தாய்/6
தேநீர் தயாராகி விட்டது. அதை எடுத்துக்கொண்டு தாய் அந்த அறைக்குள் நுழைந்தாள், விருந்தாளிகள் அனைவரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். நதாஷா ஒரு மூலையில் விளக்கடியில் ஒரு புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தாள்.
“மனிதர்கள் ஏன் இப்படி மோசமாக வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்...” என்று ஆரம்பித்தாள்.
“ஏன், அவர்களே மோசமானவர்களாக இருக்கிறார்கள்...” என்று குறுக்கிட்டான் அந்த ஹஹோல். ”...அதற்கு, வாழ்க்கையை அவர்கள் எப்படித் தொடங்கினார்கள் என்று பார்க்க வேண்டும்...”
“நன்றாய்ப் பாருங்கள். கண்மணிகளே, நன்றாய்ப் பாருங்கள்” என்று தேநீர் தயாரித்தபடி சொன்னாள் தாய்.
எல்லோரும் மௌனமானார்கள்.
“நீ என்ன சொல்கிறாய் அம்மா!” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே கேட்டான் பாவெல்.
“என்னவா?” அவள் ஒரு பார்வை பார்த்தாள். எல்லோரும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். “என்னவோ நான் எனக்குள் பேசிக்கொண்டேன்”. என்று குழறினாள் அவள்: “நீங்கள் நன்றாய்ப் பாருங்கள் என்று சொன்னேன்”.
நதாஷா சிரித்தாள். பாவெல் உள்ளுக்குள் கிளுகிளுத்தான்.
“தேநீருக்கு நன்றி, அம்மா!” என்றான் ஹஹோல்.
“தேநீரைக் குடித்துவிட்டு நன்றி சொல்லுங்கள்” என்றாள் அவள்.பிறகு தன் மகனை லேசாகப் பார்த்துவிட்டு, “நான் உங்களுக்கு இடைஞ்சலாக நிற்கிறேனா?’ என்று கேட்டாள்.
“விருந்து கொடுக்கிற நீங்கள் விருந்தாளிகளான எங்களுக்கு எப்படி இடைஞ்சலாக இருக்க முடியும்?” என்று பதிலளித்தாள் நதாஷா “எனக்குக் கொஞ்சம் தேநீர் கொடுங்கள். உடலெல்லாம் ஒரேயடியாக நடுங்குகிறது; கால்கள் ஐஸ் போலவே! குளிர்ந்துவிட்டன” என்று ஒரு குழந்தையைப் போலப் பரிதாபமாகக் கேட்டாள் அவள்.
“இதோ. இதோ” என்று அவசர அவசரமாகக் கத்தினாள் தாய்.
நதாஷா தேநீரைப் பருகிய பின்னர், உரக்க பெருமூச்சுவிட்டாள்; அவளது சடையைத் தோள் மீது இழுத்துப் போட்டுக்கொண்டு, தன் கையிலிருந்த மஞ்சள் அட்டை போட்ட படங்கள் நிறைந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள், நேநீரை ஊற்றும் போதும். பாத்திரங்களை அகற்றும் போதும் சத்தமே உண்டாகாதபடி. பதனமாகப் பரிமாறிக் கொண்டிருந்த தாய், நதாஷா வாசிப்பதையும் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளது மணிக்குரல், கொதிக்கும் நேநீர்ப் பாத்திரத்தின் ஆவி இரைச்சலின் மங்கிய ரீங்காரத்தோடு இணைந்து முயங்கி ஒலித்தது: ஒரு காலத்தில் குகைகளில் வாழ்ந்து, கற்களைக் கொண்டு வேட்டையாடிய காட்டுமனிதர்களைப் பற்றிய அழகான கதைகள் சங்கிலித் தொடர்போலப் பிறந்து கட்டுலைந்து விரிந்து, அந்த அறை முழுவதும் நிரம்பி ஒலி செய்ய ஆரம்பித்தன. இந்தக் கதைகளெல்லாம் தாய்க்குப் பாட்டி கதையைப் போல் இருந்தன. அவள் தன் மகனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த மாதிரி விஷயங்களைத் தெரிந்துகொள்வதை அவர்கள் ஏன் தடை செய்யவேண்டும் என்பதைக் கேட்டு விடவேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனால் நதாஷா வாசிப்பதை கேட்பதில் தாய்க்கு விரைவில் அலுப்புத் தட்டிவிட்டது. எனவே வந்திருந்த விருந்தாளிகளை. அவர்களோ அல்லது தன் மகனோ அறிந்து கொள்ள முடியாதபடி. கூர்ந்து நோக்கி ஒவ்வொருவரையும் அளந்து பார்த்துத் தனக்குத்தானே மதிப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
