உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்/57

விக்கிமூலம் இலிருந்து

28

சில நிமிஷ நேரம் கழிந்த பின்னர், தாய் லுத்மீலாவின் சிறிய அறைக்கு வந்து, அங்கிருந்த அடுப்பருகிலே குளிர் காய்ந்து கொண்டிருந்தாள். லுத்மீலா கறுப்பு உடை அணிந்திருந்தாள்; இடையிலே ஒரு தோல் பெல்ட் கட்டியிருந்தாள். அவள் அந்த அறைக்குள்ளே மேலும் கீழும் மெதுவாக நடந்துகொண்டிருந்தாள். உடையின் சரசரப்பும் அவளது கம்பீரமான குரலும் அந்த அறையில் நிரம்பியொலித்தன.

அடுப்பிலிருந்த தீ பொரிந்து வெடித்துக் காற்றை உள்வாங்கி இரைந்துகொண்டிருந்தது. அதே வேளையில் அவளது குரல் நிதானமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

“ஜனங்கள் கொடியவர்களாயிருப்பதைவிட முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களது கண்முன்னால் உள்ள விஷயங்களைத்தான் அவர்கள் பார்க்கிறார்கள்; அதைத்தான் உடனே புரிந்துகொள்ளவும் செய்கிறார்கள். ஆனால் கையெட்டும் தூரத்திலுள்ள எல்லாம் மலிவானவை. சாதாரணமானவை, தூரத்தில் உள்ளவைதான் அருமையானவை, அபூர்வமானவை. அந்தத் தூரத் தொலை விஷயத்தை நாம் எட்டிப் பிடித்துவிட்டால், வாழ்க்கையே மாறிப் போய் மக்களுக்கு அறிவும் சுகமும் கிட்டுமானால், அதுவே எல்லோருக்கும் ஆனந்தம்: அதுவே சுகம். ஆனால் அந்த வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் கொஞ்சம் சிரமத்துக்கு ஆளாகியே தீரவேண்டும்.”

திடீரென்று அவள் தாயின் முன்னால் வந்து நின்றாள்.

“நான் ஜனங்களை அதிகம் சந்திப்பதில்லை. யாராவது என்னைப் பார்க்க வந்தால், உடனே நான் பிரசங்கம் செய்யத் தொடங்கிவிடுவேன். வேடிக்கையாயில்லை?” என்றுதான் ஏதோ மன்னிப்புக் கோருவதைப் போலக் கூறினாள் அவள்.

“ஏன்?” என்றாள் தாய். அந்தப் பெண் அவளது அச்சுகேவலைகளை எங்கு வைத்துச் செய்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினாள் தாய். ஆனால் அங்கு எதுவுமே வழக்கத்துக்கு மாறாக இருப்பதாகத் தெரியவில்லை. தெருவை நோக்கியிருக்கும் மூன்று ஜன்னல்கள், ஒரு சோபா, ஒரு புத்தக அலமாரி, ஒரு மேஜை, சில நாற்காலிகள். ஒரு படுக்கை, அதற்கருகே ஒரு மூலையில் கை கழுவும் பாத்திரம் இருந்தது. இன்னொரு மூலையில் அடுப்பு இருந்தது. சுவர்களில் புகைப்படங்கள் தொங்கின. அங்குள்ள எல்லாப் பொருள்களுமே சுத்தமாகவும், புத்தம் புதிதாகவும் நல்ல நிலைமையிலும் ஒழுங்காக இருந்தன; இவை எல்லாவற்றின் மீதும், அந்த வீட்டுக்காரியான லுத்மீலாவின் சன்னியாசினி நிழல் படிந்திருந்தது. அங்கு ஏதோ ஒளிந்து மறைந்துகொண்டிருப்பதாக உணர்ந்தாள் தாய். ஆனால் எது எங்கே ஒளிந்து பதுங்கியிருக்கிறது என்பதைத்தான் அவளால் ஊகிக்க முடியவில்லை. அவள் கதவுகளைப் பார்த்தாள், அவற்றில் ஒரு கதவு வழியாகத்தான்; சிறு நடை வழியிலிருந்து! இந்த இடத்திற்கு வந்தாள். அடுத்தபடியாக, அடுப்பிருந்த பக்கத்தில் ஓர் உயரமான குறுகலான கதவு காணப்பட்டது.

“நான் இங்கு ஒரு காரியமாக வந்திருக்கிறேன்” என்று தன்னையுமறியாமல் சொன்னாள் தாய்; அதே சமயம் லுத்மீலாவும் தன்னையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பதையும் அவள் கண்டாள்.

“தெரியும். என்னைத் தேடி வருபவர்கள் சும்மா வருவதில்லை.”

லுத்மீலாவின் குரலில் ஏதோ ஒரு விசித்திர பாவம் தொனிப்பதாகக் கண்டறிந்தாள் தாய். அவளது முகத்தைக் கவனித்தாள். அந்தப் பெண்ணின் மெல்லிய உதடுகளின் ஓரத்தில் ஒரு வெளுத்த புன்னகை அரும்புவதையும், அவளது மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால், அவளது உணர்ச்சியற்ற கண்கள் பிரகாசிப்பதையும் அவள் கண்டாள். தாய் வேறொரு பக்கமாகப் பார்த்துக்கொண்டு பாவெலின் பேச்சின் நகலை நீட்டினாள்.

“இதோ. இதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அச்சேற்றியாக வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.”

பிறகு அவள் நிகலாய்க்கு நேரவிருக்கும் கைது விஷயத்தைப் பற்றிச் சொன்னாள்.

லுத்மீலா ஒன்றும் பேசாமல் அந்தக் காகிதத்தைத் தன் இடுப்புக்குள் செருகிக்கொண்டு, கீழே உட்கார்ந்தாள். அடுப்புத்தீ அவளது மூக்குக் கண்ணாடியில் பளபளத்துப் பிரகாசித்தது. நெருப்பின் அனல் அவளது அசைவற்ற முகத்தில் களித்து விளையாடியது.

“அவர்கள் மட்டும் என்னைப் பிடிக்க வந்தால், நான் அவர்களைச் சுட்டே தள்ளிவிடுவேன்” என்று தாய் கூறியதையெல்லாம் கேட்டுவிட்டு உறுதியோடும் அமைதியோடும் கூறினாள் லுத்மீலா. “பலாத்காரத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள எனக்கு உரிமை உண்டு. நான் அடுத்தவர்களைச் சண்டைக்கு அழைக்கும்போது நானும் சண்டை போட்டுத்தானே தீர வேண்டும்.”

