உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்/58

விக்கிமூலம் இலிருந்து

29

தாய் தெருவுக்கு வந்தவுடன், குளிர்ந்து விறைக்கும் வாடைக்காற்று அவளது உடம்பை இறுகப் பிணைத்து அவளது நாசியைத் துளைத்தது: ஒரு கணம் மூச்சையே திணற அடித்தது. அவள் நின்றாள், சுற்றுமுற்றும் பார்த்தாள். பக்கத்து மூலையில் தொள தொளத்த தொப்பியோடு ஒரு வண்டிக்காரன் நின்றுகொண்டிருந்தான். அதற்கு அப்பால் தெருக்கோடியில் கூனிக்குறுகி தனது தலையை உள்ளிழுத்து தோள்களுக்குள் புதைந்தவாறே ஒரு மனிதன் நடந்து சென்றான்; அவனுக்கும் அப்பால் ஒரு சிப்பாய் தன் செவிகளைத் தேய்த்து விட்டவாறே ஓடிக்கொண்டிருந்தான்.

“அந்த சிப்பாயை எங்காவது கடைக்கு அனுப்பியிருப்பார்கள்” என்று அவள் எண்ணினாள், எண்ணிக்கொண்டே, தனது காலடியில் நசுங்கி நொறுங்கும் பனிக்கட்டிகளின் சத்தத்தைக் கேட்டவாறே நடந்து போனாள். அவள் ரயில் நிலையத்துக்கு நேரங்காலத்தோடேயே வந்து சேர்ந்துவிட்டாள். அழுக்கும் அகத்தமும் அடைந்திருந்த மூன்றாம் வகுப்புப் பிராணிகளின் அறையில் ஒரே ஜனக்கூட்டமாக இருந்தது. அங்கிருந்த தொழிலாளர்களை எல்லாம் குளிர் உள்ளே அடித்து விரட்டியிருந்தது. வண்டிக்காரர்களும், வீடு வாசலற்று கந்தல் கந்தலான உடையணிந்த அனாதைகளும் அங்கு நிறைந்திருந்தார்கள். அங்கு பிரயாணிகளும் இருந்தார்கள். சில விவசாயிகள், மென்மயிர்க்கோட் அணிந்த கொழுத்த வியாபாரி ஒருவன், ஒரு மதகுரு, அம்மைத் தழும்பு முகங் கொண்ட அவரது மகள், ஐந்தாறு சிப்பாய்கள். நிலை கொள்ளாது தவிக்கும் சில அங்காடிக்காரர்கள் - இவர்கள்தான் அங்கிருந்தார்கள், ஜனங்கள் தேநீர் குடித்தார்கள்; புகைபிடித்தார்கள்; ஓட்கா அருந்தினார்கள்; சளசளத்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்; சிற்றுண்டிச்சாலையின் அருகே யாரோ குபுக்கென்று வாய்விட்டுச் சிரித்தார்கள். அவர்களது தலைக்கு மேலாக புகைச் சுழல் வட்டமிட்டுச் சுழன்றது. கதவுகளைத் திறக்கும்போது அவை முனகிக் கீச்சிட்டன, கதவுகளை அடைக்கும்போது ஜன்னல் கண்ணாடிகள் நடுநடுங்கி கடகடத்து ஒசை செய்தன. அந்த அறையிலே சுருட்டு நாற்றமும் கருவாட்டும் நாற்றமுமே நிறைந்திருந்தன.


தாய் வாசல் பக்கத்தில் ஓர் எடுப்பான இடத்தில் உட்கார்ந்து காத்திருந்தாள். எப்போதாவது கதவு திறக்கப்பட்டால் அவளது முகத்தில் குளிர்ந்த காற்று உறைக்கும். அந்தக் குளிர் அவளுக்கு இன்பம் அளித்தது. அப்படிக் காற்று உறைக்கும் போதெல்லாம் அவள் அதை இழுத்து சுவாசித்து அனுபவித்தாள். ஜனங்கள் பெரும்பாலோர் மூட்டை முடிச்சுகளோடும் கனத்த மாரிக்காலத் துணிமணி அணிந்து உள்ளே வந்தார்கள். அவர்கள் கதவு வழியே நுழைய முடியாமல் திண்டாடினார்கள்: திட்டிக்கொண்டார்கள், தரை மீதோ பெஞ்சின் மீதோ சாமான்களைத் தாறுமாறாகப் போட்டுவிட்டு, தமது கோட்டுக் காலரிலும் கைகளிலும் தாடி மீசைகளிலும் படிந்துகிடக்கும் பனித்துகள்களைத் தட்டிவிட்டார்கள்.