பாவெல் நதாஷாவுக்கு அருகில் அமர்ந்திருந்தான்;
அங்கிருந்தவர்களுக்குள் அவனே அழகானவன். நதாஷா குனிந்து
வாசித்துக்கொண்டிருந்ததால், அடிக்கடி முன்புறமாக வந்து விழும்
தலைமயிரை ஒதுக்கிவிட்டுக்கொண்டிருந்தாள். படிப்பதை நிறுத்திவிட்டு தலையை ஆட்டி. குரலைத் தாழ்த்தி, படித்த விஷயத்தைப்பற்றிய தனது அபிப்பிராயத்தையோ விமர்சனத்தையோ தனக்கு எதிராக இருப்பவர்களை அன்புடன் நோக்கி அவள் சொன்னாள். அந்த ஹஹோல் தனது மார்பை மேஜை விளிம்பின் மீது சாய்த்துக்கொண்டு ஒரக்கண்னால் தான் திருகிவிட்டுக்கொள்ளும் மீசை முனைகளைப் பார்க்க முயன்று கொண்டிருந்தான். நிகலாய் விஸோவ்ஷிகோவ் நாற்காலியின் கம்பு மாதிரி விறைப்பாக நிமிர்ந்த கைகளால் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். மெலிந்த உதடுகள் கொண்ட அவனது அம்மைத் தழும்பு முகம், புருவமின்றி எந்தவித உணர்ச்சி பாவமும் இல்லாமல் ஒரு பொம்மையின் முகத்தைப் போலவே இருந்தது. பித்தளைத் தேநீர்ப் பாத்திரத்தில் தெரியும் தனது முகத்தின் பிரதி பிம்பத்தையே அவன் தன் குறுகிய கண்கள் இமைக்காமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மூச்சு விடுகிறானா இல்லையா என்பதே சந்தேகமாயிருந்தது. சின்னவனான பியோதர் படிப்பதைக் கேட்கும்போது தன் உதடுகளைச் சப்தமற்று அசைத்துக்கொண்டிருந்தான்: புத்தகத்தின் வார்த்தைகளைத் தனக்குத்தானே திரும்பச் சொல்லிக் கொள்வது போலிருந்தது அந்த உதடுகளின் அசைவு. அவனது அடுத்த நண்பன் ஒரேயடியாக் குனிந்து குறுகி, முழங்காவின் மீது - முழங்கையை ஊன்றி, முகத்தை உள்ளங்கைகளில் தாங்கி சிந்தனை வயப்பட்ட சிறு புன்னகையோடு அமர்ந்திருந்தான். பாலெலுடன் வந்த இளைஞர்களில் ஒருவனுக்கு
சுருள் சுருளான செம்பட்டை மயிரும், களி துள்ளும் பசிய கண்களும் இருந்தன, நிலைகொள்ளாமல் அமைதியற்று தெரிந்துகொடுத்துக் கொண்டிருந்த அவன் எதையோ சொல்ல விரும்புவதுபோலத் தோன்றியது. இன்னொருவனுக்கு வெளுத்த தலைமயிர்; நன்றாக ஒட்ட வெட்டிவிடப்பட்ட கிராப். அவன் தன் தலையைக் கையினால் தடவிக் கொடுத்துக்கொண்டு தரையையே பார்த்துக்கொண்டிருந்தான். எனவே அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. அந்த அறையில் ஏதோ ஒரு
புதிய மங்களகரமான சூழ்நிலை குடிபுகுந்த மாதிரி இருந்தது. தாயின் உள்ளத்தில் இதுவரை தோன்றாத ஏதோ ஒரு அசாதாரா உணர்ச்சி மேலோங்கியது. நதாஷாவின் இனிய குரலின் பின்னணி இசையிலே, அவள் தனது குமரிப் பருவத்துக் கும்மாளங்களை, ஆபாச சல்லாபப் பேச்சுக்களை, வாயில் எப்போதும் ஒட்கா நாற்றம் அடித்துக் கொண்டிருக்கும் வாலிபப் பிள்ளைகளின் வம்புத்தனமான கேலிப் பேச்சுக்களையெல்லாம் சிந்தித்துப் பார்த்தாள். அந்த நினைவுகளால் அவளது இதயம் தனக்குத்தானே அனுதாபப்பட்டுக்கொண்டது.