நெருப்பின் ஒளி அவள் முகத்திலிருந்து நழுவி மறைந்துவிட்டது. எனவே மீண்டும் அவளது முகத்தில் அகந்தையும் கடுமையும் பிரதிபலித்தன.

“உன் வாழ்க்கை மோசமாயிருக்கிறது” என்று அனுதாபத்தோடு தன்னுள் நினைத்துக்கொண்டாள் தாய்.

லுத்மீலா பாவெலின் பேச்சை விருப்பமின்றிப் படிக்கத் தொடங்கினாள்; ஆனால் படிக்கப் படிக்க அவளுக்கு ஆர்வம் அதிகரித்து அந்தக் காகிதத்தின்மீதே குனிந்து விழுந்து படித்தாள். அந்தப் பேச்சுப் பிரதியைப் பக்கம் பக்கமாகப் பொறுமையற்றுப் புரட்டினாள்; கடைசியாக, படித்து முடிந்தவுடன் அவள் எழுந்தாள்; தோள்களை நிமிர்த்தி நின்றாள்; தாயை நோக்கி வந்தாள்.

“அருமையான பேச்சு!” என்றாள் அவள்.

ஒரு நிமிடம் தலையைத் தாழ்த்தி யோசனை செய்தாள்.

“நான் உங்கள் மகனைப் பற்றி உங்களிடமே பேச விரும்பவில்லை; நான் அவனைச் சந்தித்ததும் இல்லை. ஏன் துயரப் பேச்சில் ஈடுபடவேண்டும் எனக்கு அது பிடிப்பதில்லை. உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவனை. தேசாந்திர சிட்சை விதித்து அனுப்புவதால் உங்களுக்கு ஏற்படும் வேதனை என்ன என்பதை நான் அறிவேன். ஆனால் ஒன்று கேட்கிறேன்- இந்த மாதிரிப் பிள்ளை பெற்றிருப்பது நல்லதுதானா?”

“ரொம்பவும்...” என்றாள் தாய்.

“பயங்கரமாயில்லைா ?”

“இப்போது இல்லை” என்று அமைதி நிறைந்த புன்னகையோடு சொன்னாள் தாய்.

லுத்மீலா தனது பழுப்புக் கரத்தால் தன் தலைமயிரைக் கோதித் தடவிக் கொடுத்தவாறே ஜன்னல் பக்கம் திரும்பினாள். அவளது முகத்தில் ஏதோ ஒரு சாயை படர்ந்து மறைந்தது: ஒரு வேளை அவள் தன் உதட்டில் எழுந்த புன்னகையை மறைக்க முயன்றிருக்கலாம்.

“சரி, நான் விறுவிறென்று அச்சு கோத்துவிடுகிறேன். நீங்கள் கொஞ்சம் படுத்துத் தூங்குங்கள். இன்று பூராவுமே உங்களுக்கு ஒரே ஆயாசமும் சிரமமுமாயிருந்திருக்கும். இதோ இந்தப் படுக்கையில் படுத்துக்கொள்ளுங்கள். நான் தூங்கமாட்டேன். ஒரு வேளை நடுராத்திரியில் உதவிக்காக உங்களை எழுப்புவேன்...., படுத்தவுடனே விளக்கை அணைத்துவிடுங்கள்.”

அவள் அடுப்பில் இரண்டு விறகுகளை எடுத்துப்போட்டுவிட்டு அந்தக் குறுகிய கதவைத் திறந்துகொண்டு அப்பால் சென்றாள்; கதவையும் இறுக மூடிவிட்டுப் போனாள். தாய் அவள் போவதையே கவனித்துக்கொண்டிருந்தாள். பிறகு உடுப்புக்களைக் களைந்தாள்; அவளது சிந்தனை மட்டும் லுத்மீலாவைச் சுற்றியே வந்தது.

“அவள் எதையோ எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறாள்.....”

தாய்க்குக் களைப்புணர்ச்சியால் தலை சுற்றியது. எனினும் அவளது உள்ளம் மட்டும் அற்புதமான அமைதியோடு இருந்தது. அவளது கண்ணில் பட்ட ஒவ்வொன்றும் அவளது இதயத்தை ஒளி செய்து நிரம்பிப் பொழிந்தன. இந்த மாதிரியான அமைதி அவளுக்குப் புதிதானதல்ல. ஏதாவது ஒரு பெரும் உணர்ச்சிப் பரவசத்துக்குப் பிறகுதான் இந்த மாதிரி அவளுக்குத் தோன்றுவதுண்டு. முன்பெல்லாம் அந்த உணர்ச்சி அவளைப் பயந்து நடுங்கச் செய்யும். இப்போதோ அந்த உணர்ச்சியமைதி அவளது இதயத்தை விசாலமுறச் செய்து, அதில் ஒரு மகத்தான உறுதிவாய்ந்த உணர்ச்சியைக் குடியேற்றி வலுவேற்றியது. அவள் விளக்கை அணைத்துவிட்டு, குளிர் படிந்த படுக்கையில், போர்வையை இழுத்து மூடிச் சுருட்டி முடக்கிப் படுத்துக்கொண்டாள். படுத்தவுடனேயே அவள் சீக்கிரத்தில் ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆளாகிவிட்டாள்.

அவள் கண்களை மீண்டும் திறந்தபோது அந்த அறையில் மாரிக்காலக் காலைப் பொழுதின் வெள்ளிய, குளிர்ந்த ஒளி நிறைந்திருந்தது. கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு சோபாவின் மீது சாய்ந்திருந்த லுத்மீலா அவளைப் பார்த்தாள். புன்னகை செய்தாள்.

“அடி கண்ணே!” என்று கலங்கிப்போய் கூறினாள் தாய். “நான் என்ன பிறவியிலே சேர்த்தி? ரொம்ப நேரம் ஆகிவிட்டதோ?”

“வணக்கம்!” என்றாள் லுத்மீலா. “மணி பத்தடிக்கப் போகிறது. எழுந்திருங்கள். தேநீர் சாப்பிடலாம்.”

“நீங்கள் ஏன் என்னை எழுப்பவில்லை?”

“எழுப்பத்தான் வந்தேன். ஆனால் நான் வந்தபோது தூக்கத்தில் அமைதியாகப் புன்னகை செய்து கொண்டிருந்தீர்கள். அதைக் கலைக்க எனக்கு மனமில்லை.” அவள் தன் சோபாவிலிருந்து நாசூக்காக எழுந்திருந்தாள். படுக்கையருகே வந்து, தாயின் பக்கமாகக் குனிந்தாள். அந்தப் பெண்ணின் ஒளியற்ற கண்களில் ஏதோ ஒரு பாசமும் பரிவும் கலந்து, தனக்குப் பரிச்சயமான உணர்ச்சி பாவம் பிரதிபலிப்பதைத் தாய் கண்டாள்.

