தாய்/49

விக்கிமூலம் இலிருந்து

20

சமையலறைக் கதவை யாரோ ஓங்கித் தட்டுவதைக் கேட்டு, திடுக்கிட்டு விழித்தெழுந்தாள் தாய். கதவைத் தட்டியது யாரோ? எனினும் இடைவிடாது பலத்துத் தட்டிக்கொண்டேயிருந்தார்கள். சுற்றிச் சூழ இருளும் அமைதியும் நிலவியிருந்தன. கதவைத் தட்டும் அந்த பலத்த ஓசை இருளினூடே பயபீதியை நிரப்பியொலித்தது. தாய் அவசர அவசரமாக எதையோ எடுத்து உடுத்திக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள். கதவருகே ஒரு கணம் தயங்கினாள்.

“யாரது?” என்று கேட்டாள்.

“நான்தான்” என்றது ஒரு பழகாத குரல்.

“யார்?”

“கதவைத் திறவுங்கள்” என்று தணிந்த குரலில் வந்தது பதில்.

தாய் நாதாங்கியைத் தள்ளினாள்; கதவைக் காலால் தள்ளித் திறந்தாள். இக்நாத் உள்ளே வந்தான்.

“நான் இடம் தவறி வந்துவிடவில்லை” என்று உற்சாகத்தோடு கத்தினான் அவன்.

அவனது இடுப்பு வரையிலும் சேறு தெறித்துப் படிந்திருந்தது; அவனது முகம் கறுத்து, கண்கள் குழி விழுந்து போயிருந்தன. அவனது தொப்பிக்குள்ளிருந்து எல்லாப் பக்கத்திலும் அவனது சுருட்டைத் தலைமயிர் துருத்திக்கொண்டு வெளிவந்திருந்தது.

“நாங்கள் அபாயத்திலிருக்கிறோம்” என்று கதவை அடைத்துக்கொண்டே ரகசியமாகச் சொன்னான் அவன்.

“எனக்குத் தெரியும்.”

அவள் கூறியதைக் கேட்டு அந்த வாலிபன் ஆச்சரியம் அடைந்தான்:

“உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று திருகத்திருக விழித்தவாறே கேட்டான் அவன்.

அவள் சுருக்கமாக விளக்கிச் சொன்னாள்.

“உன்னுடைய அந்த இரண்டு தோழர்களையும்கூட அவர்கள் கொண்டுபோய்விட்டார்களா?”

“அவர்கள் அங்கில்லை. ஆஜர் கொடுக்கச் சென்றிருந்தார்கள், மிகயீல் மாமாவையும் சேர்த்து இதுவரை ஐந்து பேரைக் கொண்டுபோய்விட்டார்கள்.”

அவன் ஆழ்ந்த பெருமூச்செடுத்தான். லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னான்:

“நான் மட்டும் தப்பிவிட்டேன். இப்போது அவர்கள் என்னைத் தேடித் திரிந்துகொண்டிருப்பார்கள்.”

“நீ எப்படித் தப்பிவர முடிந்தது?” என்று கேட்டாள் தாய். அடுத்த அறையின் கதவு லேசாகத் திறந்து கிடந்தது.

“நானா?” என்று கூறிக்கொண்டே ஒரு பெஞ்சின் மீது உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான் இக்நாத். “அவர்கள் வருவதற்கு ஒன்றிரண்டு நிமிஷங்களுக்கு முன்னால், அந்தக் காட்டு ஷிகாரி நமது குடிசைக்கு ஓடி வந்து ஜன்னலைத் தட்டினான். ‘ஜாக்கிரதையடா, பயல்களா! அவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள்’ என்று சொன்னான்.”

அவன் அமைதியாகச் சிரித்துக்கொண்டே முகத்தைக் கோட்டுத் துணியில் துடைத்துக்கொண்டான்.