தன் கணவனுக்குத் தான் எப்படி மனைவியானாள் என்ற விஷயத்தையும் அவள் சிந்தித்துப் பார்த்தாள். அந்தக் காலத்தில், இப்படிப்பட்ட கேளிக்கை விருந்தின்போது, ஒருநாள் இரவில். அவளை ஒரு இருளடைந்த வாசற்புறத்தில் அவன் வழிமறித்துப் பிடித்தான்; அவளது உடம்பைச் சுவரோடு சாய்த்து அழுத்தினான்.
“என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா!” என்று முரட்டுத்தனமாகக் கேட்டான். அப்போது அவளது மனம் புண்பட்டு நொந்தது. எனினும் அவன் அவளது மார்பகத்தை வேதனை தரும் விதமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு. ஆவி கலந்து வீசும் அவனது உஷ்ண சுவாசத்தை அவளது முகத்தின்மீது பிரயோகித்தான். அவனது பிடியிலிருந்து தப்புவதற்காக அவள் முரண்டு திமிறி ஒரு பக்கமாக ஒடப் பார்த்தாள்.
“எங்கே போகணும்!” என்று இரைந்தான் அவன். “பதில்– சொல்லு உன்னைத்தான்!”
அவள் எதுவுமே சொல்லவில்லை. தான் அடைந்த துன்பத்தாலும்
அவமானத்தாலும் அவளது மூச்சே திணறிப் போய்விட்டது.
யாரோ கதவைத் திறந்து கொண்டு வாசல் பக்கமாக வந்தார்கள்: மெதுவாக அவன் தன் உடும்புப்பிடியை நெகிழவிட்டான்.
“ஞாயிற்றுக்கிழமையன்று கல்யாணப் பேச்சுக்கு அம்மாவை அனுப்பி வைப்பேன், ஆமாம்!” என்றான் அவன்.
அவன் சொன்னபடியே செய்துவிட்டான்.
தாய் தன் கண்களை மூடி நெடுமூச்செறிந்தாள்.
“மக்கள்: எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நான் அறியவிரும்பவில்லை. மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையே அறியவிரும்புகிறேன்” என்று எதிர்வாதம் பேசும் குரலில் சொன்னான் நிகலாய். “அதுதான் சரி” என்று கூறிக்கொண்டே எழுந்தான் அந்தச் செம்பட்டைத் தலையன்.
“நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்ளவில்லை” என்று கத்தினான் பியோதர்.
வாக்குவாதம் பலத்தது. வார்த்தைகள் தீப் பிழம்புகள் போலச் சுழலத் தொடங்கின. அவர்கள் எதைப்பற்றி இப்படிச் சத்தம் போட்டுக் கொள்கிறார்கள் என்பது தாய்க்குத் தெரியவில்லை, எல்லோருடைய முகங்களும் உத்வேக உணர்ச்சியினால் ரத்தம் பாய்ந்து சிவந்து போயிருந்தன. எனினும் எவரும் நிதானம் இழக்கவில்லை. அவளுக்குக் கேட்டுப் பழக்கப்பட்டுப் போயிருந்த எந்த ஆபாச ஏச்சுப் பேச்சுக்களையும் அவர்கள் பிரயோகிக்கவில்லை.
“இந்தப் பெண்ணின் முன்னிலையில் அப்படிப் பேசுவதற்கு அவர்கள் வெட்கப்படுகிறார்கள்” என்று தீர்மானித்துக் கொண்டாள் தாய்.