ஒரு தோல் பெட்டியைக் கையில் தூக்கிக்கொண்டு ஒர் இளைஞன் உள்ளே வந்தான். சுற்றுமுற்றும் பார்த்தவாறே அவன் தாயை நோக்கி நேராக வந்தான்.

“மாஸ்கோவுக்கா?” என்று கேட்டான்.

“ஆமாம். தான்யாவைப் பார்க்கப் போகிறேன்” என்றாள் அவள்.

“ஆஹா !”

அவன் அந்தத் தோல் பெட்டியை அவளருகிலே பெஞ்சின் மீது வைத்தான்; சிகரெட்டைப் பற்ற வைத்தான்; தன் தொப்பியை உயர்த்தி வைத்தான்: அடுத்த வாசல் வழியாகச் சென்று மறைந்தான். தாய் அந்தக் குளிர்ந்து போன தோல் பெட்டியைத் தட்டிக் கொடுத்துக்கொண்டாள். பிறகு அதன் மீது முழங்கையை ஊன்றிச் சாய்த்தவாறே திருப்தியுணர்ச்சியோடு தன்னைச் சுற்றியள்ள ஜனங்களைப் பார்த்தாள். ஒரு நிமிஷம் கழித்து அவள் அந்த இடத்தை விட்டு எழுந்து வெளிவாசல் புறத்துக்கு அருகிலுள்ள பெஞ்சை நோக்கி நடந்தாள். அவள் தலையை நிமிர்த்தித் தன்னைக் கடந்து செல்பவரின் முகங்களைக் கவனித்தவாறே அந்தத் தோல் பெட்டியைக் கையில் சுமந்துகொண்டே நடந்து சென்றாள். பெட்டி ஒன்றும் அவ்வளவு பெரியதாகவோ கனமாகவோ இல்லை.


ஓர் இளைஞன் தனது குட்டையான கோட்டின் காலரைத் தூக்கி விட்டவாறே தாயின்மீது மோதினான். அவன் தன் கையால் தலையைத் தடவியவாறே பேசாமல் ஒதுங்கிச் சென்றான். அவனைக் கண்ட மாத்திரத்தில் அவனை எங்கோ பார்த்த மாதிரி தோன்றியது: அவள் திரும்பிப் பார்த்தாள். அவனும் தனது வெளுத்த கண்களால் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்தக் கூரிய பார்வை அவளது நெஞ்சைக் கத்திபோலக் குத்தியது; தோல் பெட்டியைப் பிடித்திருந்த அவளது கரம் பலமிழந்து தள்ளாடியது: திடீரென்று அந்தப் பெட்டியின் கனம் அதிகரித்துவிட்டதுபோல் தோன்றியது.


“இவனை நான் இதற்கு முன்பே எங்கோ பார்த்திருக்கிறேனே” என்று யோசித்தாள் அவள். தனது இதயத்திலே தோன்றிய புழுக்க உணர்ச்சியை அவள் வெளியேற்றிவிட முனைந்தாள். தனது இதயத்தை மெதுவாக, எனினும் தவிர்க்க முடியாதபடி உறையச் செய்யும் அந்த உணர்ச்சியை அலசி ஆராய அவள் விரும்பவில்லை. அதை ஒதுக்கித் தள்ளினாள். ஆனால் அந்த உணர்ச்சியோ விம்மி வளர்ந்து அவளது தொண்டைக் குழி வரையிலும் முட்டிமோதி அவளது வாயில் ஒரு வறண்ட, கசப்புணர்ச்சியை நிரப்பியது. அவள் தன்னை அறியாமலேயே அந்த மனிதனை மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஆசைக்கு ஆளானாள். அவள் திரும்பினாள். அவன் அதே இடத்தில் கால்மாறி நின்றுகொண்டு, ஏதோ செய்ய எண்ணுவது போலவும் நின்று கொண்டிருந்தான். அவனது வலது கை கோட்டுப் பித்தான்களுக்கிடையில் நுழைந்து போயிருந்தது. இடது கை கோட்டுப் பைக்குள் இருந்தது. எனவே அவனது வலது தோள் இடது தோளைவிட உயர்ந்ததாகத் தோன்றியது.