“உங்களை எழுப்புவது தப்பு என்று பட்டது. ஒரு வேளை இன்பக் கனவு கண்டுகொண்டிருந்தீர்களோ.”

“நான் கனவு காணவில்லை.”

“எல்லாம் ஒன்றுதான். எப்படியானாலும் நான் உங்கள் புன்னகையை விரும்பினேன். அது அத்தனை அமைதியோடு அழகாக இருந்தது..... உள்ளத்தையே கொள்ளைகொண்டது.”

லுத்மீலா சிரித்தாள், அந்தச் சிரிப்பு இதமும் மென்மையும் பெற்று விளங்கியது.

“நான் உங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உங்கள் வாழ்க்கை என்ன, சிரமமான வாழ்க்கையா?”

தாயின் புருவங்கள் அசைந்து நெளிந்தன; அவள் அமைதியாகத் தன்னுள் சிந்தித்தாள்.

“ஆமாம். சிரமமானதுதான்” என்றாள் லுத்மீலா.

“எனக்கு அப்படி ஒன்றும் தெரியாது” என்று மெதுவாய்ப் பேசத் தொடங்கினாள் தாய். “சமயங்களில் இந்த வாழ்க்கை சிரமமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இந்த வாழ்க்கைதான் பூரணமாயிருக்கிறது. இந்த வாழ்வின் சகல அம்சங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாயும் வியப்பு தருவனவாயும் இருக்கின்றன. ஒவ்வொரு விஷயமும் ஒன்றையொன்று விறுவிறுவென்று தொடர்ந்து செல்கின்றன....”

அவளது இயல்பான துணிச்சல் உணர்ச்சி மீண்டும் அவள் நெஞ்சில் எழுந்தது. அந்த உணர்ச்சியால் அவளது மனத்தில் பற்பல சிந்தனைகளும் உருவத் தோற்றங்களும் தோன்றி நிரம்பின. அவள் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டு தனது சிந்தனைகளைச் சொல்லில் வார்த்துச் சொல்லத்தொடங்கினாள்.

“இந்த வாழ்க்கை அதன் பாட்டுக்குப்போய்க்கொண்டே இருக்கிறது. ஒரே முடிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.... சமயங்களில் இது மிகவும் சிரமமாய்த்தானிருக்கிறது. ஜனங்கள் துன்புறுகிறார்கள்; அவர்களை அடிக்கிறார்கள், குரூரமாக வதைக்கிறார்கள்; அவர்களுக்கு எந்த இன்பமும் கிட்டாமல் போக்கடிக்கிறார்கள். இதைக் கண்டால் மிகுந்த சிரமமாயிருக்கிறது.”

லுத்மீலா தன் தலையைப் பின்னால் சாய்த்துத் தாயை அன்பு ததும்பப் பார்த்துக்கொண்டே சொன்னாள். "நீங்கள் சொல்வது உங்களைப்பற்றியில்லையே!”

தாய் படுக்கையைவிட்டு எழுந்து உடை உடுத்திக் கொள்ளத் தொடங்கினாள்.

“தன்னை எப்படிப் பிறரிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியும்? ஒருவனை நேசிக்கிறாய். அவனோ விலை மதிப்பற்றவன். அனைவரின் நலத்திற்காகவும் பயப்படுகிறான். ஒவ்வொருவருக்காகவும் அனுதாபப்படுகிறான். இவையெல்லாம் உன் இதயத்தில் மோதுகின்றன....... ஒரு புறமாய் எப்படி ஒதுங்கி நிற்க முடியும்?”

அவள் அந்த அறையின் மத்தியிலே ஒரு கணம் நின்றாள். பாதி உடுத்தியவாறே சிந்தனையில் ஆழ்ந்து நின்றுபோய்விட்டாள். ஒரு காலத்தில் தன் மகனது உடம்பை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்ற சிந்தனையிலேயே மூழ்கிப்போய் என்றென்றும் தன் மகனைப் பற்றிய கவலையிலும் பயத்திலும் அலைக்கழிந்த அந்தப் பழைய பெண் பிறவியாக, அவள் இப்போது இல்லை என்பது அவளுக்குத் தோன்றியது. அவள் எங்கோ தூரத் தொலைவில் போய்விட்டாள், அல்லது அவளது உணர்ச்சி நெருப்பில் அவள் சாம்பலாகிப் போயிருப்பாள். இந்த மாதிரி எண்ணிட தாயின் மனத்திலே ஒரு புதிய ஆவேசமும் பலமும் தோன்றின. அவள் தன் இதயத்தைத் துருவிப் பார்த்தாள்; அதன் துடிப்பைக் கேட்டாள், பழைய பயவுணர்ச்சிகள் மீண்டும் வந்துவிடக் கூடாதே என்று பயந்தாள்.

“என்ன யோசனை செய்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே லுத்மீலா அவள் பக்கம் வந்தாள்.

“தெரியாது” என்றாள் தாய்.

இருவரும் மௌனமாக ஒருவரையொருவர் பார்த்தார்கள்: புன்னகை புரிந்தார்கள். பிறகு லுத்மீலா அந்த அறையைவிட்டு வெளிச் சென்றவாறே சொன்னாள்.

“அங்கே என் தேநீர்ப் பாத்திரம் என்ன கதியில் இருக்கிறதோ?”