நதாஷாவின் முகத்தில் தோன்றிய உக்கிரபாவத்தைக் காண்பது தாய்க்குப் பிடித்திருந்தது. நதாஷாவோ அவர்கள் அனைவரையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள், இவர்கள் அனைவருமே இன்னும் குழந்தைகள்தான் என்று கருதிப் பார்ப்பது போலிருந்தது அந்தப் பார்வை.
“ஒரு நிமிஷம் பொறுங்கள், தோழர்களே!” என்று அவள் திடீரென்று கத்தினாள். உடனே எல்லோரும் வாய் மூடி மெளனமாக அவளையே பார்த்தனர்.
“நாம் சகல விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்
என்பதை உங்களில் யார் ஒப்புக்கொள்கிறார்களோ, அவர்கள்
சொல்வதே சரியானது. நம்மிடமுள்ள பகுத்தறிவின் ஒளியை நன்றாகத் தூண்டிவிட்டுக்கொள்ளவேண்டும். கீழ்ப்பட்டவர்கள் நம்மை நன்றாகப் பார்க்கட்டும். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நம்மிடத்தில் நேர்மையான, உண்மையான தீர்ப்பும் தீர்மானமும் இருந்தேயாக வேண்டும். நாம் உண்மையை, பொய்யை முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.
ஹஹோல் அவள் கூறியதைக் கேட்டு அவளது பேச்சுக்குத்
தக்கபடி தலையை ஆட்டிக்கொண்டிருந்தான். நிகலாயும், செம்பட்டைத் தலையனும், பாவெலுடன் வந்த இன்னொரு பையனும் ஒரு தனிக் கோஷ்டியாகப் பிரிந்து நின்றார்கள், என்ன காரணத்தாலோ தாய்க்கு அந்தக் கோஷ்டியினரைப் பிடிக்கவில்லை.
நதாஷா பேசி முடித்த பிறகு, பாவெல் எழுந்து நின்றான். "நமக்கு வயிறு மட்டும் நிரம்பினால் போதுமா? இல்லை அதுமட்டும் இல்லை!” என்று அந்த மூவரையும் நோக்கி அமைதியாகச் சொன்னான். “நமது முதுகிலே குதிரையேறிக்கொண்டிருப்பவர்களுக்கு நமது கண்களைத் திரையிட்டு மூடிக் கட்டிவிட்டவர்களுக்கு, நாம் எல்லாவற்றையும் பார்க்கவே செய்கிறோம் என்பதை எடுத்துக் காட்டத்தான் வேண்டும். நாம் முட்டாள்கள் அல்ல; நாம் மிருகங்கள் அல்ல-வயிற்றை நிரப்புவதோடு திருப்தி அடைந்துவிடுவதற்காக மட்டுமல்லாமல் கெளரவமுள்ள மனிதர்களாக வாழ விரும்புகிறோம். நம்மை நரக வாழ்வுக்கு உட்படுத்தி நம்மை ஏய்த்து வாழ்ந்து கொண்டிருக்கும், நம்மைவிடச் சிறந்த அறிவாளிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்ளும் நமது எதிரிகளுக்கு நாம் அவர்களுக்குச் சமதையான அறிவாளிகள், ஏன் அவர்களை விடச் சிறந்த அறிவாளிகள் என்பதைக் காட்டித்தானாக வேண்டும்.
அவன் பேச்சைக் கேட்டுத் தாயின் உள்ளத்தில் ஒரு பெருமை உணர்ச்சி உள்ளோட்டமாக ஓடிச் சிலிர்த்தது. “அவன் எவ்வளவு அழகாகப் பேசினான்!”
“போதுமான அளவுக்குச் சாப்பிடுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால் சிலர்தான் நேர்மையானவர்கள்!” என்றான். அந்த ஹஹோல் “முடைநாற்றமெடுத்து நாறும் இன்றையக் கேவல வாழ்வுக்கும், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மனித குலத்தின் சகோதரத்துவ சாம்ராஜ்யத்துக்கும் இடையே நாம் ஒரு பாலம் கட்டியாக வேண்டும். தோழர்களே! அதுதான் இன்று நம்முன் நிற்கும் வேலை!”.
