தாய்/7

விக்கிமூலம் இலிருந்து

7

பாசி மணிகள் பல சேர்ந்து மாலையாவது போல. நாட்கள் இணைந்திணைந்து வாரங்களாய், மாதங்களாய் மாறிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் பாவெலின் வீட்டில் அவனது நண்பர்கள் கூடினார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் அவர்கள் தமக்கு முன்னுள்ள பெரிய படிக்கட்டில் ஒரு படி மேலேறியதாகவும், ஏதோ ஒரு தூர லட்சியத்தை நோக்கிச் சிறிது சிறிதாக உயர்ந்து வருவதாகவுமே தோன்றியது.

பழைய நண்பர்களோடு புதிய நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள். விலாசவின் வீட்டிலுள்ள சின்ன அறையைப் பொறுத்தவரை அதுவே ஒரு பெருங்கூட்டம். நதாஷா குளிரால் விறைத்தும் களைத்தும் வந்துகொண்டிருந்தாள்; எனினும் அவள் உற்சாகமாயிருந்தாள். பாவெலின் தாய் அவளுக்குத் தான் சொன்னபடி ஒரு ஜோடிக் காலுறைகள் பின்னிக் கொடுத்தாள். அந்தப் பெண்ணின் சின்னஞ்சிறு கால்களில் அவளே அதை மாட்டிவிட்டாள். முதலில் நதாஷா சிரித்தாள்; ஆனால், மறுகணமே அவள் சிரிப்பை அடக்கி அமைதியானாள்.

“ஒரு காலத்தில் என்னிடம் மிகவும் பிரியம் கொண்ட தாதி ஒருத்தி இருந்தாள்” என்று மென்மையாய்ச் சொன்னாள் அவள், “எவ்வளவு அதிசயமாயிருக்கிறது பார்த்தீர்களா, பெலகேயா நீலவ்னா? பாடுபடும் மக்கள் துன்பமும் துயரமும் சூதும் வாதும் கொண்ட வாழ்க்கைதான் நடத்துகிறார்கள். எனினும் மற்ற எல்லாரையும் விட அன்பு காட்டுகிறார்கள்..... ” என்று. சொன்னாள். அவள் குறிப்பிட்ட மற்றவர்கள் அவளுக்கு வெகு தூரத்தில், ரொம்ப தூரத்தில் தள்ளிப் போனவர்கள். “நீங்கள் எப்படிப்பட்டவர்!” என்றாள் பெலகேயா; “பெற்றோர்களையும் உற்றார்களையும் இழந்து நிற்கிறீர்களே....” அவள் பெருமூச்செறிந்தாள்; பிறகு மெளனமானாள். அவளுக்குத் தன் சிந்தனைகளை உருக்கொடுத்து வெளியிட முடியவில்லை. ஆனால், நதாஷாவின் முகத்தை பார்க்கும்போது, முன் உணர்ந்தது போலவே, இனந்தெரியாத ஏதோ ஒன்றுக்குத் தான் நன்றி செலுத்தித்தானாக வேண்டும் என்ற உணர்ச்சி அவள் உள்ளத்தில் பிறந்தோங்கியது. அவள் அந்தப் பெண்ணுக்கு எதிராக, தரையில் உட்கார்ந்தாள்; அந்தப் பெண்ணோ தனது தலையை முன்னே தாழ்த்தி, இனிய புன்னகை புரிந்துகொண்டிருந்தாள்.

“பெற்றோர்களை இழந்து நிற்கிறேனா?” என்றாள் அவள். ‘அது ஒன்றும் பிரமாதமில்லை. என் தந்தை ஒரு முரட்டு ஆசாமி; என் சகோதரனும் அப்படித்தான். மேலும் அவன் ஒரு குடிகாரன். எனது மூத்த சகோதரி மகிழ்ச்சியற்றுப் போய்விட்டாள். அவளைவிடப் பல் வருடங்கள் மூத்தவன் ஒருவன்தான் அவள் கணவன், பெரிய பணக்காரன்தான்; ஆனால் படுமோசமானவன், மகாக் கஞ்சன். என் அம்மாவை நினைத்தால் எனக்கு வருத்தம்தான் உண்டாகும். அவளும் உங்களைப்போல், சாதாரணமான பெண்மணிதான். சுண்டெலியைப்போல், சிறு உருவம்; சுண்டெலிபோலவே குடுகுடுவென்று ஓடுவாள்; எதைக் கண்டாலும் அவளுக்கு ஒரே பயம்தான். சில சமயங்களில் அவளைப் பார்க்க வேண்டுமென்று அப்படி ஆசைப்படுவேன்.... “

“அடி என் அப்பாவிப் பெண்ணே !” என்று தனது தலையை வருத்தத்தோடு அசைத்துக்கொண்டே சொன்னாள் தாய்.