அவள் பெஞ்சை நோக்கிச் சென்று மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும் தன்னுள் உள்ள எதுவோ நொறுங்கிப் போய்விடும் என்ற பயத்தோடு உட்காருவது போல் ஒரிடத்தில் அமர்ந்தாள். வரும் துன்பத்தை உணர்த்தும் கூரிய முன்னுணர்வினால் கிளரப்பட்ட நினைவில், இரண்டு முறை அம்மனிதளைப் பார்த்ததாக, திடுமென்று அவளுக்கு நினைவு வந்தது. பின் தப்பியோடும் போது நகரின் கோடியிலுள்ள வெட்டவெளி மைதானத்தில் அவனை ஒரு முறை அவள் கண்டிருக்கிறாள். இரண்டாவது முறையாக அவனை விசாரணையின்போது பார்த்திருக்கிறாள்: ரீபின் தப்பியோடும் போது தன்னை விசாரித்த போலீஸ்காரனுக்குத் தப்பான வழியைச் சுட்டிக் காட்டினாளே. அந்தப் போலீஸ்காரனும் நீதிமன்றத்தில் இவன் பக்கத்தில் அப்பொழுது நின்று கொண்டிருந்தான். சரிதான். தன்னைப் பின்தொடர்ந்துதான் அவன் வருகிறான் என்பதை அவள் உணர்ந்துகொண்டாள். தெளிவாக அறிந்து கொண்டாள்.


“அகப்பட்டுவிட்டேனா?” என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஒரு நிமிஷம் கழித்து அவள் தன்னுள் நடுங்கிக்கொண்டே

அதற்குப் பதிலும் கூறிக்கொண்டாள்:

“இன்னும் அகப்படவில்லை.”

ஆனால் உடனேயே அவள் பெரு முயற்சி செய்து மீண்டும் தனக்குள் உறுதியோடு சொல்லிக் கொண்டாள்.


“அகப்பட்டுவிட்டேன்!”

அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்; ஆனால் எதுவும் அவள் கண்ணில்படவில்லை, அவள் மனத்தில் எத்தனையோ எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பளிச்சிட்டுத் தோன்றின.

“இந்தத் தோல் பெட்டியை விட்டுவிட்டு நழுவிவிடலாமா?”

இந்த எண்ணத்தை மீறி இன்னொரு எண்ணம் பளிச்சிட்டது:

“என்னது? என் மகனது வாசகங்களை நிராகரித்துவிட்டுச் செல்வதா? இவர்கள் போன்றவர்களிடம் விட்டுவிட்டுச் செல்வதா?”

அவள் பெட்டியை இறுகப் பிடித்தாள்.

“இதையும் தூக்கிக்கொண்டே போய்விடலாமா? ஓடி விடலாமா?”

இந்த எண்ணங்கள் எல்லாம் அவளுக்கு அன்னியமாய்த் தோன்றின. யாரோ வேண்டுமென்றே இந்த எண்ணங்களைத் தன் மனத்தில் திணிப்பது போல இருந்தது. அவை அவளது மனக்குகையிலே எரிந்து கனன்றன: ஊசி முனைகளைப் போல் அவளது நெஞ்சைத் துளைத்தன, அந்த வேதனையுணர்ச்சியால் அவள் தன்னை மறந்தாள்; தனக்கு அருமையான சகலவற்றையும், பாவெலையும் கூட மறந்தாள். ஏதோ ஒரு பகைச் சக்தி அவளது தோள்களையும் நெஞ்சையும் அழுத்திக்கொண்டு அவளை மரண பயத்துக்கு ஆளாக்குவது போலிருந்தது. அவளது நெற்றிப் பொருத்திலுள்ள ரத்தக் குழாய்கள் படபடத்துத் துடித்தன. அவளது மயிர்க்கால்களில் உஷ்ணம் பரவுவது மாதிரி இருந்தது.