“போராடுவதற்குரிய காலம் வந்துவிட்டதென்றால், ஏன் கையைக் கட்டிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்று கரகரத்த குரலில் ஆட்சேபித்தான் நிகலாய்.
நடு இரவுக்குப்பிறகுதான் அந்தக் கூட்டம் கலைந்தது. கலையும்
போது நிகலாயும் செம்பட்டைத் தலையனும்தான் முதலில்
வெளியேறினர். இதைக் கண்டதும் தாய்க்கு அவர்களைப்
பிடிக்கவில்லை.
அவர்களை அவள் வணங்கி வழியனுப்பும்போது உங்களுக்கு ஏன் இத்தனை அவசரமோ?” என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டாள்.
“நஹோத்கா! என்னை வீடுவரை கொண்டுவந்து விடுகிறீர்களா?” என்று கேட்டாள் நதாஷா.
“கண்டிப்பாய்” என்று பதிலளித்தான் ஹஹோல்.
நதாஷா தனது மேலுடையணிகளைச் சமையலறையில் அணிந்து கொள்ளும்போது, தாய் அவளைப் பார்த்துக் கேட்டாள்; “உங்கள் காலுறைகள் இந்தக் குளிருக்கு மிகவும் மெல்லியவை. நான் வேண்டுமானால் உங்களுக்கு கம்பளி உறை தரட்டுமா?”
“நன்றி, பெலகேயா நிலவ்னா. ஆனால், கம்பளி உறை காலெல்லாம் குத்துமே!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் நதாஷா.
“காலில் குத்தாத கம்பளி உறை நான் தருகிறேன்” என்றாள் தாய்.
நதாஷா ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தாள், அந்தப் பார்வை அந்த வயதான தாயை என்னவோ செய்தது: துன்புறுத்தியது.
“என் அசட்டுத்தனத்தை மன்னித்துவிடுங்கள். நான் இதயபூர்வமாகச் சொன்னேன்” என்று மெதுவாய்ச் சொன்னாள் தாய்.
“நீங்கள் எவ்வளவு அன்பாயிருக்கிறீர்கள்!” என்று அமைதியுடன் கூறிவிட்டு, தாயின் கரத்தைப் பற்றி கனிவோடு இறுகப்பிடித்து. விடைபெற முனைந்தாள் நதாஷா.
“போய்வருகிறேன், அம்மா!” என்று கூறிவிட்டு, அவளது கண்களையே பார்த்தான் ஹஹோல்; பிறகு அவன் வெளியே சென்ற நதாஷாவுக்குப் பின்னால் வாசல் நடையில் குனிந்து சென்றான்.
தாய் தன் மகனை நோக்கினாள்; அவன் வாசல் நடையருகே புன்னகை புரிந்தவாறே நின்றுகொண்டிருந்தான். “நீ எதைப் பார்த்துச் சிரிக்கிறாய்?” என்று அவள் குழப்பத்துடன் கேட்டாள்.
“சும்மாதான். குஷி பிறந்தது. சிரித்தேன்”
“நான் கிழவியாயிருக்கலாம்: முட்டாளாயிருக்கலாம்; இருந்தாலும் எனக்கும் நல்லதைப் புரிந்துக்கொள்ளமுடியும்” என்று லேசான மனத்தாங்கலுடன் சொன்னாள் அவள்.
“ரொம்ப நல்லது! நேரமாகிவிட்டது, படுத்துக் கொள்ளுங்களேன்!” என்றான் அவன்.
“படுக்கத்தான் போகிறேன்”
அவள் மேஜையிலிருந்த பாத்திர பண்டங்களை அகற்றுவதில் பெரும் பரபரப்புக் காட்டிக்கொண்டாள். அதில் அவளுக்கு ஒரு ஆனந்தம். அந்தப் பரபரப்பில் அவளுக்கு மேலெல்லாம் வியர்த்துக்கூடக் கொட்டிவிட்டது. அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிமையோடு நடந்தேறி, அமைதியோடு முற்றுப் பெற்றதை எண்ணி அவள் சந்தோஷப்பட்டுக்கொண்டாள்.