அந்தப் பெண் மீண்டும் தன் தலையை உயர்த்தி, எதையோ பிடித்துத் தூரத் தள்ளுவதைப்போல, கையை உதறி நீட்டினாள்.

“இல்லை, இல்லை, சமயங்களில் எனக்கு ஒரே சந்தோஷம், தாங்க முடியாத சந்தோஷம்!”

அவளது முகம் வெளுத்தது, அவளது நீலக்கண்கள் ஒளிபெற்றன. அவள் தன் கரங்களைத் தாயின் தோளின் மீது வைத்துக்கொண்டாள்.

“எத்தகைய மகத்தான வேலையில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்று மட்டும் உங்களுக்குத் தெரிந்தால், புரிந்தால்.....” கம்பீரமாகவும், மெதுவாகவும் சொன்னாள் நதாஷா.

ஏதோ ஒரு பொறாமை உணர்ச்சி பெலகேயாவின் இதயத்தைத் தொடுவது போலிருந்தது. "அதற்கெல்லாம் நான் ஆள் இல்லை. நானே ஒரு கிழம்: மேலும் எனக்கு எழுத்து வாசனை கிடையாது.....” என்று துக்கம் தோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டே தரையை விட்டு எழுந்தாள் தாய்....

......... பாவெல் அடிக்கடி பேசினான். அதிகநேரம் பேசினான்; அழுத்தத்தோடு பேசினான்மூமூநாளுக்கு நாள் மெலிந்து வந்தான். ஆனால் அவன் நதாஷாவைப் பார்க்கும் போதும், அவளோடு பேசும்போதும் அவனது கண்களிலுள்ள கடுமையான பார்வை மறைந்து மென்மையாய் ஒளிர்வது போலவும், குரலில் இனிமை நிறைந்து ஒலிப்பது போலவும், அவன் எளிமையே உருவாய் இருப்பது போலவும் தாயின் மனதில் பட்டது.

“கடவுள் அருளட்டும்!” என்று அவள் நினைத்துக்கொண்டாள். தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

அவர்களுக்குள் எழும் வாதப் பிரதிவாதங்கள் கொதிப்பேறி, வீராவேசம் பெறும்போதெல்லாம், அந்த ஹஹோல் தன் இடத்தைவிட்டு எழுந்து நின்று, உடம்பை ஒரு கண்டா மணியின் நாக்கைப்போல் முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டு ஏதோ சில அன்பான, சாதாரணமான வார்த்தைகளைச் சொல்லுவாளன்: உடனே எல்லாரும் அமைதியாய்விடுவார்கள். அந்த நிகலாய் வெஸோவ்ஷிகோவ் மட்டும் மற்றவர்களை ஏதாவது செய்யும்படி கடுகடுப்பாய்த் தூண்டிவிட்டுக்கொண்டேயிருப்பான். அவனும், அந்தச் செம்பட்டைத் தலையனும்தான் செம்பட்டைத் தலையனை அவர்கள் சமோய்லவ் என அழைத்தார்கள்) சகல வாதப் பிரதிவாதங்களையும் ஆரம்பித்து வைப்பார்கள். சோப்புக் காரத்தில் முக்கியெடுத்ததைப் போன்ற தோற்றமும், உருண்டைத் தலையும் கொண்ட இவான் புகின் என்பவன் அவர்களை ஆதரித்துப் பேசுவான். வழிய வழியத் தலைவாரி விட்டிருக்கும் யாகவ் சோமவ் அதிகம் பேசுவதில்லை. பேசினால் அழுத்தம் திருத்தமாய்ப் பேசுவான். அவனும். அகல நெற்றிக்காரனான பியோதர் மாசின் என்பவனும் பாவெலையும் ஹஹோலையும் ஆதரித்துப் பேசுவார்கள்.

