஏதோ சிந்தித்தவாறே சொல்லிவிட்டு, தாடியுள் இருமிக்கொண்டே வெளியே போனான்.
பாவெல் தனது கைகளைப் பின்னால் கோர்த்துக்கொண்டு சிதறிக்கிடந்த புத்தகங்களையும், துணிமணிகளையும் தாண்டித் தாண்டி மெதுவாக உலவினான்.
“பார்த்தாயா? அவர்கள் இப்படித்தான் செய்வார்கள்” என்று சோர்ந்துபோன குரலில் சொன்னான் அவன்.
அவனது தாய் குழம்பிக்கிடந்த வீட்டின் சூழ்நிலையைப் பரிதாபகரமாகப் பார்த்தாள்.
“நிகலாய் ஏன் இவ்வளவு முரட்டுத்தனமாய் நடந்துகொண்டான்?” என்று வருத்தத்தோடு கேட்டாள்.
“ஒருவேளை அவன் உள்ளுக்குள் பயந்துபோயிருக்கலாம்” என்றான் பாவெல். "அவர்கள் பாட்டுக்கு வந்தார்கள். இவர்களைப் பிடித்தார்கள். கொண்டுபோய்விட்டார்கள். இப்படித்தான்.......” என்று கைகளை ஆட்டிக்கொண்டே சொன்னாள்.
அவளது மகன் கைது செய்யப்படவில்லை ; எனவே அவளது இதயம் அமைதி நிறைந்து அடித்துக்கொண்டது. ஆனால், தன் கண்முன்னால் நடந்து போன மறக்க முடியாத அந்தக் காட்சியை நினைத்து நினைத்து அவளது சிந்தனை செயலற்று ஸ்தம்பித்துத் தவித்துக்கொண்டிருந்தது.
“அந்த மஞ்சள் மூஞ்சிக்காரன் மூமூ அவன் நம்மைக் கேலி செய்தான்! பயமுறுத்தினான்!.....”
“சரி, அம்மா, என்று திடீரென்று தீர்மானமாகச் சொன்னான் பாவெல். நீ வா..... இதையெல்லாம் ஒழுங்குபடுத்தலாம்.”
“அம்மா” என்றும் ‘நீ’ என்றும் தாயை அழைத்தான். அவளுக்கு வெகு நெருக்கமாய் இருக்கும்பொழுது தான் தாயை அவன் அவ்வாறு அழைப்பது வழக்கம். அவள் அருகே சென்று அவன் முகத்தைப் பார்த்தாள்.
“அவர்கள் உன்னை இழிவுபடுத்திவிட்டார்களா?” என்று அமைதியுடன் கேட்டாள்.
“ஆமாம், அதுதான் சங்கடமாயிருக்கிறது. அவர்கள் என்னையும் கொண்டு சென்றிருந்தால் நல்லது!”
அவனது கண்களில் கண்ணீர் ததும்பியிருப்பதாக அவளுக்குப் புலப்பட்டது; அவனது இதய வேதனையை ஆற்றுவதற்கு முயல்வதுபோல, அவள் பெருமூச்சுவிட்டுக்கொண்டு சொன்னாள்;
“பொறு பொறு. அவர்கள் உன்னையும்கூடக் கொண்டு போய்விடுவார்கள்?”
“நிச்சயம் கொண்டு போவார்கள்!”
அவள் ஒரு கணம் மௌனமானாள்.
“பாஷா, நீ எவ்வளவு உறுதி வாய்ந்தவன்!” என்று சொன்னாள் அவள். “நீ ஒரு வேளையாவது உன் தாயைத் தேற்றியிருக்கிறாயா? நான் ஏதோ பயங்கரத்தைச் சொன்னால், நீ அதைவிடப் பயங்கரத்தைச் சொல்லி, என்னையே பயப்பட வைக்கிறாயே!” என்று பரிதவித்தாள்.
அவளை ஏறிட்டுப் பார்த்தவாறே தாயை நெருங்கினான் அவன்.
“எனக்கு அதெல்லாம் தெரியாது. அம்மா. நீதான் இதற்கெல்லாம் உன்னைப் பழக்கிக் கொள்ளவேண்டும்.” அவள் பெருமூச்சு விட்டாள்; உணர்ச்சி வசப்பட்டு வெடிக்கத் தயாராயிருக்கும் குரலை உள்ளடக்கிக்கொண்டு, சிறிது நேரம் கழித்து அவள் கூறினாள்.
“அவர்கள் மனிதர்களைச் சித்திரவதை செய்வார்கள் என்றா நினைக்கிறாய்? அந்த மனிதர்களின் உடம்பைக் கிழித்து, எலும்புகளை நொறுக்கி...... அதைப்பற்றி நினைத்தாலே, ஐயோ, என் கண்ணே!... என்னால் தாங்க முடியவில்லையடா.........”
“அவர்கள் ஆன்மாவையே நொறுக்குகிறார்கள். அதுதான் மிகுந்த வேதனை தருகிறது. அவர்கள் தமது தீய கரங்களால் உன் ஆத்மாவைத் தொடும்போது........”