தாய் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். வெளியில் வெயிலும் குளிரும் பரவியிருந்தது. அவளது இதயமோ வெதுவெதுப்போடும் பிரகாசத்தோடும் இருந்தது. அவள் சகலவற்றைப் பற்றியும் சாங்கோபாங்கமாக மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருக்க விரும்பினாள். சந்தியா கால சூரிய ஜோதியைப் போல் இனிமையாகப் பிரகாசித்துக்கொண்டிருக்க எண்ணங்களைத் தன் இதயத்திலே புகுத்திவிட்ட யாரோ ஓர் இனம் தெரியாத நபருக்கு நன்றி காட்டிப் பேசவேண்டும் என்ற மங்கிய உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. இத்தனை நாட்களாக பிரார்த்தனை செய்வதையே கைவிட்டுவிட்ட அவளுக்கு அன்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற ஆசையெழுந்தது. அவளது மனக்கண்ணில் ஒரு வாலிப முகம் பளிச்சிட்டுத் தோன்றியது. அந்த முகம் அவளை நோக்கித் தெள்ளத் தெளிவான குரலில், “இவள்தான் பாவெல் விலாசவின் தாய்!” என்று கூறியது. அவள் கண் முன்னால் மகிழ்ச்சியும் அன்பும் துள்ளாடும் சாஷாவின் நயனங்கள்; ரீபினின் கரியதோற்றம், உறுதிவாய்ந்த உலோகம் போன்ற தன் மகனின் முகம். நிகலாயின் கூச்சத்துடன் கண்சிமிட்டும் பார்வை, முதலியன எல்லாம் தோன்றின. இந்த மனத்தோற்றங்கள் எல்லாம் திடீரென ஒர் ஆழ்ந்த பெருமூச்சாக ஒன்றுகலந்து உருவெடுத்து, வானவில்லின் வர்ணம் தோய்ந்த மேகப்படலத்தைப் போன்ற ஒளி சிதறி அவளது கன்னங்களைக் கவிழ்த்து சூழ்ந்து அவள் மனத்தில் ஒரு சாந்தியுணர்ச்சியை உருவாக்கின.

“நிகலாய் சொன்னது சரிதான்” என்று சொல்லிக்கொண்டே அந்த அறைக்குள் லுத்மீலா மீண்டும் வந்தாள்; “அவர்கள் அவனைக் கைது செய்துவிட்டார்கள். நீங்கள் சொன்ன மாதிரி நான் அந்தப் பையனை அனுப்பித் தெரிந்து வரச்சொன்னேன். வீட்டுக்கு வெளியே போலீஸ்காரர்கள் இருந்ததாகவும், வெளிக்கதவுக்குப் பின்னால் ஒரு போலீஸ்காரன் ஒளிந்து கொண்டிருந்ததாகவும் அவன் சொன்னான். சுற்றிச் சூழ உளவாளிகள் இருக்கிறார்களாம். அந்தப் பையனுக்கு அவர்களையெல்லாம் தெரியும்.”

“ஆ!” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னாள் தாய்; “பாவம், அப்பாவி...”

அவள் பெரு மூச்சுவிட்டாள், அதில் துக்க உணர்ச்சியில்லை, இதைக்கண்டு அவள் தன்னைத்தானே வியந்து கொண்டாள்.

“சமீப காலமாக அவன் இந்த நகரத்திலுள்ள தொழிலாளர்களுக்கு எவ்வளவோ வகுப்புக்கள் நடத்தி வந்தான். பொதுவாக, இது அவன் அகப்பட்டுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம்தான்” என்று அமைதியாக, ஆனால் முகத்தைச் சுழித்துக்கொண்டே சொன்னாள் லுத்மீலா, “அவனது தோழர்கள் அவனைத் தலைமறைவாகப் போகச் சொன்னார்கள், ஆனால் அவன் கேட்கவில்லை. இந்த மாதிரிக் சந்தர்ப்பங்களில் இவனைப் போன்ற ஆசாமிகளைப் ‘போ, போ’ என்று போதித்துக் கொண்டிருக்கக்கூடாது; நிர்ப்பந்த வசமாகத்தான் போகச் செய்யவேண்டும்.”

இந்தச் சமயத்தில் சிவந்த கன்னங்களும் கரிய தலைமயிரும், முன்வளைந்த மூக்கும். அழகிய நீலக் கண்களும் கொண்ட ஒரு சிறுவன் வாசல் நடையில் வந்து நின்றான்.

“நான் தேநீர் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டான் அவன்.

“கொண்டுவா, செர்கேய்” என்று கூறிவிட்டுத் தாயின் பக்கமாகத் திரும்பினாள் லுத்மீலா. “இவன் என் வளர்ப்புப் பையன்” என்றாள். அன்றைய தினத்தில் லுத்மீலா வழக்கத்துக்கு மாறாக சுமூகபாவத்தோடும் எளிமையோடும் பழகுவதாகவும் தாய்க்குத் தோன்றியது. அவளது உடலின் லாவகம் நிறைந்த அசைவுகளிலே ஒரு தனி அழகும் உறுதியும் நிறைந்திருந்தன. இத்தன்மை அவளது வெளுத்த முகத்தின் நிர்த்தாட்சண்ய பாவத்தை ஓரளவு சமனப்படுத்தியது. இரவில் கண் விழித்ததால் அவளது கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் விழுந்திருந்தன. என்றாலும் அவளது இதய வீணையில் ஏதோ ஒரு தந்தி முறுக்கேறி விறைத்து நிற்பது போன்ற தன்மையை எவரும் கண்டு கொள்ள முடியும்.

அந்தப் பையன் தேநீர்ப் பாத்திரத்தைக் கொண்டு வந்தான்.

“செர்கேய். உனக்கு இவளை நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இவள்தான் பெலகேயா நீலவ்னா, நேற்று விசாரணை நடந்ததே. அந்தத் தொழிலாளியின் தாய்.”

செர்கேய் ஒன்றும் பேசாமல் தலைவணங்கினான். தாயின் கையைப் பிடித்துக் குலுக்கினான். அறையை விட்டு வெளியே போனான். ஒரு ரொட்டியை எடுத்துக்கொண்டுவந்து, மீண்டும் தன் இடத்தில் அமர்ந்துக்கொண்டான். லுத்மீலா நேநீரைக் கோப்பையில் ஊற்றியவாறே, தாயை வீட்டுக்குப் போக வேண்டாம் என்றும், அந்தப் போலீசார் யாருக்காகக் காத்துக் கிடக்கிறார்கள் என்பது தெளிவாகிற வரையில், அவள் அந்தப் பக்கமே செல்லாமலிருப்பதே நல்லதென்றும் எடுத்துக்கூறினாள்.

“ஒரு வேளை அவர்கள் உங்களையே எதிர்பார்த்துக் கிடக்கலாம், பிடித்துக் கொண்டுபோய் ஏதாவது கேள்விகளைக் கேட்டுத் தொலைப்பார்கள்.”

“இருக்கட்டுமே” என்று பதில் சொன்னாள் தாய். “அவர்கள் விரும்பினால் என்னையும்தான் கைது செய்துகொண்டு போகட்டுமே. அதனால் என்ன பெரிய குடி முழுகிவிடப் போகிறது? ஆனால் பாவெலின் பேச்சை மட்டும் நாம் முதலில் விநியோகித்து விட்டோமானால்!”