சில சமயங்களில் நதாஷாவுக்குப் பதிலாக, நிகலாய் இவானவிச் என்பவன் வந்து சேருவான். அவன் மூக்குக் கண்ணாடி போட்டிருப்பான். வெளுத்த இளந்தாடியும் அவனுக்கு உண்டு. அவன் எங்கேயோ ஒரு தூரப்பிரதேச மாகாணத்தில் பிறந்தவன்; “ஓ” என்ற ஓசை அவன் பேச்சில் அதிகம் ஒலித்தது. பொதுவில். அவன் ஒரு தொலைவானவனாகவே தோன்றினான். அவன் சர்வ சாதாரண விஷயங்களையே பேசினான் — குடும்ப வாழ்க்கை, குழந்தைகள், வியாபாரம், போலீஸ், உணவுப் பொருள்களின் விலைவாசி மூமூமுதலிய மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றியே பேசினான். ஆனால் அவன் பேசிய முறையானது எது எல்லாம் பொய்யாகவும் அறிவுக்குப் பொருந்தாததாகவும் முட்டாள்தனமாகவும், அசட்டுத்தனமாகவும், அதே சமயத்தில் பொது மக்களுக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடியதாய் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் பகிரங்கப்படுத்துகிற மாதிரி இருக்கும். மனிதர்கள் சுகமாகவும், நேர்மையாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏதோ ஒரு தூர தொலைப் பூமியிலிருந்து வந்தவன் போல், தாய்க்குத் தோற்றம் அளித்தான் அவன். இங்கோ எல்லாமே அவனுக்குப் புதிதாக இருப்பது போலவும், இந்த வாழ்க்கையே அவனுக்குக் கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ளாதது போலவும் வேறு விதியின்றித்தான் அவன் இங்கு வாழ்ந்துகொண்டிருப்பது போலவும் அவளுக்குத் தோன்றும். அவன் இந்த வாழ்க்கையை வெறுத்தான், இந்த வாழ்க்கையை மாற்றியமைத்துத்தான் ஆக வேண்டும் என்ற இடையறாத ஆசையை அமைதி நிறைந்த விருப்பத்தை அவனுள்ளத்தில் அந்த வெறுப்புணர்ச்சி வளர்த்து வந்தது போன்றும் அவளுக்குத் தோன்றும். அவனது முகம் மஞ்சள் பாரித்திருந்தது; கண்களைச் சுற்றி அழகிய சிறு ரேகைகள் ஓடியிருந்தன. அவனது குரல் மென்மையாயும் கரங்கள் எப்போதும் கத கதப்பாகவும் இருந்தன. அவன் எப்போதாவது பெலகேயாவுடன் கைகுலுக்க நேர்ந்தால், அவளது கரத்தைத் தனது கைவிரல்களால் அணைத்துப் பிடிப்பான்; அந்த மாதிரியான உபசாரத்தால் அவள் இதயத்தில் இதமும் அமைதியும் பெருகும்.

நகரிலிருந்து வேறு பலரும் இவர்கள் கூட்டத்தில் வந்து கலந்துகொண்டார்கள். அவர்களில் ஒல்லியாய் உயரமாய் வெளிறிய முகத்தில் பதிந்த அகன்ற கண்கள் கொண்ட ஒரு பெண்தான் அடிக்கடி வந்துகொண்டிருந்தாள். அவள் பெயர் சாஷா, அவளது நடையிலும். அசைவிலும் ஏதோ ஒரு ஆண்மைக் குணம் படிந்திருப்பதாகத் தோன்றியது. அவள் தனது அடர்த்தியான கறுத்த புருவங்களை ஒரு சேர நெரித்து சுழிப்பாள், அவளது நேர்முகமான மூக்கின் சிறு நாசித் துவாரங்கள் அவள் பேசும்போது நடுநடுங்கிக்கொண்டிருக்கும்.

அவள்தான் முதன் முதலாகக் கூர்மையான குரலில் தெரிவித்தாள்:

“நாம் எல்லாம் சோஷலிஸ்டுகள்!”

