தாய்/8

விக்கிமூலம் இலிருந்து

8

தொழிலாளர் குடியிருப்பின் கோடியிலிருந்த அந்தச் சின்னஞ்சிறிய வீடு, ஊர் ஜனங்களின் கவனத்தைக் கவர்ந்தது. அதன் சுவர்களை எத்தனையோ சந்தேகக் கண்கள் ஏற்கெனவே கூர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தன. அந்த வீட்டைப்பற்றி எண்ணற்ற வதந்திகள் இறக்கை முளைத்து அதிவேகமாகப் பறந்து பரவின. வீட்டின் சுவர்களுக்குள்ளே ஏதோ ஒரு பரம ரகசியம் பதுங்கிக் கிடப்பதாகவும், அதை விரட்டியடிக்க வேண்டும் எனவும் ஜனங்கள் எண்ணிக் கொண்டார்கள். இராத்திரி வேளைகளில் அவர்கள் ஜன்னலின் வழியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தார்கள்; சமயங்களில் ஜன்னல் கண்ணாடியைக் கையால் தட்டி விட்டு, உடனே பயத்தால் விழுந்தடித்துக்கொண்டு ஓடிச் சென்றார்கள்.

ஒரு நாள் பெலகேயாவை பெகுன்சோவ் என்ற சாராயக் கடைக்காரன் வழியில் சந்தித்தான். அவன் ஒரு அழகான கிழவன். ஊதா நிறமான தடித்த அரைக் கோட்டும், தொள தொளத்துச் சிவந்த கழுத்துச் சதையைச் சுற்றிக் கரிய நிறப் பட்டுக் கச்சையும் அணிந்திருப்பான்; பளபளக்கும் கூரிய மூக்கின் மீது ஆமை ஓட்டால் ஆன ஒரு மூக்குக் கண்ணாடி தரித்திருப்பான். எனவே அவனுக்கு ஊரார் ‘எலும்புக் கண்ணன்’ என்று பட்டப் பெயர் வைத்திருந்தார்கள். மூச்சு விடக்கூட முனையாது, பதிலுக்காகவும் காத்திராது, அவன் பெலகேயாவை நோக்கிச் சரமாரியாக, உணர்ச்சியற்று உடைந்துபோன வார்த்தைகளைப் பொழிய ஆரம்பித்தான்;

“பெலகேயா நீலவ்னா எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் மகன் எப்படி இருக்கிறான்? அவன் கல்யாணம் ஏதும் பண்ணப் போகிறானா, இல்லையா? அவனுக்கு இதுதான் சரியான பருவம், அவ்வளவுதான் நான் சொல்வேன். பிள்ளைகளுக்கு எவ்வளவு சீக்கிரம் கல்யாணம் ஆகிறதோ அவ்வளவுக்குப் பெற்றோர்களுக்குச் சிரமம் குறையும். புளிக் காடியிலே கிடக்கும் காளானைப் போல, ஒரு மனிதன் குடும்பஸ்தன் ஆனால்தான் அவனது உடலும் உள்ளமும் நல்ல நிலைமை அடையும். நானாயிருந்தால், இதற்குள் அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்திருப்பேன். தங்கள் சொந்தப் புத்தியால் வாழவேண்டும் என்று ஜனங்கள் விரும்புகிற இந்த நாளிலே, மனிதப்பிறவி மீது கடுமையான கண்காணிப்புத் தேவை. எல்லாரும் அவரவர் நினைத்தபடி வாழத் தொடங்கிவிட்டனர். என்னென்னவோ நினைக்கிறது. எதை எதையோ தன்னிச்சையாய்ச் செய்கிறதும் நாம் கண்டித்து வைக்க வேண்டிய சமாச்சசாரம்தான். இந்தக் காலத்து இளவட்டப்பிள்ளைகள் தேவாலயத்துக்கும் போவதில்லை; நாலுபேர் கூடும் இடத்துக்கும் வருவதில்லை; எங்கேயோ நழுவி ஓடிப்போய் இருட்டிலே கூடித் தமக்குள்ளாக என்னென்ன இரகசியத்தையோ குசுகுசுத்துப் பேசிக்கொள்கிறார்கள். எதற்காக இரகசியமாய்ப் பேசவேண்டும், என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏன் மனிதர்களைக் கண்டு வெறுத்து ஒதுங்குகிறார்கள்? ஜனங்களின் முன்னால், உதாரணமாக, சாராயக் கடையில் கூட வெளியிட முடியாத இரகசியம் அப்படி என்ன இருக்கிறது! இரகசியங்களம்மா! புனித தேவாலயம் ஒன்றுதான் இரகசியங்களுக்கே உரிய இடம்; மற்றப்படி, மற்ற இரகசியங்களெல்லாம் மூலையிருட்டிலே நடப்பவை; சபல புத்தி படைத்தவர்களின் இரகசியங்கள்தான். சரி போகட்டும் நீங்கள் நலமாயிருங்கள், பெலகேயா நீலவ்னா !”