“சரி, கடப்பாரையைக் கொண்டு தாக்கினாலும், மிகயீல் மாமாவைக் கொஞ்சங்கூட அசைக்க முடியாது. அவன் சொன்னான்: ‘இக்நாத்! சீக்கிரமே நகருக்கு ஒடிப் போய்விடு, அந்தப் பெரிய மனுஷியை உனக்கு ஞாபகமிருக்கிறதா?’ என்று சொல்லிக்கொண்டே. ஒரு சீட்டு எழுதினான். ‘இதோ, இதை அவளிடம் கொண்டுபோய்க் கொடு’ என்றான். எனவே நான் புதர்களின் வழியாக ஊர்ந்து ஒளிந்து வந்தேன். அவர்கள் வரும் சத்தம்கூட எனக்குக் கேட்டது. அந்தப் பிசாசுகள் நாலா திசைகளிலிருந்தும் சுற்றி வளைத்துப் பதுங்கி வந்தார்கள். எங்கள் தார் எண்ணெய்த் தொழிற்சாலையையே சூழ்ந்து வளைத்துக்கொண்டார்கள். நான் புதர்களுக்குள்ளேயே பதுங்கிப் பம்மிக் கிடந்தேன். அவர்கள் என்னைக் கடந்து அப்பால் சென்றார்கள். உடனே நான் எழுந்து வெளியே வந்து என்னால் ஆனமட்டும் ஓட்டம் பிடித்தேன். இரண்டு நாள் இரவிலும், ஒரு நாள் பகலிலுமாக நான் நிற்காமல் நடந்து வந்திருக்கிறேன்.”

தான் செய்த காரியத்தை எண்ணி அவனே திருப்திப்பட்டுக்கொள்வது தெளிவாகத் தெரிந்தது. அவனது கபில நிறக் கண்களில் களிப்புத் துள்ளாடியது: பெரிய சிவந்த உதடுகள் துடிதுடித்துக்கொண்டிருந்தன.

“சரி, நான் ஒரே நிமிஷத்தில் உனக்குத் தேநீர் தயார் செய்கிறேன்” என்று கூறிக்கொண்டே தேநீர் பாத்திரத்தின் அருகே சென்றாள் தாய்.

“இதோ அந்தச் சீட்டு”

அவன் மிகுந்த சிரமத்தோடு முணுமுணுத்துக்கொண்டும் வேதனையால் முகத்தை நெரித்துக்கொண்டும் தன் காலையெடுத்து பெஞ்சின் மீது போட்டான்.

நிகலாய் வாசல் நடையில் வந்து நின்றான்.

“வணக்கம். தோழா!” என்று கண்களைச் சுருக்கி விழித்தவாறே சொன்னான் அவன். “இருங்கள். நான் உங்களுக்கு உதவுகிறேன்.”

அவன் இக்நாதின் காலருகே குனிந்து காலுறைகளுக்குப் பதிலாக, காலில் சுற்றப்பட்டிருந்த அழுக்கடைந்த ஈரத் துணிகளை அவிழ்த்துவிட்டான்.

“வேண்டாம்” என்று வியப்போடு கூறியவாறே அந்த வாலிபன் தன் காலை இழுத்துக்கொண்டே, தாயை அதிசயத்தோடு பார்த்தான்.

“அவனது கால்களை கொஞ்சம் ஓட்கா மது தடவித் தேய்த்துவிடவேண்டும்” என்று அவன் தன்னைப் பார்த்ததைக் கவனிக்காமலேயே கூறினாள் தாய்.

“ஆமாம்” என்றான் நிகலாய்.

கலக்கத்தால் கனைத்து இருமிக்கொண்டான் இக்நாத்.

நிகலாய் அந்தச் சீட்டை எடுத்தான்; கசங்கியிருந்த அந்தச் சீட்டை நீட்டி நிமிர்த்தி தன் கண்களுக்கு அருகே கொண்டுபோய் அதை வாசித்தான்.

“அம்மா! எங்கள் இயக்கத்தை நீ கவனிக்காமல் விட்டுவிடாதே. உன்னோடு வந்தாளே, அந்த நெட்டைப் பெண் அவளிடம் சொல்லி, எங்களது காரியங்களைப் பற்றி இன்னும் அதிகமாக எழுதச் சொல், போய் வருகிறேன். ரீபின்.”

நிகலாய் சீட்டை வைத்துக்கொண்டிருந்த கையை மெதுவாகத் தளரவிட்டான்.

“எவ்வளவு மகத்தானது!” என்று அவன் முணுமுணுத்தான்.

தனது காலின் அழுக்கடைந்த விரல்களை ஜாக்கிரதையோடு தடவிப் பிடித்துக்கொடுத்தவாறே அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான் இக்நாத். தாய் தன் கண்ணில் பொங்கும் கண்ணீரை மறைக்க முயன்றுகொண்டே, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து அவனது காலையெடுப்பதற்காகக் கீழே குனிந்தாள்.

“ஊஹும், நீங்கள் செய்ய வேண்டாம்” என்று அவன் பயத்தோடு கத்திக்கொண்டு, காலை பெஞ்சுக்கடியில் இழுத்துக்கொண்டான்.

“நீ காலைக் கொடு. சீக்கிரம் வேலை முடியட்டும்”

“நான் கொஞ்சம் ஓட்கா கொண்டுவருகிறேன்” என்றான் நிகலாய்.