தாய் இதைக் கேட்டபோது ஏற்பட்ட பயபீதியால் வாயடைத்துப்போய் அந்தப் பெண்ணையே வெறித்துப் பார்த்தாள். சோஷலிஸ்டுகள்தான் ஜார் அரசனைக் கொன்றதாக பெலகேயா கேள்விப்பட்டிருந்தாள், அது அவளது இளமைக் காலத்தில் நடந்த விஷயம். தங்களுடைய பண்ணை அடிமைகளை ஜார் அரசன் விடுவித்துவிட்டான் என்ற கோபத்தால் நிலப்பிரபுக்கள் ஜார்மீது வஞ்சம் தீர்க்க உறுதி பூண்டதாகவும், ஜார் அரசனைக் கொன்று தலை முழுகினாலொழியத் தங்கள் தலைமயிரைச் சிரைப்பதில்லை என அவர்கள் சபதம் பூண்டதாகவும். அதனாலேயே அவர்களை சோஷலிஸ்டுகள் என்று அழைத்து வந்தார்கள். ஆனால் தன்னுடைய மகனான பாவெலும் அவனது நண்பர்களும் தங்களை ஏன் சோஷலிஸ்டுகள் என்று சொல்லிகொள்கிறார்கள் என்பதுதான் பெலகேயாவுக்குப் புரியவே இல்லை.

எல்லாரும் அவரவர் இருப்பிடத்துக்குப் பிரிந்து சென்ற பிறகு, அவள் பாவெலிடம் கேட்டாள்,

“பாஷா! நீ ஒரு சோஷலிஸ்டா?”

“ஆமாம்” என்று அவள் முன்னால் வழக்கம்போல் உறுதியாகவும், விறைப்பாகவும், நின்றவாறே பதில் சொன்னாள் அவன். “எதற்காகக் கேட்கிறாய்?”

அவனது தாய் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

“உண்மையில் அப்படித்தானா, பாவெல்? ஆனால், அவர்கள் ஜாருக்கு எதிரிகளாச்சே! ஜார் வம்சத்து அரசர்களில் ஒருவரைக்கூட அவர்கள் கொன்றுவிட்டார்களே!”

பாவெல் அறையில் குறுக்கும் மறுக்கும் நடந்தான்; கன்னத்தைக் கையால் தடவிக்கொடுத்துக்கொண்டான்.

“நாங்கள் அந்தமாதிரிக் காரியங்களைச் செய்யத் தேவையில்லை” என்று இளஞ்சிரிப்புடன் பதில் சொன்னான் பாவெல்.

இதன் பின்னர் அவன் அவளோடு அமைதியும் அழுத்தமும் நிறைந்த குரலில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தான். அவனது முகத்தைப் பார்த்ததும் அவள் தன்னுள் நினைத்துக்கொண்டாள்.

“இவன் தவறேதும் செய்யமாட்டான்; இவனால் செய்ய முடியாது.”

புரியாத பதிற்றுக்கணக்கான புதிய வார்த்தைகளைப் போல், திரும்பத் திரும்ப அடிக்கடி கேட்ட அந்தப் பயங்கர வார்த்தையும், முனை மழுங்கி அவள் காதுக்குப் பழகிப்போயிற்று. ஆனால் சாஷாவை மட்டும் அவளுக்குப் பிடிக்கவே இல்லை; சாஷா வந்துவிட்டால் அவளுக்கு அமைதியின்மையும் எரிச்சலும்தான் உள்ளத்தில் எழுந்து ஓங்கும். ஒரு நாள் அவள் தனது உதடுகளை வெறுப்போடு பிதுக்கிக்கொண்டு, ஹாஹோலிடம் போய் சாஷாவைப்பற்றிச் சொன்னாள்.

“அவள் மிகவும் கண்டிப்பான பேர்வழி! ஒவ்வொருவரையும் அதிகாரம் பண்ணுகிறாள். ‘நீ இதைச் செய், நீ அதைச் செய்’ என்று உத்தரவு போடுகிறாள்!”

ஹஹோல் வாய்விட்டு உரக்கச் சிரித்தான்.

“சரியான குறி பார்த்து ஒரு போடு போட்டீர்கள் அம்மா, ரொம்ப சரி! அப்படித்தானே பாவெல்?” என்றான். பிறகு அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டுக்கொண்டு. “பிரபு வம்சம்” என்றான்.

“அவள் ஒரு நல்ல பெண்!” என்று உணர்ச்சியற்றுச் சொன்னான் பாவெல்.

“அதுவும் உண்மைதான்” என்றான் ஹஹோல்: “அவள் என்ன செய்ய வேண்டும்; நாம் என்ன விரும்புகிறோம், நம்மால் என்ன முடியும்—என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை.”

புரியாத எதையோ பற்றி அவர்கள் விவாதித்தார்கள்.