அவன் தனது தொப்பியை அநாயாசமாகத் தூக்கிக் காற்றில் வீசிக்கொண்டே சென்றுவிட்டான்; தாய் திகைப்புற்று நின்றாள்.

இன்னொரு முறை. விலாசாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரியான மரியா கோர்சுனவா தாயைச் சந்தித்தாள். மரியா ஒரு விதவை; அவளது கணவன் ஒரு இரும்புப் பட்டறைத் தொழிலாளி. தொழிற்சாலை வாசலில் சாப்பாடு விற்று வாழ்பவள். கடைவீதியில் தாயைக் கண்டு அவள் சொன்னாள்,

"பெலகேயா, உன் மகன்மீது ஒரு கண் வைத்திரு!”

“என்ன விஷயம்?” என்று கேட்டாள் தாய்.

“எங்கு பார்த்தாலும் ஒரே வதந்தி!” என்று இரகசியமாகச் சொன்னாள் மரியா, “மோசமான வதந்தியம்மா, மோசமான வதந்தி! அவன் என்னவோ கிலிஸ்தியைப்[1] போல் ஒரு இரகசியச் சங்கம் சேர்க்கிறானாம். வெட்டுக்குத்துத்தான் நடக்கப் போகிறது.....”

“போதும். நிறுத்து, உளறாதே, மரியா!”

“நான் ஒன்றும் உளறவில்லை. நெருப்பில்லாமல் புகையாது!” என்றாள் மரியா.

தாய் அந்தப் பேச்சையெல்லாம் தன் மகனிடம் போய்ச் சொன்னாள்; பாவெலோ தோளைக் குலுக்கிக்கொண்டதோடு சரி. ஆனால் ஹஹோலோ வழக்கம் போலவே மெதுவாய்ச் சிரித்துக்கொண்டான்.

“இந்த யுவதிகளுக்கெல்லாம் ஒரே சங்கடம். நீங்களோ அழகான வாலிபர்கள், எவளும் உங்களை விரும்புவாள்: நீங்கள் நன்றாகவும் உழைக்கிறீர்கள்; குடிப்பதுமில்லை. ஆனால் நீங்கள் அவர்களைக் கொஞ்சங்கூடக் கவனிப்பதே இல்லை. எனவே நகரிலிருந்து உங்களைப் பார்க்க வரும் பெண்கள் சந்தேகத்துக்கு இடம் தரும் நபர்கள்தான் என்று இவர்கள் சொல்லுகிறார்கள்.........” என்றாள் தாய்.

“ஓகோ. அப்படியா!” என்று எரிச்சலோடு சொன்னான் பாவெல்.

“சாக்கடையில் நாற்றம் அடிக்கத்தான் செய்யும்” என்று பெரு மூச்சுடன் சொன்னான் ஹஹோல் “ஏனம்மா, அந்த முட்டாள் குட்டிகளுக்கு, மண வாழ்க்கையென்றால் இன்னதென்று நீங்கள் சொல்லித் தரக்கூடாதோ? சொல்லியிருந்தால் அவர்கள் இப்படி ஒருவருக்கொருவர் முட்டி மோதிப் போட்டி போட மாட்டார்களே!”

“நானா? அவர்களுக்கே எல்லாம் தெரியும், எல்லாவற்றையும் தான் பார்க்கிறார்களே, ஆமாம், அவர்களுக்குத்தான் போக்கிடம் ஏது?” என்றாள் தாய்.

“தெரிந்துகொண்டால்தான், அதற்கு ஒரு வழியையும் கண்டுபிடித்துக் கொள்வார்களே” என்றான் பாவெல்.

தாய் அவனது அசைவற்ற முகத்தைப் பார்த்தாள்.

"அவர்களுக்கும் நீங்கள் ஏன் கற்றுக் கொடுக்கக் கூடாது? அவர்களில் கெட்டிக்காரியாகப் பார்த்து அழைத்து வந்து கற்றுக்கொடுங்களேன்” என்றாள் தாய்.

“அது சங்கடமான வேலை.”

“ஏன் முயன்று பார்த்தால் என்ன?” என்றான் ஹஹோல்.

பாவெல் பதில் சொல்வதற்கு முன் சிறிது மௌனம் சாதித்தான்.

“அவர்களும் வந்துவிட்டால், பிறகு ஜோடி சேர்த்துக்கொண்டு போய்விடுவார்கள்; சிலர் கல்யாணமும் பண்ணிக்கொள்வார்கள்; அப்புறம் அத்துடன் எல்லாம் சமாப்திதான்!”

