உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்/50

விக்கிமூலம் இலிருந்து

21

அன்று மாலையில் இக்நாத் கெலாய் வெஸோவ்ஷிகோவுக்கு எதிராக, ஒரு சின்ன நில அடி அறையில் உட்கார்ந்து தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தான்:

“மத்திய ஜன்னலில் நாலு தடவை தட்டவேண்டும்...”

“நாலு தடவையா?” என்ற ஆர்வத்தோடு கேட்டான் நிகலாய் வெஸோவ்ஷிகோவ்.

“முதலில் மூன்று—இந்த மாதிரி” என்று கூறிக்கொண்டே அவன் மேஜை மீது தட்டிக் காண்பித்தான், “ஒன்று. இரண்டு, மூன்று ஒரு விநாடி பொறு, அப்புறம் இன்னொரு முறை.”

“புரிந்துகொண்டேன்.”


“உடனே செம்பட்டைத் தலையனான ஒரு முஜீக் வந்து கதவைத் திறப்பான்; திறந்து; ‘நீ மருத்துவச்சிக்காக வந்தாயா?’ என்பான். உடனே: “ஆமாம். முதலாளியின் மனைவியிடமிருந்து வருகிறேன்” என்று நீ சொல்ல வேண்டும். அவ்வளவுதான். அவன் உன்னைப் புரிந்து கொள்வான்.”

அவர்கள் இருவரும் ஒருவர் தலையோடு ஒருவர் தலை முட்டுமாறு உட்கார்ந்திருந்தனர். இருவரும் குண்டுக் கட்டான பலசாலிகள், அவர்கள் இருவரும் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருப்பதை, தாய் தன் மார்பில் கரங்களைக் கோத்தவாறு நின்று கவனித்துக்கொண்டிருந்தாள். அவன் கூறிய மர்மமான சங்கேதச் சொற்களையும், தட்டுவதன் அர்த்த பாவத்தையும் காண அவளுக்கு வேடிக்கையாயிருந்தது.

'இன்னும் சின்னப் பிள்ளைகள்தான்’ என்று அவள் தனக்குத் தானே நினைத்துக்கொண்டாள்.

சுவரிலிருந்த விளக்கு ஒரு நெளிந்துபோன பழைய வாளியையும், மூலையிலே தரையில் கிடக்கும் தகரத் தொழிலாளியின் தகட்டுக் குப்பைகளையும் ஒளி செய்து காட்டிக்கொண்டிருந்தது. அந்த அறை முழுதும் நீரூற்று நாற்றமும் எண்ணெய்ச் சாய வாடையும் துரு நாற்றமும் நிறைந்து நின்றன.

இக்நாத் தொளதொளத்த துணியால் தைக்கப்பெற்ற கனத்த கோட்டு அணிந்திருந்தான்; அது அவனுக்கு மிகவும் பிடித்துப் போனதுபோல் தோன்றியது. அந்தக் கோட்டின் கையை ஆசையுடன் அவன் தடவிக் கொடுத்ததைத் தாய் பார்த்தாள். அவன் தன் கழுத்தைத் திருப்பித் தன்னைத் தானே நன்கு பார்த்துக்கொள்ளத் திரும்பினான்.

“குழந்தைகள்!” என்று நினைத்துக்கொண்டாள் அவள்.

“அருமைக் குழந்தைகள்......”

“ரொம்ப சரி” என்று கூறிக்கொண்டே எழுந்தான் இக்நாத். “முதலில் முரார்த்தலின் வீட்டுக்குச் சென்று, நாத்தாவைப் பற்றிக் கேட்க மறந்துவிடாதே.”

“மறக்கமாட்டேன்” என்று பதிலளித்தான் நிகலாய் வெஸோவ்ஷிகோவ்.

ஆனால் இக்நாத்துக்குப் பூரண திருப்தி ஏற்படவில்லை. தான் சொல்லிக்கொடுத்த சமிக்ஞைகளையும் சங்கேதங்களையும் திரும்பவும் ஒருமுறை சொல்லிவிட்டுத் தன் கரத்தை நீட்டிப் பேசினான்:

“அவர்களுக்கு என் நன்றியைச் சொல்லு. அவர்கள் எவ்வளவு நல்ல மனிதர்கள் என்பதை நீயே கண்டுகொள்வாய்” என்று சொன்னான் அவன்.

அவன் தனக்குத்தானே மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டு தன் கோட்டைத் தட்டிவிட்டுக்கொண்டான்.

“நான் போவதற்கு நேரமாகிவிட்டதா?” என்று அவன் தாயிடம் கேட்டான்.