அந்தப் பையன் தன் காலை மேலும் உள்ளிழுத்துக்கொண்டான்.

“என்ன நினைத்துக்கொண்டீர்கள்? நான் என்ன ஆஸ்பத்திரியிலா இருக்கிறேன்?” என்று முணுமுணுத்தான்.

தாய் அவனது அடுத்த காலில் சுற்றப்பட்ட துணிகளை அவிழ்த்தெறிந்தாள்.

இக்நாத் பலமாகத் தும்மிக்கொண்டே, தன் கழுத்தை வளைத்து வேண்டா வெறுப்பாகத் தாயைக் குனிந்து பார்த்தான்.

“மிகயீல் இவானவிச்சை அவர்கள் அடித்தார்கள்” என்று நடுநடுங்கும் குரலில் சொன்னாள் தாய்.

“உண்மையாகவா?” என்று அமைதியோடு வியந்து கேட்டான் அந்த வாலிபன்.

“ஆமாம். நிகோல்ஸ்கிக்குக் கொண்டு வரும்போதே அவன் படுமோசமான நிலையில்தான் இருந்தான், அங்கே அந்தப் போலீஸ் தலைவனும், போலீஸ் ஸார்ஜெண்டும் அவனை அடித்தார்கள்! முகத்தில் அடித்தார்கள்! உதைத்தார்கள்! உடம்பெல்லாம் ரத்தம் காணும் வரையிலும் உதைத்தார்கள்.”

“அடிப்பது. எப்படி என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும், சரி. இருக்கட்டும்” என்று அந்த வாலிபன் முகத்தைச் சுழித்துக்கொண்டே கூறினான். அவனது தோள்கள் அசைந்து நடுங்கின, “அவர்களைக் கண்டால்–ஆயிரம் பேய்களைக் கண்ட மாதிரி நான் பயப்படுகிறேன். முஜீக்குகளும் அவனை அடித்தார்களா?”

“போலீஸ் தலைவனின் உத்தரவின்பேரில் ஒருவன் மட்டுமே அடித்தான். ஆனால் மற்றவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இவர்கள் அவன் பக்கமாகக்கூடச் சேர்ந்தார்கள். அவனை அடிப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூச்சலிட்டார்கள்.”

“ம். அப்படியா?” யார் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள். ஏன் இருக்கிறார்கள் என்பதை முஜிக்குகள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.”

“அவர்கள் மத்தியிலே சில புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.”

“புத்திசாலிகள் எங்கும்தான் இருக்கிறார்கள். தேவைதான் அவர்களை உருவாக்குகிறது. அவர்கள் அவரவர் இடத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சிரமமாயிருக்கிறது.”

நிகலாய் ஒரு பாட்டில் ஓட்கா மதுவைக் கொண்டு வந்தான்; தேநீர் அடுப்பில் கொஞ்சம் கரி அள்ளிப் போட்டான். பிறகு ஒன்றுமே பேசாமல் வெளியே சென்றான். இக்நாத் வாய் பேசாது அவனையே கவனித்தான்.

“இந்தக் கனவான் யார்–டாக்டரா?” என்று நிகலாய் வெளியே போன பிறகு தாயைப் பார்த்துக் கேட்டான் அவன்.

“நமக்குள்ளே கனவான்களே கிடையாது: இங்கே நாம் எல்லோரும் தோழர்கள்தான்.

“எனக்கு விசித்திரமாயிருக்கிறது” என்று சொன்னான் இக்நாத்; அவனது புன்னகையில் அவனது சந்தேகமும் குழப்பமும் தெரிந்தன.

“எது விசித்திரம்?”

‘பொதுவாக எல்லாம்தான். ஒரு புறத்தில் சிலர் மூக்கில் ரத்தக் கோறை. காணும்படி உதைக்கிறார்கள், இன்னொரு புறத்தில் சிலர் காலைக் கழுவிச் சுத்தம் செய்யவும் வருகிறார்கள். இந்த இரண்டுக்கும் மத்தியில் வேறு யாராவது இருக்கிறார்களா?”

கதவு திறந்தது; நிகலாய் பேசினான்;

“இரண்டுக்கும் மத்தியில் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் முகத்திலே குத்துபவர்களின் கரங்களை நக்கிக்கொடுக்கிறார்கள்; ரத்தம் பொங்கி வழியும் முகங்களைக்கொண்ட மனிதர்களின் உதிரத்தை உறிஞ்சுகிறார்கள். அவர்கள்தான் மத்தியில் இருக்கிறார்கள்!”