திடீரென்று அவள் பெருமுயற்சி செய்து தன் எண்ணங்களையெல்லாம் கேவலமானதாக, வலுவற்றதாகக் கருதி அவற்றை மிதித்து ஒதுக்கினாள், தனக்குத் தானே கம்பீரமாகச் சொல்லிக்கொண்டாள்.

“உனக்கு வெட்கமாயில்லை?”

இந்த எண்ணம் தோன்றியவுடனேயே அவள் தெளிவடைந்தாள். அவள் மனத்தில் தைரியம் குடிபுகுந்தது. தனக்குள் பேசிக்கொண்டாள்:

“உன் மகனை இழிவுபடுத்தாதே. இதற்குப் போய் யாராவது பயப்படுவார்களா?”

அவளது கண்களில் யாரோ ஒருவனின் சோகமான மங்கிய பார்வைபட்டது. அவளது மனத்தில் ரீபினின் முகம் தோன்றியது. சில கணநேரத் தயக்கத்துக்குப் பின்னர் அவளது உள்ளமும் உடலும் நிதானத்துக்கு வந்தன, இதயத்துடிப்பு சமனப்பட்டது.

“இப்போது என்ன நடக்கும்?” என்று அவள் சுற்றுமுற்றும் பார்த்தவாறே எண்ணிக்கொண்டாள்.

அந்த உளவாளி ஸ்டேஷன் காவல்காரனைக் கூப்பிட்டு அவனிடம் அவளைக் கண்ணால் சுட்டிக்காட்டி ஏதோ ரகசியமாகக் கேட்டான். அந்தக் காவலாளி அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் திரும்பிப் போனாள்; இன்னொரு காவலாளி வந்தான். அவனிடமும் அவன் ரகசியம் பேசினான். அதைக் கேட்டு அவன் முகத்தைக் சுழித்தான்.அவன் ஒரு கிழவன், நரைத்த தலையும் சவரம் செய்யாத முகமும் கொண்டவளாகத் தோன்றினான். அவன் அந்த உளவாளியை நோக்கித் தலையை ஆட்டிவிட்டு, தாய் அமர்ந்திருந்த பெஞ்சை நோக்கி வந்தான். அந்த உளவாளி அதற்குள் மறைந்து போய்விட்டான்.

அந்தக் காவலாளி நிதானமாக அவளிடம் வந்து அதிருப்தியுணர்ச்சியோடு தாயைப் பார்த்தான். அவள் பெஞ்சிலிருந்தவாறே குன்றிக் குறுகினாள்.

“இவர்கள் என்னை மட்டும் அடிக்காமலிருந்தால்!” என்று எண்ணினாள்.

அவன் அவள் முன் நின்றான். ஒரு நிமிஷம் பேசாது நின்றான்: கடுமையாகச் சொன்னான்:

“நீ என்ன பார்க்கிறாய்?”

“ஒன்றுமில்லை”

“அப்படியா? திருடி! இந்த வயசிலுமா திருட்டுப்புத்தி?”

அந்த வார்த்தைகள் அவளது முகத்தில் ஓங்கியறைந்தன. ஒரு முறை-இரு முறை! அந்தக் குரோதத் தாக்குதல் அவள்து தாடையையே பெயர்த்து, கண்களைப் பிதுங்கச் செய்வது மாதிரி வேதனை அளித்தது.

“நானா? நான் ஒன்றும் திருடியில்லை. பொய் சொல்கிறாய்” என்று தன்னால் ஆனமட்டும் உரத்த குரலில் கத்தினாள் அவள். அவமானத்தின் கசப்பாலும், கோபவெறியின் சூறாவளியாலும் அவளது சர்வ நாடியுமே கதிகலங்கிப் போயின. அவள் தோல் பெட்டியை உலுக்கித் திறந்தாள்.

