தாய்/9

விக்கிமூலம் இலிருந்து

9

அந்தக் குடியிருப்பிலுள்ள மக்கள், நீல மையால் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வினியோகித்த சோஷலிஸ்டுகளைப் பற்றிப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்தப் பிரசுரங்கள் தொழிற்சாலையின் ஒழுங்குமுறை பற்றி காரசாரமாக விமர்சனம் செய்தன; பீட்டர்ஸ்பர்க்கிலும், தென் ருஷியாவிலும் நடைபெறும் வேலை நிறுத்தங்களைப்பற்றிக் கூறின; தங்களது சொந்த நல உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகத் தொழிலாளர் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் எனப் போதித்தன.

தொழிற்சாலையில் நல்ல காசு பார்த்துவந்த நடுத்தர வயதினர் அதைக் கண்டு கோபாவேசம் கொண்டார்கள்.

“கலவரக்காரப் பயல்கள்! இவர்களுக்குச் செம்மையாய்க் கொடுக்கணும்” என்று கூறிக்கொண்டார்கள். அந்தத் துண்டுப் பிரசுரங்களைத் தமது முதலாளிமாரிடம் கொண்டு போய்க் கொடுத்தார்கள்.

இளவட்டப் பிள்ளைகள் அந்தப் பிரசுரங்களை உற்சாகத்தோடு வாசித்தார்கள்.

“இதெல்லாம் உண்மைதானே!” என்றார்கள் அவர்கள். உழைத்து, உழைத்து ஓடாகிப்போன பெரும்பாலான தொழிலாளர்கள் நம்பிக்கையற்றுப் பேசினார்கள்: “இதனால் எல்லாம் என்ன நடந்துவிடப்போகிறது? அதெல்லாம் ஒன்றும் நடக்காத காரியம்.”

எனினும் அந்தத் துண்டுப் பிரசுரங்கள் தொழிலாளர் மத்தியில் ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணிவிட்டன. ஆனால், அந்த ஒருவார காலத்தில் வேறு புதுப் பிரசுரங்கள் ஏதும் வரக்காணோம். உடனே அந்தத் தொழிலாளர்கள் மட்டும் தம்முள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்; “ஒருவேளை அவர்கள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டார்கள் போலிருக்கிறது!”.

ஆனால் அடுத்த திங்கட்கிழமையன்று எப்படியோ மீண்டும் புதுப் பிரசுரங்கள் வினியோகம் ஆயின. மீண்டும் தொழிலாளர்கள் தம்முள் குசுகுசுவென்று பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

தொழிற்சாலையிலும் சாராயக் கடையிலும் யாருக்குமே இனந்தெரியாத ஆட்கள் சிலரின் நடமாட்டம் அதிகரித்தது. இந்த ஆட்கள் அங்குமிங்கும் கவனமாகப் பார்ப்பதும், யாரிடமாவது எதையாவது கேட்பதும், ஒவ்வொருவர் பேசும்போதும் குறுக்கே தலையிட்டுப் பேசுவதுமாக இருந்தார்கள். அவர்களது அளவு கடந்த எச்சரிக்கையாலும் அவர்கள் ஜனங்களோடு பலவந்தமாய்ப் பழக முனையும் காரணத்தினாலும் அவர்கள் பிறரது சந்தேகப் பார்வைக்கு ஆளானார்கள்.

இந்தக் கிளர்ச்சிக்கெல்லாம் தனது மகனது வேலையே காரணம் என்பதைத் தாய் உணர்ந்துகொண்டாள். அவனைச் சுற்றி மக்கள் எப்படிக் குழுமுகிறார்கள் என்பதையும் அவள் கண்டாள். அவனுக்கு என்ன நேர்ந்துவிடுமோ என்ற கவலையோடு, ஒரு பெருமித உணர்ச்சியும் அவளது இதயத்தில் கலந்தது.

ஒரு நாள் மாலையில் மரியா, விலாசவின் ஜன்னல் கதவைத் தட்டினாள்: தாய் கதவைத் திறந்தவுடன், மரியா சிறிது உரத்த குரலில் இரகசியமாகச் சொன்னாள்:

“ஜாக்கிரதையாயிரு, பெலகேயா! இந்தப் பிள்ளைகளுக்கு ஆபத்து வரப்போகிறது. இன்றிரவு உன் வீட்டைச் சோதனை போடப்போகிறார்கள், மாசினுடைய வீட்டையும், நிகலாயின் வீட்டையும் கூடத்தான்.”

மரியாவின் தடித்த உதடுகள் துடித்தன. அவள் தனது கொழுத்த மூக்கினால் பெருமூச்சுவிட்டாள். திருகத்திருக்க விழித்தாள். தெருவில் யாரையோ கண்களால் பின்தொடர்ந்தாள். அங்குமிங்கும் பரக்கப் பரக்கப் பார்த்தாள்.

“எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் உனக்கு ஏதும் சொல்லவில்லை, நான் உன்னை இன்று பார்க்கக்கூடவில்லை, புரிந்ததா?”

அவள் போய்விட்டாள்.

ஜன்னலை மூடிய பிறகும். தாய் மெதுவாக நாற்காலிக்குள் விழுந்து புதைந்துகிடந்தாள். ஆனால், தன் மகனுக்கு நேரவிருக்கும் பேராபத்தைப் பற்றிய பயபீதி அவளை உடனேயே எழுந்திருக்கச் செய்தது. அவள் அவசர அவசரமாக உடை உடுத்திக்கொண்டாள்; தலைமீது ஒரு கச்சையை மடித்துக் கட்டிக்கொண்டாள்; பியோதர் மாசினிடம் ஓடிப்போனாள்; அவன் சீக்காயிருந்தான். எனவே வேலைக்குப் போகவில்லை அவள் உள்ளே நுழைந்தபோது. அவன் ஜன்னலருகே உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்; வலது கையை இடது கையால் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தான். நோய்வாய்ப்பட்டிருந்த அவனது வலது கைப் பெருவிரல் இயற்கைக்கு மாறாக நிமிர்ந்து நின்றது. அவள் சொன்ன செய்தியைக் கேட்டதும் அவனது முகம் வெளுத்தது. அவன் துள்ளியெழுந்தான்.

“ஓ, அப்படியா சேதி!” என்று முணுமுணுத்தான்.

“சரி. நாம் என்ன செய்யலாம்?” என்று நடுநடுங்கும் சுரத்தால் நெற்றி வியர்வையை வழித்துக்கொண்டே கேட்டாள் பெலகேயா.

“ஒரு நிமிஷம் பொறுங்கள், பயப்படாதீர்கள்” என்று கூறிவிட்டு, தனது சுருட்டைத் தலையை, இடது கையால் பின்னோக்கிக் கோதி விட்டுக்கொண்டான் பியோதர் மாசின்.

“நீங்களே பயப்படுகிறீர்களே!” என்று அவள் கத்தினாள்.

“நானா?” அவன் முகம் கன்றிப்போயிற்று; வலிந்து புன்னகை செய்துகொண்டே, “ஆமாம்... ம்.... அது போகட்டும்........நாம் இதை உடனே பாவெலுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நான் யாரையாவது அனுப்புகிறேன். நீங்கள் வீட்டுக்குப் போங்கள், வீணாகக் கவலைப்படாதீர்கள். அவர்கள் நம்மை யென்ன அடிக்கவா செய்வார்கள்? அடிப்பார்களா?” என்று கூறினான்.

வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் தாய் அங்கிருந்த சகல புத்தகங்களையும் ஒன்று சேர்த்தாள். அந்தப் புத்தகங்களை மார்பின் மீது அணைத்துப் பிடித்தவாறு அங்கும் இங்கும் நடந்து தத்தளித்தாள்; அடுப்பைப் பார்த்தாள்; அடுப்புக்குக் கீழே பார்த்தாள்: தண்ணீர் பீப்பாயைப் பார்த்தாள், பாவெல் அந்தச் செய்தியைக் கேட்டவுடனேயே வீட்டுக்கு ஓடி வருவான் என்று எதிர்பார்த்தாள்; ஆனால் ஏமாந்தாள். அவன் வரவில்லை, கடைசியில் அவள் நடந்து நடந்து அலுத்துப்போய் சமையலறையிலிருந்த பெஞ்சின்மீது புத்தகங்களை வைத்துவிட்டு அதன் மீது உட்கார்ந்தாள், அந்த இடத்தைவிட்டு அசைவதற்கே பயந்து போய் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். பாவெலும் ஹஹோலும் வீடு திரும்பும்வரையிலும் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

“உங்களுக்கு விஷயம் தெரியுமா?” என்று அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் வாய்விட்டுக் கத்தினாள்.

“ஆமாம், தெரியும்” என்று புன்னகையோடு சொன்னான் பாவெல்; “நீ என்ன பயந்துவிட்டாயா?”

“ஆமாம், எனக்கு ஒரே பயம்; ஒரே பயமாயிருக்கிறது....”.

“நீ பயப்படக்கூடாது. அதனால் பயனில்லை” என்று சொன்னான் ஹஹோல்.

“சரி, தேநீருக்குத் தண்ணீர்கூட வைக்கவில்லையா?” என்று கேட்டான் பாவெல்.

“எல்லாம் இதனால்தான்” என்று கூறிக்கொண்டே தன்னிடத்தை விட்டு எழுந்து, புத்தகங்களைச் சுட்டிக்காட்டினாள் அவள்.