“பாஷா. நல்லா யோசனை பண்ணித்தான் எல்லாம் செய்திருக்கிறாய்!’ என்று சொன்னாள் அவள். “அந்த ஹஹோல் ரொம்ப நல்லவன், அந்தப் பெண்—அம்மாடி!’ அவள் எவ்வளவு கெட்டிக்காரியாயிருக்கிறாள்! அவள் யார்?" "ஒரு ஆசிரியை! என்று சுருக்கமாகக் கூறிவிட்டு மேலும் கீழும் நடந்தான் பாவெல்.
“அவள் மிகவும் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். மோசமாகத்தான் உடை உடுத்தியிருந்தாள். அவளுக்கு லகுவில் சளிப்பிடித்துவிடும். அவளது பெற்றோர்கள் எங்கே?”
“மாஸ்கோவில்!” என்று பதில் கூறிவிட்டு, அவன் தன் தாயருகே வந்து நின்று மென்மையாக, உறுதி தோய்ந்த குரலில் சொன்னான்: “அவளது தந்தை ஒரு பணக்காரர். அவர் இரும்பு வியாபாரி. அவருக்குச் சொந்தத்தில் நிறையக் கட்டிடங்கள் உண்டு. ஆனால் அவள் தன் வாழ்க்கையில் இந்த வழியைத் தேர்ந்தெடுத்ததால், அவளை வெளியேற்றிவிட்டார் அவர். அவள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவள்; விரும்பியதெல்லாம் கிட்டக்கூடிய வாழ்க்கைதான் வாழ்ந்தாள்; ஆனால் இன்றோ அவள் இந்த இரவில், ஏழு கிலோ மீட்டர் நடந்து செல்கிறாள்...”
இந்தச் செய்தியைக் கேட்டு தாய் திக்பிரமையடைந்தாள்: அறையின் மத்தியில் நின்றுகொண்டு புருவத்தை உயர்த்தித் தன் மகனைப் பார்த்தாள், பிறகு அமைதியாகக் கேட்டாள்.
“அவள் நகருக்கா போகிறாள்?”
“ஆமாம்.”
“ச்சூ! ச்சூ! பயமில்லையா அவளுக்கு?”
“ஊஹும். அதெல்லாம் பயப்பட மாட்டாள்” என்று கூறிச் சிரித்தான் பாவெல்.
“ஆனால்... ஏன் போகணும்? இன்றிரவு இங்கு தங்கியிருக்கலாமே. என்னோடு படுத்துக்கொண்டிருக்கலாமே!”
“அது சரியல்ல. காலையில் அவளை இங்கு யாரும் பார்த்துவிடக் கூடாது. அதனால் சிக்கல் வரும்.”
அவனது தாய் ஜன்னலுக்கு வெளியே ஒரு சிந்தனையுடன் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
“இதிலெல்லாம் என்ன ஆபத்து இருக்கிறது. என்ன சட்ட விரோதம் இருக்கிறது என்பது ஒன்றுமே எனக்குப் புரியவில்லை, பாவெல்! நீங்கள் தப்பாக ஒன்றும் செய்யவில்லை, இல்லை.... செய்கிறீர்களா?” என்று அமைதி நிறைந்த குரலில் கேட்டாள்.
அதைப்பற்றி அவ்வளவு தீர்மானமாக அவளால் சொல்லமுடியவில்லை; எனவே தன் மகனின் தீர்ப்பை எதிர்பார்த்தாள். "நாங்கள் தப்பாக எதுவுமே செய்யமாட்டோம்”. என்று அவளது கண்களை அசையாமல் பார்த்தவாறு உறுதியாகச் சொன்னான் பாவெல். “ஆனால் நாங்கள் அனைவரும் என்றோ ஒரு நாள் சிறைக்குத்தான் போவோம். நீயும் இதைத் தெரிந்து வைத்துக்கொள்.”
அவளது கைகள் நடுங்க ஆரம்பித்தன.
