உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்/2

விக்கிமூலம் இலிருந்து

2

இப்படித்தான் மிகயீல் விலாசவ் என்பவனும் வாழ்ந்தான். அடர்ந்த புருவங்களுக்குக் கீழே அவனது சிறு கண்கள் வெறுப்புக் கலந்த சந்தேகத்துடன் பார்க்கும். அவன் ஒரு மந்தமான, உடல் முழுதும் ரோமம் அடர்ந்த தொழிலாளி. தொழிற்சாலையில் அவன்தான் சிறந்த தொழிலாளி. தொழிலாளர்களில் அவனே சிறந்த பலசாலி. ஆனால் அவன் தன் மேலதிகாரிகளோடு அடிக்கடி முறைத்துக்கொள்வான்; எனவே அவனால் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை. ஒவ்வொரு பண்டிகை நாளிலும் அவன் யாரையாவது நன்றாக அடித்து வெளுத்து வாங்கிவிடுவான். எனவே அவனை யாருக்கும் பிடிப்பதில்லை எல்லோரும் அவனைக் கண்டு பயந்தார்கள். அவனை எப்படியாவது பதிலுக்குப் பதில் தாக்கிவிட வேண்டும் என்று எவரேனும் திட்டமிட்டாலும், நடைமுறையில் நிறைவேறுவதில்லை. தன்னை யாராவது தாக்க வருவதை விலாசவ் கண்டுவிட்டானானால், உடனே அவன் ஒரு பாறாங்கல்லையாவது, பலகையாவது, கம்பியையாவது கையில் தூக்கிக்கொண்டு தன் கால்களை அகட்டி ஊன்றி, தனது எதிரியை அமைதியுடன் எதிர்பார்த்து நிற்பான். அவனது மயிரடர்ந்த கரங்களையும் கண்ணிலிருந்து கழுத்துவரையிலும் காடாய் அடர்ந்து வளர்ந்து மண்டிய கரிய தாடியையும், கோபாவேசமான முகத்தையும் கண்டுவிட்டாலே போதும். யாரும் நடுநடுங்கிப் போவார்கள். ஆனால் ஜனங்கள் அவனது கண்களைக் கண்டுதான் அதிகம் பயந்தார்கள். ஏனெனில் அவை சிறியனவாகவும், உருக்குத் தமர் உளியைப் போல் துளைக்கும் கூர்மை பெற்றனவாகவும் இருந்தன. அந்தக் கண்களின் பார்வையைக் கண்டதுமே தாங்கள் எதோ ஒரு அசுர சக்தியின் முன்னால் இரக்கமோ பயமோ ஒரு சிறிதும் காட்டாது தம்மை எதிர்த்துத் தாக்கத் தயாராக இருக்கும் ஒரு மிருக வெறிக்கு முன்னால் அகப்பட்டுக் கொண்டதாகவே அவர்களுக்குத் தோன்றும்.

“சரி, இங்கிருந்து ஓடுங்கடா, கழிசடைகளே!” என்று அவன் முரட்டுக் குரலில் சொல்லுவான். அவனது முகத்தை மறைத்து அடர்ந்திருக்கும் தாடிக்கு ஊடாக அவனது மஞ்சள் பூத்த பற்கள் மின்னி மறையும். உடனே அந்த மனிதர்கள் கோழைத்தனமாக வாய்க்கு வந்தபடி வைது கொண்டே பின்வாங்கிவிடுவார்கள்.

“கழிசடைகளே!” என்று அவர்களுக்குப் பின்னே கத்துவான். அப்பொழுது அவனது கண்கள் ஏளன பாவத்தோடு குத்தூசியைப்போல் கூர்ந்து நோக்கும். பிறகு அவன் தன் தலையை நிமிர்ந்து நடந்தவாறே, அவர்களைத் தொடர்ந்து சென்று உரத்துச் சத்தம் போடுவான்.

“சரி, எவனடா சாக விரும்புகிறவன்?”

எவனுமே சாக விரும்புவதில்லை, அவன் அதிகமாகப் பேசமாட்டான்; ‘கழிசடை’ என்பது அவனது பிரியமான வாசகம் அவன் போலீசாரையும் தொழிற்சாலை அதிகாரிகளையும் தன் மனைவியையும் இந்த வார்த்தையால்தான் அழைப்பான்.

“இங்கே பார், என் கால்சராய் கிழிந்து போயிருப்பதைப் பார்க்கவில்லையாடி, கழிசடையே!”