“உனக்கு வழி தெரியுமா?”

“கண்டுபிடித்துப் போய்விடுவேன். போய்வருகிறேன். தோழர்களே!”

அவன் வெளியே சென்றான். நிமிர்ந்த மார்போடும், அகன்ற தோள்களோடும், ஒரு புறமாகச் சாய்த்து வைத்த தொப்பியோடும், பாக்கெட்டுக்குள் கைகளை லாவகமாக விட்டவாறும் அவன் வெளியே சென்றான். அவனது சுருட்டைத் தலையின் வெளிர்மயிர்க் கற்றைகள் அவனது நெற்றிப் பொருத்துக்களில் ஊசலாடின.

“ஒரு வழியாக எனக்கு இப்போது ஒரு வேலை கொடுத்தாகிவிட்டது” என்று கூறிக்கொண்டே நிகலாய் வெஸோவ்ஷிகோவ் தாயின் பக்கமாக மெதுவாக வந்தான். “ஏனடா சிறையை விட்டு வெளியில் வந்தோம் என்று எனக்கு முதலில் இருந்தது. வந்த புதிதில் எனக்கு ஒரே எரிச்சல். இங்கே வந்து ஒரு வேலையும் செய்யாமல், இரவும் பகலும் உள்ளே மறைந்திருப்பதுதான் என் வேலை. அங்கே இருந்தாலாவது ஏதாவது கற்றுக்கொண்டிருப்பேன். பாவெல் எங்கள் அறிவை எப்படியெல்லாம் வளர்த்தான்! சரி, அவர்கள் தப்பி வருவதற்குப் போட்ட திட்டம் என்ன ஆயிற்று, நீலவ்னா?”

“எனக்குத் தெரியாது” என்று தன்னையுமறியாது எழுந்த பெருமூச்சுடன் சொன்னாள் அவள்.

நிகலாய் தனது கனத்த கரத்தை அவள் தோள்மீது போட்டு, தனது முகத்தை அவள் பக்கம் கொண்டுபோனான்.

“நீ அவர்களிடம் சொல்லிப்பார்” என்று பேசத் தொடங்கினான் அவன், “நீ சொன்னால் அவர்கள் கேட்பார்கள், அதில் ஒன்றும் சிரமமில்லை. நீயே போய்ப்பார். சிறைச்சாலைச் சுவர் இருக்கிறதா? அடுத்தாற்போல் தெருவிளக்கு அதற்கு எதிர்த்தாற்போல் வெட்டவெளி மைதானம்; இடது புறம் இடுகாடு; வலது புறம் தெருக்களும் வீடுகளும், ஒவ்வொரு நாளும் விளக்கேற்றுபவன் விளக்கைத் துடைத்துச் சுத்தம் செய்ய வருவான். எனவே அவன் சிறைச்சாலைச் சுவரின் மீது ஏணியொன்றைச் சாத்தி, மேலே ஏறி, அந்தச் சுவரிலுள்ள ஒரு செங்கல் தூணில் ஒரு நூலேணியைக் கட்டி, சிறைச்சாலைக்குள்ளே அதை இறக்க வேண்டியது. அப்புறம் அவன் போய்விட வேண்டியது. சிறைக்குள்ளே இருப்பவர்களுக்கு இது எப்போது நடக்கும் என்பது நன்றாகத் தெரியும். அவர்கள் சாதாரணக் கிரிமினல் கைதிகளோடு வம்பிழுத்துப் பேசி ஒரு கலவரத்தைக் கிளப்ப வேண்டியது. இல்லையென்றால் தமக்குள்ளேயே அவர்கள் கலாட்டா செய்யவேண்டியது. அதாவது சிறைச்சாலைக் காவலாளிகள் கண்டுபிடித்துவிடாதபடி, அவர்கள் கவனத்தைக் கொஞ்சம் கவர வேண்டியது. இதற்குள் தப்பியோட வேண்டியவர்கள் ஏணி வழியாக ஏறி வெளியே வந்துவிட வேண்டியது. ஒன்று, இரண்டு, மூன்று - அவ்வளவுதான். அதற்குள் எல்லாம் முடிந்துவிடும். இதுதான் சுலபமான வழி.”