தாய் சிந்தனையில் ஆழ்ந்தாள். பாவெலின் சந்நியாச வைராக்கியத்தைக் கண்டு அவளது மனம் கலக்கமுற்றது. ஒவ்வொருவரும், ஹஹோலைப் போன்ற மூத்தத் தோழர்கள்கூட, பாவெலின் வார்த்தையை மதித்து நடந்தார்கள்; அவனைக் கண்டு அவர்களெல்லாம் பயப்படுவதாகவும், அவனது கண்டிப்புக் குணத்தால் அவனை யாருமே விரும்பவில்லையெனவும் அவளுக்குத் தோன்றியது.

ஒரு நாள் இரவு அவள் படுக்கைக்குப்போன பிறகும், ஹஹோலும் பாவெலும் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள்; பிறகு அவர்கள் இருவரும் அடுத்த அறையில் மங்கிய குரலில் ஏதோ பேசிக்கொண்டார்கள்; எனினும் அந்தப் பேச்சு அவளது காதிலும் விழுந்தது.

“அந்த நதாஷாவை என் மனத்துக்குப் பிடித்திருக்கிறது” என்று திடீரெனச் சொன்னான் ஹஹோல்.

“தெரியும்” என்று சிறிது கழித்துச் சொன்னான் பாவெல்.

ஹஹோல் இடத்தைவிட்டு எழுந்து அறைக்குள் நடமாடும் காலடியோசையை அவளால் கேட்க முடிந்தது; அவன் வழக்கம் போலவே சோக இசையை மெதுவாகச் சீட்டியடிக்க ஆரம்பித்தான். மீண்டும் அவன் சொன்னான்.

“இதை அவள் கவனிக்கிறாளா? என்று சந்தேகிக்கிறேன்.”

பாவெல் பதில் பேசவில்லை.

“சரி. நீ என்ன நினைக்கிறாய்?” என்று மெதுவாகக் கேட்டான் ஹஹோல்.

“கவனித்திருக்கிறாள், அதனால்தான் இங்கு வருவதையே அவள் நிறுத்திவிட்டாள்” என்றான் பாவெல். ஹஹோல் தனது காலைத் தரையில் அழுத்தித் தேய்த்துக் கொண்டான்; பிறகு மீண்டும் அவனது சீட்டிக்குரல் அறைக்குள் எதிரொலித்தது.

“இதை அவளிடம் நான் சொல்லிவிட்டால் என்ன?” என்று கேட்டான் அவன்.

“எதை?”

“அவளிடம் நான்.....” என்று மெதுவாக ஆரம்பித்தான் ஹஹோல்.

“எதற்காகச் சொல்ல வேண்டும்”

ஹஹோல் நடக்காமல் நின்றுவிட்டதைத் தாய் உணர்ந்து கொண்டாள்: அவன் சிரித்துக்கொள்வது போல அவளுக்குத் தோன்றியது.

“நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அதை அவளிடம் சொல்லித்தானே ஆகவேண்டும்! இல்லையேல் பயனென்ன?”

பாவெல் தன் கையிலிருந்த புத்தகத்தைப் பட்டென்று மூடினான்.

“என்ன பயன் உனக்கு வேண்டும்?” என்று கேட்டான் பாவெல்.

இருவரும் வெகுநேரம்வரையிலும் வாயே திறக்கவில்லை.

“சரி..........” என்று எதையோ கேட்க முனைந்தான் ஹஹோல்.

“அந்திரேய்! உனக்கு என்ன வேண்டும் என்பதைப்பற்றி முதலில் நீயே தெளிவோடு இரு” என்று மெதுவாக ஆரம்பித்தான் பாவெல். “அவள் உன்னைக் காதலிக்கிறாள் என்றே வைத்துக்கொள் - அதுவே எனக்குச் சந்தேகம்தான்: ஒரு பேச்சுக்கு அப்படி வைத்துக்கொள் - பிறகு நீங்கள் மணம் செய்து கொள்வீர்கள். நல்ல ஜோடிதான்! அவளோ படிப்பாளி; நீயோ ஒரு தொழிலாளி. குழந்தைகள் பிறக்கும்; நீதான் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக நீ எவ்வளவு உழைக்க வேண்டும் தெரியுமா? குழந்தைகளுக்காக, ஒரு துண்டு ரொட்டிக்காக, வீட்டு வாடகைக்காக நீ மாடாய் உழைக்கப் போவாய். நாம் எடுத்துக்கொண்ட கருமத்திலிருந்து நீ மட்டுமல்ல, நீங்கள் இருவருமே விலகிப்போய்விடுவீர்கள்.”

அந்த அறையில் அமைதி நிலவியது. பிறகு பாவெலே மீண்டும் சொன்னான். இப்போது அவனது குரலில் அத்தனை வேகம் இல்லை.