“பாருங்கள்; எல்லோரும் பாருங்கள்!” என்று கத்திக்கொண்டே அவள் துள்ளியெழுந்தாள். அவளது கைகளில் ஒரு கத்தைப் பிரதிகளை எடுத்துக்கொண்டு தலைக்கு மேலே உயர்த்தி ஆட்டிக் காட்டினாள்.

அவளை நோக்கி நாலா திசைகளிலிருந்தும் ஓடிவரும் ஜனங்களின் பேச்சுக்குரல் அவளது காதின் இரைச்சலையும் மீறிக் கேட்டது.


“என்ன நடந்தது?”

“அதோ அங்கே - ஓர் உளவாளி”

“என்ன அது?”

“இவளை அவர்கள் திருடியென்கிறார்கள்.”

“பார்த்தாளே கண்ணியமானவளாய்த் தெரிகிறதே. இவளையா? ச்சூ! ச்சூ!

“நான் திருடியல்ல” என்று உரத்தக் குரலில் சத்தமிட்டாள் தாய்; தன்னைச் சுற்றி சூழ்ந்த ஜனக்கூட்டத்தைக் கண்டு அவளுக்கு ஓரளவு அமைதி ஏற்பட்டது.


“நேற்று அரசியல் குற்றவாளிகள் சிலரை விசாரணை செய்தார்கள், அந்தக் குற்றவாளிகளில் என் மகனும் ஒருவன். அவன் பெயர் விலாசவ். அவன் அங்கு ஒரு பிரசங்கம் செய்தான். இதுதான் அந்தப் பேச்சு அதை நான் மக்களிடம் வழங்கப் போகிறேன். அவர்கள் இதைப் படிக்கட்டும். உண்மையைத் தெரிந்து கொள்ளட்டும்....”

யாரோ மிகுந்த ஜாக்கிரதையோடு அவள் கையிலிருந்து ஒரு பிரதியை உருவிப் பிடுங்கினார்கள். அவள் அவற்றை மேலே உயர்த்தி ஆட்டிக் கொண்டே, ஜனக்கூட்டத்தில் விட்டெறிந்தாள்.


“இதற்கு உனக்குச் சரியான தண்டனை கிடைக்கும்” என்று யாரோ, கூட்டத்திலிருந்து பயந்த குரலில் சத்தமிட்டார்கள்.

ஜனங்கள் அந்தப் பிரதிகளைப் பாய்ந்து பாய்ந்து பிடித்துத் தமது கோட்டுகளுக்குள்ளும் பாக்கெட்டுகளுக்குள்ளும் மறைத்துக் கொள்வதைக் கண்டாள். இதைக் கண்டவுடன் அவளுக்கு மீண்டும் உறுதி பிறந்தது:அசையாமல் நின்றாள். அவள் அமைதியோடு அழுத்தத்தோடு பேசினாள். அவளது இதயத்தினுள்ளே ஓங்கி வளரும் இன்பத்தையும் பெருமிதத்தையும் உணர்ந்தாள். பேசிக்கொண்டே பெட்டியிலிருந்து அந்தப் பிரதிகளை வாரியெடுத்து அங்குமிங்கும் கைகளை நீட்டிப் பிடிப்பதற்காகத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஜனக்கூட்டத்தை நோக்கி விட்டெறிந்தாள்.

“என் மகனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் ஏன் விசாரணைக்குக் கொண்டு வந்தார்கள் தெரியுமா? நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு தாயின் இதயத்தை, என் போன்ற ஒரு கிழவியின் பேச்சை நீங்கள் நம்ப முடியும் அல்லவா? அவர்களை விசாரணைக்குக் கொண்டுவந்தது ஏன்? எல்லோருக்கும் அவர்கள் உண்மையை எடுத்துக்

கூறியதற்காகத்தான், அந்த உண்மையை மறுத்துப் பேச ஒருவன்கூட இல்லை என்று நேற்று நான் உணர்ந்தேன்.”


கூட்டம் அவளைச் சுற்றி அமைதியோடு பெருகியது. வட்டமிட்டுச் சூழ்ந்து நின்றது.