“நான் அச்சுக் கோத்து முடித்துவிட்டேன். நாளைக்கு நகரிலும் தொழிலாளர் குடியிருப்பிலும் விநியோகிப்பதற்குத் தேவையான பிரதிகள் தயாராகிவிடும். உங்களுக்கு நதாஷாவைத் தெரியுமா?”

“நன்றாய்த் தெரியும்.”

“அவற்றை அவளிடம் கொண்டு சேருங்கள்.”

அந்தப் பையன் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான், அவர்கள் பேசியது எதையுமே அவன் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. ஆனால் இடையிடையே பத்திரிகைக்கு மேலாக நிமிர்ந்து தாயின் முகத்தைப் பார்த்தான். அவனது உணர்ச்சி நிறைந்த பார்வையைக் காணும் போதெல்லாம் தாய்க்கு மகிழ்ச்சி பொங்கும் புன்னகை புரிந்து கொள்வான். கொஞ்சம்கூட வருத்தமின்றி மீண்டும் நிகலாயைப் பற்றிப் பேசத் தொடங்கினாள் லுத்மீலா. அவள் அப்படிப் பேசுவது இயற்கைதான் என்பதைத் தாய் கண்டுகொண்டாள். நேரம் வழக்கத்தை மீறி வெகு வேகமாகச் செல்வது போலிருந்தது. அவர்கள் காலைச் சாப்பாட்டை முடிப்பதற்குள்ளே மத்தியானப் பொழுது வந்துவிட்டது.

“எவ்வளவு நேரமாகிவிட்டது!” என்று அதிசயித்தாள் லுத்மீலா.

அந்தச் சமயத்தில் யாரோ வெளியிலிருந்து கதவை அவசர அவசரமாகத் தட்டினார்கள். அந்தப் பையன் எழுந்திருந்து, கண்களைச் சுருக்கி விழித்தவாறே லுத்மீலாவைப் பார்த்தான்.

“கதவைத் திற. செர்கேய், யாராயிருக்கலாம்?”

அவள் தனது உடுப்பின் பைக்குள்ளே அமைதியாகக் கையை விட்டவாறே தாயைப் பார்த்துச் சொன்னாள்.

“அவர்கள் போலீஸ்காரராயிருந்தால், பெலகேயா நீலவ்னா, அந்த மூலையிலே நின்று கொள்ளுங்கள். செர்கேய், நீ..”

“எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டு அந்தப் பையன் வெளியே சென்றான்.

தாய் புன்னகை புரிந்தாள். இந்த மாதிரியான ஏற்பாடுகள் அவளைக் கலவரப்படுத்தவே இல்லை ; ஏதோ ஒரு விபரீதம் நிகழப் போகிறது என்ற பயபீதி உணர்ச்சியும் அவளுக்கு இல்லை.

ஆனால் உள்ளே அந்த குட்டி டாக்டர்தான் வந்து சேர்ந்தான்.

வந்ததுமே அவன் அவசரமாகப் பேசத் தொடங்கினான்; “முதலாவது-நிகலாய் கைதாகிவிட்டான். ஆஹா! நீலவ்னா. இங்கேயா வந்திருக்கிறீர்கள்? கைது நடந்த போது நீங்கள் வீட்டில் இல்லையா?”

“அவன்தான் இங்கு அனுப்பினான்.”

“ஹூம், இதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை, சரி, இரண்டாவது—நேற்று இரவு சில இளைஞர்கள் பாவெலின் பேச்சை சைக்கோஸ்டைலில் ஐநூறு பிரதிகள் தயார் பண்ணிவிட்டார்கள். நான் அவற்றைப் பார்த்தேன், மோசமாக இல்லை, எழுத்துத் தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தது. அவர்கள் அவற்றை இன்றிரவு நகர் முழுவதிலும் விநியோகித்து விடுவதை விரும்பினார்கள். நான் அதை எதிர்த்தேன். அச்சடித்த பிரதிகளை வேண்டுமானால் நகரில் விநியோகிக்கலாம். இவற்றை வேறு இடங்களுக்கு அனுப்புவோம் என்றேன்.”

“அவற்றை என்னிடம் கொடுங்கள். நான் இப்போதே நதாஷாவிடம் கொண்டு சேர்க்கிறேன்” என்று ஆர்வத்தோடு சொன்னாள் தாய். பாவெலது பேச்சை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விநியோகிக்க, தன் மகனது சொற்களை உலகமெங்கும் பரப்ப, அவள் பேராவல் கொண்டு தவித்தாள். எனவே கொஞ்சுவதுபோல அந்த டாக்டரின் முகத்தை பார்த்தாள். அவனது பதிலுக்காகக் காத்து நின்றாள்.

“நீங்கள் இந்த வேலையை இப்போது மேற்கொள்ளத்தான் வேண்டுமா என்பது சைத்தானுக்குத்தான் தெரியும்” என்று தயங்கிக்கொண்டே கூறிவிட்டு, அவன் தன் கடிகாரத்தை எடுத்தான். “இப்போது மணி பதினொன்று நாற்பத்தி மூன்று. இரண்டு மணி ஐந்து நிமிஷத்துக்குப் புறப்பட்டு ஐந்தே கால் மணிக்குப் போய் சேருவதற்கு ஒரு ரயில் இருக்கிறது. மாலைவேளைதான். இருந்தாலும் அப்படியொன்றும் காலதாமதமில்லை. ஆனால் இப்போது அது பிரச்சினையல்ல......”

“அது பிரச்சினையில்லை” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டு அதையே திரும்பக் கூறினாள் லுத்மீலா.

“எதுதான் பிரச்சினை?” என்று கேட்டுக்கொண்டே அவன் பக்கமாகச் சென்றாள் தாய். “காரியம் வெற்றியோடு முடியவேண்டும். அவ்வளவுதானே......”

லுத்மீலா அவளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே நெற்றியைத் துடைத்துவிட்டுக்கொண்டாள்.

“இந்தக் காரியத்தை மேற்கொள்ளுவது ஆபத்தானது.”

“ஏன்?” என்று அழுத்தத்தோடு கேட்டாள் தாய்.

“அதனால்தான்” என்று படபடவென்று பேசத் தொடங்கினான் அந்த டாக்டர். ‘நிகலாய் கைதாவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் நீங்கள் வீட்டைவிட்டுக் கிளம்பியிருக்கிறீர்கள், தொழிற்சாலைக்கும் போய் வந்திருக்கிறீர்கள். எனவே அந்த ஆசிரியையின் அத்தை என்று எல்லோரும் உங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அந்தச் சட்ட விரோதமான் பிரசுரங்கள் தொழிற்சாலையில் தலைகாட்டிவிட்டன. இதையெல்லாம் வைத்து ஜோடித்தால், உங்கள் கழுத்தில் சரியான சுருக்கு வந்து விழுந்துவிடும்.”