இக்நாத் அவனை மரியாதையோடு பார்த்தான்.

“உண்மையைத் தொட்டுவிட்ட மாதிரி இருக்கிறது” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னான் அவன்.

அந்த வாலிபன் எழுந்து. கொஞ்ச தூரம் நடந்தான்.

“புதுக்கால்கள் மாதிரியாகிவிட்டது. ரொம்ப நன்றி” என்றான் அவன்.

பிறகு அவர்கள் சாப்பாட்டு அறைக்குள் தேநீர் பருகச் சென்றார்கள். உள்ளத்தைத் தொடும் ஆழ்ந்த குரலில் இக்நாத் தன் வாழ்க்கையைப்பற்றி அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினான்.

“நான்தான் நமது பத்திரிகையை விநியோகம் செய்கிறேன். நடந்து திரிவதில் நான்தான் சளைக்காதவன்.”

“கிராமப்புறத்தில் நம் பத்திரிகையை நிறையப்பேர் வாசிக்கிறார்களா?” என்று கேட்டான் நிகலாய்.

“படித்தவர்கள் எல்லாம்; அவர்கள் பணக்காரராயிருந்தாலுங்கூட, வாசிக்கிறார்கள். ஆனால் பணக்காரர்கள் அதை நேராக நம்மிடமிருந்து வாங்குவதில்லை....... விவசாயிகள் பணக்காரர்களின் நிலங்களை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதும், அப்பொழுது அந்த நிலத்தை நிலச் சுவான்தார்களிடமிருந்து பெற ரத்தத்தைச் சிந்தவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்த விஷயம்தானே. பண்ணையார்களின் நிலத்தைப் பிடுங்கி அவற்றைப் பங்கிட்டு, பண்ணையாளர்களும் பண்ணையடிமைகளும் இல்லாதவாறு செய்யப்போகிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியத்தான் செய்யும். பின் எதற்காக அவர்களோடு சண்டையிட்டுக் கொள்ளவேண்டும்?”

அவன் மனம் புண்பட்டுப்போனது மாதிரி தோன்றியது. அவன் நிகலாயை அவநம்பிக்கையோடும் எதையோ கேட்கும் பாவனையோடும் பார்த்தான். நிகலாய் புன்னகை புரிந்தான்; எதுவும் பேசவில்லை.

“இந்த உலகம் பூராவையுமே நாம் இன்று எதிர்த்துப் போராடி, எல்லாவற்றையும் அடக்கியாள முடிந்தாலும் – நாளைக்கு மீண்டும் உலகமெங்கும் ஒரு புறத்தில் பணக்காரரும் இன்னொருபுறத்தில் ஏழைகளும் உற்பத்தியாகிவிடுவார்கள்–அப்புறம் இந்தப் போராட்டத்துக்கு என்ன அர்த்தம்? போதும், உங்களுக்கு ரொம்ப நன்றி, நீங்கள் எங்களை முட்டாளாக்க முடியாது–செல்வம் என்பது காய்ந்துபோன மணலைப் போலத்தான். அது ஓரிடத்தில் கிடக்காது. எல்லாத் திசைகளிலும் வாரியடித்துச் சிதறும். வேண்டாம். எங்களுக்கு அது வேண்டவே வேண்டாம்!”

“அதை நினைத்து நீ ஒன்றும் கோபவெறி கொள்ளாதே” என்று கூறிச் சிரித்தாள் தாய்.

“எனக்கு இருக்கிற கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான், ரீபின் கைதானதைப் பற்றிய துண்டுப்பிரசுரத்தை எப்படிச் சீக்கிரமே ஜனங்களிடம் பரப்புவது? என்று யோசித்தவாறு கேட்டான் நிகலாய்.

இக்நாத் உஷாராகி நிமிர்ந்தான்.

“அப்படி ஒரு பிரசுரம் இருக்கிறதா?” என்று கேட்டான்.

“ஆமாம்.”

“அதை என்னிடம் கொடுங்கள், நான் கொண்டுபோகிறேன்” என்று தன் கைகளைப் பிசைந்துகொண்டே சொன்னான் அந்த வாலிபன்.

அவனைப் பார்க்காமலேயே தாய் அமைதியாகச் சிரித்துக் கொண்டாள்.

“ஆனால், நீ களைத்து இருக்கிறாய். மேலும் நீ பயந்து கொண்டிருப்பதாக வேறு சொன்னாய்” என்றாள் அவள்.

இக்நாத் தனது அகன்ற கையால். தனது சுருட்டைத் தலை முடியைத் தடவி விட்டுக்கொண்டு, நேரடியாகச் சொன்னான்.