“அந்திரேய்! இதையெல்லாம் நீ மறந்துவிடுவதே நல்லது. அவளுக்குக் குழப்பத்தை உண்டாக்கிவிடாதே." மீண்டும் மௌனம். சுவரிலிருந்த கடிகாரத்தின் பெண்டுலம் மட்டும் அசைந்து அசைந்து ஒவ்வொரு கணத்தையும் அளந்து சொல்லிக்கொண்டிருந்தது.

“பாதி மனம் காதலிக்கிறது; பாதி மனம் பகைக்கிறது. இதுவும் ஒரு மனமா?” என்று சொன்னான் ஹஹோல்.

புத்தகத்தின் தாள்கள் சலசலத்தன; பாவெல் மீண்டும் படிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். அவனது தாய் கண்களை மூடியவாறே கிடந்தாள்; மூச்சு விடக்கூடப் பயந்தாள். அவள் ஹஹோலுக்காக இதய பூர்வமாய் அனுதாபப்பட்டாள். ஆனால் தன் மகனுக்காக இன்னும் அதிகமாக அனுதாபப்பட்டாள்.

“அட, என் அருமைக் கண்ணே...” என்று யோசித்தாள்.

“அப்படியென்றால் நான் ஒன்றுமே சொல்லக்கூடாது என்று தானே நினைக்கிறாய்?” என்று திடீரெனக் கேட்டான் ஹஹோல்.

“அதுதான் நல்லது” என்று அமைதியாகச் சொன்னான் பாவெல்.

“சரி, அப்படியே செய்வோம்” என்றான் ஹஹோல். சில விநாடிகள் கழித்து அவன் மெதுவாக, துக்கம் தோய்ந்த குரலில் பேசினான்; “பாவெல், உனக்கு இந்த மாதிரி நிலைமை ஏற்பட்டால், அப்போது தெரியும் அந்தச் சங்கடம்.”

“இப்பொழுதே, சங்கடமாய்த் தானிருக்கிறது!”

காற்று அந்த வீட்டின் சுவர்களில் மோதிச் சென்றது; கடிகாரத்தின் பெண்டுலம் காலக் கணக்கைக் கூறிட்டுச் சொல்லிக்கொண்டேயிருந்தது.

“இது ஒன்றும் விளையாட்டல்ல இது...” என்று மெதுவாகச் சொன்னான் ஹஹோல்.

தாய் தனது முகத்தைத் தலையணையில் புதைத்துக்கொண்டு அரவமில்லாது அழுதாள்.

காலையில் எழுந்தவுடன் தாய் அந்திரேயைப் பார்த்தாள். அவனது உருவம் குறுகிவிட்டதுபோலத் தோன்றியது; அவன் மீது அவளுக்கு அதிகப் பிரியம் உண்டாயிற்று. அவளது மகனோ மெலிந்து நெட்டுவிட்டுப்போனது போலிருந்தான்; எப்போதும் போலவே அவன் மௌனமாயிருந்தான். இதுவரையிலும் அவள் ஹஹோலை அந்திரேய் அனிசிமோவிச் என்றுதான் அழைத்து வந்தாள், அன்றோ அவள் தன்னையுமறியாது கூறினாள்: “அந்திரியூஷா[2]! உங்கள் பூட்சுகளைச் சீக்கிரம் பழுது பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் ஜலதோஷம் பிடித்துவிடும்.”

“அடுத்த சம்பளத் தேதியில் நான் புதுப்பூட்சுகள் வாங்கிவிடுவேன்” என்று சிரித்துக்கொண்டு பதில் சொன்னான் அந்திரேய். பிறகு தனது வாட்டசாட்டமான கரங்களை அவளது தோளின்மீது போட்டுக்கொண்டு பேசினான்: “நீங்கள்தான் எனது உண்மையான தாயாக, இருக்கலாம். ஆனால், நீங்கள் அதை ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். நான் மிகவும் கோரமாயிருக்கிறேன், இல்லையா?”

அவள் பதில் சொல்லாமல் அவனைச் செல்லமாக அறைந்தாள். அவள் எத்தனையெத்தனை அன்பு மொழிகளையோ கூற நினைத்தாள், எனினும் அவளது இதயம் பரிவுணர்ச்சியினால் பரிதவித்தது: வார்த்தைகள் அவளது உதட்டைவிட்டு வெளிவரவே இல்லை.

குறிப்பு[தொகு]

  1. கிலிஸ்தி–ருஷ்ய பாஷையில் சவுக்கு என அர்த்தம். இந்தப் பெயரை ஒரு வகையான மதவெறியர்களுக்குச் சூட்டியிருந்தார்கள்.–மொ-ர்.
  2. அந்திரியூஷா – அந்திரேயைச் செல்லமாக அழைப்பது –மொ-ர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/8&oldid=1293039" இலிருந்து மீள்விக்கப்பட்டது