“என்னை அங்கு எவரும் கண்டுகொள்ள முடியாது!” என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினாள் தாய். “தான் திரும்பி வரும்போது அவர்கள் ஒருவேளை என்னைக் கைது செய்து ‘எங்கு போய்விட்டு வருகிறாய்?’ என்று கேட்டாலும்...”

அவள் ஒரு கணம் தயங்கினாள். பிறகு சத்தமிட்டுச் சொன்னாள்:

“என்ன சொல்வேன் என்பது எனக்குத் தெரியும். அங்கிருந்து நேராக நான் தொழிலாளர் குடியிருப்புக்குச் செல்வேன். அங்கு எனக்கு ஒரு சிநேகிதன் இருக்கிறான்-சிஸோவ். விசாரணை முடிந்ததும் நேராக அவன் வீட்டுக்கு மன ஆறுதல் பெறுவதற்காகச் சென்று விட்டு வருவதாகக் கூறுவேன். அவனுக்கு ஆறுதல் தேவைதான். அவனது மருமகனும் தண்டனை பெற்றிருக்கிறான். அவனும் நான் சொல்வதையே ஆமோதிப்பான்.”

அவர்கள் நிச்சயம் தனது ஆசைக்கு இணங்குவார்கள் என்று அவள் உணர்ந்தாள்; எனவே அவர்களைச் சீக்கிரம் இணங்க வைக்கவேண்டும் என்பதற்காக அவள் ஆத்திரத்தோடும் அழுத்தத்தோடும் பேசிக்கொண்டே போனாள். கடைசியில் ஒருவழியாக அவர்களும் சம்மதித்துவிட்டார்கள்.

“சரி, துணிந்து போங்கள்” என்று விருப்பமின்றிச் சொன்னான் அந்த டாக்டர்.

லுத்மீலா எதுவும் சொல்லவில்லை. சிந்தனையில் ஈடுபட்டவாறே முன்னும் பின்னும் நடந்துகொண்டுதானிருந்தாள். அவளது முகம் குழம்பி வாடிப்போயிருந்தது. அவளது கழுத்துத் தசைநார்கள் அவளது தலையைக் கீழே சாய்க்காதபடி இறுக்கமாய்த் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. தாய் இதைக் கவனித்துவிட்டாள்.

“நீங்கள் எல்லோரும் என்னைப்பற்றியே கவலைப்படுகிறீர்களே” என்று புன்னகையோடு கூறினாள் தாய்: “நீங்கள் உங்களைப்பற்றித்தான் கவலையே படக்காணோம்!”

“நீங்கள் சொல்வது உண்மையல்ல” என்றான் அந்த டாக்டர். “நாங்கள்ங்க ளைப்பற்றியும் கவலைப்படுகிறோம். அது எங்கள் கடமை. ஆனால் ஒன்றுமற்ற காரியத்துக்காக, தங்கள் சக்தியை விரயம் செய்பவர்களிடம்தான் நாங்கள் கடுமையாக நடந்து கொள்கிறோம். சரி போகட்டும். பேச்சின் நகல் பிரதிகள் நீங்கள் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தவுடன் அங்கு வந்து சேரும்......”

அவன் அவளுக்கு அந்தக் காரியத்தை எப்படியெப்படிச் செய்யவேண்டும் என்பதையெல்லாம் விளக்கிக் கூறினான். பிறகு அவளது முகத்தையே கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னான்.

“சரி, உங்களுக்கு அதிருஷ்டம் உண்டாகட்டும்!”

ஆனால் அவன் வெளியே செல்லும்போது அவன் முகத்தில் ஒரு மகிழ்ச்சியின்மை பிரதிபலித்தது. லுத்மீலா: தாயை நோக்கினாள்.

“உங்களை என்னால் புரிந்துகொள்ள முடியும்” என்று அமைதி நிறைந்த சிரிப்போடு சொன்னாள் அவள்.

பிறகு அவள் தாயின் கரத்தை எடுத்துப் பிடித்தாள்; மீண்டும் மேலும் கீழும் உலாவ ஆரம்பித்தாள். "எனக்கும் ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு இப்போது பதின்மூன்று வயதாகிவிட்டது, ஆனால், அவன் தன் தந்தையோடு வாழ்கிறான். என் கணவர் ஓர் அரசாங்க வக்கீலின் நண்பர். அந்தப் பையன் அவரோடு இருக்கிறான். அவன் எப்படி மாறப் போகிறனோ? அதைப்பற்றி நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு.....”

அவளது குரல் அடைபட்டு நின்றது. ஒரு நிமிஷம் கழித்து அவள் மீண்டும் அமைதியாக, சிந்தனையோடு பேசத் தொடங்கினாள்.

“நான் எந்த ஜனங்களை நேசிக்கிறேனோ, இந்த உலகத்தில் எந்த ஜனங்களை அருமையான மக்கள் என்று. மதிக்கிறேனோ அந்த ஜனங்களுக்குப் பரம எதிரியானவரிடம் தான் அவன் வளர்ந்து வருகிறான். என் மகனே எனக்கு எதிரியாக வளர்ந்து வரக்கூடும்: அவனால் என்னுடன் வாழ முடியாது. நான் இங்கு மாறு பெயரில் வாழ்ந்து வருகிறேன். அவனை நான் பார்த்தே எட்டு வருஷங்கள் ஆகின்றன. எட்டு வருஷங்கள்! எவ்வளவு காலம்!”

அவள் ஜன்னலருகே நின்றாள். நிர்மலமாக வெளுத்துக்கிடந்த வானத்தைப் பார்த்தாள்.

அவன் மட்டும் என்னோடு வாழ்ந்திருந்தால், நான் இன்னும் பலம் பெற்றிருப்பேன். எனது இதயத்தில் இந்த வேதனை இன்னும் உறுத்திக்கொண்டிருக்காது..... அவன் இறந்து போயிருந்தால்கூட. எனக்குச் சிரமமில்லாது போயிருக்கும்......”

“அடி. என் கண்ணே !” என்று பாசத்தால் புண்பட்ட இதயத்தோடு பெருமூச்செறிந்தாள் தாய்.