ஒரு முறை பதினாலு வயதுச் சிறுவனான தன் மகன் பாவெலின் தலைமயிரைப் பற்றி இழுத்து. உதைக்கப்போனான்; ஆனால், அந்தப் பையனோ உடனே ஒரு பெரிய சுத்தியலைக் கையில் தூக்கிக்கொண்டு, கடூரமாகச் சொன்னான்.

“விடு என்னை, தொடாதே!”

“என்னது?” என்று கேட்டுக்கொண்டே அவனது தந்தை நெட்டையாகவும் ஒல்லியாகவுமிருந்த தன் மகனின் உருவத்தை நோக்கி, மரத்தை நோக்கிச் செல்லும் நிழலைப் போல முன்னேற முனைந்தான்.

“நான் பட்டபாடு போதும். இனிப் படமாட்டேன்!” என்று கூறிக்கொண்டே சுத்தியலை உயர்த்தினான் பாவெல்.,

தந்தை அவனை ஒரு முறை பார்த்தான். பிறகு தனது மயிரடர்ந்த கரங்களை முதுகுக்குப்பின் கோர்த்துக் கொண்டான்.

“ரொம்ப சரி!” என்று சிறு சிரிப்புடன் சொன்னான். பிறகு ஒரு பெரு மூச்சுவிட்டுவிட்டு: “கழிசடைப் பயலே, ரொம்ப சரி!” என்றான்.

இதற்குப் பின் தன் மனைவியிடம் சொன்னான்.

“இனிமேல் நீ என்னைப் பணம் கேட்காதே. இன்று முதல் பாவெலே உன்னைக் காப்பாற்றுவான்!”

“ நீ கிடைக்கிற கூலியையெல்லாம் குடித்துத் தீர்த்துவிடப் போகிறாயா?” என்று துணிந்து கேட்டாள் அவள்.

“ஏ, கழிசடையே! அது ஒன்றும் உன் வேலையல்ல, வேண்டுமென்றால் நான் வைப்பாட்டிகூட வைத்துக் கொள்வேன்...!”.

அவன் வைப்பாட்டி வைத்துக் கொள்ளாவிட்டாலும் அன்று முதற்கொண்டு, இரண்டு வருஷம் கழித்து அவன் செத்துப் போன காலம்வரை தன் மகனை மதிக்கவுமில்லை. அவனோடு பேசவுமில்லை.

அவனிடம் அவனைப்போலவே பூதாகாரமாகவும் மயிர் அடர்ந்ததாகவுமுள்ள ஒரு நாயும் இருந்தது. அந்த நாய் ஒவ்வொரு நாள் காலையிலும் அவனைத் தொடர்ந்து தொழிற்சாலை வரையிலும் செல்லும்; மாலையில் அவனது வருகைக்காகத் தொழிற்சாலை வாசலில் காத்து நிற்கும். விலாசவ் பண்டிகை நாட்களில் ஒவ்வொரு சாராயக் கடையாகச் சென்று வருவான். வழியில் எவரிடமும் பேச மாட்டான். எனினும் யாரையோ இனம் காண முயல்வதுபோல ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்ப்பான். அவனது நாயும் தனது அடர்ந்த வாலை ஆட்டிக் கொண்டு அவனுக்குப் பின்னாலேயே நாள் முழுதும் திரிந்து கொண்டிருக்கும். நன்றாகக் குடித்துவிட்டு வீடு திரும்பியபிறகு. விலாசவ் சாப்பிட உட்காருவான். அப்போது அவன் தன் நாய்க்குத் தனது உணவு பாத்திரத்திலிருந்தே உணவு கொடுப்பான். அவன் அந்த நாயை அடித்ததும் கிடையாது. திட்டியதும் கிடையாது. அதுபோலவே அந்த நாயிடம் கொஞ்சிக் குலாவியதும் கிடையாது. சாப்பாடு முடிந்த பிறகு, சாப்பிட்ட பாத்திரங்களை அவனது மனைவி உடனே அப்புறப்படுத்தத் தவறிவிட்டால் அவன் அந்தப் பாத்திரங்களை எடுத்துத் தரையில் வீசியெறிவான். பிறகு தன் முன்னால் ஒரு பாட்டில் ஒட்கா மதுவை எடுத்து வைத்துக் கொள்வான்; தன்முதுசைச் சுவரோடு சாய்த்து, கண்களை மூடி, வாயைப் பிளந்து. கேட்பவர்களுக்கு ஏக்கம் கொடுக்கும் தாழ்ந்த குரலில் ஒரு பாட்டை அழுதாற்போல் பாட ஆரம்பிப்பான். சோகமயமான அந்த ஆபாக ஒலி ரொட்டித் துண்டுகளை உதவி வெளித்தள்ளி, மீசை மயிரில் சிக்கித் திணரும். அவன் தன் தாடி மீசையைத் தன் தடித்த விரல்களால் கோதித் தடவி விட்டுக்கொண்டே பாட ஆரம்பிப்பான். அவனது பாட்டின் வாசகங்கள் தெளிவற்று நீட்டி இழுக்கும். ஆனால் அவனது சாரீரமோ குளிர் காலத்தில் ஊளையிடும் ஓநாய்க்கூட்டத்தின் ஒப்பாரியை நினைப்பூட்டும். ஓட்கா மது தீரும் வரையிலும் அவன் பாடுவான்: அதன் பின்னர் அவன் பெஞ்சின்மீது சாய்ந்துவிடுவான்; அல்லது அப்படியே மேஜைமீது குனிந்து படுத்து ஆலைச்சங்கு அலறுகின்ற காலை நேரம் வரையிலும் தூங்குவான், அவனது நாயும் அவன் பக்கத்திலேயே விழுந்து கிடக்கும்.