அவளது மகனும், ஹஹோலும் விழுந்து விழுந்து சிரித்தார்கள், அந்தச் சிரிப்பினால் அவள் மனம் சிறிது நிம்மதிபெற்றது. பாவெல் அந்தப் புத்தகங்களில் சிலவற்றைப் பொறுக்கி எடுத்து, புழக்கடைக்குச் சென்று ஒளித்து வைக்கப் போனான்.

“இதற்கெல்லாம் பயந்தால் ஒன்றுமே நடக்காது அம்மா” என்று கூறிக்கொண்டே தேநீர் அடுப்பை ஏற்றினான் ஹஹோல், “இந்த மாதிரி முட்டாள்தனத்தில் ஜனங்கள் தங்கள் நேரத்தைப் பாழடிப்பது இருக்கிறதே அது, படுமோசமான, வெட்ககரமான காரியம். இடைவாரிலே வாள்களைத் தொங்கவிட்டுக்கொண்டும், பூட்சுகளில் தார் ஆணிகளை மாட்டிக்கொண்டும் பெரிய பெரிய குண்டு மனிதர்கள் இங்கு வருவார்கள்; இங்குள்ள எல்லாவற்றையும் குடைந்து துளைத்துப் பார்ப்பார்கள். படுக்கைக்கு கீழே அடுப்புக்குக் கீழே எல்லாம் பார்ப்பார்கள். மேலே ஒரு அட்டாலி இருந்தால் அதில் ஏறிப் பார்ப்பார்கள். நிலவறையிருந்தால் அதிலும் நுழைந்து பார்ப்பார்கள். அவர்களது மூஞ்சியிலும் தலையிலும் நூலாம்படை அப்பி அடைவதுதான் மிச்சமாயிருக்கும்; ஏமாற்றத்தால் எரிந்து விழுவார்கள், திகைப்பார்கள்; வெட்கப்படுவார்கள். ஆனால், தாங்கள் மிகவும் மூர்க்கமாகவும் கோபமாகவும் இருப்பதாகப் பாசாங்கு செய்வார்கள். தங்களது தொழில் எவ்வளவு படுகேவலமானது என்பதை உணர்வார்கள். ஒரு தடவை இப்படித்தான் என்னுடைய சாமான்களையெல்லாம் அவர்கள் தாறுமாறாய் உலைத்தெறிந்து சீர்குலைத்துவிட்டார்கள். பிறகு அந்தப் பரிதவிப்பால், அவர்கள் இன்னது செய்வது எனத் தெரியாமல் திகைத்து வெளியேறினார்கள். போய்விட்டார்கள். இன்னொரு முறை அவர்கள் போகும்போது என்னையும் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். பிறகு என்னைச் சிறையில் போட்டு, நாலுமாத காலம் உள்ளே வைத்திருந்தார்கள். சிறைக்குள் போனால் நீ வெறுமனே உட்கார்ந்து இருப்பதைத் தவிர வேறு வேலையே கிடையாது. பிறகு சிறையிலிருக்கும்போது சம்மன்கள் வரும் உன்னைத் தெருக்களின் வழியே சிப்பாய்கள் நடத்திச் செல்வார்கள், யாரோ ஒரு பெரிய தலைவன் உன்னை என்னென்னவோ கேள்வி கேட்பான். அந்தத் தலைவர்களில் எவனும் அப்படி ஒன்றும் புத்திசாலியல்ல, அர்த்தமற்று எது எதையோ கேட்பான். பிறகு மீண்டும் சிறைக்குக் கொண்டு போகுமாறு சிப்பாய்களுக்கு கட்டளையிட்டு உன்னை அங்குமிங்குமாக வெட்டியாக இழுத்தடிப்பார்கள். அவர்கள் வாங்குகிற சம்பளத்துக்கு ஏதாவது மாரடித்து ஆக வேண்டுமே! கொஞ்ச நாள் போய்விட்டால், அவர்களே சலித்துப்போய் உன்னை விடுதலை செய்துவிடுவார்கள் அவ்வளவுதான்!”

“அந்திரியூஷா நீங்கள் என்ன இப்படிப் பேசுகிறீர்கள்?” என்று கேட்டாள் தாய்.

அடுப்பை மூட்டி ஊதுவதற்காகக் குனிந்து முழங்காலிட்டிருந்த ஹஹோல் நிமிர்ந்து பார்த்தான். அவன் முகம் சிவந்து போயிருந்தது. பிறகு மீசையைத் திருகிவிட்டுக்கொண்டு கேட்டான்.

“எப்படிப் பேசுகிறேன்?”

“என்னவோ யாரும் உங்களைத் துன்புறுத்தாத மாதிரி!”