அவன் தனது திட்டத்தைக் கைகளை ஆட்டி சைகைகள் காட்டி விளக்கியதால், அவன் கூறிய விஷயங்கள் எல்லாம் தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் எளிதாகவும் தோன்றின. நிகலாயை அவள் எப்போதும் ஓர் அசமந்தப் பேர்வழியாகவே கருதி வந்திருக்கிறாள். முன்னெல்லாம் அவன் எந்த விஷயத்தையும் பகையுணர்ச்சியோடும் அவநம்பிக்கையோடும்தான் பார்ப்பான். இப்போதோ அவன் புனர்ஜன்மம் எடுத்த மாதிரி முற்றிலும் மாறிப்போய்விட்டான். அவனிடம் காணப்பட்ட நிதானமும் அன்பும் தாயின் இதயத்தைக் கவர்ந்தது; பரவசப்படுத்தியது;

“கொஞ்சம் யோசித்துப் பார். அவர்கள் இதைப் பகல் நேரத்திலேயே செய்யலாம். பகலில்தான் செய்ய முடியும்! சிறைச்சாலையிலுள்ளவர்கள் அனைவருமே விழித்திருந்து நடமாடிக்கொண்டிருக்கும் வேளையில். ஒரு கைதி தப்பியோடிவிடுவான் என்று எவரேனும் சந்தேகப்பட முடியுமா?”

“அவர்கள் சுட்டுத்தள்ளமாட்டார்களா?” என்று நடுங்கிக்கொண்டே கேட்டாள் தாய்.

“யார்? சிப்பாய்கள் இல்லை. அந்தக் காவலாளிகளுக்கு எல்லாம் தங்கள் கைத்துப்பாக்கிகளை வைத்து ஆணி அறைந்துதான் பழக்கம்.”

“நீ சொல்வதைப் பார்த்தால் எல்லாம் எளிதாகத்தான் தோன்றுகிறது.”

“நீயே பாரேன். நீ அவர்களிடம் இது விஷயமாகப் பேசிப் பார். நான் எல்லாம் தயாராய் வைத்திருக்கிறேன். நூலேணி, சுவரில் அறைய வேண்டிய கொக்கி - எல்லாம் தயார். இங்கே என் வீட்டுக்காரன் இருக்கிறானே, அவன்தான் விளக்கேற்றுகிற நபராக இருப்பான்”

கதவுக்கு அந்தப் புறத்தில் யாரோ இருமிக்கொண்டே தடவித் தடவி நடந்தார்கள். ஏதோ ஒரு தகரத்தை உருட்டி ஓசை உண்டாக்கும் சத்தம் கேட்டது.

“அதோ, அது அவன்தான்” என்றான் நிகலாய்.

வாசல் நடையில் ஒரு தகர குளியல் தகரத் தொட்டி முதலில் தெரிந்தது. அதைத் தொடர்ந்து ஒரு கரகரத்த குரல் ஒலித்தது:

“ஏ, பிசாசே! உள்ளே போய்த் தொலையேன்!”

அந்தத் தகரத் தொட்டிக்கு மேலாக ஒரு மனிதனின் முகம் தெரிந்தது. சுமூக பாவமும், துருத்திய கண்களும், நரைத்த தலையும் மீசையுமாகக் காட்சி அளித்தான் அவன்.

நிகலாய் அந்தத் தொட்டியை உள்ளே இழுத்து அவனுக்கு உதவி செய்தான். தொட்டி, உள்ளே வந்த பிறகு, நெட்டையான கூனிப்போன அந்த மனித உருவத்தை அவர்கள் கண்டார்கள். தாடியற்ற கன்னத்தைப் புடைக்கச் செய்யும் பலத்த இருமலோடு அவன் இருமியவாறு துப்பினான். பிறகு தன் விருந்தாளிகளைப் பார்த்து வரவேற்றான்.

“உங்களுக்கு நலம் உண்டாகட்டும்.”

“இதோ, இவனையே கேள்” என்று சொன்னான் நிகலாய்.

“என்னை என்ன கேட்கிறது?”

“சிறையிலிருந்து தப்புவது பற்றி.”

“ஆஹா!” என்று அந்தத் தகரத் தொழிலாளி சொல்லிவிட்டுத் தனது கறைபடிந்த விரல்களால் மீசையைத் தடவிவிட்டுக்கொண்டான்.

“யாகவ் வசீலியவிச்! அது எவ்வளவு சுலபமான காரியம் சொன்னால், இவள் நம்பமாட்டேன் என்கிறாள்.”