“பயம் வேறு. சேவை வேறு, எதை எண்ணிச் சிரிக்கிறீர்கள்? நீங்கள் ஓர் அற்புத ஆசாமிதான்.”

“அட, என் செல்லக்குழந்தை!” என்று தன்னையுமறியாமல் கூறினாள் தாய். தன் மனத்தில் எழுந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டாதிருக்க முயன்றாள்.

“ஆமாம், குழந்தை!” அவன் வெட்கத்தோடு தனக்குள் முனகிக் கொண்டான்.

“நீங்கள் ஒன்றும் அங்குத் திரும்பிப் போகவேண்டாம்” என்று கண்களைச் சுருக்கி அவனை அன்போடு பார்த்தவாறே கூறினான் நிகலாய்.

“ஏன் கூடாது? நான் எங்கே போகிறேன்?” என்று எரிச்சலோடு கேட்டான் இக்நாத்.

“பிரசுரங்களை வேறு யாராவது கொண்டுபோகட்டும். போகிற ஆளிடம் அவன் எப்படியெப்படிப் போகவேண்டும், வரவேண்டும் என்பனவற்றுக்கு மாத்திரம் விவரம் சொல்லிக் கொடுங்கள். அது போதும், சரிதானே?”

‘சரி’ என்று அதிருப்தியோடு சொல்லிக்கொண்டான் இக்நாத்.

“உங்களுக்கு ஒரு புது பாஸ்போர்ட் வாங்கி, காட்டுக்காவலன் வேலை வாங்கித் தருகிறோம்.”

“சரி. அப்படி வேலை பார்க்கும்போது முஜீக்குகள் வந்து விறகையோ வேறு எதையுமோ திருடிக்கொண்டு போனால் நான் என்ன செய்வது? அவர்களைப் பிடித்துக் கட்டி வைத்து உதைப்பதா? அந்த வேலை எனக்கு ஒத்துவராது.”

தாய் சிரித்தாள், நிகலாவும் சிரித்தான். அவர்களது சிரிப்பு அந்த இளைஞனின் மனத்தைக் குத்தியது; நிலை கொள்ளாமல் தவிக்கச் செய்தது.

“கவலைப்படாதே. எந்த முஜீக்கையும் கட்டி வைக்க வேண்டியிராது” என்று தேறுதல் கூறினான் நி கலாய். “என் வார்த்தையையும் நம்பு.”

“ரொம்பச் சரி. அப்படியானால் சரிதான்” என்று மகிழ்ச்சி நிறைந்த புன்னகையோடு கூறினான் இக்நாத். “ஆனால், எனக்குத் தொழிற்சாலை ஒன்றில் வேலை கிடைத்தால் நல்லது. மற்றவர்களை விடத் தொழிற்சாலை வேலைக்காரர்கள் புத்திசாலிகளாயிருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.”

தாய் மேஜையை விட்டு, ஜன்னலை நோக்கி நடந்தாள்.

“வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமாயிருக்கிறது!” என்று சிந்தித்தாள் அவள். “ஒரே நாளில் ஐந்து தடவை அழுகிறோம்; ஐந்து

தடவை சிரிக்கிறோம். சரி இக்நாத், நீ பேசி முடித்தாயிற்றா? தூங்குவதற்கு நேரமாகிவிட்டது.”

“எனக்குத் தூக்கம் வரவில்லை.” “போ போ. தூங்கு தூங்கு.”

“நீங்க ரொம்பக் கண்டிப்பானவர் இல்லையா? சரி நான் போகிறேன். நீங்கள் கொடுத்த தேநீருக்கு. ரொம்ப நன்றி...... அன்புக்கும்தான்....”

அவன் தாயின் படுக்கைமீது ஏறிப் படுத்தவாறு தன் தலையைச் சொறிந்துகொண்டே முனகினான்;

“இப்போது சாமான்களெல்லாம் தார் எண்ணெய் நாற்றம் எடுக்கப் போகிறது... இதிலெல்லாம் ஓர் அர்த்தமுமில்லை..... எனக்குத் தூக்கமும் வரவில்லை.... அந்த ரெண்டுங்கெட்டான் ஜனங்களை இவர் எவ்வளவு சுளுவாகத் தாக்கிப் போசினார்...... அந்தப் பிசாசுகள்...”

திடீரென்று அவன் தூங்கிப்போய், உரத்துக் குறட்டை விட ஆரம்பித்தான். அவனது வாய் பாதி திறந்தவாறு இருந்தது: புருவங்கள் ஏறியிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/49&oldid=1293157" இலிருந்து மீள்விக்கப்பட்டது