சாஷா பாவெலிடமும் கண்டிப்பாக நடந்துகொள்வதையும், சமயங்களில் அவனைப் பார்த்து உரக்கச் சத்தம் போடுவதையும் தாய் கண்டிருக்கிறாள். அம்மாதிரி வேளைகளில் பாவெல் பதிலே பேசுவதில்லை. வெறுமனே சிரிப்பான், நதாஷாவை எத்தனை அன்பு கனியப் பார்ப்பானோ, அது போலவே சாஷாவின் முகத்தையும் பார்ப்பான். தாய்க்கு இதுவும்கூடப் பிடிக்கவில்லை.

எல்லாரையும் தழுவி நிற்கும் பெருமகிழ்ச்சி தாயைச் சில சமயங்களில் வியப்புக்குள்ளாக்கும். இம்மாதிரியான குதூகலம், வெளிநாட்டிலுள்ள தொழிலாளர் இயக்கங்களைப் பற்றிப் பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் படிக்கின்றபோதுதான் ஏற்படுவது வழக்கம். அப்போது அவர்கள் அனைவருடைய கண்களும் குதூகலத்தால் ஒளிபெற்றுத் துலங்கும்; அவர்கள் குழந்தைகளைப்போலக் குதூகலம் கொள்வார்கள்; வாய்விட்டுக் கலகலவென்று சிரிப்பார்கள்; உற்சாகத்தில் ஒருவர் தோளை ஒருவர் தட்டிக் கொடுத்துக்கொள்வார்கள்.

“ஜெர்மன் தோழர்கள் வாழ்க!” என்று யாரோ ஒருவன் தனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திலேயே மூழ்கி, வெறிகொண்ட மாதிரி கத்தினான்.

“இத்தாலியத் தொழிலாளர்கள் நீடூழி வாழ்க” என்று அவர்கள் வேறொரு முறை கத்தினார்கள். இந்த வெற்றி முழக்கங்களைத் தூர தேசங்களிலுள்ள தமது நண்பர்களை நோக்கி, தங்களையோ தங்கள் மொழியையோ அறியாத, புரியாத நண்பர்களை நோக்கிக் காற்றிலே மிதக்கவிட்டுக் கத்தினார்கள். ஆனால், அந்த இனந்தெரியாத நண்பர்கள் அவர்களது முழக்கங்களைக் கேட்பது போலவும், அவர்களது உற்சாகத்தை உணர்ந்து கொள்வதுபோலவும் இவர்கள் முழுமையாய் நம்புவது போலத் தோன்றியது. “நாம் அவர்களுக்குக் கடிதம் எழுதுவது ஒரு நல்ல காரியம்” என்று ஆனந்த மயமாக ஒளிரும் கண்களோடு பேசினோன் ஹஹோல்; “அப்படி எழுதினால், ருஷியாவிலும் தங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். தங்கள் மதத்தையே நம்பி அதையே பிரச்சாரம் செய்யும் தோழர்கள் இருக்கிறார்கள். தாங்கள் எந்தக் கொள்கையோடு வாழ்கிறார்களோ அதே கொள்கையோடு வாழ்ந்து, தங்களது வெற்றிகளைக் கண்டு களிப்பாடும் தோழர்கள் இருக்கிறார்கள் என்ற விஷயம் அவர்களுக்கும் தெரியவரும்.”

இதழ்களிலே புன்னகை பூத்துச் சொரிய அவர்கள் பிரெஞ்சுக்காரர்களையும், ஆங்கிலேயர்களையும், ஸ்வீடன்காரர்களையும் தமது நண்பர்களாகக் கருதிப் பேசுவார்கள்; தங்கள் இதயத்தோடு மிகுந்த நெருக்கம் கொண்ட மக்களாக. தாங்கள் பெருமதிப்பு வைத்திருக்கும் மக்களாக அவர்களைக் கருதிப் பேசிக்கொள்வார்கள்: அந்த மக்களின் துன்பத்திலும் இன்பத்திலும் இவர்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள்.

நெருக்கடி நிறைந்த அந்தச் சின்னஞ்சிறு அறையிலே எல்லா உலகத் தொழிலாளர்களோடும் ஆத்மார்த்தமாகக் கொள்ளும் ஒட்டுறவு உணர்ச்சி பிறந்தது; அந்த உணர்ச்சி தாயையும் கூட அடிமைப்படுத்தியது. அவர்கள் அனைவரையும் ஒன்றாக உருக்கிச் சேர்த்து ஒரே பேராத்மாவாக மாற்றிவிட்டது. இந்த உணர்ச்சி அவளுக்குப் பிடிபடவில்லை என்றாலும் அந்த உணர்ச்சியின் இன்பமும் இளமையின் சக்திவெறியும், நம்பிக்கையும் அவளைத் தளர்ந்துவிடாதபடி தாங்கி நின்றன.