“வறுமை, பசி, பிணி —தங்களது உழைப்புக்கு பிரதியாக: மக்களுக்கு இவைதான் கிடைக்கின்றன. சகல விஷயங்களுமே நமக்கு எதிராக இயங்குகின்றன. நமது வாழ்நாளெல்லாம், ஒவ்வொரு நாளும், நமது கடைசி மூச்சுவரை, இறுதி பலத்தையும் நமது உழைப்புக்காக அர்ப்பணம் செய்வதால் எப்போதும் நாம் அழுக்கடைந்து அவர்களால் ஏமாற்றவும் படுகிறோம். நாம் பெற வேண்டிய இன்பத்தையும், நலன்களையும் மற்றவர்கள் அறுவடை செய்து அனுபவிக்கிறார்கள். சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நாய் மாதிரி நம்மை அவர்கள் அறியாமையில் ஆழ்த்தியுள்ளார்கள்—நமக்கு எதுவுமே தெரிவதில்லை. ஒவ்வொன்றுக்கும் பயப்படுகிறோம் — நாம் எதையும் தெரிந்து கொள்ளவே அஞ்சுகிறோம். நமது வாழ்க்கையே விடியாத இருள் நிறைந்த இரவாகப் போய்விட்டது!”

“சரிதான்!” என்று ஒரு மங்கிய குரல் எதிரொலித்தது.

“அவளது வாயை மூடு!”

கூட்டத்திற்குப் பின்னால் அந்த உளவாளியும் இரண்டு போலீஸ்காரர்களும் வருவதை தாய் கண்டுவிட்டாள். அவள் அவசர அவசரமாக மிஞ்சியிருந்த பிரதிகளை விநியோகிக்க முனைந்தாள். ஆனால் அவளது கை தோல் பெட்டியைத் தொட்டபோது. அவளது கையோடு யாரோ ஒருவனின் கையும் மோதியது.

“எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக்கொள்ளுங்கள்” என்று குனிந்துகொண்டே சொன்னாள் அவள்.

“கலைந்து போங்கள்!” என்று சத்தமிட்டுக்கொண்டே போலீஸ்காரர்கள் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அந்த ஜனங்கள் வேண்டா வெறுப்பாக வழிவிட்டு, அந்தப் போலீஸ்காரர்களை முன்னேற விடாமல், தம்மையறியாமலேயே அவர்களை நெருக்கித் தள்ளினார்கள். அன்று விரித்த பிரகாசமான கண்களோடு அந்த அன்புருவான கிழவியைக் கண்டு எல்லாரும் தவிர்க்க முடியாதபடி கவர்ச்சி கொண்டார்கள். வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் ஒட்டின்றிப் பிளந்து போயிருந்த அந்த ஜனங்கள், அந்தப் பொழுதில் தாங்கள் அனைவரும் ஒரே இனமாக மாறிவிட்டது போல் உணர்ந்தார்கள், அந்த உத்வேகமான வார்த்தைகளை ஆழ்ந்த மன உணர்ச்சியோடு கேட்டார்கள். அந்த வார்த்தைகள்தான் வாழ்க்கையில் அநீதியால் துன்பத்துக்காளான எண்ணற்ற இதயங்கள் எவ்வளவோ காலமாகத் தேடித் திரிந்த வார்த்தைகளாக ஒலித்தன. தாய்க்கு அருகில் நின்ற ஜனங்கள் மெளனமாக நின்றார்கள்: அவளையே விழுங்கிவிடுவதுபோல் இமை கொட்டாமல் பார்த்தார்கள். அவர்களது உஷ்ண மூச்சுக் காற்றுக்கூடத் தன் முகத்தில் உறைப்பதை அவள் உணர்ந்தாள்.

“ஏ கிழவி, போய்விடு!”

“அவர்கள் உன்னை ஒரு நிமிஷத்தில் பிடித்துவிடுவார்கள்.”

“இவளுக்குத்தான் என்ன தைரியம்:”

“போங்கள் இங்கிருந்து! கலைந்து போங்கள்!” என்று கத்திக்கொண்டே போலீஸ்காரர்கள் மேலும் நெருங்கி வந்தார்கள். தாய்க்கு எதிராக நின்ற ஜனங்கள் ஆடியசைந்து ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டார்கள்.