“நம்பவில்லையா? ஹும்! அப்படியானால் அவளுக்கு இதில் விருப்பமில்லை என்றுதான் தோன்றுகிறது. உனக்கும் எனக்கும் விருப்பம் இருக்கிறது; அதனால், நாம் இதை நம்புகிறோம்!” என்று அமைதியாகச் சொன்னான் அவன். திடீரென்று அவன் முதுகைக் குனிந்து இருமத் தொடங்கினான். அந்தத் தொண்டைப் புகைச்சல் ஓய்ந்து அடங்கியதும், அவன் தன் நெஞ்சைக் கையால் தடவிக் கொடுத்தவாறே அறையின் மத்தியிலேயே நின்று, தனது முண்டகக் கண்களால் தாயையே கவனித்துப் பார்த்தான்.

“பாவெலும் அவனது தோழர்களும் இந்த விஷயத்தைத் தீர்மானிப்பார்கள்” என்றாள் தாய்.

நிகலாய் ஏதோ சிந்தித்தவாறே தலையைத் தொங்கவிட்டான்.

“யார் அது பாவெல்?” என்று கேட்டுக்கொண்டே ஓர் இடத்தில் அமர்ந்தான் அந்தத் தொழிலாளி.

“என் மகன்.”

“அவன் முழுப் பெயர்?”

“பாவெல் விலாசவ்.”

அவன் தலையை அசைத்தான்; புகைக் குழாயை எடுத்து அதில் புகையிலையை நிரப்பத் தொடங்கினான்.

அவனைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் அவன். “என் மருமகனுக்கு அவனைத் தெரியும். என் மருமகனும் சிறையில்தான் இருக்கிறான். அவன் பெயர் எவ்சென்கோ, கேள்விப்பட்டிருக்கிறாயா? என் பேர் கோபுன். அவர்கள் போகிற போக்கிலே கூடிய சீக்கிரத்தில் ஊரில் இருக்கிற இளைஞர்களை எல்லாம் பிடித்துச் சிறையில் தள்ளிவிடுவார்கள். நம்மைப் போன்ற கிழடு கட்டைகளுக்கு வெளியே தாராளமாய் இடம் இருக்கும்! என் மருமகனை அவர்கள் சைபீரியாவுக்கு அனுப்பப்போவதாக ஒரு போலீஸ்காரன் என்னிடம் சொன்னான். செய்வார்கள்-நாய்கள்!”

அவன் நிகலாவிடம் திரும்பி, புகைக்குழாயைத் ‘தம்’ பிடித்து இழுத்துக்கொண்டே, அடிக்கொரு தடவை தரையில் காரித் துப்பிக்கொண்டிருந்தான்.

“அப்படியானால் அவளுக்கு இதில் விருப்பமில்லை. இல்லையா? அது அவள் பாடு, ஒருவன் சுதந்திரமாயிருந்தால்தான், உட்கார்ந்து களைத்துப் போனாலும் கொஞ்ச தூரமாவது நடந்து பார்க்கலாம்; நடந்து நடந்து களைத்துப் போனாலும் கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து பார்க்கலாம். ஆனால், அவர்கள் உன்னைக் கொள்ளையடித்தால், கண்ணை மூடிக்கொள். அடித்தால் பட்டுக்கொள். அழாதே. கொன்றால் அப்படியே செத்துப்போ. இது எல்லோருக்கும்தான் தெரியும். என்ன ஆனாலும் சரி, நான் என் சவேலியை வெளியே கொண்டுவரத்தான் போகிறேன். நிச்சயம் கொண்டுவந்துவிடுவேன்.”

அவன் அந்தச் சின்னஞ்சிறு வாக்கியங்களைச் சொன்ன விதத்தைக் கண்டு தாய் வியப்படைந்தாள், இறுதி வார்த்தைகளால் ஒருவிதத்தில் பொறாமை உணர்ச்சிகூட ஏற்பட்டது.

தெருவழியாகக் குளிர்க்காற்றிலும் முகத்தில் அறையும் மழையிலும் நடந்து வரும்போதும்கூட, அவள் நிகலாயைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

“அவன் எவ்வளவு மாறிவிட்டான். எப்படி மாறினான்! நினைத்துப் பார்த்தால்!”

அவள் கோபுனைப் பற்றியும் நினைவு கூர்ந்தாள். பிரார்த்திப்பது போல, தன்னுள் தானே பணிவுடன் நினைத்துக்கொண்டாள்.

“வாழ்க்கையைப் பற்றிய புதிய அபிப்பிராயம் கொண்டிருப்பவள் நான் ஒருத்தி மட்டும்தான் என்பதல்ல. அது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.”

அதே சமயத்தில் அவளது இதயத்தில் மகனைப் பற்றிய சிந்தனையும் நிரம்பியெழுந்தது:

“அவன் மட்டும் சம்மதித்தால்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/50&oldid=1293244" இலிருந்து மீள்விக்கப்பட்டது