“நீங்கள் இருக்கிறீர்களே!” என்று ஒருமுறை அவள் ஹஹோலிடம் சொன்னாள்; “அனைவரும் உங்களுக்குத் தோழர்கள்! அவர்கள் யூதர்களாகட்டும், ஆர்மீனியர்களாகட்டும், ஆஸ்திரியக்காரராகட்டும் எல்லாரும் உங்கள் தோழர்கள்! அவர்களுக்காக நீங்கள் வருத்தம் அடைகிறீர்கள்; சந்தோஷமும் கொள்கிறீர்கள்!” "ஆமாம், அனைவருக்காகவும், அனைவருக்காகவும், அம்மா! அனைவருக்கும்தான்!” என்றான் ஹஹோல், எங்களுக்குக் குலம் கோத்திரமோ, தேசீய இன பேதங்களோ தெரியாது. தோழர்களைத் தெரியும்; எதிரிகளையும் தெரியும். சகல தொழிலாளி மக்களும் எங்களுக்குத் தோழர்கள்: சகல பணக்காரர்களும், சகல அரசுகளும் எங்களுக்கு எதிரிகள். உலகத்தை நீங்கள் ஒரு முறை பார்த்து, உலகில் எத்தனை கோடி தொழிலாளி மக்கள் இருக்கிறார்கள்,” அவர்கள் எவ்வளவு பலசாலிகளாயிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால், உங்கள் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது: உங்கள் இதயத்தின் கொண்டாட்டத்துக்கு எல்லையே இருக்காது! அம்மா, பிரெஞ்சுக்காரனும், ஜெர்மானியனும், இத்தாலியனும் நாம் எப்படி வாழ்க்கையைப் பார்க்கிறோமோ அதுபோலவே பார்க்கிறான். நாம் அனைவரும் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள்! அகில உலகத் தொழிலாளர்களின் வெல்லற்கரிய சகோதரத்துவம் எனும் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் நாம்! இந்த எண்ணம் நமது இதயங்களைப் பூரிக்கச் செய்கிறது. இதுதான் நியாயம் என்னும் சொர்க்க மண்டலத்தின் சூரியனாய்ச் சுடர்விடுகிறது. தொழிலாளியின் இதய பீடம்தான் அந்தச் சொர்க்க மண்டலம்! யாராயிருந்தாலும் சரி, எந்த இனத்தவனாயிருந்தாலும் சரி, ஒரு சோஷலிஸ்ட் எக்காலத்திலும் நமக்கு உண்மை உடன் பிறப்பு — நேற்று இன்று என்றுமேதான்.”

இந்தச் சிறு பிள்ளைத்தனமான, எனினும் உறுதி வாய்ந்த நம்பிக்கையே அவர்களிடம் நாளுக்கு நாள் உரம் பெற்று வந்தது; நாளுக்கு நாள் விம்மி வளர்ந்து, ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்து வந்தது. இதைக் கண்ட தாய், வானத்தில் தான் காணும் கதிரவனைப் போல. மகத்தான ஏதோ ஒன்று இவ்வுலகத்தில் பிறந்துவிட்டது என்று, தன்னையறியாமலே உணரத் தலைப்பட்டாள்.