அவர்கள் தன்னை நம்பவும், தான் சொல்வதைப் புரிந்து கொள்ளவும் தயாராயிருப்பதாகத் தோன்றியது. எனவே அவன் அவசரமாக, தனக்குத் தெரிந்த சகல விஷயங்களையம், தனது அனுபவத்தால் கண்டறிந்த சகல எண்ணங்களையும் அவர்களுக்குச் சொல்லித் தீர்த்துவிட எண்ணினாள். அந்த எண்ணங்கள் அவளது இதயத்தின் அடித்தளத்திலிருந்து லாவகமாகப் பிறந்தெழுந்து, கவிதா சொரூபமாக இசைத்துக்கொண்டு வெளியேறின; ஆனால் அந்தக் கவிதையை தன்னால் பாடிக்காட்ட முடியவில்லையே என்று அவள் வேதனைப்பட்டாள். அவளது குரல் நடுநடுங்கி உடைந்து கரகரத்து ஒலித்தது.

“தனது ஆன்மாவை விற்றுவிடாத ஒரு தொழிலாளியின் நேர்மை நிறைந்த பேச்சுத்தான் என் மகனின் பேச்சு. நேர்மையான வாசகம்! அந்த வாசகத்தின் தைரியத்தைக்கொண்டே நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள்!”

ஒரு இளைஞனது இரண்டு கண்களும் அவளைப் பயத்தோடும் வியப்போடும் பார்த்துக்கொண்டேயிருந்தன.


யாரோ அவளது மார்பில் தாக்கினார்கள். அவள் பெஞ்சின் மீது விழுந்தாள். ஜனக்கூட்டத்துக்கு மேலாக போலீஸ்காரர்களின் கைகள் தெரிந்தன. ஜனங்களைத் தோளைப் பிடித்தும் கழுத்தைப் பிடித்தும் தள்ளிக்கொண்டும் தொப்பிகளைப் பிடுங்கியெறிந்துகொண்டும் அவர்கள் முன்னேறி வந்தார்கள். தாயின் கண்களில் எல்லாமே இருண்டு மங்கித் தோன்றின. அவள் தனது ஆயாசத்தை உள்ளடக்கி வென்றுகொண்டே, தனது தொண்டையில் மிஞ்சி நின்ற சக்தியோடு உரத்துக் கத்த முனைந்தாள்.

“ஜனங்களே! ஒன்று திரளுங்கள் ஓரணியில் பலத்த மாபெருஞ் சக்தியாகத் திரண்டு நில்லுங்கள்!” ஒரு போலீஸ்காரன் தனது கொழுத்த பெருங்கையினால் அவளது கழுத்தை எட்டிப்பிடித்து உலுக்கினான்;

“வாயை மூடு”

அவளது தலை சுவரில் மோதியது. ஒரு கணநேரம் அவளது இதயத்தில் பயம் சூழ்ந்து இருண்டது. ஆனால் மறுகணமே அந்தப் பயம் நீங்கி ஒரு ஜோதி வெள்ளம் பொங்கியெழுந்து அந்த இருளை அப்பால் துரத்தியடித்தது.

“போ, போ” என்று சொன்னான் அந்தப் போலீஸ்காரன்.

“எதைக் கண்டும் நீங்கள் பயப்படாதீர்கள்! நீங்கள் இப்போது வாழ்கின்ற வாழ்க்கையைவிட எதுவும் கொடுமை வாய்ந்ததாக இருக்கப் போவதில்லை.....”

“வாயை மூடு. நான் சொல்லுகிறேன். வாயை மூடு.”

அந்தப் போலீஸ்காரன் அவள் கையைப் பிடித்து, வெடுக்கென்று இழுத்தான். இன்னொரு போலீஸ்காரன் அவனது மற்றொரு கையைப் பிடித்துக்கொண்டான், இருவருமாக அவளை இழுத்துச் சென்றனர்.

“உங்களது இதயத்தையே தின்றுகொண்டிருக்கும் கசப்பைவிட தினம் தினம் உங்களது நெஞ்சையே சுவைத்துக் கடிக்கும் கொடுமையை விட.......”

அந்த உளவாளி அவளை நோக்கி ஓடி வந்தான். தனது முஷ்டியை அவளது முகத்துக்கு நேராக உயர்த்திக் காட்டிக் கத்தினான்.