“நீங்கள் அதிருஷ்டக்காரர்!” என்று ஒரு கரத்த புன்னகையோடு சொன்னாள் லுத்மீலா. “அதிசயமான ஒற்றுமை —தாயும் மகனும் ஒரே அணியில் ஒருவர் பக்கம் ஒருவர்—- அபூர்வமான நிகழ்ச்சி!”

“ஆமாம். அதிசயமானதுதான்” என்று தன்னைத்தானே வியந்து கூறிக்கொண்டாள் பெலகேயா. பிறகு, தன் குரலைத் தாழ்த்தி ஏதோ ஓர் அந்தரங்க ரகசியத்தைக் கூறுவதுபோல அவள் பேசினாள், “நீங்கள் எல்லோரும்—-நிகலாய் இவானவிச்சும், சத்தியத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் —-நீங்கள் எல்லோருமே ஒருவர் பக்கம் ஒருவராகத்தான் நிற்கிறீர்கள். திடீரென்று மக்கள் அனைவரும் நமக்கு உறவினர்களாகிவிடுகிறார்கள். உங்கள் அனைவரையும் நான் புரிந்துகொள்கிறேன். எனக்கு வார்த்தைகள்தான் புரியாது போகலாம்; ஆனால் அதைத் தவிரப் பிறவற்றையெல்லாம் என்னால் புரிந்து கொள்ளமுடியும்.”

“ஆமாம். அப்படித்தான்” என்று முனகினாள் லுத்மீலா. “அப்படித்தான்......" தாய் தன் கையை லுத்மீலாவின் மார்பின் மீது வைத்துக்கொண்டே ரகசியக் குரலில் மேலும் பேசினாள்; ஒவ்வொரு வார்த்தையையும் நினைத்து நினைத்துப் பேசுவது போலிருந்தது அவள் பேச்சு.

“நமது பிள்ளைகள் உலகில் அணிவகுத்துச் செல்கிறார்கள். அதைத்தான் நான் புரிந்துகொள்கிறேன்—நமது பிள்ளைகள் உலகில் அணி வகுத்துச்செல்கிறார்கள்; உலகெங்கும், சகல மூலைமுடுக்குத் திசைகளிலிருந்தும் ஒரே ஒரு லட்சியத்தை நோக்கி அணிவகுத்து முன்னேறுகிறார்கள். பரிசுத்தமான உள்ளத்தோடும், அருமையான மனத்தோடும், தீமையை எதிர்த்து தமது பலத்த காலடியால் பொய்மையை மிதித்து நசுக்கிக்கொண்டே, கொஞ்சங்கூடத் தயக்கமின்றி முன்னேறிச் செல்கிறார்கள்.” அவர்கள் இளைஞர்கள். ஆரோக்கியசாலிகள்; அவர்களது சகல சக்தியையும் ஒரே ஒரு விஷயத்தை நோக்கி — நியாயத்தை எதிர்நோக்கிப் பிரயோகித்துச் செல்கிறார்கள். மனிதகுலத்தின் துயரத்தை வெல்வதற்காக அவர்கள் முன்னேறுகிறார்கள். சகல துரதிருஷ்டங்களையும் துடைத்துத் தூர்ப்பதற்காக சகல அசுத்தங்களையும் கழுவிப் போக்குவதற்காக அவர்கள் அணியணியாக முன்னேறிச் செல்கிறார்கள். அவற்றை அவர்கள் போக்கித்தான் தீருவார்கள். அவர்கள் ஒரு புதிய சூரியனை உலகுக்குக் கொண்டுவருவார்கள் என்று அவர்களில் ஒருவன் சொன்னான். நிச்சயம் அந்தச் சூரியனை அவர்கள் கொண்டு வந்தே தீருவார்கள்! மனமுடைந்துபோன சகல இதயங்களையும் ஒன்றுபடுத்துவார்கள்; ஒன்றுபடுத்தியே தீருவார்கள்!”

அவள் தான் மறந்துவிட்ட பிரார்த்தனை - வாசகங்களை எண்ணிப் பார்த்தாள். அந்த வார்த்தைகளால் அவளது மனத்திலே புதியதொரு நம்பிக்கை பிறந்தது. அந்த வாசகங்கள் அவளது இதயத்திலிருந்து தீப்பொறிகளைப் போல் சுடர்விட்டுத் தெறித்துப் பிறந்தன.

“நமது பிள்ளைகள் சத்தியமும் அறிவும் சமைத்த பாதையிலே செல்கிறார்கள். மனித இதயங்களுக்கு அன்பைக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இவ்வுலகத்திலே புதியதொரு சொர்க்க பூமியை உண்டாக்குகிறார்கள். இவ்வுலகத்தைப் புதியதொரு ஒளி வெள்ளத்தால், ஆத்ம ஆவேசத்தின் அணையாத தீபத்தால், ஒளிரச் செய்கிறார்கள். அந்த ஒளிப்பிழம்பின் தீ நாக்குகளிலிருந்து புதிய வாழ்க்கை பிறப்பெடுத்துப் பொங்குகிறது. மனித சமுதாயத்தின் மீது நமது பிள்ளைகள் கொண்டுள்ள அன்பிலிருந்து அந்த வாழ்க்கை பிறப்பெடுக்கிறது. அந்த அன்பை எவரால் அணைக்க முடியும்? இதை எந்த சக்திதான் அழிக்க முடியும்? எந்த சக்திதான் இதை எதிர்க்க முடியும்? பூமியிலிருந்து இது ஊற்றெடுத்துப் பொங்கி வருகிறது: வாழ்க்கை முற்றும் இதன் வெற்றிக்காகப் பாடுபடுகிறது. ஆம், வாழ்க்கை முற்றும்தான்!”

அவளது உணர்ச்சியாவேசத்தால் அவள் சோர்ந்துபோய் லுத்மீலாவை விட்டுப் பிரிந்து இரைக்க மூச்சுவாங்கிக்கொண்டே கீழே உட்கார்ந்தாள். லுத்மீலாவும் சத்தம் செய்யாமல் ஜாக்கிரதையோடு நடந்து சென்றாள். எதையோ கலைத்துவிடக் கூடாது என்ற பயத்தோடு நடந்தாள். அவள் தனது ஒளியற்ற கண்களை முன்னால் பதித்துப் பார்த்தவாறு அந்த அறைக்குள்ளே நாசூக்கோடு நடந்தாள். அவள் முன்னைவிட உயரமானவளாக, நிமிர்ந்தவளாக, மெலிந்துவிட்டதாகத் தோன்றினாள். அவளது மெலிந்த கடுமை நிறைந்த முகத்தில் ஒர் ஆழ்ந்த கவனம் தோன்றியது அவளது உதடுகள் துடிதுடித்து இறுகி மூடியிருந்தன். அந்த அறையிலே நிலவிய அமைதி தாயின் மனத்தைச் சாந்தி செய்தது. லுத்மீலாவின் நிலைமையைக் கண்டறிந்த தாய்தான் ஏதோ தவறாகச் சொல்லிவிட்டதுபோல் கேட்டாள்.