“ஆண்டவன் அருள் இருந்தால், நீங்கள் எப்படியாவது தப்பித்து விடுவீர்கள் இல்லையா?” என்று அமுங்கிப்போன குரலில் கேட்டாள்.
“முடியாது’ என்று மெதுவாகச் சொன்னான் அவன்.
“நான் உன்னை ஏமாற்ற விரும்பவில்லை. தப்பிக்கவே முடியாது!.”
அவன் புன்னகை செய்தான்.
“சரி, நீ மிகவும் களைத்திருக்கிறாய். போ. படுக்கப்போ. நல்லிரவு’
பாவெல் சென்ற பிறகு தன்னந்தனியாக நின்ற தாய் ஜன்னலருகே சென்று வெளியே பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தாள். ஜன்னலுக்கு லெளியே மூட்டமாய்க் குளிராய் இருந்தது. தூங்கி வழிந்து கொண்டிருந்த வீட்டுக் கூரைகளின் மீது படர்ந்துள்ள பனித் துகள்களை ஒரு காற்று விசிறியடித்து வீசியது; அந்த ஊதைக் காற்று சுவர்களில் மோதியறைந்தது, தரையை நோக்கி வீசும்போது கோபாவேசமாய் ஊளையிட்டது; சிதறிக்கிடக்கும் பனிப்படலங்களை தெருவழியே விரட்டியடித்துக்கொண்டு பின் தொடர்ந்தது.
“கருணைபுள்ள கிறிஸ்து பெருமானே, எங்களைக் காப்பாற்று’ என்று அவள் லேசாக முனகிக்கொண்டாள்.
அவளது கண்களில் கண்ணீர்ப் பொங்கியது. தனக்கு வரப்போகும்.. கெடுதியைப் பற்றி அமைதி நிறைந்த தன்னம்பிக்கையோடு சொன்ன பாவெலின் எதிர்காலத்தைப்பற்றிய எண்ணம் இருளிலே. குருட்டுத்தனமாய்ப் பறந்து மோதி விழும் பூச்சியைப்போல, அவளது இயத்துக்குள் குறுகுறுத்தது. அவளது கண் முன்னால் பெரியதொரு பனிவெளி பரந்து கிடப்பதுபோலவும், அந்தப் பனிவெளியில் ஒரு பேய்க்காற்று வேகமாக வீசிச் சுழன்று ஊடுருவிப் பாய்ந்து. கீச்சுக் குரலில் கூச்சலிடுவது போலவும் தோன்றியது. அந்தப் பனிவெளியின் மத்தியிலே ஒரு இளம் பெண்ணின் சிறிய நிழலுருவம் ஆட்டங்கண்டு தடுமாறிக்கொண்டிருந்தது. அந்தச் சுழல்காற்று அவளது பாதங்களின் மீது சுழன்று வீசி, அவளது ஆடையணிகளைப் புடைத்துயரச் செய்தது; ஊசிபோல் குத்தும் பனித்துகள்களை அவளது முகத்தில் வீசியெறிந்தது. அவள் சிரமத்தோடு முன்னேறினாள்: அவளது பாதங்கள் பனிப்பாதையில் சறுக்கி மூழ்கின; ஒரே குளிர்; அதிபயங்கரம். இலையுதிர் காலத்துக் காற்றில் குனிந்து கொடுக்கும் தன்னந்தனியாக ஒரு புல்லிதழைப்போல, அவளது உடம்பு முன் நோக்கி வளைந்து குனிந்திருந்தது. அவளுக்கு வலது புறத்தில் சதுப்பு நிலத்திற்கிளைத்தெழுந்த ஒரு ஆரண்யம் நிமிர்ந்து நின்றது. அந்தக் காட்டில் உள்ள நெட்டையான பிர்ச் மரங்களும், மூளியான அஸ்பென் மரங்களும் அபாயக் குரலில் குசுகுசுத்தன. அதற்கும் மேலாக, நகர்ப்புறத்து விளக்குகளில் ஒளி மூட்டம் பளபளத்தது..........
“ரட்சகரே! எம்மீது இரக்கம் காட்டும்’ என்று பயத்தால் நடுங்கிக்கொண்டு முணுமுணுத்தாள் அந்தத் தாய்...