“இந்த உலகில் துன்புறாத ஆத்மா எங்கே அம்மா இருக்கிறது?” என்று இளம் புன்னகையோடு கூறிக்கொண்டே எழுந்து நின்று தலையை ஆட்டிக்கொண்டான். “அவர்கள் என்னை எவ்வளவோ துன்புறுத்தத்தான் செய்தார்கள்; ஆனால் எனக்கு எல்லாம் பழகிப்போய்விட்டது; மரத்துப் போய்விட்டது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று தெரித்திருந்தும் நாம் என்ன செய்துவிட முடியும்? அந்தத் துன்பங்களையெல்லாம் பொருட்படுத்தினால், என் வேலைதான் கெடும்; அந்தத் துன்பங்களையெல்லாம் நினைத்துப் பார்ப்பதும் வீணான நேரக் கொலைதான். இதுதானம்மா வாழ்க்கை! சமயங்களில் மனிதர்களைக் கண்டாலே எனக்குக் கோபம் வரும். எண்ணிப்பார்த்தேன்; இதிலென்ன பயன்? ஒவ்வொருத்தனும் அடுத்தவன் நம்மை அறையப் போகிறான் என்று எண்ணித்தான் பயப்படுகிறான்; எனவே முதல் அடியை இவனே கொடுக்க முற்படுகிறான். இப்படித்தானம்மா வாழ்க்கை இருக்கிறது.”

அவனது வார்த்தைகள் இதசுகத்தோடு பிறந்து வழிந்தன. அந்தப் பேச்சினால் அவளுக்கு அன்று நடக்கவிருக்கும் சோதனையைப் பற்றிய பயம் நீங்க ஆரம்பித்தது. அவனது முழிக் கண்களில் களிப்பு குடிகொண்டது. அவன் எவ்வளவு கோரமாயிருந்தாலும், லாவகமான உடற்கட்டு கொண்டவன் என்று கண்டாள்.

தாய் பெருமூச்செறிந்தாள்.

“அந்திரியூஷா! கடவுள் உங்களுக்கு அருள் செய்யட்டும்!” என்று மனதார வாழ்த்தினாள் அவள்.

ஹஹோல் தேநீர் அடுப்பருகே சென்று குந்தி உட்கார்ந்தான்.

“எனக்கு நல்லருள் கொஞ்சம் கிடைத்தாலும் போதும். நான் அதை ஒன்றும் மறுதலிக்க மாட்டேன். ஆனால், அவ்வருளுக்காக நான் கை நீட்டி யாசகம் கேட்கமாட்டேன்!” என்றான் ஹஹோல்.

பாவெல் புழக்கடையிலிருந்து வந்து சேர்ந்தான்.

“அவர்கள் ஒன்றும் கண்டுபிடிக்கப் போவதில்லை” என்று நம்பிக்கை நிறைந்த குரலில் சொல்லிவிட்டு, முகம், கை கழுவினான். பிறகு கைகளைத் துடைத்துக்கொண்டு, தாயின் பக்கமாகத் திரும்பினான்:

“நீங்கள் மாத்திரம் பயந்ததாகக் காட்டிக்கொண்டால், உடனே அவர்களுக்குச் சந்தேகம் தட்டிவிடும். இந்த வீட்டில் ஏதோ இருக்கப் போய்த்தான் நீங்கள் இப்படி நடுங்கிச் சாகிறீர்கள் என்று அவர்கள் நினைத்துவிடுவார்கள். நாம் தப்பாக எதுவும் செய்யவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நியாயம் நமது பக்கத்தில்தான் இருக்கிறது. அந்த நியாயத்துக்காக, நாம் நமது ஆயுள் முழுவதுமே பாடுபடுவோம். அது ஒன்றுதான் நம்மீதுள்ள குற்றம்! பிறகு நாம் எதற்காகப் பயப்பட வேண்டும்?”

“நான் தைரியமாக இருப்பேன், பாஷா!” என்று அவள் உறுதி கூறினாள். ஆனால் உடனேயே அவள் மனங்குலைந்து பரிதாபமாகக் கூறினாள்: “அவர்கள் சீக்கிரம் வந்து காரியத்தை முடித்துக்கொண்டு போனால் தேவலை!" ஆனால் அவர்கள் அன்றிரவு வரவில்லை ; காலையில் அந்தப் பிள்ளைகள் தன்னைக் கேலி செய்ய முனைவதற்கு முன்னால், தானே தன்னைக் கேலி செய்து சமாளித்துக்கொள்ள முயன்றாள்.

“பார்த்தாயா? பயம் வருவதற்கு முன்னாலேயே நான் பயந்து செத்தேன்” என்று கூறிக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/9&oldid=1293040" இலிருந்து மீள்விக்கப்பட்டது