“நான் ஏதும் சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டேனா?”

லுத்மீலா அவள் பக்கம் திரும்பி, பயந்து போனவள் மாதிரி அவளைப் பார்த்தாள், பிறகு எதையோ நிறுத்தப் போவது மாதிரி தாயை நோக்கிக் கையை நீட்டிக்கொண்டு அவசர கதியில் பேசினாள்.

“இல்லையில்லை. இப்படித்தான் இருக்கிறது. இப்படித்தான். ஆனால் அதைப்பற்றி நாம் இனிமேல் பேசவே கூடாது. நீங்கள் சொன்னதோடு இருக்கட்டும்.” அவளது குரல் மிகுந்த அமைதியோடிருந்தது. அவள் மேலும் சொன்னாள்: “சரி சீக்கிரம் புறப்பட வேண்டும். நீங்கள் போக வேண்டிய தூரமோ அதிகம்.”

“சீக்கிரமே கிளம்புகிறேன். நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பதை மட்டும் நீங்கள் அறிந்தால்! என்னுடைய மகனின் என்னுடைய சதையையும் ரத்தமும் கொண்ட என் மகனுடைய வாசகங்களை நான் பிறரிடம் கொண்டு செல்லும்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன். எனது இதயத்தையே வழங்குவது போல் இருக்கிறது எனக்கு!”

அவள் புன்னகை செய்தாள். ஆனால் அந்தப் புன்னகையால் லுத்மீலாவின் முகத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை. அந்தப் பெண்ணின் அடக்க குணத்தால் தனது மகிழ்ச்சியெல்லாம் அடைபட்டு ஆழ்ந்து போவது மாதிரி தாய்க்குத் தோன்றியது. அந்தக் கடின சித்தக்காரியின் இதயத்திலே தனது உணர்ச்சித் தீயை மூட்டிவிடத்தான் வேண்டும் என்ற உறுதியான ஆர்வ உணர்ச்சி தாயின் மனத்தில் திடீரெனத் தோன்றியது. அந்தக் கடின சித்தத்தையும் வசப்படுத்தி, ஆனந்தப் பரவசமான தன் இதயத்தின் உணர்ச்சிகளை அந்தக் கடின

சித்தமும் பிரதிபலிக்கும்படி செய்துவிடவேண்டும் எனத் தாய் விரும்பினாள். அவள் லுத்மீலாவின் கைகளை எடுத்து அவற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டே பேசினாள்.


“அன்பானவளே, சகல மக்களுக்கும் ஒளியூட்டுவதற்கு ஒன்று இருக்கிறதென்பதை அந்த ஜோதியைச் சகல மக்களும் ஏறிட்டு நோக்கும் காலம் வரத்ததான் செய்யும் என்பதை, அந்த ஜோதியை அவர்கள் இதயபூர்வமாக வரவேற்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க எவ்வளவு நன்றாயிருக்கிறது!”


தாயின் அன்பு ததும்பும் அகன்ற முகத்தில் ஒரு நடுக்கம் குளிர்ந்தோடிப்பரந்தது. அவளது கண்கள் பிரகாசம் எய்தின. புருவங்கள் அந்தப் பிரகாசத்தை நிழலிடுவது போலத் துடிதுடித்தன. பெரிய பெரிய எண்ணங்களால் அவள் சிந்தை மயங்கிப் போயிருந்தாள்; அந்த எண்னாங்களுக்குள் தனது இதயத்துக்குள்ளே உள்ள சகல நினைவுகளையும், தான் வாழ்ந்த வாழ்வனைத்தையும் பெய்து வைத்தாள். அந்த எண்ணங்களின் சாரத்தை அவள் ஸ்படிக ஒளி வீசும் உறுதியான வார்த்தைகளாக வடித்தாள். அந்த வார்த்தைகள் அவளது இலையுதிர்கால இதயத்தில் பிரமாண்டமாகப் பெருகி வளர்ந்தது. அங்கு வசந்தகால சூரியனின் சிருஷ்டி சக்தியைக் குடியேற்றி, ஒளி ஊட்டின: என்றென்றும் வளர்ந்தோங்கும் பிரகாசத்தோடு அவை அவள் இதயத்தில் நின்று நிலைத்து ஒளி செய்தன.


“மக்களுக்கு ஒரு புதிய கடவுளே பிறந்து விட்டதுபோல் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் எல்லாம், எல்லோருக்காகவும்- ஒவ்வொன்றும்! இப்படித்தான் நான் உங்களைப் புரிந்து கொள்கிறேன், உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் அனைவரும் தோழர்கள்: நீங்கள் அனைவரும் அன்பர்கள், நீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள்!”

மீண்டும் அவள் உணர்ச்சியாவேசத்துக்கு ஆளாகிவிட்டாள், அவள் பேச்சை நிறுத்தி மூச்செடுத்தாள் தழுவப் போகிற மாதிரி தனது கைகளை அகல விரித்துக் கொண்டு பேசினாள்;


“அந்த வார்த்தையை-தோழர்கள் என்னும் அந்த வார்த்தையை— எனக்கு நானே சொல்லிக்கொள்ளும்போது, என் இதயத்திலே அவர்கள் அணிவகுத்துச் செல்லும் காலடியோசையை என்னால் கேட்க முடிகிறது.”

அவள் தன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டாள். லுத்மீலாவின் முகம் சிவந்தது: உதடுகள் துடிதுடித்தன, தெள்ளத் தெளிந்த பெருங் கண்ணீர்த்துளிகள் அவளது கன்னத்தில் வழிந்தோடின. “ தாய் அவளைத் தன் கரங்களால் இறுகத் தழுவினாள்; மெளனமாகப் புன்னகை செய்தாள், தனது இதயத்தின் வெற்றியை எண்ணி அன்போடு மகிழ்ந்துகொண்டாள்.

அவர்கள் பிரியும்போது,லுத்மீலா தாயின் முகத்தைப் பார்த்து மெதுவாகச் சொன்னாள்:

“உங்களருகில் இருப்பது எவ்வளவு நன்றாயிருக்கிறது தெரியுமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/57&oldid=1293265" இலிருந்து மீள்விக்கப்பட்டது