அவன் குடல் புண்ணால் மாண்டுபோனான். சாவதற்கு முன்னால் ஐந்து நாட்களாக, அவன் படுக்கையிலே துடித்துப் புரண்டான். உடலெல்லாம் கறுத்துப் போன அவன், கண்களை மூடி, பற்களை நறநறவென்று கடித்தான். இடையிடையே தன் மனைவியைப் பார்த்துச் சொல்லுவான்.

“எனக்குப் பாஷாணம் கொடு, என்னை விஷங்கொடுத்துக் கொன்றுவிடு”

டாக்டர் ஏதோ ஒரு ஒத்தடம் போடச் சொன்னார். ஆனால், மிகயீல் விலாசவுக்கு ஆபரேஷன் பண்ணித்தானாக வேண்டும் என்றும், அன்றைய தினமே ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்றும் சொன்னார்.

“நீ நாசமாய்ப் போக, கழிசடையே! உன் உதவியில்லாமலே நான் செத்துப் போகிறேன்” என்று முனகினான் மிகயீல்.

டாக்டர் சென்ற பிறகு, அவனது மனைவி கண்ணீர் பொழிந்தவாறே ஆபரேஷன் பண்ணிக்கொள்ளும்படி புருஷனிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டாள், அவனோ தன் முஷ்டியை ஆட்டியவாறே அவளைப் பார்த்துச் சொன்னான்.

“நான் பிழைத்து எழுந்திருந்தால், உனக்குத்தான் சங்கடம்!”

ஆவைச்சங்கு அலறிய அந்த அதிகாலையில் அவன் இறந்து போனான். சவப்பெட்டியில் திறந்த வாயோடும், வெறுப்பு நிறைந்து நெறித்துப் போன புருவங்களோடும் அவன் கிடந்தான். அவனது மனைவியும் மகனும் நாயுமாகச் சேர்த்து அவனைப் புதைத்தார்கள். பழைய திருட்டுப் புள்ளியும் தொழிற்சாலையிலிருந்து நீக்கப்பட்ட குடியாரத் தொழிலாளியுமான தனிலோ வெஸோவ்ஷிகோவும், அந்தக் குடியிருப்பிலுள்ள சில பிச்சைக்காரர்களும் அந்தச் சவ அடக்கச் சடங்கில் கலந்து கொண்டார்கள். அவனது மனைவி கொஞ்ச நேரம் அழுதாள், அமைதியாக அழுதாள். பாவெல் அழவே இல்லை. தெரு வழியே சென்ற அவனது சவ ஊர்வலத்தைக் கண்ட ஜனங்கள் சிறிது நேரம் நின்று குறியிட்டபடி தம்முள் பேசிக்கொண்டார்கள்.

“பெலகேயாவுக்கு இவன் செத்ததே ஒரு கொண்டாட்டம்தான்!”

“அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்!”

சவப்பெட்டியைப் புதைத்துவிட்டு, ஜனங்கள் போய்விட்டார்கள். ஆனால் நாய் மட்டும் அந்த கல்லறையை முகர்ந்தபடி, புது மண்ணில் மெளனமாக உட்கார்ந்திருந்தது. சில நாட்கழித்து யாரோ அதை அடித்துக் கொன்றுவிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/2&oldid=1545468" இலிருந்து மீள்விக்கப்பட்டது