அவர்கள் அடிக்கடி பாட்டுப்பாடினார்கள், உரத்த உற்சாகம் நிறைந்த குரலில் அநேகமாக எல்லாருக்குமே தெரிந்த வெகு சாதாரணமான பாடல்களைப் பாடினார்கள்; சமயங்களில் அவர்கள் புதிய பாடல்களை, கருத்தாழம் கொண்ட பாடல்களைப் பாடினார்கள். இனிமையான இங்கிதத்தோடும், அசாதாரணப் கீதசுகத்தோடும் பாடினார்கள். இந்தப் பாடல்களை அவர்கள் உரக்கப் பாடுவதில்லை, தேவாலய சங்கீதத்தைப் போலத் தாழ்ந்த குரலில் பாடினார்கள். அந்தப் பாடல்களைப் பாடும்போது, அவர்களது முகங்கள் கன்றிச் சிவக்கும்; வெளிறிட்டு வெளுக்கும், கணீரென ஒலிக்கும் அந்த மணி வார்த்தைகளில் ஒரு மகா சக்தி பிரதிபலிக்கும். முக்கியமாக, இந்தப் புதிய பாடல்களில் ஒன்று மட்டும் தாயின் உள்ளத்தை மிகவும் கவர்ந்து கிளறிவிட்டது. சந்தேகமும் நிச்சயமின்மையும் கொடிபோல் பின்னிப் பிணைந்து இருண்டு மண்டிக்கிடக்கும் ஒரு பாதையிலே, தன்னந்தனியாகத் தானே துணையாகச் செல்லும் ஒரு துயரப்பட்ட ஆத்மாவின் துன்ப மயமான வேதனைப் புலம்பல் அல்ல, அந்தப் பாடல் தேவையால் நசுக்கப்பட்டு பயத்தால் ஒடுக்கப்பட்டு. உருவமோ, நிறமோ இல்லாத அப்பாவி உள்ளங்களின் முறையீட்டையும் அந்தப் பாடல் பிரதிபலிக்கவில்லை. இருளிலே இடமும் வழியும் தெரியாமல் தட்டுத் தடுமாறும் சக்திகளின் சோக மூச்சுக்களையோ, —நன்மையாகட்டும், தீமையாகட்டும்-எதன் மீதும் கண்மூடித்தனமான அசுர வெறியோடு மோதிச் சாட முனையும் வீறாப்புக் குரல்களையோ அந்தப் பாடல் பிரதிபலிக்கவில்லை. எதையும் உருப்படியாய்க் கட்டிவளர்க்கத் திராணியற்ற, எல்லாவற்றையும் நாசமாக்கும் திறமை பெற்ற. அர்த்தமற்ற துன்பக் குரலையோ, பழிக்குப் பழி வாங்கும் வெறியுணர்ச்சியையோ அவர்கள் பாடவில்லை. சொல்லப்போனால், பழைய அடிமை உலகத்தின் எந்தவிதமான சாயையும் அந்தப் பாட்டில் இல்லவே இல்லை.

தாய்க்கு அந்தப் பாடலிலிருந்த கூரிய சொற்களும், கடுமையான ராக மூச்சும் பிடிக்கவில்லை. ஆனால், அந்த வார்த்தைகளையும் ராகத்தையும் அமுங்கடித்து, இதயத்தில் சிந்தனைக்கு வயப்படாத ஏதோ ஒரு உணர்ச்சியை மேலோங்கச் செய்யும் ஒரு இனந்தெரியாத மகா சக்தியை அவள் அந்த இளைஞர்களின் கண்களிலும் முகங்களிலும் கண்டாள்; அவர்களது இதயங்களில் அது வாழ்ந்து வருவதாக உணர்ந்தாள். எந்தவிதச் சொல்லுக்கும் ராக சுகத்துக்கும் கட்டுப்படாத இந்த ஏதோ ஒன்றுக்கு எப்பொழுதும் தனிக் கவனத்துடன் தான் கேட்ட அந்தப் பாடல், மற்றப் பாடல்களைவிட ஆழமான உணர்ச்சிப் பெருக்கை அவளுக்கு ஊட்டியது...

அவர்கள் அந்தப் பாடலை மற்றவற்றைவிட மெதுவான குரலில்தான் பாடினார்கள், என்றாலும், அவர்கள் பாடிய முறைதான் வலிமை மிக்கதாகத் தோன்றியது. மார்ச் மாதத்தின் நிர்மலமான நாளொன்றைப்போல், வசந்த காலத்தின் வரவை அறிவிக்கும் ஒரு தினத்தைப்போல், அந்தப் பாடல் எல்லாரையும் தன் வசப்படுத்தி இழுத்தது.

“இந்தப் பாடலைத் தெருக்களின் வழியே நாம் பாடிச் செல்வதற்குரிய காலம் வந்துவிட்டது!” என்று நிகலாய் வெஸோவ்ஷிகோவ் உணர்ச்சியற்றுச் சொல்லுவான். சமீபத்தில் செய்த ஒரு திருட்டுக் குற்றத்திற்காக, அவனது தந்தை தனீலோ சிறைத் தண்டனை பெற்றுச் சென்றபோது, நிகலாய் தன் தோழர்களைப் பார்த்துச் சொன்னான்,

“இனிமேல் நாம் எங்கள் வீட்டிலேயே கூடலாம்.”