“ஏ, நாயே வாயை மூடு!”

அவளது கண்கள் அகன்று விரிந்து பிரகாசித்தன; அவளது தாடை துடிதுடித்தது. வழுக்கலான கல் தரையின் மீது காலைப் பலமாக ஊன்றிக்கொண்டு அவள் மேலும் கத்தினாள்.

“அவர்கள் மறு பிறவி எடுத்த என் ஆத்மாவைக் கொல்லவே முடியாது!”

“ஏ, நாயே!”

அந்த உளவாளி அவளது முகத்தில் அறைந்தான்.

“வேண்டும், அந்தக் கிழவிக்கு!” என்று யாரோ வெறுப்போடு கத்தினார்கள்.

ஒரே கணத்தில் சிவப்பாகவும் கறுப்பாகவும் இருந்த ஏதோ ஒன்றால் அவள் கண்கள் இருண்டன. ரத்தத்தின் உப்புக்கரிக்கும் ருசி அவள் வாயில் தட்டுப்பட்டது.

அவளைச் சுற்றிலும் எழுந்த ஆவேசக் குரல்களால் தாய் மீண்டும் உணர்ச்சி பெற்று விழிப்புற்றாள்.

“அவளைத் தொடாதே!”

“வாருங்களடா பயல்களா?” “டே போக்கிரி, உன்னைத்தான்!”

“அவனை உதையடா!”

“அவர்கள் நம் அறிவை ரத்தமயமாக்க முடியாது.”

“அவர்கள் அவளைப் பின்னாலிருந்து கழுத்தில் கைகொடுத்துத் தள்ளினார்கள்; அவளது தலையிலும் தோளிலும் அறைந்தார்கள். கூச்சலும் கும்மாளமும் அலறலும் விசில் சப்தமும் ஒன்றோடொன்று எழும்பியொலித்த குழப்பத்தில் அவள் கண்முன்னால் பளிச்சிட்டுத் தோன்றி எல்லாம் சுழல ஆரம்பித்தன; அந்தக் கூக்குரல்கள் அவள் காதைச் செவிடுபடச் செய்தன. அவளது தொண்டை அடைத்தது; திணறியது; அவளது காலடியிலே இருந்த நிலம் நழுவி இறங்கியது; அவள் கால்கள் தள்ளாடின, உடம்பு வேதனையின் குத்தல் உணர்ச்சியால் பளுவேறி உழலாடி, ஆதரவற்றுத் தடுமாறியது. எனினும் அவளது கண்கள் மட்டும் தமது பிரகாசத்தை இழக்கவில்லை. அந்தக் கண்கள் மற்ற கண்களை நெருப்பாகக் கனன்றெரியும் கண்களை, தனக்குப் பழக்கமான துணிவாற்றலின் ஜோதியோடு ஒளி. செய்யும் கண்களை, தனது இதயத்துக்கு மிகவும் அருமையாகத் தோன்றிய கண்களைக் கண்டு களித்தன.

அவர்கள் அவளை வாசற்புறமாகத் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.

அவள் ஒரு கையைப் பிடுங்கி விடுவித்துக்கொண்டு கதவின் கைப்பிடியை எட்டிப் பிடித்தாள்.

“இரத்த சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது!”

அவர்கள் அவள் கையில் பட்டென்று அறைந்தார்கள்.

“ஏ, முட்டாள்களே: நீங்கள் வீணாக எங்கள் பழியைத்தான் தேடிக் கொள்கிறீர்கள். உங்களது கொடுமைகளெல்லாம் ஒரு நாள் உங்கள் தலையிலேயே வந்து விடியப்போகின்றன!”

ஒரு போலீஸ்காரன் அவளது தொண்டையைப் பிடித்து அவளது குரல்வளையை நெரித்துத் திணறடித்தான்.

“அதிருஷ்ட்ங்கெட்ட பிறவிகளே!” என்று அவள் திணறினாள்.

யாரோ ஓர் உரத்த தேம்பலால் அதற்குப் பதில் அளித்தார்கள்.

1907 ஆண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/58&oldid=1293267" இலிருந்து மீள்விக்கப்பட்டது