ஒவ்வொரு நாள் மாலையிலும், பாவெல் வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும்போது அவனுடன் யாராவது ஒரு நண்பனும் கூட வந்து சேருவான். அவர்கள் உட்கார்ந்து படிப்பார்கள், குறிப்பு எடுப்பார்கள்; அவர்களுக்குள்ள அவசரத்தில் முகம், கை கழுவிக்கொள்ள மறந்துபோய் விடுவார்கள். சாப்பிடும்போதும், தேநீர் அருந்தும்போதும் அவர்களது கையிலே புத்தகங்கள் இருக்கும்; அவர்கள் எதைப்பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிவது தாய்க்கு வரவரச் சிரமமாகிக்கொண்டிருந்தது.

“நாம் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கத்தான் வேண்டும்” என்று பாவெல் அடிக்கடி சொல்வான்.

வாழ்க்கை வெகு வேகமாக, ஜுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தது. அவர்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் சீக்கிரமே படித்து முடித்து மறு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார்கள். மலர் மலராய்ச்சென்று வண்டு தேனுண்ணுவதைப்போல், அவர்கள் விரைந்து விரைந்து புத்தகம் புத்தகமாகப் படித்துக்கொண்டிருந்தார்கள்.

“அவர்கள் நம்மைப்பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்கள்; நம்மீது சீக்கிரமே வலை வீசப் போகிறார்கள்!” என்று சொன்னான் நிகலாய் வெஸோவ்ஷிகோவ் . “வலையில் விழுவதுதானே குருவிக்குத் தலைவிதி” என்றான் ஹஹோல்.

தாய்க்கு அந்த ஹஹோலின் மீது நாளுக்கு நாள் வாஞ்சை அதிகரித்தது. அவன் ‘அம்மா’ என்று அருமையாக அழைக்கும்போது, ஒரு பச்சிளங்குழந்தை தன் மென்மையான பிஞ்சுக்கரத்தால், அவளது கன்னத்தை வருடிக்கொடுப்பது போன்ற சுகம் தாய்க்குத் தட்டுப்பட்டது. பாவெலுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று வேறு வேலைகளிருந்தால், ஹஹோல் அவளுக்கு விறகு தறித்துக் கொடுப்பான். ஒரு நாள் அவன் ஒரு பலகையைச் சுமந்துகொண்டு வந்து போட்டு, கோடரியால் அதைச் செதுக்கினான்; உளுத்து உபயோகமற்றுப் போன வாசற்படியை அகற்றிவிட்டு, அந்தப் பலகையால் வெகு சீக்கிரத்தில் லாவகமாய் ஒரு வாசற்படி செய்து போட்டுவிட்டான். ஒரு தடவை வீட்டின் வேலியை வெகு திறமையோடு பழுது பார்த்துச் சீராக்கினான். அவன் வேலை செய்யும்போதெல்லாம் ஏதோ ஒரு சோக மயமான, இனிய கீதத்தைச் சீட்டியடித்துக்கொண்டிருந்தான்,

“ஹஹோல் இங்கேயே வழக்கமாய்ச் சாப்பிடட்டுமே!” என்று ஒரு நாள் தன் மகனிடம் சொன்னாள் தாய்; “அது உங்கள் இரண்டு பேருக்குமே நல்லது. நீங்கள் இருவரும் ஒருவரைத் தேடி ஒருவர் ஓடிக்கொண்டிருக்க வேண்டாம் அல்லவா?”

“உங்களுக்கு அனாவசியத் தொல்லை எதற்காக?” என்று தோளைக் குலுக்கிக்கொண்டே சொன்னான் பாவெல்.

“அபத்தம்” ஏதோ ஒரு வகையில் ஆயுள் பூராவும் தொல்லையாய்த்தானே இருக்கிறது. அவனைப் போன்ற நல்ல மனிதனுக்காக தொல்லைப்படலாம்!” என்றாள் தாய்.

“சரி, உன் இஷ்டம். அவன் இங்கு வந்தால் எனக்குச் சந்தோஷம்தான்!” என்றான் மகன்.

ஹஹோல் வந்து சேர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/7&oldid=1293035" இலிருந்து மீள்விக்கப்பட்டது